சங்ககால மக்களின் அகவாழ்வைக் குறிப்பது அகத்திணையாகும். அகத்திணை ஒழுக்கமானது ஒத்த அன்புடைய தலைவன் தலைவியின் காதல். இல்லற வாழ்வைக் குறிப்பதாகும். இவ்வகையான ஒழுக்கத்தை அகநானூற்றுப் பாடல்கள் உணர்த்துகின்றன. அசு ஒழுக்கங்களை அறிந்து கொள்ளவும், படிப்பவர் இன்புறவும். புலவர் சில உத்திமுறைகளைக் கையாளுகின்றனர். இவற்றுள் உள்ளுறை உவமம் ஒரு உத்திமுறை ஆகும். உள்ளுறை பாடல்கள் தலைவனின் ஒழுக்க நெறிகனைத் தலைவி மறைமுகமாகச் சுட்டுவதைப் போல உள்ளது. அதற்காகப் பரணரின் மருதத் திணைப் பாடல்கள்ஆய்விற்கு உட்படுத்தப்படுகின்றன.
சமூக ஒழுக்கம் பரத்தையும் கள்ளும்
சங்க இலக்கியங்களில் தலைவன் தலைவியை விடுத்து பரத்தையிடம் செல்வது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒழுக்கமாகும். இதற்குத் தொல்காப்பியர்,
கற்புவழிப் பட்டவள் பரத்தை ஏத்தினும்
உள்ளத்தூடல் உண்டு என மொழிப (தொல். 1179)
எனக் கூறுகின்றார். இதேபோன்று கள் அருந்துதல் ஏற்றுக் ஒளவையாரின் புறநானூற்றுப் பாடல் (235) இதற்குச் சான்றாகின்றது. இதன்மூலம் பரத்தை ஒழுக்கமும், கள்ளும் சமூக ஒழுக்கமாக இருந்துள்ளதை அறிந்துகொள்ள முடிகிறது. இருப்பினும், அவை இல்லற வாழ்விற்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒழுக்கமாக இல்லை என்பதனையும் சங்கப் பாடல்கள் உணர்த்தும் விதமாக அமைந்துள்ளன.
கள்ளின் தீதும் தலைவனின் ஒழுக்கக் குறைபாடும்
அகநானூறு ஆய்வுக்கோவை 2011 தலைவன் தலைவியை விடுத்துப் பரத்தையோடு மகிழ்ந்து இருந்தான் இச்செயல் தலைவிக்கும் ஊர்ப் பொதுமக்களுக்கும் தெரிந்தது. ஊரார் அலர்படுத்தினர். அலரின் காரணமாக வீட்டிற்குச் சென்ற தலைவனைத் தலைவி வாயில் மறுக்கின்றாள்.
தலைவி தலைவனிடம், நெருப்புக் கொழுந்துவிட்டு எரிவது போன்ற தாமரைப் பூக்களின் இடையே விளைந்து, சிவந்த நெற்கதிர்களை அறுத்துக் கவிழ்க்கின்ற உழவர்களுக்கு கள்ளினை ஏற்றிக்கொண்டு பலகாலமாக வந்து செல்லும் வண்டி, ஏதேனும் ஒரு சூழலில் சேற்றிலே புதைந்து விடுவதுண்டு. அது போன்ற சமயங்களில் அவ்வண்டியை விடுவிக்கும் பொருட்டுச் சிறந்த கரும்புகளை அதன் சக்கரத்திலே அடுக்கும் வளமிக்க ஊரையுடைய தலைவனே எனக் கூறுகின்றாள்.
”கள்கொண்டு மறுகும் சாகாடு அளற்றுஉறின்
ஆய்கரும்பு அடுக்கும் பாய்புனல் ஊர” (116: 3-4)
இங்குப் பரத்தை அறிவை மயக்கும் கள்ளுக்கும், தலைவி நாவிற்கும், மனதிற்கும் சுவைதரும் கரும்புக்கும் தலைவன் கலங்கிய சேற்றைப் போன்ற மனதிற்கும் இணையாக்கப் பட்டுள்ளது இப்பாடலில் தலைவன் தலைவியோடு கூடிய இல்லறத்தைச் சேற்றில் புதைத்து, இழிவான வாழ்வை தரும பரத்தையை நாடிய ஒழுக்கக் குறைபாட்டை எடுத்து உரைக்கின்றது.
மேலும், இதேபோன்றே தலைவனின் ஒழுக்கக் குறைப்பாட்டைக் கூறும் (அகநா 196. 1-4) பாடலும் இடம் பெறுகின்றது கள் மிகுதியாக உடைய பாக்கத்தில் நீண்ட செடிகள் அசைந்தாடிக் கொண்டிருந்தன. அச்செல்வமிக்க பகுதியில் பாணர்கள் வைகறை வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது துறையிடத்துப் பெரிய வயிற்றினையுடைய வரால் மீன் அகப்பட்டது அம்மீனினுடைய துடியின் கண் போன்ற கொழுவிய துண்டத்தினை விற்றனர் அதன்மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு கள்ளுண்டு களித்து ஆடினர் அவர்கள் ஆடிய மயக்கத்தில மீண்டும் மீன்வேட்டைக்குச் செல்வதை மறந்து உறங்கினர். உறங்கிய கணவன்மார்களுக்கு அவரவர் மனைவியராகிய பாண்மகளிர் அதிகாலையில் அவ்வுணவானது ஆம்பலது அகன்ற இலையானது உணவு கொடுத்தனர் சுடுகின்ற சோற்றுத் திரளோடு பிரம்பின் புளிப்பும் ஆக்கிய புளிக்கறியை இட்டு உண்பித்தனர். அத்தகைய தன்மையுடைய வீரனே எனத் தலைவி கூறுகின்றாள்.
இங்குப் பாணன் தன்மை தலைவனுக்கும் பாண் மகளிரின் செயல்பாடு தலைவிக்கும், மயக்கம் தரக்கூடிய கள்ளைப் பரத்தைக்கும் ஒப்பாகக் கூறப்படுகின்றது. தலைவன் இல்லற வாழ்க்கைக்காகப் பொருளீட்டச் செல்கிறான் ஈட்டிய பொருளை இல்லறத்திற்காகச் செலவிடாமல் பரத்தையோடு கூடிய மகிழ்ச்சிக்காகச் செலவிடுகிறான். அவ்வாறு தன் கடமையை மறந்த தலைவனுக்குக் கற்பு ஒழுக்கமுடைய – தலைவி உணவளிக்கின்றாள். அதாவது ஒழுக்கமுடைய தலைவியின் பண்பு உணவளிப்பதும், ஒழுக்கமற்ற தலைவனின் பண்பு பரத்தையுடன் செலவழிப்பதையும் உள்ளுறையாகக் கூறப்பட்டுள்ளது.
ஒழுக்கக் குறைபாட்டில் பாணன் துணை
பாணன் துணையோடு தலைவன் பரத்தையோடு மகிழ்ந்திருந்தான் தலைவன் பரத்தையிடமிருந்து மீண்டு தலைவியிடம் சென்றபோது ஊடல் வெளிப்பட்டது அதனால், அவன் தோழியிடம் வாயில் வேண்டினான் அதற்குத் தோழி பரத்தையுடன் கூடியிருந்தமையால் உண்டான அலர் குறித்துக் கூறுகின்றாள்.
தோழி தலைவனிடம் ஆண் சங்கு சருச்சரை பொருந்திய வயிற்றினையும், பிளந்த வாயினையும் உடையது. அது கதிர்ப் போன்ற கூர்மையான மூக்கினை உடைய ஆரல்மீன் துணை கொண்டது. அத்துணையோடு ஆண் சங்கு ஆழமான நீர்ப் பெருக்கத்தை உடைய பெண் சங்கினோடு கூடும். அத்தகைய நீர் நிறைந்த அகன்ற வயல்களையுடைய புதுவருவாயையுடைய தலைவனே எனக் கூறுகின்றாள் (அகநா 246 1-4).
இங்கு ஆண் சங்கு தலைவனையும், ஆரல்மீன் பாணனையும், பரத்தைக்குப் பெண் சங்கும் இணையாகக் கூறப்படுகிறது. பாணன் துணையோடு இல்லற வாழ்விற்கு மீளமுடியாத, துன்பந்தரும் பரத்தையை நாடிச்சென்ற தலைவனின் ஒழுக்கக் குறையைத் தோழி வெளிப்படுத்துகின்றாள்.
அலரும் ஆக்கமும்
தலைவன் பரத்தை ஒழுக்கம் மேற்கொள்கின்றான். அவன் செயலை ஊரார் இழிவுபடுத்துகின்றனர். அதன் பிறகு தலைவன் தன் வீட்டிற்குச் செல்கின்றான். அவன் செயலைத் தலைவி கடிந்து கூறுகின்றாள்.
ஊரலர் ஏற்பட்ட பிறகு வீடு திரும்பும் தலைவனிடம் தலைவி, அழகிய மயில் வயலுக்கு அருகில் இருந்தது. வயலிடத்தில உள்ள உழவர்கள் செருக்குடன் ஆரவாரம் செய்தனர். அதற்கு அஞ்சிய மயிலானது பறந்து சென்று தெய்வத்தையுடைய குன்று பொலிவனைப் பெறுமாறு தங்கியது. அத்தகைய ஊரையுடைய தலைவனே எனக் கூறுகின்றாள் (அகநா 266 16-19).
இப்பாடல் தலைவனை மயிலுக்கும், ஊர் மக்களை உழவர்களுக்கும், தலைவியிருக்கும் இல்லத்தைத் தெய்வத் தையுடைய குன்றுக்கும் உள்ளுறையாகக் கூறப்படுகின்றது. அதாவது தலைவன் பரத்தையுடன் இருப்பதை தலைவியும் ஊர் மக்களும் அறிந்தனர். ஊரார் தலைவனை இழிவு படுத்தினர். அதனலால் அவன் அப்பரத்தையிடமிருந்து வீட்டைஅடைகின்றான் இங்கு ஒழுக்கக்கேட்டை ஊரார் வெளிப்படுத்துவது புலனாகின்றது.
முடிவுரை
தலைவன் தலைவியை விடுத்து பரத்தையை நாடுவது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒழுக்கமாகப் பண்டைய பாடல்கள் சிலவற்றில் வெளிப்படுகிறது. இருப்பினும், இவ்வொழுக்கம் தவறானது. களையப்பட வேண்டியது என்ற கருத்தை வலியுறுத்துவதற்கு உரிய நாகரிகமான வெளிப்பாட்டுக் கருவியாக உள்ளுறை உவமம் உள்ளது. சங்க காலத்தில் ஒத்துக்கொள்ளப்பட்டதாக பரத்தமை ஒழுக்கம் இருந்தாலும் அது கூடாதது விலக்கப்பட வேண்டியது என்ற தனிமனித சமுதாய ஒழுக்கச் சிந்தனையாக இவ்வுள்ளுறை உவமம் சார்ந்த பாடல்கள் அமைந்துள்ளன எனத் துணியலாம்.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் கை. சிவக்குமார்
உதவிப் பேராசிரியர்
எம்.ஜி.ஆர். கல்லூரி, ஓசூர்.