ஃபியூசிபெலஸ்| சிறுகதை | ப.பிரபாகரன்

ஃபியூசிபெலஸ்

என்னை கொஞ்சம் கிள்ளி விடுங்க. எனக்கு இது கனவா இல்ல வெறும் நினைவா அல்லது இரண்டும் இல்லாது நிஜமான்னு பெரிய சந்தேகமாக இருக்குது’ இப்படி பிபு பெருத்த சந்தேகத்தோடு அம்மாவிடம் கேட்டான். அதற்கான காரணம் என்ன என்று தெரியாமல் அம்மா விழிக்க, “அம்மா, எனக்கு ஃபியூசிபெலஸை எப்படி ஓட்டுவதுன்னு தெரிஞ்சுடுச்சு. யாருடைய தயவும் இல்லாமல் என்னால் தனியே ஃபியூசிபெலஸை ஓட்ட முடியுது” என்று பேரானந்தத்தோடு கூறினான்.

‘இது களைந்து போகும் கனவொன்றுமில்லை; நீடித்து நிலைத்து இருக்கும் நிஜம் தான்’ என்று அம்மா கூறுவதை கேட்டவுடன், பிபு தலைகால் புரியாது குதித்து மகிழ்ந்தான். வீட்டிலிருந்த பாட்டி, சித்தி, சித்தப்பா என்று எல்லோரிடமும் கூறி மகிழ்ந்தான். இறுதியாக தாத்தாவிடம் இந்த மகிழ்ச்சியான செய்தியை கூறினான்.  அப்போது தாத்தா பிபுவிடம் “ஃபியூசிபெலஸ் என்றால் என்ன?” என்று கேட்டார்.

ஐயோ! தாத்தா, உங்களுக்கு ஃபியூசிபெலஸ்னா என்னன்னு தெரியாதா? தாத்தா, இந்த உலகமே தனது வீரத்திற்கு ஈடாகாது என்று சொன்ன கிரேக்க நாட்டை சேர்ந்த மாவீரன் அலெக்ஸாண்டரின் குதிரையோட பெயர்தான் ஃபியூசிபெலஸ். அந்த மாவீரனின் பன்னிரெண்டு வயதில் இருந்து இறுதி காலம் வரை நீடித்ததொரு புனிதமான உறவின் பெயர்தான் ஃபியூசிபெலஸ். அன்று அந்த மாவீரனுக்கு அவனுடைய தந்தை மாசிடோனியாவின் மன்னன் ஃபிலிப்ஸ், ஃபியூசிபெலஸை பரிசாக வழங்கியபோது அவருக்கு வயது பன்னிரெண்டு. எனது அப்பா, எனது பிறந்த நாள் பரிசாக அளித்தபோதும் எனக்கு வயது ஏழு. அதனால் தான் அலெக்சாண்டரின் குதிரையின் பெயரான ‘ஃபியூசிபெலஸ்’ என்பதையே என்னுடைய சைக்கிளுக்கும் பெயராக வைத்திருக்கிறேன்”என்று கூறிவிட்டு தரையில் கால் படாமல் தாவி குதித்து ஓடினான்.

பிபு எப்படியெல்லாம் சைக்கிளை ஓட்ட கற்று கொண்டோம் என்று யோசித்தும் நினைத்தும் உள்ளத்தில் பெருமிதம் அடைந்தான். முதன் முதலாக கற்றுக் கொண்டபோது அப்பாவிடம், “சைக்கிளை நன்றாக பிடித்துக் கொள்ளுங்கள். கைகளை எடுத்து என்னை தனியே விட்டு விடாதீர்கள்”. என்று பயத்தோடு கூறியதையும், இப்போது எதிரில் ஏதேனும் வாகனம் வருவதைக் கண்டவுடன் அப்பா பிபுவின் பாதுகாப்பு கருதி சைக்கிளை பிடிக்க வந்தால் கூட, உடனே பிபு ‘அப்பா, பிடிக்க வேண்டாம், கையை எடுங்கள், தனியே விடுங்கள்; நான்தான் கற்று கொண்டு விட்டேனே!’ என்று கூறி அப்பாவை விரட்டுவதையும் நினைத்துப் பார்த்தான்.

தினமும் தனது வீட்டில் இருந்து சுமார் 1.5 கி மீ தொலைவில் உள்ள பெரிய ஏரிக்கரை வரை அப்பாவுடன் சைக்கிளைக் கற்று கொள்ள சென்று வருவான். ஆனால் இப்போது பிபு தன்னந்தனியே யாரும் பிடிக்காமல் சைக்கிளை ஓட்டக் கற்றுக் கொண்டதன் பொருட்டு, தனியாக ஏரிக்கரை வரை சென்றுவர புறப்பட்டான். அந்த சாலையில் ஓரமாக தனது பிஞ்சு பாதங்களால் சைக்கிளை மகிழ்ச்சியுடன் அழுத்திக் கொண்டு சென்றான்.

இப்படி தனியே செல்லும் வேளையில், பிபுவின் கண்களின் இமைகள் இறகுகளை மூடி திறக்கும் ஒவ்வொரு முறையும், அப்பா கற்றுக் கொடுக்கும் போது சொல்லித்தந்த வழிமுறைகளையும், அப்போது நடந்த சுவாரசியமான நிகழ்வுகளையும் அசைப்போட்டுக் கொண்டு செல்லலானான்.

முதன் முதலாக பிபு சைக்கிளில் தனியே ஏறி ஓட்ட முயற்சி செய்த போது கீழே விழுந்தான். அப்போது நல்லவேளை எவ்வித அடியும் விழவில்லை. ஒரு வேளை அப்படி விழுந்த போது கொஞ்சம் அடி விழுந்து இருந்தால் கூட, நான் இப்படி சைக்கிள் முழுவதும் ஓட்ட கற்று இருப்பேனோ? தெரியவில்லை.

ச்ச, ச்ச… எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது? அப்படியே கால் தரையில் ஊன்றாமல் பறப்பது போலவே தோன்றுகிறது. வாவ், இப்போ டர்னிங் வருது உடனே பெல் அடிக்க மறக்கக் கூடாது; ட்ரிங், ட்ர்ங், ட்ரிங் … பெல் அடித்துவிட்டு சாலையின் இடது ஓரமாக பெருமிதத்தோடு சைக்கிளை ஓட்டிச் சென்றான்.

ஹா ஹா… இந்த இடத்திலேதான் அப்பா சைக்கிளை பிடித்து கொள்வதற்கு முன்பாகவே ஏறுகிறேன் என்று ஏறி, சைக்கிளில் ஏறியதும் இடமும் வலமுமாக சைக்கிளை ஆட்டி கீழே சாய்ந்து விழுந்தோம். அப்போது வலது முழங்காலில் கொஞ்சம் சிராய்ப்பும் ஏற்பட்டதே. “ப்பா, ப்பா…. என்ன எரிச்சல், இரண்டு நாளா வலியோடே நடந்தோம். எரிச்சல் வேறு. நல்ல வேளை அப்படி ஏற்பட்ட சிராய்ப்பு இப்போ தழும்பாக மாறியே போச்சு” என்று நினைத்துக்கொண்டு அந்த தழும்பு இருந்த இடத்தை ஒற்றை கையில் தடவி பார்த்தான்.

புதிதாக கற்றுக்கொண்டதால் பிபு சைக்கிளை ஓட்டும் போது நடு சாலையிலே ஓட்டிச் சென்றான். அப்படி செய்யக்கூடாது என்று பலமுறை அப்பா எச்சரிக்கையும் செய்திருந்தார். ஆனால் அது அவனுக்கு சைக்கிள் ஓட்டும் உற்சாக மிகுதியால் மறந்து திரும்ப திரும்ப சாலையின் நடுவே ஓட்டிகொண்டிருந்தான். அப்படி அந்த இடம் வந்ததும் பிபுவை ஒரு மௌனம் சூழ்ந்தது. 

ஒரு நாள் கற்றுக் கொண்டிருந்த போது பின்புறமாக ஏதோ இரு சக்கர வாகனம் வருகிற சத்தம் கேட்க, பிபு சைக்கிளை இடது ஓரமாக ஓட்ட ஆரம்பித்தான். பின்னர் அந்த வாகனம் அவனை கடந்து முந்தி முன்னேச் செல்வதை கண்டு, மீண்டும் சைக்கிளை நடு சாலைக்கு திருப்பினான். அப்போது இரண்டாவதாக பின்னே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் சர்ட், கிரீச்…என்று பிரேக் அழுத்தி டயர் தேய்ந்த சத்தம் கேட்டது. ஜெஸ்ட் மிஸ். இரண்டு வண்டிகள் ஒன்றன் பின்னாக ஒன்றாக வரும் போது சத்தம் ஒன்றாக மட்டுமே கேட்கும் போல என்பதை உணர்ந்தான். அந்த நபர் வேறு அப்பாவை திட்டிவிட்டு சென்றார். ச்ச, ச்ச அன்றில் இருந்துதான் சைக்கிளை மிகவும் கவனமாக ஓட்ட ஆரம்பித்தோம்ல. 

இவ்வாறாக அப்பா சொல்லிக் கொடுத்த எல்லா மந்திரங்களையும் தந்திரங்களையும் நினைவுக்கு கொண்டு வந்த வண்ணமாகவே பிபுவின் பயணம் பெரிய ஏரிக்கரை வரை தொடர்ந்தது. வீட்டிற்கு திரும்ப நினைத்து சைக்கிளை வட்டமிட்டுத் திருப்பினான்.

எதிபாராத விதமாக திடீரென்று பட்டென்று ஒரு சத்தம் காதுகளில் ஒலித்தது. பாதங்கள் அழுத்தும் பெடல்கள் கட்டுப்பாட்டை இழந்து இருந்தது. என்னடா இந்த சோதனை? பிபுவுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்பா சொல்லிக்கொடுக்காத ஏதோ ஒன்று நடந்ததை எண்ணி அச்சமுற்றான். தனியாக வந்த அவனுக்கு சற்று திகிலாக இருந்தது.

பிபு சிறிதும் யோசிக்காமல் மறுகணமே சைக்கிளில் இருந்து குதித்து விட்டான். சைக்கிளின் கீழே சக்கரத்தை பார்க்க எப்போதும் செயினின் இருமுனைகளும் இணைந்து இருப்பதை பார்த்திருந்த பிபுவுக்கு இன்று ஒரு புதிய அனுபவம். சைக்கிளில் செயின் கட் ஆகி ஒரு முனை தரையை தொட்டும் மறுமுனை சைக்கிளில் சிக்கியும் இருக்கக் கண்டான். எப்படியாவது ‘தள்ளிக்கொண்டே வீடு வரை சென்று விடலாம்’ என்று ஆயத்தமானான். சைக்கிளின் செயின் அறுந்து விட்டதை உணர்த்த கட கட கட என்று சைக்கிளும் அழுது கொண்டே வீடு திரும்பியது. புதிதாக முளைத்த புதிருக்கு விடைத்தெரியாது பிபுவும் தேம்பி தேம்பி அழுதுக் கொண்டும் சைக்கிளை தள்ளிக் கொண்டும் சென்றான்.

பிபு அழுது தேம்பும் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பா, பிபு என்ன ஆச்சு, என்ன ஆச்சுப்பா! என்று படுக்கையறையில் அழ்ந்த உறக்கத்தில் இருக்கும் பிபுவை தட்டி அதட்டி எழுப்ப முயற்சித்தார். பிபுவின் தூக்கம் தெளிந்து, கனவு களைந்து போனது; எல்லாம் வெறும் கனவா! அல்லது கனவிலும் கனவா! இன்று அவன் தனியாக சைக்கிள் ஓட்டியதாக கண்ட அந்த கனவு பலிக்குமா அல்லது பலிக்காதா என்ற கேள்வியோடு படுக்கையை விட்டு எழுந்து ‘அப்பா, ஃபியூசிபெலஸை ஓட்ட போலாமா’ என்றான்.

சிறுகதையின் ஆசிரியர்

ப.பிரபாகரன் , திருச்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here