கற்பிதங்களின் மீது கல்லெறிந்தவள் / அ.செல்வராசு

கற்பிதங்களின் மீது கல்லெறிந்தவள் - அ. செல்வராசு
புறநானூற்றில் இடம்பெற்றுள்ள 246ஆம் பாடல் பூதப்பாண்டியன் மனைவி பெருங்கோப்பெண்டு பாடியதாகும். பூதப்பாண்டியன் இறந்து பட்டபோது இப்பாடல் அவன் மனைவியால் பாடப்பெற்றுள்ளது. கணவனை இழந்து தவித்த அவளிடம் சான்றோர்கள் அவளைக் கைம்பெண்ணாக வாழ வற்புறுத்துகின்றனர். அதற்கு அவள் மறுப்புத் தெரிவிக்கும் பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது. கணவனை இழந்து விட்டால் பெண்கள் தம் நிலை குறித்து மூன்று வகையான முடிவெடுக்கலாம் என ஆண்தலைமைச் சமூகம் கற்பித்துள்ளது. ஒன்று – இறந்த கணவனின் உடல் மீது விழுந்து எரிந்து படுவது. இரண்டு – கணவரின் இறப்புக்குப் பிறகு 14 நாட்கள் கழித்து இறந்துபடுவது. மூன்று – கணவன் இறந்த பிறகு கைம்பெண்ணாக வாழ்வது. இந்த மூன்று நிலைப்பாடுகளைக் கொண்டு அவளை முதல்தரக் கற்புடையவள், இரண்டாம்தரக் கற்புடையவள், மூன்றாம்தரக் கற்புடையவள் என ஆண்தலைமைச் சமூகம் நிரல் படுத்தியுள்ளது; வற்புறுத்தி உள்ளது.

     மேற்சுட்டிய புறப்பாடலில் சான்றோர்கள் பெருங்கோப்பெண்டைக் கைம்பெண்ணாக வாழ வற்புறுத்த, அவளோ பின்வருமாறு கூறி மறுத்துரைக்கிறாள்.

“பல்சான்றீரே பல்சான்றீரே
செல்கெனச் சொல்லாது ஒழிகென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே
அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந்து இட்ட
காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது
அடையிடைக் கிடந்த கை பிழி பிண்டம்
வெள் எள் சாந்தொடு புளிப்பெய் தட்ட
வேளை வெந்தை வல்சி ஆகப்
பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்கு அரிதாகுக தில்ல எமக்கு எம்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென அரும்பற
வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை
நள்ளிரும் பொய்கையும் தீயும் ஓரற்றே!”
என்பது பெருங்கோப்பெண்டின் குரலாகும்.
    
“நான் தீப்பாய்வதை விடுத்துக் கைம்பெண்ணாக வாழவேண்டும் எனக் கூறும் சான்றோரே நெய்யில்லாது சமைத்த, பானையின் அடியில் கிடக்கும் கைப்பிடியளவு மட்டுமான உணவை வெள் எள்ளின் துவையலுடன் புளியிட்டுச் சமைத்த வேளைக் கீரையை உணவாக உண்டு கல் படுக்கையில் உறங்கச் சொல்லும் வாழ்க்கையை ஏற்கும் பெண்ணல்ல நான் சுடுகாட்டு நெருப்பு உங்களுக்கு வேண்டுமானால் அரியதாகும். எனக்கு அது தாமரை பூத்திருக்கும் பொய்கையில் குளிப்பதற்கு ஒப்பானதாகும்” என்பது அவளது குரலாகும்.
    
ஆண் தலைமைச் சமூகத்தில் பெண்ணின் வாழ்க்கையைத் தீர்மானித்தவர்கள் / தீர்மானிப்பவர்கள் ஆண்களேயாவர். கணவனை இழந்த பெண் உடன்கட்டை ஏற வேண்டும் என வற்புறுத்தியவர்களும் அவர்களே. அதுதான் முதல்தரக் கற்பு என்றும் கற்பித்தனர். கைம்பெண்ணாக வாழவேண்டும் என வற்புறுத்தியவர்களும் அவர்கள்தான். ஆனாலும் அது மூன்றாம்தரக் கற்பு என்று கற்பித்திருந்தனர்.கற்பித்ததே ஒரு சூழ்ச்சி என்கிறபோது இதில் முதல்தரம் என்ன மூன்றாம் தரமென்ன? இந்தச் சூழ்ச்சியைப் புரிந்துகொண்டதால்தான் பெருங்கோப்பெண்டு அவர்களது கூற்றுக்கு மறுப்புத் தெரிவிக்கிறாள். உண்மையில் சான்றோர் உருவாக்கிய இந்தச் சூழ்ச்சியின்படி அவளை அவர்கள் தீப்பாயவே கூறியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதைத் தவிர்க்கக் கூறுகின்றனர்.
    
பூதப்பாண்டியன் இறந்துபட்டதால் அரசுக் கட்டிலேறி ஆட்சிபுரியுமாறு வேண்டவே சான்றோர் அவ்வாறு கூறியதாக ஒளவை சு.துரைசாமி பிள்ளை கூறியுள்ளார். என்றாலும்கூடத் தீப்பாய்வதைவிடக் கைம்பெண்ணாக வாழ்வது கொடுமையானது என அவள் குறிப்பிடுகிறாள். வாழ்வா சாவா என முடிவெடுக்கவேண்டுமென்றால் அவள் வாழ்வையே தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். அவளோ அதை விடுத்து இறப்பையே தேர்ந்தெடுத்திருக்கிறாள். பெண்களுக்கு மட்டுமே என்று உருவாக்கப்பட்ட இந்தக் கற்பிதங்களை உருவாக்கியவர்கள் மீதான எதிர்ப்புக் குரலாகப் பெருங்கோப்பெண்டின் குரல் ஒலித்துள்ளது செல்கெனச் சொல்லாது ஒழிகென விலக்கும் பொல்லாச்சூழ்ச்சிப் பல்சான் றீரே என கற்பிதங்களை உருவாக்கியவர்கள் மீது சொற்களை வீசுகிறாள் ஆடவர்க்கென்றும் பெண்டிர்க்கென்றும் வேறுபட்ட ஒழுகலாறுகளை உருவாக்கியவர்கள் எப்படி சான்றோராக இருக்க முடியும்? அந்தச் சான்றாண்மையை அவள் சான்றாண்மை என்றே கருதவில்லை.
    
இந்தப் பாடலை அடுத்து பெருங்கோப்பெண்டு தீப்பாய நின்றதைப் பேராலவாயார் என்பவர் நேரில் கண்டு அதனைப் பதிவிட்ட பாடலொன்றும் இடம்பெற்றுள்ளது. காட்டிடத்து அணங்குடையாள் கோயில் முன்பாக தீமூட்டப்பட்டு எரிந்து கொண்டுள்ளது. பெருங்கோப்பெண்டு நீராடிய கூந்தலோடு தீப்புக வந்து நிற்கிறாள். சிறிது நேரம் கூடத் தன் கணவனைப் பிரிந்திருக்க விரும்பாதவள் இவ்வாறு வந்து நிற்கும் காட்சியை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“யானைத் தந்த முளிமர விறகிற்
கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து
மடமான் பெருநிரை வைகுதுயி லெழுப்பி
மந்தி சீக்கும் அணங்குடை முன்றிலில்
நீர்வார் கூந்தல் லிருபுறந் தாழப்
பேரஞர்க் கண்ணள் பெருங்காடு நோக்கித்
தெருமரு மம்ம தானேதன் கொழுநன்
முழவு கண் டுயிலாக் கடியுடை யனகர்ச்
சிறுநனி தமிய ளாயினும்
இன்னுயிர் நடுங்குந் தம்இளமை புறம் கொடுத்தே”
என்பது அப்பாடலாகும்.
கணவன் இறந்த பிறகு அவளை உயிரோடு (கைம்பெண்ணாக) இருக்கச் சொல்வதும் ஆடவர்களின் சூழ்ச்சிதான் என்பதைப் புரிந்து கொண்டவளாகத் தீப்பாயும் முடிவை எடுத்துள்ளாள். எவ்வாறாயினும் ஆடவர்கள் பெண்களுக்கென்று உருவாக்கியிருக்கும் கற்பிதங்களின் மீது கல்லெறியும் முதல் வேலையைப் பெருங்கோப்பெண்டு செய்துள்ளாள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
அ.செல்வராசு,
இணைப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

திருச்சிராப்பள்ளி-620023,

மின்னஞ்சல்: selvaakhil75@gmail.com

அ.செல்வராசு அவர்களின் படைப்புகளைக் காண்க..

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here