களத்துமேடு
கள்ளம் கபடமும்
மேடு பள்ளமும் இல்லா
குட்டி மைதானம்..!
குழந்தை பருவத்தில் – அது
இரு கைகளைப்
பின்னோக்கி இழுத்துப்
புருவங்களை உயர்த்துமளவு பெரியது..!
அதிர்கட்டை கொண்டு
தனது வலிமை முழுவதும்
களத்தில் இறக்கி
காரையாக்கி
வைத்திருப்பார் அப்பா..!
தானியங்களோடு
கல், மண் சேர்ந்து
கலப்படம் ஆகுமென்று
மாட்டுச்சாணத்தால் மெழுகி
பளிங்காய் மாற்றியிருப்பார் அம்மா..!
கோடை முடிந்தால்
கடலையும், எள்ளும்
களம் புகும்..!
கார் முடிந்தால்
நெற்கட்டுகள்
ஆளுயர அடுக்கி நிற்கும்..!
பக்கத்து தோட்டத்துக்
காளைகளோடு தாத்தா – தன்
காளைகளையும்
கிருஷ்ணன் தேரோட்டும்
குதிரைகள் கணக்காய்
பிணைத்து களம் புகுவார்..!
நெற்கட்டுகளைப் பரப்பி
எப்பிடி புனையோட்றம் பாரு?
பில்லுல ஒரு நெல்லிருக்காது என்பார் !
நெல்லடித்த வைக்கோல்
தாம்பு ஒரு
வட்டப்பாய் வடிவம் பெறும்..!
களம் புகுந்த தாத்தா
இப்போது போரிடத் துவங்குவார்.
உயரத்தில் நின்று
வைக்கோல் கொண்டு
களத்தின் ஓரமாய்..!
நாங்கள் குண்டுகளை
எறிந்து கொண்டிருப்போம் – களத்தில்
அம்மாவின் சத்தம் கேட்கும்
கோலிகுண்டு விளையாடாதடா
படிப்பு வராது..!
மூங்கில் முறத்தில்
நெல்லை அள்ளி
காற்றுள்ளபோதே
தூற்றிக் கொண்டிருப்பார் அப்பா..!
பதர் நீங்கிய நெல்லனைத்தும்
போரிட்ட தாத்தா மேல்
சமாதிகட்டியது போல் காட்சி தரும்..!
பகலில் பத்து மூட்டை
நெல்லானுலும் ஒரு சேர காயும்..!
இரவில் ராந்தல் வெளிச்சத்தில்
தாத்தாவோடு நானும் பாயும்..!
என்னைத் துணையாகக் கொண்டு
விண்வெளி ஆராய்ச்சி
செய்வார் தாத்தா !
முடிவில் நட்சத்திரங்களுக்குப்
பெயர் சூட்டப்படும்…
இதமான தென்றல் வீசும்
தாத்தாவின் குறட்டை ஒலியோடு..!
நிலவின் ஒளவையை
மேகம் மூடியதும்
என் போர்வை என்னை மூடும்..!
மூட்டைகள் வீடு புகும்
களத்தில் ஆடுகள் கட்டப்படும்
கொடாப்பை விட்டு குட்டிகள் குதித்தோடும்..!
மாடுகள் தன் சாடியைத் தேடும்
பசுங்கன்றுகள் பாய்ந்தோடும்
தைத்திருநாள் பூசையும்
நீண்ட நாள் வைத்திருந்த ஆசையும்
களத்தில் நிறைவேறும்..!
ஆம்! எங்கள் களமும்
போரும் பூசலும் நிறைந்ததுதான்..!
கவிஞர் பேரா.ச.குமரேசன்
உதவிப்பேராசிரியர்,
முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரி தன்னாட்சி இராசிபுரம்.
மேலும் பார்க்க..
தங்கள் கவிதை கடந்த காலத்தை கண்முன் காட்டுகிறது…
நன்றி ஐயா மகிழ்ச்சி😊