பத்தினி|சிறுகதை|முனைவர் ச.அரியநாச்சியம்மாள்

பத்தினி - சிறுகதை - முனைவர் ச.அரியநாச்சியம்மாள்
பெண்களின் பேறுகாலத்தை திருவிழாவாக கொண்டாடும் மருத்துவமனைகள். குழந்தைகளைக் கையில் ஏந்த மாதம்  பணம் செலுத்தும் EMI வசதி கொண்ட அதிநவீன மருத்துவமனை. பெயர் பலகையைக் கண்ணால் காணும் போதே எத்தனை செலவாகப் போகிறதோ? என முனகிகொண்டே நடக்கும் பார்வதி. பெயர்ப்பலகையில் பெரியதாகவும், கேட்டில் வாட்ச்மேன் நிற்க டாக்டர பாக்கணும் வாங்க வாங்க… உள்ளே நுழையும் போதே ஏராளமான தம்பதிகளின் எரிச்சல் மிகுந்த பதட்டமான அறை. குழந்தைக்காக எதையும் செய்யலாம் என்ற மனநிலையில் கணவனின் கைப்பற்றி கொண்டு பார்வதி நடக்க முயல்கின்றாள்.
     
கையில் பற்றிய மருத்துவ அட்டைகளை வாங்கி பார்த்துவிட்டு டோக்கனை கையில் கொடுத்துக் கணவனுக்குத் தனி அறை எனக் கணவனை வேறு அறைக்கு அழைத்துச் சென்றாள் செவிலி. என்ன இது நம்மள தனியா விட்டு விட்டார்களே! எனப் பதட்டத்தில் அமர்ந்திருக்க ஆண்கள் கையில் புட்டியோடு அறைக்குச் செல்வதைப் பார்த்தேன். என் கணவனும் சிறுதுநேரம் கழித்துப் புட்டியோடு வந்தார், என்ன என்பது போல கண்ணால் கேட்டேன். ஒன்றுமில்லை! பயப்படாதே என்பது போல என்னை நோக்கிய விழிகள் பதிலளித்தன. காத்திருக்கும் அறைக்குள் சிறு பதட்டம் என் கணவன் என்னை அழைத்துக்கொண்டு செல்ல பின்னர் மனைவியர்கள் பலர் கணவர்களோடு நிற்பதைக் கண்டு பயந்து போனேன். என் கணவனின் அணுக்களைச் சேகரிக்க உதவி செய்ய என்னை அழைத்திருக்கிறார். வெளியே வரிசையாகத் தம்பதிகள் காத்திருக்கின்றனர். என் கணவருக்குச் செய்ய வந்த உதவியை மறந்தே போனேன் வெளியில் வந்து வராண்டாவில் நடக்க புட்டியோடு கணவர் விரைந்து செல்கின்ற ஆய்வகத்தை நோக்கிச் சென்று என்னை திரும்பிப் பார்த்தால் என்ன நடக்கப் போகிறதோ என நினைத்து நிலை குலைந்து போனேன். கணவர்களோடு வந்த என் வயதை ஒத்த பெண்கள் என் அம்மா வயதுள்ள பெண்கள் என்னைவிட இளம் வயது பெண்களே எல்லா தரப்பினரும் உள்ளே முழங்கிக் கொண்டே மறந்திருக்கிறார்கள்.

      ஆங்கிலத்தில் எதாவது பெயர்களைக் கூறிக்கொண்டு அருகில் அமர்ந்திருக்கும் பெண்மணி பேச எனக்கு வியப்பாக இருந்தது. எதற்காகக் காத்திருக்கின்றோம் கணவருடன் இதை வினவ பயமாய் இருக்க என்ன நடந்தால் என்ன இன்னும் சிறிது நேரம் உள்ளது. என்னுடைய டோக்கன் நம்பர் 44 காத்துக் கொண்டிருக்கிறேன். கணவருடன் என்ன பேசலாம் என்பதுபோல காத்துக் கொண்டிருக்கிறேன். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு தங்களுடைய மன ஆதங்கத்தினை ஒருவாராக போக்கிக்கொள்ள முயலாமல் முகத்தில் தவிக்கும் தவிப்பு ஒரு புறம், என்ன நடக்கப்போகிறது என்பதை அறியாமல் நடுங்கும் நடுக்கம் கொண்டு தவிக்கும் மனநிலையில் நான் இருந்தேன். டாக்டர் என்னுடன் பேச வருமாறு அழைத்தார். அப்பொழுது நானும் என் கணவர் இருவரும் சென்று கேட்டுக் கொண்டு வருவோம் எனக் கிளம்பினோம்.
     
 டாக்டர் புன்முறுவலுடன் என்னை வரவேற்றுக் குழந்தை பற்றிய பல்வேறு செய்திகளை எனக்கு எடுத்துரைத்தார். கணவருக்கும் சில டெஸ்ட்களை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தனர். எனக்கு ஒரே பயம். என்ன நடக்கப் போகிறதோ? என்று இருந்தாலும் பரவாயில்லை எதுவாக இருப்பினும் நாம் கடந்து செல்வோம் என்ற எண்ணத்தில் சரிங்க டாக்டர் என்று பதில் அளித்தேன். என் கணவர் நல்லதே நடக்கும் என்று நினைத்து பயப்படாதே என்று என்னை ஆறுதல் படுத்தினார்.
    
  என்னையும் அழைத்துக் கொண்டு பல்வேறு உபகரணங்கள் நிறைந்த அறைக்குள் என்னை உள்ளே அனுப்பினர். பல உபகரணங்கள் என் உள்ளுறுப்புகள் முதற்கொண்டு பல்வேறு உறுப்புகளை அது ஆய்வு செய்தது. எனக்கு வெளியே இப்படி எல்லாம் மருத்துவமனையில் நடக்குமா? என்று அப்போதுதான் தெரிந்தது. உடனே கணவரிடம் சென்று என்ன நடக்கிறது இங்கே என்னதான் பிரச்சனை என்றெல்லாம் விளக்க வேண்டும் என்பது போலத்தான் ஆசை. ஆனால் என்ன செய்வது கணவரிடம் இதை எல்லாம் கேட்டால் கணவர் என்ன சொல்வார் என்ற பயம் வேறு ஒருபுறம் இருந்தது. என்ன செய்ய என்று யோசித்த களத்தில் இரண்டு நாட்கள் கழித்து வந்தால் உங்களுடைய டெஸ்ட் ரிப்போர்ட் எல்லாம் வந்துவிடும் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று மருத்துவர் சொல்லி இருப்பதாகச் செவலி சொன்னார்.
     
 சரி என்று இருவரும் புறப்பட்டு வீட்டுக்குப் போனோம். இரண்டு நாட்கள் சரியாகத் தூக்கமே வரவில்லை என்னதான் நடக்கப் போகிறதோ என்னதான் வரப்போகிறதோ என்று மனதிற்கு ஏதோ ஒரு பயம் பதற்ற நிலையில் தொடங்க ஆரம்பித்தது. என்ன இரண்டு நாட்கள் கழிந்ததுடன் விரைவில் சென்று என்ன நடக்கப்போகிறது இன்னும் வரப்போகிறதோ என்று ஆதங்கத்தில் இருவரும் ஒன்றன் பின் ஒருவராகக் கடந்து போனோம். மருத்துவரைச் சந்தித்து பின் மருத்துவர் சில ஆலோசனைகளை எங்களுக்கு வழங்கினார். தங்களுடைய கணவர் இன்னும் பல டேஸ்ட்களை எடுக்க வேண்டும். அதற்காக எங்களுக்கு சிறிது ஒத்துழைக்க வேண்டும் என்று சொன்னார். உடனே என் கணவருடைய முகம் சிறிது மாற ஆரம்பித்தது. பிறகு என்னுடைய டெஸ்ட் ரிப்போர்ட் எல்லாம் என்ன ஆச்சுங்க அப்படின்னு சொல்லிட்டு வெகுளியாக நான் கேட்கும்போது, உனக்கு எல்லாம் நல்லா இருக்கு, அப்படின்னு மருத்துவரின் பதில் என்னை பூரிப்படையை வைத்தது. இருப்பினும் என் கணவருடைய இன்னும் பல டேஸ்ட்களை எடுக்க வேண்டும் என்ற உரைத்தபோது என் கணவரின் முகம் மாற்றம் என்னை மிகவும் வருத்த நிலைக்கு உள்ளாகியது. என்னதான் நடக்கப் போகிறதோ என் கணவரை எப்படி சமாளிக்க போகிறோம் என்ற பயம் ஒருபுறம் ஒட்டிக்கொண்டது. பிறகு ஒரு வழியாகச் சரி ஏதோ ஒன்று செய்வோம் செய்துதான் ஆக வேண்டும் என்ற நிலையில் முடிவு செய்தேன்.
     
சரி மறுபடியும் டெஸ்டுகளை எடுப்போமா என்று என் கணவரிடம் வினவுவதுபோல திரும்பிப் பார்த்தேன். அவர் ஒரே பதிலாக நாங்கள் வருகிறோம் டாக்டர் என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார். வீட்டில் வந்து கணவரிடம் எப்படி கேட்பது என்பது தெரியாமல் கணவரிடம் தயங்கிதயங்கி கேட்டேன் என்ன பண்ணலாம் சொல்லுங்க அப்படின்னு கேட்கும்பொழுது கணவருடைய பதில் இதுவாகத்தான் இருந்தது. உனக்கு குழந்தை மீது ஆசையாக இருந்தால் என்னை விவாகரத்துப் பண்ணி விட்டு நீ குழந்தையைப் பெற்றுக்கொள். இல்லை எனக்காக ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணினால் அதற்கான முடிவை நீதான் எடுக்க வேண்டும் என்று உரை கேட்டவுடன் நான் அதிர்ந்து போனேன். இன்னும் இப்படி ஒரு வார்த்தை சொல்றாங்க கல்யாணம் ஆகி பத்து வருடம் கழித்து இந்த வார்த்தைகளைக் கேட்கும் பொழுது எனக்கு மனம் மிகவும் வருத்தமாக இருந்தது.
       
விவாகரத்துச் செய்துவிட்டு இன்னொரு ஆணை திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு குழந்தை மீது அவ்வளவு ஆசையா எனக்கு என்று என்னே நானே கேட்டுக் கொண்டேன். பிறகு அவர் ஒன்றும் பேசவில்லை நாட்கள் இப்படியே கடக்க கணவரும் ஒன்றும் சொல்லவில்லை. குடும்பத்தில் பெரிய முன்னேற்றமும் இல்லை. எனக்குள் எந்தப் பெரிய மாற்றமும் இல்லை. இருந்தாலும் மனதுக்குள் ஏதோ இந்தக் குழந்தையின் பொன் சிரிப்பையும், அந்தக் குழந்தையின் பொன்முறுவலையும், குழந்தையின் மேனியைத் தழுவும் அந்த நேரத்தையும் நோக்கி காத்துக் கொண்டுதான் இருந்தேன். கணவருடன் மறுபடியும் சரி பேசிப்பார்க்கலாம் என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டு மறுபடியும் இதே விஷயத்தை கேட்க, முடியாது ஒன்றும் பெரிதாக மாற்றம் ஒன்றும் ஏற்படவில்லை. கணவர் முழுமையாக நான் எந்த டெஸ்ட்டுக்கும் வரமாட்டேன், கேட்க மாட்டேன், எந்த டாக்டரையும் பார்க்க மாட்டேன், 10 வருடம் கழித்து உன்னுடைய ஆறுதலுக்காக வந்தேன்.
     
ஏதோ அவர்கள் சொன்னார்கள் இவர்கள் சொன்னார்கள் என்பதற்காக வந்தேன். உனக்கு குழந்தையின் மீது ஆசை இருந்தால் நீ வந்து என்னை விட்டுவிட்டு இன்னொரு திருமணம் செய்து சந்தோஷமாக வாழ் என்று உரைத்தார். என்ன செய்வது என்று ஒன்றும் தெரியவில்லை. குழந்தைக்கு ஆசைப்பட்டால் கணவருடன் வாழ முடியாது. கணவருடன் வாழ்ந்தால் குழந்தையோட ஆசையை முழுமையாக விட்டுவிட வேண்டும். இந்தச் சமூகத்திற்காக வாழ்வதால் என்ன செய்வது என்றே தெரியவில்லை. கணவரிடம் எதை வினவுவது என்ற கேள்விக்கும் பதில் இல்லை. கணவர் உரைத்த ஒரே பதில் என்னை விட்டுவிட்டு குழந்தை வேண்டுமென்றால் பெற்றுக்கொள்.
     
 சாதாரணமாகக் சமூகம் பெண்ணிடம் மட்டுமே குறையைக் கேட்க விரும்பும். இந்தச் சமூகம் மலடி என்ற சொல்லை மட்டுமே வழங்குகிறது. மலடன் என்ற சொல்லை ஒருபோதும் வழங்குவதில்லை. காரணம் யாராக இருப்பினும் இறுதியில் தண்டனை என்பது பெண்ணுக்குதான் இருக்கிறது. அந்தப் பெண் என்ன செய்வது? யாரிடம் கேட்பது? ஏதோ ஒரு புத்தகத்தில் படித்த ஞாபகம்.. குழந்தையே இல்லாத தம்பதிகளுக்கு அழகான குழந்தை பிறக்க இருவரும் ரொம்ப சந்தோஷமாக வாழ்ந்தார்கள் என்று. அந்த ஒரு சந்தோஷம் எனக்கு கிடைக்குமா? என்று தெரியவில்லை. பல்வேறு புத்தகங்களைப் புரட்டிப் பார்த்ததில் ஒரு மூன்று விடையங்களை நான் கண்டுபிடித்தேன். முதலாவது கணவர் சொன்னபடியே கணவரை விட்டுவிட்டு வேற்றுத் திருமணம் செய்து கொள்வது. இல்லையே இரண்டாவதாகக் கணவருடன் சேர்ந்து வாழ்ந்து கொண்டே ஒரு செயற்கை கருத்தரித்தல் மூலமாகக் குழந்தையைப் பெற்றுக் கொள்ளலாம். கணவர் இதற்கு சம்மதிப்பாரா என்பது எனக்கு தெரியவில்லை. செயற்கை கருத்தரித்தல் என்ன பிரச்சனை இருக்கிறது பிரச்சனைகளை விவரித்து அதை செயல்படுத்த முயலும்போது ஏற்படும் சிக்கல்களை என்னால் எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. என்ன நடப்பதே என்று தெரியாமல் மருத்துவமனை சென்ற பிறகு பல்வேறு புத்தகங்களையும் பல்வேறு விஷயங்களைக் கேட்டு தெரிந்து கொண்ட நான் எனக்கு எப்படி வந்து மூன்றாவது விடயத்தை சொல்லவே முடியவில்லை.
     
கணவனே இல்லாமல் தனியாக என்னால் ஒற்றை தாயாகக் குழந்தையை வளர்க்க முடியுமா? என்ற மூன்றாவது விடயத்தை நான் படிக்க நேர்ந்தபோது மனதில் மிகப்பெரிய சலனம் உண்டாயிற்று. நான் இந்த மூன்றில் எதை தேர்ந்தெடுப்பேன் என்று எனக்கு தெரியவில்லை. இந்தச் சமூகத்தையே ஒற்றை நாடியாக கொண்டிருக்கும் பெண்ணின் மையம் இங்கு உடைபடுகிறது. நானும் சாதாரண பெண்தான் கணவனோடவே வாழலாம் என்று முடிவெடுத்தேன். ஒருமுறை யுத்தத்தை கையில் எடுத்தால் கணவருடன் வாழாமல் குழந்தைக்காகக் கணவனாகக் கணவனுக்காக குழந்தையா என்ற இந்தக் குழப்பநிலையை மறந்து நிச்சயம் ஒரு முடிவெடுத்து இருப்பேன். என்னால் ஒற்றை தாயாக இருந்திருக்க முடியும். ஆனால் நான் புரட்சி பெண்ணல்ல. பெண்ணின் மையத்தைச் சமூகம் நிர்ணயிக்கும் பொழுது, பெண்ணுக்கான இருப்பிடம் வெற்றிடம் ஆவதை உணர்ந்தேன். ஆனால் இந்த முடிவும் நிரந்தரமல்ல எனக்கு குழந்தை வேண்டும் என்ற முடிவை எடுத்தேன். ஆனால் நிச்சயம் இந்தச் சமூகம் பெண்ணுக்கு என்று கட்டப்பட்டிருக்கும் சிறையை உடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. எனக்கு பத்தினி அங்கீகாரம் தேவையில்லை. எனக்கான மையத்தை நானே உருவாக்குவேன்.
சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் ச.அரியநாச்சியம்மாள்

உதவிப்பேராசிரியர்

தமிழ்த்துறை

பி. கே. ஆர் மகளிர் கலைக்கல்லூரி

கோபிசெட்டிபாளையம்.

ariyanacheyammal@gmail.com

Leave a Reply