Abstract
Carpentry is one of the handicrafts of the ancient Tamil people. All the crafts that are useful for the prosperous life and comfort of the people are livelihood crafts. The special characteristics and structures of carpentry crafts can be seen in Sangam literature. Carpenters who have skillful activities along with artistic techniques are known through Sangam literature.
பண்டையத் தமிழர்களின் தச்சுத்தொழில் முறைகள்
ஆய்வுச் சுருக்கம்
பண்டைய தமிழ் மக்களின் கைத் தொழில் முறைகளில் ஒன்று தச்சுத்தொழில்கள். மக்களின் வளமான வாழ்விற்கும் வசதிக்கும் பயன்படும் தொழில்கள் அனைத்தும் வாழ்வியல் தொழில்கள் ஆகும். சங்க இலக்கியங்களில் தச்சு தொழில்களின் சிறப்பு இயல்புகளை அமைப்புகளைக் காணலாம். கலை நுணுக்கங்களுடன் திறன் மிக்கச் செயல்பாடுகளைக் கொண்ட தச்சர்கள் சங்க இலக்கியங்களின் வாயிலாக அறியப்பெறுகின்றனர்.
ஆய்வுச்சிக்கல்
பண்டையத் தமிழ் மக்களின் தொழில் முறைகளைப் பேணுவதே நோக்கமாகக் கருதப்படுகிறது தவிர வேறு எந்த இனத்தையும் சார்ந்ததாகக் கூறப்படவில்லை என்பதை இவ்வாய்வின் சிக்கலாகக் கருதப்படுகிறது.
ஆய்வு முறையியல்
பகுப்பாய்வு, தொகுப்பாய்வு முறை, ஆய்வியல் முறைமையில் இவ்வாய்வு விளக்கப்படுகிறது.
முன்னுரை
பண்டையக் காலத்து நானில இயல்புகளும் மக்களின் ஒழுகலாறும் அரசியல், வாணிகம் உழவு முதலிய தொழிற்றுறை இயல்புகளும் மக்களின் வாழ்க்கைப் பண்பாடு, அவர்கள் கையாண்ட க் கருவிகளின் இயல்பும் பிறவும் அறிவதற்குச் சங்க காலப் பழந்தமிழ் நூல்களான பத்துப்பாட்டு, எட்டுத் தொகையும் நல்ல சான்றுகளைக் கொண்டுள்ளன. இவற்றை ஆதாரமாகக் கொண்டு பண்டையத் தமிழரின் அரசியல், சமுதாய வாழ்வியலை பற்றிய பல அரிய நூல்கள் அறிஞர் பலரால் எழுதப்பட்டுள்ளன. வாழ்வியல் சிறக்க அடிப்படைக் காரணமாக விளங்கும் தொழில்கள் பற்றிய நிகழ்வினை இவ்வாய்வில் காணலாம்.
“வினையே ஆடவர்க்கு உயிரே”1
என வரும் குறுந்தொகை பாடல்கள் வழி உணர்த்தப்படுகிறது.
பண்டையத் தொழில் முறைகள்
தமிழர்களின் தொழில்களில் பெரும்பாலானவை கைத்தொழில்களேயாவன. பஞ்சை நூலாக்கி துணி நெய்தலும், இரும்பை உருவாக்கிக் கருவிகள் செய்தல் போன்றவை.தொழில்கள் பெருமளவு மனிதன் முயற்சிகளாகவே இருந்தன. இவற்றிற்குப் பயன்பட்ட கருவிகளும் எளிய அமைப்பினை உடையவையாகும். ஒரு தொழில் செய்பவனே தான் செய்யும் தொழிலுக்கு உரிமை உடையவனாகவும் இருந்தனர். அவரவர் வாழ்ந்த நிலத்திற்கு ஏற்ற வகையில் அவர்களது தொழிலை மேற்கொண்டனர். இவற்றால் அக்காலத்தில் தொழில் செய்வதில் கடும் உழைப்பும், பொறுப்புணர்ச்சியும், சுதந்திர மனப்பான்மை, ஆர்வத்தின் தேவைகள் இருந்தமையால் தொழில்கள் நேர்மையுடன் நேர்த்தியாகவும் செயல்பட்டன.
அழகுக் கலையின் திறன்கள்
தொழில்களுடன் அழகுக்கலையும் ஒன்றோடு ஒன்று இணைந்து இயங்கக் கூடியவையாகத் திகழ்கின்றது. தொழில்களில் அழகுக் கலைத் தொழில் சாயல் கையாளுகின்ற திறமைப் போன்றவை இருக்க வேண்டும் அவன் தான் சிறந்த கலைஞனாக இருக்க முடியும் என்பதை புறநானூற்றில் ஒரு நாளில் எட்டு தேர்களைச் செய்யக்கூடிய தச்சன் ஒரு மாதம் முயன்று மிகுந்த கவனத்துடன் ஒரு தேர் காலை உருவாக்கினார். இதனை
“……………………. வைகம்
எண்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த காலன் ளோனே”2
புறநானூற்றுப் பாடல் ஒன்று தெளிவுபடுத்துகிறது என்பதே அறியப் பெறுகின்றது. கலைப்படைப்பின் அழகினை வன்கலை அல்லது தொழில் என்று கூறுகின்றனர் . இதனை
“கலை வளர்ப்போம் கொல்லர் உலை வளர்ப்போம்
ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம்
உலகத் தொழிலனைத்தும் உவந்து செய்வோம்”3
எனப் பாரதியார் பாடியது போல நாடு நலம் பெற கலையையும் தொழிலையும் செழிக்கச் செய்தல் வேண்டும். இதற்கு வழிகாட்டிகளாய்த் திகழ்ந்தவர் பண்டையத் தமிழரே ஆவார். காலப்போக்கில் பல்கிப் பெருகித் தழைத்து வளர்ச்சி அடைந்து காணப்படுகின்றன.
தச்சுத்தொழிகளின் சிறப்புகள்
இயற்கை தந்த செல்வம் பலவகையான உரம் வாய்ந்த மரங்களே. தகுதி உள்ள மரங்களை அறுத்து வீடு அமைப்பதற்கும், வண்டி, தேர் முதலிய செய்வதற்கும் வழிகண்ட பெருமை தச்சர் என்னும் தொழிலாளர்களுக்கே உரியதாகும்.’ தச்சு’ என்பது ஒன்றையும் மற்றொன்றையும் பொருந்தி இணைப்பதாகும். இத்தச்சுத் தொழிலைச் செய்வோர் தச்சர் எனப்பட்டனர். கல் தச்சு தொழில் செய்வோர் கல்தச்சர் எனவும், மரத்தச்சு தொழில் செய்வோர் மரத்தடச்சர் எனவும் வழங்கப்பட்டனர். தச்சு தொழிலாற்றியதால் தச்சர் எனப்பட்டனர். மரத்தொழில் செய்து வந்த தச்சன் சங்க காலத்து இலக்கிய வழக்கில் மரக்கொல் தச்சன் என வழங்கப்பட்டான். மரம் கொல் என்பது மரத்தை வெட்டுதல் எனப் பொருள்படும் மரக்கொல் தச்சன் என்னும் சொல்
“காவினெம் கலனே சுருக்கினெம் கலப்பை
மரங்கொல் தச்சன் மைவல் சிறாஆர்”4
இப்பாடல் புறநானூற்றில் விளக்கப்படுகின்றது. சங்ககால இலக்கியங்களில் திறமை வாய்ந்த தச்சர்கள் பற்றிய குறிப்புகள் வருகின்றன. இவர்கள் தச்சுத் தொழிலை குலத்தொழிலாகக் கொண்டனர். தமிழ்நாட்டுத் தச்சர்கள் மக்கள் வாழ்க்கைக்கு தேவையானப் பொருள்களைச் செய்து கொடுத்தனர். நால்வகைப் படைகளில் தேர் படையும் ஒன்றாக இருத்ததால் தேர்வு செய்வது அன்றையத் தச்சர்களின் தலையாயக் கடமையாக இருந்திருத்தல் வேண்டும். கண்ணைக் கவரும் வண்ணம் நேர்த்தியாகத் தேர்களை அக்காலத்தில் செய்யப்பட்டன. இதனை
“கண்ணோக் கொழிக்கும்
பண்ணமை நெடுந்தேர்”5
அகநானூற்றுப் பாடல் புலப்படுத்துகின்றது. தச்சரின் தொழில் திறமைகளை உணர்த்தப்படுகின்றன.
‘சகடம்’ பொருள் விளக்கம்
‘சகடம்’ ஒன்றின் வரிவான விளக்கத்தைக் காணலாம். திரண்ட வட்டையில் ஆரக்கால்கள் சொருகி அமைக்கப்பட்ட சக்கரங்கள் முழு மரத்தில் கடைந்தெடுக்கப்பட்ட குடங்கள் மத்தளங்கள் போன்று உள்ளன. ஆர்கள் குடத்திற்கும் வட்டைக்கும் இடையில் பொருத்தப்பட்டிருந்தன. அச்சு மரத்தின் மேலே நெடியவாய் இரண்டு பக்கத்தும் நெடுகக் கிடைக்கின்ற பருமரங்கள் இரண்டினையும் நெருங்கத் துறைத்து குறுக்கே ஏணி போலக் கோர்த்துப் பார். அதன் மேல் ஆரைப் புல்லான கூண்டு அமைக்கப்பட்டு இருக்கிறது.
“கொழுஞ்சூட் டருந்திய திருந்துநிலை யாரத்து
முழவி னன்ன முழு மர வுருளி
எழூஉப்புணர்ந் நன்ன பரூஉக்கை நோன்பார்
மாரிகுன்ற மழைசுமந் தன்ன
ஆரை வேய்ந்த வறைவாய்ச்சகடம்”6
இக்குறிப்பு பெரும்பாணாற்றுப்படையில் தச்சர்களின் திறம்பாட்டை காட்டுகிறது. ஒரு தொழிலாளர்களின் திறமைகள்அவர்களின் கைவண்ணத்தில் காணலாம் அவ்வகையில் தச்சர்களின் செயல்பாடுகளை வைத்து அவர்களின் திறமைகளை ஆய்ந்து உணரலாம்.
தச்சர்களின் திறமைகள்
இயற்கை நமக்கு கொடுத்த மரங்களின் பயன்களை தச்சர்கள் தங்களுடையத் திறமைகளின் கை வண்ணத்தில் காண்கின்றனர். இவர்கள் பல அரிய பொருட்களை செய்து தங்களின் திறமை கோல்களை நிலைநாட்டி உள்ளனர். அரண்மனை மதில் கதவுகள், வாயில் நிலைக்கால், அமைப்பு, வாயில் நெடுநிலை ஆகியவற்றை குறித்து கூறுகையில் தச்சர்களின் தொழில் மேம்பாடு வளர்ச்சி நிலை அடைந்து உள்ளதை அறியலாம். இவற்றில்
“ஒருங்குடன் வளைஇ ஓங்கு நிலை வரைப்பில்
பருஇரும்பு பிணித்துச் செல்வரக் குரீஇ
துணைமாண் கதவம் பொருத்தி இணை மாண்டு
நாளொடு பெயரிய கோளமை விழுமரத்துப்
போதவிழ் குவளைப் புதுப்பிடி காலமைத்துப்
ஐயவி அப்பிய நெய்யணி நெடுநிலை”7
என்ற பாடல் வரிகள் தச்சரின் அரண்மனையின் வேலைபாடுகளை குறித்தச் சிறப்பினை நெடுநல்வாடையில் விளக்கப்படுகிறது.
முடிவுரை
பழங்காலம் முதல் இன்று வரை தச்சர்களின் வேலைப்பாடுத்திறன்கள் அதிகரித்து உள்ளது. பண்டையத் தொழில் முறைகளில் தச்சு தொழில்களின் முக்கியத்துவத்தைக் காணலாம். இவர்களின் அழகிய வேலைபாடுத்திறன் நுணுக்கங்கள் கலை நயத்துடன் வெளிப்படுகின்றது. கைத்தொழிலின் சிறப்பு அம்சங்களாக தச்சு தொழில் செயல் படுகிறது. சங்க இலக்கியங்கள், காப்பியங்கள் சான்றாக அழகு உணர்வுடன் வர்ணனைகளையும் வர்ண பூச்சுக்களையும் கொண்டு அரண்மனைகளையும் வாயில் மதில்களையும் அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பினைக் காணலாம். நுண்கலைகளில் ஒன்றான தச்சுத் தொழிலின் சிறப்பு இயல்புகளை இவ்வாய்வின் மூலம் அறியப்பெறுகின்றன.
சான்றெண் விளக்கம்
1.குறுந்தொகை.135
2.புறநானூறு பாடல்.87
3.பாரதியார் கவிதை
4.புறநானூறு.206
5.அகநானூறு.234
6.பெரும்பாணாற்றுப்படை.6
7.நெடுநல்வாடை.79-86 வரி
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர். சு. இளவரசி
உதவிப்பேராசிரியர்
தமிழாய்வுத்துறை
ஜமால் முகமது கல்லூரி (தன்னாட்சி)
திருச்சி.