Nanmbiyagapporul Kalaviyil Seithigal|M. Saranya

Nanmbiyagapporul Kalaviyil seithigal - M.Saranya
Abstract
         Sangam literature, a cornerstone of ancient Tamil culture, intricately portrays the dual facets of human existence: akam (inner life) and puram (outer life), with akam often regarded as superior. Central to this portrayal are the concepts of kalavu (pre-marital love/romance) and  chastity or post-marital fidelity, pivotal in the interplay between the talaivan (male protagonist) and talaivi (female protagonist). Nambiyaga text eloquently delineates the nuances of kalavu, capturing the subtle dynamics of affection between lovers prior to marriage. Kalavu embodies the natural attraction leading to mutual affection, wherein the talaivan discerns suitability and conveys intent through discreet expressions. The text articulates seventeen distinct events characterizing kalavu, shedding light on traditional courting behaviors. Remarkably, these ancient notions resonate with contemporary understandings of love and marital compatibility, echoing considerations like dasapattam (ten compatibilities) in match-making processes. Thus, Sangam literature offers profound insights into Tamil cultural perspectives on relationships, bridging past and present dialogues on love, courtship, and matrimony. Its exploration of human emotions underscores enduring relevance, reflecting timeless dimensions of affection and partnership within societal contexts. The thematic richness continues to invite scholarly exploration and cultural reflection.


“நம்பியகப்பொருள் களவியல் – ஒரு பார்வை”

ஆய்வுச்சுருக்கம்
        சங்க இலக்கியங்கள் அனைத்தும் அகப்புற வாழ்வியலைப் பிரதிபலிக்கின்றது. ஒரு மனிதனுக்கு அகவாழ்வும் புறவாழ்வும் மிக முக்கியம். இவ்விரண்டில் புற வாழ்வைவிட அகவாழ்வு சிறந்தது. அப்படிப்பட்ட வாழ்வில் களவும் கற்பும் மிக முக்கியமானதாக திகழ்கின்றது. தலைவனும் தலைவியும் இல்வாழ்க்கையின்போது களவோடு கூடிய கற்பு அவசியமானதாகும். அந்த வகையில் ஒரு தலைவனும் தலைவியும் களவு மேற்கொள்ளும் போது ஏற்படக்கூடிய நிகழ்வைப் பற்றி நம்பியபொருள் களவியல் மிக அழகாக எடுத்துரைக்கின்றது.

முன்னுரை
      
           சங்க இலக்கியங்கள் தமிழரின் பண்பாடு, வாழ்க்கை, உணர்ச்சி, சமூக நிலை ஆகியவற்றின் பிரதிபலிப்பாக விளங்குகின்றன. நம்பியகப்பொருள் என்பது தமிழ் இலக்கணநூலாகிய தொல்காப்பியத்தில் கூறப்பட்ட அகப்பொருள் இலக்கணத்தை விளக்க எழுந்த ஒரு சார்பு நூலாகும். பல்வேறு கால கட்டங்களிலும் தோன்றிய அகப்பொருள் இலக்கண நூல்களில் சிறந்ததாகக் கருதப்படுவதும், இன்றும் தமிழ் இலக்கணம் பயில்வோரால் விரும்பப்படுவதுவும் இந்நூலேயாகும். அகம் புறம் என்ற இருவகைகளில், அக இலக்கியம் காதலை மையமாகக் கொண்டு உருவானது. அதனுள் களவியல் மிக முக்கியப்பகுதி. திருமணம் நடைபெறுவதற்கு முன் காதலர்கள் அனுபவிக்கும் சந்திப்பு, பிரிவு, ஊடல், இணக்கம் ஆகிய நிகழ்வுகளைப் பற்றியது களவியல். அந்த வகையில் நம்பியகபொருள் களவியலில் உள்ள  செய்திகளைக் காண்போம்.

நம்பிஅகப்பொருள்
         சூத்திர வடிவில் அமைந்துள்ள இந்நூல் நாற்கவிராச நம்பி என்பவரால் இயற்றப்பட்டது.
1.அகத்திணையியல்-116

2.களவியல்-54

3.வரைவியல்-29

4.கற்பியல்-10

5.ஒழிபியல்-43

      என ஐந்து பிரிவுகளாக 252 நூற்பாக்கள் உள்ளன.  இந்நூலிற்கு இலக்கியமாய்ப் பொய்யாமொழிப் புலவரால் மூன்று இயல்களும் முப்பத்தி மூன்று பிரிவுகளும் கொண்டு 425 பாடல்களில் மாறை என்ற நாட்டை ஆண்ட சிற்றரசர் சந்திரவாணன் என்பவரைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு தஞ்சைவாணன் கோவை இயற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 காதல் வாழ்க்கையைக் கூறும் அகத்திணையின் இரு பகுதிகளாகக் களவும், கற்பும் அமையும். ஒருவனும் ஒருத்தியும் தமக்குள்ளே கண்டு காதல் கொள்ளும் ஒழுக்கம் களவு என்று வழங்கப்படும். அகப்பொருள் பற்றிய இலக்கியங்களில் களவு தான் மிகுதியாகப் பேசப்படும்.களவாவது, பிறர் நன்கு அறியாதபடி மறைவாக நிகழும் ஒழுக்கம். இயற்கையாகவே ஒத்த இளமை, முதலிய ஒத்த தன்மைகளையுடைய ஒருவனும், ஒருத்தியும் ஓரிடத்தில் எதிர்ப்பட்டு அன்பு கொண்டு காதலில் திளைப்பர். அக்காதலர் ஊரறிய மணவினை நிகழும் அளவு, களவு நெறியில் இருப்பர். களவு நெறியைக் குற்றமாகப் பெற்றோர் எண்ணினாலும் சமூகம் குற்றமாகக் கருதவில்லை.

களவியல்
           தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் அகத்திணையியல், புறத்திணையியலை அடுத்து, களவியல் என்ற இயல் வருகின்றது. இக்களவியல் அகத்திணைகளில் ஒருதலைக் காதலாகிய கைக்கிளை, பொருந்தாக் காதலாகிய பெருந்திணை ஆகியவற்றை நீக்கி, அன்பின் ஐந்திணைகளை மட்டும் கூறுகின்றது.
இன்பம், பொருள், அறம் மூன்றும் இணைந்தது வாழ்க்கை. அன்பின் வழியில் அமையும் இதனை ஐந்து திணையொழுக்கங்களாக எண்ணிப் பார்ப்பது தமிழர் நெறி. இதனைக் காமக்கூட்டம் என்பர். வேத நூல்கள் பாகுபடுத்திக் காட்டும் திருமண முறைகள் எட்டில் இது யாழோர் கூட்டம் எனப்படுகிறது.   ஊழ்வினையால் காதல் காட்சி நிகழும். காதலர் ஒப்புமையால் ஒன்றியிருந்தால் சிறப்பு. காதலன் காதலியை விடச் சிறந்திருந்தாலும் குறையில்லை.  காதலி சிறந்தவளாய் இருந்தால், கிடைப்பாளோ எனக் காதலனுக்கு ஐயம் தோன்றும்.  தெய்வமோ என அவன் ஐயுறும்போது சில குறிப்புகளால், இவள் பெண்மகள் என உணர்ந்துகொள்வான்.  அவர்கள் பார்வையில் இசைவு புலப்படும்.  ஆணுக்கும், பெண்ணுக்கும் தனித்தனி இயல்புகள் உண்டு. 

1.களவின் இலக்கணம்

2.கைக்கிளையின் பாகுபாடுகள்

3.களவிற்கு உரிய கிளவித்தொகைகள்

4.இயற்கைப் புணர்ச்சி, வன்புறை, தெளிவு, பிரிவுழி மகிழ்ச்சி, பிரிவுழிக் கலங்கல், இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம் முதலான கிளவிகளுக்கான விளக்கங்கள். ஆகியவை இப்பாடப் பகுதியில் இடம் பெறுகின்றன.

“இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காமக்கூட்டம் காணுங்காலை
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே”.
   (தொல்.பொருளதிகாரம்—1038)
களவின் இயல்பு
உளமலி காதல் களவுஎனப் படுவது
ஒருநான்கு வேதத்து இருநான்கு மன்றலுள்
யாழோர் கூட்டத்து இயல்பினது என்ப     (களவியலில்-117)

        உள்ளம் மகிழ்வதற்குக் காரணமாகிய காதல் வாழ்க்கை அன்பின் ஐந்திணையாகும் இது களவு, கற்பு என்னும் இரு பிரிவுகளை உடையது. அவற்றுள் களவு வாழ்க்கையானது. நான்கு வேதத்துள் கூறப்படும் எண்வகை மணங்களுள் யாழோர் கூட்டமாகிய காந்தர்வ மணத்தை ஒத்ததாகும்.
   இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்பவை நான்கும் வேதங்களாகும் அவற்றுள், பிரமம் முதலாகக் கூறப்பெறுவன எண்வகை மணங்களாகும். அவை

1.பிரமம் (பிரம்மசரிய விரதம் காக்க தக்கான் ஒருவனுக்குக் கன்னியை அலங்கரித்துத் தீயின் முன்னர்க் கொடுப்பது)

2.பிரசாபத்தியம் (தலைமகனின் பெற்றோர் பெண் வேண்ட தலைமகளின் பெற்றோர் மறுக்காமல் பெண்ணை அலங்கரித்துத் தீயின் முன்னர்க் கொடுப்பது

3.ஆரிடம் (தலைமகனிடமிருந்து ஓரிரு ஆவையும் (பசு) ஆனேற்றையும் (எருது) வாங்கிக் கொண்டு சுன்னியை அலங்கரித்துத் தீயின் முன்னர்க் கொடுப்பது)

4.தெய்வம் (வேள்வி ஆசிரியனுக்குக் கன்னியை அலங்கரித்துத் தீயின் முன்னர்க் கொடுப்பது)

5.காந்தர்வம் (கொடுப்பாரும் கேட்பாரும் இன்றித் தலைமகளும் தலைமகளும் தனியிடத்துக் கண்டு கூடுவது)

6.சுரம் (தலைமகட்கு, உரிய பொன் கொடுப்பதோடு அவளது சுற்றத்தாருக்கும் வேண்டுவன கொடுத்துப் பெண் கொள்வது)

7.இராக்கதம் (தலைமகள் மற்றும் அவள்தம் பெற்றோர் உடன்பாடின்றி வலிதிற் கொள்வது)

8.பைசாசம் (உறங்கும் பெண்ணிடமும் கள் உண்ட பெண்ணிடமும் வலிதிற் சேர்வது)

இவற்றுக்கு உரிய வேறு பெயர்களை இறையனார் அகப்பொருள் விளக்கம் கூறுகின்றது

1.பிரமம் – அறநிலை

2.பிரசாபத்தியம் –ஒப்பு
3.ஆரிடம்-பொருள்கோள்

4.தெய்வம் வேறுபெயரில்லை.

5.காந்தர்வம் – யாழோர் கூட்டம்.

6.ஆசுரம் -அரும்பொருள்வினைநிலை  

7.இராக்கதம் வேறுபெயரில்லை

8.பைசாசம் பேய்நிலை என்பன.
      இவற்றுள் ஆகரம் முதலிய மூன்றும் கைக்கிளை எனவும் பிரமம் முதலிய நான்கும் பெருந்திணை எனவும் பாகுபடுத்தப்படுகின்றன. கந்தர்வ மணம் அன்பின் ஐந்திணைக்கு ஒப்பானது.

கைக்கிளையின் பாகுபாடு
காட்சி ஐயம் துணிவுகுறிப்(பு) அறிவுஎன
மாட்சி நான்கு வகைத்தே கைக்கிளை. (களவியலில்-118)
         
       என்று களவின் தொடக்க நிலையில் உள்ள இந்த நான்கும் கைக்கிளையின் பாகுபாடு ஆகும். 

1.காட்சி
        
        காதலன் காதலியை முதன்முதலில் பார்ப்பது காட்சியாகும். அவ்வாறு தலைவன் தலைவியை பார்க்கும்போது பத்து வகை பொருத்தங்களை உடையவராக இருத்தல் வேண்டும் சங்க இலக்கியத்தில் பத்து பொருத்தங்கள் என்பது 1.ஒத்த குலத்தில் பிறத்தல் 2.அக்குலத்திலும் நற்குடியராய் இருத்தல் 3.ஆளும் தன்மை 4.ஒத்த வயது 5.தோற்றப்பொலிவு 6.அன்பு 7.மன அடக்கம் 8.அருளுடைமை 9.நுண்ணறிவு 10.செல்வம் என்பனவாகும். தற்பொழுதும் திருமணம் செய்யும்போது பொருத்தம் பார்க்கின்றனர்.       
         
         திருமணத்தின்போது பார்க்கும் 12 பொருத்தங்களில் தினப்பொருத்தம், கணப்பொருத்தம், மகேந்திரப் பொருத்தம், ஸ்திரீதீர்க்கப் பொருத்தம், யோனிப் பொருத்தம், இராசிப் பொருத்தம், இராசி அதிபதி பொருத்தம், வசியப் பொருத்தம், ரஜ்ஜுப் பொருத்தம் மற்றும் வேதைப் பொருத்தம் ஆகிய பத்து முக்கிய பொருத்தங்கள் உள்ளன, இவை மணமக்களின் மகிழ்ச்சியான மற்றும் வளமான எதிர்காலத்தைத் தீர்மானிக்க உதவுகின்றன. 

முக்கிய பொருத்தங்கள்
1.தினப் பொருத்தம்: இது இருவருக்கும் இடையே உள்ள உடல் மற்றும் மனதின் இணக்கத்தை குறிக்கிறது.

2.கணப்பொருத்தம்: மணமக்களின் குணாதிசயங்களை கணிக்கும் முக்கியமான பொருத்தம் இதுவாகும்.

3.மகேந்திரப் பொருத்தம்: ஆண் மற்றும் பெண்ணின் குடும்பத்தின் முன்னேற்றத்தை இது குறிக்கும் ஒரு பொருத்தம்.

4.ஸ்திரீதீர்க்கப் பொருத்தம்: இது மனதின் மகிழ்ச்சியையும், நீண்ட ஆயுளையும் குறிக்கிறது.

5.யோனிப் பொருத்தம்: இது தம்பதியரின் உடல் மற்றும் உணர்வு ரீதியான இணக்கத்தை உறுதி செய்கிறது.

6.இராசிப் பொருத்தம்: இது இருவரின் ஜாதகத்தில் உள்ள இராசிகளின் பொருத்தத்தை குறிக்கிறது.

7.இராசி அதிபதி பொருத்தம்: மணமக்களின் இராசிக்குரிய அதிபதிகளின் பொருத்தமாகும்.

8.வசியப் பொருத்தம்: இது இருவருக்கும் இடையேயான அன்பு மற்றும் கவர்ச்சியை குறிக்கும் பொருத்தம்.

9.ரஜ்ஜுப் பொருத்தம்: இது மிகவும் முக்கியமான பொருத்தமாகும், ஏனெனில் இது தம்பதியரின் நீண்ட ஆயுளையும், குடும்பத்தின் பாதுகாப்பையும் குறிக்கிறது.

10.வேதைப் பொருத்தம்: இது இருவரின் உடல் ரீதியான ஆரோக்கியத்தை குறிக்கும் ஒரு பொருத்தம்

2. ஐயம்:
      காதலியைப் பார்த்த பிறகு உண்டாகும், அவள் தன்னுடன் ஒத்த அன்பு கொண்டவளா என்ற சந்தேகம் வரும் அதுமட்டுமல்லாமல் இவள் மானுடப் பெண்ணா அல்லது தெய்வப் பெண்ணா என்ற ஐயம் தோன்றுகின்றது. இந்த ஐயத்தினை வள்ளுவர்

அணங்கு கொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.  (குறள், 1081)
என்னும் குறள் தலைமகன் ஐயம் கொண்டதற்குச் சான்றாகும்.

3. துணிவு:
        ஐயம் நீங்கிய பிறகு உண்டாகும், அதாவது தலைவியின் தோளில் ஓவியம், அணிகலன்கள், வாடிய மலர், மலரை சுற்றும் வண்டு, நிற்காமல் இருக்கும் கால்கள், பார்க்கின்ற கண்கள், உயர்த்தல் நிழல் விழுதல், ஆடையில் மாசுபடுதல் போன்ற நிகழ்வுகளை கண்ட தலைவன் அவளும், தன்னுடன் ஒத்த அன்புடையவள் என்ற திடமான நம்பிக்கை வந்தபின் துணிவு வரும்.

திருநுதல் வேரரும்புந் தேங்கோதை வாடும்
இருநிலஞ் சேவடியுந் தோயும் – அரிபரந்த
போகித ழுண்கணு மிமைக்கும்
ஆகு மற்றிவ் ளகலிடத் தணங்கே. (பு.வெ. கைக்கிளை நூற்பா – 3)
          இவள் நெற்றி வேர்க்கிறது. இவள் மாலை வாடியிருக்கிறது. கால்கள் நிலத்தில் நிற்கின்றன. கண்கள் இமைக்கின்றன. ஆதலால் இவள் மண்ணுலகில் வாழும் பெண்தான் என்று புறப்பொருள் வெண்பாமாலை கூறுகின்றது.

4. குறிப்பறிதல்:
           காதலியைப் பார்த்து, அவளுடைய உடல் மொழியின் மூலம், அவளும் தன்னைப் போலவே அன்பு கொண்டிருக்கிறாள் என்பதைப் புரிந்துகொள்ளுதல். தலைவியின் உள்ளக் குறிப்பை தலைவனுக்கு அவளுடைய கண்கள் உணர்த்துவதே குறிப்பறிதல் ஆகும். இக்குறிப்பறிதலைத் தொல்காப்பியர்,

நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்குக்
கூட்டி உரைக்கும் குறிப்புரை ஆகும் (தொல்.களவியல் – 5)
என்னும் நூற்பாவழி எடுத்துரைக்கிறார்.

இருநோக்கு இவள்உண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கு ஒன்று அந்நோய் மருந்து.  (குறள் – 1091)
         
என்ற வள்ளுவரும் குறிப்பிட்டுள்ளார். இந்த நான்கு நிலைகளும் ஒருதலைக் காமத்தை அடிப்படையாகக் கொண்டதால், இவை கைக்கிளை ஒழுக்கமாகக் கருதப்படுகின்றன.

களவிற்கு உரிய கிளவித் தொகை
களவிற்குரிய கிளவித்தொகையை ஆசிரியர்

இயற்கைப் புணர்ச்சி வன்புறை தெளிவே
——————————–
களவிற்கு உரிய கிளவித் தொகையே   (களவியல் – 123)
         
           1.இயற்கைப்புணர்ச்சி 2.வன்புறை 3. தெளிவு 4. பிரிவுழி மகிழ்ச்சி 5. பிரிவுழிக் கலங்கல் 6. இடந்தலைப் பாடு 7. பாங்கற் கூட்டம் 8. பாங்கிமதி உடம்பாடு 9. பாங்கியிற் கூட்டம் 10. பகற்குறி 11. பகற்குறி இடையீடு 12. இரவுக்குறி 13. இரவுக்குறி இடையீடு 14. வரைவு வேட்கை 15. வரைவு கடாதல் 16. ஒருவழித் தணத்தல் 17. வரைவு இடை வைத்துப் பொருள்வயிற் பிரிதல் ஆகிய பதினேழும் களவிற்கு உரிய கிளவித் தொகையாகும்.

1.இயற்கைப்புணர்ச்சி:
        இயற்கைப் புணர்ச்சி என்பது முன்பின் அறியாத தலைவனும் தலைவியும் எதிர்பாராத விதமாகக் கண்டு மகிழ்வதாகும். இது, தெய்வப் புணர்ச்சி, முன்னுறு புணர்ச்சி, காமப் புணர்ச்சி என்றும் அழைக்கப்படும்.

🎯இது காந்தருவமணத்தோடு ஒத்திருப்பதால் இயற்கைப் புணர்ச்சியாகும்.

🎯இது தெய்வத்தால் (விதிவசத்தால்) கூட்டப்படுவதால் தெய்வப் புணர்ச்சியாகும்.

🎯இது முதன் முதல் கூடுவதால் முன்னுறு புணர்ச்சியாகும்.

🎯இஃது இருவரும் ஒத்த அன்பினால் கூடுவதால் காமப்புணர்ச்சியாகும்.

🎯இவ்வியற்கைப் புணர்ச்சி தெய்வ அருளால் நிகழ்வதும் உண்டு; தலைவியின் முயற்சியால் நிகழ்வதும் உண்டு. தெய்வ அருளால் நிகழும் போது முயற்சி இன்றி நிகழும். தலைவியால் நிகழும் போது முயற்சியின்றி நிகழாது.

2.வன்புறை:
        வன்புறை என்றால் வலியுறுத்திக் கூறுதல் என்று பொருள். தலைவன் பிரிவானோ என்று தலைவிக்கு ஐயம் ஏற்படும். அந்த ஐயப்பாட்டைப் போக்கும் வகையில் தலைவன் பேசுதல் வன்புறைஆகும்.

3.தெளிவு:
தலைவன்    வற்புறுத்திக்கூறிய வார்த்தைகளைக் கேட்டத் தலைவி அவன் கூறுவது உண்மைதான் என்று நினைப்பது தெளிவு ஆகும்.

நின்ற சொல்லர் நீடுதோன்று இனியர்
என்றும் என்தோள் பிரிவறி யலரே
——————————–
சிறுமை உறுபவோ செய்பறி யலரே.          (நற்றிணை-1)
4.பிரிவுழி மகிழ்ச்சி:
      களவுப் புணர்ச்சியில் ஈடுபட்ட தலைவன், தலைவி அவ்விடத்தை விட்டுச் சென்றபின் அப்புணர்ச்சியை நினைந்து மகிழ்வது பிரிவுழி மகிழ்ச்சி ஆகும். 

5.பிரிவுழிக் கலங்கல்:
            களவுப்புணர்ச்சியில் ஈடுபட்ட    தலைவன், தலைவி அவ்விடத்தை விட்டுப் பிரிந்து சென்றபின், அத்தலைவியை நினைத்து வருந்துவது பிரிவுழிக் கலங்கல் ஆகும்.

6.இடந்தலைப்பாடு:       
          இயற்கைப் புணர்ச்சியில் தலைவியைப் புணர்ந்த தலைவன், அடுத்த நாளும் அதே இடத்தில் அத்தலைவியைக் கூடுதல் இடந்தலைப்பாடு எனப்படும்.

7.பாங்கற் கூட்டம்:       
பாங்கனின் உதவியால் தலைவன் தலைவியைக் கண்டு கூடுதல் பாங்கற் கூட்டம் ஆகும்.

8.பாங்கி மதிஉடன்பாடு:       
        தலைவனும் தலைவியும் கூடி மகிழ்ந்ததைத் தோழி தன்னுடைய அறிவால் ஆராய்ந்து அறிந்து கொள்ளுதலே பாங்கி மதி உடன்பாடு எனப்படும். அதாவது தலைவியிடம் வேறுபாடு கண்ட தோழி அவளுடைய செயல்களைக் கண்டு ஆராய்ந்து தெளிந்த பின் உடன்படுவாள்.
9.பாங்கியிற் கூட்டம்:       
           பாங்கியின் உதவியோடு தலைவனும் தலைவியும் கூடும் கூட்டம் பாங்கியிற் கூட்டம் ஆகும்.

10.பகற்குறி:       
       பகற்பொழுதில் தலைவனும் தலைவியும் காண்பதற்காக குறிக்கப்படும் இடம் பகற்குறி ஆகும்.பகற்குறியில்தலைவனின் வரவைத் தோழி தலைவிக்கு 

கவர்பரி நெடுந்தேர் மணியும் இசைக்கும்
——————————-
அல்லல் அரும்படர் காண்கநாம் சிறித”    (நற்றிணை 307)
      என்ற பாடல் வழிஎடுத்துக் கூறுவதை காணமுடிகிறது.
11.பகற்குறி இடையீடு:       
      பகற்பொழுதில் தலைவியை காணவரும்போது தலைவனுக்கு, அச்செயல் நடைபெறாமல் தடைப்பட்டுப் போவது பகற்குறி இடையீடு எனப்படும்.

அளிய தாமே செவ்வாய்ப் பைங்கிளி
——————————
பெருவிதுப் புற்றால் நோகோ யானே.    (குறுந் -131)
      போன்ற பாடல்கள் வழி தலைவன் தலைவியை காண வரும் போது பகற்குறி இடையீடு ஏற்படுகின்றதே என்று தலைவன் தலைவியோடு கூடி மகிழ்ந்த இடங்களையும், தலைவனுடைய ஊரின நோக்கி பார்த்து மகிழ்வது போன்ற செய்திகளை அறிய முடிகிறது

12.இரவுக்குறி:       
        இரவுப் பொழுதில் தலைவன் தலைவியைக் காண்பதற்காகக் குறிக்கப்படும் இடம் இரவுக்குறி எனப்படும். இது பகற்பொழுதில் தலைவன் தலைவியைக் காணாதபோது, தொடர்ந்து இரவு வரை நீடீப்பது. 

பெயல்கண் மறைத்தலின் விசும்புகா ணலையே
————————————
யாங்குஅறிந் தனையோ நோகோ யானே. (குறுந் 355)
     என்ற பாடல் வழி இரவுக்குறியில் தலைவன் தலைவியை காண வரும் போது ஏற்படும் இடையூறுகளை நினைத்து தலைவி வருந்துகின்றாள் என்ற செய்தியை அறிய முடிகிறது

13.இரவுக்குறி இடையீடு:
        இரவுபொழுதில் தலைவியை காணவரும்போது தலைவனுக்கு, அச்செயல் நடைபெறாமல் தடைப்பட்டுப் போவது இரவுகுறி இடையீடு எனப்படும்.

காமம் கடவ உள்ளம் இனைப்ப
யாம்வந்து காண்பதோர் பருவம் ஆயின்
ஓங்கித் தோன்றும் உயர்வரைக்கு
யாங்குஎனப் படுவது நும்ஊர் தெய்யோ   (ஐங்குறு 237)
         என்ற பாடலில் இரவுக்குறியில் இடையீடு  ஏற்பட்டதை அறியலாம்.

14.வரைதல் வேட்கை:       
         அல்லகுறியாலும், தலைவன் வருதல் அருமையாலும் வருந்திய தலைவி, தலைவனை மணந்து கொள்ளும் வருப்பத்தினைக் கூறுதலே வரைதல் வேட்கை (திருமண விருப்பம்) ஆகும். 

15.வரைவு கடாதல்:       
      களவில் கூடும் தலைவனை, விரைந்து வந்து தலைவியை மணந்துக் கொள்ள வேண்டும் எனத் தோழி வற்புறுத்துவது வரைவு கடாதல் (திருமணத்தை விரைவுப்படுத்துதல்) எனப்படும்.

16. ஒருவழித் தணத்தல்:       
       களவுக் காலத்தில் தலைவன் தலைவியைப் பற்றி அலர் எழும். அப்போது அந்த அலரைத் தணிப்பதற்காக தலைவன் தலைவியைக் காண வரமாட்டான். இந்த சிறு பிரிவே ஒருவழித் தணத்தல் எனப்படும்.

சிறுவெள்ளாங் குருகே சிறுவெள்ளாங் குருகே
———————————–
இழைநெகிழ் பருவரல் செப்பா தோயே.    (நற்றி 70)
        என்ற பாடல் ஒரு வழி தணத்தலின் போது தலைவனின் பிரிவால் வருந்திய தலைவி புலம்புவதாகும்.

17.வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிவு:       
      களவுக் காலத்தில் தோழி தலைவனிடத்தில் தலைவியை திருமணம் செய்துக் கொள்ள விரைவுப்படுத்துவாள். அதற்கு உடன்பட்டு, அத்திருமணத்திற்காக பொருள் வேண்டும் என்று பொருள் தேடுவதற்காகப் பிரியும் பிரிவே வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிவாகும்.

முடிவுரை:
 
        தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியத்தில் பொருளதிகாரத்தில் களவியல் என்ற இயலில் தலைவன் தலைவனின் களவுச் செய்திகள் கூறப்படுவதுபோல் நம்பியகப் பொருளிலும் காணப்படுகிறது.தலைவன் தலைவியை களவு மேற்கொள்வதற்கு முன் தலைவியை இயற்கையாக பார்த்து, இவர் தலைவிதானா என்று ஐயத்தை நீக்கி, ஓரிடத்தில் சந்தித்து களவு மேற்கொள்வான். தலைவன் தலைவிக்கு இருக்கக்கூடிய பத்து வகை பொருத்தங்களையும், 17 வகையான களவிற்குரிய கிளவித்தொகையையும் அறிய முடிகிறது. நம்பியகப் பொருள் ஒரு இலக்கண நூலாக இருந்தாலும்  அந்த இலக்கண வழியே தலைவன் தலைவிக்குரிய களவு செய்திகளை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

பார்வை நூல்கள்:
1.திருஞானசம்பந்தம். முனைவர் ச. நம்பியகப்பொருள்,  கதிர் பதிப்பகம்,  திருவையாறு. 2010.

2.இளம்பூரனார் உரை, தொல்காப்பியம் பொருளதிகாரம், சாரதா பதிப்பகம், சென்னை. 2006.

3.நாகராசன். வி. (உரை ஆ), குறுந்தொகை, (பகுதி – 1, 2) நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை. 2007.

4.தட்சிணாமூர்த்தி.  அ. (உ.ஆ), ஐங்குறுநூறு, (பகுதி – 1, 2) நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை. 2007.

5.சோமசுந்தரனார், தி.பொ.வே. புறப்பொருள் வெண்பாமாலை விளக்கவுரை> திருநெல்வேலி   தென்னிந்திய சைவ சித்தாந்த நூல் பதிப்பு கழகம், சென்னை. 2004.

6.இராரமயாபிள்ளை, நற்றிணை, வர்த்தமான் பதிப்பகம், சென்னை. 1999.

7.கலைஞர் கருணாநிதி. மு, திருக்குறள், திருமகள் நிலையம், சென்னை. 2019. 
Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர் 

மா. சரண்யா,

முதுகலைத்தமிழ்,
இரண்டாம் ஆண்டு
தமிழ்த்துறை,

இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரி,     
திருவாரூர்.
ஆய்வு நெறியாளர்
முனைவர் கி. சர்மிளா,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,

இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரி,     
திருவாரூர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here