Abstract
Iyal, Isai, and Nadagam (literature, music, and drama) are collectively known as Muthamizh (the three forms of Tamil). Isai (music) refers to “singing” or “melody.” It is also referred to as Pa or Paavinam. Music has been deeply intertwined with the lives of ancient Tamil people. Forest dwellers, tribal communities, and nomadic groups all had their own unique musical traditions. This essay records the life stories and cultural backgrounds of various musical artists such as Pānan, Porunan, Pāṭiṉi, and Koothar.
சங்க இலக்கியத்தில் இசைக்கலைஞர்களின் வாழ்வியல் செய்திகள்
திறவுச்சொற்கள்: இசை என்பதன் பொருள், இசைக்கருவிகள், கலைஞர்கள், பொருநர், பாணர், கூத்தர், விறலியர், இசைக்கலைஞர்களின் வாழ்வியல் செய்திகள்.
இசை என்பதன் பொருள்
இசை என்னும் சொல்லுக்கு ‘இசைவிப்பது , வசப்படுத்துவது’ என பொருள் கொள்ளலாம். இச்சொல் ‘இயை’என்னும் வேர்ச்சொல்லில் இருந்து தோன்றியது. இயைதல் என்பதற்கு பொருந்துதல் ,ஒன்று சேருதல், கூடி நிற்றல், புணர்தல் எனப் பொருள் கொள்ளலாம். ‘இயைபே புணர்ச்சி’ (தொல். உரி:12) என்பது தொல்காப்பிய நூற்பா. ‘இயைபு’ என்னும் சொல்லில் இருந்து ‘இசைப்பு’ என்னும் சொல் உருவாயிற்று. ‘இசைப்பு’ என்பது ‘இசை’ என ஆயிற்று.
“இசைப்பு இசையாகும்” (தொல். உரி:12)
இசை என்பதற்குப் பொருந்துதல் என்று பொருள் கொள்ளும்போது தாளம், பண் , பாடல் , பொருள், பாடுவோன் குரல் போன்ற அனைத்தும் ஒன்றோடு ஒன்று இசைந்து நிற்றல் எனக் கொள்ளல் வேண்டும். இதனைப் பின்வரும் பாடல் புலப்படுத்துகின்றது.
“ யாழும் குழலும் சீரும் மிடறும் தாழ்குரல் தண்ணுமை
ஆடலொடு இவற்றின் இசைந்த பாடல் இசையாகும் “ (சிலம்பு. அரங்கேற்றுகாதை: 26 -28)
இசைக்கருவிகள்
சங்ககால இசைக்கருவிகளில் தலைமை சான்ற இசைக்கருவி யாழாகும். சீறியாழ், பேரியாழ் என இருவகை யாழ் இருந்ததாக அறிய முடிகிறது.
“வள்ளுகிர்ப் பேரியாழ்” (மலைபடுகடாம்: 37)
“இடனுடையப் பேரியாழ்” (பெரும்பாணாற்றுப்படை: 462)
என்பதனால் பேரியாழ் அளவில் பெரியது என்பதனை அறிய முடிகின்றது.
“கருங்கோட்டுச் சீறியாழ்” (நெடுநல்வாடை: 70)
“ஏழ்புணர் சிறப்பின் இன்றொடைச் சீறியாழ்” (மதுரைக்காஞ்சி: 559)
என்பவை சீறியாழைக் குறிப்பிடுகின்றன. மேலும் இசைக்கருவிகள், தோல்கருவிகள், நரம்புக்கருவிகள் என்றும் வகைப்படுத்தப்பட்டிருந்தன.
ஊதுக்கருவிகள்
🐚 குழல்
🐚 தூம்பு
🐚 கோடு
🐚 வயிர்சங்கு
தோல்கருவிகள்
🐚பறை
🐚 தண்ணுமை
🐚 மத்தளம்
🐚 முரசு
🐚 கிணை
🐚தடாரி
🐚 தட்டை
🐚 பதலை
🐚படகம்
🐚 எல்லரி
🐚பம்பை
கலைஞர்கள்
கலை என்பது கற்றுக் கொள்வது. ஒருவர் மற்றவரிடம் கற்றுக்கொண்டு வளர்க்கும் கலையே இசையாகும். கேட்போரை வயப்படுத்தித் தன்வசம் இசைய வைக்கும் ஆற்றல் வாய்ந்தது இசைக்கலையாகும். கலைஇன்பம் தரக்கூடியவர்கள் கலைஞர்கள். அவர்கள் முறையே பாணர், பொருநர், பாடினி (விறலி), கூத்தர் என்று அழைக்கப்பட்டனர். இச்செய்திகளை ஆற்றுப்படை நூல்கள் எடுத்து இயம்புகின்றன.
பொருநர்
மற்றொருவர் போல் வேடம் கொள்பவர் பொருநர் ஆவார். இவர்கள் மூவகையினராக ஏர்க்களம்பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் என இருந்தனர். போர்க்களம் பாடுவோரே பெரிதும் குறிக்கப்பட்டுள்ளனர். பத்துப்பாட்டில் ஒன்றாகிய பொருநராற்றுப்படை இவ்வகைப் பொருநானல் பாடப்பட்டதாகும். திருவிழாவில் பொருநர்கள் கூடித் தங்கள் கலைத்திறனைக் காட்டிப் பின்னர் விழா முடிந்ததும் வேற்றுர் நாடி செல்வதாக முடத்தாமக் கண்ணியார் பாடலைத் தொடங்குகின்றார்.
“அறாஅ யாணர் அகன்தலைப் பேரூர்
சாறுகழி வழிநாள் சோறுநசை
உறாஅது வேறுபுலம் முன்னிய விரகறி” (பொருந:1-3)
பாணர்
பாணர் என்பதற்கு பண்பாடுவோர் அல்லது இசை பாடுவோர் என்று பொருளாகும். பாணரில் இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் எனப் பல பிரிவினர் இருந்தனர். யாழ்ப்பாணருள் சிறுபாணர், பெரும்பாணர் என இருவகையினர் இருந்தனர்.
கூத்தர்
ஆடல் மக்கள் கூத்தர் எனப்பட்டனர். பத்துப்பாட்டில் ஒன்றாகிய கூத்தராற்றுப்படையில் கூத்தன் ஒருவனை நன்னன் சேய் நன்னனிடம் ஆற்றுப்படுத்தியதாக அமைந்துள்ளது.
விறலியர்
விறல்பட ஆடும் பெண்கலைஞர். அதாவது உள்ளக்குறிப்பு வெளிப்படுமாறு ஆடுபவர் விறலி எனப்பட்டனர்.
இசைக்கலைஞர்களின் வாழ்வியல் செய்திகள்
எந்தக் காலத்திலும் எந்த நாட்டிலும் மக்கள் எல்லா வளமும் பெற்று வாழ்ந்தார்கள் என்று கூற முடியாது. மழை , மடுவு என்ற நிலையிலேயே வாழ்ந்துள்ளனர். வறுமையின் எல்லைக்கோட்டை தொட்ட இசைக் கலைஞர்களின் கூட்டம். ‘பழுத்த மரத்தை நினைத்துச் செல்கின்ற பறவைபோல’ மன்னர்களையும் வள்ளல்களையும் நாடிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனை, நெஞ்சில் பதியும் வண்ணம் முடத்தாமக் கண்ணியார் கரிகாலனிடம் பரிசில் பெற விழைந்த பொருநர் கூட்டத்தைக் கீழ் வருமாறு விளக்குகின்றார். வறுமையில் வாடிப் பரிசில் பெறச் சென்ற பொருநர் கூட்டத்திற்கு கரிகாற்சோழன் பெருவிருந்து வைக்கின்றான். முல்லை மொட்டு போன்ற முனை மழுங்காத சோறு, பருக்கைக்கற்கள் போன்ற பொரிக்கப்பெற்ற கறியைத் தின்றுதின்று கழுத்துவரை உணவு வந்துவிட்டது. இறைச்சியைத் தின்று கொல்லை உழு கலப்பையின் கொழுவைப் போலப் பற்கள் தேய்ந்து விட்டனவாம். இதனை,
“அவிழ்பதங் கொள்கென்று இரப்ப முகிழ்த்தகை
முரவை போகிய முரியா அரிசி
விரலென நிமிர்ந்த நிரலமை புழுக்கல்
பரல்வறைக் கருனை காடியின் மிதப்ப
அயின்ற காலைப் பயின்றினிது இருந்து
கொல்லை உழுகொழு ஏய்ப்பப் பல்லே
எல்லையும் இரவும் ஊன்றின்று மழுங்கி
உயிர்ப்பிடம் பெறாஅது ஊண் முனிந்து “ (பொருந:112-119)
மேலும், பத்துப்பாட்டில் மூன்றாவதாக வைத்துல் சொல்லப்படும் சிறுபாணாற்றுப்படையில் ஓய்மானாட்டு நல்லியக்கோடன் என்னும் வள்ளல் பெருமகனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் போற்றிப் பாடுகின்றார். பரிசில் பெற்று வந்த சிற்றியாழ் இசைக்கும் பாணன் பரிசில் பெறாதவனை இவ்வள்ளலிடம் ஆற்றுப்படுத்துவதாக இந்நூல் அமைந்துள்ளது. ஆசிரியப்பாவில் அமைந்த இப்பாட்டு நூல் 269 அடிகளைக் கொண்டது.
சிறுபாணாற்றின் மூலம் பழந்தமிழகத்தின் வரலாற்றை அறிந்துக் கொள்ளலாம். கடையெழு வள்ளல்கள் பற்றியும் மதுரை, உறந்தை, வஞ்சி, எயிற்பட்டினம், வேலூர்,ஆமூர் கிடங்கில், கொற்கை எனப் பல ஊர்கள் பற்றியும் இந்நூல் வழி அறிய முடிகின்றது. கண் விழிக்காக நாய்க்குட்டிகள் தாயின் காம்பில் பாலை குடிக்க, பசியில் ஆற்றாத குட்டி ஈன்ற நாய் குரைக்கின்றது. பழுதடைந்த குடிசையில் இசைவாணர் கூட்டம் மயங்கிக் கிடக்கின்றது. இல்லத் தலைவி ஏற்கனவே கிள்ளப்பெற்ற வேளைச் செடியின் கொழுந்துகளை கிள்ளி வந்து வேகவைக்கிறாள் உப்பு இல்லை. இருந்த போதிலும் தன் வீட்டு வறுமை நிலையை அடுத்தவர் அறியாத வகையில் கதவினை அடைத்துக் கொண்டு தம் சுற்றத்தினருக்கு வெந்த உப்பில்லா கீரையைக் கொடுக்கின்றாள் என்ற செய்தியை சிறுபாணாற்றுப்படையின் பாடல் வரிகள் புலப்படுத்துகின்றன.
“ஒல்குபசி உழந்த ஒடுங்குநுண் மருங்குல்
வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைந்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து
இரும்பேர் ஒக்கலோடு ஒருங்குடன் மிசையும்
அழிபசி வருத்தம் …….” (சிறுபா:135-140)
பழந்தமிழ் மக்களின் வாழ்க்கையுடன் இசை இரண்டற கலந்து இருக்கிறது. இயற்கையும் மனிதனும் தமக்கே உரிய இசை மரபுகளைக் கொண்டுள்ளன. இயற்கையோடு இயைந்த வாழ்க்கையில் மனிதன் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் . பாணன், பொருநன், பாடினி, கூத்தர் என்னும் இசைக்கலைஞர்களின் வாழ்வியல் செய்திகளை சங்க இலக்கியம் நமக்கு புலப்படுத்துகின்றன.
துணைநூற்பட்டியல்
1.சாமிநாதையர் உ .வே (தொ.ஆ), 1986, பத்துப்பாட்டு மூலமும் உரையும், நச்சினார்க்கினியர் உரையும், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
2.இளம்பூரணனார் (உ.ஆ ),2005, தொல்காப்பியம், சாரதா பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை-5.
3.வேங்கடசாமி நாட்டார் ந. மு, 1992, சிலப்பதிகாரம், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை – 18.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர்சி. இராமாமிர்தம்
உதவிப்பேராசிரியர்
அறிவியல் மற்றும் மானுடவியல் புலம்
எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம்
இராமாபுரம், சென்னை – 89.