Sanga illakiyathil Iyarkkai Koorum Maruththuvam|Dr.E.Uvarani

Abstract
         
          The medical knowledge discovered by the Tamils stands as a forerunner of today’s medical world. Contemporary systems such as Siddha medicine have evolved from the ancient tradition of natural medicine. Human beings and nature cannot be separated from one another. The basic needs of humans are food, clothing, and shelter. In that sense, people lived in harmony with nature. Through Sangam literature, this study examines the lifestyle of the Tamils and how they revered and preserved nature. Generally, if the average human lifespan is considered to be sixty years, the people of that period are said to have lived up to a hundred years. The reason for this was their dietary practices and the natural medicines available to them. In those days, food itself was consumed as medicine. However, today food is consumed mainly for taste. As a result, various diseases have emerged. Although science has advanced to great heights, people continue to seek natural medicine and Siddha treatment. The primary reason is that these systems of medicine are believed to have no side effects. Therefore, this study aims to identify how the Sangam Tamils practiced medicine using materials obtained from nature.


“சங்க இலக்கியத்தில் இயற்கை கூறும் மருத்துவம்”

ஆய்வுச் சுருக்கம்
         
     இன்றைய மருத்துவ உலகின் முன்னோடியாகத் தமிழர்கள் கண்ட மருத்துவம் திகழ்கிறது. இன்றைய சித்த மருத்துவம் போன்ற மருத்துவமுறைகள் அன்றைய இயற்கை மருத்துவத்திலிருந்தே வளர்ச்சி பெற்றிருக்கின்றன. மனிதனையும் இயற்கையையும் பிரித்துப் பார்க்க முடியாத ஒன்று. மனிதனின் அடிப்படைத் தேவைகள் உணவு, உடை, உறைவிடம். அவ்வகையில் மனிதர்கள் இயற்கையோடு இயற்கையாய் இணைந்து வாழ்ந்துள்ளனர். சங்க இலக்கியங்களின் வாயிலாக தமிழர்கள் வாழ்ந்த நிலையையும் இயற்கையை எவ்வாறு போற்றியுள்ளனர் என்பதையும் ஆராய்ந்து அதனை எடுத்துக்காட்டும் வகையில் ஆய்வானது அமைந்துள்ளது. பொதுவாக மனிதனின் ஆயுட்காலம் அறுபது என்றால் அக்காலமக்களின் ஆயுட்காலம் நூறு. அதற்குகாரணம் அம்மக்களின் உணவு முறைமற்றும் இயற்கையில் கிடைந்த மருத்துவம். அன்று உணவையே மருந்தாக உட்கொண்டனர். ஆனால் இன்று சுவைக்கானவே உணவை உட்கொள்கின்றனர். இதன் விளைவாகவே பல்வேறு நோய்கள் உண்டாகின்றது. விண்னைமுட்டும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்திருந்தாலும் இயற்கை மருத்துவம் மற்றம் சித்தமருந்துவம் என்ற அடிப்படையிலேயே மக்கள் தேடி ஓடுவதற்கான காரணம் எந்த பின் விளைவுகளும் இல்லாத மருத்துவமுறை என்பதனாலேயே. எனவே இவ்வாய்வானது சங்கத் தழிழர்கள் இயற்கையில் கிடைத்தப் பொருள்களைக் கொண்டு எவ்வாறு மருத்துவம் செய்தனர் என்பதை கண்டறியும் நோக்கில் அமைந்துள்ளது.

முன்னுரை
         
          சங்க இலக்கியத்தில் இயற்கையில் காணப்படும் விலங்குகள், பறவைகள், மரஞ்செடிகொடிகள் என ஓரறிவுயிர் முதல் ஐந்தறிவுடைய உயிர்கள் பற்றிய பல அரிய நுண்ணிய அறிவியல் செய்திகள் காணப்படுகின்றன. சங்ககாலத்தில் வாழ்ந்த மக்கள் திணை அடிப்படையில் அறிவியல் செய்திகளை புகுத்தியுள்ளனர். சங்கப் படல்கள் பலவற்றைக் காணும்போது புலவர்கள் கவிநுட்பம் வாய்ந்தவர்களாக மட்டுமற்றி மருத்துவ குறிப்புகளை அறிந்தவர்களாகவும் விளங்கியுள்ளனர் என்பது புலப்படுத்துகிறது. நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்த இன்றைய சமூகத்தில் இயற்கையோடு இயைந்து வாழத்தொடங்குவோம் என்ற கருத்தாடலை பெரும்பாலும் மேற்கொண்டு வருகின்றனர்.  இதற்குகாரணம் இயற்கை முறையே சிறந்த முறை என்பதை அறிந்ததன்பொருட்டே. உலகில் உள்ள உயிரினங்கள் எல்லாவற்றிற்கும் இன்ப துன்பம் என்பது இயற்கையாய் அமைந்துவிடுகிறது. இன்பம் மகிழ்வுறச் செய்கிறது. துன்பம் வருத்தமுறச் செய்கிறது. அத்துன்பத்தைப் போக்குவது மருந்தாகும். அத்தகையமருந்து இயற்கை முறைகள் சங்ககால மக்களின் வாழ்வியலில் எவ்வாறு இடம் பெறுகின்றன என்பதை ஆராய்வதன் இவ்வாய்வின் நோக்கமாகும்.

மருத்துவம் – விளக்கம்
         
       ‘நோவு, நோதல்’ போன்ற சொற்கள் நோயைக் குறிக்கின்றன. நோயை அறிந்து குணப்படுத்துபவரை‘ மருத்துவர்’ என்று அழைக்கிறோம். நோயுற்றோரின் உடல் நிலையை அறிந்து, அதற்குத் தகுந்தாற் போல பழங்காலத் தமிழ் மருத்துவர்கள் மருந்து கொடுக்கின்றனர்.  இதனை,

“பொருந்தியன் வேட்டபொருளவின் நினைத்தசொல்
திருந்திய யாக்கையுடன் மருத்துவன் ஊட்டியமருந்து” (கலி.17)
         
      என்ற கலித்தொகைப் பாடல் எடுத்துரைக்கிறது. அறத்தொழில் செய்யும் மருத்துவரை‘அறவோன்’ என்று குறிப்பிட்டனர்.

“அரும்பிணி உறுநர்க்கு வேட்டவை கொடாஅது
மருந்து ஆய்ந்துகொடுக்கும் அறவோன்” (நற்.136)
         
      இங்கு நோயினை அறிந்து, அதற்கேற்ற மருந்து கொடுத்த மருத்துவர்களை ‘அறவோன்’ என்று கூறிய செய்தி அறியப்படுகிறது. மருத்துவம் என்பது நோய்களை நீக்கும் கருவியாகும். இது கலை, அறிவியல் அடிப்படையில் அமைந்த சிகிச்சை முறையாகும். மருத்துவம் என்பது நோயைக் கண்டறிவதும் அதனை போக்குவதற்கான உபாயத்தைக் கூறுவதாகும். மருத்துவம் என்பதற்கு செந்தமிழ் அகராதி“ வைத்தியம், பரிகாரம், மருந்து, ஒருவகை யாழ்”1 என விளக்கம் தருகிறது. கழகஅகராதி “வைத்தியம்”2 என்றும். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் மருத்துவம் என்பதற்கு“ ஒருவகையாழ். வைத்தியம், பரிகாரம், பிரசவம் பார்க்கும் தொழில் என்றும் மருத்துவனை வைத்திவன்”3 என்றும் விளக்கம் தருகிறது.
       
       மருத்துவம் என்பது நோய் பற்றிகற்கும் கல்வி ஆகும். மனிதனின் ஒவ்வொரு உடல் உறுப்பும் அதன் இயக்கத்தில் இயங்க வேண்டும். இயக்கம் நின்று போனாலும் தடைபட்டாலும் நோய் ஏற்படுகிறது என்கிறோம். ஆதனை நீக்கும் முறையே மருத்துவம் அல்லது வைத்தியமாகும். மனிதனின் ஒவ்வொரு உறுப்பும் ஒன்றோடு ஒன்று இணைந்தும் எதிர்த்துப் போராடியும் செயலாற்றி வருகின்றன. செயலாற்றும் உறுப்புகள் செயலின்றி இருந்தால் நோய் வரும் என்பதை சு.நரேந்திரன், “உயிர் எப்போதும் சூழ்நிலையோடு போராடிவருகிறது. போராட்டம் தோல்வி அடையும் போது அதுநோயில் முடியும். வெற்றி அடைந்தால் நலமாகும்”4 என்கிறார்.

மருந்து விளக்கம்
         
       மருந்து என்பது நோய்க்குத் தரும் நிவாரணம். மருந்து என்பது நோய்க்கு செய்யும் பரிகாரம் அல்லது நோய்க்கு செய்யும் வைத்திய முறையாகும். மருந்து என்னும் சொல்லுக்கு “ஒளடதம், பரிகாரம், அமிர்தம். சோறு, குடிதண்ணீர், இனிமை”5 என்று குறிப்பிடுகிறது. மேலும், மருந்து, காற்று வாதநோய் மருத்துவச் சஞ்சீவி, மருந்தாக்க உதவும் புல், மரம், புதல், பூங்கொடி, மருத்துவச்சி-பிரசவம் பார்ப்பவள்; மருத்துவதாதி – நேர்ஸ் (ரேசளந) மருத்துவி, வைத்தியம் செய்பவள்;, மருந்திடு – வசியமருந்தால் வரும் நோய்”6 என விளக்கம் தருகிறது அகராதி. சங்ககாலத்தில் மருத்துவன் தாமோதரனார் என்னும் சங்கப்புலவர் ஒருவர் இருந்துள்ளார். மருந்து என்னும் சொல்லாட்சி இலக்கியங்களில் காணப்படுவதை
ஆசை நோய்க்கு மருந்து முண்டால் கொலோ (கம்பராமாயணம், மிதிலை 80) என்றும்,

கடல் கலக்கி மருந்துகைக் கொண்டு  (கல்லாடம், பா 41)
         
        என்றும் மருந்தின்று மன்னவன் சீறில் என்னும் சொல் எடுத்தாளப்பட்டுள்ளது.  சங்ககாலமக்கள் ஏராளமான மூலிகைகள் பற்றியும் அவற்றின் நோய் தீர்க்கும் பண்புகள் பற்றியும் நன்கு அறிந்திருந்தனர். இருப்பினும், இன்று போல் அன்றும் பலவிதமான நோய்களாலும் உடல் ஊனங்களாலும் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தாரென்பதைத் தமிழ் இலக்கிய நூல்கள் நன்கு வெளிப்படுத்தியுள்ளன.

“அருந்துயர் அவலம் தீர்க்கும் மருந்து” (நற்.140:10-11)
         
இங்கு, நோயாளிகளின் துன்பத்தையும், வேதனையையும் துடைப்பது மருந்து என்று நற்றிணை கூறுகிறது.

“அருந்துயர் ஆரஞர் தீர்க்கும் மருந்து” (கலி.குறி.20-21)
         
       என்று கலித்தொகையின் குறிஞ்சிக்கலியிலும் மருந்துக்கு இது போன்ற ஒரு வரையறையும் கூறப்பட்டுள்ளது. நோயாளியின் அருந்துயரையும் கடும் வேதனையையும் தீர்ப்பது மருந்து ஆகும்.

“இன்னுயிர் செய்யும் மருந்து” (கலி.பாலை.31:14)
         
      இவ்வரியின் மூலம் ‘உயிர் காப்பதுமருந்து’ என்றுமருந்தினைஉயிரைப் பாதுகாக்கும் பொருளாகப் பாலைக்கலி வரையறுத்துள்ளமையை அறிய முடிகிறது.

“திருந்திய யாக்கையுள் மருத்துவன் ஊட்டிய
மருந்துபோல் மருந்தாகி மனன் உவப்ப” (கலி.பா.16:19-21)
         
     இவ்வரிகளில் நன்கு பாதுகாக்கப்பட்ட உடம்பினை நோயாளி கொண்டிருந்தால் மருத்துவர் தரும் மருந்து, நோயாளியின் பாதிக்கப்பட்ட உறுப்பினை விரைவாகச் சென்றடைந்து நன்கு வேலை செய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மருத்துவம்
         
       தமிழ் மருத்துவம் அல்லது தமிழர் மருத்துவம் என்பது இயற்கையோடு இயைந்த மருத்துவம் ஆகும். காடுகளில், மலைகளில் ஆறுகளின் ஓரங்களில் இயற்கையாகவே காணப்படும் தாவரங்களின் வேர், தண்டு, இலை, பூ, காய், கனி ஆகியவை தமிழ் மருத்துவத்தின் முக்கிய பகுதியாகும். மனிதன் அநாகரீக நிலை, நாகரீக நிலை காட்டுமிராண்டி நிலைஆகிய நிலைகளிலும் செடி, கொடி, காய்கனிகள் உணவாக பயன்பட்டுள்ளது. மருந்தாகப் பயன்பட்டுள்ளது. தமிழ் மருத்துவ முறைகள், என்பது காடுகளில் மறைந்து வாழ்ந்தசித்தர் பெருமக்களால் உருவாக்கப்பட்டது. சைவ இலக்கியங்கள் சித்தர்களில் முதன்மையானவர் சிவபெருமான் என்கிறது. சித்தர் இலக்கியங்கள் அகத்திய முனிவரைமுதல் சித்தர் என்கிறது. இவ்வாறுசித்தர் பெருமக்களால் உருவாக்கப்பட்டது தமிழ் மருத்துவம். இத்தகைய மருத்துத்தின் வாயிலாகவே பல்வேறு நோய்களுக்கு தீர்வு கண்டு வாழ்ந்துவந்துள்ளனர். மேலும் இம்மருத்துவ முறை இன்று பல்வேறு வகைகளில் (சித்தமருத்துவம், ஹோமியோ, தொடுவைத்தியம், பாட்டிவைத்தியம், ஆயர்வேதம், யுனானி) மக்களிடையே பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ முறைகள்
         
     இன்றைய காலக்கட்டத்தில், சித்தமருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம் என்னும் நிலைகளில் மருத்துவப் பிரிவுகள் உள்ளன. மனிதன் வாழும் காலத்திற்கும் இயற்கை சூழலுக்கும் ஏற்ப இடத்தையும் பண்புகளையும் மாற்றிக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். உலகில் வாழும் மக்கள் அனைவரும் ஒரே விதமான உணவு பழக்கங்களைக் கொண்டிருக்கவில்லை. அவரவர்கள் தத்தம் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப உணவுமுறை மாற்றம் அடைகின்றன. இவ்வுணவு முறையில் மாற்றம் ஏற்படுமாயின் நோய் ஏற்படும். அந்நோய்க்கு ஏற்ப மருத்துவ முறைகளும் மாற்றம் பெறுகின்றன.
         
     இன்றைய காலக்கட்டத்தில், சித்தமருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், யுனானி மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம் என்னும் நிலைகளில் மருத்துவப் பிரிவுகள் உள்ளன. சித்தமருத்துவம் தமிழர்களின் மருத்துவம் சித்த மருத்துவம், சித்தர் மருத்துவம் மிக உயர்ந்தநிலையில் பண்டைய காலக்கட்டங்களில் திகழ்ந்தன. இஃது முதன்மை மருத்துவமாகவும் போற்றப்பட்டன. திருமூலர், இராமதேவசித்தர், கும்பமுனி, இடைக்காடர், சித்த மருத்துவம் சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவம் சித்தர் என்னும் சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருளாகும். இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்னும் எட்டுவகையான யோகத்தின் மூலம் எண் வகையான சித்திகளைப் பெற்றவர் என்னும் பொருளில் சித்தர்கள் எனப் பெயர் பெற்றனர். “அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம்” என்னும் எண்பெரும் சித்துக்களை அறிந்தவர் சித்தர் எனப் போற்றப்படுகின்றனர். தன்வந்திரி வால்மீகி சித்தர்கள் பலர் இருந்தாலும் வரையறுக்கப்பட்டசித்தர்கள் பதிணென் சித்தர்கள் ஆவர். அவர்கள்
         
      திருமூலர், இராமதேவசித்தர், கும்பமுனி,இடைக்காடர்,தன்வந்திரி, வால்மீகி, கமலமுனி, போகர், மச்சமுனி, கொங்கணர், பதஞ்சலி, நந்திதேவர், போதகுரு, பாம்பாட்டிசித்தர், சட்டைமுனி, சுந்தரானந்தர், குதம்பைச்சித்தர், கோரக்கர் ஆவர். இவர்கள் மட்டுமின்றி அகப்பேய் சித்தர், இடைக்காட்டுசித்தர். கடுவெளிச் சித்தர், கொங்கணசித்தர் போன்ற சித்தர்களும் காணப்படுகின்றனர். மேல் காணும் சித்தர்கள் மந்திரம், யோகம், பொன்மாற்று, இரசவாதம், விண்ணில் உலாவுதல், கூடுவிட்டு கூடுபாய்தல் போன்றவற்றில் சிறந்து விளங்கியவராவார்கள். இத்தகைய சித்தர்கள் இயற்கையில் விளைந்த காடுகளில் கிடைக்கக் கூடிய இலை, தழை, தண்டு, காய், கனி, பட்டை, விதை போன்றவற்றை பயன்படுத்தி நோய்களை தீர்த்து வைத்துள்ளனர். இவை கை வைத்தியம் என்று அழைத்தனர். இம்மருந்து முறைகளை பல ஆண்டுகள் ஆராய்ந்து அறிந்து கண்டுள்ளனர். மனிதர்களிடம் காணப்படும் நோய்களைப் போக்கும் மருத்துவர்களாய் சித்தர்கள் இருந்துள்ளதை.
”விந்தியமலைக்குத் தெற்கே கன்னியாகுமரி வரையில் உள்ள நாட்டுமக்களின் மருத்துவத்தைத் தமிழ் மருத்துவம் என்றும், சித்த மருத்துவம் என்றும் கூறுவர். தமிழ் மக்களின் மருத்துவம் ஆதலால் இதனைத் தமிழ் மருத்துவம் எனவும் கூறுவர். மேலும், பல்வேறு சித்திகளில் வல்ல அறிஞர்களான சித்தர்கள் தம் உள்ளொளியினால் வரையறுக்கப்பட்டு அமைக்கப் பெற்றதும், பதினெண் சித்தர்கள் கொண்ட மருத்துவ அவையினரால் அவ்வப்போது ஏற்கப்பெற்றதுமான மருத்துவமானதால் சித்தமலுத்துவம் எனவும் கூறப்பெறுகிறது”.7

சித்த மருத்துவத்தின் சிறப்பு
         
      மனிதனின் வாழ்வு இயற்கையோடு இயைந்தது. இயற்கை மனிதனுக்கு பல்வேறு நன்மையைப் பயக்க வல்லது. அவற்றின் எதிர் திசையில் வாழும் மனிதனுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. அதற்கான காரணத்தை அறிவதுமிகவும் கடினம். அறிவியல்துறை நாள்தோறும் வளர்ந்து கொண்டே வருகிறது உண்மை. எனினும் கண்டுபிடிக்க முடியாத நோய்கள் தோன்றுவது அறிவியலுக்கு சவால் விடுகின்றன. உடம்பில் ஏற்படும் நோய்கள் முற்றிலும் அழிந்து விடுவதில்லை. முhறாக அந்நோயின் தாக்கம் மட்டுமே குறைக்கப்படுகின்றன. அப்போதைக்கு அதன் வீரியம் குறைக்கப்பட்டாலும் அதனால் பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. ஆனால் சித்த மருத்துவத்தின் சிறப்பே பக்கவிளைவு, எதிர்விளைவு, பின்விளைவு ஏதுமில்லாத சிறப்பினை உடையது என்பதை,

“பக்கத் தெதிர்விளைவுபின்விளைவேதுமிலா
தக்கதியற்கைமருந்து”8 என்கிறார் டாக்டர் சிற்சபை.

இலக்கியத்தில் மருத்துவம்
         
      மனித உடம்பில் நோய் வருவது இயல்பாகவே அமைந்த ஒன்றாகி விடுகிறது. உடல் சரியாக இருந்தால் மட்டுமே மருந்து சரியாக வேலை செய்யும். உடல் மேன்மேலும் கெட்டால் மருந்து நீண்ட நாள் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை,

“திருந்திய யாக்கையுள் மருத்துவன் ஊட்டிய
மருந்துபோல் மருந்தாகி மனன் உவப்பப்
பெரும் பெயர் மீளி”    (கலித் – பா17)
         
   என்னும் அடிகளால் அறியமுடிகிறது. சங்ககாலத்தில் போரும் பூசலும் நிறைந்திருந்தன. போரில் விழுப்புண்பட்டவீரனின் புண்ணை ஆற்றுவது மிகக் கடினமாக இருந்தது. ஏனெனில் புண் பெரிய அளவில் இருந்ததால் அதனை ஆற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. இன்றைய காலக்கட்டத்தில் அறுவை சிகிச்சை செய்து உடல் தசையை தைப்பது போல அக்காலத்தில்

“மீன்தேர் கொட்பின் பனிக்கய மூழ்கிச்
சிரல் பெயர்ந்தன்னநெடுவெள்ளுசி 
நெடுவசிபரந்தவடுவாழ் மார்பின்  (பதிற்று – பா 5:2: 1-3)
         
      என மீன் கொத்தியானது நீரில்  மூழ்கி மீனை எவ்வாறு உள்ளே சென்று மீனைக் கொத்தி மீண்டும் வெளியே வருகிறதோ அதுபோல விழுப்புண்பட்ட வீரனின் தோல்களில் கூர்மையான ஊசியினைக் கொண்டு தசையை தைத்துள்ளனர். அதாவது இன்றைய மருத்துவத்தின் உயரிய நிலையான அறுவை சிகிச்சை முறைக்கு முன்னோடி நம் தமிழச் சான்றோர்களே என்பதை நம்மால் அறிய முடிகிறது. கருவுற்ற பெண்களுக்கு மசக்கை காலத்தில் ஏற்படுகிறன்ற வாந்தி, உணர்வினைப் புளியங்காய் கம்டுப்படுத்தும் என்று புளியஙகாயின் மருத்துவக்குணம் கூறப்பட்டுள்ளது. சங்ககாலத்தில் வயா நோயினால் துன்புற்ற கர்ப்பிணிப் பெண்கள் மண் போன்ற பொருட்களை உண்ணம் பழக்கத்தினைக் கொண்டிருந்தனர். சேர மன்னன்; யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைப் புகழ்ந்துபாடும் பொருட்டு குறுங்கோழியூர்கிழார் என்ற புலவர் அவருடையநாட்டில் வயா நோயினால் துன்புறும் கர்ப்பிணிப் பெண்களன்றி அவரது எதிர் நாட்டைச் சேர்ந்து எவரும் அவரது நாட்டின் மண்னை உண்டதில்லை என்று அவரது நாட்டின் பெருமையினைப் புகழ்ந்து பாடியிருப்பதைப் புறநானுற்றின் வாயிலாக அறிய முடிகிறது.

வயவுறுமகளிர் வேட்டுநின் அல்லாது
பகைவர் உண்ணா அரும்மண்ணினையே   (புறம் 20, 14-15)
         
     என புறநானூற்றுப் பாடலின் வாயிலாக அறிய முடிகிறது. இயற்கையில் கிடைக்கக்கூடிய வேம்பு, கடுகு, கீரை வகைகள், நெல்லி போன்ற பொருட்களில் மருத்துவக்குணம் இருப்பதைத் தமிழர்கள் அறிந்திருந்த செய்தியை எட்டுத்தொகை நூல்கள் புலப்படுத்துகின்றன.

தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரி
வாங்கு மருப்பியாமொடு பல்இயம் கறங்கக்
கைபயப் பெயர்த்துமை இழுது இழுகி
ஐயவிசிதறி, ஆம்பல் ஊதி (புறம் 281)
         
      அதாவது போரில் விழுப்புண் பெற்றதலைவனுக்கு மருந்திட்டுக் காக்க இயற்கையில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தியுள்ளமை அறிய முடிகிறது. மேலும்,

பெருமலைவிடர் அகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின் அகத்து அடங்கிச்
சாதல் நீங்கஎமக்கு ஈத்தனையே      (புறம் 91)
         
       இங்கு அரிய மலைப்புறத்து உள்ள நெல்லிக்னியைத் தான் உண்ணாது, ஒளையார் உண்டு நீடுவாழ வேண்டுமென்று அதியமான் நெல்லிக்கனியை வழங்கியசெய்தி கூறப்பட்டுள்ளது. இதனால் சாவா மருந்து என்ற பெருமைக்குரிய நெல்லிக்கனியின் மருத்துவப் பயன்பாட்டைத் தெரிந்து கொள்ள முடிகிறது. மரணத்தையே தள்ளிவைக்கும் வல்லமை கொண்ட நெல்லிக்கனியின் மகத்துவத்தை அன்றைய தமிழர்கள் அறிந்திருந்தனர் என்பதை புலப்படுத்துகிறது.

இசை மருத்துவம்         
     இசைக்கு மயங்காத உயிர்களே கிடையாது. மனதைக் கட்டுக்குள் வைக்கும் திறன் இசைக்கு உண்டு மனதை மயக்கநிலையில் வைக்கும் ஆற்றல் இசைக்குஉண்டு. மனநோயைப் போக்கும் மாற்று மருந்தாக இசைத் திகழ்கிறது என்பதை,

“மருந்தினால் அன்றி மனக்குறை நோய் மாற்றும்
விருந்தாய் இசையொன் றுடைத்து” (சித்த மருத்துவக்குறள் – பா 227)
         
       என்று சித்தமருத்துவக்குறள் குறிப்பிடுகிறது. இசையால் மட்டுமின்றி நாட்டுப்புறப் பாடலின் வழியேயும் மனநோயைப் போக்க முடியும். சங்க இலக்கியத்தில் தனது கணவன் மார்பின் மீது புலி பாய்ந்ததால் ஏற்பட்ட புண்ணினை ஆற்றுவதற்குக் குறமகள்,

“கொடுவரி பாய்ந்தெனக் கொழுநர் மார்பில்
நெடுவரி விழுப்புண் தனிமார் காப்புஎன
அறல்வாழ் கூந்தல் கொடிச்சியர் பாட”   (மலைப்படுகடாம் – அடி 302-304)
         
         என்னும் மலைபடுகடாம் செய்யுளடியால் அறிய முடிகிறது. இன்னிசையால் மட்டுமின்றி இன்சொல்லை இசைத்துப் பாடுவதாலும் நோயின் தாக்கத்தைப் போக்கவும் குறைக்கவும் முடியும்.
சிரிப்பே மருந்து
         
      வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பது பழமொழி.  சிரித்து வாழ்ந்தால் ஆயள் கூடும் என்கிறது மருத்துவ அறிக்கை. ஒருவர் வாழ்வில் மகிழ்ச்சியாக சிரித்து வாழ்ந்தால் பிணிதாக்கம் இருக்காது.  சிரித்து வாழவேண்டும். பிறர் சிரிப்பில் வாழ்ந்திடாதே என்கிறது தமிழ்த் திரை இரைப்பாடல். சிரிப்பு என்பது விலங்குகளிடம் இருந்து மனிதன் மாறுபட்டவனாகக் காட்டக் கூடியது.  மக்களின் மன இறுக்கத்தைப் போக்குவது சிரிப்பும் புன்னகையும் ஆகும்.  இவையே மிகச் சிறந்த மருந்தும் ஆகும். நண்பர்களுடன் கலந்து பேசி மகிழ்ந்து இருக்கத் தெரியாதவர்க்கு பகல் கூட இருளாகத்தான் தெரியும் என்பதை,

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும் பாற்பட்டன்று இருள்    (குறள் 999)
என்னும் குறளால் அறியமுடிகிறது.

உணவுஉண்ணும் முறை
1. அருந்துதல்         – மிகக் குறைந்த அளவு உண்ணுதல

2. உண்ணல்         – பசீதீர உண்ணல் 

3.உறிஞ்சல்           – வாயைக் குவித்து உணவு பண்டத்தை உள்ளிழுத்தல் 

4. குடித்தல்            – கஞ்சி, கூழ் போன்றவை

5.தின்றல்              – தின்பண்டங்களை உட்கொளல்

6.துய்த்தல்             – சுவைத்து மகிழ்ந்து உண்ணல் 

7.நக்கல்                – நாக்கினால் துலாவி உட்கொள்ளல

8.நுங்கல்               – முழுவதையும் ஒரேவாயில் ஈத்து உறிஞ்சல

9.பருகல்                – நீர் வகைகளை உண்ணல்

10.மாந்தல்              – வேட்கையுடன் மடமட வெனகுடித்தல்

11.மெல்லல்            – கடிய பண்டத்தை பல்லால் கடித்து மென்று உண்ணல்

12.விழுங்கல்         – பல்லுக்கும் நாக்கிற்கும் இடையில் தொண்டை வழி       
       விழுங்கல் போன்ற பன்னிருவகையில் உணவு உண்ணும் பழக்கத்தை வைத்திருந்தனர் தமிழர்கள். உணவானது உடலின் எடைக்கும் ஏற்றதாக அமையவேண்டும். குறைந்த அளவோ அல்லது மிகுந்த அளவோ உணவை எடுத்துக்கொள்ளும் போது பலவித விளைவுகளை உடல் சந்திக்க நேரிடுகிறது. உணவு உண்ணும் முறை, காலம் ஆகியவற்றைச் சரியாகப் பின்பற்றினால் நோயின் தாக்கத்திலிருந்து விடுபடலாம். இரவில் சில உணவு வகைகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. சிலவகை உணவுகளை காலையிலும் பிற்பகலிலும் எடுத்துக்கொள்ளக் கூடாது. இன்று எவ்வாறு, எந்தளவு, எத்தகைய உணவு, எந்தநேரத்தில் எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். என்றுரைக்கிறது. உணவினைபடுத்துக் கொண்டும் நின்று கொண்டும் பொது இடங்களிலும் உண்ணக்கூடாது. சம்மணமிட்டு அமர்ந்து உண்பதே உடலின் செரிமாணத்திற்கு வகை செய்வதாக அமைந்திருக்கும் என்பதை

“கிடந்துண்ணார் நின்றுண்ணார் வெள்ளிடையும் உண்ணா
சிறந்து மிகவுண்ணார் கட்டில்மேல் உண்ணார்
இறந்தொன்றும் தின்னற்க நின்று”    (ஆசாரக்கோவை பா-23)
         
       என்றுரைக்கிறது. அவ்வாறு உணவு உண்ணும் போதும் பெரியோருடன் அமர்ந்து உண்ணும் போதும் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை,

“முன்துவ்வார் முன்னெழார் மிக்குறார் ஊணின்கண்
என்பெறினும் ஆற்றவலம் இரார் தம்மிற்
பெரியார்தம் பாலிருந்தக் கால்” (ஆசாரக்கோவை பா-25)
         
       என்றுரைக்கிறது ஆசாரக்கோவை. இயற்கை முறையில் கிடைக்கக்கூடிய மற்றும் இயற்கை பொருள்களைக் கொண்டு செய்யக்கூடிய உணவு முறைகளையும் அந்தந்த நேரங்களுக்கு ஏற்றார் போல சமைத்து உண்டு நீண்ட காலம் வாழ்ந்துள்ளனர் நம் முன்னோர்கள்.

முடிவுரை
         
       மனிதன் தோன்றிய நாளிலிருந்தே நோய்களும் காணப்படுகின்றன. மனிதனையும் இயற்கையும் ஒன்றோடொன்று கலந்து உள்ளவை. இவற்றை தனித்தனியே பிரித்துப் பார்க்க முடியாது. மனிதனுக்கு ஏற்பட்டுள்ள ஒவ்வொரு விளைவுகளுக்கும் ஒவ்வொரு மருத்துவம் காணப்படுகின்றன. நோய்களுக்கான மருத்துவ முறைகள் மனிதனுடைய அறிவின் விளைவாக ஏற்பட்டவையாகும். மனிதனுடைய அறிவின் படிநிலை வளர்ச்சியாகப் படிப்படியாகவே மருத்துவ முறைகளும் வளர்ச்சி பெற்றுவந்துள்ளன. பழந்தமிழர்கள் நோயால் அவதிப்பட்டபோது, அதனைத் தீர்க்கும் வழிமுறைகளைத் தேடிக் கண்டனர். இன்றைய மருத்துவ உலகின் முன்னோடியாகத் தமிழர்கள் கண்ட மருத்துவம் திகழ்கிறது. இன்றைய சித்தமருத்துவம் போன்ற மருத்துவ முறைகள் அன்றைய இயற்கை மருத்துவத்திலிருந்தே வளர்ச்சி பெற்றிருக்கின்றன என்பதை இவ்வாய்வின் மூலம் கண்டறிப்பட்டுள்ளது.

தொகுப்புரை
🎯 மருத்துவம் என்பது நோய் நீக்கும் கருவி என்பதை உணரமுடிகிறது.

🎯மருத்துவம் என்னும் சொல்லுக்கு வைத்தியம், பரிகாரம், மருந்து, பிரசவம் பார்க்கும் தொழில், ஒளடதம், அமிர்தம், இனிமை போன்ற விளக்கத்தால் அறியமுடிகிறது .

🎯 சித்த மருத்துவமே தமிழ் மருத்துவம். மருத்துவம் சித்த, ஆயுர், யுனானி, ஹோமியோபதி ஆகிய நான்கு நிலைகளில் மருத்துவம் அளிக்கப்படுவதை அறியலாகிறது.

🎯 சித்தர்கள் இலை, தழை, தண்டு, காய், கனி, வேர், விதை, பட்டை போன்றவற்றை உண்டு வாழ்ந்துள்ளனர்.
         சித்த மருத்துவத்தின் சிறப்பு பக்கவிளைவு, எதிர்விளைவு ஏதும் அற்றது.

🎯 மருந்து உட்கொள்வதால் நோய்தீரும், ஆயுள் கூடும்.

🎯 நோய்க்கான மருந்து இசையும் கூட.

🎯இசை மட்டுமின்றி இன் சொல்லும் நோயைப் போக்கும் என்பதை அறியமுடிகிறது.
         அறுவை சிகிச்சை பண்டைய காலத்தில் நிகழ்ந்துள்ளதை அறியமுடிகிறது.

🎯 சிரிப்பே மருந்தாகப் போற்றப்படுகிறது.

🎯 உடல் நலத்திற்கு உணவே அச்சாணி.

🎯 நோயற்ற வாழ்வுக்கு இலைகள், தழைகள், கிழங்குகள், தண்டு, காய், கனி, வேர் ஆகியவையாகும்.
         நோய்க்கான காரணம் தவறான உணவுமுறை.

🎯 நோயாளிக்கும் மருத்துவனுக்கும் பாலமாக அமைவது இயற்கை மருந்து என்பதை அறியமுடிகிறது.

மேற்கோள்கள்
1.செந்தமிழ் அகராதி, ந.சி.கந்தையா பிள்ளை, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், பதிப்பு 1999, ப.எண் 557

2.கழக அகராதி, ப.எண் 741

3.கழக அகராதி, ப.எண் 744

4.தமிழில் மருத்துவம், சு.நரேந்திரன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பதிப்பு 2003, ப.எண் 60.

5.செந்தமிழ் அகராதி, ந.சி.கந்தையா பிள்ளை, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், பதிப்பு 1999, ப.எண் 557

6.மேலது ப.எண் 242

7.தமிழ் மருத்துவ மாண்பு, டாக்டர் சிற்சபை(க.ஆ), ப.எண் 183

8.மேலது ப.எண் 183

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் ஈ.யுவராணி

உதவிப் பேராசிரியர்

வேல் டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா ஆர் & டி அறிவியல்
மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்,
சென்னை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here