கோபம் | சிறுகதை

கோபம் | சிறுகதை

கோபம் – சிறுகதை

          என்னதான் பெண்ணாக இருந்தாலும் இப்படி கோபம் வரக்கூடாது. கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்பார்கள் அதைப்போலத்தான் அவளும் சட்டென்று கோபப்பட்டாலும் குழந்தைகள் மீதும் கணவன் மீதும் அளவு கடந்த பாசம் வைத்திருப்பாள்.

            கோபத்தில்  எடுக்கின்ற முடிவு சரியில்லை என்பார்கள். ஒரு நாள் தன் கணவனுக்கும் அவளுக்கும்  வாய்ப் பேச்சால் சண்டை வந்தது. சண்டை நீண்டுக்கொண்டே போனது. பிள்ளைகள் பாடசாலைக்குப் போயிருந்தார்கள். கணவன் இப்படி பேசிக்கொண்டு போனால் முடிவு வேற விதமாகப் போய்விடும் என்று நினைத்து தேநீர் கடைக்குப்போய் தேநீர் குடித்தவிட்டுவந்தால்  அவளுடைய கோபம் அடங்கும் என்று பக்கத்தில் கொஞ்ச தூரத்தில் இருக்கும் தேநீர் கடைக்குப் புறப்பட்டு தேநீர் குடித்துவிட்டு அங்கே உட்கார  மனசு வரவில்லை, மனசு ஏதேதோ நினைக்கலாயிற்று.

            அவள் அவர் பேசிய வார்த்தையை நினைத்து நினைத்து பார்த்தாள். அவள் எதையுமே யோசிக்காமல் கட்டிலின் மேலே இருக்கின்ற விசிறியில் தூக்குப்போட்டுக்கொள்ள தன்னுடைய சேலையை எடுத்துக் கட்டிக்கொண்டு இருந்தாள். அவன் வந்தான் அவன் நினைத்த மாதிரியே கதவு தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. கதவைத் தட்டித் தட்டிப் பார்த்தான். கதவு திறக்கப்படவில்லை. எல்லா சாளரமும் மூடியிருந்தது. படுக்கையறை சாளரம் மட்டும் திறந்திருந்தது. அதன் வழியே பார்த்தான். திகைத்துப்போனான்! வேண்டாம்மா நான் சொல்வதைக்கேள். இதற்கு மேல் உன்னுடன் சண்டைபோடமாட்டேன். உன் காலையாவது பிடித்து கெஞ்சி கேட்கிறேன். தூக்குப்போட்டுக் கொள்ளாதே! நம் பிள்ளைகள் அனாதையாகிவிடும், நீ இல்லை என்றால்  நானும் இறந்தே போய்விடுவேன், நான் சொல்வதைக்கேள். வந்து கதவைத் திற. ஐயோ! நான் என்ன செய்வேன்? கடவுளே! என் மனைவியை எப்படியாவது காப்பாற்று என்று கத்தினான் கதறினான். அவன் கண்முன்னே விசிறியில் கட்டப்பட்டிருந்த சேலையைக் கழுத்தில் சுருக்கு வைத்துக்கொண்டு கட்டிலின்மீது இருந்து குதித்தாள், அவன் அய்யோ அய்யோ! என்று கத்திக்கொண்டு அக்கம் பக்கம் இருந்தவர்களைக் கூப்பிட்டு கதவைப் கடப்பாறையால் பெயர்த்துவிட்டு உள்ளே போவதற்குள் அவள் உயிர் உடலை அறுத்துவிட்டு வெளியேறிச் சென்றது.

            அவர்கள் அவள் கழுத்தில் இரக்கும் சுருக்கு சேலையைக் கத்தியால் வெட்டி எடுத்தார்கள் அவளுக்கு உயிர் இருக்கக் கூடாதா! அவள் செத்திருக்கமாட்டாள். என்றெல்லாம் நினைத்தான். அவளின் கழுத்தை சேலை நெருக்கியதில் நாக்கு வெளியே வந்துவிட்டது. அவன் நாக்கை வாயின் உள்ளே தள்ளினான். மருத்துவமனைக்கு எடுத்துக்கொண்டு போகலாமா? என்று வந்தவர்களைப் பார்த்து செஞ்சினான். அதற்கு அவர்கள் இவள் இறந்தவிட்டாள். நீ மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றால் சாவு கிடங்கில் போட்டுவிட்டு எப்படி செத்தாள் என்று காவல்துறை விசாரனை நடத்தவார்கள். இதை கண்ணும் காதும் வைத்தமாதிரி மிக வேகமாக எரித்தவிடவேண்டும் அதனால், உங்களுடைய சொந்த பந்தத்துக்குச் சொல்லிவிடு, பிணத்தை சீக்கிரமாய் எடுக்கவேண்டும் என்றார்கள்.

            வீட்டின் முன்னால இருக்கின்ற மரத்தின் நிழலில் கட்டிலைப்போட்டு பிணத்தைப் படுக்கவைத்தார்கள். இறந்த செய்தியைக்கேட்ட அக்கம்  பக்கத்தில் இருப்பவர்கள் வந்துவிட்டார்கள்.

            பிள்ளைகளும் வகுப்பை முடித்துவிட்டு பாடசாலையிலிருந்து வந்து அம்மா இறந்து போனதைப் பார்த்து கதறி அழுதார்கள். அதைப் பார்த்த மற்றவர்களின் கண்களிலும் கண்ணீர் பெறுக்கெடுத்தன.

            அவன்  மட்டும் என்ன செய்வது என்று தெரியாமல் கையைத் தலைமீது வைத்துக்கொண்டு பூமியை நோக்கியவனாய் கண்களில் கண்ணீர் வந்து பூமியை நனைத்தபடியும், மூக்கில் ஒழுகி தரையைப் பார்க்கிறபடி உட்கார்ந்திருந்தான்.

            அவள் உயிர் எமலோகத்திற்கு போகாமல் தன்னுடைய உடலைப் பார்க்க வந்தது. வந்து பார்த்ததும் அதிர்ந்துபோய்விட்டது. பிள்ளைகள் கதறுவதைப் பார்த்து அந்த ஆவியே அழுதது. பிள்ளைகளைக் கட்டிப்பிடித்துத் தூக்கியது, தூக்க முடியவில்லை, தன் கணவனிடம் போய் அழாதிங்க! என்று கண்ணீரைத் துடைத்தது, துடைக்க முடியவில்லை தன் உடலைப்போய் தொட்டுதொட்டுப் பார்த்தது அசையவே இல்லை. அசைவற்று இருந்தது. அங்கு இருந்த ஒரு அம்மா இந்த பிள்ளைகளை விட்டு விட்டு போவதற்கு எப்படித்தான் அவளுக்கு மனசு வந்ததோ தெரியவில்லையே! நாளைக்கு அந்த பிள்ளைகளுக்கு யார் தண்ணிர் ஊற்றுவார்கள், சாப்பாடு யார் ஊட்டுவார்கள். யார் தலைவாரி பூச்சூடுவார்கள். பாடசாலைக்குப்போக பேருந்தில் யார் ஏற்றுவார்கள், அவன்  ஆண் இதையெல்லாம் செய்வானா? என்னதான் கோபம்  வந்தாலும் இப்படி செய்யக்கூடாது. அந்தப் பிள்ளைகள் முகத்தைப் பார்க்கக்கூடாதா! அவனுக்கும்  வேற சின்ன வயசு இன்னொரு திருமணம் செய்துகொண்டால் அவள் இந்த பிள்ளைகளை நல்லா பார்ப்பாளோ? இல்லை கொடுமை செய்வாளோ, இல்லை படிக்க போகவிடாமல் ஆடு, மாடு மேய்க்கவைப்பாளோ என்னவோ? தெரியவில்லையே! என்னத்தான் இருந்தாலும் இவள் இப்படி செய்திருக்கக்கூடாது. பொம்பளைக புத்தி பொட கழுத்தில் உள்ளது என்பார்கள் அதேபோல இவளும் செய்துவிட்டாளே! என்று பக்கத்தில் இருக்கும் ஒரு அம்மாவிடம் கூறினாள். இதைக் கேட்ட அவள் ஆவி தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்தது. நம் பிள்ளையை நாம் தான் கண்ணும் கருத்துமாய் பார்த்தக்கொள்ள வேண்டும் நம்ம பிள்ளைகள்  நிறைய படிக்க வேண்டும். நாளைக்கு பிள்ளைகள்  பாட சாலைக்குப் போக வேண்டும். நாம் சாக கூடாது என்று நினைத்து எமலோகத்திற்கு அவள் உயிர் பறந்து  சென்று எமதருமராசனை பார்த்தது. அந்த உயிரை பார்த்து ஏன் இவ்வளவு தாமதமாய் வந்திருக்கிறாய் என்று கேட்டார். ஐயா என்னை மன்னித்து விடுங்கள் நான் சாக கூடாது. நான் தெரியாமல் தூக்குப் போட்டுக்கொண்டேன். என்னுடைய உயிரை விட்டுவிடுங்க என்னுடைய உடலில் புகுந்துக்கொள்கிறேன் என்று கேட்டது அதற்கு எமன் என்னது? உன் உயிரை விடுவதா? என்ன பேசுகிறாய்? அப்படியெல்லாம் விட முடியாது! என்றார், ஐயா அப்படி சொல்லாதிங்க! என் பிள்ளைகள் கதறுவதை என்னால் பார்க்க முடியவில்லை உன் காலை பிடித்துக்கொண்டு கேட்கிறேன், என் உயிரை விட்டு விடுங்கள் என்று கெஞ்சியது. அதற்கு எமன் எடுத்த உயிர் எடுத்ததுதான். உன் உயிரைவிட முடியாது. அவன் காலைப் பிடித்துக்கொண்டு அவன் பாதம் நனைகிற அளவுக்கு ஆவி  கண்ணீர்விட்டது. பெண்யென்றால் பேய் இரங்கும்  என்பார்கள். அவள் உயின் கோலத்தைப் பார்த்த எமன் இங்க பாருங்கம்மா! எனக்கு மேலே ஒருவர் இருக்கிறார். அவர் தான் அழித்தல் தொழிலைப் பார்க்கின்ற சிவன். அவரை போய் பார், அவர் சொல்லியதால் தான்  உன்னுடைய உயிரை நான் எடுத்தேன் என்று கூறினார்.

            அந்த உயிர் சிவனைப் போய் பார்ப்பதற்கு முன் நம் உடலை எடுத்துவிட்டார்களோ! என்னவோ! என்று பூலோகத்திற்கு வந்து தன் உடலைப் பார்த்தது. பிள்ளைகள் அம்மா எழும்மா! எழும்மா! என்று கத்த முடியாமல் அழுதன. அவள் ஆவி தன் பிள்ளைகளைக் கட்டிப்பிடித்து அழுந்தது. என் பிள்ளைகள் என்றும் இப்படி அழுந்ததே கிடையாது இன்று இப்படி அழுகிறார்களே! நான் தெரியாமல் தூக்குப் போட்டுக் கொண்டேன் என்று நினைக்கும்போது அவள் கணவனைக் கூப்பிட்டு எல்லோரும் வந்து விட்டார்களா! தாய்வீட்டு சீதனம் கொண்டு வந்தவிட்டார்களா! சீக்கிரமாய் பிணத்தை எடுத்து எரிக்கவேண்டும் என்றார்கள். அதைக் கேட்டதும் அவள் உயிர் சிவபெருமானைநோக்கிப் பறந்தது.

            சிவபெருமானைப் பார்த்து, ஐயா! நான் தெரியாமல் தூக்குப்போட்டு இறந்துவிட்டேன். இப்போதுதான் எனக்கு புத்தி வந்தது. என் பிள்ளைகள் அனாதை யாகிவிடும். என் பிள்ளைகள் அனாதையாகிவிடும் என் உயிரை விட்டுவிடுங்கள் என் உடலில் புகுந்து என் பிள்ளைகளையும் என் கணவரையும் நல்லப்படியாகப் பார்த்துக்கொள்வேன். கோபத்தினால் தெரியாமல் இப்படி செய்துவிட்டேன். என் உயிரை விட்டு விடங்கள் என்று கெஞ்சி கூத்தாடியது. அதற்கு சிவன், என்னம்மா! சொல்லற எடுத்த உயிரை  மீண்டும் விடவதா? அப்படி விட்டால் பூலோகம் தாங்காது, அதனால் எதுவும் பேசாமல் போய்விடு! என்று கடும் கோபத்தில் சொல்லிவிட்டார். அங்கு பேசிக் கொண்டு இருக்கும்போது நம்ம உடலை எடுத்துவிடுவார்கள் என்று இருக்கும்போது உயிர் படபடத்தது திக்திக் என்று அடித்துக்கொண்டது.தன் உடலை ஓடி வந்து பார்த்தது. தன்னுடைய அம்மா அவள் உடலைக் கட்டிப்பிடித்துக் கொண்டு எங்களையெல்லாம் விட்டுவிட்டுப் போய் விட்டாயேம்மா என்று அம்மாவைக் கட்டிப்பிடித்து அழுந்தது அத்தாய்க்கும் தெரியாது.

            சரி நேரமாச்சு! பிணத்தின் மேலே இருக்கின்ற மாலையெல்லாம் எடுத்துவிட்டு குளிப்பாட்ட எடுத்துவாங்க! பாடை கட்டி முடித்தாகிவிட்டது என்ற வார்த்தையை அவள் உயிர் கேட்டதும். சிவலோகத்திற்கு ஓடியது. சிவபெருமானை பார்த்து, என்னை உன் மகள் மாதிரி நினைத்துக்கொண்டு உன் உயிரை விட்டுவிடுங்க என்னுடைய உடலை எடுக்கப்போகிறார்கள். என்று கெஞ்சியது. அதற்கு சிவபெருமான் தன் தவத்தைக் களைத்ததற்காக என்னுடைய மருமகனையே நெற்றிக்கண்ணால் சுட்டெரித்து என் மகளை விதவையாக்கியவன் அவள் வந்து கெஞ்சியும் அவனை உயிர்பெறச்செய்யவில்லை அதனால், நீ புறப்படு என்று கூறினார், ஐயா! என் கணவன் உன் காலையாவதே பிடித்துக்கொள்கிறேன் நீ சாகாதே என்று கெஞ்சியும் நான் அவர் பேச்சை கேட்காமல் செத்துவிட்டேனே என்று நினைத்துக்கொண்டு, பூலோகத்திற்கு அவ்வுயிர் ஓடிவந்து பார்த்தது பூவால் பாடையெல்லாம் அலங்கரிக்கப்பட்டு பிணத்தை அதன்மீது வைத்தவிட்டார்கள். இதைப்பர்த்து மறுபடியும் சிவலோகத்திற்கு தன் உயிர் ஓடியது. சிவபெருமானின் காலைப்பிடித்தக்கொண்டு கண்ணீர்விட்டு கதறியது. இதைப்பார்த்த சிவபெருமான் இந்த உயிரை கொண்டுபோய் எல்லைக்கு அப்பால் விட்டுவிட்டு வாங்க என்று இங்கு இருப்போருக்குச் சொன்னதும் அந்த உயிரை பெண்ணோட உயிர் என்று கூட பார்க்காமல் கொண்டுபோய் எல்லைக்கு அப்பால் விட்டுவிட்டு வந்தார்கள். மீண்டும் அந்த உயிர் பூலோகத்திற்கு ஓடிவந்தது. நிலவு, நட்சத்திரம், சூரியன், மேகம், மழை, வானம் போன்றவர்கள் அந்த உயிர் சிவலோகத்திற்கும் பூலோகத்திற்கும் அலைவதைப் பார்த்து கண்ணீர் விட்டன. என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்த்து அவர்களும் இருந்தனர்.

            உயிர் வந்து வீட்டுகிட்ட பார்த்தது. உடல் இல்லை அங்க இருந்த ஒரு அம்மா நற்று என்னோட இன்நேரத்தில் பேசினால். ஆனால், இன்று இல்லையே என்று புலம்பினாள். அதைக்கூட காதில் வாங்காமல் பிணத்தை எடுத்தக்கொண்டு போகும் வழியே பார்த்து ஓடியது பாடையில் பிணம் பாதி தூரம் போய்க்கொண்டு இருந்தது. சுடுகாட்டிற்குப் போவதற்குள் மீண்டும் ஒருமுறை கேட்டுப்பார்ப்போம் என்று எமலோகத்திற்குச் சென்றது எமதருமராசனைப் பார்த்து ஐயா! உன் பெயரிலேயே தருமராசா என்று இருக்கிறது அதனால், என் உயிரை தருமமாக விட்டுவிடுங்க என்று கெஞ்சியது. யாம்மா நான்தான் சொன்னேனே போய் சிவபெருமானைப் பார் என்று கூறினார். அதற்கும்  நான் போய் பார்த்தேன் முடியாது என்று கூறிவிட்டார். நீங்க தான் எப்படியாவது அவரிடம் சொல்லி என் உயிரை பூலோகத்திற்கு விடச் சொல்லவேண்டும் என்று அவள் உயிர் கெஞ்சியது. அதற்கு எமன் நான் உடன் வருகிறேன். ஆனால் நீதான் கேட்க வேண்டும் என்று எமதருமராசனும் உடன்சென்றார். சிவபெருமானைப் பார்த்து, ஐயா! என் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச்சென்றுவிட்டார்கள். என் உயிரை எப்படியாவது விட்டுவிடுங்கள் என்று கண்ணீரைத் தாரைத் தாரையாக விட்டு அழுதது. இதனைக் கண்ட சிவபெருமான் எமனைப்  பார்த்து கேட்டார். இந்த உயிரை என்னசெய்வது எவ்வளவு சொல்லியும் கேட்கமாட்டிங்குது என்று கூறினார். அதற்கு எமன் ஒரு வயசான பாட்டி என்னை எப்பவந்து எமன் கூட்டிப்போகும் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறது. அதனால், இந்த உயிரை விட்டுவிட்டு அதற்கு பதிலாக அந்த பாட்டி உயிரை எடுத்தக்கொள்வோம் என்று கூறினார். அதற்கு சிவபெருமான் ஏதோ செய் மீண்டும் வந்து இங்கு கெஞ்சக் கூடாது என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார். எமன் உடனே அந்த பாட்டி உயிரை எடுத்துக்கொண்டு அந்த உயிரை விட்டுவிட்டார். அந்த உயிருக்கே உயிர் வந்ததுபோல் இருந்தது. எமனுக்கு நன்றி சொல்லிவிட்டு வேகமாக ஓடிவருகிறதைப் பார்த்த நிலா, நட்சத்திரம், சூரியன், வானம், மழையெல்லாம் மகிழ்ச்சியடைந்தன.

            ஓடிவந்துபார்த்தால் விறகு கட்டையை சுடுகாட்டில் மேடையாக அடுக்கிவைத்து அதன்மீது பிணத்தை வைத்து வெட்டியான் தீ வைத்தான் மெதுவாக எறிய ஆரம்பித்தது. அந்த எரிகின்ற உடலில் உயிர் புகுந்து தன் உடலோடு சேர்ந்த பிறகு கீழே குதித்தது. என்னைக் காப்பாற்றுங்க! காப்பாற்றுங்க என்று கத்தியது வெட்டியான் பேய்தான் வந்துவிட்டது என்று நினைத்து பிணத்தை எரிப்பதற்குப் பயன்படுத்தும் கட்டையால் அடித்துக் கொன்று எரிக்கின்ற நெருப்பில் எடுத்துப்போட்டு எரித்துவிட்டார்.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் து.கிருஷ்ணன்

உதவிப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

எம்.ஜி.ஆர் கல்லூரி – ஓசூர்.

மேலும் பார்க்க,

1.மறையாத வடு

2. பாலம் | சிறுகதை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here