The Philosophy of Impermanence as Expounded by Thirumoolar|Dr.K.Nagammal

The Philosophy of Impermanence as Expounded by Thirumoolar -Dr.K.Nagammal
Abstract
       This research paper examines the concept of impermanence as expounded in Thirumoolar’s Thirumandiram, arguing that this doctrine serves as a unique catalyst for spiritual liberation. It highlights how Thirumoolar presents human suffering as a consequence of attachment to transient worldly illusions. The path to true deliverance, the study finds, is a dedicated and urgent pursuit of the eternal Ultimate Reality, or Paramaporul. A central tenet is the imperative to achieve this state of supreme bliss within one’s current lifetime. Ultimately, this analysis validates Thirumoolar’s profound legacy as a moral and spiritual guide whose work offers a compelling framework for human welfare and enlightenment.


திருமூலர் காட்டும் நிலையாமை தத்துவங்கள்

ஆய்வுச் சுருக்கம்
      இறைத்தன்மை மிக்க சித்தர் பாடல்களில் திருமூலரின் திருமந்திரத்தில் எடுத்தியம்பப்பட்டுள்ள நிலையாமை தத்துவங்களை வெளிக்கொணந்து அதனூடாக ஆன்மாக்களை ஆன்ம விடுதலையை நோக்கி உந்தப்படுகிற தனித்துவத்தைத் திருமூலர் முன் வைத்திருப்பதை எடுத்துரைக்கிறது. ஒவ்வொரு பிறவியிலும் பிறக்கின்ற மனிதர்கள் மாயைகளை நம்பி உலகின் கட்டுக்களால் பின்னப்பட்டு துன்பப்படுகிற நிலையிலிருந்து விடுபட வேண்டுமெனில் அவர்கள் நிலையான பரம்பொருளை எய்திட முயற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் முயற்சியையும் உடலும் உயிருமுள்ள பொழுதே செய்து வெற்றி காண வேண்டும் அதுதான் வாழ்வின் பேரானந்தம் என்பதைப் புலப்படுத்தியுள்ளது. இவ்வாறு உலகிற்கு நன்மை பயக்கும் நல்லறங்களைக்கூறி ஆற்றுப்படுத்தியப் பங்கை மெய்பித்துள்ளது.

திறவுச் சொற்கள்
           திருமூலர், திருமந்திரம், நிலையாமை, தத்துவங்கள், மெய்யியல்,இறையியல், இறவா நிலை, பேரானந்தம், ஆன்மா, பரம்பொருள், பிறவி, மெய்ப்பொருள், சித்தர் இலக்கியம், சித்தர், சித்தம், சித், யோகம், அறிவுடைமை. 

முன்னுரை
     காலந்தோறும் இலக்கியங்கள் தோன்றி மக்களின் சிந்தனையில் இயங்கி அவர்களை நெறிப்படுத்தி அதன் ஊடாக அவர்தம் வாழ்க்கை முறையை மாண்புற செய்துள்ளது. அந்த வரிசையில் சித்தர் இலக்கியங்கள் உயிர்கள் பிறந்ததன் பயனையுணர்த்தி நிலையில்லா இந்த உலகத்தில் நிலையான மெய்ப்பொருளை அடைவதற்கான வழிவகைகளைக்  கூறி அந்த உயிர்களுக்கான ஆன்ம விடுதலையை வலியுறுத்துவதைக் காணமுடிகிறது. அச்சித்தர்களில் முதன்மையான சித்தர் என்று போற்றப்படுகிற திருமூலரின் திருமந்திரத்தில் உள்மொழியப்பட்டுள்ள நிலையாமை மெய்யியலை ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாக அமைகிறது.

திருமந்திரம்
           திருமூலரால் இந்தயுலக மக்கள் யாவர்க்கும் அளிக்கப்பட்ட அனுபவ பிழிவுதான் திருமந்திரமென்னும் நூல். இந்நூல் பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக விளங்குவதோடு முதல் ‘சைவ சித்தாந்த சாத்திர நூல்’ என்ற பெருமையும் கொண்டு மிளிர்கிறது. ‘சைவ சித்தாந்தம்’ என்ற சொல்லும் இந்நூலில் தான் முதன் முதலில் கையாளப்பட்டுள்ளது.சேக்கிழாரால் ‘தமிழ் மூவாயிரம்’ என்று சிறப்பிக்கப்பட்ட இப்பனுவலின் ஒன்பது தந்திரங்களில் 1- 4 ஆம் தந்திரங்கள் சிவ ஞானத்தைப் பெறுவதற்கானம சாதனங்களை எடுத்துக் கூறுகிறது. அதேபோல, ஐந்தாம் தந்திரம் சைவ சித்தாந்த உண்மைகளை விளக்குகிறது. மேலும், 6-9 ஆம் தந்திரங்கள் சிவஞானத்தால் பிறக்கும்   நன்மைகளை விளம்புகிறது. திருமூலர் எண்ணாயிரம் பாடல்களை எழுதியிருந்தாலும் கூட அவரியற்றிய திருமந்திரம் என்னும் படைப்பே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றது.

சித்தர்கள் 
         ‘சித்’ – என்ற வடமொழி சொல்லிலிருந்து தோன்றியதுதான் சித்தர் என்ற சொல்.  சித் – என்றால் அறிவு என்று பொருள். அதன் அடிப்படையில் சித்தர்கள் நுண்ணறிவாளராகவும் பேரறிவாளராகவும் மெய்ஞ்ஞானிகளாகவும் திகழ்ந்தனர் என்று கொள்ளலாம். ஏனென்றால் சித்தர்கள் பக்தர்களிலிருந்து வேறுபட்டவர்கள். “பக்தி நெறியின்றி வேறு நெறியால் கடவுளைக் கண்டு தெரிந்து இருவினையொட்டி நிகழுங் காணும் உடலோடு உலாவுவோர் சித்தர்.” (அருணாசலம்.மு, தமிழ் இலக்கிய வரலாறு, 14 -ஆம் நூற்றாண்டு அத்-12.) என்று உரைத்துள்ள மு. அருணாசலம் அவர்களின் கருத்தும் இவ்விடத்தில் சிந்திக்க தக்கதாகும்.
அச்சித்தர்கள் சாதி, மதம்,  இனம் இப்படியான சமூகத்தின் பிரிவினைகளுக்கு மிக முக்கிய காரணங்களாக விளங்கக்கூடிய வேறுபாடுகளை ஒழித்து மக்கள் ஒற்றுமையுடன் உயர்ந்த வாழ்வை வாழவேண்டுமென்ற நோக்கில் அவர்களின் விழுமிய வாழ்வியலுக்காகத் தம் படைப்பின் வழியாக உலக மெய்யியலை வழங்கியுள்ளனர். அவற்றில் நிலையாமை தத்துவத்தைப் பற்றி பாடும் பாடல்களை முன் வைத்து இக்கட்டுரைகயில் “திருமூலர் காட்டும் நிலையாமை தத்துவங்கள்” என்ற தலைப்பில் ஆய்வு பொருள் அமைக்கப்பட்டுள்ளது. 

நிலையாமை தத்துவம் 
         தத்துவம் என்பதனை அறிஞர்கள் ‘மெய்யியல்’ என்கின்றனர். குறிப்பாக நிலையாமை தத்துவம் என்பது இந்த உலகத்தில் நிலையற்ற பொருள்களின் உண்மை தன்மையைச் உறுதிப்படக் கூறுவது. “நிலையில்லாத தன்மையே நிலையாமை” (அண்ணாமலை (அ.கு.தலை.) க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி விரிவாக்கித் திருத்திய புதிய பதிப்பு, ப. 832) என்று நிலையாமைக்கு க்ரியா அகராதி பொருள் விளக்கம் தருகிறது. 
இப்படியான சிந்தனைகளைப் புரிந்து கொள்ளுதல் என்பதும் அதனை வாழ்க்கையில் பின்பற்றுதல் என்பதும் பெரும்பான்மையான மக்களிடத்தில் எட்டாக்கனியாக இருந்து வருவதைப் பார்க்க முடிகிறது. தன் அனுபவத்தால் ஒன்றினை மிக எளிமையாக உள்வாங்கிக் கொள்கின்ற  மானிடயினம் இதுபோன்ற சித்தாந்தங்களில் தன்னை உட்புகுத்திக் கொள்ளாமல் கடந்து செல்ல எண்ணும் போக்கைக் காணமுடிகிறது. இதன் காரணமாக முடிவில் துன்பத்தில் அழுந்தி வாழ்க்கையைத் தொலைத்து விடுகின்றனர்.  அதனால்தான் திருமூலர் மனித ஆன்மாக்களை இதுபோன்ற துன்ப நிலையிலிருந்து மீட்டெடுத்து இறவாத பெருவாழ்வை நோக்கி செலுத்தும் முகமாகத் தன் படைப்பான திருமந்திரத்தில்  யாக்கை நிலையாமை  25 – பாடல்கள், செல்வநிலையாமை  -9 பாடல்கள், இளமை நிலையாமை 10- பாடல்கள் உயிர்நிலையாமை  10- பாடல்கள் என நிலையாமைக்கு நான்கு அதிகாரங்களை வகுத்து 54 பாடல்களைத் தொகுத்தளித்து அப்பாடல்கள் மூலமாகத் திறம்பட ஆற்றுப்படுத்தியுள்ளார். 

நிலையற்ற உடம்பு 
        பரந்து விரிந்த  இப்பூவுலகத்தில் இன்று, நாம் பார்த்த ஒன்று நாளையில்லை. இன்று நம்முன் நடமாடிய மனிதன் அடுத்த நொடியே இறந்து விடுகின்ற நிலையை கண்முன் கண்ட பின்னும் கூட அறியாமையில் மக்கள் நிலையில்லாதவைகளை நிலையானது என்று மயங்கி கிடக்கின்றார்கள். இத்தகைய தன்மை உடையோரை, 

“நில்லாத வற்றை நிலையின என்றுணரும்  
புல்லறி வாண்மை கடை” (திருக்குறள்.331) 
         
     எனக் கூறி இவ்வாறு நம்புகின்ற அறியாமை இழிவானது என்று இடித்துரைக்கிறார் வள்ளுவர். 
 
“ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் 
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு 
சூரையாங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு 
நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந் தார்களே” (திருமந்திரம்.145)
         
       எனப் பாடுகிறார் திருமூலர். இதனினும் மேலாக, அதன் உச்சத்தைக் காட்ட விரும்பி இந்த உடலைவிட்டு போகும் உயிர் மீண்டும் இந்த உடலுக்குள் வந்து புகாது (திருமந்திரம்.146,149) அதேபோல, ஒரு குயவன் செய்த குடம் உடைந்து போனால் அதன் துண்டுகளை ஓடு என்று சொல்லி நாளை உதவுமென்றும் எடுத்து வைப்பார்கள். ஆனால், மனித உடல் அழிந்து போனால் அது ஒன்றுக்குமே பயன்படுவதில்லை மாறாக அது நாறிவிடுமென்று உடனே அப்புறப்படுத்தி விடுவார்கள் என்பதை,

“வளத்திடை முற்றத்துஓர் மாநிலம் முற்றும்
குளத்தின் மண்கொண்டு குயவன் வனைந்தான்;
குடம்உடைந் தால்அவை ஓடென்று வைப்பர்
உடல்உடைந் தால்இறைப் போதும் வையாரே.”  (திருமந்திரம்.158)
         
        என மனமுருகிப் பாடுகிறார் எனவே, உடலின் இத்தகு தன்மையை உணர்ந்து மனிதன் சிவ ஒளியைச் சேரும்போது அந்த உடல் அழிவற்ற நிலையை எய்த முடியும் என்ற உறுதிப்பாட்டை ஒரு குயவன் செய்கின்ற சுட்ட மண்பாண்டமும் பச்சை மண்பாண்டமும் ஒரே மண்ணிலிருந்து செய்வதை நாம் கண்டாலும் கூட தீயினால் சுட்டது இறுகி திண்மை பெறும். சுடாமல் இருப்பதோ இறுக்கம் பெறாததால்  மழைநீரில் கரைந்து மீண்டும் மண்ணாகவே ஆகிவிடும். அதைப்போலத்தான் மனித உடம்பும் தவத்தால் சிவவொளியைப் பெற்றுவிட்டால் அழியாது. ஆனால், சிவ ஒளியைப் பெறாதபோது வலிமையைப் பெறாது விரைந்து அழிந்து போகின்றது. இப்படித்தான் இவ்வுலகில் எண்ணற்றவர் இறந்து விடுகின்றனர் என்ற பேருண்மையை,

“மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென்று இருந்தது தீயினைச்  சேர்ந்தது
விண்ணின்று நீர்விழின் மீண்டும்மண் ஆவபோல்
எண்ணின்றிமாந்தர் இறக்கின்ற வாறே.”          (திருமந்திரம்.143)
என விளம்புகிறார்.

நில்லாச் செல்வம்
         இன்றைய மானுட வாழ்வில்  அவர்களின் ஓட்டம், ஓய்வு ஓய்வறியா உழைப்பு,ஒருவர் மீது மற்றொருவர் பொறாமை கொள்ளுதல், ஒருவரை பழிவாங்கித் தான் அந்தயிடத்தில் அமர வேண்டுமென நினைத்தல், தனக்கேயிது கிடைக்க வேண்டுமென்ற பேரவா இப்படி இன்னோரன்ன பல காரணங்களுக்கும் மூல காரணமாக இருப்பது பொருள் தேவை அல்லது பொருளாதாரம் பற்றிய எண்ணங்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. அப்படியெல்லாம் தேடுகிற இந்த செல்வம் நிலையற்றது என்ற உண்மையைப் புறந்தள்ளி விட்டு வாழும் மக்களைப் பார்த்து சித்தர்கள் கவலை கொள்கிறார்கள்.
அரும்பாடுபட்டுத் தேடி வைத்து அறம் செய்யாது பெருக்குகின்ற எல்லா செல்வமும் என்றோ ஒருநாள் அழியும் தன்மையுடையது. இதனை, உணராத மனிதன் காடு, வீடு, நாடு என எல்லா இடங்களிலும் அதனைத் தேடி அலைகிறான். ஏதோ ஒரு வகையில் அதனை அடைந்த பின்னும் அவனுடன் உடன்வரும் ஆற்றல் அதற்கில்லை என்பதுதான் எதார்த்தம். அதனால்தான் திருமூலர், என்றும் குறையாத செல்வமாக விளங்கும் இறைவனிடம் சேர்ந்துவிட்டால் அந்த உயிரானது அரிய தவங்களையும் செய்ய வேண்டாம்; எதற்கும் அஞ்சவும் வேண்டாம் என்று தெளிவுபடுத்துகிறார் இதனை,

“தெருளும் உயிரொடும் செல்வனைச் சேரில் 
மருளும் பினைஅவன் மாதவம் அன்றே‌”  ( திருமந்திரம்.168)
         
       இவ்வடிகளில் அறியமுடிகிறது. நில்லா இப்பொருள் செல்வத்தை விடுத்து மனித மனமானது என்றும் நிலைக்க வல்ல இறைவனைத் தேடுவதற்கான வழியைக் கண்டு அவனோடு ஒன்றிட வேண்டும் என்கின்றனர் சித்தர்கள். 

இளமை நிலையாமை
       மனித உயிர்கள் பிறந்து வளர்ந்து இளமையை அடைந்து முதுமை பெறுவதும் உறுதி. இப்படியிருக்க இளமையே நிலையானது என எண்ணுவது மாயையானதை நம்புவது அது பயனற்றதுமாகும்.இது போன்ற தத்துவ அறிவுறுத்தலை திருமூலர்,

“ஆண்டு பலவும் கழிந்தன; அப்பனைப்
பூண்டு கொண்டாரும் புகுந்தறி வாரில்லை;
நீண்ட காலங்கள்; நீண்டு கொடுக்கினும் 
தூண்டு விளக்கின் சுடரறி யாரே” ( திருமந்திரம்.178)         
         இறைவனை அறியாமலேயே பல ஆண்டுகள் வாழ்நாளில் கழிந்து விட்டன. இந்த உலக உயிர்களுக்கெல்லாம் அப்பனாக விளங்கும் இறைவனை உள்ளத்திலே கொண்டவர்கள் கூட, ஒளியாகிய அவனை ஆழமாக எண்ணி முழுமையாக அறியவில்லை. அப்படியிருக்க இன்னும் நீண்ட காலம் வாழ்கிற வாய்ப்பு இருந்தும் தூண்டு விளக்கின் பெருஞ்சூடராக இருக்கும் இறைவனை அறிந்து தொழாமல் கழிக்கின்றனரே இந்த மக்கள் என உலக மக்கள் குறித்து வருந்துகிறார். அதேபோல, இளமை என்பது அனுதினமும் தேய்ந்து தேய்ந்து இறுதியிலே மாய்ந்துவிடும் இயல்புடையது. அத்தகைய இளமை கழிந்து விட்டால் எத்தகைய நல்ல அறங்களையும் செய்ய முடியாமல் போகிவிடும் என்பதை,

“தேய்ந்துஅற்று ஒழிந்த இளமை கடைமுறை;
ஆய்ந்துஅற்ற பின்னை அரிய கருமங்கள்;
பாய்ந்து அற்ற கங்கைப் படர் சடை நந்தியை
ஓர்ந்து உற்றுக் கொள்ளும்! உயிருள்ள போதே. ”       (திருமந்திரம்.179) 
         
        எனப்பாடி உயிருள்ளபோதே சிவபெருமானை நன்கு எண்ணி உணர்விலே வைத்துக் கொள்ள வேண்டும் என ஆற்றுப்படுத்துகிறார்.  ஆகவே, உயிர்கள் அனைத்தும் இளமையின் தன்மையை உணர்ந்து அது இருக்கும் காலத்திலேயே இறையொளியோடு கூடுதலே இப்பிறவியின் பயன் என்பதை அறியவைத்துள்ளார்.

உயிர் நிலையாமை
        உயிரைத் தாங்கி நிற்கின்ற உடல் அழியுமேயன்றி உயிர் அழிவதில்லை. உடலும் உயிரும் ஒன்றோடுயொன்று பின்னிபிணைந்தவை அந்த உடலை விட்டு உயிர் பிரிந்து போகும் முன்பே இறைவனின் திருவடி ஒளியைப் போற்றி வழிபட வேண்டும். அப்படி இல்லையேல் எமன் அழைக்கும் நாளில் அந்த இறைவனை அறிந்து போற்றுவதற்கு வாய்ப்பு ஏதுமில்லை என்றுரைப்பதை, 

“தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்
இழைக்கின்ற எல்லாம் இறக்கின்ற கண்டும் 
பிழைப்பின்றி எம்பெரு மான்அடி ஏத்தார்
அழைக்கின்ற போதுஅறி யாரவர் தாமே.    (திருமந்திரம். 187)
          இவ்வடிகள் சுட்டிக் காட்டுகிறது.   உடல், உயிர் ஆக்கம் அதன் இயக்கம் எனத் தெள்ளத் தெளிந்த திருமூலர் முதலில் உடலைப் பாதுகாத்தல் வேண்டும் அதன் மூலம் நீண்ட நாட்கள் வாழலாம் என்றார் இதனை,

“உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்;
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்      தேனே. ”  (திருமந்திரம். 724
)
             இவ்வடிகள் விளக்கி நிற்கிறது. எப்படியோ வாழலாம் என்று இல்லாது இப்படித்தான் வாழ வேண்டும் எனக் கொள்கைகளோடு வாழும் மனிதர்களுக்கும் அந்த வாழ்க்கையின் நிறைவில் அவர்கள் எய்த வேண்டிய பெருவாழ்வு எது என்பதை உணர்த்தும் ஆற்றல் உடையதே சித்தர் இலக்கியங்கள் என்பது பெறப்படுகிறது. 

மெய்ப்பொருள் உணர்தல்
      செல்வம், யாக்கை,இளமை,உயிர் ஆகிய அழியும் தன்மையுடையவற்றை மனித மனம் வெறுத்தொதுக்கி இவ்வுலகில் என்றும் நிலைத்து நிற்கக்கூடிய நிலைத்தன்மையுடைய இறையை அடைவது தான் வாழ்வின் பயன் என உணர்ந்து அத்தகைய, உயர்ந்த வாழ்வை எய்திட எண்ணும் பொழுது அந்த உயிர்கள் சிவஞானத்தை எய்தி பேரொளியோடு ஓரொளியாகச்  சேருகிற மெய்யிலை உணரும் அந்நிலையே வாழ்வின் உன்னதம் என்பதனைச் சித்தர்கள் மெய்பித்துள்ளனர். இங்கே,
“மெய் என்னும் சொல்லுக்கு உண்மை, உடம்பு என்னும் இரண்டு பொருள்கள் உண்டு.”(அரசு வீ., மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்- 18, ப.141)
என்றுரைக்கும் கருத்து ஒப்பிட்டு எண்ணத்தக்கது.

முடிவுரை 
         
🍁மானுடர்கள் அனைவரும் நிலையில்லாத உலகப் நிலைப்பாட்டினை உள்வாங்கிக் கொண்டு நிலையான பரம்பொருளை அடைய வேண்டும். அப்பரம்பொருள் வேறு நாம் வேறல்ல நமது உள்ளம் தான் அந்த இறைவன்  என்ற மெய்யியலை வழங்கி அவர்களின் வாழ்வியலின் காப்பாகவும்; மனித சமூகம் மேம்பாடாகவும் விளங்கும் இதுபோன்ற மடைமாற்ற சிந்தனையின் மூலமாக மனிதனை மேம்பட்ட ஆன்மாவாக நிலைநிறுத்தும் முயற்சியினை மேற்கொண்டுள்ளார்.
         
🍁மனித உடலானது தவத்தால் சிவ ஒளியைப் பெற்றுவிட்டால் அந்த உடம்பின் அழிவிலிருந்து தப்பலாம் அல்லது உடம்பிற்கு அழிவேயில்லை என்று உறுதிப்படுத்தி உயிர்கள் செல்ல வேண்டிய எல்லையை வகுத்து தருகிறார்.
         
🍁ஆன்மாக்கள் மோட்சம் அடையும் வழிமுறைகளை எடுத்துக்காட்டி அவர்களின் எதிர்கால கனவினை மெய்ப்பட செய்யும் பணியைச் செவ்வனே ஆற்றியுள்ளார்.
         
🍁இப்பூமியில் மெய்யான பொருள் இறைவன் என்பதை உணர்த்தி அதனை அடைவதே ஆன்மாக்களின் பெரும்பேறு, இப்பிறவியின் பயன் என்பதனை எடுத்துக்காட்டி அதற்கான வழிகளான தவம், யோகங்களை கைவரப்பெறுதல் வேண்டும்; குறிப்பாக வாழும் காலத்தில் இறைவனை தனக்குள்ளேயே தேட வேண்டும் என்ற தத்துவ போக்கை சித்தர்கள் நிலைநாட்டியுள்ளனர்
         
🍁வாழும் காலத்தில் ஆண்டுகளைத் தொலைத்துவிட்டு வாழ்வின் இறுதித் தருவாயில் இறைவனை எண்ணுவதால் பயனில்லை என்று ரைத்து வாழும் காலத்தே அழிவில்லா இறைவனை அடைவதே துன்பம் போக்கும் வழி என வலியுறுத்துவதை அறியமுடிகிறது.
         
🍁எப்பொழுது ஆன்மாக்கள் மாயையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு இறைவனையடைய வேண்டுமென எண்ணுகிறதோ அப்பொழுததே இறையருளால் குருவின் துணையோடு மோட்சத்தை எய்தும் பாக்கியம் பெறுமென்பதைத் திருமூலரின் திருமந்திரப் பாடல் புலப்படுத்துவதை உணர முடிகிறது.
 
துணைநூற் பட்டியல்
1.அண்ணாமலை (அ.கு.தலை.) க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி விரிவாக்கித் திருத்திய புதிய பதிப்பு, க்ரியா, New No.2,  old NO.25, 17th East Street Thiruvanmiyur, Chennai- 41, first edition, 1992.

2.அரசு வீ., மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்- 18, இளங்கணி பதிப்பகம், பி 11, குல்மொகர் அடுக்ககம், 35/15 பி,தெற்கு போக்கு சாலை, தியாகராய நகர், சென்னை – 6000 17.

3.அருணாசலம்.மு, தமிழ் இலக்கிய வரலாறு, 14 -ஆம் நூற்றாண்டு அத்-12.

4.மணிவாசகன் புலவர் அடியன், திருமந்திரம், சாரதா பதிப்பகம், ஜி 4 சாந்தி அடுக்ககம் 3 ஸ்ரீ கிருஷ்ணாபுரம் தெரு, ராயப்பேட்டை சென்னை -14, ஏழாம் பதிப்பு, செப்டம்பர் – 2022.

5.புலியூர்க்கேசிகன்,(ப.ஆ) திருக்குறள் பரிமேலழகர் உரை, பூம்புகார் பதிப்பகம், சென்னை – 03, 11 – ஆம் பதிப்பு, 2010.

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் கு. நாகம்மாள், 
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
அறிவியல் மற்றும் மானுடவியல் புலம்,
எஸ். ஆர். எம். பல்கலைக்கழகம்,

இராமாபுரம் வளாகம்,
சென்னை-89.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here