அலமேலு மங்கை

            பார்வதி வீட்டு கல்யாணம். தளைவாழை இலைப்போட்டு ஊருக்கெல்லாம் சாப்பாடு. அருள் சவுண்ட் சிஸ்டம் கல்யாணப்பாடல்கள் காதைப்பிளந்தது. பாவாடை சட்டையிட்ட சிறுமிகளும் டவுசர் போட்ட சிறுவர்களும் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். பார்வதி அம்மா வந்தவர்களையெல்லாம் வாங்கன்னு சொல்லிட்டு இருந்தாங்க. பந்தலில் அமர்ந்திருந்த அனைவருக்கும் காபியைக் கொடுத்தாள் தேவி.

            தேவி… தேவி… என்று உரக்கக் கத்திக்கொண்டே வெளிப்பந்தலுக்கு வந்தாள் பார்வதி அம்மா. “அம்மா..” என்று கத்தியபடி ஸ்கூல்ல சின்னப்பசங்க கை தூக்கி சொல்லுவாங்களே, அதுபோல் கை தூக்கி சொன்னாள். “இங்க என்ன பண்ணிட்டு இருக்க. பொண்ணு வீட்டுக்காரங்க வந்துட்டாங்க. அவுங்கள போயி நீ கவுனி. நான் இவுங்களப் பாத்துக்கிறேன்” என்றாள். பார்வதி அம்மாவுக்கு எப்போதும் தேவி தன்னுடன் இருந்தா ஆயிரம் யானைகள் கூட இருப்பதாக நினைப்பு. தேவியை   எப்போதும் விட மாட்டா. எப்ப பார்த்தாலும் தேவி.. தேவியின்னு கூப்பிட்டுக்கொண்டே இருப்பாள். ரெண்டு பேத்துக்கும் அப்படியொரு பொருத்தம். பார்வதி அம்மாயின் வீட்டுக்காரர் கூட ஓரிரு முறை கோபப்பட்டிருக்கிறார். “உனக்கு நான் புருசனா… இல்ல தேவி புருசனா” என்று கேட்டே விட்டார். ஆனால் பார்வதி அம்மாவிடமிருந்து மௌனம்தான் பதிலாக வந்தது.

            கல்யாண வீட்டில் மேல் மாடிக்கதவு தட்டப்பட்டது. உள்ளிருந்த ஒருத்தர் கதவை திறந்து என்ன? என்பது போல கேட்டார். “அம்மா உங்களுக்கு ஏதாவது வேணுமான்னு கேட்டு கொடுக்கச்சொன்னாங்க” என்றாள் தேவி. “வாங்க..” என்று கதவை திறந்து விட்டுப்போனார். எப்படியாவது பொண்ணப் பாத்துடனும் என்ற எண்ணம் சித்ராவின் மனதில் இருந்தது. உள்ளே நுழைத்த அவளது கண்கள்  பொண்ணைத்தான் முதலில் தேடியது. அதற்குள் உள்ளேயிருந்தவர்கள் டீ, காபி, கூல்டிரிங்ஸ் என கேட்டுக்கொண்டே இருந்தார்கள். “கொண்டு வந்து தரங்க” என்று சொல்லிக்கொண்டே கூட்டத்தின் நடுவே உட்காந்திருக்கும் பொண்ணையும் பார்த்து விட்டாள். பொண்ணு அழகுதான். தம்பிக்கு ஏத்தமாதிரி அழகா இருக்கு என மனதில் நினைத்துக் கொண்டாள். சற்றும் தாமதிக்காமல் அனைவருக்கும் கொடுக்க வேண்டிய விருந்தினைக் கொடுத்தாள். அப்போது பார்வதி அம்மாவின் கணவனுடைய அண்ணன் சுந்தரமும் அவரது மனைவி பாக்கியமும் காரிலிருந்து வந்திரங்கினார்கள். “வாங்க அக்கா… வாங்க மாமா…” என்று முன்னால் ஓடி வந்து வரவேற்றாள் பார்வதி அம்மாள். அவர்களிடத்தில் ஒரு புன்னகையோடு சின்னதாக உதட்டு சிரிப்பு மட்டுமே வெளிவந்தன. பாக்கியத்திற்கென்ன தன்னோட ரெண்டு பசங்களையும் வெளிநாட்டுக்கு அனுப்பி வைச்சுட்டா. பசங்களும் பணமா குவிக்கிறாங்க. எப்பவும் பார்வதி அம்மாவைவிட நான்தான் உசத்தின்னு காமிச்சிப்பா. வீட்டுக்கு வந்த முத மருமகள் நான்தானே. எனக்குதான் எல்லாமே என்று நினைத்து கொண்டிருந்தவள். ஆனால் பார்வதி அம்மா வந்த பிறகு பாக்கியத்தை அவரது மாமியார் கொஞ்சம் மட்டம் தட்டவே ஆரமித்தார். ஆரபத்தில் இந்தச் சண்டையானது ஓரளவுதான் இருந்தது. போகப் போக குடுமிப்புடிச் சண்டையாக மாறி கணவன் சுந்தரத்தை அழைத்துக்கொண்டு தனிக்குடித்தனம் சென்று விட்டாள் பாக்கியம். அப்போதிலிருந்தே பார்வதி அம்மாவைக் கண்டாலே பாக்கியத்திற்குப் பிடிக்காது. அவளிடம் யாராவது குழைந்து பேசினால் கூட மூக்கில் வேர்த்து பொங்கி விடுவாள். கல்யாணத்திற்கு போகவே கூடாது என்று சுந்தரத்திடம் சண்டையிட்டாள்.  சுந்தரத்தின் கட்டாயத்தின் பேரில்தான் இன்று பாக்கியம் கல்யாணத்திற்கு வந்திருக்கிறாள். ஆனாலும் இந்தக் கல்யாணம் நின்னா அவளுக்கு சந்தோசம்தான்.

            கெட்டி மேளம் கொட்டிட திருமணம் அழகாய் முடிந்தது. திருமணம் முடிந்ததோ இல்லையோ எல்லோரும் சாப்பாட்டுக்கு ஓடினார்கள். இது எல்லா திருமணத்திலும் நடக்கக் கூடியதுதான். கல்யாணத்தப் பாத்திட்டு எவ்வளவு சீக்கிரம் சாப்பிட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சாப்பிட்டுட்டு வேலைக்கோ அல்லது மற்ற அவசர காரியங்களுக்கோ செல்வார்கள். அன்றும் அப்படித்தான் நடந்தது. கூட்டமாய் சென்று சாப்பாட்டு இலையை நிரப்பினார்கள். முன்னே சென்றவர்கள் இடம் பிடித்தார்கள். பின்னே சென்றவர்கள் அடுத்தப் பந்திக்காக சாப்பிட உட்காந்தவர்களின் பின்னாலே நின்று கொண்டார்கள்.

            ஒரு பக்கம் வரவேற்பு நடைபெற்றது. வந்தவர்கள் அனைவரும் ஏதோ ஒன்றினை கையில் பிடித்தவாறு வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். நாங்கள் கல்யாணத்திற்கு வந்திருக்கிறோம் என்றும் புகைப்படத்திலும் வீடியோவிலும் பதிவாகி விடவேண்டும் என பல்லை இளித்துக் கொண்டு முகம் காட்டி நின்றார்கள். பரிசுப்பொருட்களும் குவிந்தன. மொய்ப்பணமும் சிறுக சிறுக சேர்ந்து கொண்டிருந்தன. வந்தவர்கள் எல்லோரும் சாப்பிட்டு வாயாற வாழ்த்திவிட்டு சென்றார்கள். இரவு நெருங்கினதும் மாப்பிள்ளையும் பொண்ணையும் புது வாழ்க்கை தொடங்கிட அந்த அறைக்குள் அனுப்பினார்கள். எல்லா வேலைகளையும் முடித்து விட்டு படுக்கப்போனாள் பார்வதி அம்மா. கடந்த ஐந்து வாரங்களாக ரயில் வண்டி போல தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தாள். அவளுக்கு ஓய்வே இல்லை. இப்போதுதான் அப்பாடா என்றிருந்தது. கீழேப் பாய் போட்டு இரண்டு கால்களையும் நீட்டி சுவற்றோடு சாய்ந்து உட்காந்தாள். அவளின் இரண்டு கால்களும் கடுகடுத்தன. முட்டிக்கால் வலியால் தன்னுடைய இரண்டு கைகளையும் நன்றாகத் தேய்த்துக் கொடுத்தாள். அப்போதுதான் தேவியின் ஞாபகம் வந்தது. “அடியே… தேவி.. தேவி…” என்று கத்தினாள். அம்மா… என்றபடியே ஓடோடி வந்தாள். பார்வதி அம்மாவின் இரண்டு கால்களையும் நேராக நீட்டிப்போட்டு மென்மையாக அமுக்கினாள் தேவி. தேவியின் அமுக்கும் கைப்பதம் யாருக்கும் வராது என்று எண்ணினாள். அப்படியே சொக்கிப்போய் மெய்மறந்து தேவியையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

யாரிந்த தேவி? இருபத்தியேழு வருசத்திற்கு முன்னாடி எங்க குலசாமி கோயில்ல ஒத்தையா நின்னிட்டு இருந்தா… ஆமாம்!  எனக்கு கல்யாணம் ஆகி பத்து வருஷமா குழந்தை இல்லை. போகாத கோயிலும் இல்லை. வேண்டாத தெய்வமும் இல்லை. பண்ணாத வைத்தியமும் இல்லை. என்கிட்ட குறையா? அவர்கிட்ட குறையா?ன்னு தெரியல. டாக்டரும் ஆளுக்கு ஒரு மாதிரி சொல்லி எங்கள தினமும் சாகடிச்சாங்க. இதுல எங்க மூத்தாரு பொண்டாட்டி பாக்கியம் அக்கா வேற, அப்பப்ப எங்களப்பத்தி குறை சொல்லிகிட்டே இருந்தாங்க… குழந்தை இல்லாததனால மாமியாருக்கு என்மேல வெறுப்பு உண்டாச்சு. என்னோட வீட்டுகாரருக்கு வேறொரு கல்யாணம் பண்ணிடலாமுன்னு பாக்கியம் அக்கா சொன்னப்ப உண்மையிலேயே என் அடிவயிறு கலங்கிடுச்சு. வாழ்க்கையே அர்த்தமற்றதாய் போனமாதிரி உணர்ந்தேன். செத்துடலாமுன்னு கூட நினைச்சேன். அழுது அழுது கண்ணீரும் வறண்டு போச்சு. அப்பதான் எனக்கு அலமேலு மங்கை ஞாபகம் வந்தது. அலமேலு மங்கை எங்க குலசாமி. அம்மா அடிக்கடி சொல்லுவா.. உனக்கு ஏதாவது கஸ்டமுன்னு வந்ததுன்னா நம்ம அலமேலு மங்கையை நினைச்சுக்கோன்னு… அப்பதான் நினைச்சேன் என்னையும் என் குடும்பத்தையும் காப்பாத்த அலுமேலு மங்கையாலதான் முடியுமுன்னு.

அடுத்த நாள் காலையிலேயே நானும் அவரும் அலமேலு மங்கை குலசாமி கோவிலுக்கு கிளம்பினோம். அம்மனுக்கு மஞ்சள் நிறத்தில புடவையும், கருகமணி, மூக்குத்தி, கண்ணு, உப்பு என அனைத்தும் எடுத்துட்டு போனோம்.  நேரா போயி அம்மனின் கால்லே விழுந்தேன். “எனக்கு வாழ்க்கை கொடு! ய வயத்துல ஒரு புள்ளய கொடுத்து என்ன வாழ வையி…  உனக்கு  என் உசிரையே தரேன்“ என்று எரிந்து கொண்டிருந்த கற்பூரத்தின் மீது சத்தியம் செய்தாள் பார்வதி அம்மா. இப்போது அம்மன் அலமேலு மங்கையின் கண்கள் ருத்தரமாய் சிவந்தது. பூஜைகள் அனைத்தும் முடிந்தன. கோயிலின் பின்பக்க குளக்கரை படிக்கட்டில் பார்வதி அம்மா அவரது கணவரிடம் அழுது கொண்டிருந்தாள். “நான் உன்ன விட்டுட்டு இன்னொருத்தி கூடயெல்லாம் வாழ மாட்டேன் பார்வதி. உன்னை விட என்ன யாரு அன்பா கவனிச்சுப்பா… சொல்லு..! கவலைப்படாத அம்மாகிட்ட ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கலாம்” என்றார். அப்போது அந்தக் குளக்கரை மறுதிசையில் படிக்கட்டு  ஓரத்தில் தண்ணீரில் கால் வைத்தபடியே  பெண்  ஒருத்தி முந்தனையை வாயில் பொத்தியபடி அழுது கொண்டிருந்தாள். “ஏங்க அங்க பாருங்க ஒரு பொண்ணு அழுதுட்டு இருக்கா.. யாருன்னு தெரியலையே… வாங்க போயி கேட்கலாம்” என்று கணவனை இழுத்துக் கொண்டு போனாள்.

“யாரும்மா நீ? இங்க என்ன பன்ற..” என்றாள் பார்வதி அம்மா. அந்தப் பெண்ணின் விசும்பும் சத்தம்தான் அதிகமாய் கேட்டது. கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவள் பேசத்தொடங்கினாள். “இந்த ஊருதான். பேரு தேவி. நான் ஒரு அநாதை. என்ன வளத்த கிழவியும் செத்துப்போச்சு. இப்ப எங்க போறது, என்ன பன்றதுன்னு தெரியாம உட்காந்திருக்கேன்” என்றாள் அப்பெண். அந்தப் பொண்ணைப் பார்த்தால் பாவமாய் இருந்தது. “சரிம்மா… எங்ககூட வந்திரியா? நான் உன்னை பாத்துக்கிறேன்” என்றால். தலையை மட்டும் ஆட்டினாள் அப்பெண்.

அந்த மாதமே பார்வதி அம்மாவின் வயிற்றில் கரு தங்கியது. அவளின் உள்ளத்து உணர்ச்சிக்கு அளவே இல்லை. வானத்துக்கும் பூமிக்கும் பறந்தாள். மாமியார் மருமகைளை உள்ளங்கையில் தாங்கினாள். ஆனால் பாக்கியத்திற்கு வயிற்றெரிச்சல் தாங்க முடியவில்லை. கரு கலைவதற்கு தன்னால் முயன்றதை செய்ய தீர்மானம் செய்து கொண்டாள். இத்தனையிலும் தேவிக்குத்தான் மிக்க மகிழ்ச்சி. அன்று முதல்  பார்வதி அம்மாவை கூடவே இருந்து பார்த்துக் கொண்டாள். அவள் பெயர் பார்வதிதான். தேவிதான் அன்பின் மிகுதியால் முதன்முதலாக பார்வதி அம்மா என்றழைத்தாள். அதன்பிறகு அதுவே நிலையாகிப் போனது.

என்னுடைய வயிர் கொஞ்சம் கொஞ்சமாக பெரியதாக தொடங்கிய காலத்திலிருந்தே தேவிதான் எல்லாமே. என்னை குளிப்பாட்டி வயிற்றை தடவிக் கொடுத்து தூங்க வைப்பதில் இருந்து அவளின் பங்கு அசாத்தியமானது. அதிலும் நான் வாந்தி எடுக்கும் போதும், வயிற்றில் வலி ஏற்படும் நேரத்தில் கூட அவளின் மென்மையான தடவுதலின் எத்தனையோ முறை மெய்மறந்து போயிருக்கிறேன்.  பிரசவ நேரங்களில் கூடவே இருந்தாள். பொறுத்துக்கொள்ள முடியாமல் தொண்டை கிழிய கத்திய போது தேவியின் கையை பற்றியவுடன் ஏதோ வலியில்லாமல் போனதை உணர்ந்தேன். என்னை இழந்து சுகமாய் இருப்பது போல் உணர்வு இருந்தது. அன்று என்னை எவ்வாறு உணர்தேனோ அப்படியே இன்றும் உணர்ந்தேன். பார்வதி அம்மாவுக்கு கண்கள் சொக்கி இமைகள் மூடி தூக்கம் வந்தது.

நான் கொடுத்த மஞ்சள் புடவையோடு குலசாமி  அம்மன் அலமேலு மங்கை நின்று கொண்டிருந்தாள். என்னைப் பார்த்து புன்னகை செய்தாள். நான் அம்மனின் பாதங்களில் விழுந்தேன். அம்மனோ… ஒரு அடி பின்னால் நகர்ந்து நின்றாள். நான் என்னவென்று புரியாமல் தவித்தேன்.

“பார்வதி அம்மா… எனக்கு சத்தியம் செய்து கொடுத்ததை வாங்க வந்திருக்கிறேன்”

“என்ன சத்தியம்” புரியாமல் தவித்தாள் பார்வதி அம்மா

“ஆமாம்! கஸ்டம் வரும்போது கடவுளிடம் அதைத் தரறேன்.. இதைத் தரேன்னு சொல்லி நீங்கள் கேட்டதை வாங்கிட்டு போயிரிங்க… எல்லாம் நல்லதா முடிஞ்சவுடனே, எங்ககிட்ட பேசுனதை சொன்னதை அப்படியே மறந்தும் போயிடுறீங்க. நல்லா யோசனை பண்ணிப்பாரு பார்வதி அம்மா”

யோசனையில் ஆழ்ந்தாள். புத்திக்கு செய்த சத்தியம் புரிந்தது. ஆமாம்.. என்று தலையை மட்டும் ஆட்டினாள்.

“உன் உசிரைக் கொடு.. எனக்கு பலி கொடு… உன் சத்தியத்தை உண்மையாக்கு..” என்றாள் அம்மன் அலமேலு மங்கை.

“இல்ல இப்பத்தான் என் மகனுக்கு கல்யாணம் நடந்திருக்கு. இன்னும் கொஞ்ச நாள்ள பேரன் பேத்தியைப் பாத்திருவேன். அப்புறமா நீ என்ன எடுத்துக்க”

“அதுக்காக இன்னும் எவ்வளவு நாள் உன் கூடவே நான் இருக்கிறது. நீ இப்ப தருவ… அப்ப தருவ…ன்னு..”

“அலமேலு மங்கை அம்மன் என்கூடவே இருக்கா… உண்மையா? அப்படின்னா யாரது?

“நல்லா யோசிச்சுப்பாரு பார்வதி அம்மா”

“ஆமாம்! ஆமாம்! ‘பார்வதி அம்மா’ என்று கூப்பிடும் இக்குரலை இதற்கு முன் நான் பலமுறை கேட்டிருக்கிறேன். ஆமாம்! இது தேவியின் குரலா! என்ன தேவியின் குரலா! கொஞ்சமாய் புரிய ஆரமித்தது. கல்யாணத்திற்கு பட்டுப்புடவை எடுக்க துணிக்கடைக்குச் சென்றிருந்தோம். துணிகள் அனைத்தும் எடுத்து முடித்ததும் தேவிக்கும் சேர்த்து புடவை எடுத்தோம். அப்ப தேவி, “பார்வதி அம்மா எனக்கு உன் கையால மஞ்சள் நிறத்துல புடவை எடுத்துக்கொடும்மான்னு கேட்டா”. நானும் எடுத்துக்கொடுத்தேன். கல்யாணத்துல தேவி கட்டியிருந்த சேலையும் குலசாமி அலமேலு மங்கைக்கு முதன்முதலா நான் கொண்டு சென்ற சேலையும் ஒன்னா இருக்கு. அப்படின்னா.. தேவிதான் அலமேலு மங்கையா!

அலமேலு மங்கையின் சிரிப்புச் சத்தம் இந்த பூமியையே அதிர வைத்தது. ஆமாம்! கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்ண… இப்ப என்னாச்சு.. பயப்படுறீயா.. நீ கேட்ட மாதிரி ஒரு குழந்தையும் கொடுத்துட்டன். உன் கூடவே இருந்து உன்னையும் குழந்தையும் பாத்துகிட்டன். இப்பதான் உன் பையன் கல்யாணம் முடிஞ்சி புது வாழ்க்கையும் ஆரமிச்சிட்டான்ல்ல. இதுக்கப்புறமும் உன் பின்னாலயே என்னால அலைய முடியாது. நீ சொன்ன மாதிரி உசுரை கொடுத்திரு.. நான் போயிடுறேன்.

“சரிதான். நான் கொடுக்கிறன். ஆனால் என் புள்ளய தினமும் பாத்திட்டு இருக்கனும். அப்படின்னா இப்பவே இந்த உசிரை எடுத்துரு” என்றாள் பார்வதி அம்மா.

அலமேலு மங்கையின் மூக்குத்தி அணிந்த அழகான முகம் ஒளிர்ந்தது. நன்றாக தூங்கிக் கொண்டிருந்த  பார்வதி அம்மாவின் உடல் நிலத்தில் சரிந்தது. சாந்தி முகூர்த்தத்தில் மணப்பெண்ணின் அடிவயிறு இனித்தது.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

http://kelviyumpathilum.com/

தொல்காப்பிய வினா விடைகள் (PG TRB| NET|SLET|TET|TNPSC) – 6

தமிழ் இலக்கிய வினா விடைகள் PG TRB| NET|SLET|TET|TNPSC -3

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here