Abstract
Tamil Nadu has been ruled by different rulers at different times. When they all embark on a mission to expand their borders, there is a war with other countries. The administration of the country is not merely about expanding borders of waging war; It is also in the interest of the people of the country to redress their grievances, establish justice and increase their prosperity. A good leader is a one who considers the welfare of the people of his own. In this context, the main idea of this article is to know how the administration was in the Palayappattu administration established by the Nayaks through the Novel Sool.
Keywords: Ettappan, Palayappattu, Ettaiyapura Palayam, Justice, Respect.
சூல் புதினத்தில் பாளையப்பட்டு ஆட்சிமுறை
ஆய்வுச் சுருக்கம்
தமிழகத்தை வெவ்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு ஆட்சியாளர்கள் ஆண்டுள்ளனர். அவர்கள், அனைவரும் தங்கள் எல்லைகளை விரிவாக்கும் பணியில் இறங்கும்போது, பிற நாடுகளுடன் போர் ஏற்படுகிறது. நாட்டின் நிர்வாகம் என்பது வெறும் எல்லையை விரிவுபடுத்துவதோ போரை நடத்துவதோ மட்டுமல்ல; நாட்டு மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு அவர்களின் குறைகளைக் களைதல், நீதியை நிலைநாட்டல் மற்றும் வளத்தைப் பெருக்குதல் ஆகியவையும் ஆகும். நல்ல தலைவன் என்பவன் மக்கள் நலனையே தன் நலனாகக் கொள்வான். அந்த வகையில், நாயக்கர்கள் ஏற்படுத்திய பாளையப்பட்டு ஆட்சிமுறையில் நிர்வாகம் எவ்வாறு இருந்தது என்பதை சூல் புதினத்தின்வழி அறிவதே இக்கட்டுரையின் மையக்கருத்தாகும்.
குறியீட்டுச் சொற்கள் : எட்டப்பன், பாளையப்பட்டு, எட்டையபுர பாளையம், நீதி, மதிப்பு.
முன்னுரை
மக்களின் வாழ்க்கை முறைகளை எதார்த்தமாக எடுத்துக்கூறுவதே, வட்டாரப் புதினங்களின் சிறப்பு ஆகும். சூல் புதினம், எட்டையப்புரப் பாளையத்திற்கு உட்பட்ட மக்களின் வாழ்வியலைக் கூறுகிறது. இம்மக்களின் வாழ்வோடு ஒன்றிப்போன கண்மாய் பற்றிக் கூறுகிறது. எட்டையபுர பாளையத்தின் தலைவர்களான எட்டப்பர்களின் ஆட்சிமுறைகளையும் அவர்கள் தங்கள் நாட்டு மக்களின்மீது கொண்டிருந்த அன்பும், மக்கள் மன்னர்மீது கொண்டிருந்த மதிப்பும், பற்றும் இப்புதினம் வாயிலாக சிறப்பான முறையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
சூல்
சோ. தர்மனின் சூல் எனும் புதினம் சாகித்திய அகாடமி உள்ளிட்ட நான்கு விருதுகளைப் பெற்றுள்ளது. சோவியத் நாட்டைச் சேர்ந்த பிரஷ்னேவ் என்பவர் எழுதிய தரிசுநில மேம்பாடு எனும் நூலில் இடம்பெறும் ஒரு நிகழ்வின் உந்துதலாலேயே இப்புதினம் உருவானது என, சோ. தர்மன் அவர்கள் குறிப்பிடுகிறார். புதினம், உருளைக்குடி எனும் ஊரின் வரலாறு குறித்து கூறும் விதமாக அமைகிறது. இந்திய விடுதலைக்கு முன் உருளைக்குடியின் நிலை மற்றும் விடுதலைக்குப் பின் அதில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இப்புதினம் பல தலைமுறைகளின் கதையை உள்ளடக்கியது.
உருளைக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டிக்கு அருகில் உருளைக்குடி எனும் ஊர் அமைந்துள்ளது. அந்த ஊரில் வாழ்ந்த பல தலைமுறையினரை இப்புதினம் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. கற்பனை கதை தான் ஆயினும் மக்களின் வாழ்வியலை எதார்த்தமான நிகழ்வுகளோடு ஒன்றிணைக்கின்றார்.
கதையின் போக்கு
உருளைக்குடி கண்மாய் உருளைகுடிக்கு மட்டுமல்லாது சுற்றி இருக்கும் அனைத்து ஊர்களுக்கும் குடிநீர் ஆதாரமாக இருக்கிறது. அத்தகைய கண்மாயை குடிமராமத்து செய்யும் காட்சியில் இருந்தே புதினம் தொடங்குகிறது. அவ்வூர் மக்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் வழிபாடுகள் ஆகியவை மிகவும் எளிய மற்றும் வட்டார மொழியில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. நிறைமாதப் பெண் போல கண்மாய் காட்சி அளிக்கிறது. அதை மையப்படுத்தியே கதை நகர்கிறது. இந்திய விடுதலைக்குப் பின்னர் கண்மாய் எவ்வாறு அழிந்தது, மற்றும் அதற்கான காரணிகள் என்னென்ன, என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது. கண்மாயின் அழிவு ஊரின் அழிவுக்கு எந்த விதத்தில் காரணமாக அமைகிறது என்பதை சூல் புதினம் பேசுகிறது. மன்னராட்சி , மக்களாட்சி இரண்டிலும் இருக்கும் நிறை மற்றும் குறைகளை சொந்த அனுபவம் போல பேசுகிறார் சோ. தர்மன்.
பாளையப்பட்டு ஆட்சிமுறை
முகலாய மன்னர்களின் வீழ்ச்சியில் அடிகோலிடப்பட்டதே நாயக்கர் ஆட்சி ஆகும். ஹரிஹரன் எனும் அரசன் தன்னை தன்னாட்சி பெற்றதாக அறிவித்து முதன்முதலில் கி.பி.1336-இல் விஜயநகர அரசை தோற்றுவித்தான். அவனுக்குப் பிறகு நான்கு மரபுகளை சேர்ந்தவர்கள் விஜயநகர பேரரசை ஆட்சி செய்தனர். நாயக்க மன்னர்களின் ஆட்சி தென்னாட்டிலும் விரிவு பெற்றது. கி.பி.1529- இல் தமிழகத்தில் நாயக்கராட்சி தொடங்கியது. இவர்களுள் 13 பேர் தமிழகத்தை ஆண்டனர். அவர்களுள் குறிப்பிட தக்கவராக விளங்குபவர் மதுரையை ஆண்ட விசுவநாத நாயக்கர் ஆவார். இவர் தனது தளவாயான அரியநாதன் என்பவரின் அறிவுரைப்படி பாளையப்பட்டு எனும் ஆட்சிமுறையை அறிமுகப்படுத்தினார். இவ்வாட்சிமுறை ஏற்கனவே காகதீய அரசன் இரண்டாம் பிரதாபருத்ரன் என்பவனால் கடைபிடிக்கப்பட்டிருப்பினும், தமிழகத்தில் அதுவே முதன்முறை ஆகும். அவ்வாறு பிரிக்கப்பட்ட 72 பாளையங்களுள் ஒன்றாக விளங்குவதே எட்டைய புரம்.
எட்டையபுரம்
தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்திருந்தது எட்டயபுரம் பாளையம். இதன் ஆட்சியாளராக இருந்தவர்கள் எட்டப்பன் எனும் அடைமொழியால் அழைக்கப்பட்டனர். அந்த பெயருக்கும் ஒரு கதை கூறப்படுகிறது. ஆந்திர மாநிலம், சந்திரகிரி பகுதியில் ஆட்சி செய்து வந்த குமாரமுத்து நாயக்கரின் மகனான நல்லம நாயக்கர், விஜயநகரத்தை ஆண்ட சாம்பு மன்னனை சந்திக்க சென்ற போது, அங்கு வடக்கு வாயிலை காவல்காத்த, யாராலும் வீழ்த்த முடியாத, சோமன் எனும் மல்யுத்த வீரனைக் கொன்று, வென்று வேரெந்த பற்றுக் கோடும் இன்றித் தவித்த, அவனது எட்டு தம்பியரையும் தன் மகன்களாக ஏற்றுக் கொண்டமையின் ’எட்டு அப்பன்’ என்பது காரணப் பெயராயிற்று. பின்னர், அவன்வழி வந்தோர்க்கும் அதுவே பெயராயிற்று. எனவே, எட்டப்பன் என்பது ஒரு தனி மனிதனின் பெயர் அல்ல. அது ஒரு குடிவழியினரின் பெயர். சூல் புதினம் உருளைக்குடி ஊரானது எட்டப்ப வழியினர் ஆட்சி செய்த எட்டையபுர ஆட்சியின் கீழ் எவ்வாறு இருந்தது என்பதை கூறும் விதமாக அமைந்துள்ளது.
பாளையக்காரர்களின் கடமைகள்
பாளையக்காரர்களின் கடமைகளாக 3 பொறுப்புகள் கொடுக்கப்பட்டன. அவை,
1.நிதித்துறை
மக்களிடம் வரி வசூலிக்கும் பொறுப்பு, பாளையக்காரர்களிடம் கொடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் வசூலித்த வரியில் மூன்றில் ஒரு பங்கு, மதுரை நாயக்க மன்னனுக்கு அனுப்பப்பட்டது. ஒரு பங்கு படைக்கும், மற்றொரு பங்கு, நிர்வாகச் செலவிற்கும் பயன்பட்டது.
2.நீதித்துறை
பாளையத்தின் எல்லைக்குள் நடக்கும் எந்த ஒரு வழக்கையும் பாளையக்காரர்களே விசாரித்து நீதி வழங்கலாம். இதில், நாயக்க மன்னர்கள் தலையிடுவதில்லை.
3.படை பராமரிப்பு
பாளையக்காரர்கள் படைகளைப் பராமரித்தனர். அதற்காக வரிப்பணத்தில் மூன்றில் ஒரு பங்கை செலவிட்டனர். நாயக்க மன்னர்களுக்கு தேவை ஏற்படும் போது, படையை அளித்து உதவ வேண்டும். இவை மூன்றும் பாளையக்காரர்களின் முதன்மையான கடமையாக இருந்தது.
சூல் புதினத்தில் எட்டப்பர்களின் ஆட்சிமுறை
எட்டப்பர்களின் ஆட்சிக்காலத்தில், பாளையக்காரர்கள் நாயக்க மன்னர்களுக்குக் கீழ் இல்லாமல், தனியாக ஆட்சி செய்து வந்தனர். மக்கள், பாளையக்காரர்களை மகாராஜா என்றே அழைத்துவந்துள்ளனர். மகாராஜாவின் நேரடி ஆட்சியின் கீழ், அனைத்து ஊர்களும் இருந்துள்ளன. ஊரின் அனைத்து பொது நடவடிக்கைகளும் மன்னனின் பார்வைக்கு எடுத்து செல்லப்படுகிறது. எட்டையபுரத்தின் ஆட்சியின் கீழ் இருந்த ஒரு ஊர் சொக்கலிங்கபுரம். தனது சொந்தப்பகையின் காரணமாக சித்தாண்டி என்பவன், கண்மாயை உடைத்து விடுகிறான். இதை அறியாத ஊரார் அதனை தெய்வக்குற்றம் என்றே கருதுகின்றனர். அது உடனடியாக மன்னனின் பார்வைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. “ அட கடவுளே, பெரிய ஓடையாப் போச்சே கரை, எப்பிடி அடைக்க, மகாராசா என்ன சொல்றாரோ! ” ஊர் நலனுக்கு வேண்டிய நடவடிக்கைகள் உடனே எடுக்கப்பட்டன. “ உடைப்புக்கு நேராக கரையின் மேலேறி கண்மாயின் உள் வாகரையை ஆராய்ந்தது அதிகாரிகள் குழு… பக்கத்து ஊர்களில் உங்கள் ஊருக்கு ஏதும் பகை உண்டா என்றும் விசாரித்தார்கள்… உடைப்பை அடைத்துக் கண்மாய்க்கரையைப் பழையபடிக்கு கொண்டு வருவதற்கு எத்தனை ஆட்களின் உழைப்பு தேவைப்படும் என்று கணக்குப் போட்டார்கள்… நாளையே வேலையை ஆரம்பித்துவிடுங்கள் என்றும், மடைக்குடும்பனையும் இன்னும் சில நபர்களையும் வரச்சொல்லி, மகாராசா கொடுக்கும் தொகையை வாங்கிக்கொள்ளச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார்கள்.” மக்கள், தங்களுக்கு வேண்டியவற்றைப் பெற எப்போது வேண்டுமானாலும் அரண்மனை அதிகாரிகளையும், மிக அவசியமான நேரங்களில் மன்னனையும் கூடச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தனர். மக்களின் தேவையை அறிந்தே மன்னனும் செயல்பட்டான்.
எட்டையபுர மக்கள், மன்னன் மீது பயம் மட்டுமின்றி மரியாதையையும் அன்பையும் வைத்திருந்தனர் என்பதை அறிய முடிகிறது. எனவே, மக்கள் இயல்பாகவே மன்னனுக்கு விசுவாசமாக இருந்தனர். “ கட்டபொம்முவோட ஆட்க ஒங்க ஊருக்கு வரப்போக இருக்கிறதா அரண்மனைக்குத் துப்பு கெடச்சிருக்கு. அத வெசாரிக்கத் தான் ராஜா எங்கள அனுப்பியிருக்காரு.” “ தப்பு சாமி. நம்ம மகாராஜாவுக்கு துரோகம் பண்ணுவமா? அப்பிடி எங்களுக்குத் தெரியாம யாராவது தொடர்பு வச்சிருந்தா நாங்களே புடிச்சி அரண்மனையில ஒப்படைச்சிர மாட்டமா சாமி.” “ அரண்மனைக்குள்ள ஆயிரம் இருக்கும், எப்பிடி இருந்தாலும் அவரு தான் நமக்கு ராசா. இந்தா இந்த கண்மாய் யாரு கண்மா, இந்தக் கரையில இருக்கிற பனைக யாரு பனை எல்லாமே ராசாவுக்கு சொந்தம். அவரு பனையில கள் எறக்கி, பதநீர் எறக்கி, அவரு வயக்காட்டுல பாடுபட்டு சாப்பிட்டுட்டு அவருக்கு துரோகம் பண்ணக்கூடாதுடா, அது பெரிய பாவம்.” செயலால் மட்டுமின்றி, மனதால்கூட மன்னனுக்கு எதிரான எதையும் நினைக்கக் கூடாது என மக்கள் எண்ணியதை இத்தகைய சொற்களால் அறிய முடிகிறது.
எட்டப்பன் மற்றும் ஆங்கிலேயர் உறவு
இந்தியா ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்த வேளையில், எட்டப்ப மன்னன், ஆங்கிலேயருடன் நட்பு பாராட்டினான். இது வரலாற்றில் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆயினும் சூல் புதினத்தில் எந்த ஒரு இடத்திலும் ஆங்கிலேயர், தன் மக்களை துன்புறுத்த மன்னன் அனுமதித்தாக தெரியவில்லை. அதேபோல், அரண்மனை வீரர்களும் தேவையின்றி மக்களை துன்புறுத்தவில்லை. மாறாக, ஆங்கிலேயர்கள் மூலமாக தன் நாட்டிற்குத் தேவையான பல நன்மைகளைக் கொண்டு வந்தான். “ கள்ளிக்கும் கரிசல் மண்ணுக்கும் கொண்டாட்டம். கள்ளிச் செடிகளை அகற்ற வழி தெரியாமல் சம்சாரிகள் சங்கடப்பட்டார்கள்… வெட்டிய கள்ளிகள் முளைத்துக்கொண்டன. சம்சாரிகள் தினமும் கள்ளியுடன் மல்லுக்கட்டினார்கள்.” “ இவன் லண்டன்லருந்து இங்க வந்து பத்து நாள் தான் ஆகுது, பெரிய ஆராய்ச்சியாளனாம். இந்த கள்ளிச் செடிப் பொதர்க் காடு பூராவும் பெருகிப் போச்சு,… கள்ளிய ஒழிக்க புதுசா மருந்து கண்டு பிடிக்கிறதுக்காக சீமையிலருந்து ராணி இவன இங்க அனுப்பி வச்சிருக்கு.” மக்களும் மன்னனை முழுவதுமாக நம்பினார்கள். “ ஆமா, இது பூராவும் பூச்சிகளோட முட்டைக. இதுகள லண்டண்லருந்து நம்ம நாட்டுக்கு கொண்டாந்திருக்காம்னு அரண்மனைல பேசிகிட்டாக. நம்ம நாட்லயே கள்ளிச்செடி துப்புரவா இருக்காதாம், அம்புட்டும் பட்டு போயிருமாம்.” “ வேற வெள்ளாமைய சோலிய முடிச்சிரக் கூடாது, அதயும் பாக்கணுமில்ல…” “ சே… சே… ராசா அதையெல்லாம் வெசாரிக்காம இருப்பாகளா? அப்பிடி இருக்காது.” மன்னன், மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டமை இவ்வரிகளில் விளங்குகிறது. தன் நாட்டிற்கும் தன் மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் எதையும் மன்னன் அனுமதிக்கவில்லை என்பதை மக்களின் சொற்கள் மூலம் அறியலாம். மன்னன் மீதான மரியாதை இப்போதும்கூட தொடர்வதைக் காண முடிகிறது.
மக்கள் நலன்
விவசாயிகளுக்கு இடையூறாக இருக்கும் கள்ளிச்செடிகளை அழிக்க ஆங்கிலேயர் உதவிகொண்டு நடவடிக்கை எடுத்ததே மக்கள்நலனில் எட்டப்ப மகாராஜா கொண்டிருந்த பற்றைக் காட்டுகிறது. மக்கள் பயன்பாட்டிற்காக வெட்டப்பட்டிருந்த குடிதண்ணீர் குளத்தை யாரும் அசுத்தப்படுத்தக்கூடாது. அவ்வாறு, செய்தால் அதற்கு தண்டனை கடினமானதாக இருக்கும். எனவே, அவ்விடத்தில் எப்போதும் காவலர்கள் இருப்பார்கள். ஆனால், குளத்தினுள் ஒரு கெட்ட ஆவி புகுந்துள்ளதை அறிந்த குஞ்ஞான் அதை பிடிப்பதற்காகச் செல்லும்போது, அங்கு காவலுக்கு நின்ற வீரர்கள் அவனைப் பிடித்து அரசனிடம் கொண்டு சென்றனர். விசாரணையின்போது அவன் கூறிய அனைத்தையும் கட்டுக்கதைகள் என நினைத்த அரசன் அவனை சிறையிலிட்டான்.
நீதி
சில சிறப்புமிக்கத் தீர்ப்புகள் மற்றும் தண்டனைகள், இலக்கியங்களில் காணப்படுகின்றன. அவற்றுள், சிலப்பதிகாரத்தில் பாண்டியன் கூறியத் தீர்ப்பினை மிக முக்கிய ஒன்றாகக் கொள்ளலாம். இதில் சிறப்பு என்னவெனில், பாண்டியன் தன் தவறை மறைக்க எண்ணாது அதனை உணர்ந்து, அதற்காகத் தன் உயிரையே விட்டான். அதுபோல, ஒரு மன்னன் தான் செய்தது தவறு என்று உணரும்போது, தனது அதிகாரத்தின் வலிமையினால் அதனை மறைக்க முனையாமல், அத்தவறினை நினைத்து வருந்துதல் என்பது, ஒரு அரசனின் ஒரு உயரியப் பண்பாகும். அவ்வுயரியப் பண்பினை சூல் புதினத்தில் எட்டப்ப மகாராஜா பெற்றிருந்ததாக சோ.தர்மன் குறிப்பிடுகிறார். “ மன்னரின் முகக் கலவரம் மாறி சந்தோஷக்களை தெரிந்தது. உத்தரவுகள் பறந்தன. மேலெல்லாம் ரத்தத் திட்டுக்கள் உறைந்திருக்க குஞ்ஞான் நொண்டியபடியே அழைத்துச் செல்லப்பட்டான். அவனைச் சித்ரவதை செய்ததை நினைத்து வருந்தினான்.” மன்னன் தவறு செய்யாத ஒருவனை சிறையிலிட்டதற்காக வருந்தியதைப் பார்க்க முடிகிறது. தான் செய்தத் தவறைத் திருத்திக் கொள்ளும் வழியையும் அவன் தேடினான்.
மக்கள் உயிர் மட்டுமின்றி மற்ற உயிர்களுக்கு உற்ற துன்பத்திற்கும் நீதி கிடைத்தது எட்டையப்புரத்தில். அரண்மனையில், பசுக்களைப் பராமரிக்கும் பணியில் இருந்த நங்கிரியான், தனக்கு இறைச்சி உண்ணும் ஆசை மேலிடும்போதெல்லாம், தனது பராமரிப்பில் இருந்தப் பசுக்களை ஒரேடியாக அல்லாமல் அவை அணுஅணுவாக கொடுமை அனுபவித்து சாகும்படி செய்து, அதை இயற்கை மரணமாக அனைவரையும் நம்பச் செய்து, அக்கறியைத் தின்றான். இதை அவன் போதையில் உளறியதும், உடனே, மன்னனின் காதுகளில் அது விழுந்தது. அவன் கைகளிரண்டும் கட்டப்பட்டு சிறையிலடைக்கப் பட்டான். “புறங்கை கட்டப்பட்டுத் தனியறையில் அடைபட்டுக் கிடந்தான் நங்கிரியான். விடிந்தால் மரணம் நிச்சயம்…. இதுவரை மன்னரின் முகத்தில் இப்படியொரு கோபத்தைப் பார்த்ததே இல்லை. சிவந்த முகம் மேலும் சிவந்து பழுக்கக் காய்ச்சிய இரும்பைப் போல் கொதித்துக்கொண்டிருந்தது.” அவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என மன்னன் விரும்பிய போதும், அமைச்சரின் அறிவுரைப்படி, அவனது வேலை மட்டுமே பறிக்கப் பட்டது. இருப்பினும், அவன் பசுக்களைக் கொன்ற விதம் குறித்து சொன்ன வாக்குமூலம், மன்னனைக் கலங்கவைத்தது. அதன் நிலையை எண்ணி வருந்தினான்.
ஒவ்வொரு ஊர்களிலும் தலைவர்கள் இருந்தனர். இவர்கள் தங்கள் ஊர்களில் ஏதேனும் சிறு சிறு பிரச்சனைகள் வரும்போது, அதனைத் தாங்களே தீர்த்துக் கொண்டனர். ஆயினும், அதன் நடவடிக்கைகள் அனைத்தும் மன்னனிடம் கொண்டுசெல்லப்பட்டன.
முடிவுரை
எட்டையப்புரம் என்றாலே, கட்டபொம்மனைக் காட்டிக்கொடுத்த எட்டப்பன் என்பதுதான் பலரின் நினைவுக்குவரும் ஒன்றாகத் திகழ்கிறது. ஆயினும், அப்பழி அவனைச் சாராது. எட்டையப்புரத்தின் தலைவர்களாக விளங்கிய எட்டப்பர்கள், தங்களின் ஆட்சிக் காலத்தில், மக்கள்நலனைப் பெரிதென எண்ணி வாழ்ந்துள்ளனர். மேலும், மக்கள் மன்னன்மீது கொண்டுள்ள மதிப்பு இன்றுவரை நிலைக்கிறது. காரணம், அவர்கள் செய்த பல நற்செயல்களே அவர்களது பெயரை இன்றும் தாங்கி நிற்கிறது.
துணைநூற்பட்டியல்
1.சிவசுப்பிரமணியன். ஆ., இனவரைவியலும் தமிழ் நாவலும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை, இரண்டாம் பதிப்பு, 2019.
2.செல்லம். வே. தி., தமிழக வரலாறும் பண்பாடும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2021.
3.தர்மன். சோ., சூல், அடையாளம் பதிப்பகம், திருச்சி, மூன்றாவது மீளச்சு, 2019.
4.நடராசன் தி. சு., நாவல்களின் மகத்துவம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை, முதலாம் பதிப்பு, 2022.
5.பரந்தாமனார். அ.கி., மதுரை நாயக்கர் வரலாறு, பாரி நிலையம், சென்னை, இரண்டாம் பதிப்பு, 1966. 5.புதுப்புனல், கலை இலக்கிய மாத இதழ், மலர் 14, இதழ் 6, ஜூன் 2023.
6.ராமசாமி அ., தமிழ்நாட்டு வரலாறு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை, நான்காம் பதிப்பு, 2011.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
ப. மரிய தேவ நேசம்
முனைவர்பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை,
எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்,
காட்டாங்குளத்தூர் – 603203
நெறியாளர்
முனைவர் தா.இரா. ஹெப்சிபா பியூலா சுகந்தி,
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்,
காட்டாங்குளத்தூர் – 603203.