தன்னம்பிக்கை கட்டுரை
கட்டுரையின் ஆசிரியர்
ஹமீது தம்பி,
கீழக்கரை, ராமநாதபுரம் மாவட்டம்.
நண்பர் புன்யமீனை சந்திக்க போய் இருந்தேன் . அப்போது அவரை சந்திக்க இன்னொருவரும் வந்திருந்தார். புன்யமீண் அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார் .இவர் என் பால்ய நண்பர் ராஜசேகர். சிறந்த கல்வியாளர், அவரிடம் படித்த பலர் பெரும் பதவிகளில் இருப்பதாகவும் சொன்னார் .
பிறகு அவர்களுக்கிடையே நடந்த உரையாடல், எனக்குள் ஏற்கனவே இருந்த பல கேள்விகளுக்கு விளக்கமோ, விடையோ கிடைத்தது போலிருந்தது.
ராஜசேகர் “நான் கற்பித்ததெல்லாம் பணம் சம்பாதிக்க தான் .ஆனால் எப்படி வாழ்வது என்று இந்த முதிய வயதில் இதுவரை கற்றுக்கொள்ளவில்லை”, அதற்காகத்தான் உங்களிடம் யோசனை கேட்க வந்திருக்கிறேன்” என்றார் .
அதற்கு புன்யமீண்” நீங்கள் உங்கள் அறிவியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர். உங்கள் துறையில் ஒரு பெரிய ஆளுமை. நான் வெறும் அந்த கால சாதாரண பட்டம் படித்தவன், என்னிடம் யோசனை கேட்க வந்திருப்பது வேடிக்கை தான்” என்றார் .
வந்தவர் நீங்கள் “இப்படி பேசுவது தன்னடக்கமா, அல்லது உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியவில்லையா?. உங்களைப் பற்றி நான் நன்கு அறிவேன் .நம் சம வயதினரில் மிகவும், சந்தோசமாகவும், நிம்மதியாகவும் ,திருப்தியாகவும் வாழ்வது நீங்கள்தான். நீங்கள் பெரிய பணக்காரர் இல்லை. பெரிய சேமிப்பும் இல்லை. கோயில், குளம், என்று போகிற பெரிய ஆன்மீகவாதியும் இல்லை. மூத்த பிள்ளையின் குடும்பத்தோடுதான் இருக்கிறீர்கள். இந்த வயதில் எப்படி வாழ்வது? என்று உங்களிடம்தான் தெரிந்துகொள்ளமுடியும்.
இது,பள்ளிகளிலோ, கல்லூரியிலோ கற்றுக்கொடுப்பதில்லை. ஆன்மீகவாதிகளிடமும் அதற்கான நிவாரணம் இருக்கும் என்று தெரியவில்லை” என்றார்.
தன்னடக்கமில்லை. நான் பெரிய சிந்தனைவாதியோ, சித்தாந்தவாதியோ இல்லை. சாதாரணமான மனிதன். வாழ்க்கை ஓடம் கால நீரோட்டத்தில் போகும் போக்கில் போகிறவன். என் சித்தாந்தம் என்றால் ஒன்று தான் .
அது “நன்றும் தீதும் பிறர் தர வாரா” .
“நாம் தான் எல்லாவற்றிற்கும் காரணம். நான் நாத்திகனுமல்ல, உங்களைப்போல் ஆத்திகனுமல்ல . கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறேன். அது இயற்கையாகக்கூட இருக்கலாம். ஆனால் அவர் நம்மிடம் எதையும் எதிர்பார்க்கிறார் என்று தோன்ற வில்லை” என்றார் புன்யமீண் .
வந்திருந்தவர் கடவுள் பற்றியோ, ஆன்மிகம் பற்றியோ கேட்க வரவில்லை. எனக்குள்ள பிரச்சினைகளுக்கு உங்களிடம், தீர்வு இருக்கும் என்ற நம்பிக்கையில் வந்திருக்கிறேன் என்றார்.
புன்யமீண், நான் பரிகாரம் சொல்ல ஆன்மீகவாதியோ, மதநம்பிக்கை உடையவனோ , அல்ல . என்னிடம் உங்களைப்போன்ற அறிஞர் வந்து தீர்வு கேட்பது வினோதம் என்றார் .
வந்தவர் விடாமல், நீங்கள் ஆன்மீகவாதியோ, மதநம்பிக்கை இல்லாதவராகவோ, இருக்கலாம், உங்கள் வாழ்கையில் சில கொள்கைகள் இருக்கும் . அரசியல் ,சமூகம் ,உறவு, நட்பு என்று. அதுபோக உங்களுக்கு வழிகாட்டியோ, ஆதர்ச மனிதரோ இருக்கலாம். அதுபற்றி சொல்லுங்கள் என்றார் .
புன்யமீண் எனக்கு வழிகாட்டிகள் என்றால், புத்தகங்கள்தான். நான் படித்த அகடமிக் கல்வி எனக்கு சம்பாதிக்க வழிகாட்டியது. மற்றபடி, எனக்கு வழிகாட்டி என்றால் படித்ததுதான். எந்தக்காலத்திலும் படிப்பதை நிறுத்தியதில்லை.
தினம் குறைந்தது ஐந்துமணி நேரம்படிப்பேன் என்றார். நான் எல்லாவித புத்தகங்களும் படிப்பேன். தமிழ், ஆங்கிலம் என்று வித்யாசமில்லை . கதை, இலக்கியம், அறிவியல், சரித்திரம், மனநலம், சுய முன்னேற்றம் என்று உலக இலக்கியங்களிலிருந்து, இன்றைய தமிழ் எழுத்தாளர்கள்வரை எதையும் படிப்பேன். பிடித்த பிடிக்காத எழுத்தாளர்கள் உண்டு. ஆனால் வழிகாட்டி என்று இவர்களில் யாரும் இல்லை. அவர்களின் நல்ல கருத்துக்களை எடுத்துக்கொள்வேன். பெரியாரையும் படிப்பேன். கி.வா.ஜெகநாதனையும், கிருபானந்தவாரியாரையும் படிப்பேன். டால்ஸ்டாய், டோவ்ச்டோவ்ச்கி.கோர்கி போன்ற ருஷியா எழுத்தாளர்களையும் படிப்பேன். ஜேன் ஆஸ்டின், சார்லஸ் டிக்கன், போன்ற அன்றைய ஆங்கில எழுத்தாளர்களின் புத்தகங்களிலிருந்து படிப்பேன். அன்றைய தமிழில் சங்க இலக்கியங்களிலிருந்து தமிழ் எழுத்தளர்கள் சாண்டில்யன்,கல்கி ,கிவாஜ, ஜெயகாந்தன், சுஜாதா, இன்றைய கி.ராஜநாராயணன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் என்று எல்லோரையும் படிப்பேன்.
முக்கியம் என்னுடைய சொந்த வாழ்கையில் ஏற்பட்ட அனுபவங்கள். அவை கற்பித்த பாடங்களும் எனக்கு என் சொந்த வாழ்கையில் கற்றது ஒரு ஐம்பது வருட பாடம்தான். ஆனால் படிக்கும் பழக்கத்தில் பல நூறு நபர்களின் வாழ்கையை தெரிந்து கொண்டேன். இவற்றிலிருந்து தேவையானவற்றை மட்டும் எடுத்துக்கொள்வேன் என்றார் .
ராஜசேகர் தேவையானவை எது என்று எப்படி தெரியும் ? என்றார்
புன்யமீண் “மிகவும் சுலபம். ஒரு குழந்தை மனதைப்போல, திறந்த மனதை வைத்திருக்க வேண்டும். அந்த கருத்தை ஒரு நடுநிலையில்தான் பார்க்க வேண்டும் . நம்முடைய சொந்த கருத்து, நம்பிக்கைகள் வேறுபட்டிருந்தாலும், சொல்லப்பட்டிருப்பது தர்க்கரீதியாக, அறிவியல் பூர்வமாக சரியானதாகப்பட்டால், ஏற்றுக்கொள்ளலாம். முக்கியமாக அந்தந்ததுறையில் வல்லுனர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கலாம். உதாரணமாக நமக்கு ஏதாவது உடல் நல பிரச்சினை என்றால், நமக்கு தெரிந்த கைவைத்தியம் பார்ப்பதில் தவறில்லை. ஆனால் எல்லாவற்றிற்கும் நாமே பரிகாரம் கண்டுகொண்டிருக்ககூடாது. உலகத்தில் எத்தனை மனிதர்கள் இருக்கிறார்களோ, அத்தனைபேரும் மருத்துவர்கள்தான். ஒருவரிடம் தலை வலிக்கிறது என்று சொல்லிப்பாருங்கள். நிச்சயம் ஒரு மருத்துவம் சொல்வார். ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மருத்துவம் சொல்வார்கள். அதற்காக உடனே ஒரு ஸ்பெசலிஸ்டை பார்க்கவேண்டியதில்லை. குடும்ப டாக்டர் என்று ஒரு சாதாரண GP அருகில் இருக்கும் டாக்டரை தொடர்பில் வைத்திருங்கள். நீங்கள் சுலபமாக அணுகக்கூடியவராக எந்தநேரத்திலும் தொலைபேசியில் அணுகக்கூடிய மருத்துவராக இருத்தல் நலம். அவரிடம் ஆலோசனை பெறுங்கள். அவர் ரெபர் செய்தால் தவிர ஸ்பெசலிஸ்ட் இடம் போகாதீர்கள் .
இதேபோன்று எந்த பிரச்சினையிலும் உங்களுக்கு அடுத்து இருப்பவர்களிடம் யோசனை கேட்பதில் தவறில்லை. ஆனால் முடிவு செய்வது நீங்களாகத்தான் இருக்க வேண்டும். எல்லோரிடமும் பகுத்தறிவு இருக்கிறது. தற்போது பகுத்தறிவு என்றால் நாத்திகம் என்று தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. எதையும் பகுத்து அறிவதுதான் பகுத்தறிவு.
அதிகமாக நமக்கு கிடைக்கும் யோசனைகள் பொதுப்புத்தியிலிருந்துதான். அநேகமாக அந்த பொதுவான நம்பிக்கைகள் மூடநம்பிக்கைகளின் அடிப்படையிலோ, முன்னோர்கள் அவர்கள் காலத்திற்கு ஏற்ப ஏற்பட்ட பழக்கங்ளாகவோ இருக்கலாம். ஆனால் அது எதார்தத்திலோ, தர்கரீதியாகவோ பொருந்தாமல் போகலாம். அதை கலாச்சாரம், நம் பாரம்பாரிய பழக்கம் என்று பிடித்துக்கொண்டு செய்வது அறிவுடைமை ஆகாது. பதிலுக்கு பிரச்சினைகளைத்தான் கொடுக்கும். சரி உங்கள் பிரட்சினைதான் என்ன? நான் உங்கள் நிலையில் இருந்தால் என்ன செய்வேன் என்று வேண்டுமானால் சொல்கிறேன். ஆனால் அவற்றில் எதை எடுத்துக்கொள்வதென்று முடிவு செய்யவேண்டியது நீங்கள்தான். என்றார் புன்யமீண்.
ராஜசேகர் தனக்குள்ள மனவருத்தத்தை சொல்ல ஆரம்பித்தார் .“என்னிடம் நல்ல வசதி இருக்கிறது. மகள் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டாள். உங்களைப்போல் மகன் குடும்பத்துடன் இருக்கிறேன். இருக்கும் வீடும் மற்றும் சொத்துக்களும் நான் சம்பாதித்தவைதான். வசதிக்கு எந்த குறையும் இல்லை. ஆனால் இன்று ஒரு அனாதை போல் உணருகிறேன். நான் ஐந்து ஆண்டுக்கு முன்பு ஓய்வுபெற்றேன். அதிலிருந்து என்னிடமிருந்து எல்லோரும் விலக ஆரம்பித்துவிட்டார்கள். வீட்டிலுள்ளவர்களே என்னை மதிப்பதில்லை. மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் யாரும் என்னை மதிக்கவில்லை. ஒவ்வொருநாளும் அவமானங்களுக்கும், மன வருத்தங்களுக்கும் குறைவில்லை . முப்பத்தைந்து காலம் , அன்போடு வாழ்ந்த என் இனிய மனைவிகூட என்னை அவமானப்படுத்துகிறாள் . அவளின் அன்பு எங்கே போனது ? நீங்கள்தான் என் இன்ஸ்பிரேசன், வழிகாட்டி என்று சொன்ன மகன் இன்று நாங்க பாத்துக்குறோம், நீங்க உங்க வேலையப்பாருங்க என்கிறான். மருமகள் ஜாடை மாடையா, வயசான காலத்துல அமைதியா பைபிள், சர்சுன்னு இல்லாம, எல்லாத்துலயும் தலைய விட்டுக்கிட்டு பிரட்சின
பண்ணுது “ என்று ஒருமையில் பேசுகிறாள் .
“நான் வீட்டில் இப்போது வேண்டாத லயபிளிடி ஆகிவிட்டேன் .
தினசரி என்னுடைய நேரங்களில் மனசுக்கு சற்று ஆறுதலான நேரம், மாலையில் பார்க்கில் கார்த்திகேயன், குணா, மனோகரன், எட்வின், உசைன் போன்ற நண்பர்களைச் சந்திக்கும்போதுதான். இவர்கள் எல்லோருமே உன்னைப்போல், என் பால்யகால நண்பர்கள். பள்ளியிலும் கல்லுரியிலும் ஒன்றாக படித்தவர்கள். இவர்கள் எல்லோரும் பலதரப்பட்ட சமூக பொருளாதார நிலைகளில் உள்ளவர்கள் .
பெரும்பாழும் நாங்கள் பகிர்ந்து கொள்வது எங்களுக்கு ஏற்பட்ட அவமானங்களையும், சோகங்களையும்தான். அந்த நேரத்தில் அதில் ஒரு ஆறுதல் கிடைப்பதாகப்படும். இதற்காகவே மாலையில் அந்த பூங்காவில் கூடுவோம். வாக்கிங் போவதாக காரணம் சொல்லிக்கொண்டு வருவோம். கால் மணிநேரம் கூட வாக்கிங் இருக்காது. சும்மா ஒரு சுற்று சுற்றிவிட்டு நாங்கள் கூடும் அந்த தூங்குமூஞ்சி மாரத்தடியில் சிமன்ட் பெஞ்சுகளில் கூடிவிடுவோம். எங்களுக்கு அன்றாட வாழ்க்கையின் சோகங்களை பகிர்ந்து கொண்டு, ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக்கொள்வோம். இளமைக்கால இனிய நிகழ்வுகளை நினைவூட்டி அரட்டையடிப்போம். ஒரு நாளில் நாங்கள் சந்தோசமாக இருப்பது அந்த கணங்கள் மட்டுமே. அவர்களிளும் ஒவ்வொருவராக சொல்லாமால் கொள்ளாமல்,விடை பெற்றுக்கொண்டிருகரார்கள். நான்குநாட்களுக்குமுன் ஜோபிசேட்டன் போய் சேர்ந்துட்டான். அவனின் கேலியும் கிண்டலும் ஒரு பெரிய இழப்பு எங்கள் க்ரூப்பிற்கு .
உன்னைத்தான் வெகுநாளாக பார்க்க வேண்டுமென்றிருந்தேன். உன் வாட்சப் பதிவுகளில் எனக்கு உன் வாழ்க்கையின் மகிழ்வும், திருப்தியும் புரிந்தது. அடிக்கடி வந்து பார்க்க விருப்பம்தான். ஆனால் நீ இத்தனை தூரத்தில் இருக்கிறாய். எப்படியும் இன்று உன்னைபார்த்துவிடவேண்டுமென்று கிளம்பி வந்துவிட்டேன் என்றார்.
சந்தோசம் .”உனக்கு நான் இப்போது என்ன சொல்ல வேண்டும்?” என்றார் புன்யமீண்.
“எப்படி உன்னால் சந்தோசமாக , திருப்தியாக இருக்கிறாய் ? அந்த ரகசியத்தை சொல் “ என்றார் ராஜசேகர்.
ரகசியம் என்று ஏதுமில்லை . ரகசியம் (SECRET) ரோண்டா பைன்(Rhonda Byrne) என்பவர் எழுதிய ஒரு புத்தகம் ஆங்கிலத்தில் உள்ளது. உலக அளவில் அதிகம் விற்பனையான புத்தகங்களில் ஒன்று. தமிழில் கூட மொழிபெயர்ப்பு கிடைக்கிறது. அதில் நிறைய நல்ல விடயங்களை பதிவிட்டுள்ளார். வாழ்கையின் வெற்றி ரகசியங்கள் அவை. ஆனால் வெற்றி பெற்றிவிட்டால் மட்டும் மகிழ்ச்சி வந்துவிடுமா என்றால் இல்லை. அந்த வெற்றியின் மகிழ்ச்சி சில கணங்கள்தான். அதன் பின் வேறொரு குறிக்கோள் வந்து, அதன் வெற்றியைநோக்கி பயணிக்க வேண்டியதிருக்கும். அதனால் அதுவும் சந்தோசத்தின் தேடுதலுக்கு உதவாது .
சந்தோசத்தின் தேடுதல்தான் தேவையான தேடுதல். தேடுதல் என்பதுகூட தவறு. ஏனென்றால் தேடுவதற்கு அது தொலைந்து போன பொருள் அல்ல. நம்மிடமே எப்போதும் இருப்பதுதான். நாம் வெளியில் தேடிக்கொண்டிருக்கிறோம். சிலர் மூக்குக்கண்ணாடியை தலையில் மாட்டிகொண்டு, அறை முழுதும், தேடிக்கொண்டிருப்பார்கள். அதுபோல் நம்மிடம் இருக்கும் சந்தோசத்தை தொலைந்துவிட்டதாக எண்ணிக்கொண்டு வெளியில் தேடிக்கொண்டிருபோம் .
நம்மிடம் ஏற்பட்டிருக்கும் பருவங்களின் பரிமாண வளர்ச்சி பற்றி எண்ணியதுண்டா ?
குழந்தை பருவத்தில் எத்தனை மகிழ்வோடு இருந்தோம். இன்று அதுபோல் ஏன் இல்லை என்று நினைக்கிறோம். உருது கவிஞர் மிர்சா காலிப் எழுதிய கவிதையின் கருத்தை தழுவி, நண்பர்(என்னை காட்டி) எழுதிய கவிதை ,
குழந்தை பருவத்து மழைக்காலம்
“வெட்டிவேர் வாசத்துடன் மண் மணக்கும்,
பன்னீர் மரத்தில் மணத்துடன் சொட்டும் நீர்த்துளிகள்,
காகிதக்கப்பல் மிதக்கும் முற்றத்து மழைநீர் ,
நிரம்பி வழியும் கல்குளமும் மண்குளமும்
உம்மாவின் கைமணத்தில் இஞ்சி மணக்கும் தேநீர்,
வேலிகளில் நடத்திய தட்டான் பூச்சி வேட்டை ,
பொன்னிக்குருவி விற்றுவரும் வேடுவப்பெண்கள் ,
அடைமழையில் ஆனந்த குளியல் ,
சிமெண்டு முற்றத்து கசியலுக்கு அஞ்சி
சுண்ணாம்புத்தரை தளத்துக்குழியில் போர்வைக்குள் உறக்கம் ,
அத்தனையையும் இளமைக்காலத்தோடு தொலைத்துவிட்டு ,
மழை இல்லா இந்த பாலையில் பல்லாண்டுகளாக ஏங்கித்தவிக்கும்
நான் கேட்பது “இறைவா திருப்பித்தா என் குழந்தை பிராயத்தை.
நீ எனக்குத்தந்த எல்லாவற்றையும் எடுத்துக்கொள்”.
இத்தனை மகிழ்ச்சியையும் குழந்தை பருவத்தோடு போய்விட்டதாகவே நினைக்கிறோம் . ஏன் தொலைத்தோம் ?”
என்னைக்கேட்டால் தொலைந்துவிட்டதாக நினைக்கிறோம். காரணம் என்ன? பெற்றவர்கள் எல்லோருக்கும் வாழ்கையில் பெரிய கனவாக இருப்பது பிள்ளைகளின் எதிர்காலம்தான். பிள்ளைகள் எப்படி வளரவேண்டும், எப்படி வரவேண்டும் என்ற கனவுகளும்,திட்டங்களும் இல்லாத பொறுப்பற்ற பெற்றோர் யாருமில்லை. வாழ்க்கை சூழலில் இந்த கனவுகளுக்கும், திட்டங்களுக்கும் நடைமுறை சிக்கல்களும் ஏமாற்றங்களும் வருவது ஒருபுறம். இந்த கனவுகளும் திட்டங்களும் சரியானதுதானா? நியாயமானதுதானா ? ஆதாரமாக சிந்திக்கவேண்டிய விடயம். இந்த கனவுகள் பொதுவாக பொருளாதார ரீதியாக வாழவைக்க என்ற அடிப்படையில் மட்டுமே இருக்கிறது. டாக்டராகவோ, பெரிய பொறியாளராகவோ, கணக்கு தனிக்கையாளராகவோ(Auditor), இந்திய நிர்வாக சேவை (IAS), இந்திய காவல் சேவை(IPS) போன்ற பதவிகள் வகிக்க வேண்டும் என்ற கனவுகளோடுதான் அநேகமாக பெற்றோர்கள் இருக்கிறார்கள் .இதற்காக பெற்றோர்கள் சந்திக்கும் தடைகளும், விதிமீறல்களும் எத்தனை? கனவுகளை அடைய தகுதிக்கு மீறிய செலவுகளுக்கு கடன் வாங்கி வாழ்க்கை முழுவதும் கடனாளியாக வாழ்பவர்கள் எத்தனை பேர்? இத்தனை செய்தும் அவர்கள் கனவுகள் முற்றுப்பெராமல் போனவர்கள் எத்தனை பேர்?
இந்த எலிப்பந்தயத்தில்(Rat Race) கூட்டத்தோடு பொதுப்புத்தி கொண்டு ஓடத்தொடங்குகிறோம். இந்த பந்தயத்தின் இலக்கு பதவி, பணம் மட்டுமே. அதற்கு செலவிடும் காலம் வாழ்வில் பாதிக்கு மேல்.முடிவில் வெற்றி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் ,எதிர்கொள்ளகாத்திருப்பது ஏமாற்றமும் விரக்தியும்தான்.
பிறகு கனவுகாண்பதிலும் திட்டமிடுதளிலும் செயலாக்குவதிலும் என்ன தவறு செய்கிறோம்? இந்த கனவுகளில் உயரிய சரியான நோக்கமோ, வழிகாட்டலோ, செயல்முறையோ இல்லை என்பதுதான் உண்மை. கனவுகளே தவறாக இருக்கும்போது, முடிவுகள் எப்படி சரியாக இருக்கும்? கனவு காணச்சொல்லி அப்துல் கலாம் முதல் அனைவரும் சொல்கிறார்கள். மற்றும் சிலர் எல்லாவற்றிற்கும் ஆசைப்படு என்று சொல்கிறார்கள். கனவு காண்பதும், ஆசைப்படுவதும் தவறில்லை. ஆனால் இங்கே நாம் சிந்திக்கவேண்டியது நமக்கு இறைவன் அளித்த இந்த அழகிய வாழ்கையை எப்படி வாழ்வது என்பதுதான்
“எதை நாம் கொண்டுவந்தோம்,
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்
அழகே பூமியில்
வாழ்கையை அன்பில் வாழ்ந்து
விடைபெறுவோம்”
மாயாவி திரைப்படத்தில் கவிஞர் பழனி பாரதி எழுதிய இறைவன் தந்த அழகிய வாழ்வு என்ற பாடலின் மேற்கண்ட வரிகள்போல் வாழ்க்கையை அன்பில் வாழ்ந்து விடை பெறவேண்டும். அடிக்கடி நான் கேட்கும் இந்த பாடலின் கருத்து நம் கனவாகவும் நம் சந்ததிகளை பற்றிய கனவாகவும் அமைந்தால் ,அதுதான் நாம் பிறந்ததின் வெற்றி.
பல பெற்றோர்கள் முதுமைக்காலத்தை, முதியோர் மையங்களிலும், தனிமையிலும் பிள்ளைகளால் குடும்ப வாழ்க்கை நிராகரிக்கப்பட்டு வாடுவதை பார்க்கிறோம்.கஷ்டப்பட்டு ஆளாக்கிய பிள்ளைகள் தான் கொண்ட கனவுகள் போல் அவர்களின் பிள்ளைகளுக்காக தூரத்தில் தங்களின் இளமையையும் சந்தோசத்தையும் தொலைத்துக்கொண்டு பணத்திற்காக எலி ஓட்டம் ஓடுவதை பார்க்கிறோம். தனக்கும் பெற்றோர்போல் முதுமை வரும் என்றும் பணத்தால் எல்லாம் வந்துவிடாது என்று உணரும்போது பெற்றோர் போல தானும் தாமதப்பட்டது தெரியும்.
பணத்தை கொண்டுமட்டும் அன்பு சந்தோசம் போன்ற மனிதநேயமான விடயங்கள் பெறமுடியாது என்பதை சிறிய வயதிலேயே பிள்ளைகளுக்கு புரியவைக்கவேண்டும். பணம் நிச்சயம் வேண்டும் அதற்காக இளமையை, சந்தோசத்தை, அன்பை, நேசத்தை, மனிதநேயத்தை தொலைத்து விட்டு சம்பாதிக்கும் அந்த பணம் கண்ணை விற்று ஓவியம் வாங்கியதற்கு சமம் .
அது போகட்டும் .இப்போது நீங்கள் என்ன செய்யலாம் . நீங்கள் என்றில்லை, நாம் என்ன செய்யலாம் என்று பார்ப்போம். அவர்களுக்கு (குடும்பத்தினருக்கு) புரிய வைக்க முயற்சிப்பது வீண் வேலை. அதை விட்டு நாம் நமக்காக வாழவேண்டும். அவர்களுக்கு செய்யவேண்டியவைகளை செய்வோம். நாம் அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பிற்கும் ஆதரவிற்கும் குறைவைக்க வேண்டியதில்லை. ஆனால் பதிலுக்கு அவர்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் ஏங்கவேண்டாம். தானாக வந்தால் ஏற்போம். இல்லையென்றால் நான் எவ்வளவு செய்திருப்பேன். நன்றி இல்லாமல் இருக்கிறீர்களே என்று சொல்லாதீர்கள். அன்புக்கு பதில் அன்பை எதிர்பார்க்க வேண்டாம். எந்த கண்டிசனும் இல்லாததுதான் அன்பு. நாம் செய்தது செய்வது எல்லாம் நம் கடமை. அதற்கு அவர்களிடமிருந்து பலனை எதிர்பார்ப்பது அன்பல்ல,வியாபாரம் . என்றார் புன்யமின்.
அவர்களுக்கு உங்கள்மீது அன்பில்லை, மரியாதை இல்லை, என்று அர்த்தமில்லை. நீங்கள் நினைப்பதுபோல் அவர்கள் நடக்காததால் அப்படி நினைக்கலாம். அவர்கள் வளர்ந்துவிட்டார்கள். அவர்களுடைய புரிதலும், அறிவும், நம்மிடமிருந்து முழுக்க முழுக்க வேறானவை .அதை புரிந்துகொண்டாலே போதும் .
நாம் நமக்கு மகிழ்ச்சிதரும் காரியங்களை நாம் செய்வோம் .அவர்களுக்கு விருப்பமான விடயங்களில் நாம் தலையிடவோ, விமர்சனம் செய்யவோ வேண்டாம். அவர்கள் வாழ்க்கை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். அதுபோல் நமக்கு சரியென்ற காரியங்களை நாம் செய்துகொள்வோம் . அதுதான் மகிழ்ச்சியின் வழி.
தலைமுறை இடைவெளி என்பது இதுதான். இதை புரிந்துகொண்டால் போதும் .உங்கள் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது என்று நினைக்கிறேன். ஒரு நட்செல்லில் சொல்லவேண்டுமென்றால், பாரதி சொன்னதுபோலே
“விட்டு விடுதலையாகி நிற்பாய் ஒரு சிட்டுக்குருவியை போலே’
கணியன் பூங்குன்றனார் சொன்னதுபோல்
‘நன்றும் தீதும் பிறர்தர வாரா’
அவ்வளவுதான் என் வாழ்வின் மகிழ்வின் ரகசியம்
குழந்தை பருவம் போன்ற மற்றொரு கனாகாலத்தை வாழுங்கள் என்றார் புன்யமின்.
ராஜசேகர் கையை பிடித்துக்கொண்டு, இனி மகிழ்வோடு இருப்பேன் நான் எனக்காக என்றார் .
எனக்கும் புரிந்தது .