அம்மாயும் சிறு குழந்தைதான் |சிறுகதை|பிரபுவ

அம்மாயும் சிறு குழந்தைதான்
“உங்களுக்கு இதுதான் கடைசியா இருக்கணும். இன்னொரு முறை இதை செஞ்சுடாதீங்க. பிறகு நான் என்ன சொல்வேன்? என்ன செய்வேன்? என்று எனக்கே தெரியாது”.
“இந்த அரிசி எத்தனை பேருங்க உழைச்சு உற்பத்தி செஞ்சு இங்க வந்திருக்குதுன்னு” உங்களுக்குத் தெரியாதா?
அரிசியையும் படியையும் யாராவது எங்கயாவது இப்படி விளையாட எடுத்துக் கொடுத்துட்டு வேடிக்கைப் பார்ப்பாங்களா? அவன் கேட்டால் எது? என்னான்னு? கொஞ்சம் கூட யோசிக்காம, கேட்டவுடனே அப்படியே கேக்குறதை எடுத்து கொடுத்துவிடுவீங்களா? உங்களுக்கு தெரிய வேண்டாமா? நல்லது கெட்டது ஏதும் சொல்லி தர மாட்டீங்களா?
அவன் அதுதான் வேணும்னு அடம்பிடித்தால் அரிசி, பருப்பு, சர்க்கரை, உளுந்துன்னு எல்லாத்தையும் எடுத்து கொடுப்பீங்களா? கொஞ்சமாவது வரைமுறை வேணாமா?” என்று அப்பா பிள்ளைகளின் அம்மாயியை கடிந்து ஏசுகிறார். எதனால் இப்படி வாயில வந்ததெல்லாம் சொல்லி திட்டி தீர்த்தார்.
ஒரு பேடு தன் குஞ்சுகள் முட்டையில் இருக்கும் வரை மட்டும் அடைக்காப்பதில்லை; ஒரு கோழிக்குஞ்சு வளர்ந்து, எதிரி உயிரிகளிடம் இருந்து எதிர்த்து தன்னைத்தானே காத்துக்கொள்ளும் வரையிலும் அடைக்காக்கும் அல்லவா! இதுபோல பெற்றெடுத்த மூன்று விலை மதிப்புமிக்க பொன்களை (பெண்களை), அரும்பாடுபட்டு வளர்த்து, ஆளாக்கி, ஆளுக்கொரு திசையில் திருமணமும் செய்து வைத்தார் பசுபதி அம்மாயி. அவர் மூன்று பெண்களையும், திருமணம் செய்து வைத்து, பேரன் பேத்திகள் என்று ஆன பின்னரும் கூட அடைக்காப்பது போலவேக் காத்து வாழ்ந்து வந்தார்.
பசுபதி அம்மாயி பார்ப்பதற்கு மிகவும் சாதுவானவர்; அசாத்தியமான பொறுமை குணம் உடையவர். அக்கம் பக்கம் இருப்போரிடம் அளவான அன்போடு பழகி குடும்ப வாழ்வை செம்மையாகவே கழித்து வந்தார்.
தன்னுடைய பேத்தி மற்றும் பேரன்களுக்கு மிகவும் பிடித்தமானவர். எப்போதும் அவர்களுடன் இருப்பதை மிகவும் விரும்புவார்; சில வேளைகளில், பிள்ளைகளுடன் ஈன்ற தாய் தந்தை இல்லாது இருந்தாலும் இருப்பார்கள்; ஆனால் பிள்ளைகள் ஒருபோதும் அம்மாயி இல்லாமல் இருக்கவே மாட்டார்கள்.
பிள்ளைகளும் இவரோடு இருப்பதையே அதிகமாக பிரயாசப்படுவார்கள். பிள்ளைகள் காலையில் எழுந்தது முதல் இரவில் உறங்கும் வரையில் ஒவ்வொரு பிள்ளையும் கேட்கும் விளையாட்டு சாமான்களையும் சலிக்காமல் எடுத்துக் கொடுப்பது தான் அவரது முதல் கடமையாகும். அது மட்டும் அல்ல. மீண்டும் அந்த விளையாட்டு பொருள்கள் அனைத்தையும் அதனதன் பைகளில் அசராமல் நாளும் எடுத்து அடுக்கி வைத்து விடுவார்.
பிள்ளைகள் சில நேரங்களில் சமையலறையின் உள்ளே புகுந்து சட்டி, குண்டான், இட்லித்தட்டு, டம்ளர் போன்று இருக்கும் சாமான்களை எல்லாம் எடுத்து வந்து வறாண்டாவில் வைத்து கொஞ்ச நேரத்திற்கு விளையாடுவார்கள். பிறகு அங்கு உள்ள சாமான்களையெல்லாம் அப்படியே போட்டுட்டு மீண்டும் உள்ளே சென்று, வேறு ஏதேனும் சாமான்களை எடுத்து வந்து வீட்டின் வேறொரு பகுதியில் வைத்து சிறிது நேரம் விளையாடுவார்கள்.
முன்பு வறாண்டாவில் வைத்து விளையாடிய சாமான்களை எடுத்து வைக்க அம்மாயி சென்றால், ‘பிள்ளைகள் எடுக்கக் கூடாது’ என்று கத்தி அழுது அடம் பிடிப்பார்கள். இப்படி வீடு முழுவதுமாக பொருள்களை பரப்பி வைத்து பிள்ளைகள் விளையாடி ஓய்ந்து உறங்கிய பின்புதான், அந்த பொருள்களை எல்லாம் எடுத்து வைத்து வீட்டை சுத்தம் செய்ய முடியும்.
இப்படி அம்மாயி வீட்டின் உள்ளேயும் வெளியேயும் அங்கும் இங்குமாக உள்ள சாமான்களை ஒவ்வொரு நாளும் எடுத்து வைப்பதில் மிகவும் அதிகமான நேரத்தைச் செலவிட்டு வந்தார்.
ஓரிரு நாட்கள் என்றால் ‘சரி போகட்டும்’ என்று விடலாம். ஒவ்வொரு நாளும் அரங்கேறும் இந்த செய்கைகளுக்கு அம்மாயி ஒரு போதும் பிள்ளைகளிடம் மறுப்பு தெரிவித்ததே கிடையாது. இதனால்தானோ என்னவோ? பிள்ளைகளும் இதை தொடர்ந்து ஒரு நாளும் தவறாமல் செய்து கொண்டே இருந்தார்கள்.
இவ்வாறாக சிறு பிள்ளைகள் விளையாட்டு பொருள்களான பொம்மைகள், கார், ஜீப், வேன், ரயில் போன்ற சில பொருட்களோடு, சிறிது நேரம் விளையாடுவார்கள். பின்னர், வீட்டின் சமையலறையில் இருந்து எடுக்கும் சாமான்களோடு சில மணித்துளிகள் விளையாடுவார்கள். பிள்ளைகள் கேட்பதைக், கேட்டப்படியே எடுத்து கொடுக்கதான் அம்மாயி இருக்காங்களே! என்ன கவலை?
ஒரு முறை அம்மாயி சமையலறையில் மும்முறமாக வேலை செய்து கொண்டிருந்தார். அங்கு வந்த சிறு பிள்ளைகள் கத்தரிக்கோல் மற்றும் ஏதேனும் தாள் வேண்டும் என்று அடம் பிடித்தனர். கேட்டதைக் கேட்ட மாத்திரத்திலே, “இந்தா! பிடி! இனி இங்கே வந்து என்னை தொந்தரவு செய்யாதீங்க!” என்று எடுத்துக் கொடுத்து அனுப்பினார்.
வாங்கிய கத்தரிக்கோல் மற்றும் பேப்பரை வைத்து சிறப்பான சம்பவம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்; பேப்பரை எவ்வளவு சிறிய துகளாக நறுக்க முடியுமோ! அவ்வளவு சிறியதாகப் பிஞ்சு விரல்கள் கொண்டு நறுக்கி தீர்த்தனர். குழந்தைகளுக்கு நல்ல நேரம் இருந்ததால் கத்தறிக்கோல் பிள்ளைகளைப் பதம் பார்க்கவில்லை. அப்போது மின் விசிறியில் இருந்து சர்ற்…. என்று வந்து கொண்டிருந்த காற்று, அந்த மெல்லிய பேப்பர் துகள்களை வெட்ட வெட்ட வீடு முழுவதும் பரப்புவதற்கு வெகு உதவியாக இருந்தது.
சமையல் வேலையை முடித்து விட்டு, வெளியில் வந்து பார்த்த அம்மாயிக்கு வீடு முழுவதும் பேப்பர் இருப்பதைக் கண்டு ஒரு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு சீக்கிரத்தில் இப்படி “வீடு முழுவதும் பேப்பரை வெட்டி நறுக்கி குப்பையாக்கிட்டாங்களே!” என்று புலம்பிக்கொண்டு கூட்டித் துடைத்து சுத்தம் செய்தார். அப்போது பிள்ளைகள் மத்தியில் கடுகளவும் கோபத்தை வெளிபடுத்தாது இருந்தார். இதன் பொருட்டு ஓரிரு நாள் இடைவெளியில் மீண்டும் மீண்டும் பிள்ளைகள் இதே போன்று விளையாடி மகிழ்ந்தனர்.
ஒரு நாள் பிள்ளைகள் தலையணை மற்றும் பாய் வேண்டும் என்று அடம் பிடித்து வாங்கினர். அதை கட்டிலின் மேலே வைத்து விளையாடிக்கொண்டிருந்தனர். ‘இதெல்லாம் ஒரு விளையாட்டா? ஒழுங்கா கீழே இறங்கி விளையாடுங்கள்’ என்று அலுவலகத்திற்கு செல்லும் முனைப்புடன் அப்பா கண்டிப்பான குரலுடன் திட்டி முணுமுணுத்துக் கொண்டே குளிக்கச் சென்றார்.
சிறார்கள் ஆசையோடு விளையாடிக்கொண்டு இருக்கையில், ஒருவன் தரையில் விளையாடிக்கொண்டு இருப்பது போல நினைத்து கட்டிலில் இருந்து இறங்குவதற்கு பதிலாக கட்டிலில் இருந்து பக்கவாட்டில் ஓட ஆரம்பித்து விட்டான். அப்போது கீழே விழுந்து மண்டையில் அடிபட்டு ‘டொம்’ என்று ஒரு பெரிய சத்தம் வீடே அதிர்ந்தது. என்ன ஆச்ச பிள்ளைக்கு? என்று குளிக்கச் சென்ற அப்பா ஒருபுறம் ஓடிவர, அதற்குள் சமையலறையில் இருந்த அம்மா மற்றும் அம்மாயி இருவரும் வந்து பிள்ளையை தூக்கினர்.
பிறகு எங்கு அடிபட்டது? என்று தெரியாமல் அடிப்பட்ட இடத்தை விட்டுவிட்டு வேறு ஏதேதோ இடத்தில் தேய்த்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த அப்பா, எங்கே அடி விழுந்தது? என்று கேட்காமல், அதோடு பிள்ளையை அடி அடி என்று கோபம் தணிய அடித்து துவைத்துவிட்டார். அந்த பிள்ளை கீழே விழுந்ததால் மண்டையில் அடிபட்டு ஏற்பட்ட வலியை விட, அப்பா அடித்த அடிதான் அதிகமாக வலித்தது.
அம்மா, அம்மாயி இருவரும் எவ்வளவு தடுத்தும் பயனில்லாமல் போனது. ‘எங்கிருந்து தான் வந்தது’ என்றே தெரியவில்லை, அவ்வளவு கோபம். பிள்ளைக்கு பேச்சு மூச்சு சுத்தமாக இல்லை. தண்ணீர் எடுத்து வந்து முகத்திலே அடித்து கொஞ்ச நேரம் கழித்துதான் கண்கள் விழித்து பார்த்தான். கொஞ்ச நேரத்துல அங்கிருந்தவர்களின் உயிர் உடலை பிரிந்து சென்று திரும்பி பின் வந்தது. உங்கள் ரெண்டு பேரையும் கீழே இறங்கிதானே விளையாடச் சொன்னேன். இனிமேலாவது இப்படி விளையாண்டு தொலைக்காதீங்க! ஏண்டா இப்படி ஏங்கிட்ட அடிவாங்கி சாகுறிங்க” என்று கூறி வீட்டைவிட்டு வெளியே சென்று விட்டார் அப்பா.
ஒரு வாரத்திற்கு பிறகு இது போலவே மீண்டும் மற்றொரு சம்பவம் அரங்கேறியது. அன்று சிறு பிள்ளைகள் இருவரும் ஒருவரோடு ஒருவர் சேர்ந்து கொண்டு முறம், அரிசி மற்றும் அரிசியை அளக்கும் படி, இவற்றை எடுத்துக் கொண்டு விளையாடினர். அழுது அடம்பிடித்து பாசக்கார அம்மாயிடம் உரிமையோடு ஏமாற்றி வாங்கி விளையாடினர். அப்போது அம்மாயி அருகில் இருந்த கடைக்குச் சென்று இருந்தார். சிறு பிள்ளைகள், வழக்கம் போலவே விளையாட ஆரம்பித்து முடிவில் வீடு முழுவதும் அரிசியை சிதறிவிட்டனர்.
வீட்டில் கால்களே வைக்க முடியாத நிலையில் இருந்தது. கடைக்குச் சென்று திரும்பி வந்து பார்த்த அம்மாயி, வீடு முழுதும் சிதற வைத்துள்ள அரிசியை பார்த்து உறைந்து போய் நின்றார். கால் வைக்கும் இடமெல்லாம் அரிசி, உள்ளே கால் வைத்தால் பாதங்களுக்கு அடியில் இருந்து அரிசிகள் “ஐயோ! என்னை மிதிக்காதே!” என்று கெஞ்சுவது போல தோன்றியது.
அம்மாயி அரிசியை எடுத்து கொடுத்தது ‘என் தப்புதான்’ என்று முணுமுணுத்துக்கொண்டு பெருமூச்சு விட்டு, பின்னர் வழக்கம் போலவே வீடு முழுவதும் பரப்பி சிதறிக்கிடந்த அரிசியை கூட்டிப் பெருக்க ஆரம்பித்தார். எப்போதும் போலவே இப்போதும் தனது கோபத்தைப் பிள்ளைகளிடம் காட்டாது சுத்தம் செய்யும் வேலையை தொடர்ந்தார்.
இந்த நேரத்தில் வீட்டிற்குள் வந்த அப்பா, வீடு முழுவதும் சிதறிக்கடந்த அரிசிகளைக் கண்டு கடுங்கோபத்தில் என்ன செய்வது? என்று தெரியாமல் “உங்களுக்கு இதுதான் கடைசியா இருக்கணும். இனி ஒரு முறை நீங்கள் இப்படி செய்தால் அப்பறம் நான் என்ன செய்வேனே எனக்கே தெரியாது? நீங்க சின்ன பிள்ளையா இருந்தப்ப இப்படிதான் உங்கள விளையாட விட்டாங்களா?”…. என்று என்னென்னவோ சொல்லி திட்டி தீர்த்து விட்டார்.
கோபத்தில் வெளிவந்த வார்த்தைகளை கேட்டு பசுபதி அம்மாயியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கண்கள் கலங்கி கண்ணீர் வழிந்தது. அவர் பச்ச குழந்தையைப் போல தேம்பி தேம்பி அழுதார். ஆனால் என்ன? அந்த அழுகை அப்போது மட்டும் தான். பொழுது விடிந்தது; அப்பாவும் வீட்டில் இல்லை. குழந்தைகள் அரிசியை கேட்டு அடம் பிடித்தனர். அம்மாயி எப்போதும் போலவே மறுப்பு ஏதும் சொல்லாமல், எடுத்துக் கொடுக்கிறார். இது நித்தமும் தவறாமல் அரங்கேறியது. ஒரு மாதத்திற்கு பிறகு அப்பாவின் பார்வையில் தென்படுகிறது. இதனை கண்டும் காணாமலும் விட்டுவிடுகிறார்.
‘பிள்ளைகள் செய்தது தவறு’ என்று அவர்களுக்கு ஒருபோதும் புரியப் போவது இல்லை. ‘கேட்டதையெல்லாம் எடுத்து கொடுப்பதும் தவறு’ என்று அம்மாயி உணர்வதாகவும் இல்லை. அம்மாயி பிள்ளைகள் மீது கோபம் கொள்ளாததற்கும், தேம்பி அழுததற்கும் காரணம் தெரிய வேண்டின், ஒன்று நாம் சிறு பிள்ளையாக இருக்க வேண்டும், அல்லது நமக்கு இந்த அம்மாயி போல வயதாகி இருக்க வேண்டும்! வயதான பின்பு பெரியவர்களும், வயதுக்கு வராத முன்பு உள்ள பிள்ளைகளும் சிறு குழந்தைகள் தான்!அவ்வகையில் பசுபதி அம்மாயும் ஒரு குழந்தைதானோ! என்று நினைத்து சமாதானம் அடைகிறார்.

சிறுகதையின் ஆசிரியர்

பிரபுவ,

பல்லபுரம், இலால்குடி தாலுக்கா

திருச்சி – 621 712

மேலும் பிரபுவ அவர்களுடைய படைப்புகளைப் படிக்க, 

1.ஃபியூசிபெலஸ்

2.பிபுகேர் ஏஜென்ஸி

3.சாலம் பாய் கறிக்கடை

4.24 காரட் தங்கம்

5.மொபைல் ரூல்ஸ்

6.கிருகபதி – கிருகிணி (கவிதை)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here