Tamil Literature and Types of Culture|Dr.A.Ranjani

Abstract
      This research article examines the definitions and various categories of Tamil literature and culture. Rather than approaching these concepts solely through the lens of Western sociologists, this study integrates them with the specific context of Tamil society and its literary traditions. Culture serves as the fundamental identity of a society. This paper elucidates 12 distinct cultural elements, ranging from Geographical Culture to Universal Culture, using evidence from landmark Tamil literary works such as Tolkappiyam, Sangam literature, Thirukkural, and the poems of Subramania Bharati. By aligning foreign scholarly theories with the lived realities of Tamil society, the primary objective of this article is to create a new dimension in the field of cultural studies.

Keywords
         
        Geographical Culture, Primary Culture, Subculture, Counterculture, Alternative Culture, Mixed/Hybrid Culture, Implicit/Inherent Culture, Ideal Culture, Universal Culture, Tamil Literature, Tolkappiyam, Thirukkural.


“தமிழ் இலக்கியமும் பண்பாட்டு வகைகளும்”

ஆய்வுச் சுருக்கம்
     தமிழ் இலக்கியமும் பண்பாட்டு வகைகளும் குறித்த வரையறைகளையும் அதன் பல்வேறு வகைகளையும் மேலைநாட்டுச் சமூகவியலாளர்களின் பார்வையில் மட்டும் அணுகாமல், தமிழகச் சூழலோடும் தமிழ் இலக்கியங்களோடும் இணைத்து ஆய்வு செய்கிறது. பண்பாடு என்பது ஒரு சமூகத்தின் அடையாளம். நிலவியல் பண்பாடு முதல் பொதுமைப் பண்பாடு வரை 12 வகையான பண்பாட்டுக் கூறுகளைத் தமிழ் இலக்கியச் சான்றுகளான தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் மற்றும் பாரதியார் கவிதைகளின் வாயிலாக இக்கட்டுரை விளக்குகிறது. வெளிநாட்டு அறிஞர்களின் கோட்பாடுகளைத் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியலோடு பொருத்திப் பார்ப்பதன் மூலம், பண்பாட்டு ஆய்வுகளில் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்குவதே இக்கட்டுரையின் முதன்மை நோக்கமாகும்.

திறவுச் சொற்கள்
       நிலவியல் பண்பாடு, முதன்மைப் பண்பாடு, உட்பண்பாடு, எதிர்ப்பண்பாடு, மாற்றுப்பண்பாடு, கலப்புப் பண்பாடு, உள்ளார்ந்த பண்பாடு, உகந்த நிலைப்பண்பாடு, பொதுமைப் பண்பாடு, தமிழ் இலக்கியம், தொல்காப்பியம், திருக்குறள்.

முன்னுரை
     பண்பாட்டிற்கான வரையறைகளும் அதன் வகைகள் தொடர்பான விளக்கங்கள் பெரும்பாலும் வெளிநாட்டு பண்பாட்டியியலாளர், சமூகவியலாரின் கருத்துக்கள் அவர்களின் நாட்டுச்  சூழலை அடிப்படையாக வைத்து விளக்கப்படுள்ளன. தமிழகப்பண்பாட்டு ஆய்வாளர்களும், சமூகவியலாரும் பண்பாட்டினை விளக்குவதற்கு ஆங்கில  நூற்களை விளக்கும் போது வெளிநாட்டவரின் விளக்கங்களைப் பெரும்பாலும் மொழிபெயர்த்து தருகின்றார்களே தவிர அதனை தமிழ்ச்சூழலினடிப்படையில் ஆய்வினை முழுமையாக நிகழ்த்தவில்லை எனலாம். இக்கட்டுரை பண்பாட்டு வகைகளைக் தமிழ்ச்சமூகத்தினை அடிப்படையாகக் கொண்டு ஆய்வினை நிகழ்த்தும் புது முயற்சியாகும். தமிழ் இலக்கியமும் பண்பாட்டு வரையறைகளும் என்ற ஆய்வுக்கட்டுரை ஒன்றை ஏற்கனவே எழுதி கருத்தரங்கில் வெளியாகியுள்ளது. அவற்றில் தமிழ் இலக்கியத்தினடிப்படையில் பண்பாட்டு வரையறைகள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இக்கட்டுரை பண்பாட்டு வகைகளை தமிழ் இலக்கிய அமைப்பினை ஒட்டி ஆய்வு செய்கிறது.

         பண்பாட்டினை அதன் தன்மை சார்ந்தும், இடச்சார்பு நோக்கியும், பின்பற்றுவோர் அடிப்படையிலும், பொருள் நிலை அடிப்படையிலும், சிறப்பிடம் பெறுதல் நோக்கியும் பலவாறாக வகைப்படுத்தலாம். இவற்றுள் ஒன்றன் பண்பு ஒன்றுடன் ஊடாடிக் காணப்படலாம். எனினும் சிறப்பு நோக்கி அவை தனி வகைகளாக இங்குக் காட்டப் பெற்றுள்ளன. அவையாவன. 1. நிலவியல்பண்பாடு, 2. முதன்மைப் பண்பாடடு, 3. எதிர்ப்பண்பாடு, 4. மாற்றுப்பண்பாடு, 5. கலப்புப் பண்பாடு, 6. உள்ளார்ந்த பண்பாடு, 7, வெளிப்படைப்பண்பாடு, 8, உகந்தநிலைப் பண்பாடு, 9. உண்மைப்பண்பாடு, 10. தனிமனிதப்பண்பாடு, 11. குழுப்பண்பாடு, 12. பொதுமைப் பண்பாடு போன்றவைகள் தமிழ்ச் சமூகத்தினடிப்படையில் ஆய்வு செய்யப்படுகின்றன.

நிலவியல்  பண்பாடு
      மனிதனுடைய பண்பாடானது அடிப்படையில் நிலவியல் சார்ந்தது. நிலத்தில் ஏற்படுகின்ற அவனுடைய வாழ்வியல் சார்ந்த பழக்க வழக்கங்களே காலப்போக்கில் பண்பாடாகப் பரிணமிக்கின்றன. அந்த வகையில் நிலவியல் சார்ந்த பண்பாடு பண்பாட்டினுடைய நிலைக்களமாக அடிப்படையாக அமைகின்றது. வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களைத் தேடி நாடோடிகளாக அலைந்த மனிதன், காலப்போக்கிலே நிலையாக ஒரிடத்தில் குடியேறக் தொடங்கினான். அந்த இடத்தினுடைய வசதி, வாய்ப்புக்களுக்கு ஏற்ப அவனுடைய வாழ்க்கை முறையை அவன் அமைத்துக் கொண்டான். குறிஞ்சி நிலத்திலே வாழ்ந்தவன் தன்னுடைய வாழ்க்கைக்குத் தேவையான  உணவிற்காக வேட்டைத் தொழிலைச்  செய்தான். காலப்போக்கி அவன் முல்லை நிலம் வந்தபோது வேட்டைச் சமூகமாக இருந்த அவன் ஆடுமாடுகனைப் பிடித்து வைக்கவும், வளர்க்கவும் பழகத் தொடங்கினான். இதன் வளர்ச்சி நிலையாக மருத நிலத்திற்கு அவன் வருகிறபோது அங்கே நல்ல வயல், நீர் கிடைத்தது அந்தச் சூழலில் அவன் தன் வாழ்க்கையை மேலும் வளமுடையதாக மாற்றினான். கடல் சார்ந்த இடங்களிலே வாழ்ந்த மக்கள் கடலைத் தங்கள் வாழ்க்கையின் ஆதாரமாகக் கொண்டனர். மீன் பிடித்தலும், உப்பு விளைவித்தலும் அவர்களுடைய வாழ்க்கை முறைகளாயின. அதனடிப்படைவில் அவர்களுடைய பண்பாடு வளரத் தொடங்கியது. இப்படி நிலம் சார்ந்து தொடங்குகின்ற இந்தப் பண்பாடே பண்பாட்டின் அடிப்படைக் களம் என்பதை நாம் உணரமுடியும். தமிழ் இலக்கியங்கள் தொடக்க காலத்திலேயே திணை அமைப்பிலான பாடல்களைக் கொண்டிருந்தன. சங்கப்பாடல்கள் அனைத்தும் திணை அடிப்படையில் அமைந்தவை. அந்த வகையில் தமிழர்களின் தொன்மைக்காலத்தை உற்றுநோக்கும் போது, அவர்களுடைய பண்பானது நிலவியல் சார்ந்ததாக அமைந்திருக்கின்றது. 

       தமிழர்களின் அகவாழ்வியலுக்கும் புறவாழ்வியலுக்கும் நிலமே அடிப்படை என்பதனை தமிழின் தொன்மை இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தின் துணை கொண்டறியலாம்.  தொல்காப்பியர் தமக்கு முந்தைய கால இலக்கண இலக்கியங்களைப் பழுதறக்கற்று அதனடிப்படையிலே தன் நூலைச் செய்தார்.  அந்நூலல் குறிஞ்சி என்ற மலைசார்ந்த நிலம் புணர்தல் என்ற ஒழுக்கத்தோடு இயைபுபடுத்திப் பேசப்படுகிறது.  அந்நிலத்திற்குரிய போராக வெட்சிப் போர் குறிப்பிடப்படுகிறது.  ‘ஆநிரை கவர்தல்‘ என்ற இந்தப் போர் முறையானது.  தமிழர்களின் வேட்டைச் சமூகப் போர் முறையைக் குறிப்பிடுகின்றது. வேட்டைச் சமூகப் பண்பாட்டிடையிருந்தவர்கள் காலப்போக்கில் தமிழ்ல் போர்முறைத் தொடக்கமாக ‘ஆநிரை கவர்தல்‘ என்ற இந்த வெட்சிப் போரை வைத்தனர்.  அந்த வகையில் தமிழர்களின் வாழ்வானது அனைத்து நிலைகளிலும் நிலம் தொடர்பாகவே அமைந்திருக்கிறது.  இவ்வகையில் உற்று நோக்கும் போது பழந்தமிழக மக்களுடைய பண்பாட்டுத் தளங்களை நாம் தெளிவாக உணர இயலும்.

“வெட்சி தானே குறிஞ்சியது புறனே“ (தொல். பொருள்.புறத்.இளம்)
         
       என்ற தொல்காப்பியத் தொடருக்கு உரை எழுதுகின்ற தொல்காப்பியத்தின் முதல் உரை ஆசிரியரான இளம்பூரணர், “வெட்சி, குறிஞ்சிக்குப் புறனாயது எவ்வாறு எனில் நிரைகோடல் குறிஞ்சிக்குரிய மலைசார்ந்த மலை நிலத்தின் கண் நிகழ்வதாலும்  அந்நிலத்தின் மக்களாயின் பிறநாட்டு ஆநிரையை களவிற்கோடல் குறிஞ்சிக்கு உரித்தாகிய களவோடு ஒத்ததாலாலும் அது புறனாயிற்று என்க. சூடும் பூவும் அந்நிலத்திற்குரிய பூவாததாலும் அதற்கு அது புறனாம்“1  என்று விளக்கம் தருகின்றார். எனவே தமிழர்களின்வாழ்வு நிலம் சார்ந்தது என்பதனையும் அந்நிலத்தின் வழியாக பலதாப்பட்ட பண்பாட்டுக் கருத்துக்கள் உருவாக இருக்கின்றன என்பதை நாம் உணர இயலும். சங்கப் பாடல்களும் இக்கருத்திற்குச் கான்றாக அமைவதையும் நாம் காணலாம்.

முதன்மைப் பண்பாடு
    முதன்மைப் பண்பாடானது “ஒரு சமுதாயத்தின் பெரும்பாலானோரால் அல்லது ஒரு நாட்டின் பெரும்பாலானோரால் கடைபிடிக்கப்படும் பண்பாடாகும்.“2  சிறு தெய்வ வழிபாட்டில் பலியிடுதல் என்பது தமிழகத்தில் பெரும்பான்மையோரால் கடைபிடிக்கப்படும் ஓர் பண்பாடாகும். இதனை முதன்மைப் பண்பாடென்று கருதலாம். முதன்மைப் பண்பாடு என்பது ‘அறம்’ மற்றும் ‘பகிர்வு’ ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

🏀யாதும் ஊரே யாவரும் கேளிர்: (புறநானூறு – 192) – உலக மக்கள் அனைவரையும் உறவினராகக் கருதும் உலகளாவிய நோக்காகும்.

🏀பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகல்: (கலித்தொகை – 133) – பண்பாடு என்பது உலக நடைமுறைகளை அறிந்து அதற்கேற்ப வாழ்வதாகும்.
ஒரு சமூகத்தின் அடிப்படை விழுமியங்கள், நம்பிக்கைகள், மற்றும் வாழ்க்கை முறையைக் குறிப்பதாகும். இது ஒரு நாகரிகத்தின் அடையாளத்தைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக விளங்குகிறது.

உட்பண்பாடு
    ஒரு சமுதாயத்தில் பல்வேறு பண்பாட்டைக் கொண்டோர் இடம்பெற்றிருப்பர் அவர்களுள் ஒரு வகையினர் அச்சமுதாயத்தினுடைய அனைத்துப் பண்பாடுகளையும் முழுமையாக கொண்டிராமல் தங்களுக்கென்று சில தனிப்பட்ட பண்புகளை மேற்கொண்டிருமப்பர் இதன்மூலம் அந்த முதன்மைப்பண்பாட்டிலிருந்து  சற்று விலகினாலும் முதன்மைப்பண்பாட்டிற்கு உட்பட்டே அவர்கள் அமைவர். அவர்களின் அப்பண்பாடு உட்பண்பாடு என்று அழைக்கப்படும். சான்றாக ஒரு சமுதாயத்திலுள்ள இளைஞர்கள் தங்களின் நடத்தை முறைகள், செயல் முறைகள், போன்றவற்றின் மூலம் அந்தச் சமுதாயத்தின் மொத்த பண்பாட்டிலிருந்து சற்றே விலகிச் சில குறிப்பிட்ட பண்புகளை, தனித்தன்மைகளைக் கொண்டவர்களாக  இருப்பர். இப்பண்பாடு இளைஞர் உட்பண்பாடு என்றழைக்கப்படும். ஒரு பெருமரத்தின் வேர்கள் மண்ணிற்குள் மறைந்திருப்பது போல, ஒரு சமூகத்தின் முதன்மைப் பண்பாட்டிற்குள் பல நுட்பமான உட்பண்பாடுகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவைதான் அச்சமூகத்தின் பன்முகத்தன்மையை (Diversity) உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.”

“வினையே ஆடவர்க்குயிரே” (குறுந்தொகை – 135)
இங்கு ‘ஆடவர்’ (ஆண்கள்) என்ற ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் செயல்பாட்டு முறையை (வினையே உயிர்) இலக்கியம் பிரித்துக் காட்டுகிறது. இது பொதுவான சமூகம் சார்ந்த பண்பாட்டிற்குள், ஒரு குறிப்பிட்ட பாலினக் குழுவிற்கான உட்பண்பாட்டு மதிப்பீடாகக் கருதப்படுகிறது.

எதிர்ப்பண்பாடு
    ஒரு சமுதாயத்தின் முதன்மைப்பண்பாட்டில் இயங்கும் உட்பண்பாடானது சில நேரங்களில் சில தனித்தன்மைகளைக் கொண்டிருப்பதோடு அந்த முதன்மைப்பண்பாட்டிற்கு நேர்எதிராக அமைவதற்கும் வாய்ப்புண்டு.  அந்நிலையில் அப்பண்பாடானது ‘எதிர்ப்பண்பாடு‘ என்றழைக்கப்படுகிறது.  புலால் உணவு உண்ணுதல் என்ற பண்பாட்டினையுடைய ஒர் இனக்குழுவில் சிலர் பிற கொள்கைகளால் சைவ உணவு முறைக்கு மாறியிருப்பர்.  அந்நிலையில் அவர்களுடைய அந்தச் சைவ உணவு முறைக்கு மாறியிருப்பர்.  அந்நிலையில் அவர்களுடைய அந்தச் சைவ உணவு முறை என்ற உணவுப்பண்பாடானது புலால் உண்ணுதலென்ற முதன்மைப் பண்பாட்டிற்கு எதிர்ப்பண்பாடாகும்.

“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்”
    என்ற அவரது வரிகள், நிலவிய வன்முறை கலந்த பண்பாட்டிற்கு எதிரான ஒரு கருத்தியல் புரட்சியாகும். இது சமூகத்தின் பரிணாம வளர்ச்சிக்கு ஒரு உந்துசக்தியாக அமைகிறது.

மாற்றுப்பண்பாடு
       ஒரு சமுதாயத்தில் முதன்மைப் பண்பாட்டினை மேற்கொள்வோரில் சிலர், சில காரணங்களுக்காக அந்த முதன்மைப் பண்பாட்டினுடைய உட்பண்பாட்டில் ஒரு பண்பாட்டிற்கு மாற்றாக மற்றொன்றினைக் கைக்கொண்டிருப்பர்.  இந்நிலையில் இப்பண்பாடானது மாற்றுப்பண்பாடு என்றழைக்கப்படும் சான்றாக மட்டைப்பந்தாட்டம் ஆடுவோரில் (Cricket) சிலர் பாதுகாப்புக்கருதி மட்டைப் பந்தாட்டத்திற்குரிய பந்தினை விடுத்து பூப்பந்தாட்டத்திற்குரிய (Tennis) பந்தினைக் கொண்டு மட்டைப்பந்தாடுவர்.  இந்நிலையில் மட்டைப்பந்தாட்டத்தில் பூப்பந்தாட்ட பந்தினைக் கொண்டு ஆடுவதென்பது ஒரு மாற்றுப் பண்பாடென்று கருதலாம். தமிழ் அறிஞர்கள் சுட்டிக்காட்டும் ஒரு முக்கிய மாற்றம் வழிபாட்டு முறையில் நிகழ்ந்தது. சிலைகளுக்கோ அல்லது உருவங்களுக்கோ பூசை செய்வது ஒரு ‘முதன்மைப் பண்பாடு’ என்றால், அதற்கு மாற்றாக அறிவைப் போற்றும் விதமாக ஒளியை (தீபத்தை) மட்டும் வழிபடுவது ஒரு மாற்றுப் பண்பாடாக உருவெடுத்தது. உருவ வழிபாட்டை விடுத்து ‘அருட்பெருஞ்ஜோதி’ என்ற ஒளியை வழிபடச் சொன்னது, நிலவும் வழிபாட்டுப் பண்பாட்டிற்கு அவர் முன்வைத்த ஒரு சிறந்த ‘மாற்றுப்பண்பாடு’ ஆகும்.

கலப்புப் பண்பாடு
     பல்வேறு வகைப்பட்ட பண்பாடுகளைக் கொணடிருக்கின்ற மக்கள் ஒன்றியைந்து ஓரிடத்தில் வாழும் போது தோன்றுகின்ற பண்பாட்டினைக் கலப்புப் பண்பாடு என்று அழைப்பர்.  கலப்புப் பண்பாடு என்பது தனித்த அடையாளங்களை அழிப்பதல்ல, மாறாகப் பல வண்ணங்கள் சேர்ந்து ஒரு அழகான ஓவியமாக மாறுவது போன்றது. சான்றாக, சென்னை போன்ற பெருநகரங்களில் பல்வேறு வகைப்பட்ட மொழி. பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் இணைந்து வாழ்வதைப் பாரதியார் தனது பாடல்களில் ஒரு ஒருமைப்பாட்டுப் பண்பாடாகப் பார்க்கிறார்.

“முப்பது கோடி முகமுடையாள் – உயிர்
மொய்ம்புற வொன்றுடையாள் – இவள்
செப்பு மொழி பதினெட்டுடையாள் – எனிற்
சிந்தை யொன்றுடையாள்” – பாரதியார்
      வெவ்வேறு மொழிகள் (பதினெட்டு மொழிகள்) பேசும் மக்கள் இருந்தாலும், அவர்கள் இந்தியர் அல்லது தமிழர் என்ற ஒரு பண்பாட்டுப் புள்ளியில் இணைவதைக் கலப்புப் பண்பாட்டின் ஒரு வடிவமாக நாம் கொள்ளலாம்.

உள்ளார்ந்த பண்பாடு
     மக்கள் மனத்தில் பதிந்துள்ள பண்பாட்டு விதிகளின் அடிப்டையிலான நடத்தை முறைகளின் தொகுப்பே உள்ளார்ந்த பண்பாடாகும்.  சமுதாயத்தில் நிகழும் நில நிகழ்ச்சிகளின் வழியே இவற்றை உணர இயலும் மனத்தளவில் வெளிப்படையாக இவை தெரிவதில்லை புறநிகழ்ச்சிகள் மூலமாகவே இவை வெளிப்படுகின்றன.  எனவே இவ்வகைக் கூறுகளின் தொகுப்பு ‘உள்ளார்ந்த பண்பாடு‘ என்று மானிடவியலாளரால் அழைக்கப்படுகின்றது.
திருவள்ளுவர் ‘பண்புடைமை’ அதிகாரத்தில், வெளியே தெரியாத ஆனால் மனிதனை மனிதனாக மாற்றும் அகப்பண்புகளைப் பற்றிப் பேசுகிறார்.

“அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்” (குறள் – 991)
         
     அன்பு வைத்திருப்பதும், நல்ல குடிப் பண்புகளைக் கொண்டிருப்பதும் ஒருவனிடம் இயல்பாகவே (உள்ளார்ந்த நிலையில்) இருக்க வேண்டிய பண்புகள். இவை அவன் பிறரோடு பழகும் போதுதான் வெளியே தெரியும் என்கிறார். உள்ளார்ந்த பண்பாடு என்பது ஒரு மனிதனின் ‘மனச்சாட்சி’ மற்றும் ‘சமூக ஒழுக்கம்’ இணைந்து உருவாக்கும் ஒரு மென்பொருள் (Software) போன்றது.

வெளிப்படை பண்பாடு
     ஒரு சமுதாயத்தின் நடத்தை முறைகளை வெளிப்படுத்தும் கூறுகள் அனைத்தும் இதனுள் அடங்கும், பெரும்பாலும் பொருள்சார் பண்பாட்டுக் கூறுகளால் அறியப் பெறுபவை அனைத்தையும் வெளிப்படைப் பண்பாடு என்று கொள்வது பொருத்தமுடையது. உள்ளார்ந்த பண்பாடு வெளிப்படை பண்பாடு ஆகிய இரண்டும் இணை நிலையில் அமைவனவாகும்.  “இவை ஒன்றோடொன்று தொடர்புடையவாதலின் இவற்றை இணைத்தே பார்க்க வேண்டும் என்று கூறுவாறுமுண்டு“3 எனினும் இவை இரண்டிற்குமிடையிலே அடிப்படை வேறுபாடுகள் நுட்பமாகக் காணப்படுவதால் இவற்றை தனித்து நோக்குவதே சிறந்த முறையாகத் தோன்றுகிறது.  அந்நுட்பமாக வேறுபாட்டை பிரித்தறிவோமாயின் உள்ளார்ந்த பண்பாடேன்பது மக்களின் மனதில் இடம் பேற்றுள்ள விதிகளின் அடிப்படையில் நிகழும் நடைமுறையென்றும் வெளிப்படைப் பண்பாடு பொருள் சார் கூறுகளால் வெளிப்படக் கூடியதாதலாலும் இவை தனித்தனி வகையின் என்று கொள்வது பொருத்தம்.

உகந்த நிலைப்பண்பாடு
  மக்கள் தங்களுடைய வாழ்வில் பின்பற்றத் தகுந்த நெறிமுறைகள்.  இவை, பின்பற்றத்தகாதெனப்பட்டுள்ளன.  இவையே உகந்தநிலை பண்பாடு என்றழைக்கப்படும்.  உகந்தநிலை பண்பாடு என்ற தொடரை விட இதனை குறிக்கோள் நிலைப்பண்பாடு என்று அழைப்பது பொருத்தமுடையதாகத் தோன்றுகிறது.  திருக்குறளில் வள்ளுவர் உகந்தநிலை பண்பாடு பற்றிய பாட்டோன்றினை செய்துள்ளார்

ஊழில் உட்பக்கமும் காண்பர் ……….. (குறள்)
         
      என்ற குறளில் அவர் உகந்தநிலைப் பண்பாட்டினைச் சுட்டியுள்ளார்.  ஊழ் என்பது மிகவும் வலியது அதனை வெல்வதற்கு முடியாது என்ற கருத்து ஒன்று மக்கள் மனதில் இருந்தாலும் அதனை வென்று முடிப்பவர் தாராத முயற்சி செய்பவர் என்ற ஒரு குறிக்கோளனை அவர்தம் பாடலில் சொல்லுகின்றார்.  எனவே இது ‘உகந்தநிலை பண்பாட்டிற்கு‘ அதாவது குறிக்கோள் நிலைப் பண்பாட்டிற்குச் சான்றாக விளங்குகின்றது.

பொதுமைப் பண்பாடு
     உலகிலுள்ள அனைத்துப் பண்பாடுகளையும் ஒரு சேர நோக்கும் போது அவற்றிற்கிடையே சில பொதுமைக் கூறுகளைக் காணமுடியும்.  இவையே பண்பாட்டுப் பொதுமைகள் என்றழைக்கபப்டுகின்றன.  அனைத்துப் பண்பாடுகளுக்கிடையே பண்பாட்டு பொதுமைகள் காணப்படுவதற்குக் காரணம் மனிதனுடைய அடிப்படைப் தேவைகளாகிய உணவூட்டல், உறுப்பினர்களை நெறிப்படுத்துதல், பாதுகாப்பளத்தல் இனத்தின் நிலைபேறுடைய தன்மைக்கு வழிகோலுதல் இளம்பிள்ளைகளைப் பண்பாட்டு வயமாக்கள் போன்றவை ஒரு சில பண்பாட்டிற்கு மட்டுமே உரியவை என்றல்லாமல் அனைத்துப் பண்பாட்டினருக்கும் இன்றியமையதானவையாக உள்ளன.  இவையே பண்பாட்டுப் பொதுமைகள் ஏற்படுவதற்குக் காரணங்களாக அமைகின்றன.

     பண்பாட்டுப் பொதுமைகள் ஒவ்வொறு பண்பாட்டிலும் வெவ்வேறு நிலைகளில் மாறுபட்டுக் காணப்படுவதுமுண்டு.  இயற்கைச் சூழலும் சமுதாயச் சூழலும். இதற்குக் காரணங்களாகும்.  பண்பாட்டுப் பொதுமைகளைப் பற்றி முதன்முதலில் சிந்தித்தவர்களுள் கிளாக்விஸ்லர் (Clark Wissler) குறிப்பிடத் தகுந்தவராவார்.  அவர் பண்பாட்டுப் பொதுமைகளைப் பண்பாட்டுத்திட்டம்  (Culture Scheme) என்று குறிப்பிடுகின்றார்.  1. மொழி 2. உணவு, வீடு. போக்குவரத்துச் சாதனங்கள், உடை. கருவிகள், பொருள்கள், தொழில்கள், 3. கலை, 4. மரபுக கதைகள் 5. சடங்குகள், மூடநம்பிக்கைள் 6. குடும்பம். திருமணம். சமுதாயக் கட்டுப்பாடு. விளையாட்டுகள், பிற தொடர்புடைய சமுதாய நிறுவனங்கள். 7. சொத்துப் பரிமாற்றமுறைகள் வணிகம் 8. அரசு, சட்டம் 9. போர் என்ற ஒன்பது வகையான பொதுமைக் கூறுகளை எடத்துரைக்கிறார். இவரைப் போல் பல அறிஞர்கள் கூறும் பொதுமைக் கூறுகளும் இந்த ஒன்பது வகைக்குள்ளேயே பெரும்பாலும் அடங்குவதை அறிய முடிகிறது.
முடிவுரை
     பண்பாட்டு வகைகளை நுட்பமாக ஆராய்ந்து அவற்றைத் தமிழ்ச் சூழலுக்குப் பொருத்தி விளக்கும்போது, அக்கருத்துக்கள் மிகவும் தெளிவுபெறுகின்றன. சங்க இலக்கியங்கள், திருக்குறள், தமிழ் சமூகத்தின் இன்றைய பண்பாட்டு கூறுகளோடு இணைத்துப் பார்க்கும் போது பண்பாட்டு வகைகளை நன்கு விளக்கவும் முடிகிறது, நன்கு விளங்கவும் முடிகிறது. பண்பாடு என்பது ஒரு தேக்கமடைந்த நிலையல்ல; அது நிலவியல் அடிப்படையில் தொடங்கி, சமூகத் தேவைகளுக்கேற்ப உட்பண்பாடாகவும், எதிர்ப்பண்பாடாகவும், மாற்றுப்பண்பாடாகவும் பரிணமிக்கின்றது. சங்க இலக்கியத்தின் திணைக் கோட்பாடு ‘நிலவியல் பண்பாட்டிற்கும்’, வள்ளலாரின் சிந்தனைகள் ‘எதிர்ப்பண்பாட்டிற்கும்’, சென்னையின் வளர்ச்சி ‘கலப்புப் பண்பாட்டிற்கும்’ சிறந்த சான்றுகளாக அமைவதை இக்கட்டுரை நிறுவியுள்ளது. இத்தகைய ஆய்வுகள், மேலைநாட்டுக் கோட்பாடுகளைத் தமிழ்ச் சமூகத்தின் வேர்களோடு இணைத்துப் புரிந்துகொள்ளப் பெருந்துணையாக அமையும்.

சான்றெண் விளக்கம்
1.பதிப்புத்துறை (பதி.  ஆ)தொல்காப்பியம் புறத்திணையில் உரைவளம். ப. 5 (தமி)ரு.

2.பக்தவச்சலபாரதி, பண்பாட்டு மானிடவியல், ப.150

3.மேலது, ப.169

4.மேலது, ப.171-173

5.இளம்பூரணர் உரை, தொல்காப்பியம் – பொருளதிகாரம், புறத்திணையியல், நூற்பா 1-இன் விளக்கம்.

6.பண்பாட்டு வரையறை, சமூகவியல் மற்றும் மானுடவியல் கலைச்சொல் விளக்கங்கள்.

7.உள்ளார்ந்த மற்றும் வெளிப்படைப் பண்பாடு, பண்பாட்டு மானுடவியல் கோட்பாடுகள் குறித்த ஒப்பாய்வு.

பார்வை நூல்கள்
1.தொல்காப்பியம் – பொருளதிகாரம் (இளம்பூரணர் உரை), சாரதா பதிப்பகம், சென்னை.

2.புறநானூறு, மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

3.கலித்தொகை, சங்க இலக்கியத் தொகுப்பு.

4.திருக்குறள், பரிமேலழகர் உரை, கழக வெளியீடு.

5.பாரதியார் கவிதைகள், பாரதி பதிப்பகம்.

6.பரமசிவன், தொ., பண்பாட்டு அசைவுகள், காலச்சுவடு பதிப்பகம்.

7.அகத்தியலிங்கம், ச., தமிழர் பண்பாடு, மணிவாசகர் பதிப்பகம்.

 

Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர்அ. ரஞ்சனி
உதவிப்பேராசிரியர்,
 தமிழ்த்துறை,
சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரி,
திருச்சிராப்பள்ளி – 620002.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here