“எது செய்தி?” என்று இலக்கணம் வகுப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. ஆனால், எவை செய்தியாகின்றன என்பதைப் பட்டியல்போட்டுக் காட்டுவதன் மூலம், செய்திக்கு விளக்கம் முயலலாம். தாம்சன் பவுண்டேஷனின் ஆசிரியர் குழுவின் ஆய்வு மையம் (Editorial study Centre of Thomson Foundation) செய்தியாகக் கூடிய இருபது வகைகளை தொகுத்தளித்திருக்கின்றது. அவை எல்லா நாடுகளுக்கும் பொருந்தக் கூடியவை. ஆதலால் அவற்றை விளக்கிக் கூறலாம்.
1. புதுமையானது (Novelty) :
எது இதுவரை இல்லாமல் இப்பொழுது புதுமையாக நடக்கின்றதோ ஏனெனில் அது செய்தியாகின்றது. புதுமைக்கு மக்களைக் கவரும் ஆற்றல் மிகுதி நொண்டிப் பெண் நாட்டியம் ஆடினால் அது செய்தி. பாம்புகளோடு ஒருவர் தங்கி இருந்தால் – அது புதுமை. ஆதலால் அது செய்தி,
2. மனிதத் தாக்கம் (Personal Impact):
சராசரி வாசகருக்குச் சுவையூட்டுவதும், அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கக் கூடியதும் செய்தியாக உருவெடுக்கின்றது. பங்கீட்டில் வழங்கும் சீனியின் அளவைக் கூட்டுதல், வேலை நிறுத்தத்தின் விளைவாகப் பேருந்துகள் ஒடாமை, தாங்கள் விரும்பும் நடிகரின் திருமணம் போன்றவற்றை
எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
3. உள்ளூர் நடவடிக்கைகள் (Local affairs) :
தூரத்தில் நடை பெறுகின்ற ஒரு நிகழ்ச்சியைவிட உள்ளூரில் நடைபெறும் ஒன்றினை அறிந்து கொள்வதில்தான் வாசகர்களுக்கு ஆர்வம் அதிகம் இருக்கும். உள்ளூரில் தீ விபத்தில் நான்குபேர் இறந்திருப்பார்கள். அதே நேரத்தில் வெளிநாட்டில் 400 பேர் ஒரு பலமாடிக் கட்டிடம் இடிந்து இறந்திருப்பார்கள். இரண்டு நிகழ்ச்சிகளில் உள்ளூர் விபத்துப் பற்றி அறிந்து கொள்வதில் தான் வாசகர்களுக்கு ஆர்வம் மிகுதியாக இருக்கும்.
4. பணம் (Money) :
பணத்தோடு தொடர்புடையன செய்திகளாகின்றன. அரசின் வரவு-செலவுத் திட்டம், புதிய வரிகள், விலைகள் ஆகியவை செய்திக்குரிய கருப் பொருட்களாகும்.
5. குற்றம் (Crime) :
நாட்டில் நடைபெறும் குற்றங்களைப் பற்றிய செய்திகள் ‘சூடான செய்திகளாகும்’ (Hot News), கொள்ளை, கொலை, கற்பழிப்பு, திருட்டு போன்றவற்றை அறிந்து கொள்ள பலரும் விரும்புகின்றனர். ஆதலால் அவை பற்றிய விவரங்கள் செய்திகளாகின்றன. குற்றச் செய்திகள் கதைகள் போல இருப்பதால், அவற்றைப் பலரும் படிக்கின்றனர்.
6. பால் (Sex) தொடர்பானவை :
ஆண்-பெண் பால உணர்வு தொடர்பானவற்றில் மனித குலத்திற்கு எப்பொழுதும் ஒர் ஈடுபாடு இருக்கின்றது. மிகவும் மரியாதைக்குரிய இதழ்கள் கூட பால் உணர்வுக்குச் சிறப்பிடம் கொடுக்கின்றன. செய்திகளுக்கே மிகுதியாக இடம் ஒதுக்குவதிலிருந்தே. இவற்றின் செய்தித்தாள்களில் இப்படிப்பட்ட முக்கியவத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.
7. மோதல் (Conflict) :
இருவரோ, இரண்டு அணிகளே மோதிக்கொள்ளும் பொழுது செய்தி பிறக்கின்றது. மோதலையும், முடிவையும் அறிந்து கொள்வதில் மக்கள் அக்கறை காட்டுகின்றன. கணவன்-மனைவி சண்டை, தொழிலாளர் போராட்டம், இருநாடுகளுக்கு இடையில் சண்டை போன்றவற்றை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.
8. சமயம் (Religion) :
சமயம் சார்ந்தவற்றைப் பற்றியவை மக்களைக் கவர்கின்றன. நாத்திகர்கள் கூட சமயத்தலைவர்களைப் பற்றியும், மடங்களைப் பற்றியும் அறிந்து கொள்ள விரும்புகின்றனர். காஞ்சி சங்கராச்சாரியார் ஒருவர் பதவி துறந்து போக முயன்றதால் அது செய்தியாகின்றது. போப்பின் தேர்தலை உலகமே அறிந்து கொள்ள விரும்புகின்றது.
9. அழிவும் (Disaster) துயரமும் (Tragedy) :
எங்காவது அழிவு ஏற்பட்டால் அது செய்தியில் இடம் பிடிக்கின்றது. கப்பல் மூழ்குதல், இரயில் கவிழ்தல், தீ விபத்து போன்றவை மக்களின் இதயத்தைத் தொடுகின்றன. துயரமானவை நடக்கின்ற பொழுதும், அவை மக்களிடம் இரக்கத்தைத் தோற்றுவிக்கின்றன. காந்தியடிகள், கென்னடி, இந்திராகாந்தி ஆகியோர் கொல்லப்பட்டவை உலகையே உலுக்கிய செய்திகள். பெருந்தலைவர் காமராசர், புரட்சித்தலைவர் எம்.ஜி. இராமச்சந்திரன் போன்றோர் மறைவுச் செய்தி நாட்டையே துயரத்தில் ஆழ்த்தியது.
10. நகைச்சுவை (Humour) :
மக்களின் நகைச்சுவைக்குத் தீனியாகக் கூடியவற்றைச் செய்தியாகக் கருதலாம். நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகும் வகையில் ஒருவர் நடந்து கொண்டால், அதனைச் செய்தித்தாளில் வெளியிடுவார்கள். அவற்றைப் படித்து மக்கள் ரசிப்பார்கள்.
11. மனித ஆர்வமானவை (Human Interest) :
பொதுவாக மனிதர்களோடு தொடர்புடைய இன்ப, துன்ப நிகழ்ச்சிகள் செய்திகளாகும் தகுதியுடையன. ஒருவர் பணத்தைத் தொலைப்பதும்; ஒருவருக்கு பரிசு கிடைப்பதும்; உத்தரப் பிரதேசக் காட்டில் ஓநாய்ப் பையனைக் கண்டுபிடித்ததும் செய்தியாகின்றன.
12. ஏழைகளைப் பற்றியவை (The Under Dog) :
ஏழை எளியவர்களின் வாழ்க்கையில் நடைபெறும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் செய்திகளாகின்றன. எடுத்துக்காட்டாக, ஒர் ஏழைக் குடும்பம் வறுமையில் விட்டால் உடனே செய்தியாக நஞ்சுண்டு மாண்டு
தாளாமல் வெளியிடப்படுகின்றது.
13. மர்மம் (Mystery) :
உடனடியாகப் புரியாத மர்மமானவை எங்கு நடந்தாலும் அவை செய்தி மதிப்பைப் பெறுகின்றன. ஓரிடத்தில் காயங்களோடு ஓர் உடல் கிடந்தால், அதனைப்பற்றி அறிய எல்லோரும் எப்படிக்கொல்லப்பட்டார்” விரும்புவார்கள். “அது யாருடைய உடல், ” என்பன போன்றவற்றைச் சுவையான செய்திகளாக வெளியிடலாம்.
14. ஆரோக்கியம் (Health):
உடல் நலத்தோடு தொடர்பானவை மக்களின் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. குணமாக முடியாத நோய் குணமானால் அதனை அறிந்து கொள்ள மக்கள் விரும்புகின்றனர். மந்திர, தந்திரங்களால் நோய் குணப்படுத்தப்பட்டால் உடனே அது செய்தியாக வெளிவருகின்றது. உடல்
நலக்குறிப்புகளுக்குத் தனி இடம் இருக்கின்றது.
15. அறிவியல் (Science) :
அறிவியல் விந்தைகளும் சாதனைகளும் செய்திகளாக வடிவெடுக்கின்றன. முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த விண்வெளி வீரர்களைப் பற்றி அறிந்து கொள்ள மக்கள் விழைகின்றனர். புதிய கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிப்பாளர்களும் செய்தித்தாளில் இடம் பெறுகின்றனர். நோபெல் பரிசு பெற்ற அறிவியலறிஞர்களை உலகம் முழுவதும் அறிந்து பாராட்டுகின்றது.
16. பொழுது போக்கு (Entertainment) :
திரைப்படங்கள், நாடகங்கள், விளையாட்டுக்கள் போன்ற பொழுது போக்குக்குத் துணை செய்கின்றவை பற்றிய விவரங்களை அறியும் ஆர்வம் இயல்பாக மக்களிடம் இருக்கின்றது. ஆதலால் தான் திரைப்படங்களைப் பற்றிய பல்வேறு வகையான செய்திகளும் எப்பொழுதும் சுவை தருவனவாக உள்ளன. கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள், ஆட்டக்காரர்கள் மீது மக்கள் காட்டும் இடையறா ஆர்வத்தைப் பார்க்கின்றோம்.
17. புகழ்பெற்ற மக்கள் (Famous People) :
சமுதாயம், சமயம், அரசியல், விளையாட்டு, திரைப்படம் போன்ற துறைகளில் புகழ்பெற்ற மனிதர்கள் பற்றிய எந்த விவரமும் செய்தியாகின்றது. கவிஞர்கள், எழுத்தாளர்கள், மருத்துவர்கள் போன்றவர்களும் புகழ் பெற்று விட்டால் செய்தியில் இடம் பிடிக்கின்றனர்.
18. தட்பவெப்ப நிலை (weather) :
மழை பெய்தல், புயலடித்தல் போன்றவை மக்களைப் பாதிக்கின்றன. நமது நாட்டில் பருவமழை தவறினால் வேளாண்மை பாதிக்கின்றது. இங்கிலாந்து மக்கள் எப்பொழுதும் தட்பவெப்பநிலையை அறிந்து கொள்ளத் துடிப்பார்களாம். ஏனெனில் அவர்களது மாலை நிகழ்ச்சிகள் பாதிக்கக் கூடாதென்ற கவலை அவர்களுக்கு.
19.உணவு (Food) :
மனிதன் உயிர் வாழ இன்றியமையாதது உணவு. உணவுப் பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டால், அதன் காரணங்களை அறிய மக்கள் முயல்கின்றனர். உணவுப்பொருட்களின் விலை ஏற்றம் மக்களைப் பாதிக்கின்றது. ஆதலால் இவை பற்றிய செய்திகளை நாளிதழ்கள் வெளியிடுவது தேவையாகும்.
20. சிறுபான்மையினர் (Minorities) :
ஒவ்வொரு நாட்டிலும் சிறுபான்மைச் சமுதாயத்தினர் இருக்கின்றனர். நமது நாட்டில் மலைவாசிகளைச் சிறுபான்மையினராகக் கருதலாம். சிறுபான்மையினரை மற்றவர்கள் நடத்தும் முறைகளும், சிக்கல்களும் செய்தி மதிப்பைப் பெறுகின்றன.
குறிப்பு
கட்டுரையானது டாக்டர் மா.பா.குருசாமி அவர்களின் இதழியல் கலை என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.