குறுந்தொகைப் பதிப்பு வரலாறு

iniyavaikatral.in

            நல்ல குறுந்தொகை எனப் போற்றப்பெறும் குறுந்தொகையைப் பலர் பதிப்பித்துள்ளனர். பலர் உரையெழுதி உள்ளனர். குறுந்தொகையின் பதிப்பு வரலாற்றையும் பதிப்பு நுட்பங்களையும் இக்கட்டுரை உணர்த்துகிறது.

            எட்டுத்தொகை நூல்களுள் நற்றிணை நீங்கிய ஏழு நூல்களுக்கும் பழைய உரைகள் உண்டு என்றும் அவற்றுள் குறுந்தொகை உரை கிட்டவில்லை என்று முனைவர் அரவிந்தன் கூறுகிறார். (உரையாசிரியர்கள்)

            பேராசிரியர் குறுந்தொகையின் 380 பாடல்களுக்கு உரை வரைந்தார் என்றும் அவர் உரையெழுதாதுவிட்ட இருபது பாடல்களுக்கு நச்சினார்க்கினியர் உரையெழுதினார் என்றும் நச்சினார்க்கினியரின் உரைச்சிறப்புப்பாயிரம் குறிப்பிடுவதாக குறுந்தொகையின் முதல் பதிப்பாசிரியரும் உரையாசிரியருமான தி.சௌரிப்பொருமாள் அரங்கன் குறிப்பிடுகின்றார். இவ்வுண்மையினை உ.வே.சா வையாபுரிப்பிள்ளை, அ.சிதம்பரநாதன் செட்டியார். மு.அருணாசலம், மு.சண்முகம்பிள்ளை, கு.சுந்தரமூர்த்தி ஆகியோரும் குறிப்பிடுகின்றனர்.

குறுந்தொகைப் பதிப்புகளை குறுந்தொகைப் பதிப்பு வரலாறு என்னும் நூல் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்துகிறது.

            அ. பதிப்புகள்

            ஆ. வெளியீடுகள்

அ. பதிப்புகள்

            1. முழு அளவில் மூலமும் உரையுமாக அமைதல்

1915                 – தி. சௌரிப்பெருமாளரங்கன்

1930/2002       – கே.இராமரத்நம் ஐயர்

1937                 – உ.வே.சாமிநாதையர்

1985                 – மு.சண்முகம்பிள்ளை

          2. பகுதி அளவில் மூலமும் உரையுமாக அமைதல்

                                    1934                 – இரா.சிவ.சாம்பசிவ சர்மா

 3. முழு அளவில் மூலம் மட்டுமாக அமைதல்

                                    1933                 – சோ.அருணாசல தேசிகர்

                                    1957                 – எஸ்.ராஜம் (பதிப்பாசிரியர் குழு)

வெளியீடுகள்

1.          முழு அளவில் உரை மட்டுமாக அமைதல்

1941     – சு.அ. இராமசாமி

2.          முழு அளவில் மூலமும் உரையுமாக அமைதல்

1947, 1993                    – ரா.இராகவையங்கார்

1955                             – பொ.வே.சோமசுந்தரனார்

1958 ஃ 1983                 – சாமி சிதம்பரனார்

1965                             – புலியூர்க் கேசிகன்

1986                             – மணிமேகலைப் பிரசுர ஆசிரியர் குழு

1999                             – இரா.பிரேமா

2000                             – மு.கோவிந்தசாமி

2002                             – தமிழண்ணல்

2004                             – வி.நாகராசன்

2005                             – துரை.இராசாராம்

2007                             – சக்தி

2009                             – ச.வே.சுப்பிரமணியன்

3.          பகுதி அளவில் மூலமும் உரையுமாக அமைதல்

1956                             – மு.வ

1988                             – ம.ந.இராசமாணிக்கம்

2007                             – தி.குலோத்துங்கன்

4.          முழு அளவில் கவிதை நடையில் அமைதல்

2003                             – எம்.கு.பிரபாகர பாபு

2006                             – சுஜாதா

2006                             – இரா.சரவணமுத்து

5.          பகுதி அளவில் கவிதை நடையில் அமைதல்

1985                             – மு.ரா.பெருமாள் முதலியார்

2003                             – கருமலைத் தமிழாழன்

2009                             – திருவேந்தி

6.          முழு அளவில் மூலமும் உரையும் கட்டுடைத்துக் கோத்த நிலையினது

2007                             – கு.மா.பாலசுப்பிரமணியம்

7.          முழு அளவிலான மொழிபெயர்ப்பு

1997                             – மு.சண்முகம் பிள்ளை ரூ டேவிட் கிலேடன்

8.          திறனாய்வு நூலில் உரை வரைந்து அளித்தல்

2000                             – மனோன்மணி சண்முகதாஸ்

           இவை அனைத்துமே பதிப்பு நூல்கள் என்று பொதுநிலையில் சுட்டப்படுகின்றன. இவற்றுள் ஓலைச்சுவடி, காகிதச்சுவடி அடிப்படையில் மூலபாடக் கவனத்துடன் பதிப்பிக்கப் பெற்ற நூல்கள் மட்டுமே பதிப்பு நூல்களாக அமைகின்றன. சௌரிப்பெருமாள் அரங்கன் இராமரத்நம் ஐயர், உ.வே.சா மு.சண்முகம்பிள்ளை, இரா.சிவ.சாம்பசிவசர்மா (பகுதி அளவில் மூலமும் உரையுமாக அமைதல்) சோ.அருணாசல தேசிகர், எஸ்.ராஜம் (முழு அளவில் மூலம் மட்டும்) ஆகிய நூல்களின் பதிப்பு வரலாறு இங்கு உணர்த்தப்படுகிறது.

            1915 இல் திருக்கண்ணபுரத்தலத்துத் திருமாளிகைச் சௌரிப்பெருமாள் அரங்கன் என்பவர் “குறுந்தொகை மூலமும் புத்துரையும்” என்ற பெயரில் பதிப்பொன்றை வெளியிட்டார். அப்பதிப்பே குறுந்தொகை மூலமும் உரையுமாக அமைந்த முதற்பதிப்பாகும்.

            சௌரிப்பெருமாள் அரங்கன் வேலூர் இந்து தேவஸ்தான உயர்நிலைப்பள்ளியில் தமிழ்ப் பண்டிதராகப் பொறுப்பேற்றார். பின்னர் வாணியம்பாடி மதரஸே இஸ்லாமியா கல்லூரியில் தமிழ்ப்பணியைத் தொடர்ந்தார். முத்துரத்ன முதலியார் என்பவரின் வேண்டுகோளுக்கிணங்கி குறுந்தொகையைப் படியெடுக்கச் சென்னை அரசு நூல்நிலையம் சென்றார். அந்நூலகச்சுவடியில் காணப்பெற்ற பிழைகளும் குறுந்.316 ஆம் பாடல் விடுபட்டுப்போயிருந்ததும் அவர் குறுந்தொகைக்கு உரையெழுதக்காரணங்கள் ஆயின. ஓப்பீட்டிற்கு உதவியாக முத்துரத்ன முதலியார் குறுந்தொகையின் மற்றொரு சுவடியை வரவழைத்துக்கொடுத்தார். அவ்விரு சுவடிகளோடு மதுரைத் தமிழ்ச்சங்க சுவடி ஆகிய மூன்றையும் ஒப்புநோக்கிக் குறுந்தொகைக்கு உரையெழுதினார் அரங்கனார்.

இவருடைய குறுந்தொகைப்பதிப்பு

1.          தலைப்புப்பக்கம் முதலாகப் பாடினோர் பெயர் உரையில் அமைந்த முதற்பகுதி

2.          குறுந்தொகை மூலமும் உரையும்

3.          அரும்பத அகராதி முதலாக விளம்பரம்வரை அமைந்த பிற்பகுதி

என 368 பக்கங்களைக் கொண்டது.

1.          முதற்பகுதி

      தலைப்புப்பக்கத்தில் எட்டுத்தொகையில் இடம்பெறும் இரண்டாவது நூல் குறுந்தொகை என்பதும் அதன் புத்துரையை இயற்றியவர் திருக்கண்ணபுரத்தலத்துத் திருமாளிகை சௌரிப்பெருமாள் அரங்கன் என்பதும், அந்நூலும் உரையும் சோழவந்தான் கிண்ணிமடம் சிவப்பிரகாச சுவாமிகளுக்கு அன்புரிமையாக்கப்பட்டன என்பதும் 1 முதல் 228 பக்கங்கள் வேலூர் வித்யரத்னாகர அச்சுக்கூடத்திலும் பதிப்பிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்க செய்திகளாகம்.

            பொருளடக்கம் என்ற பகுதியில் சிறப்புப்பாயிரம் உதவியுரைத்தல், முகவுரை, மூலமும் உரையும், அரும்பத அகராதி, செய்யுள் முதற்குறிப்பு அகராதி, விளம்பரம் ஆகியவை இடம் பெற்றுள்ள பக்கங்கள் சுட்டப்பட்டுள்ளன. அடுத்துச் சோழவந்தான் கிண்ணிமடம் சிவப்பிரகாச சுவாமிகளின் நிழற்படமும் உரையாசிரியர் எழுதிய உரிமையுரையும் இடம் பெற்றுள்ளன. அதனையடுத்து வேலூர்க் கல்லூரித் தலைமைத் தமிழாசிரியர் சீனிவாசாச்சாரியார் இயற்றிய சிறப்புப்பாயிரம் அமைந்துள்ளது. அப்பாயிரம் குறுந்தொகையின் சிறப்பையும் அரங்கனாரின் உரைச்சிறப்பையும் விளக்குகின்றது.

            சிறப்புப் பாயிரத்தைத் தொடர்ந்து மதுரைத்தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினராக இருந்த முத்துரத்னமுதலியார் எழுதிய முகவுரை அமைந்துள்ளது.

            முகவுரையைத் தொடர்ந்து உதவியுரைத்தல் என்ற பகுதியல் தம்மை வளர்த்துத் தமிழ்க்கல்வி தந்த பெருமக்களை நினைவு கூர்ந்துள்ளார். குறுந்தொகைச் சுவடி தந்த முத்துரத்ன முதலியாருக்கு நன்றி பாராட்டியுள்ளார். அதனையடுத்து குறுந்தொகையைப் பதிப்பிக்கப் பொருளுதவி செய்தவர்களைப்பற்றியும் கூறியுள்ளார். குறுந்தொகைக் குறுந்துணையாக அருந்தொகையுதவிய பெருந்தகைச்செல்வர்கள் பெயரும் உதவிய தொகையும் என்னும் தலைப்பில் நன்றி பாராட்டியுள்ளார்.

            இதனையடுத்து தொல்காப்பியத்திற்கும் கலித்தொகைக்கும் நச்சினார்க்கினியர் செய்த உரை, இறையனார் அகப்பொருள் உரை, பரிமேலழகரின் திருக்குறளுரை, புறநானூற்றுப் பழையவுரை ஆகியவற்றுள் குறுந்தொகைப பாடல்கள் எடுத்தாளப்பெற்றுள்ள இடங்கள் மேற்கோளாட்சி விளக்கம் என்ற தலைப்பில் தரப்பட்டுள்ளன.

            இதனையடுத்து அருங்குறிப்புகளும் பிறவும் என்ற பகுதி அமைந்துள்ளது இது குறுந்தொகைப்பாடல்களின் பிழிவாக அமைந்துள்ளது. பழங்கால மக்களின் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், கொள்கைகள், வரலாற்றுக் குறிப்புகள் ஆகியவற்றை இப்பகுதி கொண்டுள்ளது. இப்பகுதி அகர வரிசையில் பாட்டு எண்களோடு அமைந்துள்ளது.

     எஞ்சியவைகளும் பிறவும் என்ற தலைப்பிலமைந்த பகுதியில் பதிப்பில் தாம் செய்த மாற்றங்களைத் தொகுத்தளித்துள்ளார். அவை விடுபட்டுப்போய்ப் பின்னர்க்கிடைத்த குறுந்தொகை 12ஆம் பாடலின் உரைமேற்கோள்கள், இடக்கர்ச் சொல்லாகிய அல்குல் வந்துள்ள 9 இடங்களில் தாம் கொண்ட புதிய பாடம் ஆகியவையாகும். அவ்வாறு திருத்தப்பெற்ற பாடல் எண்கள் 27, 101, 125, 159, 180, 216, 274, 294, 344.

            பாடல்களைப்பாடிய புலவர் பெயர்களை அகரவரிசையில் அமைத்துப் பாட்டெண்களையும் தந்துள்ளார். புலவர் பெயர் காணப்பெறாதன என்று 191, 201, 256, 313, 321, 326, 375, 379, 395 ஆகிய பத்துப் பாடல்களைக் குறிப்பிட்டுள்ளார் பின் வந்த அனைத்துப் பதிப்புக்களிலும் அப்பாடல்கள் புலவர் பெயரில்லாத பாடல்களாகவே பதிப்பிக்கப்பட்டுள்ளன.

2. குறுந்தொகை மூலமும் உரையும்

இவ்விரண்டாம் பகுதி பொழிப்புரையோடு 307 பக்கங்களைக் கொண்டது. முதல் 150 பாடல்களைப் பதிப்பிக்க 18 மாதங்கள் ஆகிவிட்ட படியாலும் விரைந்து நூலை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்திலும் பிற்பகுதியை சுருக்கமாகப் பதிப்பித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அச்சகத்தாரைக் கண்டாலே தமக்கு அச்சம் ஏற்படுவதாகக் கூறியுள்ளார்.

3. பிற்பகுதி

         பதிப்பின் பிற்பகுதி அரும்பத அகராதி, செய்யுள் முதற்குறிப்பகராதி, பிழைதிருத்தம், விளம்பரம் ஆகியவற்றைக் கொண்டது.

       அரும்பத அகராதியில் அருஞ்சொற்களுக்கு 2 பக்க அளவில் பொருள் தந்துள்ளார் செய்யுள் முதற்குறிப்பகராதியில் குறுந்தொகைப்பாடல்களை அகரவரிசையில் பாட்டு எண்களோடு தந்துள்ளார். பிழைதிருத்தம் பகுதியில் தாம் கண்ட பிழைகளை அட்டவணைப்படுத்திப் படிப்பதற்கு முன்னரே பிழைகளைத் திருத்திக்கொள்க எனக்குறிப்பிட்டுள்ளார். விளம்பரத்தில் குறுந்தொகைப் பதிப்பின் விற்பனையாளர்கள், நூலின் விலை, நாலடி நானூறு மூலமும் அரும்பத உரைக்குறிப்பும் என்ற நூலின் விளம்பரம் முதலியன இடம்பெற்றுள்ளன.

அரங்கனாரின் குறுந்தொகையுரை பின்வரும் உரைக்கூறுகளைக் கொண்டுள்ளது.

1.          திணை வகுத்துக் கூறுதல்

2.          துறை

3.          துறைவிளக்கம்

4.          புலவர்பெயர்

5.          குறுந்தொகை மூலம்

6.          பொழிப்புரை

7.          விளக்கவுரை

எ    ட்டுத்தொகை நூல்களுள் பழக்காலத்திலேயே திணை வகுக்கப்பெற்ற நூல்கள் அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகியவை ஆகும். திணை வகுக்கப்பெறாதிருந்த குறுந்தொகைக்கு முதன்முதலாகத் திணை வகுத்த பெருமைக்குரியவர் அரங்கனார். இவர் பாடலின் திணையைப் பாடலின் தலைப்பாகத் தந்துள்ளார்.

  பாடல்களின் கீழ் இன்னார் கூற்று, இன்ன சூழலில் சொல்லப்படுகிறது என்ற விளக்கக்குறிப்புகள் காணப்படுகின்றன. இது பாடலாசிரியரால் எழுதப்பெற்றது அல்ல.

  பாடல்துறைகளையும் பாடற்பொருளையம் இணைத்துச் சுருக்கமாகத் துறைவிளக்கம் தந்துள்ளார். பாடலைப்பாடிய புலவர் பெயரை இன்னார் பாடியது எனத் தடித்த எழுத்துக்களில் தந்துள்ளார். குறுந்தொகை மூலத்தை தான் பொருத்தமானது எனக்கொண்ட பாடல்களைப் புணர்ச்சி நிலையிலேயே சீர் பிரிக்காது தந்துள்ளார். இதனையடுத்து பொழிப்புரை அமைந்துள்ளது. பொழிப்புரையை அடுத்துள்ள பகுதியில் இலக்கணச்செய்திகள், இலக்கியச்செய்திகள், வரலாற்றுச்செய்திகள், மரபுகள், பாடவேறுபாடு சுட்டுதல் போன்ற பலவும் விளக்கப்பட்டுள்ளது. உள்ளுறை, இறைச்சி ஆகிய இரண்டையும் தனித் தலைப்பிட்டு விளக்கியுள்ளார் இது குறிக்கத்தந்த ஒன்றாகும்.

தி.சௌ.அரங்கனார் நுட்பங்கள்

            அரங்கனாரின் உரை நுட்பங்கள் சில இங்கு உணர்த்தப்படுகிறது. குறுந்தொகைக்கு முதன்முதலில் திணை வகுத்தவர் இவரே பாடலின் துறையைக் கருத்துரை என்கிறார். திணைத்தலைப்பை அடுத்து துறையை அமைத்துள்ளார். கடவுள் வாழ்த்திலிருந்து முதல் 150 பாடல்களுக்கு துறை விளக்கம் உள்ளது.

            துறை விளக்கத்தினையடுத்து பாடலைப்பாடிய புலவர் பெயரைத் தந்துள்ளார்.

         பாடல்களைச் சீர் பரிக்காமல் தருதல், சிதைந்துள்ளவாறே அடிக்குறிப்பில் தருதல், மிகவும் சிதைந்துள்ளவற்றைத் தாமே ஒருவாறு திருத்தியமைத்தல் ஆகிய நிலைகளில் பதிப்பித்துள்ளார்.

            அல்குல் என்பதனை இடக்கரடக்கல் எனக்குறித்து அச்சொல் நூலுள் ஒன்பது இடங்களில் இடம்பெறுவதாகச் சொல்லி, அதனைத் திருத்தி வேறு சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.

            தழையணி அல்குல் ………. தழையணி மருங்குல் (125)

தான் அவ்வாறு மாற்றங்கள் செய்ததற்கு சி.வை.தாமோதரன்பிள்ளை பதிப்பித்த கலித்தொகை முன் மாதிரியாக அமைந்தது எனக் குறிப்பிடுகிறார்.

            பாடற்சொல் கிடந்தவாறே பொழிப்புத்தருதல் இவரது உரைநெறியாகும்.

அகராதிப் பொருள் தருதல்

            அகராதிப்பொருள் கூறும் முறை இவரிடம் குறைவாகக் காணப்பட்டாலும் சிலவற்றிற்கு அகராதிப்பொருளைத் தந்துள்ளார்.

            செயலை – அசோகு (218)

            குருகு – நாரை (228)

இலக்கணத்துடன் பொருத்திப்பொருள் கூறுதல்

            கடுவன் – ஆண்குரங்கு – குரங்கினேற்றினைக் கடுவனென்றலும் என விதந்தோதினார் ஆசிரியர் தொல்காப்பியனரும்.

இரு பொருள் தருதல்

            ஒரு சொல்லுக்கு இருபொருள் தரும் நிலையைக் காணமுடிகிறது.

பனிபடுநாள் – பனிமிக்க பருவம்

            பனி நாடொறும் குறைந்து அப்பருவத்தோடு முற்றுமழிதல் கருதிப் பனி அழியும் நாள் எனலுமாம். (104)

பல்துறை அறிவு

            பைங்காய் – இளந்தன்மை மாறிப் பழந்தன்மை பற்றாத கடுங்காய் (196)

இலக்கணக்குறிப்பு

            இலக்கணச்செய்திகள் மிகுந்துள்ளன

            விழவு – ஆகுபெயர் (31)

உள்ளுறை, இறைச்சியைச் சுட்டுதல்

            வரலாற்றுச் செய்திகள் தருதல்

            எவ்வி (19) சுருக்கமானவை.

பழமொழிகளைச் சுட்டுதல்

            முடவன் கொம்புத்தேனை அவாவினாற் போல (60) என்னும் பழமொழியைப் புலப்படுத்தல் உணர்க.

பாட்டு வரலாறு கூறுதல்

            இப்பாட்டு இறையனார் தருமிக்கு இயற்றித்தந்தது. இறையனார் ஆலவாயடிகள் என்று கூறி அடிக்குறிப்பில் திருவிளையாடற் புராணம் தருமிக்குப் பொற்கிழியளித்த படலம், கீரனைக் கரையேற்றிய படலம் ஆகியவற்றில் கண்ட செய்திகளையும் தொகுத்துரைத்துள்ளார்.

சுவடி நிலை உரைத்தல்

            பொருள் விளங்காமையை எடுத்துரைத்தல் (330)

துறை மாறுபாடு சுட்டல்

            சுவடிகளில் துறை மாறியிருத்தலைச் சுட்டல்.

1930 இராமரத்நம் ஐயர்.கே

        சென்னையில் இருந்து கலாநிலயம் என்னும் வாரஇதழ் வியாழன் தோறும் வெளிவந்துள்ளது. உள்நாடு ரூ.7, புறநாடு ரூ.9 என இவ்விதழின் சந்தாத்தொகை வரையறுக்கப்பெற்றுள்ளது. 1930 ஏப்ரல் 3 அன்று இவ்விதழில் குறுந்தொகை உரை வெளிவரத் தொடங்கியது. இதில் குறுந்தொகை (பாட்டு – 1-11) மு.இராமரத்நம் ஐயர் டீ.யு என்று அமைந்துள்ளது குறுந்தொகைக்கு உரைவிளக்கம் அளித்த கே.இராமரத்ரம் ஐயர் தொடர்பான வாழ்வியலை அறியும் வகையில் எவ்வகைப்பதிவுகளும் இடம்பெறவில்லை.

      இவ்வாறு வெளியான இவருடைய உரை குறுந்தொகை மூலமும் உரையும் என்ற பெயரில் 2022 மார்ச்சில் வெளியாகி 475 பக்கங்களைக் கொண்டு அமைந்துள்ளது. பதிப்பில் உதவி நா.சந்திரசேகர் என்று உள்ளது.

            பாடல்களுக்கு வரிசை எண் இட்டு அந்த எண்ணிக்கையின் வலப்புறக் கீழ்ப்பகுதியில் பாடலுக்குரிய திணையும் இடப்புறக் கீழ்ப்பகுதியில் பாடலாசிரியர் பெயரும் குறிக்கப்பெற்றுத் தொடர்ந்து கூற்று அளிக்கப்பெற்றுள்ளது. பின்னர் பாடலும் தொடர்ந்து உரை என்னும் குறிப்புடன் பாடலுக்கான உரையும் இடம்பெற்றுள்ளன. இந்தப்பொது இயல்புக்கு அப்பால் அருஞ்சொல் பொருள் அளித்தல், இலக்கணக்குறிப்பு அளித்தல், சிறுவிளக்கம் அளித்தல் என்பன ஒருசில பாடல்களுக்கான உரைப்பகுதியாக உள்ளன.

        குறுந்தொகைப் பாக்கள் சிலவற்றுக்கு இருவகைக் கூற்றுகள் குறிக்கப்பெறுகின்றன ஆனால் இப்பதிப்பில் பாடலுக்கு முன்பு ஒரு கூற்றும் உரைப்பகுதியின் இறுதியில் மற்றொருவகைக் கூற்றும் அளிக்கப்பெற்றுள்ளன.

      உரையாக்கத்தில் பெரும்பாலும் பாடலடிகள் எப்படி அமைந்துள்ளனவோ அது போன்றே அதே வரிசை முறையிலேயே உரை சொல்லும்முறை பின்பற்றப்பெற்றுள்ளது.

        எளிய மொழிநடையில் பாடலுக்குப் பொழிப்புரை தந்துள்ளார். குக்கூ வென்றது கோழி (குறுந்.157) என்ற பாடலடிக்குக் கொக்கரக்கோ என்று சேவற்கோழி கத்தியது என எளிய மொழிநடையில் உரைதந்துள்ளார்.

      பொழிப்புரையைத் தொடர்ந்து சொற்பொருள் விளக்கம் தருதல், இலக்கணக்குறிப்புத்தருதல், இடப்பொருள் கூறல், இலக்கிய இலக்கணச் சான்றுகளை ஆளுதல், உவமைகளை விளக்குதல், பாட வேறுபாடுகள் சுட்டல், பொருத்தமுடைய பாடம், பொருந்தாத பாடங்கள் ஆகியவற்றை விளக்குதல் போன்ற பல கூறுகள் காணப்படுகின்றன.

       சொற்களுக்குப் பொருள் கூறும்போது உரைகாரர்கள் தம் பன்மொழித்திறத்தால் வடமொழிச் சொற்களாலும் பொருள் கூறுவதுண்டு ஆனால் ஆங்கிலச்சொற்களால் பொருள் விளக்கம் தருதலை இவருடைய உரையிலேயே காணமுடிகிறது.

      இறை – வீட்டின் இறப்பு (The caves of house) அரமகளிர் – தெய்வப்பெண்கள் (nlmphs) இவர் 22 பாடல்களில் உள்ளுறையும், 31 பாடல்களில் இறைச்சியும் இடம்பெற்றுள்ளதாக விளக்கியுள்ளார்.

      சுவடிகளில் பாடல் அமைந்துள்ள நிலையைச் சுட்டும் வழக்கம் இவரிடம் உள்ளது. பொருள் விளங்காத இடங்களைக் கீழே கண்ட பொருள் அத்துணை திருப்திகரமாக இல்லை என்று குறித்துள்ளதன் மூலம் இவருடைய நேர்மைத்திறத்தையும் பண்பாட்டுள்ளத்தையும் உணரமுடிகின்றது.

1937 – உ.வே.சாமிநாதையர்

            உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகனாரான சாமிநாதையர் சீவகசிந்தாமணி பற்றிய பதிப்புப்பணியில் இருந்தபோது குறுந்தொகை பற்றிய தகவல்கள் கிடைத்தன. சில ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப்பின் குறுந்தொகையைப் பதிப்பிக்கக்கருதிய நேரத்தில் தி.சௌ.அரங்கனாரின் குறுந்தொகைப்பதிப்பு வெளிவந்தது. தி.சௌ.அரங்கனாரின் பதிப்பு பின்னர்க்கிடைப்பது அரிதாகியதால் உ.வே.சா மீண்டும் குறுந்தொகையை ஆராய்ந்து 1937-இல் வெளியிட்டார்.

            குறுந்தொகையில் உள்ள சொற்றொடர் காரணமாகப் பெயர்பெற்ற புலவர்கள் அப்பெயராலேயே பிற நூல்களில் வழங்கப்பெறுவது போல அந்நூல்களில் உள்ள செய்யுட்பகுதி காரணமாகப் பெயர் பெற்றாரது பெயர் ஒன்றேனும் குறுந்தொகையில் வரவில்லை. இதனாலும் முதலில் குறுந்தொகை தொகுக்கப்பட்டது என்பது தெளிவாகும் என்று கூறுகிறார்.

            காக்கைப்பாடினியார் நச்சௌ்ளையார், கயமனார் ஒரேருழவனார் போன்ற பாடலால் பெயர் பெற்ற புலவர்களையம் அவர் குறிப்பிடுகிறார்.

            குறுந்தொகையில் 307, 391 ஆகிய பாடல்கள் ஒன்பதடியை உடையவை. 391 ஆம் செய்யுள் சில ஏடுகளில் எட்டடியை உடையதாக உள்ளது. ஆகவே 307 ஆம் பாடலை விலக்கினால் குறுந்தொகை நானூறு பாடல்களை உடையதாக இருக்கும் என்பது இவருடைய எண்ணம்.

            குறுந்தொகைப்பாடல்களை தம் உரையில் கையாண்ட உரையாசிரியர்களை அகர நிரலில் கொடுக்கும் உ.வே.சா அவர்கள் குறுந்தொகையில் உள்ள 165 செய்யுள்களே பிற நூல் உரைகளில் மேற்கோளாகக் காட்டப்பெறாதவை என்கிறார். பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் குறுந்தொகைக்கு உரையெழுதிய நிகழ்வையும் இவர் குறிப்பிடுகிறார்.

            இதனையடுத்து இவர் பரிசோதித்த ஒன்பது ஏட்டுச்சுவடிகளைப் பற்றிய குறிப்பு உள்ளது. சென்னை ஸர்வகலாகலையார் (சென்னைப் பல்கலைக்கழகம்) ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் பொருளதவி செய்ததைப் பேருதவியாகக் குறிப்பிட்டுள்ளார். குறுந்தொகைப் பதிப்பில் மேற்கொண்ட முறைகளைப்பற்றி கீழ்க்கண்டவாறு அவர் குறிக்கிறார்.

1.          கூற்று

ஒவ்வொரு செய்யுளும் இன்னாருடைய கூற்று என்பதைத் தலைப்பில் அமைத்திருக்கின்றேன். தொல்காப்பியத்தில் கூற்று வகையாகச் சூத்திரங்கள் வகுக்கப்பட்டிருத்தலும் இங்ஙனம் அமைக்கும் கருத்தை உண்டாக்கியது.

2.          கூற்று விளக்கம்

இது பழைய கருத்தையும் செய்யுட் பொருளையும் இணைத்துச் சுருக்கமாக வரையப்பட்டது. இரண்டு கருத்துள்ள இடங்களில் முதற்கருத்துக்கே இவ்விளக்கம் எழுதப்பட்டது.

3.          மூலம்

ஏட்டுச்சுவடிகளை ஆராய்ந்து பொருட்சிறப்புடைய பாடங்களையே கொடுத்திருக்கிறேன்.

4.          பிரதிபேதம்

ஏட்டுச்சுவடிகளாலும், உரையாசிரியர்கள் உரைகளில் காட்டிய மேற்கோள் பகுதிகளாலும் தெரிந்த பாடல்களுள் முக்கியமானவை அடிக்குறிப்பில் காட்டப்பெற்றன.

5.          பழைய கருத்து

கருத்தில் பொருத்தம் இல்லாத சொற்கள் நகவளைவுக்குள் அமைக்கப்பட்டன.

6.          ஆசிரியர் பெயர்கள்

சுவடிகளில் இருந்தவாறே இப்பெயர்கள் அமைக்கப்பெற்றன.

7.          பதவுரை

பொருள் விளக்குதற்குரிய சொற்களைப் பெய்து பதவுரை எழுதப்பட்டுள்ளது. சில செய்யுட்களுக்கு ஒருவாறு உரை எழுதினும் முடிவு முதலியன தெளிவாக இன்மையின் என் மனத்திற்குத் திருப்தி உண்டாகவில்லை

8.          முடிபு

வினைமுடிபு இத்தலைப்பிற் காட்டப்பட்டது.

9.          கருத்து

செய்யுளின் கருத்துச் சுருக்கமாக எழுதப்பட்டது.

10.        விசேட உரை

  பதசாரங்களும், இலக்கணச் செய்திகளும் பொருள் விளக்கங்களும் வரலாறுகளும் இப்பகுதியில் எழுதப்பட்டுள்ளன. உள்ளுறையுவமம், இறைச்சி என்னும் இரண்டும் குறிப்பெனவே குறிக்கப்பட்டுள்ளன.

11.        மேற்கோளாட்சி

       இலக்கண இலக்கியங்களின் உரைகளில் உரையாசிரியர்கள் இந்நூற் செய்யுட்களையும் செய்யுட்பகுதிகளையும் காட்டிய இடங்கள் அடிவரிசைப்படி வகுத்துக்காட்டப்பட்டுள்ளன.

12.        ஒப்புமைப்பகுதி

       இந்நூற் செய்யுட்களின் சொற்பொருளோடு ஒப்புமையை உடைய பிறநூற் செய்யுட்களும் செய்யுட்பகுதிகளும் ஒப்புமைப் பகுதியென்னும் தலைப்பில் காட்டப்பட்டன.

      இவ்வொப்புமைப் பகுதி சங்க நூற்பொருள்களை ஆராய்வாருக்குப் பெரிதும் பயன்படும். நூலின் மூலமும் உரையும் அடங்கிய பகுதிகள் மேலே கண்ட முறையில் வகைப்படுத்திப் பதிப்பிக்கப்பட்டன நூலிற்கு அங்கமாகச் செய்யுள் முதற்குறிப்பகராதியும் அரும்பத முதலியவற்றின் அகராதியும் நூலின் பின்னே சேர்க்கப்பட்டன.

   இம்முகவுரையின் பின்னே நூல் ஆராய்ச்சியும், ஆசிரியர் பெயர் அகராதியும், பாட பேதங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. நூலாராய்ச்சியில் இந்நூலால் அறிந்த பலவகைச் செய்திகளையும் பண்டைக் காலத்துத் தமிழ் மரபுகளையும் வேறு பலவற்றையும் காணலாம்.

    இதனையடுத்து உதவிய அன்பர்கள் என்ற தலைப்பில் இந்நூல் பதிப்பித்தலின்போது உதவியர்களைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளர் (அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் கி.வா.ஜகந்நாத ஐயர்)

       தமிழ் அன்னையின் திருவடித்துணைகளில் இப்பதிப்பும் ஒரு மணமற்ற சிறு மலராகவேனும் கிடந்து நிலவும் என்பது எனது கருத்து.

      எனக்குள்ள பல வகையான குறைகளால் இப்பதிப்பில் பல பிழைகள் நேர்ந்திருத்தல் கூடும். அவற்றை அன்பர்கள் பொறுத்துக்கொள்வார்கள் என்று எண்ணுகிறேன்.

       உ.வே.சா அவர்களின் புலமைத்திறத்தை ஒருங்கே காட்டுவதாக அமைந்துள்ளது நூலாராய்ச்சி என்னும் அரிய பகுதியாகும். இதில் முதல், கரு, உரிப்பொருள்களைப் பற்றிய அறிமுகம் முதலில் அமைந்துள்ளது. இதனையடுத்து ஐவகை நிலச்செய்திகள், பொழுதுகள், மரம் செடி கொடிகள், விலங்குகள், பறவைகள், (தலைவன், தலைவியின்) அன்பு வாழ்க்கை உபகாரிகள், இடங்கள் (மலைகள், ஆறுகள், ஊர்கள்) பண்டைக்காலத்து மக்கள் வாழ்க்கை நிலை (அரசியல்- ஊரமைப்பு – சாதிகள் போன்றன) இலக்கணச் செய்திகள் புலவர்கள் (சிறப்புப்பெயர்கள் – ஊர்கள் – சாதி – தொழில்) போன்றவை அமைந்துள்ளன. குறுந்தொகை நூலின் பிழிவாக இப்பகுதி அமைந்துள்ளது எனலாம்.

       இதனையடுத்து பாடினோர் வரலாறு பகுதியில் புலவர்களுடைய பெயர் அவர்களைப் பற்றிய குறிப்பு போன்றவை இடம்பெறுகின்றன. இதனைத்தொடர்ந்து குறுந்தொகை மூலமும் உரையும் அமைந்துள்ளது. இதன் பின்னர் செய்யுள் முதற்குறிப்பகராதி, அரும்பத முதலியவற்றின் அகராதி, இப்பதிப்பில் எடுத்தாண்ட நூல்கள், நூற்பெயர்கள் முதலியவற்றின் முதற்குறிப்பகராதி போன்றவை அமைகின்றன.

            குறுந்தொகைக்குச் செய்யப்பட்ட உரைகளுள் மிக விரிவானது உ.வே.சா வின் உரை ஆகும். அவருடைய தனித்தன்மைக்கும் ஆழ்ந்த புலமைத்திறனையும் நினைவாற்றலையும் அனைவரும் அறியும் வகையில் குறுந்தொகை உரை அமைந்துள்ளது எனலாம்.

            கடவுள் வாழத்து நீங்கலான அனைத்துப் பாடல்களுக்கும் கூற்றினைத் தலைப்பாகத்தந்துள்ளார் உ.வே.சா. திணையைத் தலைப்பாகத் தருவதால் பாடல் மரபினை உணர முடியுமே தவிர கிளவி மாந்தரின் உணர்வை உணர இயலாது என்ற அவருடைய கருத்தினடிப்படையில் கூற்று விளக்கம் இடம்பெற்றுள்ளது.

            குறுந்தொகைப்பாடல்கள் புணர்ச்சியில் மிகும் ஒற்றுக்கள் உடம்படுமெய்களோடு பதிப்பிக்கப்பட்டுள்ளன.

உ.வே.சாவின் நுட்பங்கள்

இடம் நோக்கிப் பொருள் தருதல்

            பாடல்துறையில் இடம் பெற்றுள்ள சொல்லுக்குப் பாடல் பொருளோடு பொருத்திப் பொருள் தருவது இவ்வாறு கூறப்படுகிறது. 24-ஆம் பாடலின் பழைய கருத்து (துறை) பருவங்கண்டு ஆற்றாளாகிய கிழத்தி உரைத்தது என்பதாகும். இதன் விளக்கம் பருவம் – தலைவன் வருவேனென்று கூறிச்சென்ற காலம். ஈண்டு இளவேனில் என்பதாகும். அது இடம் நோக்கிய பொருளாக அமைகின்றது. வேம்பு இளவேனிற் காலத்தில் மலரும் செய்தியும் இடம் நோக்கி அமைகின்றது.

இலக்கண, இலக்கியச் செய்திகளை இணைத்துத் தருதல்

            தலைமகன் பிரிந்தவிடத்துக் கனாக்கண்டு சொல்லியது என்ற துறைக்கு தலைவன் பிரிவின் கண் கனவிற் தலைவியைக் காண்டல். தொல்.பொருளியல், ஐங்-324 என்று இலக்கண, இலக்கியச் செய்திகளை தொடர்புபடுத்திக் கூறுகிறார்.

பழஞ்சொல் வடிவச்சிந்தனை

            66 ஆம் பாடலின் துறையில் இடம்பெற்றுள்ள வற்புறீஇயது என்ற சொல்லுக்கு வற்புறுத்தியது என இந்நாளைய வடிவத்தைத் தந்து பொருள் விளக்குகின்றார்.

குறிப்புத்தருதல்

            30-ஆம் பாடலைப் பாடியவர் கச்சிப்பேட்டு நன்னாகையார். இப்புலவர் பெயரையடுத்து பிறைக்குறியீட்டினுள் பேட்டு – இது பட்டு என வழங்குகின்றது.

பாட வேறுபாடுகள்

            பாட வேறுபாடுகளைப் பிரதிபேதம் என உ.வே.சா குறித்துள்ளார்.

விசேடவுரை

            தம்முடைய இலக்கியப்புலமையினையும், பல்துறை அறிவினையும் நினைவாற்றலையும் ஒருங்கே காட்டுவது போன்று இவ்விசேடவுரை அமைந்துள்ளது. இதிலுள்ள சில நுட்பங்களை மட்டும் இங்குக்காணலாம்.

அகராதிப் பொருள் தருதல்

            அகராதிப்பொருள் தரும் முறையை விசேடவுரைப் பகுதியில் அதிகமாகக் காணப்படுகிறது.  தாது – பலவகைப்பொடி             (48)

            புனவன் – புனத்தையுடைய குறவன் (105)

இலக்கணத்துடன் பொருத்திப் பொருள் கூறுதல்

            மாரிப் பீரத்து (98) என்ற அடியில் இடம்பெறும் பீரத்து என்னும் சொல்லுக்கு

பீர் என்னும் சொல் அத்துச்சாரியை பெற்று வந்தது (தொல்.புள்ளிமயங்கு 68)

இரு பொருள் தருதல்

            ஏழில் – ஒருமலை, இது நன்னன் என்பானுக்குரியது. ஏழிலைப் பாலையென்னும் மரமும் ஆம் (138)

மரபுவழிப் பொருள் தருதல்

            கண்களுக்கு உவமையாகத் தாமரை மலரையும் குவளை மலரையும் கூறுதல் சங்க இலக்கிய மரபு.

            பூ ஒத்து அலமரும் தகைய (72) என்ற பாடலில் இடம்பெறும் பூ என்ற சொல்லுக்கு

            பூ – தாமரைப்பூ, குவளையுமாம்.

உரைகள் வழி நின்று பொருளை விலக்குதல்

            பல உரைகளின் வழி நின்று பொருளை விளக்கியுள்ளார். வள்ளை – உரற்பாட்டு (தொல்.புறத்திணை 8,3)  (89)

பல்துறையறிவைப் புலப்படுத்தல்

            நிலந்தொட்டுப்புகுதல் முதலிய மூன்று அற்புதச் சித்திகளும் சித்து வகைகள். இவற்றை இருத்தியென்பர். சைனர்கள் இத்தகைய சித்திகளைப்பெற்ற சாரணரெண்மரென்பர். பௌத்தர்களும் இத்தகைய சித்திகளைப் பற்றிப் பாராட்டுவர் தம் தந்தையாகிய சுத்தோதனுக்கு ஞானம் உண்டாக்குதற் பொருட்டு இத்தகைய அற்புதங்களைப் புத்தர் காட்டினாரரென்று அசுவகோஷ போதிசத்துவரென்பவரால் இயற்றப்பெற்ற புத்த சரிதத்தின் 19 ஆம் வர்க்கம் தெரிவிக்கின்றது. (130)

நுண்ணறிவு தோன்றப் பொருள் தருதல்

            பதனழிந் துருகல் – உள்ளீடு அழுகிவிடுதல்

            ஒன்றும் இல்லையாதல் (261)

புதுமை தோன்றப் பொருள் தருதல்

            திண்டேர் – போர்க்களத்தில் மேடும் பள்ளமுமாய இடங்களில் ஓடினும் சிதைவின்றித் திண்ணியதாகும் தேர். (210)

இலக்கணக் குறிப்புத்தருதல்

            பெருந்தோள் – அன்மொழித்தொகை (210)

பயிரியல் செய்திகள்

            பித்திகம் – பிச்சி. இது மழைக்காலத்து அரும்பி மலரு மென்பது மாரிப்பித்திகத்து நீர்வார் கொழுமுகை (குறுந்-168:1, 222:5) என்பதனால் விளங்கும் (94)

            பாவை – மானால் உண்ணப்படும் இலையை உடைய வரகின் தாள். இங்ஙனமே அறுகின் தண்டையும் கூறுதல் மரபென்று தெரிகிறது (220).

விலங்கியல் செய்திகள்

            புதுக்கோள் யானை – புதியதாகக் காட்டிலிருந்த பிடிபட்ட யானை (129)

பிறர் கருத்து கூறல்

            சின்மொழி – சிலவாகியமொழி

            மென்மொழி (பழ.226 உரை) என்றும் மெத்தென்ற மொழி (புறநா.166:16) என்றும் கூறுவர் உளர் (14)

பொருள்கோள் நெறி கூறுதல்

            புன்கண் மாலையும் புலம்பும்

            இன்றுகொல் தோழியவர் சென்ற நாட்டே (46)

            என்ற பாடலடிகளை

            மாலையும் இன்று கொல், புலம்பும் இன்று கொல்லெனத் தனித்தனியே கூட்டுக என்று எழுதுகிறாள்.

வரலாறு கூறுதல்

            2, 130 ஆகிய இரு பாடல்களின் உரையில் வரலாறு இடம் பெற்றுள்ளது. 2 – பாட்டு வரலாறு 130 – புலவர் வரலாறு.

பழமொழிகளைக் காட்டுதல்

            ஒரேருழவன் : ஓரேர்க்காரன் உழுது கெட்டான் அஞ்சேர்க்காரன் அமர்த்திக்கெட்டான் (ஒரு பழமொழி) 131

            ஒப்புமையில் பெரும்பாலும் குறுந்தொகைப் பாடல்களை முதலில் காட்டுகின்றார். சங்க நூல்கள் இலக்கண நூல்கள், நீதி நூல்கள், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், உரையாசிரியர்களின் உரைகள், மறைந்து போன தமிழ் நூல்கள் (பரிபாடல் திரட்டு, சிற்றெட்டகம்) போன்ற 95 வகையான நூல்களிலிருந்து ஒப்புமை காட்டிய திறம் எண்ணி எண்ணி வியக்கத்தக்கது.

1985 – மு.சண்முகம்பிள்ளை

            மு.சண்முகம்பிள்ளை அவர்கள் பல ஒலைசுசவடிகளைப் பார்த்து குறுந்தொகையை 1985-ல் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடாகப் பதிப்பித்தார். இலண்டனிலிருந்து வரவழைக்கப்பெற்ற காகிதச்சுவடி, ரா.ராகவையங்காரால் பெயர்த்து எழுதப்பெற்ற சுவடி, அடிகளாசிரியர் காகிதச்சுவடி, பூண்டியப்புலவர் ஏடு போன்றவை இதில் குறிக்கத்தக்கன.

            இந்நூலில் முதலில் உ.வே.சா பதிப்பு, வையாபுரிப்பிள்ளையின் சங்க இலக்கியப்பதிப்பு, தமிழ்ப்பல்கலைக்கழகப் பதிப்பு போன்றவற்றில் உள்ள பாட வேறுபாடுகள் சுட்டப்பெறுகின்றன. பாடலின் தலைப்பில் குறிஞ்சி – தோழி கூற்று, குறிஞ்சி – தலைவன் கூற்று என்று திணை, கூற்று இரண்டும் சுட்டப்பெறுகின்றன. இதனைத் தொடர்ந்து சீர் பிரிக்கப்பெற்று பாடல் அமைந்துள்ளது. பாடலைத் தொடர்ந்து புலவர் பெயரும் அதனைத் தொடர்ந்து துறைக்குறிப்பும் இடம்பெற்றுள்ளன. அடுத்து பாடலின் பொருள் விளக்கம் உள்ளது. அதனைத் தொடந்து பாட வேறுபாடும் அதனைத் தொடர்ந்து உள்ளுறையும் இடம்பெற்றுள்ளது. சில இடங்களில் தொல்காப்பிய நூற்பா போன்றவை பாடலுக்குப் பொருத்தமான இடங்களில் மேற்கோளாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

            இதனைத் தொடர்ந்து பாட்டு முதற்குறிப்பு அகராதி இடம்பெறுகிறது. அடுத்து பாட வேறுபாடு ஒப்பு நோக்கு அட்டவணை இடம் பெறுகிறது. இது வேறு குறுந்தொகைப்பதிப்புகளில் இல்லாதது. தமிழிப்பல்கலைக்கழகம், இலண்டன் ஏடு, இராகவையங்கார் ஏடு, பூண்டியப் புலவர் ஏடு, அடிகளாசிரியர் ஏடு, சௌரிப்பெருமாள் அரங்கன், இராமரத்தன ஐயர், அருணாசலம் உ.வே.சா. சங்க இலக்கியப்பதிப்பு (வையாபுரிப்பிள்ளை) போன்றோரின் குறுந்தொகைப் பாட வேறுபாடுகள் 401 பாடல்களுக்கும் சுட்டப்பெறுகின்றன. இப்பணி மிகவும் போற்றத்தக்கது. இதனைத் தொடர்ந்து பாடினோரும் பாடற்குறிப்பும் என்ற பகுதியும், அடுத்து பாடலில் சுட்டப்பெற்ற வள்ளல் போன்றோரும் குறிக்கப்பெறுகின்றனர்.

            இதனையடுத்து திணை அமைப்பு முறையிலும், கூற்று வகையிலும் பாடலின் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அடுத்து தொடரடைவு இடம்பெறுகிறது. குறுந்தொகையின் வேறு எந்த நூலிலும் இல்லாத ஒரு முயற்சி இவ்வாசிரியரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறுந்தொகையில் உள்ள சொற்கள், கருத்துக்கள், பாடலடிகள் போன்றவை மீண்டும் மீண்டும் எடுத்தாளப்பெற்றதை இத்தொடரடைவு மூலம் அறியமுடிகிறது. சங்க இலக்கியச் சொற்பொருளாய்வுக்கு இத்தொடரடைவு பெரிதும் பயன்படும்.

            இதனையடுத்து சொல்லடைவு இடம்பெற்றுள்ளது. பாடவேறுபாடுகளுக்கு ஆசிரியர் கூறும் காரணங்கள் குறிக்கத்தக்கன. பாட வேறுபாடு ஒப்பு நோக்கு அட்டவணையும், தொடரடைவு போன்றவை இந்நூலில் மிகவும் போற்றத்தக்கன.

பகுதி அளவில் மூலமும் உரையும்

1934 – இரா.சிவ.சாம்பசிவசர்மா

            இலந்தையடிகள் வித்துவான் இரா.சிவ.சாம்பசிவன் என்ற பெயருடைய அறிஞர் செந்தமிழ்ச்செல்வி இதழில் குறுந்தொகையின் 50 பாடல்களுக்கு உரையெழுதியுள்ளார். 1940 இல் சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் நிகழ்த்திய குறுந்தொகை மாநாட்டில் பங்கேற்றுக் கட்டுரை வழங்கிய அறிஞர் ஐவருள் ஒருவராக சர்மாவும் திகழ்கின்றார்.

            உரை கூறுவாரும் உண்டு, வரைவாருமுண்டு என்று குறித்துள்ளதன் மூலம் அவர்காலத்தில் குறுந்தொகை உரை வழக்குப்பெற்று இருந்த நிலையை உணரமுடிகின்றது (குறுந்தொகை பதிப்பு வரலாறு)

முழு அளவில் மூலம் மட்டுமாக அமைதல்

1933 – சோ.அருணாசல தேசிகர்

            எட்டுத்தொகையுள் இரண்டாவதாகிய குறுந்தொகை மூலம் எனும் பெயரில் வித்வான் சோ.அருணாசல தேசிகர் குறுந்தொகைப் பாக்களைப் பதிப்பித்துள்ளார். இப்பதிப்பில் பாக்கள் பாடல் எண், திணை, பாடல், கூற்று, புலவர்பெயர் எனும் முறையில் அளிக்கப்பெற்றுள்ளன. பாட வேறுபாடுகள் பிரதி பேதம் என்று குறிக்கப்பெற்றுள்ளன. நூல் இறுதியில் பாடினோர் பெயரட்டவனை செய்யுள் முதற்குறிப்பு அகராதி, சொல் அகராதியும் அளிக்கப்பெற்றுள்ளன.

1957 எஸ்.ராஜம் (பதிப்பாசிரியர் குழு)

            அறிஞர் எஸ்.வையாபுரிப்பிள்ளை முதலான ஒரு சிலரின் அரிய முயற்சியால் பாட வேறுபாடுகளைக் கருத்திற்கொண்டு பொருத்தமான பாடல் தெரிவுடன் சங்க இலக்கியப்பாக்கள் உரையின்றி அச்சிடப்பெற்றன. குறுந்தொகை பாடல் எண், திணை, சந்தி பிரிக்கப்பெற்ற பாடல், கூற்று, புலவர் பெயர் முறையில் என்ற வரிசை அமைந்துள்ளது. நூலின் இறுதியில் பாடினோரும் பாடல்களும், பாடப்பட்டோர், சிறப்புப்பெயர், பாடல் முதற்குறிப்பு அகராதி ஆகியவை உரிய முறையில் இடம்பெற்றுள்ளன. சொற்பிரிப்பு நெறிமுறைகள் எவ்வாறு மேற்கொள்ளப் பெற்றன என்று இன்னொரு நூலில் பதிப்பாசிரியர் குழு விளக்கியுள்ளது.

மேற்கண்ட குறுந்தொகைப்பதிப்புகளில் ஒவ்வொன்றிலும் தனித்தன்மைகள் பொதிந்துள்ளன. இருப்பினும் ஆய்விற்கு உதவும் வகையில் உ.வே.சாவின் குறுந்தொகையே முதலில் எண்ணத்தக்கது. அவருடைய நுட்பமான அறித்திறன் ஆய்வாளர்களால் என்றும் போற்றப்பெறுகின்றது.

             துணை நூல்கள்

            குறுந்தொகை                                –           அருணாசல தேசிகர்,

                                                                                 சாமிநாதையர் உ.வே.

                                                                                 இராமரத்னம் ஐயர்.கே

                                                                                 சண்முகம்பிள்ளை மு.

                                                                                 சௌரிப்பெருமாள் ஆரங்கன் தி

                                                                                  ராஜம் எஸ்

            குறுந்தொகை உரைகள்             –           மணி.ஆ

                                                                               தமிழன்னை ஆய்வகம்

                                                                               புதுவை

            குறுந்தொகைப்பதிப்பு வரலாறு         – அறவேந்தன்

                                                                              காவியா பதிப்பகம்

                                                                              சென்னை

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் அ.ஜெயக்குமார்

உதவிப்பேராசிரியர்,

மஹேந்ரா கலை அறிவியல் கல்லூரி

காளிப்பட்டி. நாமக்கல் மாவட்டம் – 637501

ஆசிரியரின் பிறக்கட்டுரைகள்

1.சங்க இலக்கியத்தில் நெற்பயிர் மேலாண்மை

2.சங்க இலக்கியத்தில் குடில்கள்

3.தொல்காப்பிய இளம்பூரணர் உரையில் கலைச்சொல்லாக்கம்

Leave a Reply