Nugathadi Novel Mun Vaikkum Penniya Aththumeeralgal|Dr.S.Prabakaran

Nugathadi Novel Mun Vaikkum Penniya Aththumeeralgal - Dr.S. Prabakaran
Abstract
         
        Tribal communities are those who live as small, distinct ethnic groups within a specific geographical region, each possessing their own separate language. They traditionally existed without rigid structures of caste or organized religion, rejecting idol worship and instead venerating nature. They engaged in occupations that did not exploit or destroy the environment and led lives in harmony with it. With no hierarchical distinctions between men and women and no strong sense of private property, they carried out all essential tasks themselves—such as washing clothes, cutting hair, and burying the dead. Hunting was done only to meet immediate needs, reflecting their simple and self-sustaining way of life. According to the 2011 Census, there are 36 recognized tribal communities living in Tamil Nadu, constituting approximately 3.5% of the state’s total population. In ancient Tamil ecological classification, land was divided into five regions: Kurinji (mountainous), Mullai (forest), Marutham (agricultural plains), Neithal (coastal), and Paalai (arid). The Kurinji region was inhabited by the Kuravar tribal community. They sustained themselves through occupations such as hunting and honey collection. Since their habitats—mountains and forests—were rich in natural resources, European colonial rulers who governed India, along with Indian capitalist elites, displaced these communities and seized their lands. Forced out of their traditional habitats, the Kuravar people migrated to the plains and took up various occupations for survival. Dominant caste groups and ruling classes compelled many of them into sanitation work. In these new social settings, they—especially the women—faced numerous social, economic, and gender-based challenges. These realities have been reflected in several works of Tamil literature. Notably, the novels Salavaan and Nugathadi by Pandiyakannan address such issues. This article focuses specifically on examining the feminist concerns articulated in the novel Nugathadi.


“நுகத்தடி நாவல் முன்வைக்கும் பெண்ணிய அத்துமீறல்கள்

முன்னுரை
         
       சிறு சிறு இனங்களாக ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியில் தமக்கெனத் தனித்தனி மொழியைக் கொண்டவர்களாக வாழ்பவர்கள் பழங்குடிகள் என்று அழைக்கப்பட்டனர். சாதி, சமயம் இல்லாத உருவ வழிபாட்டை ஏற்காமல் ,இயற்கையை வணங்குகின்ற இயற்கையைச் சிதைக்காத தொழில்களையும் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையையும் உடையவர்களாக ஆண், பெண் ஏற்றத்தாழ்வும் சொத்து உணர்வும் அற்றவர்களாக துணிதுவைத்தல், முடிதிருத்துதல், இறந்தவர்களைப் புதைத்தல் முதலிய அனைத்தையும் தாங்களே செய்பவர்களாக தேவைக்கு மட்டும் வேட்டையாடுகின்ற எளிய வாழ்க்கை முறையை கொண்டவர்கள் பழங்குடிகள். தமிழகத்தில் 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 36  வகையான பழங்குடிகள் வாழ்ந்து வருகின்றனர். இது தமிழ்நாட்டின் மொத்தமக்கள் தொகையில் 3.5% ஆகும்.1 தமிழர்கள் நிலத்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்தாகப் பிரித்து வாழ்ந்தனர். இதில் குறிஞ்சி நிலத்தை ஆண்டவர்கள் குறவர் இன பழங்குடிகளாவர். இவர்கள் வேட்டையாடுதல், தேனெடுத்தல், போன்ற தொழில்களைச் செய்து வாழ்ந்தனர். இவர்களின் வாழ்விடமான மலை, காடு போன்ற பகுதிகளில் ஏராளமான இயற்கை வளங்கள் நிறைந்திருந்த காரணத்தினால் இந்தியாவை ஆண்ட வெள்ளை இனமக்களும் இந்திய பெருமுதலாளிகளும் இம்மக்களை விரட்டியடித்து அவர்களின் வாழ்விடங்களைக் கைப்பற்றினர். விரட்டியடிக்கப்பட்ட இக்குறவர் இனமக்கள் சமவெளிப் பகுதிகளில் வந்து குடியேறினர். வாழ்வதற்காகப் பல்வேறு தொழில்களைச் செய்தனர். ஆதிக்க சாதியினராலும் ஆளும் வர்க்கத்தினராலும் இம்மக்கள் துப்புரவு  பணியாளர்களாக கட்டாயப்படுத்தப் பட்டனர்.  இங்கும்  இம்மக்கள் குறிப்பாக பெண்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்தனர் இதனை மையப்படுத்தி தமிழில் பல்வேறு இலக்கியங்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக பாண்டியக்கண்ணனின் சலவான், நுகத்தடி போன்ற நாவல்கள் அமைகின்றன. இக்கட்டுரையானது நுகத்தடி நாவல் முன்வைக்கும் பெண்ணிய சிக்கல்கள் குறித்து ஆராய்கின்றது.

நாவல் – அறிமுகம்
         
      இந்தியாவில் பிரமிடு வடிவ சாதியக் கட்டுமானத்தின் அடிவரிசையில் இருக்கும் குறவர் சமூகத்தின் சொல்லொண்ணாச் சோகத்தைச் சித்தரிக்கிறது. பாண்டியக் கண்ணனின் நுகத்தடி நாவல். இது 2018 ஆம் ஆண்டு வெளிவந்தது. புதைக்கப்பட்ட மனித வதைகளையும் மறைக்கப்பட்ட உண்மைகளையும் மீட்டெடுக்கும் முயற்சியாக இந்நாவலைப் பார்க்கலாம். காலமெல்லாம் நம் கண்களுக்கு கணமுற்று எளிய மக்களைத் துரத்தி துரத்தி துண்டாடப்படுவதும் பெண்களைப் பாலியல் துன்புறுத்தலோடு பெண் உறுப்புகளைச் சிதைப்பதும் ஆண்களை அடித்துக்கொள்வதும் அன்றாட வாழ்க்கையாகிப் போனதை இந்நாவல் அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. துப்புறவுத் தொழிலாளர்கள் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களாலும் புறக்கணிக்கப்பட்டும் வஞ்சிக்கப்பட்டும் வாழ்வதை இந்நாவல் பேசுகிறது.
         
         காலனிய காலத்தில் புழக்கத்தில் இருந்த கொடுஞ்சட்டமான குற்றப் பரம்பரைச் சட்டம் (1871) சுதந்திர இந்தியாவில் பிற சாதியினர்களுக் கெல்லாம் (1949) நீக்கப்பட்ட பின்னறும் குறிஞ்சி நில மக்களான குறவர் இன மக்கள் மட்டும் இன்றும் இக்கொடிய சட்டத்தின் கோரப் பிடியிலிருந்து வெளிவரமுடியாமல் தவிக்கிறார்கள். இவர்களை நிழல்களைப் போலத் தொடர்ந்து காவல்துறை வேட்டையாடி வருகிறது. சுகாதாரத் துறையும் துப்புரவு தொழிலாளர்களை அடிமைகளைப் போலவே பாவிக்கிறது. இந்நாவலில் துப்புரவு தொழிலுக்குத் தள்ளப்படும் குமாரின் வாழ்க்கை நம்மைப் பதர வைக்கிறது. அது போல உயிரை பணயம் வைத்து செப்டிக்டேங்கில் இறங்கி சுத்தம் செய்யும் நான்கு தொழிலாளியின் அவலம். பல்வேறு கனவுகளுடன் துப்புரவு பணிக்கு வேலைக்கு வரும் சந்திரா நாவல் முழுக்க காவல் துறையால் துரத்தி துரத்தி வேட்டையாடப்படுவது போன்ற பல இன்னல்களை இந்நாவல் பேசுகிறது.

துப்புரவு பணியும் பாலியல் சிக்கலும்
         
      சந்திரா என்ற பெண் தாய் தந்தையை இழந்தவள். இவளை நன்றாகப் படிக்கவைத்து நல்லவேளையில் அமர்த்தவேண்டும் என்று இவள் பெற்றோர்கள் ஆசைப்படுகிறார்கள். இவளின் தந்தையும் தாயும் ஊருக்கு வெளியே குப்பையைக் கொட்டுவதற்கு குப்பை வண்டியைத் தள்ளிக்கொண்டு செல்லும் போது லாரியில் அடிபட்டு இறந்து போகிறார்கள். பெற்றோர்களை இழந்த சந்திரா தான் படிக்கா விட்டாலும் தன் தம்பி, தங்கைகளையாவது படிக்கவைத்து தாயின் கனவை நனவாக்க வேண்டும் என்று நினைத்துத் துப்புரவு தொழிலாளியாக வேலைக்குச் சேருகிறாள். வேலைக்குச் சேர்ந்த முதல் நாளிலேயே அவள் துயரம் தொடங்குகிறது. வருகைப் பதிவு எடுப்பத்தற்காக சந்திரா வரிசையில் நிற்கிறாள் வருகைப்பதிவு தொடங்குகிறது மேஸ்திரி பெயர்களை வாசிக்கிறார் அவைப் பின்வருமாறு;
 
“முத்தம்மா”
இருக்கேன் எசமா 
“மாரியப்பா”
வந்துட்டன் சாமி
“முனியா”
இருக்கன் எசமா………..
       என்று ஒவ்வொருவரும் வருகைப் பதிவை உறுதிசெய்து கொண்டனர். துப்புரவு பணியாளர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்திடும் தவறுகளுக்கு அதிகாரிகள் ஆண்களுக்கென்றால் வேலைபறிப்பும் பெண்களுக்கென்றால் கற்புபறிப்பும் தரும் தண்டனையாகும். புதிதாக வேலைக்கு வந்த சந்திரா துப்புரவுப் பணியாளருக்கானச் சீருடையைச் சரியாக அணிந்திருக்கவில்லை. சேலையை பின் கொசுவம் வைத்து கட்டியிருக்காமல் முன் கொசுவம் வைத்தும் மொட்டி வரை அடி முந்திவிட்டுக் கட்டாமல் பாதம் தழுவியும் கட்டியிருந்தாள். அள்ளி முடிந்து கொள்ளும் கூந்தலைப் பின்னி முடித்திருந்தாள். இது போதாதா இவளை சர்வதேசக் குற்றவாளியாக்க மேலும் இளம்வயதுடைய பெண்ணுக்குத் தண்டணைக் கொடுப்பதென்றால் கரும்பு தின்னும் கூலி போன்றதாகும்.
         
        ஏத்தா ஓம் பேரு என்ன? எனக்கேட்டார் மேஸ்திரி எம்…….பேரு ……. சந்திரா…..ங்க …………..சார் இந்த வார்த்தை மேஸ்திரிக்குப் புதிதாகத் தென்பட்டதால் முதல் முறையாக துப்புரவு பணியாளர்களைப் பார்த்துப் பதறினார்.
” சாரா, ஏத்தம் தாண்டி ஒனக்கு என்ன வேலைக்கு வந்துருக்கியா இல்ல ஆட வந்துரிக்கியா?” என்………ங்க………ய்யா
          ம் நொன்னங்கய்யா போ அங்கபோயி நில்லு என முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டு சொன்னார். மற்ற பணியாளர்கள் அனைவரும் தன் பணியைச் செய்வதற்காக அவர்களின் பகுதிக்குச் சென்றவுடன் சந்திராவை அழைத்து ஆய்வாளர் அறையை சுத்தம் செய்ய சொல்கிறார் மேஸ்திரி. இவளும் அறையை சுத்தம் செய்து கொண்டிருக்கிறாள். அப்போது ஆய்வாளர் வெளியில் யாரேனும் இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு அலுவலக கதவை மெதுவாக தாழிட்டுவிட்டு அவள் பின்னால் வந்து நின்று பின்புலத்தை நீவத் தொடங்கினான். ஓடிக்கொண்டிருக்கும் மாடு மிரண்டது போல் அவள் துள்ளி முன் மேசைகட்டையில் முட்டிமோதினாள் மேசையில் மோதியதால் மண்டை உடைந்து ரத்தம் சொட்டசொட்ட தப்பித்து ஓடினாள். உடனே ஆய்வாளர் சந்திரா மோதிரத்தை திருடிவிட்டு ஓடிவிட்டதாக பொய்வழக்குப் போடுகின்றனர்.
காவல்துறையின்பொய்வழக்கும் பாலியல் அத்துமீறளும்        நாவல் முழுவதும் காவல்துறையின் வன்முறைகளால் நிரம்பியுள்ளது. காவல்துறைக்கும் குற்றவாளிக்கும் இடையே ஒரு வலுவான கூட்டு இருப்பதைப் பார்க்கமுடிகிறது. குற்றவாளிகளைத் தப்பிக்க விட்டு அப்பாவி மக்களைக் கூண்டில் ஏற்றுகிறார்கள். அபலைப்பெண் சந்திராவை நரவேட்டை ஆடுகிறார்கள். இவள் மீது பொய்வழக்குப் போடப்பட்டதால் இவளைப் பிடிக்க வந்த ஏட்டையா,
                  
” அடி களவாணி கண்டாரோழி என்று அவள் பிறப்புறுப்பைக் குறிவைத்து சரியாக எத்தினார்.2
         
         போலீசின் கொடூரத் தாக்குதலில் அவள் பழைய சேலை தாறுமாறாய் கிழிந்து உள்ளாடைகள் சல்லடைகளாக மாறியது அவள் அடியைத் தாங்குவதா? முலையை மறைப்பதா? எனப் போராடினாள். இறுதியாக அரைபிணமாக காவல் நிலையத்தில் கிடந்தாள்.”3 பின்பு மருத்துவ மனையில் சேர்க்கப் படுகிறாள். மருத்துவத்துறையில் நடக்கும் ஊழலால் பாதிக்கப்படுகிறாள். அங்கிருந்து தப்பித்து ஓடுகிறாள். மீண்டும் சிக்குகிறாள் சீரழிக்கிறார்கள். இம்முறை சந்திராவோடு சேர்த்து அம்ஸா, பிரபா என்ற பெண்கள் மீதும் பொய்வழக்குப் புனைந்து தண்டனை என்ற பெயரில் பாவாடை, ஜாக்கெட்டோடு நிற்கவைத்தனர். பின்பு ஜாக்கெட்டை கிழித்து அரை நிர்வாணமாக்கினர். பாவாடை நாடாவை குண்டாந்தடியை வைத்து அவிழ்த்தனர்.  அம்ஸா, கூனிக்குறுகி கீழே உக்கார்ந்தாள். இதே போன்று மற்ற இருவரையும் நிர்வாணமாக்கினர். பின்பு குண்டாந்தடியில் நன்கு விளக்கெண்ணைத் தடவி உயிர்வாசலில் மெல்லமெல்ல செலுத்தினர். அதன் பின்பு மார்பு, பிட்டம் போன்ற பகுதிகளில் மிளாகாய் பொடியை அப்பினர். அவர்கள் தீ குளத்தில் தத்தளித்தனர்.4  
       உயிர் வாசலில் ரத்தம் பெருக்கெடுத்துக் கொட்டியது.அரசு மருத்துவமணையில் சேர்த்தாள் மாட்டிக்கொள்வோம் என்ற காரணத்திற்காக இம்முறை தனியார் மருத்துவணையில் சேர்த்து கிழிந்த உயிர் நாடியைத் தைத்தனர். இங்கு சந்திராவின் கிட்னியை விற்று லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். கிட்னியை இழந்தது கூட தெரியாமல் அங்கிருந்து ஓடுகிறாள். ஓடுகின்ற வழியில் இராமன் என்ற குறவனைச் சந்திக்கிறாள். இவளை போலவே இவர் மீதும் இவர் மனைவி மீதும் பொய்வழக்குப் போட்டு இவரின் கண் முன்பாகவே நான்கு காவலர்கள் இவர் மனைவியை கற்பழித்தனர். இதனால் கோபமுற்ற இராமன் ஒரு காவலரைகொன்று விட்டு தப்பித்து ஓடிவருகிறான் மீண்டும் மாட்டிக் கொள்கிறான் இவர் மீது நிலுவையில் உள்ள அனைத்து வழக்கும் போடப்படுகிறது.
“ நான் திருடிட்டு வந்தத அவகண்டிச்சா நான் கேக்கல. அவளே என்னைய போலீஸ்ல கம்பிளைண்டு குடுத்து புடிச்சி குடுத்தா. அந்த ஆத்திரத்தில போலீஸ் துப்பாக்கியால் குத்தினேன். அத தடுக்க வந்தபோலீசையும் கொலசெஞ்சிட்டு சென்னை போறரயில்ல பாடிய மறைச்சி ஏறியிருக்கும் போது கையும் களவுமாக போலீசார் என்னைய கைது செஞ்சுட்டாங்க”5 என்று பொய் வழக்கு புனைந்ததாக இராமன் கூறுகின்றார்.  தப்பித்து வந்த சந்திரா எங்குபோவது என்று தெரியாமல் திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை என்பது போல முருகனை வழி பட மயிலம் ஓடுகிறாள். அங்கும் அவள் ஏமாற்றப்படுகிறாள். கொடிய கடத்தல் பேர் வழியிடம் சிக்கி லாட்ஜ் ஓனரிடம் பாலியல் தொழிலாளியாக விற்கப்படுகிறாள்.  இவளோடு சேர்த்து மேலும் சில அப்பாவிப் பெண்களையும் பாலியல் தொழிலாளிகள் என குற்றம் சுமத்தி காவல் நிலைய லாக்கப்பில் அடைக்கிறார்கள். இதுபோல் பிறப் பழங்குடி இனப் பெண்களும் காவல் துறையினரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
           
        வீரப்பனைப் பிடிக்கச் சென்ற காவல்துறையினர் அங்குள்ள பழங்குடிப் பெண்கள் மீதும் பாலியல் அத்து மீறலை நிகழ்த்தியுள்ளது. அவைப் பின்வருமாறு;
“ ஈரம்மாளின் சேலையை உருவி எறிந்து மேலாடையைக் கிழித்து அவளை அம்மணமாக்கி விட்டிருந்தார்கள். அவள் புடைத்த வயிறு காட்டி கைகால்களை ஆட்டித் தப்பித்துக் கொள்ளப்பார்த்தாள் குண்டு போலீஸ்காரனும் நடு வயதுக்காரனும் அவலை கீழே படுக்கவைத்து தங்களின் கால்களை அவள் கை மீது ஏறி நின்று அழுத்திக் கொண்டிருந்தார்கள். முதலில் இளையவன் அவளின் மீது பாய்ந்தான். அவளின் சப்தம் அதிகரிக்கவே அவள் கை மீது நின்றிருந்த குண்டன் அவளது முகத்தில் காலால் அழுத்தினான். அவள் மூச்சுத்திணறி அமைதியானாள். பின்பு குண்டன் பாய்ந்தான் அவளது முகம், உதடு, மார்புகள் கடிபடுவதை உணர்ந்தாள் என்று ச. பாலமுருகன் தனது புதினத்தில் குறிப்பிடுகிறார்.6 எனவே காவல்துறையால் குறவர் பழங்குடியினப் பெண்கள் மட்டும் இன்றி பிறப் பழங்குடியினப் பெண்களும் பாதிக்க பட்டுள்ளதை அறிய முடிகின்றது.

ஆசிரியரும் தீண்டாமை மனநிலையும்       
        சந்திரா படிக்க வசதியற்ற குறவர் பழங்குடி சமூகத்தைச்  சார்ந்தவள். இவள் படிக்கும் பள்ளியில் அரசு இலவசமாக வழங்கும் நோட்டு வழங்கப்படுகிறது. இதற்கு அவள் அட்டைப் போடாமல் பள்ளிக்குச் செல்கிறாள். இதனால் கோபமுற்ற ஆசிரியர்  “பன்னிமேக்க போறவயெல்லாம் படிக்க வந்துட்டா”  என்று சாதிய ஆணவத்தைக் காட்டுகிறார். மேலும் நீ மட்டும் ஜோக்கா சட்டை போட்டுக்குறே என சொல்லிக் கொண்டே அவள் சட்டையைப் பிடித்து இழுக்கிறார். அவள் கத்தினாள் துடிதுடித்தாள் அங்கிருந்த அனைத்து ஆண் பெண் மாணவ மாணவிகள் சகிக்க மாட்டாமல் கண்களைப் பொத்திக் கொள்கின்றனர். ஆனால் வாத்தியார் தண்டணைக் கொடுக்கும் சாக்கில் அவளின் இளம் மார்பை ரசித்தார்.  ஆடை முழுவதையும் கழட்டி விட்டார். அவள் அப்படியே கீழே விழுந்துக் கதறினாள். அவள் கதறல் சத்தம் கல்விச் சாலையை அரற்றியது. ஆனால் யாரும் செவி மடுக்க வில்லை பாலியல் குற்றம் செய்த ஆசிரியரைத் தண்டிப்பதற்கு மாற்றாக நிர்வாகம் அவருக்குத் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு அளிக்கிறது.7
காவல்துறையும் சாதிய மனநிலையும்       
       குறவர் இனப் பழங்குடியான குமாரும் விருதுநகர் நாடார் சமூகத்தைச் சார்ந்த சுதாவும் காதலித்து வந்தனர். இது சுதாவின் வீட்டிற்குத் தெரிய சுதாவிற்குத் திருமண ஏற்பாடு செய்கின்றனர். இதனால் சுதா வீட்டை விட்டு வெளியேறி குமாரோடு வந்து விடுகிறாள்.  உடனே குமாரின் பெற்றோர்கள் குல வழக்கபடி பஞ்சாயத்தில் இருவரையும் விசாரித்து திருமணம் செய்து வைக்கின்றனர். பின்பு காவல்நிலையம் சென்று திருமணத்தைப் பற்றி  கூறுகின்றனர். கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையினர் சுதாவிடம் பஞ்சாயத்துப் பேசுகின்றனர்.
                    
         அவனுக்கும் ஒனக்கும் ஒத்துவராது அந்த கூட்டதுக்கும் ஒனக்கும் கொஞ்சம்   கூட ஒட்டாது. அத்துஅத்து  ஆயிரம் தாலி கட்டுவாங்க, எடுத்துக் குடிக்கிற கூட்டம் பன்னிமேய்க்கிற பயக, கக்கூஸ் அள்ளறதுதான் அவிய்ங்க வாழ்க்கை அப்புறம் நீயும் அந்த வேலைக்குதான் போகனும் செய்யலேன்னா ரோட்டுல போட்டு அடிப்பான். அவிங்கள கண்டிக்க முடியாது. கோர்ட்டுக்குப் போனாலும் குறவன் பஞ்சாயத்து தீராது. நீ வேற என் ஜாதிக்காரியா போயிட்ட விடுவேனா இவங்க மாறி ஆளுங்க நம்மள மாதிரி ஒசந்த ஜாதிக்காரங்க புள்ளைங்கள குறிவச்சி காதலிக்கிறது மாதிரி அந்த புள்ளைக மனச கெடுத்து கூட்டிக்கிட்டுவந்து பெண்வீட்டு ஆளுகிட்ட பணம் கேட்டு சீட்டிங் போடுவாங்க குடுக்கலைனா அந்த பெண்ண யாருட்டையாவது வித்துபுடுவாங்க அப்புறம் ஒன்குடும்பம் தற்கொலை செஞ்சு சாகும் இது தேவையா சரி எல்லாப் புள்ளைகளும் செய்யிற தப்புத்தான் ஒன் வீட்டாளுங்களே வரச்சொல்லி ஒன்ன அனுப்பி வைக்கிறேன். நடந்தத மறந்துட்டு தாய் தகப்பனோட போகப்பாரு இதை நான் போலீஸ் காரனா இல்லாம ஒரு தகப்பனா இருந்து சொல்லுறேன். நமக்கும் அவிங்களுக்கும் ஏணி வச்சாலும் எட்டாது என்று ஜாதியின் வாஞ்சையை வாரி அவள் மீது தெளித்தார். குமாரையும் மைனரு பொண்ண கடத்திட்டு வந்து பணம், நகை எல்லாத்தையும் பறித்ததா வழக்குப் போட்டு உள்ள தூக்கிப் போட்டுருவன் ஒழுங்கா இந்தப் பொண்ண விட்டுட்டுப் போய்விடு என்று எஸ். ஐ  தண்டபாணி மிரட்டினார்.8
முடிவுரை               
         குறிஞ்சி நில குறவர் இனப்  பழங்குடி மக்கள் ஆண்டாண்டு காலமாக காடுகளிலும் மலைகளிலும் தங்களுக்கே உரிய தொழில் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் பல்வேறு அரசியல், பொருளாதார காரணங்களுக்காக தங்களின் வாழ்விடங்களை விட்டு விரட்டியடிக்கப்பட்டனர். அவ்வாறு விரட்டியடிக்கப்பட்ட இம்மக்கள் கட்டாயப்படுத்தி துப்புரவுப் பணியாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர். என்பதை அறிய முடிகிறது.  மேலும் பல கனவுகளோடு துப்புரவு வேலைக்கு சேர்ந்த சந்திரா என்ற பெண் அதிகாரியின் பாலியல் இச்சைக்கு இனங்காததால் பொய்வழக்குப் போடப்பட்டு காவல் துறையினரால் விரட்டி விரட்டி வேட்டையாடப்படுவதை அறிந்துகொள்ள முடிகிறது. காவல் துறையினர் உண்மையான குற்றவாளிகள்  யார் என்று தெரிந்தும்  அவர்களைப் பிடிப்பதற்குப் பதிலாக குரலற்ற  அப்பாவி மக்களை கைது செய்து பொய் வழக்குப் புனைந்து  ஆண்களை அடித்துக் கொல்வதும் பெண்களைப் பாலியல் வன்புணர்வு செய்வதும் வழக்கமாகிப் போனதை அறிந்துகொள்ள முடிகிறது. சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய காவல் துறையினர், மாணவர்களுக்குச் சாதிகள் இல்லையடி பாப்பா என்று கூறி சமூகத்தை நல்வழிப்படுத்த வேண்டிய ஆசிரியர் ஆகியோர்  சாதிய மனநிலையோடு செயல்படுவது சமூகத்திற்கு மிகப் பெரிய ஆபத்தாக முடியும்.

மேற்கோள் நூல்கள்
1.இணையம்

2.பாண்டியக்கண்ணன், நுகத்தடி, ப.29.

3.மேலது, ப. 29.

4.மேலது, ப. 158.

5.மேலது, ப. 131.

6.ச. பாலமுருகன், ப. 56.

7.பாண்டியக்கண்ணன், நுகத்தடி, ப. 89.

8.மேலது, ப. 44.

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் சு. பிரபாகரன்
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
தூய வளனார் கல்லூரி ( கலை&அறிவியல்)
கோவூர், சென்னை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here