நாயும் பொன்னும்
இந்தக்கதையில் ஏன்? எப்படி? என்றெல்லாம் கேட்கக் கூடாது. ஏனென்றால் அது கதை. அப்படித்தான் இருக்கும். ம்ம்… என்று மட்டும் கொட்டுங்கள். அது போதும்!
ஒரு கிராமத்தில் நாய் ஒன்று வாழ்ந்து வந்தது. தினமும் அந்த நாயானது ஒவ்வொரு வீடுவீடாகச் செல்லும். வீடுகளில் சொல்லும் சிறுசிறு வேலைகளைச் செய்யும். பின்பு அவர்களால் கொடுக்கப்படும் உணவை உட்கொள்ளும் .இதுதான் அந்த நாயினுடைய அன்றாடம் வேலையாக இருந்தது.
அப்போது நாயானது கர்ப்பமாக இருந்தது. ஒரு நல்ல நாளில் இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்று எடுத்தது. நாய் வயிற்றில் மனித குலம் சேர்ந்த பெண்களா! என்று அந்த ஊர்மக்கள் அனைவரும் வியந்து போயினர்.
எப்படியோ அப்படி இப்படியென்று தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் வளர்த்தது. தனக்கு ஊர்மக்கள் கொடுக்கக் கூடிய கூழையோ கஞ்சியையோ தன்னுடைய பிள்ளைகளுக்கும் கொடுத்தது. இரண்டு பெண் பிள்ளைகளும் பெரியவர்களாக ஆயினர்.
பெரியவள் கொஞ்சம் அழகாய் இருப்பாள். வெள்ளையாகவும் மூக்கு முழியுமாகவும் இருப்பாள். இளையவள் கொஞ்சம் கருப்பு. எடுப்பாக இருக்க மாட்டாள்.
அந்த ஊரைச் சேர்ந்த பணக்காரன் ஒருவன் நாயின் பெரிய பொண்ணை காதலித்தான். பொண்ணு பார்க்க அழகாக இருக்கிறாள் என்று நாய் பெற்ற பிள்ளைதான் என்றும் பாராமல் அந்த பையனுடையப் பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டனர்.
சிறியவளுக்குக் கல்யாணம் நடப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. அழகும் இல்லை. நாய் பெற்ற பிள்ளைதானே என்று யாரும் கட்டிக்கொள்ள முன்வரவில்லை. அந்தச் சமயத்தில் அந்த ஊரின் ஏழைப்பையன் ஒருவன் சின்னவளைக் கட்டிக்கொள்ள முன்வந்தான். அவனுக்கு பெற்றோர்களும் கூட பொறந்தவங்களும் யாரும் இல்லை. அவனும் எங்கெங்கோ பொண்ணுப் பார்த்து சலித்துவிட்டான். அவன் அநாதை என்பதற்காக யாருமே பொண்ணு தர மறுத்து விட்டார்கள். இருவருக்கும் திருமணம் நடந்தது.
மீண்டும் நாய் அநாதையானது. இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்து விட்டாகிவிட்டது. இனிமேல் தனக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தது. ஆனாலும் முன்னேப் போலவே இப்போது வேலை அவ்வளவாகச் செய்ய முடியவில்லை. சோர்ந்து சோர்ந்து உட்காந்து கொண்டது.
“சரி எவ்வளவு நாள்தான் இப்படியே உட்காந்து கொண்டிருப்பது. நம்மாலும் ஒன்றுமே முடியவில்லை. அதனால், நம்முடைய பெரிய பொண்ணு வசதியாதான இருக்கா.. அங்க போயிடுவோம். நாம மாட்டங்கும் ஒரு ஓரமா வாழ்ந்திட்டுப் போயிடுவோம்” என்று பெரிய மகள் வீட்டுக்குச் சென்றது.
வீட்டு வாசலுக்குச் சென்று தன்னுடைய மகளை அழைத்தது. பெரிய மகளும் வெளியே வந்தாள்.
“ஏண்டி நாயே.. இங்க எதுக்கு வந்த நீ? உன்னெல்லாம் இங்க வரக்கூடாதுன்னு சொல்லி வச்சிருக்கேன்ல்ல… ஏற்கனவே எங்க மாமியார் நாயி பெத்த மொவதானே… என்ன கொண்ட வந்தன்னு திட்டிட்டு இருங்காங்க.. இதுல நீ வேறயா… போடி என் வீட்டவுட்டு” என்றாள்
அழுதபடியே வீதியில் நடந்து வந்தது. சரி தன்னுடைய சின்ன பொண்ணு வீட்டுக்குப் போவோம்ன்னு போச்சு. சின்ன மொவ,
“வாம்மா வா… ஞா கூடயே இங்கையே இருந்திரு. உனக்குன்னு தனியா உளை வைக்கப்போறோம். நாங்க சாப்பிடுறத கொஞ்சம் நீயும் சாப்பிட்டுட்டு இருந்துட்டு போ… ” என்றாள் சின்ன மகள்.
வாழ்க்கை அப்படியே சென்றது. ஒருநாள் நாயானது சின்ன மகளைக் கூப்பிட்டது.
“எம்மாடி… நான் செத்துப் போனேன்னா.. என்னை கொண்டு போயி மண்ணுல புதைச்சிடாதே. ஒரு பெட்டிக்குள் போட்டு மூடி வை. ஒரு மாசத்துக்கு அப்புறமா எடுத்து பாரு. என்கிட்ட ஏ எதுக்குன்னு எல்லாம் கேள்வி கேட்காத” என்றது அந்த நாய்.
ஒருநாள் அந்த நாய், சொன்னது போலவே செத்துப் போச்சு. தங்கச்சிக்காரி அக்காவுக்கு அம்மா செத்துப்போனத சொல்லி அனுப்பினா… அவ வர்ற மாதிரி தெரியல. சரின்னு அம்மா சொன்ன மாதிரியே ஒரு பெட்டிக்குள் போட்டு மூடி வைச்சுட்டா…
ஒருமாசம் கழிச்சி பெட்டிய தொறந்து பார்த்தா… பார்த்தவளுக்கு அதிர்ச்சி. பெட்டி நிறைய பொன்னும் முத்தும் மாணிக்கமும் பவளமும் நிறைந்திருந்தது.
சின்னவள் இவ்வளவு நகையையும் அளந்து பார்க்க வேண்டும் என்று எண்ணினாள். அதற்காக அவளுக்குப் படி (அளக்கும் பொருள்) தேவைப்பட்டது. படி யார் வைத்திருப்பார். பொருள் இருந்தால்தானே அளக்க முடியும். அதனால் அந்த ஊரில் யாரிடத்தில் படி இருக்குமென்று யோசனை செய்தாள். ஊரிலே பணக்காரி அக்காதான். அவளிடமே படி வாங்கி வந்து அளந்துவிட வேண்டும் என்று அக்காவிடம் செல்கிறாள்.
“அக்கா… படி இருந்தா கொடுக்கா..”
“எதுக்குடி படி உனக்கு?” என்றாள் அக்கா
“வீதியில பருப்பு வித்திட்டு வராங்க. அதான் வாங்களாமுன்னு படி கேட்டன்க்கா” தங்கச்சி
வீட்டுக்குள் சென்ற அக்காளுக்கு சந்தேகம். படியில் உள்ளே சின்னதாய் புளியை ஒட்ட வைத்துக் கொடுக்கிறாள்.
படியை வாங்கி வந்த தங்கச்சியும் பொன்னையும் மாணிக்கத்தையும் முத்துக்களையும் அளந்து போடுகிறாள். தங்கச்சிக்கு சந்தோசம் அதிகம். அப்பாடா அம்மா போகும்போது தனக்கு நிறைய கொடுத்துவிட்டுச் சென்று விட்டார்கள் என்று பெருமிதம் கொண்டாள்.
படியை மீண்டும் அக்காளிடம் கொடுக்கும் போது அக்காகாரி படியினுள்ளே ஒட்டியிருந்த புளியைத் தேய்த்து எடுக்கிறாள். அப்புளியில் சின்னதாய் ஒரு மாணிக்க கல் இருக்கிறது. எடுத்துப் பார்க்கிறாள். குட்டு வெளிப்பட்டு விடுகிறது.
“ஒன்னுமில்லாத உனக்கு எப்புடிடி இந்தக் கல் கிடைச்சது” என்று மிரட்டும் தோரணையில் கேட்கிறாள் அக்கா.
பயத்தில் அம்மா நாய் சொன்னதையும் தான் செய்ததையும் அக்காளிடம் சொல்லுகிறாள். தங்கை போன பிறகு அக்காகாரி, தெருவில் சுற்றித்திரிந்த நாய்யொன்றை உலக்கையால் அடித்து பெட்டியில் பூட்டி வைக்கிறாள். எப்போதும் ஒருமாதம் ஆகும் என்று காத்திருக்கிறாள் அக்காகாரி.
அன்றுடன் ஒருமாதம் முடிகிறது. சந்தோசமாய் பெட்டியைத் திறந்து பார்க்கிறாள். குப்பென்ற வாடை அந்த அறை முழுவதும் அடித்தது. அந்த நாத்தத்தில் சுருண்டு விழுந்தாள் அக்காகாரி.
சிறுகதையின் ஆசிரியர்முனைவர் க.லெனின்
உதவிப்பேராசிரியர்,
எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.