தமிழ் இலக்கியத்தில் இயற்பியல் கூறுகள்| முனைவர். S.S. ஜெயபாலகிருஷ்ணன்

தமிழ் இலக்கியத்தில் இயற்பியல் கூறுகள் - ஜெயபாலகிருஷ்ணன்
முன்னுரை
                காலத்தில் மனித சமூகத்தில் ஏற்பட்ட அறிவியல் முன்னேற்றம் காரணமாக உலக மொழிகள் பலவற்றிலும் பலமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவ்வகை மாற்றங்கள் தமிழ் மொழியிலும் புதுமையாக்க மாற்றமும், வளர்ச்சியும் நடைபெற்றது எனலாம். ஒவ்வொருஇலக்கியமும் தான் தோன்றிய சமுதாயத்தை உள்ளடக்கமாகக் கொண்டு திகழ்கிறது. அறிஞர்களும், இலக்கியம் என்பது சமுதாயத்தைப் பிரதி பலிக்கும் கண்ணாடி என்கிறது. 21ஆம் நூற்றாண்டில் அறிவியல் தமிழ் என்பது புறநிலை வளர்ச்சியால் புதிய துறையாக வளர்ந்து வருகிறது. அறிவியல் கலைச்சொற்கள் கட்டிடங்களுக்கு செங்கலபோன்றது ஆகும்.ஆங்கிலத்தில் wisdom, knowledge என்ற இரு சொற்கள் நாம் அறிந்தவை. இவற்றிற்கு நேராக தமிழ்ச் சொற்களை பரிமேலழகர் மெய்யறிவு, கல்வியறிவு என்று இரு சொற்களை பயன்படுத்துகிறார். சில இடங்களில் வேதியியல், ஆங்கில மருத்துவம் மற்றும் பொறியியல் முதலியன பாடங்களைத் தமிழில் கற்பிக்கின்றனர். இதற்குமுன்பே அறிவியல்பற்றியதகவல்களை பண்டைய இலக்கியங்களில் குறிப்பிட்டதையும் இந்த கட்டுரையில் காணலாம்.

இலக்கியத்தில் அறிவியல் செய்திகள்
“எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்பொருள் காண்ப அறிவு”  (குறள். 355)
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”  குறள். 423)           
என்ற குறளிலும் தெளிவுபடுத்தி உள்ளார் விருப்பு வெறுப்பற்ற தன்மை உடையது அறிவியல் என்பதைத் தம் சிந்தனையாக வைத்துள்ளார்.  இயற்பியல் ஒரு பிரிவாக விளங்குவது அறிவியல், அண்மைக்கால அறிவியல் வரலாற்றில் அற்புதமான வளர்ச்சி பெற்று இருப்பது தோன்றியது. பின்னர் ஓர் அறிஞர் அணுவை பிளக்க இயலும் என்ற புதிய அணுவியலாகும். முதலில் அணுவை பிளக்க இயலாது என்ற கொள்கை கருத்தை வெளியிட்டார். இக்கொள்கையுடைய தமிழ் சான்றோர்கள்சிலர் இருந்தமை இலக்கியத்தில் நாம் காணலாம்.
               
சந்திர கிரகணத்தை குறிக்க வந்த புலவர்கள் திங்களைப் பாம்பு விழுங்குவதாகக் குறித்துள்ளனர். அக்காலத்தில் ராகுகேது என்றும் பாம்புகள்சூரியனையும், சந்திரனையும் விழுங்க முயல்வதாக மக்கள் கருதி இருந்தனர். பழங்காலத்தில் மேகம் கடலுக்கு சென்று நீரை முகந்து கொண்டு வானத்தில் ஏறி வந்து மழை பொழிவதாக மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். இதற்கு சான்றாக,

“முந்நால் திங்கள் நிறைபொறுத்து அசை
ஒதுங்கல் செல்லாப் பசும்புளி வேட்கைக்
கடுஞ்சூழ் மகளிர் போல நீர்கொண்டு
விசும்புஇவர் கல்லாது தாங்குது புணரி
செழும்பல் குன்றம் நோக்கி                                               
பெருங்கலி வானம் ஏர்தரும் பொழுதே” ( குறுந்தொகை: 287)

நீரில் அறிவியல்
தமிழர் மரபு படி சனிக்கிழமை நீராடுவது வழக்கம், இதன் பொருள் சனிக்கிழமை மட்டும் நீராடுவது அல்ல. உடல் ஆரோக்கியத்துடன் இருக்க கந்தகத் தன்மை சேர்ந்த நீரில் குளி என்பது பொருள்படும். இதன்படி சனிக்கோளில் (கரிக்கோள்)  கந்தகத்தன்மை உள்ளதாக அறிவியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பல கோடி விண்மீன்கள் விண்வெளியில் உள்ளன. இதனைப் பார்த்த தமிழனின் எண்ண  ஓட்டம்  27 விண்மீன்களை மட்டும் எடுத்து ஒரு மாதத்தின் 27 நாட்களில் உரையாதி நாளிகை வேறுபாட்டை அறிகிறான்.  இந்த 27 விண்மீன்களையும் 12 ஆக பிரித்துப் பார்க்கிறான். இந்த விண்மீன் சுற்று பாதையில் வழியாக சூரியன் செல்லும் பாதை அமைகிறது. இதனையே பிற்காலத்தில் 12 வட்டங்களாக ராசி என்ற பெயரிட்டு அழைத்தார்கள்.

“விரிக்கதிர் மதியமொடு வியல் விசும்பு புணர்ப்ப
எரிசடை எழில் வேம் தலையென கீழிருந்து
தெருவிடை படுத்த மூன்று ஒன்புதிற் றிருக்கையுள்                                    
உருகெழு வெள்ளிவந்த தேற்றியல் சேர” (பரிபாடல் 11.1.4)
               
ஒளிக்கதிர்கள் எந்த அளவிற்கு பிரகாசம் என்பதையும் சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் அறிந்து வைத்திருக்கின்றனர். ஒளி பற்றிய ஆற்றலை பரிபாடல் கூறும் செய்தி ஒளியை முருகனுடைய ஒளி பொருந்திய சாயலுக்கும் அவன் வேலுக்கும் ஒப்பிட்டுள்ளன.
“வெண்சுடர் செவ்வேல் விரைமயில் மேல் ஞாயிறு”
என்கிற பரிபாடல் இந்த உலகம் நீரால் சூழப்பட்டது. உலகத்தில் ஒரு பகுதி நிலமும் மூன்று பகுதி நீராலும் சூழப்பட்டு உள்ளது என்பதை
“மாநிலம் தோன்றாமை மலிபெயல் தலை
எமநீர் எழில்வானம் இறுதிதரும் பொழுதினான்”
               
என்கிறது பரிபாடல்.  அறிவியல் மின்னணுகளுக்குடன் தொடர்புடைய துறையாக உள்ளது எனலாம். மூலக்கூறு என்பது அந்த பொருள்களில் உள்ள அணுக்களை பொறுத்து அமைந்துள்ளது. இதனை,
“தீயினுள் தெறல் நீ பூவினுள் நாற்றம் நீ
கல்லினுள் மணியும் நீ” (பரிபாடல் 3-63-64)

என்கிறது இந்தப் பாடல்.

அறிவியல் தமிழில் ஆழிப்பேரலைகள்
               
உலகத்தில் அழிவு ஒன்று உண்டு அழிந்து மீண்டும் தோன்றும் என்று பழமை நூல்களும் வேத சாஸ்திரங்களும் கூறுகின்றன. இயற்கையின் பேரழிவால் உலகம் அழிய வாய்ப்பிருக்கிறது என்றும் இந்த உலகம் அழிந்து மீண்டும் தோன்றும் முறையை பரிபாடல் கூறுகிறது. நிலம் நீராலும், நீர் தீயாலும் (சுனாமி)  அதாவது நீருக்குள் நெருப்பு ஏற்பட்டு வெடித்தால் சுனாமி கடலில் ஏற்படுகிறது.  காற்று வானத்திலும், வானம்  மூலப்பொருள்களிலும் ஒன்றனுள் ஒன்றாக ஒடுங்கும் முறையில் கோள்கள் அழிந்து சிதறுகிறது இதனை,

”தொல்முறை இயற்கையின் மதியொ
———————————————மரபிற்கு
ஆகபசும்பொன் னுலகமும் மண்ணும் பாழ்பட                             
விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல     (பரி:2,1–4) 
மீண்டும் பீடு உயர்வு ஈண்டு அவற்றிற்கும்                                  
உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும்” (பரி:2,11-12)

என்கிறது பரிபாடல்.

அண்டப் பகுதியில் உண்டை பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்                       
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன் – திருவாசகம்
இப்பாடல் வானியலை பற்றி சொல்கிறது அண்டம் என்பது நம் பூமி அது உருண்டையானது என்பதை “உண்டைப் பிறக்கும்” என்ற சொற்கள் சொல்கின்றன. முற்கால இலக்கியங்களில் அறிவியல் செய்திகள் உள்ளன என்பதற்கு இது ஒரு உதாரணம்.

“திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக
விண்ணுறுப்பு திழிதரும் வீங்குசெல்ல மண்டிலத்து
முரணமி சிறப்பிய் செல்வனொடு நிலைய                                                
ரோகிணி………………………… (நெடுநல்வாடை-160)
               
அரசர்கள் தம் மாளிகையின் மேற்கூறையில், இன்று நாம் கோளரங்குகளின் உட்கூறையின் மீது காட்சிகளை காண்பதுபோல, ராசி மண்டலங்களையும், 27 விண்மீன் கூட்டங்களையும், அதனுடே நிலவு சஞ்சரிப்பதையும் ஓவியங்களாக வரைந்து வைத்தனர். இக்காட்சியை (159-163) பாடல்கள் தெரிவிக்கின்றன.

சூரியன்
                செவ்வியல் இலக்கியத்தின் சூரியன் உதிப்பதும், மறைவதை பற்றிய வருணங்கள் கீழக்கரை மக்களின் அனுபவமாக பாடப்பட்டுள்ளன.

”முந்நீர் மீமீசைப் பலர் தொழத் தேன்றி
என சூரியன்  உதிப்பதையும்         (நற்-283-6)
சுடர்கெழு மண்டிலம் மழுங்க ஞாயிறு
குடகடல் சேரும் படகூர் மாலையும்” (அகம் 378)
என காவட்டனாரின் பாடலின் வழி சூரியன் மேலைக் கடலில்மறைவதையும் பாடி டியுள்ள அறிவியல் சார்ந்த கருத்தை நாம் காண்கிறோம்.

சந்திரன்
         திங்கள் என்பது நிலவை குறிக்கும் இது பூமியின் துணைக்கோளாகும். திங்களின் தன்மையையும் வெண்மையையும் அழகும் குழந்தைகள் முதல்  பெரியவர் வரை உள்ளம் மகிழச் செய்யும்.

“முகிழ் நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்” (அகம்-54)
               
எனத் தலைவி தம் மகனை இளம்பிறையோடு ஒப்பிட்டு கூறியுள்ளார். தலைவியின் நெற்றி பிறை நுதல் என அகநானூற்றில் பாடல் 57, 179ஈ 192, 306, போன்றவற்றின் நெற்றிக்கு உண்மையாகச் சந்திரனை வைத்துப் பாடியுள்ளனர்.

மழை பெய்யும் முறை
               
மேகம் கடல் நீரை பெற்று மழையாக பொழிகிறது என்பது அறிவியல் கண்டுபிடிப்பு.

நிறைகடல் முகந்துராய் நிறைந்து நீர்த்தளும்பும் தன்
பொறை தவிர்பு அசைவிட        (பரி 6:1-2)
               
என்ற பரிபாடலில் முகில்கள் கடலின்கண் நீரை முகந்து கொண்டு வந்து ஊழி முடிவின் கண் முழுகுவிக்க முயன்றது போல மழை பெய்தது என்ற கருத்து கூறப்பட்டுள்ளது. இவை ஆய்வின் வெளிப்பாடுகள் அல்ல அன்றைய தமிழரின் அறிவின் வெளிப்பாடுகள். தமிழரின் இயற்பியல்அறிவும் நம்மை வியக்கவைக்கிறது. அமுதாம்பிகை பிள்ளைத்தமிழில் ஊசற்பருவத்தில் அமுதாம்பிகை ஊசலாடும் நிகழ்வினைக் குறிக்கும்போது சிவஞான முனிவர்,

“மகரக் குழைகளும் ஊசலாட
பங்கைய மடமாதர் நோக்கி இருவேம்
ஆட்ட அவ்வுசலில் பாய்ந்திலது
இவ்வுசல் என நனி ஆட்டுதோறும்
நின்னகை நிலவெழிலுக்கு அவர் முகத்                                               
திங்கள் சாய” (அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் – ஊசல் பருவம்)
               
என்ற அடிகளில் அமுதாம்பிகை ஆடும் ஊசலின் கயிறு நீளமாக இருந்ததால் மெதுவாக ஆடுகிறது என்றும் ஆனால் அவள் காதில் அணிந்திருக்கும் குண்டலம் குறைவான நீளத்தில் தொங்குவதால்விரைவாக ஆடுகிறது என்றும் கூறியுள்ளார். இதனையே கலிலியோ ஊசலின் நீளம் குறித்த தம் ஆய்வில், ஊசலின் நீளம் குறைந்தால் விரைவாக ஆடும் ஊசலின் நீளம் அதிகமாக இருந்தால் மெதுவாக ஆடும் என்றும் கூறியுள்ளார்.
விண்மீன்கள்
        வானில் தோன்றும் மற்றொரு அழகு பொருள் விண்மீன்கள் விண்ணில் மின்னுவதால் விண்மீன்கள் எனப்பட்டன தொலைநோக்கி  இல்லாத அக்காலத்த சங்க புலவர் ஒரு சிலர் விண்மீன்களை குறிப்பிட்டு பாடியுள்ளனர்.

”யாமம் கொள்வர் நாட்டிய நளிகடர்
வாகை மீனின் விளங்கித் தோன்றும்”   (அகம் – 114-10-11)

என்ற பாடல் வரிகள் மூலம் இரவில் காவல் புரிவோர் மதிலில் ஏற்றிவைத்த விளக்குகள் போல வானத்தே தோன்றும் விண்மீன்கள் இருந்ததை பதிவு செய்துள்ளார்.

வானூர்தி
          அன்றைய மனிதன்கண்ட கனவை இன்றைய அறிவியல் முன்னேற்றம் நிஜமாக்கியுள்ளது.


வலவன் ஏவ வானவுர்தி” (புறம் 27)
               
எனும் பாடல் அடியில் வானூர்தி என்ற அற்புதமான சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். இதைப்போலவே சிலப்பதிகாரத்தின் கண்ணகி கோவலனோடு ஆகாயத்திலிருந்து வந்திறங்கிய விமான ஊர்தியில் ஏறிச் சென்றதாக ஒரு காட்சி இதனை இளங்கோவடிகள்.

“வாடா மாமலர் மாரி பெய் தாங்கு
அமரர்க் கரசன் தமாவந் தேத்ரக்
கோ நகர் பிழைத்த கோவலன் தன்னோடு
வானூர்தி ஏறினன் மாதோ
கானமலர் புரிகுடில் கண்ணகி தாணென் (சிலம்பு.3:196-200)
               
என்ற வரிகளில் வாடாதபெரிய மலர்களை மலையாகச் சொறிந்து அமரர்களின் அரசனாக இந்திரனும் வானோடும்வந்து வாழ்ந்த தம் கணவன் கோவலனோடு கண்ணகி தேவ விமானத்தில் ஏறிச் சென்றாள் என்று கூறப்பட்டுள்ளது.

முடிவுரை
                ‘தமிழ் இலக்கியத்தில் இயற்பியல் சிந்தனைகள் நிறையவே கூறப்பட்டுள்ளது. அதனை வெளிக்கொணர்வதற்கு பல்துறை அறிவு இருந்தால் மட்டுமே தமிழ் இலக்கியத்தில் உள்ள இயற்பியல் பற்றிய கருத்துக்களை கொண்டுவர முடியும். தமிழ் இலக்கியங்களில் உள்ள இயல் அறிவினை வெளிக்கொண்டுவதற்கு நிறைய ஆய்வுகள் செய்தல் வேண்டும் அப்படி செய்தால் தமிழ் இலக்கியங்களை இவ்வுலகம் உணர்ந்து பாராட்டும் என்பதில் ஐய்யமில்லை.

பார்வை நூல்கள்
1. சங்க இலக்கியங்கள்

2. தமிழில் புது நோக்கு, முனைவர் ப.ஜெயகிருஷ்ணன்

3. தமிழ் புதுக்கவிதைகள் அறிவியல், முனைவர் க.முருகேசன்

4.சங்க இலக்கியத்தில் அறிவியல் செய்திகள், முனைவர் ப.ஜெயகிருஷ்ணன்

5.தமிழ்இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள், முனைவர்ப.ஜெயகிருஷ்ணன்

6. சங்க கால இலக்கியத்தில் அறிவியல் தமிழ் சங்கமம்

7. தமிழ் இலக்கியத்தில் அறிவியல் கூறுகள், முனைவர். பு.மு. அன்பு சிவா

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர். S.S. ஜெயபாலகிருஷ்ணன்

உதவிப்பேராசிரியர்

இயற்பியல் துறை

மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி

மதுரை,பசுமலை -04

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here