Prabanchan Puthinagalil Panmuga Nokku|N.Ekambal Latha

Abstract
        
        Literature not only regulates life but also carries our culture, culture, civilization and arts from one generation to the next. From Sangam period literature to contemporary literature, this work is done by Shiva. In that way the creator Panchanan has also used literary elements in his works. The purpose of this review is to examine how the author has created his thoughts and ideas with literary characteristics. In his novels, he has created literary taste stories and storytellers. His stories are full of great commentary, similes and series of ideas, all of which bring out his creativity and have a literary character.


“பிரபஞ்சன் நாவல்களில் இலக்கியக்கூறுகள்”

ஆய்வுச் சுருக்கம்
         
     இலக்கியங்கள் வாழ்க்கையை நெறிப்படுத்துவதோடு அல்லாமல் ஒரு தலைமுறையினரிடமிருந்து அடுத்த தலைமுறைக்கும் நம் பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம், கலைகள் அனைத்தையும் கொண்டு சேர்க்கின்றன. சங்க கால இலக்கியங்கள் முதல் தற்கால இலக்கியங்கள் வரை இப்பணியைச் செவ்வனே செய்கிறன. அந்த வகையில் படைப்பாளர் பிரபஞ்சன் அவர்களும் தம் படைப்புகளில் இலக்கியக் கூறுகளைக் கையாண்டுள்ளார். ஆசிரியர் தன் எண்ணங்களைக் கருத்தோட்டங்களை எவ்வாறு இலக்கியம் பண்புகளோடு படைத்துள்ளார் என்பதனை ஆய்வு செய்வதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கம் ஆகும். தம் நாவல்களில் இலக்கியச் சுவைபட கதைகளையும் கதைமாந்தார்களையும் படைத்துள்ளார். இவரின் கதைகளில் இடம் பெரும் வருணனைகள் உவமைகள் மற்றும் சீரிய கருத்துக்கள் அனைத்தும் இவரின் படைப்பாற்றல்  திறனை வெளிக்கொணர்வதோடு இலக்கியம் பாங்கினையும் கொண்டுள்ளன.

திறவுச்சொல்          
பண்புக்கூறுகள் – இயற்கை வருணனைகள் – தலைவன் தலைவி – குடும்ப வாழ்க்கை – நட்பு – விருந்தோம்பல்.

முன்னுரை
         
       எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் எழுத்துலகில் தனக்கெனத் தனி இடம் பிடித்தவர் என்பதில் ஐயமில்லை. தன் நாவல்களில் தன் சிந்த்தனையை வெளிப்படுத்துவதோடு இலக்கியச் சிந்தனையையும் பதித்துள்ளார். இலக்கிய இலக்கண மரபுகளையும் மறவாமல் தான் கருத்துக்களோடு பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்கள் கூறும் வாழ்வியல் கூறுகளையும் தான் நாவல்கள் மூலம் வெளிப்படுத்தி உள்ளார். இவரின் நாவல்கள் ஒவ்வொன்றிலும் இலக்கியப் பண்புகளும் வரலாற்றுக் கதைகளும் இடம் பெற்றுள்ளன. அப்பண்பு நலன்கள் பற்றி இக்கட்டுரையின் மூலம் அறியலாம்.

நாவலின் பண்புக் கூறுகள்
         
       சங்க இலக்கியங்கள் உணர்த்தும் வாழ்வியல் கூறுகள் மற்றும் அறக்கருத்துக்கள் அனைத்தையும் ஆசிரியர் தம் நாவலில் உள்ளடக்கியுள்ளார். நாவலின் தொடக்கம் என்பது ஓர் இயற்கை அழகுமிக்க வருணனை பொழுதாக வடித்துள்ளார். பொழுது புலர்வதை தான் கற்பனையில் ஏற்றிக் குறிப்பிடுவது மிகவும் சிறப்பு. காதல் பற்றிய செய்திகளை ஆசிரியர் குறிப்பிடும் போது கதைமாந்தர்களின் மாண்பு பெரிதும் மதிக்கப்படுவதாகவும் போற்றப்படுவதாகவும் உள்ளன. காதல் என்பது தலைவன் தலைவியின் உணர்ச்சியின் ஊடுருவல் மட்டும் அல்ல. அது இருமனங்கள், இருவரின் தனித்தன்மையைப் போற்றப்படுவது என்ற கருத்தினை மையப்படுத்தியுள்ளார்.

நாவலில் இயற்கை வருணனைகள்       
      நாவலில் இயற்கை வருணனைகள் பற்றிய செய்திகளைக் குறிப்பிடும் போது மிகவும் கலைநுணுக்கத்தோடு வெளிப்படுத்தியுள்ளார். காதல் மற்றும் வீரம் சார்ந்த பாடல்களில் இயற்கையானது ஒரு முக்கியப் பின்னணியாக விளங்குகிறது. இயற்கையை ஆசிரியர் கையாளும் முறையானது இயற்கையின் கூறுகள் உவமைகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இயற்கை என்பது இயல்பானது. மனித சக்தியில்லாமல் தானே தோன்றியப் பொருள்கள் அனைத்தும் இயற்கை எனப்படும். இதனைத் தொல்காப்பியத்தில் காணமுடிகிறது.

“நிலம் நீர் தீ வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம்”1 
         
‘பிறந்த இடம் நோக்கி’ என்ற குருநாவலில் அதிகாலைப் பொழுது புலர்வதை,

“வெள்ளை வேட்டியில் நீலம் தோய்த்து மாதிரி இருள் கொஞ்சம் கொஞ்சமாக
விலகி வெளிச்சம் பரவிக் கொண்டிருந்த அதிகாலைப் பொழுது”2
என்று நாவலின் தொடக்கமாக உருவாக்கியுள்ளதை, இவரின் கற்பனைத் திறனை வெளிக்காட்டுகிறது.

தலைவன் – லைவி பற்றியச் செய்திகள்       
        சங்க இலக்கியங்கள் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டதாகும். தன்னுடைய நாவலில் தலைவன் தலைவியின் அன்பு கலந்து அகவாழ்க்கை பற்றிக் கூறும் போது தலைவியின் அழகு மற்றும் பண்புநலங்கள் பெரிதும் போற்றப்படுவதாக உருவாக்கியுள்ளார்.  தலைவன் பற்றிய காதல் செய்திகளைக் குறிப்பிடும் போதும் தலைவனின் நேர்மை மற்றும் உயர்ந்த நற்குணங்களை மதிக்கப்படுவதாகப் படைத்துள்ளார்.
          “காதலெனும் ஏணியிலே” என்ற நாவலில் தலைவியின் பண்பு நலன்கள் மிகவும் மதிக்கத்தக்கதாகச் சித்தரித்துள்ளார். தன் தோழனின் இன்பம், துன்பம் அவரின் விருப்பத்தினை ஏற்று வாழ்வில் உயர்த்துவது தான் என்ற கருத்தினையும் பதித்துள்ளார். இது காதலின் உயர்ந்தப் பண்பினையும் மாண்பினையும் காட்டுகின்றன. இக்கருத்தினைக் குறுந்தொகையில் தலைவியின் உண்மைக்காதல் உள்ளத்தே நிறைந்துருந்தமைப் பற்றி,

“நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே”3 
         
  என்ற பாடல் வரிகள் உணர்த்துகின்றன. ஆசிரியர் பிரபஞ்சன் அவர்களும் ஒரு பெண்ணின் உண்மைக்காதல் பற்றித் தம் கதையில் சித்தரித்துள்ளார்.

சங்ககால குடும்ப வாழ்க்கை 
         
        கணவன்-மனைவிக்கு இடையேயான அன்பு, அறம் மற்றும் அருங்குணங்கள் இல்வாழ்க்கையின் பயன் என சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இக்கருத்தினை ஆசிரியர் தன் நாவலில் குறிப்பிட்டுள்ளார்.
          ‘எனக்குள் இருப்பவள்’ என்ற நாவலில் பெண்மையைப் போற்றியும் பெண்மைக்கே உண்டான அன்பு, அறிவு, பொறுமை போன்ற குணநலன்களைக் கதாப்பாத்திரங்களின் மூலமாக வெளிப்படுத்தியுள்ளார். கணவன் மனைவி ஆகியோரைச் சுற்றியுள்ள உறவினர்களின் பங்களிப்புப் பற்றியும் நாவலில் அழகாக எடுத்தாண்டுள்ளார். திருமணம் பற்றியும் ஒரு பெண்ணின் பெருமை திருமணப் பந்தத்தில் தான் உள்ளது என்பதனைத் தன் கதையின் வாயிலகச் சமூகத்திற்கு உணர்த்தியுள்ளார்.

“கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளர்க்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குறி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே”4
         
      கற்பு வாழ்க்கை என்பது ஊரார் அறிய பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு தலைவனும் தலைவியும் வாழும் அன்பு வாழ்க்கை என்று தொல்காப்பியம் உணர்த்துகிறது. இக்கருத்தையே ஆசிரியரும் ‘பிறந்த இடம் நோக்கி’ என்ற நாவலில் எடுத்துக் கூறுகிறார்.

நடப்புப் பற்றியச் செய்திகள்         
      சங்க இலக்கியங்களில் நட்பு பற்றிய செய்திகள் மிகவும் அழகாக எடுத்தாளப்பட்டுள்ளன. புறநானூற்றில் நட்பு என்பது கோபேருஞ்சோழன் பிசிராந்தையாரின் ஆழமான உறுதியான நட்பு பற்றிப் பேசப்படுகிறது.
நட்பின் இலக்கணமாகத் திருவள்ளுவர், தம்முடைய குறளில்

“உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு”5 
         
      என்று குறிப்பிட்டுள்ளார். இருவர் நட்புக்கொள்ளும் போது வெறும்பகட்டினைக் கொண்டு நட்புக் கொள்ளாமல் ஒருவரிடம் வெளிப்படும் பண்புகளை வைத்து அவரிடம் நட்பு கொள்கிற போது அது நல்வழிப்பட்டதாகும் என ஔவையார் பாடல்வழி அறியலாம்.

“இணக்கம் அறிந்து இணங்குக”6
         
      ஆசிரியர் பிரபஞ்சன் அவர்கள் ‘காதலெனும் ஏணியிலே’ என்ற நாவலில் கதைமாந்தார்களான சேதுராமன் ரேகா இவர்களின் நட்பினைப் பற்றி அழகாகவும், ஆழமாகவும் குறிப்பிட்டுள்ளார்.  சேதுராமனின் வளர்ச்சிக்கு ரேகாவின் ஆழமான நட்பும் அன்பும் காரணமாக இருந்தது என்பதனை வெளிக்காட்டியுள்ளார். ஔவையார் அதியமான் நட்பு சுயநலமற்ற நட்புக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும். அதே போல சேதுராமன் ரேகா நட்பும் சிறப்பானதாக எடுத்துக் காட்டியுள்ளார் ஆசிரியர்.

தமிழரின் விருந்தோம்பல் பண்பு 
         
       நம் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பு என்பது மிகவும் பாராட்டத்தக்க பண்புகளில் ஒன்றாகும். சங்க இலக்கியங்கள் விருந்தோம்பலை ஒரு முக்கிய அறமாகக் கருதுகின்றன. மற்றவர்களுடன் உணவைப் பகிர்ந்துண்ணும் பண்பைச் சிறப்பித்துப் புலவர்கள் ‘பசிப்பிணி மருத்துவர்’ என்று அழைத்தனர். விருந்தினரை நண்பனைப் போல உறவுக்கொண்டு இனிய சொற்களைக் கூறி எலும்பே குளிரும்படியான அன்பால் நெகிழச் செய்ய வேண்டும் எனப் பொருநாரற்றுப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“கேளிர் போல கேள் கொளல் வேண்டி
வேளாண் வாயில் வேட்பக் கூறி
கண்ணில் காண நண்ணுவழி இரீஈ
பாரூக்கு அண்ணா அருகா நோக்கமோடு”7
         
       என்ற பாடல் வரிகள் உணர்த்துகின்றன. இக்கருத்தை ஆசிரியர் பிரபஞ்சன் அவர்கள் “மகாநதி” என்ற நாவலில் கோவிந்தன் என்பவர் வீட்டிற்கு நாடுசாமம் உதவிக்கேட்டு வரும் பெரியவருக்கும் அவர் மகளுக்கும் முதலில் பருகத் தண்ணீர் கொடுக்கிறார். பின்னர் உணவு வீட்டில் இல்லாத வேளையிலும் தன் மனைவியை உப்புமா சமைத்துப் பரிமாறிப் பசியாற்றியப் பண்பு, நம் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பினை வெளிக்கொணர்கின்றது.

முடிவுரை 
         
       தம் நாவல்களில் சித்தரிக்கப்பட்டுள்ள கதைமாந்தர்களின் பண்புகள் நம் தமிழர்களின் பண்பாட்டையும் வாழ்வியல் கூறுகளையும் சிறப்பித்துக் காட்டுவதாக ஆசிரியர் படைத்துள்ளார். மேலும், நாவல்களில் இலக்கியங்கள் உணர்த்தும் அறக்கருத்துக்களையும் பண்பாடுப் பற்றிய செய்திகளையும் அழகாக எடுத்து இயம்புகின்றார். மனிதன் வாழ்வில் உயர்ந்தவனாகக் காட்டுவது இலக்கியங்கள் குறிப்பிடும் நற்கருத்துக்களை ஏற்று வாழ்வில் கடைபிடிப்பதே ஆகும். இக்கருத்தினைத் தம்  கதைகளின் மூலம் உணர்த்திப் படிப்போரையும் சமுதாயத்தையும் பண்பட செய்வது ஆசிரியரின் சிறப்பாகும்.

சான்றெண் விளக்கம்
1. ஆசான் ம. செந்தமிழ்           – தொல்காப்பியம் மரபியல் ப.91

2. பிரபஞ்சன்                           – பிறந்த இடம் நோக்கி ப.3

3. இரா. அறவேந்தன்               – குறுந்தொகை ப.116

4. க. வெள்ளைவாரணன்        – தொல்காப்பியம் கற்பு ப.140

5. எம். சிவசுப்ரமணியன்          – திருக்குறள் – குறளும் விளக்கவுரையும். 788  
   ப.171

6. நாராயணசாமிபிள்ளை         – ஆத்திச்சூடி ப.20

7. ஞா.மாணிக்கவாசகன்          – பொருநராற்றுப்படை மூலமும் விளக்கமும் ப.60

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
ந. ஏகாம்பாள் லதா
Iniyavaikatral peer reviewedபகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை,
அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி,
ஆத்தூர் சேலம் மாவட்டம்-636121
நெறியாளர்
முனைவர் அ. சின்னதுரை
இணைப்பேராசிரியர்/நெறியாளர்

தமிழ்த்துறை,

அறிஞர் அண்ணா  அரசு கலைக் கல்லூரி,

ஆத்தூர், சேலம் மாவட்டம்-636121.

 

இனியவை கற்றல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here