Naladiyaril Palluyiriyam
Abstract
One of the world’s 17 most biodiverse nations is India. There are between 12 million and 100 million species in the nation, according to scientific studies. These species are impacted by climate change, resulting in diminished biodiversity and affecting people. Thus, it is critical to understand that maintaining and balancing the natural environment depends on the diversity of plants and animals. In the words of Sangam literature, the ancient Tamils acknowledged this and adopted a style of living that preserved biodiversity and permitted them to live in harmony with the natural world. Research is crucial to understanding the plant and animal species that existed in ancient periods as well as how the Tamils managed and balanced biodiversity in a world where humanity has deviated from living in peace with nature. The article contains three main sections: The diversity of biodiversity, the uses of biodiversity, and the management of biodiversity. The diversity of biodiversity section explores diversity in genetics, species diversity, and ecosystem diversity. The uses of the biodiversity section highlight species provision, increased agricultural yields, and ecological regulation. Lastly, the management of the Biodiversity section covers the propagation of plant, animal, and microbial biodiversity.
நாலடியாரில் பல்லுயிரியம்
ஆய்வுச் சுருக்கம்
அதிக அளவில் பல்லுயிர்களைக் கொண்ட 17 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் 12 முதல் 100 மில்லியன் உயிரினங்கள் உள்ளன. கால நிலை மாற்றங்கள் உண்டாகும்போது உயிரினங்கள் பாதிப்பிற்குள்ளாகின்றன. இதனால் பல்லுயிர் சமநிலை இழப்பு உண்டாகி மக்களைப் பாதிக்கிறது. இந்நிலையில், இயற்கைச் சூழலைப் பாதுகாக்கவும் சமன் செய்யவும் தாவர மற்றும் விலங்கினங்களின் பன்முகத்தன்மை இருப்பது மிகவும் முக்கியமானது என்பதை அறிந்திருந்த பழந்தமிழர்கள், பல்லுயிர்களையும் காத்து அவற்றோடு இணைந்து வாழும் முறையைக் கடைப்பிடித்தனர் என்பதைச் சங்க இலக்கியப் பதிவுகளின் மூலம் அறியமுடிகிறது. இயற்கையோடு இணைந்த வாழ்வு என்பதிலிருந்து, மனித இனம் விலகி வாழ்ந்துவரும் இக்காலச் சூழலில், அக்காலத்தில் காணப்பட்ட தாவரம் மற்றும் விலங்கினங்களை அறிந்துகொள்ளவும், தமிழர் பல்லுயிர்களை எவ்வாறு பாதுகாத்துச் சமன்செய்தனர் என்பதையும் அறிந்து கொள்வதற்கும் ஆய்வு இன்றியமையாததாகிறது. கட்டுரையானது, பல்லுயிரியத்தின் பன்முகத் தன்மை, பல்லுயிரியத்தின் பயன்கள், பல்லுயிரியத்தின் மேலாண்மை என்ற முதன்மைப் பகுப்புகளைக் கொண்டுள்ளது. இவற்றில் பல்லுயிரியத்தின் பன்முகத் தன்மை என்பது மரபியல் பல்வகைமை, இனப் பல்வகைமை, சூழ்நிலை மண்டலப் பல்வகைமை என்ற விரிவுகளைக் கொண்டதாகவும், பல்லுயிரியத்தின் பயன்கள் என்ற பகுப்பு இனங்கள் வழங்குதல், விளைச்சல் அதிகரித்தல், சூழலியல் ஒழுங்குபடுத்தல் என்ற விரிவுகளைக் கொண்டதாகவும், பல்லுயிரியத்தின் பராமரிப்பு என்ற பகுப்பு தாவரப் பல்லுயிர்ப் பெருக்கம், விலங்குகள் பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் நுண்ணுயிரிப் பல்லுயிர்ப் பெருக்கம் என்ற விரிவுகளைக் கொண்டதாவகும் அமைக்கப்படுகிறது.
முன்னுரை
உயிரினச் சூழலை தன்னுள் கொண்டிருக்கும் இப்பூமியில் நீரிலும் நிலத்திலும் வாழும் எண்ணற்ற உயிரினங்களில் காணப்படும் வேறுபாடு பல்லுயிரியம் என்று அழைக்கப்படுகிறது. காலநிலை மாற்றங்கள் உண்டாகும் போது உயிரினங்கள் பாதிப்பிற்குள்ளாகின்றன. இதனால் ‘பல்லுயிர் சமநிலை இழப்பு’ உண்டாகி நேரடியாகவம் மறைமுகமாகவும் அது மனித இனத்தையும் பாதிக்கிறது. இந்நிலையில், இயற்கைச் சூழலைப் பாதுகாக்கவும் சமன் செய்யவும் தாவர மற்றும் விலங்கினங்களின் பன்முகத்தன்மையைப் பேணுவது மிகவும் இன்றியமையாதது. தன்னுடைய அறிவாற்றலால் உயிரினச் சுற்றுச்சூழல் சமநிலையின் பயன்களை முழுவதுமாக அனுபவிக்கும் மனித இனத்திற்குப் பல்லுயிர் சமநிலையைப் பாதுகாக்கும் கடமை முதன்மையானதாகும்.
ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 140 வகை உயிரினங்கள் அழிந்துவிடக்கூடும் என்ற நிலையில், பழந்தமிழர் பல்லுயிர்களையும் ஓம்பி இயற்கையோடு இணைந்து வாழ்ந்த வாழ்வியல் முறைகளை ஆய்ந்து தெளிவுபடுத்துவது தேவையாகிறது. இயற்கையோடு இணைந்த வாழ்வு என்பதிலிருந்து, மனித இனம் விலகி வாழ்ந்துவரும் இக்காலச் சூழலில், அக்காலத்தில் காணப்பட்ட தாவரம் மற்றும் விலங்கினங்களை அறிந்து கொள்ளவும் தமிழர் பல்லுயிர்களோடு இணைந்து வாழ்ந்து எவ்வாறு சூழலைச் சமன்செய்தனர் என்பதை உணர்ந்து கொள்வதற்கும் ‘நாலடியாரில் பல்லுயிரியம்’ எனும் இவ்வாய்வு இன்றியமையாததாகிறது.
கருதுகோளும் நோக்கமும்
பழந்தமிழர் இயற்கையின் பயன்பாட்டினை நுகர்வதற்கு, தன்னைச் சுற்றி வாழும் பல்லுயிர்களை அறிந்து அவற்றைப் பாதுகாக்கும் வழித் தடத்தைப் பின்பற்றி வாழ்ந்தனர். அத்தகைய இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையால், பல்லுயிர் சமநிலை காக்கப்பட்டது என்பதை இக்கட்டுரைக் கருதுகோளாகக் கொண்டுள்ளது.
அவ்வகையில், மனித இனம் இயற்கைப் பயன்பாட்டை நுகர்வதற்குப் பல்லுயிரியம் எவ்வாறு வழிவகுத்தது என்பதை அறிவதையும், இன்றைய சூழலில் இயற்கையோடு இயைந்த தமிழரின் வாழ்வியல் விழுமியத் தேவையை உணர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையின் ஆய்வுக்களமாக பதினெண்கீழ்க்கணக்கில் சமண முனிவர்களால் எழுதப்பட்ட நாலடியார் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சூழலியல்சார்ந்த ஆய்வுகளும் நூல்களும் துணைமைச்சான்றுகளாய் அமைகின்றன.
பல்லுயிரியம் – விளக்கம்
இப்புவியில் நிலம், நீர், காற்றில் காணப்படும் உயிர்ப்புப் பண்புடையவை அனைத்தும் உயிரினங்கள் என்று அறிவியலார் கூறியிருக்கையில், ‘பரமாய சத்தியுள் பஞ்சமா பூதம் தரமாறித் தோன்றும் பிறப்பு’ என்று தமிழ் மூதாட்டி ஔவை ஐம்பூதங்கள் சேர்ந்து வேதி வினையால் உயிர்கள் தோன்றுகின்றன என்று உயிரின் தோற்றத்தை விவரித்திருக்கிறார். அவ்வாறு, பூமியில் நீரிலும் நிலத்திலும் தோன்றி வாழும் எண்ணற்ற உயிரினங்களில் காணப்படும் வேறுபாடு அதாவது, பூமி உயிர் மண்டலத்தில் வடிவம், அளவு, இயல்பு, வாழ்க்கை முறை, இனப்பெருக்கம் போன்ற எல்லாத் தன்மைகளிலும் வேறுபட்டுள்ள அனைத்து உயிரினங்களின் இனவகைகள் ‘பல்லுயிரியம்’ அல்லது ‘உயிரினப்பன்மயம்’ என்று அழைக்கப்படுகிறது.
பூமிக்கோளத்தில் தோன்றிய உயிர்களில் 8.7 மில்லியன் வகைகள் இருப்பதாக அறிவியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அவற்றில் 1.2 மில்லியன் இனங்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு விவரிக்கப்பட்டுள்ளன எனத் தேசிய புவியியல் நிறுவனம் 2022 ஆண்டு பதிவிட்டுள்ளது. ஆனால், பலநூறு ஆண்டுகளுக்கு முன் பரிமேலழகர் திருக்குறள் உரையில் (ப.35) கொடுத்துள்ள தனிப்பாடல் ஒன்றில் எழுபிறப்பு பற்றிய விளக்கத்தில், உயிரினங்களின் வகைகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளதிலிருந்து மனித வாழ்க்கையில் பிற உயிரினங்களின் பங்கை உணர்ந்து கொள்ள முடிகிறது.
ஊர்வ பதினொன்றா மொன்பது மானுடம்
நீர்பறவை நாற்காலோர் பப்பத்துச்-சீரிய
பந்தமாந் தேவர் பதினா லயன்படைத்த
வந்தமில்சீர்த் தாவரநா லைந்து.
என்ற இப்பாடலானது, உயிரினங்களில் ஊர்வன இனத்தில் பதினோரு லட்ச வகைகள், மனித இனத்தில் ஒன்பது லட்ச வகைகள், நீரில் வாழக்கூடிய பத்து லட்ச வகைகள், பறவைகள் பத்து லட்ச வகைகள், நான்கு கால்கள் கொண்ட விலங்குகள் பத்து லட்ச வகைகள், தேவர்கள் பதினான்கு லட்ச வகைகள் மற்றும் தாவரங்கள் இருபது லட்ச வகைகள் என 84 லட்ச உயிரின வகைகள் உள்ளதாகக் குறிப்பிடுகிறது. உயிரினங்களைக் கூர்ந்து நோக்கி, அவற்றைக் கணக்கிட்ட அன்றைய தமிழரின் ஆராய்ச்சியறிவு, தற்காலத்தில் நடத்தப்பெறும் உயிரியல் ஆய்வுகளுக்கு முன்னோடியாக இருப்பதை இதன்மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது.
பல்லுயிரியத்தின் இன்றியமையாமை
பூமிக்கோளத்தில் வாழும், கண்களால் காணமுடியாத நுண்ணுயிரியிலிருந்து பெரிய உருவத்தினை உடைய விலங்குகள் வரை அனைத்துயிர்களும் நாம் வாழும் பூமியை வளமாக வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கின்றன. மனித இனத்தின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையானதாக இருப்பது உண்ணும் உணவு. மனிதன் உண்ணும் உணவினில் 80 விழுக்காடு இப்பூமியில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகளிலிருந்து பெறப்படுகின்றது. மேலும், அடுத்த நிலையில் உள்ள அடிப்படைத் தேவைகளான ஆடை மற்றும் உறைவிடத்திற்கும் இவற்றின் பங்கு இன்றியமையாததாக இருப்பதை மனித இனம் உணரவேண்டும்.
இன்றைய காலத்தில் ஒரு நாட்டின் வளம் அதன் பொருளாதாரத்தினைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. ஆனால் பழங்காலத்தில் நாட்டின் வளத்திற்கு இயற்கை வளங்களையே முதன்மையானதாகக் கருதினர். தாழா உயர் சிறப்பின் தண் குன்ற நல் நாட (நாலடி.290:3) , கணமலை நன்னாட (நாலடி.353:1) கிளி கடியும் கானக நாட (நாலடி.283:3) தேம்படு நல்வரை நாட! (நாலடி.239:2-3) போன்ற நாலடியார் அடிகள், இயற்கை வளத்தினை அடிப்படையாகக் கொண்டே ஒரு நாட்டினைத் தமிழர் அடையாளப்படுத்தினர் என்பதை உணர்த்துகின்றன.
உயிரினங்கள் ஒன்றுக்கொன்று மறைமுகமாகவோ நேரடியாகவோ உதவிசெய்து வாழ்கின்றன. அவற்றின் சில செயல்பாடுகள் மனிதர்கள் செய்யமுடியாதவை என்பதோடு, அவை பிற உயிரினங்களின் வாழ்க்கைக்குப் பயன்படுவதைச் சிறுபஞ்சமூலத்தில் காரியாசன்,
வான்குருவிக்கூடு அரக்குவால் உலண்டு கோல்தருதல்
தேன்புரிந்து யார்க்கும் செயலாகா (சிறுபஞ்.27:1-2)
என்று சுட்டுகிறார். இதில், தூக்கணாங்குருவி கட்டும் கூடு, அரக்கு, பட்டுநூல், கோற்கூடு மற்றும் தேன்பொதி போன்றவை மனிதனால் செய்யமுடியாதவை என்று பாடியுள்ளார். சுரைக்காய் வடிவில் தர்ப்பை நார்களைக் கொண்டு உட்புறத்தில் தளங்களையும் வெளிப்புறத்தில் களிமண்ணைப் பூசி அதில் மின்மினிப்பூச்சிகளையும் ஒட்டி அழகாகத் தொங்கும் கூடுகளைத் தூக்கணாங்குருவிகள் கட்டும். மரங்களின் சாற்றைக் குடித்த பின் பேரெறும்புகள் மரக்கொப்புகளில் பாய்ச்சிய திரவம் காற்றோடு சேர்ந்து செம்மெழுகு எனும் அரக்காக பரிணமிக்கும். பட்டுப்புழு இடும் முட்டையிலிருந்து வெளிவரும் பட்டுப்பூச்சி, பட்டுநூல் உண்டாக்கும். ஒரு குறிப்பிட்ட வகையான அந்துகள் மரக்குச்சிகளை அடுக்கிவைக்துக் கோற்கூடு கட்டி, அதில் கூட்டுப்புழுக்களாக வாழும். மேலும், இவற்றோடு தேனியால் திரட்டப்பட்டு அமைக்கப்படும் தேன்பொதி போன்றவை மனிதரால் செய்ய முடியாதவையே என்றாலும் அவர்களுக்குப் பயன்படும் பொருட்களையே இதுபோன்ற சிற்றுயிர்கள் உருவாக்குகின்றன. இவ்வாறு, ஒரு உயிரினத்தின் வாழ்க்கை முறை பிற உயிர்களுக்கு உதவி செய்வதால் இயற்கைச் சூழல்சமன் இயற்கையாலேயே காக்கப்படுகிறது என்பது பல்லுயிர்களின் இன்றியமையாமையை உணர்த்துகிறது. இதுபோன்று, தாவர உயிரினங்களும் இப்பேருதவி செய்வதை, பின்வரும் நாலடியார் பாடல் அடிகளில் மூலம் அறியமுடிகிறது.
———கயற்புலால்
புன்னை கடியும் பொருகடல் தண்சேர்ப்ப! (நாலடி.97:2-3)
இவற்றில், அலைகள் மோதுகின்ற கடல் ஓரத்தில் வளர்ந்துள்ள புன்னை மலர்களிலிருந்து வீசும் மணம், மீன்களின் மாமிச நாற்றத்தை நீக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் காற்றுச் சூழலில் ஏற்படும் நாற்றத்தை அப்பகுதியிலிருக்கும் புன்னை தாவரங்களில் இருந்து வெளிவரும் மணம் இயற்கையாகவே சமன்செய்வதை விளங்கிக்கொள்ள முடிகிறது. புவியில் வாழும் பல்லுயிர்கள்தான் இப்புவியின் இயற்கைச் சூழலைச் சமன் செய்கின்றன. மனித இனம் இயற்கைச் சூழலில் சிக்கலின்றி வாழ்வதற்கும் பூமியின் சூழல் வளம் குறையாமல் காப்பதற்கும் நீர், நிலம் மற்றும் காற்றின் வளத்தைக் காக்கவும் பல்லுயிர்களின் பங்கு முதன்மையானது. இதனையே, இப்புவியின் இயற்கைச் சூழலை அழித்து வசதியாக வாழ்ந்து வரும் மனித இனத்திற்கு இன்றைய சூழலியலாளர்கள் அறிவுறுத்துகின்றார்கள்.
நாலடியாரில் பல்லுயிரியத்தின் பல்வகைமை
உயிரினபல்வகைமை என்ற சொல்லை இ.ஓ. வில்சன் என்பவர் 1988ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார். ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர் அறிவு நிலையை அடிப்படையாகக் கொண்டு உயிரினத்தைப் பிரித்துள்ளது நாம் அறிந்ததே.
புல்லு மரனு மோரறி வினவே
நந்து முரளு மீரறி வினவே
சிதலு மெறும்பு மூவறி வினவே
நண்டுந் தும்பியு நான்கறி வினவே
மாவு மாக்களு மைறி வினவே
மக்கள் தாமே யாறறி வுயிரே (தொல்காப்பியம், மரபியல், 28)
தொடுவுணர்வு மட்டும் கொண்ட சிறிய புல் முதல் பெரிய மரவகைத் தாவரங்கள் அனைத்தும் ஓரறிவுயிர்கள் என்றும், நத்தை, சங்கு, சிப்பி ஆகியனவற்றுக்குத் தொடுவுணர்வோடு உணவை நாவினால் சுவைத்து உண்ணும் அறிவு இருப்பதால் அத்தகைய புழுவகைகள் ஈரறிவுயிர்கள் என்றும், சிதல் மற்றும் எறும்புகளுக்கு நாவின் சுவையறிவோடு மூக்கினால் மணம் உணரும் அறிவும் இருப்பதால் அவை போன்ற பூச்சிகள் மூவறிவுயிர்கள் என்றும், நண்டும் தும்பியும் மூன்று அறிவோடு சுற்றியுள்ளவற்றைக் கண்ணால் காணுகின்ற அறிவும் பெற்றுள்ளதால் இவை நாலறிவுயிர் என்றும், விலங்குகளும் பறவைகளும் இந்த நான்கு அறிவோடு ஓசைகளைக் காதால் கேட்கிற அறிவும் பெற்றுள்ளதால் இவை ஐந்தறிவுயிர் என்றும், இவற்றோடு மனிதனுக்குப் பகுத்தறிகின்ற அறிவும் இருப்பதால் அவனை ஆறறிவுயிர் என்றும் வகைப்படுத்தியுள்ளார். தொல்காப்பியரின் உயிரின வகைப்பாடு முழுமையாக அறிவை அடிப்படையாகக் கொண்டிருக்கும் நிலையில், சூழலியலாளர்களும் உயிரியலாளர்களும் உயிரினங்களை அவற்றின் வடிவம், நிறம், பருமன், நடத்தை, உண்ணும் உணவு வகை, உணவூட்டல் முறை என்பவற்றில் உள்ள வேறுபட்ட தன்மைகளின் அடிப்படையில் பல்வகைமைப் படுத்துகின்றனர்.
—————காக்கையும் பையரவும்
என்ஈன்ற யாயும் பிழைத்த தென் – பொன்னீன்ற
கோங்கரும் பன்ன (நாலடி.400:1-3)
என்ற பாடலில் காக்கை, பாம்பு, பெண் மற்றும் பொன்னிறமுள்ள கோங்கை மலர்(செடி) எனப் பல்வேறு உயிரினங்களைச் சமண முனிவர்கள் குறிப்பிட்டுள்ளதைக் காணமுடிகிறது. அதோடு நிலம் மற்றும் நீரியற் சூழல்களில் வாழும் உயிரினங்களின் வேறுபாடுகளோடு மனிதரிடையேயும் வேறுபாடுகள் உண்டு என்பதையும் பின்வரும் நாலடியார் பாடலில் காணமுடிகிறது.
கடல்சார்ந்தும் இன்னீர் பிறக்கும், மலைசார்ந்தும்
உப்புண்டு உவரி பிறத்தலால் தத்தம்
இனத்தனையர் அல்லர் எறிகடல் தண்சேர்ப்ப! (நாலடி.245.1-4)
இது, உவர்ப்பு நீருடைய கடல் அருகில் இனிய நீரும் மலை அருகில் உப்பு நீரும் உண்டாவது போல மக்கள் தாம் சார்ந்த இனத்திலும் ஒத்தவராக இல்லாமல் இருப்பர் என அன்றே பிரபஞ்சத்தின் சூழல் வேறுபாடுகளைக் குறிப்பிட்டுள்ளவை இன்றைய சூழலியலாளர்கள் உயிரினப்பல்வகைமையை வரையறுத்துள்ள கூற்றை ஒத்திருப்பதை உணரமுடிகிறது. நிலம், கடல், மற்ற நீரியற் சூழல்கள், உட்பட்ட எல்லா இடங்களையும் சார்ந்த உயிரினங்களிடையே உள்ள வேறுபாடுகள் உயிரினப்பல்வகைமை ஆகும். இது உயிர் வகைகளுக்குள்ளும், அவற்றுக்கு இடையிலும், சூழலியல் முறைமை சார்ந்தும் உள்ள வகைமைகளையும் குறிக்கும் என, பல்வகைமைக்கான வரையறையை, 1992 -இல் ஐக்கிய நாடுகள் ’சூழலியல் மற்றும் வளர்ச்சி’ (Environment and Development) என்ற பொருண்மையில் நடத்திய கருத்தரங்கத்தில் வழங்கப்பட்டது. இதனடிப்படையில்,
(அ) மரபியல் பல்வமைமை,
(ஆ) இனப்பல்வகைமை
(இ) சூழல் பல்வகைமை
என்ற நிலைகளில் உள்ள பல்வகையான உயிரினங்களை நாலடியாரின் வழி காண்போம்.
(அ) நாலடியாரில் மரபியல் பல்வகைமை
ஒரே இனத்திற்குள் உள்ள பல்வேறு மரபுவழி பண்புகளைக் கொண்ட உயிரினங்கள் மரபியல் பல்வகைமை எனப்படும். ஓர் இனம் அதன் சூழலில் சிறப்பாக வாழ்வதற்காக மரபியல் வகைமை பயன்படுவதோடு பல்வேறு புதிய இனங்கள் தோன்றவும் காரணமாகின்றது. இலக்கியங்களில் ஓர் இனத்தைச் சுட்டும் போது அதில் உள்ள வகைகளையும் சுட்டியிருப்பதைக் காணும் போது பழந்தமிழரின் நுண்மான் திறன் வியக்கவைக்கக் கூடியதாக இருக்கிறது.
1.கொள்ளு
தாவரவியல் பெயர்: (மேக்ரோடைலோமா யுனிஃபுளோரம் (Macrotyloma uniflorum))
கொள்ளு செடிகள் மிகக் குறுகிய காலத்தில் அடர்த்தியாக வளர்ந்துவிடுவதால் மண்ணரிப்பைத் தடுப்பதில் பெரும் பங்கு வகிப்பதோடு விலங்கினங்களுக்குத் தீவினமாகவும் மனிதர்களுக்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்பட்டு உயிரினச் சூழலைச் சமன் செய்கிறது. இத்தகைய தன்மைகளைக் கொண்ட கொள்ளின் பயன்பாட்டைப் பழந்தமிழர்கள் அறிந்து அதனை விளைவித்து வாணிபமும் செய்தனர் என்பதை அறியமுடிகிறது. நாலடியார் பாடலொன்றில் கொள்ளின் இரு மரபினவகைப் பற்றிய குறிப்பினையும் காணமுடிகிறது.
கருங் கொள்ளும், செங் கொள்ளும், தூணி பதக்கு என்று
ஒருங்கு ஒப்பக் கொண்டானாம், ஊரன் (நாலடி. 387:1-2)
எனும் பாடலடிகள், ஓர் ஊரைச் சேர்ந்தவன் கருங்கொள்ளையும் செங்கொள்ளையும் இரண்டு மரக்கால் மூன்று மரக்கால் அளவு விலை வேறுபாடின்றிப் பெற்றுக்கொண்டான் என்பதிலிருந்து கொள்ளு ஒரே பயிரினமாக இருந்தாலும் அதில் கருங்கொள்ளு செங்கொள்ளு என நிறத்தில் இரு வேறுபட்ட கொள்ளு இனங்கள் உண்டு என்பதும் அவை பழந்தமிழர்களால் விளைவிக்கப்பட்டு மண்வளம் இயல்பாக காக்கப்பட்டது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
2.ஆம்பல் – (தாவரவியல் பெயர்: நியாம்பியா (Nymphaea)
ஆம்பல் ஒரு வகை நீர்த் தாவரமாகும். இது ஆற்றிலும் குளத்திலும் வளர்கிறது. இது நீரில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, சூரிய ஒளியைத் தடுத்து நீரைக் குளிர்வித்து நன்னீரில் பாசிகள் உண்டாகாமல் தடுக்கிறது. அது போல், வண்டுகள் மகரந்தச் சேர்க்கை செய்வதில் ஆம்பல் பெரும் பங்கு வகித்து உயிரினச் சமன்பாட்டிற்கு உதவுகிறது. பழந்தமிழரின் வாழ்வியல் செயல்பாடுகளில் பெரும் பங்கு வகித்த ஆம்பல் மலர் நாலடியாரிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரக்காம்பல் நாறும்வாய் (நாலடி. 396:1)
செவ்வாம்பல் போன்ற இதழ்களையுடையவள் என்று ஆம்பலின் வகை பதியப்பட்டுள்ளது. வெள்ளை, சிவப்பு மற்றும் கருநீல நிற ஆம்பல் வகைகள் தற்போதும் தமிழகத்தில் காணக் கிடைக்கின்றன.
3.யானை – (அறிவியல் பெயர்: எலிபண்டைடா (Elephantidae))
இலக்கியங்களில் ஆண்யானை களிறு என்றும் பெண்யானை பிடி என்றும் அழைக்கப்படுகிறது. யானைகள் பல்லுயிரினத் தோற்றத்தில் பெரும் உதவிபுரிகின்றன. யானைகள் வெளியிடும் சாணத்தில் பல விதைகள் கலந்திருக்கும். அவற்றிலிருந்து பல தாவரங்களும் புழு பூச்சிகளும் உருவாகி உயிரினச் சூழலைக் காக்கின்றன. இன்றைய நிலையில் யானைகளில் மூன்று வகைகளே எஞ்சியிருக்கின்றன. ஆனால் இவற்றைப் பற்றிய பல்வேறு செய்திகள் சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
—————————-யானை
வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றாள்
அரிமா மதுகை அவர். (நாலடி.198: 2-4)
என்ற நாலடியார் பாடல், வெண் புள்ளிகளை உடைய யானையின் முகத்தை தன் கூரிய நகங்களைக் கொண்டு பெருமுயற்சி செய்து சிங்கம் வெல்லும் என்ற செய்தி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதில், மரபணு காரணமாக தோன்றும் வெண்புள்ளிகளை உடைய யானைகள் என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் பழந்தமிழர்கள் ஒவ்வொரு உயிரினத்தையும் கூர்ந்து நோக்கி அதன் தோற்றத்தை அறிந்து வைத்திருந்ததோடு, அவற்றின் இயல்புகளையும் புரிந்து கொண்டிருந்த அறிவு திறனை அறியமுடிகிறது.
4.வண்டு (அறிவியல் பெயர்: கோலியாப்டெரா (Coleoptera)
பூச்சி இனத்தைச் சேர்ந்த வண்டு 3,50,000 இனவகைகளைக் கொண்டதாக உள்ளன. மகரந்த சேர்க்கைக்குப் பயன்படும் இவ்வண்டுகள், இறந்த விலங்குகளையும் உதிர்ந்த இலைகளையும் உண்பதால் அவற்றிலுள்ள ஊட்டச்சத்துகளை மீண்டும் மண்ணிற்கு மறுசுழற்சி செய்கின்றன.
———————– வண்டாய்த்
திருதருங் காலத்துத் தீதிலிரோ என்பார் (நாலடி.284:2-3)
——————–காந்தள் மலரக்கால்
செல்லாவாம் செம்பொறி வண்டினம் (நாலடி.283:1-2)
ஆர்த்த பொறிய அணிகிளர் வண்டினம் (நாலடி.290:1)
என்ற பாடலடிகளில் வண்டுகளைப் பொதுவாகக் குறிப்பிட்டுள்ளதோடு, காந்தள் மலர்கள் மலராத போது சிவந்த புள்ளிகளையுடைய வண்டினங்கள் அங்கு செல்லாது என விளக்கப்பட்டுள்ளதிலிருந்து, வண்டினங்களில் சிவந்த புள்ளிகளையுடைய வண்டினத்தைப் பற்றி அறிந்துகொள்ளமுடிகிறது.
5.பாம்பு – (அறிவியல் பெயர்: சர்பெண்ட்ஸ் – Serpentes)
பாம்புகள் தவளை, எலி போன்ற சிற்றுயிர்களைக் கொன்று உணவுச் சங்கிலி தொடர உதவுகிறது. இவற்றில் ஆண் நாகப்பாம்பு பெண் கட்டுவிரியன் பாம்பின் வகைகளை நாலடியார் பதிவுசெய்துள்ளது.
————————-நாகம்
விரி பெடையோடு ஆடிவிட் டற்று (நாலடி.240:3-4)
என்ற அடிகளில், நாகப்பாம்பு விரி பெடையோடு புணர்ந்து நீங்கும் என்பதில், பாம்பு இனத்தில் உள்ள கிட்டத்தட்ட 3600 வகைகளில் நாகம் மற்றும் விரி பெடை இனத்தின் வாழ்வியலைத் தெரிந்துகொள்ள முடிகிறது.
6.மான் (புல்வாய்)
இந்திய நாட்டில் காணக்கிடைக்கும் மான் வகைகளில் புல்வாய் மானும் ஒருவகை. இதில் ஆண்மான் இரலை என்றும் பெண்மான் கலை என்றும் அழைக்கப்படுகின்றது. புல்வாய் மானுக்குத் திருகுமான், வெளிமான், முருகுமான் என்று வேறு பெயர்களும் உள்ளன. புல்வாய் வகை மான் அக்காலத்தில் இருந்ததைப் பின்வரும் நாலடியார் அடிகள் தெரிவிக்கின்றன. புல்வாய பருமம் பொறுப்பினும் இவ்வாறு நாலடியாரில் உயிரினங்களின் மரபியல் வகைகளைக் குறிப்பிடும் போது அவற்றினுடைய தோற்றம் நிறம் போன்ற சிறப்பியல்புகளை எடுத்துக்காட்டியிருப்பது இன்றைய மரபியல் வல்லுநர்களுக்குப் பழந்தமிழர்கள் வழிகாட்டிகள் என்பது உறுதிப்படுகிறது.
(ஆ) நாலடியாரில் இனப் பல்வகைமை
ஓர் இடத்திலுள்ள உயிரினங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் தொடர்புடைய வளம் இனப் பல்வகைமை எனப்படும். இது ஓர் உயிரினத்தின் எல்லா வகை மற்றும் எல்லா உயிரினங்களையும் குறிக்கும்.
இனப் பல்வகைமை – குறிஞ்சி (மலையும் மலைசார்ந்த இடமும்)
சூழலியலில் மலைகள் பெரும்பங்கு வகிக்கின்றன. மலை வளம் என்பது குன்று, அருவி, பள்ளத்தாக்கு போன்ற தோற்றப்பொருட்களின் இயற்கை அழகோடு அங்கு வாழும் தாவரம் முதல் பல்வேறு உயிரினங்களையும் சேர்த்தது. அத்தகைய மலை வளத்தினைத் தமிழ்ப்புலவர்கள் பாடியுள்ளமை பல்வேறு இலக்கியங்களில் காணப்படுகின்றன. சமண முனிவர்களும் மலையின் உயிர்ச்சூழலைப் பல பாடல்களில் மிக அழகுற பதிவு செய்திருக்கிறார்கள்.
கறங்கருவி கன்மேற் கழூஉம் கணமலை (நாலடி.285:2-3) எனும் பாடலடியில், ஒலிக்கும் அருவிகள் கல் மேல் வீழ்ந்து மாசு போகக் கழுவும் பெரிய மலை என மலைவளத்தினைப் பாடியுள்ள சமண முனிவர்கள் அதில் வாழும் பல்வேறு உயிரினங்களைப் பற்றிய செய்திகளையும் பதிவுசெய்திருக்கிறார்கள்.
♣ கோங்கு
தாவரவியல் பெயர்: பாமக்ஸ் சிபியா (Bombax ceiba)
மருத்துவப் பயன்களை உடைய மலைஇலவம் எனும் கோங்கு மலைப்பகுதியில் தானே வளரும் இயல்புடையவை. இவற்றின் இருப்பை பின்வரும் நாலடியார் அடிகள், நமக்கு காட்டுகின்றன. நிறக்கோங்கு உருவவண்டார்க்கு முயர்வரை நாட (நாலடி.223:2-3) இவ்வடிகள் நல்ல நிறமுடைய (பொதுவாக இவை பொன்னிறமானவை) கோங்கு மலர்களில் வண்டுகள் அமர்ந்து பாடும் நாடு என்று கோங்கின் சிறப்பைப் கூறியிருப்பதிலிருந்து பழந்தமிழர் கோங்கின் பயன்பாட்டினை அறிந்திருந்தனர் என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.
♣தேனீ (அறிவியல் பெயர்: ஏப்ஸ், (Apis))
பல்லுரியத்தின் உயிரினச் சமன் செய்தலில் பெரும் பங்கு வகிப்பது தேனீக்கள். ஒரு பகுதியில் உள்ள தேன்கூடுகளின் அளவையும் எண்ணிக்கையும் கொண்டு அப்பகுதியின் வளத்தினை நாம் அறிந்துகொள்ளலாம். இவை மலைப்பகுதியில் நிறைந்திருக்கும். தேனீக்களும் தேன் கூடுகளும் நிறைந்த வளமான மலைப் பகுதியை தேம்படு நல்வரை நாட! (நாலடி.239:2-3) என்று நாலடியார் குறிப்பிடுகிறது.
♣ பறவைகள் (அறிவியல் பெயர் : ஏவ்ஸ் (Aves)
பொற்கேழ் புனலொழுகப் புள்ளரியும் பூங்குன்ற நாட! (நாலடி.212:2-3) எனும் பாடல் அடிகளில், பொன்னிறமுள்ள அருவிகள் விழும் ஓசையால், பறவைகள் பயந்து, பறந்து திரிகின்ற மலைகள் சூழ்ந்த நாட்டினை உடையவனே என்று பாடியிருப்பதில் பலவகையான பறவைகள் மலையில் காணப்படும் என்ற செய்தியை நாலடியார் உறுதிசெய்கிறது.
♣ காட்டுப்பசு (அறிவியல் பெயர் : பைசன் (Bison))
குற்றமில்லாத கூட்டமாகிய காட்டுப் பசுக்களைக் கொண்ட உயர்ந்த மலைகளையுடைய நாடு என்று கூறும் இப்பாடல் அடிகள், காட்டுப் பசுக்களின் இருப்பை,
— ———— —– பழிப்பில்
நிரை ஆமா சேர்க்கும் நெடுகுன்ற நாட (நாலடி.319:2-3)
எனும் பாடலடிகளில் பதிவுசெய்துள்ளதைக் காணமுடிகிறது.
இனப்பல்வகைமை – முல்லை (காடும் காடு சார்ந்த இடமும்)
காடுகள் பல்லுயிர்கள் அதிகமாகக் காணப்படும் இடமாகும். புல் முதல் பெரிய மரவகைகளோடு சிறு பூச்சி முதல் பெரிய விலங்குகள் மற்றும் மனித இனமும் வாழும் பகுதியாகவும் இயற்கை வளங்கள் நிறைந்த பகுதியாகவும் காடுகள் உள்ளன.
♠ சந்தனமரம் மற்றும் வேங்கை மரம்
(சந்தன மரம் : தாவரவியல் பெயர் சாண்டலும் (Santalum),
வேங்கை மரம்: தாவரவியல் பெயர் பெட்ரோகார்பச் மார்சுபியம்(Pterocarpus marsupium))
சந்தன மரங்கள் காற்றைத் தூய்மைப்படுத்தி தென்றலை வீசச்செய்கின்றன. இவை குளிர்ச்சியை இலைகள் மூலம் வெளியிடுவதால், சந்தன மரங்கள் அடர்ந்து வளரும் இடங்களில் அடிக்கடி மழைப்பொழிவு ஏற்பட்டு, மண் குளிரும். மலைவாழ் பழங்குடிகள் தேன் சேகரிக்கவும், மூலிகைகளை சேகரிக்கவும் உதவுகின்றன. மேலும், வேங்கை மரம் உள்ள பகுதியில் மின்னல், இடி தாக்காது.1 இவ்விரு மரங்களும் பண்டைய காலத்தில் நிலவளத்தினையும் நீர்வளத்தினையும் காப்பதில் பெரும்பங்கு வகித்தன. அன்றைய காலத்தில் இவை மிகுதியாக இருந்த செய்தியைப் பல இலக்கியங்கள் பதிவிட்டிருப்பது போலவே நாலடியாரும் பதிவு செய்திருக்கிறது.
———————–புனத்து
வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே
எறிபுனந் தீப்பட்டக் கால் (நாலடி. 180:2- 4)
என்ற பாடல் அடிகள், காட்டில் தீ பரவினால் அக்காட்டினில் உள்ள நறுமணம் மிக்க சந்தனமும் வேங்கை மரமும் எரிந்து போகும் என்று அவற்றின் இன்றியமையாமையை வலியுறுத்தவதிலிருந்து, அன்றைய காலகட்டத்தில் சந்தன மரமும் வேங்கை மரமும் காட்டுச் சூழலில் அதிகம் வளர்ந்திருந்ததால் மண்வளமும் மழைபொழிவும் சிறப்பாக இருந்தன என்பதை உணர்ந்து கொள்ளமுடிகிறது.
♠ காடை மற்றும் கவுதாரி
(காடை : அறிவியல் பெயர் – கோடுர்நிக்ஸ் (Coturnix)
கவுதாரி: அறிவியல்பெயர்-ப்ரான்கொலினஸ் பாண்டிசெரினஸ்(Francolinus ondicerianus)
கவுதாரி, விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் உபயோகம், நகர மயமாக்கல் போன்றவற்றால் இந்தப் பறவை அழிந்துவரும் பறவைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகப் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு மூலம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.2 ஆனால், அன்றைய காலத்தில், ரீங்காரமிடும் வண்டுகள், காடை (சிவல்) மற்றும் கவுதாரி (குரும்பூழ்) போன்றவை வாழும் பகுதியாகக் காடு காட்சிப் படுத்தப்பட்டுள்ளதைப் பின்வரும் நாலடியார் பாடலில் காணமுடிகிறது.
————————- சுரும்பார்க்கும்
காட்டுளாய் வாழுஞ் சிவலும் குறும்பூழும்
கூட்டுளாய்க் கொண்டுவைப் பார். (நாலடி. 122:2-4)
♠ புலி
புலி : அறிவியல் பெயர்- பாந்திரா டைகிரிஸ் ( Panthera tigris)
கடமா தொலைச்சிய கானுறை வேங்கை
இடம்வீழ்ந்தது உண்ணாது இறக்கும் (நாலடி. 300:1-2)
என்ற பாடல் அடிகளில், காட்டில் இருக்கும் புலியானது தான் கொன்ற காட்டுவிலங்கு இடது பக்கம் விழுந்ததென்றால், அதனை உண்ணாமல் பட்டினி கிடந்து இறக்கும் என குறிப்பிட்டிருப்பதிலிருந்து அக்காலத்தில் காட்டில் புலியின் இருப்பையும் அதன் இயல்பையும் அறிந்துகொள்ளமுடிகிறது.
♠ கிளி
கிளி: அறிவியல் பெயர் – ப்ச்டிசிஃப்ர்ம்ஸ் (Psittaciformes)
கல்லெறிந்து கிளிகளை ஓட்டுவதற்கிடமான காட்டினில் என்ற பொருளில் அமைந்திருக்கும் கலாஅற் கிளிகடியுங் கானக நாட (283:3) என்ற பாடலடி கிளிகள் காட்டில் கூட்டமாக இருந்தமையை அறிவுறுத்துகிறது.
இனப் பல்வகைமை – மருதம் (வயலும் வயல் சார்ந்த இடமும்)
மருதம் காட்டை அடுத்துள்ள, சமவெளியும் ஆற்றங்கரைக்கு அருகிலும் உள்ள வளமான பகுதியை மருதம் என்று பழந்தமிழர் வழங்கினார்கள். மக்களின் அடிப்படைத் தேவையான உணவின் உற்பத்தி மருத நிலப்பகுதியில் வேளாண்மை செய்யப்படுவதால் பல உயிர்கள் வாழும் சூழல் அமைந்து விடுகிறது.
♠ நெல்
தாவரவியல் பெயர்: ஒரைசா சட்டைவா(Oryza sativa)
விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர் (நாலடி. 133:2)
தமிழகத்தில் அதிகமாக விளையும் பயிர்களில் நெல் முதன்மையானதாகும். நாலடியாரின் இவ்வடி நெல் விளைச்சளில் பழந்தமிழர் ஈடுபட்டதைக் காட்டுகிறது.
♠ புல்
தாவரவியல் பெயர்: சிம்போபோகன் சிட்ரேட்டஸ் (Cymbopogon citrates)
கொல்லையில் மரத்தின் அடிப்பகுதியை ஒட்டி புற்கள் வளரும் என்பதைப் பின்வரும் நாலடியார் அடிகள் சுட்டுகின்றன.
கொல்லை இரும்புனத்துக் குற்றி யடைந்தபுல்
ஒல்காவே யாகும் உழவர் உழுபடைக்கு (நாலடி. 178:1-2)
♠ கோரைப்புல்
தாவரவியல் பெயர் : சைப்பிரஸ் ரொடண்டஸ் (Cyperus rotundus)
சாய்ப்பறிக்க நீர்திகழும் தண்வய லூரன்மீது (நாலடி. 389:1)
என்ற அடி கோரைப்புல்லை நீக்கியதால் வயலில் தன்ணீர் மிகுதியாகத் தங்கியுள்ள ஊர் என்று காட்சிப்படுத்தியுள்ளதிலிருந்து வயலில் கோரைப் புற்களும் வளரும் என்பது சுட்டப்பட்டுள்ளது.
இனப் பல்வகைமை – நெய்தல் (கடலும் காடல் சார்ந்த இடமும்)
தாவரங்கள், திமிங்கலம் போன்ற பெரிய நீர்வாழ் விலங்குகள், பவளப் பாறைகள் மற்றும் நுண்ணுயிர்கள் என பல்லுர்களைக் தன்னுள்கொண்டு சூழல் வளமைக்குக் கடல் இன்றியமையாத பங்கைச் செய்துவருகிறது.
♠ நெய்தல் பூ
தாவரவியல் பெயர் : நிம்ப்யா நொச்சலி(Nymphaea nouchali)
திரைசூழ் வையம் என இந்தப் பூமிக்கோளம் அலைகளையுடைய கடலினால் சூழப்பட்டுள்ளது என்பதைப் பதிவிட்டிருக்கும் நாலடியார், கடலில் மலரும் நெய்தல் பூ பற்றிய குறிப்பினையும் வழங்கியிருக்கிறது.
கள்ளுயிர்க்கும் நெய்தற் கனைகடல் தண்சேர்ப்ப (நாலடி. 349:3)
தேனை வழியும் நெய்தற் பூக்களையுடைய ஒலிக்கின்ற கடல் என்ற இவ்வடியில், கடல் நீரின் குளிர்மையக் காத்திட துணைபுரியும் நெய்தல் மலர் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆம்பல் மலரின் வகைமையான நீலாம்பல் மலர் நெய்தல் மலர் என்று அழைக்கப்படுகிறது. இதன் சிறப்பால் கடலும் கடலைச் சார்ந்த இடத்திற்கும் நெய்தல் எனப் பெயரிட்டு அழைத்தனர் தமிழர். உவர்நீர் மலரான நெய்தல் கொடி கடல் தன்மையைக் காக்கிறது என சூழலியலாளர்கள் கூறுகின்றனர்.
♠ தாழை
தாவரவியல் பெயர் – பாண்டனஸ் ப்பசிகுலரிஸ் (Pandanus fascicularis)
நீர் நிலைகளின் கரைகளில் செழித்து வளரும் தன்மையுடைய தாழைச்செடிகள் கடலிலிருந்து வரும் பேரலையைத் தாக்குப்பிடித்து நிலநடுக்கம் இல்லாமல் காக்கும் தன்மை கொண்டது. இத்தகைய செடிகளை உடைய கடற்கரை என்று தாழைச்செடியைப் பற்றிய குறிப்பு நாலடியாரில் பதியப்பட்டுள்ளது. கண்டல் திரையலைக்குங் காணலந் தண்சேர்ப்ப! (நாலடி. 194:3) என்ற அடி தாழஞ் செடிகளை (முள்ளிச்செடி) அலைகள் அலையச் செய்கின்ற உப்பளமுள்ள குளிர்ச்சியான கடற்கரை என சித்தரித்துள்ளதிலிருந்து, கடலை ஒட்டிய இடத்தில் உப்பளத்தின் மூலம் தமிழர்கள் உப்பு உருவாக்கிய செய்தியையும் அறிந்துகொள்ள முடிகிறது.
♠ புன்னை மரம்
தாவரவியல் பெயர் – கலோஃபைலம் இனோஃபைலம் (calophyllum inophyllum)
—- ————-புன்னை
விற்றபூங் கமழ்கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப (நாலடி. 117:2-3)
நற்றளிர்ப் புன்னை மலருங் கடற்சேர்ப்ப! (நாலடி. 336: 3)
என்ற அடியில், நல்ல தளிர்களோடு கூடிய புன்னை மரங்கள் கடற்கரையில் வளர்ந்திருக்கும் காட்சியை நாலடியாரில் காணமுடிகிறது.
♠ முத்து சிப்பி
அறிவியல் பெயர்: ப்யர்ல் ஓய்ஸ்டர் (Pearl Oyster)
இயற்கையில் நீரில் வாழுகின்ற முசெல் (mussel) வகையைச் சேர்ந்த நீர்வாழ் மெல்லுடலிகளான முத்துச்சிப்பி உயிரினங்களிலிருந்து முத்து பெறப்படுகின்றது. அவற்றைக் கடல்லைகள் கரையில் ஒதுக்கும் என்பதைப் பின்வரும் நாலடியார் அடிகள் சித்தரிக்கின்றன.
மாடிகதிர் தந்திட்ட வான்கதிர் முத்தம்
சுடுவிசை நாவாய் கரையலைக்குஞ் சேர்ப்ப (நாலடி. 224:1-2)
♠ மீன்கொத்தி பறவை
அறிவியல் பெயர்: அல்செடினிடே ரஃபினெஸ்க்யூ (Alcedinidae Rafinesque)
நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள பகுதிகளில் காணப்படும் சிறு பறவை மீன் கொத்தி. நீர் நிலையின் அருகில் வாழும் மீன்கொத்தி பறவை நன்னீர் நிலைகளை நமக்கு அடையாளம் கண்டறியப் பயன்படுகிறது. அதனைச் சிரல் என பதிவு செய்திருக்கிறது நாலடியார். காதலியின் கண்ணை நீரில் வாழும் மீன் எனக் கருதி அவள் கண்ணைக் கொத்த பின்சென்றது என்ற கற்பனைக் காட்சியில் மீன் கொத்தியின் குறிப்பு நமக்குக் கிடைக்கிறது. கண்கயல் என்னும் கருத்தினால் காதலி பின்சென்றது அம்ம சிறுசிரல் (நாலடி. 395:1-2)
♠ வண்டு (அறிவியல் பெயர்: கோலியாப்டெரா (Coleoptera))
மாதர்வண்டு ஆர்க்கும் மலிகடல் தண்சேர்ப்ப
ஆவ தறிவார்ப் பெறின் (நாலடி. 73:3-4)
என்ற நாலடியார் அடிகள் அழகிய வண்டுகள் இசைபாடிச் சூழ்ந்திருக்கும் பூக்கள் நிறைந்த கடற்கரை என கடற்கரைப் பகுதிகளில் வண்டுகளின் உயிர்பைப் பதிவு செய்துள்ளதைக் காணமுடிகிறது.
♠ அடப்பங்கொடி & அன்னம்
அடப்பங்கொடி: தாவரப்பெயர் – ஐபோமியா பைலொபா (Ipomoea biloba)
அன்னம் : அறிவியல் பெயர் – சிக்னஸ் ஓலர் (Cygnus olor)
கடலாரை மூலிகைக்கொடி எனச் சொல்லப்படும் அடப்பங்கொடிகளைக் கிழித்து விளையாடும் அன்னங்கள் கொண்ட குளிர்ந்த கடற்கரையை,
—————————அடம்பப்பூ
அன்னம் கிழிக்கும் அலைகடல் தண்சேர்ப்ப (நாலடி.107:2-3)
என்று நாலடியார் பதிவுசெய்துள்ளதிலிருந்து, நிலத்தின் உப்புத்தன்மையைச் சமன்செய்து சூழலைக் காக்கும் அடபங்கொடி கடலோரத்தில் வளர்ந்திருப்பதையும் அங்கு அன்னங்களும் வாழும் என்பதையும் அறிந்துகொள்ளமுடிகிறது.
நாலடியாரில் சூழ்நிலை மண்டல பெருக்கம்
ஒரு பகுதியில் சூழ்நிலையைப் பொருத்து அப்பகுதியில் இருக்கும் பல்வேறு உயிரினங்கள் சூழ்நிலை மண்டல பெருக்கம் எனப்படும்.
வெப்ப மண்டல உயிர்கள்
சந்தன மரம்
தாவரவியல் பெயர் – சாண்டலம் (Santalum)
கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டரிலிருந்து 4000 மீட்டர் வரை உள்ள நிலப்பகுதிகளில் வளரக்கூடிய சந்தன மரம், 190 C முதல் 28.50 C வரையுள்ள வெப்பநிலையும் உள்ள பகுதிகளில் செழிப்பாக வளர்கின்றன. எனவே இவை மலைச் சாரல் பகுதியில் அதிகமாக வளர்கின்றன. நாலடியார், மலைச்சாரல் பகுதிகளில் சந்தனத் தோப்பாக வளர்ந்திருக்கின்றன என்பதைக் காட்சிப்படுத்தியுள்ளது. சந்தன நீள்சோலைச் சாரல் மலைநாட (நாலடி. 234:3).
மிதமான வெப்ப மண்டல உயிர்கள்
அல்லி & குவளை
அல்லி: தாவரவியல் பெயர் – நிம்பெயசியே (Nymphaeaceae)
குவளை: தாவரவியல் பெயர் – நிம்பெய அடொரட்டா (Nymphea odorata)
நீர்நிலைகளின் தன்மைக்கேற்ப அதில் வெவ்வேறு உயிரினங்கள் தோன்றி வாழும் என்பதை ஒரே குளமாக இருந்தாலும் அந்நீரின் தன்மைக்கேற்ப பல்வேறு உயிரினங்கள் அதில் வாழும் என்பதில் அறியமுடிகிறது. அவற்றில் வேறுபாடுகள் உண்டு. மிதமான வெப்பமும் மெதுவாக நகரும் குளம், ஏரி போன்ற நீர்நிலைகளில் அல்லி, குவளை போன்ற மலர்கள் மலரும். ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும் விரிநீர்க் குவளையை ஆம்பல்ஒக் கல்லா (நாலடி. 236:1-2) என்ற நாலடியார் பாடல் அடிகள், ஒரே குளத்தில் குவளையும் அல்லியும் வாழும் என்பதைக் காணமுடிகிறது.
நெட்டி
தாவரவியல் பெயர் – அசெனோமெனி அஸ்பெரா (Aeschynomene Aspera)
குளம் ஏரிகளில் வளரும் நெட்டியின் நடுபெபாகம் தாமரைத் தண்டு போன்று நீளமாகவும் மேல்பகுதி சிறு சிறு கிளையாகவும் இருக்கும். நெட்டிச் செடியை உலர்த்தி கைவினைப் பொருட்கள் செய்வார்கள். நெட்டி மாலையினைச் மாடுகளுக்குப் அணிவிக்கும் பயன்பாடு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களின் கலை மற்றும் பொருளாதாரத்தோடு பிணைக்கப்பட்டு உள்ளதால் நெட்டி கைவினைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.3 இத்தகைய நெட்டி (கிடை) நீரில் தோன்றிப் பசுமை நிறத்துடன் இருப்பினும் நெட்டியின் உள் நீர் இருக்காது என்ற குறிப்பினை நாலடியாரின் பின்வரும் பாடல் அடிகளில் காணமுடிகிறது. நீருட் பிறந்து நிறம்பசிய தாயினும் ஈரங் கிடையகத் தில்லாகும் (நாலடி.360:1-2).
பயிர்கள்
நிலத்தடி நீர் சூழல் காரணமாகக் குளம் அல்லது ஏரிக்கரையின் அருகில் பயிர்கள் விளைவது இயற்கை. இதனை, கோளாற்றக் கொள்ளாக் குளத்தின் கீழ்ப் பைங்கூழ்போல் (191:1) என்ற நாலடியாரின் பாடலடியில் குறிப்பிட்டிருப்பதை காணமுடிகிறது.
தவளை
அறிவியல் பெயர் – அனூரா (Anura)
தவளைகள் நன்னீர் வாழ்விடங்களில் வாழும். இவை உயிர்வாழ்வதற்காக தங்கள் தோலை ஈரப்பதமாக வைத்திருக்க குளங்கள், ஏரிகள், ஓடைகள், ஆறுகள் அல்லது சிற்றோடைகளில் வாழ்கின்றன. பூச்சிகளை உண்டு உயிர்களின் உணவுச் சங்கலி சிறப்பாகத் தொடர தவளைகளின் பங்கு முதன்மையானது. குளத்தில் வாழ்ந்தாலும் தன் உடம்பில் இருக்கும் வழுவழுப்பான அழுக்கை அந்நீர்க் கொண்டு தூய்மை செய்து கொள்வதில்லை என்று கூறுவதிலிருந்து, நிலநீர்வாழியான தவளை தன் தோலை ஈரப்பதமாக வைத்திருக்கும் என்பதைப் செழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும் வழும்பறுக்க கில்லாவாம் தேரை (நாலடி. 352:1-2) எனும் பாடல் அடிகள் சுட்டுகின்றன.
நாலடியாரில் பல்லுயிரியத்தின் பயன்கள்
பல்லுயிரியத்தின் பயனாகத்தான் இன்று மனித இனம் இப்புவிக்கோளத்தை ஆண்டு கொண்டிருக்கிறது. இதன் தேவையை இனங்கள் வழங்குதல், விளைச்சல் அதிகரித்தல், சூழலியல் ஒழுங்குபடுத்தல் என்ற வகையில் சூழலியலாளர்கள் வகுத்துள்ளார்கள். அக்கருத்துக்களை அடிப்படையாக நாலடியார் பாடல்களில் ஒப்புநோக்கி இப்பகுதியில் பார்க்கப்படுகிறது.
இனங்கள் வழங்குதல்
ஒரு குறிப்பிட்ட தாவர இனம் பல்வேறு பயிர்களை வழங்க உதவும். மகரந்தச் சேர்க்கை காரணமாக தேனிக்களும் வண்டுகளும் புதிய இனங்கள் உருவாகக் காரணமாக அமைந்து சூழல் வளத்தினை இயற்கையாகவே வளப்படுத்துகின்றன. சமண முனிவர்கள் இயற்கையின் இந்த இனம் வழங்கல் நிகழ்வை நாட்டின் வளமைக்கு உதாரணங்களாக காட்சிப்படுத்தியிருப்பதைக் காணமுடிகிறது.
——————நிறக் கோங்கு
உருவவண்டு ஆர்க்கும் உயர்வரை நாட! (நாலடி. 223:2-3)
எனும் பாடலடிகள், பொன்னிறமான கோங்க மலரில் அழகிய வண்டுகள் ஆரவாரிக்கும் உயர்ந்த மலைகள் உள்ள நல்ல நாட்டுக்கு அரசன் என்ற பொருள் கொண்ட நாலடியாரின் இவ்வடிகள், மலர்கள் நிறைந்த மலைப்பகுதிகளில் வண்டுகள் தேனெடுக்கும் போது மலரின் மகரந்தத் தூள் வண்டின் கால்களில் ஒட்டி மற்ற மலருக்கு வண்டு செல்லும் போது இதனோடு கலந்து புது இனத் தாவரங்கள் உருவாகும் என்பதை உணர்த்துகின்றன. இது போன்றே, கடற்கரைப் பகுதிகளிலும் காற்று வீசுவதின் காரணமாக விதைகள் மற்றும் மகரந்தத்தூள்கள் காற்றில் பரவி வெவ்வேறு தாவரங்கள் வளர்வதற்கு துணைப்புரிகின்றன. இக்காட்சி நாலடியாரில் பதிவுசெய்யப்பட்டுள்ளதைப் பின்வரும் பாடல் அடிகளிலிருந்து அறிந்து கொள்ளமுடிகிறது.
————————- வளியோடி
நெய்தல் நறவுயிர்க்கும் நீள்கடல் தண்சேர்ப்ப (நாலடி. 108:2-3)
பல மலர்களிலிருந்து தேனீக்கள் சேகரித்து வைக்கும் தேன், மனிதர்களுக்கு உணவாக இருப்பதோடு இன்றைய நிலையில் ஒரு நாட்டின் பொருளாதாரம் வளரவும் தேனிக்கள் இன்றியமையாததாக உள்ளன. உலகளவில் பல்வேறு நாடுகளில் கடந்த சில வருடங்களாக விவசாய உற்பத்தி பெருமளவு குறைந்து வருவதற்குக் காரணம் அதிகமாகும் தேனீக்களின் இறப்பு என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதனை, உய்த்தீட்டும் தேனீக் கரி (நாலடி.10:4) என்ற பாடல் வழி தேனிக்கள் தேன் சேகரித்து இனங்கள் பெருகுவதற்கு உதவுவதை அறிந்து கொள்ள முடிகிறது.
விளைச்சல் அதிகரித்தல்
மண் வளம் சிறப்பாக இருக்கின்றபோது பயிர்கள் செழிப்புடன் வளரும் என்று இயற்கை அறிவியலாளர் கோ. நம்மாழ்வார் வலியுறுத்தும் கருத்தை நாலடியாரில் சுட்டப்பட்டுள்ளதைப் பின்வரும் பாடல் அடிகளில் உணரலாம்.
நிலநலத்தால் நந்திய நெல்லேபோல் தத்தம் (179:1)
நிலவளத்தோடு நீர் வளமும் விளைச்சல் அதிகரிக்கத் தேவை என்பதை அறிந்து நீர்நிலை வயலிலிருந்து வாய்க்கால் வழி நீரைக்கொணர்ந்து பழந்தமிழர்கள் விளைச்சலை அதிகரிக்கும் முறையைப் பின்பற்றியதைப் பின்வரும் நாலடியார் அடிகள் உணர்த்துகிறது.
சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும் செய்விளைக்கும்
வாய்க்கால் அனையர் தொடர்பு (நாலடி. 218.3-4)
நல்ல தரமான விதைகள் அதிக விளைச்சலைக்கொடுக்கும். நல்ல விதைகளின் பயனை விளக்கியிருக்கும் நம் முன்னோர்கள், வீரியமிக்க விதைகளை உருவாக்கும் இன்றைய வேளாண் ஆய்வாளர்களுக்கு, முன்னோடிகள் என்பதைப் பின்வரும் நாலடியார் பாடல் உறுதிப்படுத்துகிறது.
செந்நெல்லால் ஆய செழுமுளை மற்றும் அச்
செந்நெல்லே யாகி விளைதலால்- அந்நெல்
வயல் நிறையக் காய்க்கும் வளைவயல் ஊர (நாலடி. 367:1-7)
நல்ல நெற்களால் விளைந்த நல்ல விதைகள் நல்ல நெல்லாகவே விளைந்து நல்ல நெற்கள் நிறைய விளைந்திருக்கும் வளமான வயல்கள் நிறைந்த ஊர் என்ற செய்தி விளைச்சல் அதிகரிப்பிற்கு நல்ல விதைநெல்லின் இன்றியமையாமையை உணர்த்துகின்றது. பூச்சிகளின் அரிப்பு காரணமாக பயிர்கள் மற்றும் தாவரங்கள் வளர்ச்சி அழிந்துவிடும் அல்லது விளைச்சல் குறைவாகும். சில நேரங்களில் மரத்தையே அழிக்கும் ஆற்றல் பூச்சிகளுக்கு உண்டு என்பதற்கான உதாரணத்தை நாலடியாரில்,
சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
மதலையாய் மற்றதன் வீழுன்றிக் யாங்குக் (நாலடி.197:1-2)
என்ற பாடலில் காணமுடிகிறது. அவ்வாறு ஓர் உயிரால் ஏற்படுகின்ற பயிர்களின் அழிவை மற்ற உயிரினங்கள், அவற்றை உணவாக உண்டு பயிர்களைக் காக்க உதவி புரிவது உணவுச் சங்கலி (பயிர்களைப் பூச்சிகள் உண்பதும் பூச்சிகளை எலிகள் உணவாகக் கொள்வதும் எலிகளைப் பாம்பு உட்கொள்வதும் இயற்கையில் நடக்கும் உணவுச் சங்கலியாகும்.) அறுபடாமல் தொடரவும் காரணமாகிறது. சர்பெண்டஸ் என்று அறிவியலில் அழைக்கப்படும் பாம்புகள் நிலத்தின் பொந்துகளில் வாழ்ந்து வரும் என்பதை, விரிநிற நாகம் விடருள தேனும் (164:1) என்ற பாடல் அடி மூலம் தெரிந்துகொள்ளமுடிகிறது.
சூழலியல் ஒழுங்குபடுத்தல்
நிலம் நீர் காற்று மாசுபடாமல் இருப்பது சூழல் சமனைக் காக்கும். இந்தச் சூழல் ஒழுங்கு தோற்றப்பொருட்களில் மட்டுமின்றி பல்லுயிரினங்களின் வாழ்வியலுக்கும் முதன்மைத் தேவையாகிறது. தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் மூலம் உயிர்காற்றை (ஆக்ஸிஜனை) உற்பத்தி செய்கின்றன. மனிதர்கள் அதனைச் சுவாசிக்கிறார்கள் மற்றும் கரியமில வாயுவை (கார்பன் டை ஆக்சைட்) வெளியிடுகிறார்கள். இது மரங்களால் உறிஞ்சப்படுகிறது. இந்தச் சுவாசச் சங்கிலி சுற்றுச்சூழலில் அனைத்து உயிரினங்களும் எவ்வாறு ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளனவோ அதேபோல்தான் உயிரினங்களின் உணவுச் சங்கிலியும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சுற்றுச்சூழல் அமைப்பை ஆரோக்கியமானதாகப் பராமரிக்கப் பல்லுயிர்களின் இருப்பு தேவையானதாகிறது.
உறுபுலி ஊனிரை யின்றி ஒருநாள்
சிறுதேரை பற்றியும் தின்னும் (நாலடி. 193:1-2)
என்ற பாடல் அடிகள் இரையின்றி வாடும் புலி தேரையை உண்ணும் என்று விலங்குகளின் உணவைச் சுட்டும் நாலடியார், தாவரங்கள் மனிதவாழ்க்கையில் உணவாகவும் அவர்கள் பயன்படுத்தும் பொருளாகவும் அமைந்திருந்த சூழலைக் காட்டியுள்ளது.
கடகஞ் செறிந்ததங் கைகளால் வாங்கி
அடகு பறித்துக்கொண் டட்டுக் – குடைகலனா
உப்பிலி வெந்தைதின் றுள்ளற்று வாழ்பவே,
துப்புரவு சென்றுலந்தக் கால் ( நாலடி.289:1-4)
என்ற நாலடியார் பாடல் தம் கைகளால் செடியை (கீரையை) வளைத்துப் பறித்துக்கொண்டுபோய் வேகவைத்து, பனை ஓலைகளால் செய்யப்பட்ட பாத்திரத்தில் உப்பில்லாது வெந்த கீரையை உண்டு வாழ்ந்தனர் என்ற இக்காட்சி தாவரங்களின் பயன்பாடும் பழந்தமிழர் சூழலோடு பொருந்தி வாழ்ந்த வாழ்வியலும் பதிவிடப்பட்டுள்ளதை அறியமுடிகிறது.
பல்லுயிரியத்தின் மேலாண்மை
பல்லுயிரியத்தின் மேலாண்மை என்பதின் முதன்மை நோக்கம் பல்லுயிர் பெருக்கமாகும். பல்லுயிர்கள் தான் இப்புவி மண்டலத்தினை வளமாக வைக்கிறது. இயற்கை தானே விதைப்பரவல், மகரந்தச் சேர்க்கை போன்ற செயல்பாடுகளால் தாவரங்கள் மட்டுமல்லாது புழு பூச்சி போன்ற பல்வேறு உயிரினங்கள் தோன்றுகின்றன. என்றாலும், இப்புவியின் பெரும் பங்கு வளத்தினை அனுபவித்து வாழும் மனிதனுக்கு பல்லுரிகளைக் காப்பதில் பெரும் பங்கு உள்ளன. இன்றையச் சூழலியலாளர்கள் பல்லுயிர் மேலாண்மைகளாகத் தாவரப் பல்லுயிர்ப்பெருக்கம், விலங்குகள் பல்லுயிர்ப்பெருக்கம் மற்றும் நுண்ணுயிரிப் பல்லுயிர்ப்பெருக்கம் போன்றவற்றைச் செயல்படுத்தி வருகின்றனர். தாவரங்களை வளர்க்கும் முறைகள் நாலடியாரில் கொடுக்கப்பட்டுள்ளன. குறவன் மலைவளத்தை நினைத்தும் உழவன் தனக்குப் பயன் தந்த விளை நிலத்தை நினைத்து உள்ளம் உவப்பான் என்பதை,
மலைநலம் உள்ளும் குறவன்; பயந்த
விளைநிலம் உள்ளும் உழவன் (நாலடி. 366:1-2)
என்ற பாடல் அடிகள் மூலம் மக்கள் மகிழ்ச்சியாக தான் வாழும் சூழலைக் காக்கும் தேவையை உணர்த்தியிருக்கிறார்கள். சாய்ப்பறிக்க நீர்திகழும் தண்வய லூரன் மீது (நாலடி.387:1) என்ற அடியில், வயலில் நெற்பயிரோடு வளரும் கோரைபுற்களை நீக்கிவிட்டால் வயலில் நீர் அதிகமாக நின்று வயல்கள் அதிக விளைச்சலைக் கொடுக்கும் என்ற வேளாண் மேலாண்மையைக் அறியமுடிகிறது. நாள்தோறும் நீர் பாய்ச்சி பாக்கு மரத்தையும், விட்டு விட்டு நீர் பாய்ச்சி தென்னை மரத்தையும் வளர்க்க வேண்டும். ஆனால் விதையிட்ட நாளன்று நீர் விட்டால் போதும் பராமரிப்பு இல்லாமலே பனை மரம் வளரும் என்று பல்வேறு வகையான மரங்களை வளர்க்கும் முறைகளை நாலடியார் பின்வரும் பாடலில் விளக்கியுள்ளது.
கடையாயர் நட்பிற் கமுகனையார் ஏனை
இடையாயர் தெங்கின் அனையர் – தலையாயார்
எண்ணரும் பெண்ணைபோன்று இட்டஞான்று இட்டதே
தொன்மை யுடையார் தொடர்பு (நாலடி. 216:1-4)
தாவரங்களை மட்டுமல்லாது பிற உயிரினங்களோடு பழகி பயன்கொண்டு அவற்றையும் காத்தனர்.
ஆகா தெனினும் அகத்துநெய் யுண்டாகின்
போகா தெறும்பு புறஞ்சுற்றும் (நாலடி.337:1-2)
என்ற அடிகள், பசுவின் பாலிலிருந்து உண்டாக்கும் நெய்யை விட்டு எறும்பு அகலாது என்பதிலிருந்து பசுவை குடும்ப உறுப்பினராக காத்து வளர்ப்பதும், அதனைச் சார்ந்து பிற உயிரினங்களும் ஒத்தும் உதவியுமாக வாழ்வது பழந்தமிழரின் வாழ்வியலாக இருந்தது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. சூழலியலாளர்கள் சூழல் வளம் நிறைந்த பகுதிகளை அடையாளப்படுத்தும் முயற்சிகளை எடுத்துவரும் நிலையில், இந்த உலகம் இயற்கை வளம் நிறைந்தது என்பதை மல்லன்மா ஞாலத்து (நாலடி. 296:1) என நாலடியார் கூறியிருப்பது அக்காலம் சூழல் வளம் நிறைந்ததாக இருந்ததை அறிவுறுத்துகிறது.
“1970-களின் தொடக்கத்தில் இந்தியாவில் இமயமலை மட்டுமே சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகக் கருதப்பட்ட நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையை சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்தப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என மூத்த சூழலியலாளர்கள் சுந்தர்லால் பகுகுணா, சத்தீஸ் சந்திர நாயர், கலானந்த் மணி, பாண்டுரங்க ஹெக்டே, பி.ஜே.கிருஷ்ணன், டாக்டர் ஜீவனாந்தம் உள்ளிட்டோர் கோரிக்கை எழுப்பியதன் விளைவாக மேற்குத் தொடர்ச்சி மலையை சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்தப் பகுதியாக அறிவித்துள்ளது.”4
மேலும், இன்றைய அரசு தமிழ்நாட்டின் அரிக்காபட்டி கிராமத்தை பல்லுயிர் மண்டலமாக அறிவித்து அதனைக் காக்கும் முயற்சிகளை எடுத்துவருவது போன்ற முயற்சிகள் தேவைப்படுகின்றன. ஆனால் அன்றைய மக்கள் இதைப்போன்ற அரசின் திட்டமின்றியே தங்களின் இயற்கையோடு இணைந்த வாழ்வியல் முறைகளில் பல்லுயிர்களைக் காத்து வளர்த்தனர் என்பதை மேற்கண்ட சான்றுகளின் வழி அறியமுடிகிறது.
முடிவுரை
⊕ நிலம் மற்றும் நீரியற் சூழல்களில் அமைந்திருக்கும் வேறுபாடுகள் காரணமாக பல்வேறு உயிரின வகைகள் உள்ளன என்பதை நம் முன்னோர்கள் அறிந்திருந்தனர்.
⊕ கொள்ளு, ஆம்பல், யானை, வண்டு, பாம்பு மற்றும் மான் போன்றவற்றின் மரபு வகைமைகள் சுட்டப்பட்டுள்ளன.
⊕ இனப் பல்வகைமைகளில் மலையும் மலைச் சார்ந்த இடங்களில் கோங்கு, தேனீ, பறவைகள் காட்டுப்பசு போன்றவைகளும் காடும் காடு சார்ந்த இடங்களில் சந்தனமரம், வேங்கை மரம், காடை, கவுதாரி, புலி, மற்றும் கிளி போன்றவைகளும் வயலும் வயல் சார்ந்த பகுதிகளில் நெல், புல் மற்றும் கோரைப் புல் போன்றவைகளும் கடலும் கடல் சார்ந்த இடங்களில் நெய்தல் பூ, தாழஞ்செடி, புன்னை மரம், மீன்கொத்தி பறவை, வண்டு, அடபங்கொடி மற்றும் அன்னம் போன்றவைகளும் அவற்றின் இயல்புகளோடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
⊕ மேலும், சூழ்நிலை மண்டல வகைமையில் வெப்பமண்டல உயிரினமான சந்தன மரத்தையும், நெட்டி, அல்லி, குவளை, பயிர்கள் மற்றும் தவளை போன்ற மித வெப்ப மண்டல உயிரினங்களையும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
⊕ பல்லுயிரியத்தின் மிக இன்றியமையாத பயன்களான இனம் வழங்குதல் விளைச்சல் அதிகரித்தல் மற்றும் சூழலியல் ஒழுங்குபடுத்தல் ஆகியவற்றில் மகரந்த சேர்க்கை விதை பரவுதல், உணவுச் சங்கிலி சமன்செய்தல் போன்றவைக்கான சான்றுகள் காணப்படுகின்றன.
⊕ மேற்கண்ட சான்றுகளிலிருந்து, பழந்தமிழர்கள் தன்னைச் சுற்றி வாழும் பல்லுயிர்களை அறிந்து அவற்றைப் பாதுகாக்கும் வழித்தடத்தைப் பின்பற்றி வாழ்ந்தனர். அத்தகைய இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையால், பல்லுயிர் சமநிலை காக்கப்பட்டது என்பதை அறிந்துகொள்வதோடு இன்றைய நிலையில் இச்சமநிலை காக்கப்படாமல் இருப்பதற்கு மனிதர்களின் மாறிவிட்ட வாழ்க்கைமுறை காரணம் என்பதையும் உணரமுடிகிறது.
⊕ தாவரங்கள் மற்றும் விலங்குகள் பெருக்கம் குறித்த செய்திகள் நாலடியாரில் கிடைத்தாலும் இன்றைய அறிவியல் கூறும் கண்களுக்குப் புலனாகாத நுண்ணுயிர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை.
⊕ எனவே, அதற்கான உரிய முயற்சிகளை எடுப்பது இன்றைய இன்றியமையாத தேவை என்பதை உணர்ந்து செயல்படவேண்டும். மேலும், சூழலியல் சமன்பாட்டிற்கு இக்கட்டுரையில் சுட்டப்பட்டுள்ள உயிரினங்கள் உதவுவதை ஆய்ந்தறிந்தது போல நாலடியாரில் உள்ள பல்வேறு தாவரங்களின் மருத்துவப் பயன்களையும் ஆய்ந்தறிவதற்கான தரவுகள் காணமுடிகிறது என்பதை முன்வைத்து இக்கட்டுரை மேலாயுவுக்களத்திற்கும் வழிகாட்டுகிறது.
அடிக்குறிப்பு
1.ஜமுனா. “வேங்கை மரம் பொதுப் பண்புகள்” DAYOFMEDIA. பதிவு நாள் 11 ஏப்ரல் 2021. பார்த்த நாள்: 8 டிசம்பர் 2022. https://www.daysofmedia.com/2021/04/blog-post_36.html
2.ஆண்டனி செல்வராஜ். ஒய். “அழிந்துவரும் பறவைகள் பட்டியலில் கவுதாரி: இயற்கை பாதுகாப்பு அமைப்பு வேதனை”. இந்து தமிழ் திசை. பதிவு நாள்:9 நவம்பர் 2016. பார்த்த நாள்: 9 டிசம்பர் 2022. https://www.hindutamil.in/news/tamilnadu/86883–1.html.
3.கார்த்திக். எஸ். “புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூர் நெட்டி கலைப் பொருளின் சிறப்புகள் என்ன?”. News 18 தமிழ். பதிவு நாள்:12 ஜூலை 2022. பார்த்த நாள்: 9 டிசம்பர் 2022. https://tamil.news18.com/thanjavur/thanjavur-netti-works-specialities-sau-770667.html
4.சஞ்சீவி குமார் டி.எல். “சூழலியல் முக்கியத்துவம் பெறும் மேற்குத் தொடர்ச்சி மலை” இந்து தமிழ் திசை. பதிவு நாள்:18 அக்டோபர் 2013. பார்த்த நாள்: 23 டிசம்பர்2022.
மேற்கோள் சான்றுகள்
1.அறவாணன் க.ப. உரையாசிரியர். நாலடியார். மு.ப. தமிழ்க்கோட்டம்,14 ஏப்ரல் 2010.
2.கெளமாரீஸ்வரி எஸ். தொகுப்பாசிரியர். பதினெண்கீழ்கணக்கு நூல்கள் மூலமும் உரையும். முதற்பதிப்பு, சாரதா பதிப்பகம், மார்சு 2009.
3.சாமி. பி.எல். சங்க நூல்களில் மரங்கள். முதல் பதிப்பு, திருக்குறள் பதிப்பகம், 1902.
4.சாமி. பி.எல். சங்க இலக்கியத்தில் செடிகொடி விளக்கம். மறு பதிப்பு, திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட்,1982.
5.சீநிவாசன். இ. சங்க இலக்கியத் தாவரங்கள். முதல் பதிப்பு, தமிழ்ப் பல்கலைக் கழகம், சூன் 1987.
6.நெடுஞ்செழியன். வே. தமிழர் கண்ட தாவரவியல். முதல் பதிப்பு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2005.
7.பாலசுந்தரம் பிள்ளை தி.சு. உரையாசிரியர். நாலடியார். கழக வெளியீடு, 2007.
8.புலியூர்க் கேசிகன். பதிப்பாசிரியர். திருக்குறள் பரிமேலழகர் உரை. எட்டாம் பதிப்பு, பூம்புகார்பதிப்பகம், பிப்ரவரி 2001.
9.மணவழகன் ஆ. பதினெண்கீழ்கணக்கில் அறிவுத் துறைகளும் மரபு நுட்பங்களும். மறுமதிப்பு, ஐவனம் தமிழியல் ஆய்வு நடுவம், 2020.
10.மாதையன் பெ. பதிப்பாசிரியர். பாலசுந்தரம் ச. உரையாசிரியர், தொல்காப்பியம் பொருளதிகாரம் ஆராய்ச்சிக் காண்டிகையுரை செய்யுளியல் – மரபியல். முதல் பதிப்பு, தொகுதி -3, பகுதி-3, பெரியார் பல்கலைக் கழகம், பிப்ரவரி 2012.
11.வசந்தகுமார். இரா. அறிவியல் கண்ணோட்டத்தில் சங்க இலக்கிய விலங்குகள். இரண்டாம் தொகுப்பு, வசந்தா பதிப்பகம், 2006.
12.ஸ்ரீசந்திரன் ஜெ. உரையாசிரியர். நாலடியார். வர்த்தமானன் பதிப்பகம், 2000.
13.“தேனீக்கள் இல்லையென்றால் மனித வாழ்வும் முடிந்து விடும்”. தினகரன் இணைய நாளிதழ், பதிவு நாள்: 20 மே 2019. பார்த்த நாள்: 18 நவம்பர் 2022. https://www.thinakaran.lk/comment/1747.
14.பகத்சிங் “நிலத்தின் உப்புத் தன்மையை நீக்கும் கடலாரை” நக்கீரன் சிறப்பு செய்திகள் பதிவு நாள்: 24 செப்டெம்பர் 2020. பார்வை நாள்: 30 சனவரி 2023. https://www.nakkheeran.in/special-articles/special-article/kadalarai-plant-removes-salinity-land.
15.Amy Quinton. “Cows and climate change Making cattle more sustainable” UCDAVIS, பதிவு நாள் 27 ஜூன் 2019. பார்த்த நாள்: 18 நவம்பர் 2022 https://www.ucdavis.edu/food/news/making-cattle-more-sustainable.
16.Hawksworth.D.L. “Biodiversity: measurement and estimation.” Springer. பதிப்பாண்டு 1996. பக். பன்னாட்டுத் தரப்புத்தக எண்: 978-0-412-75220-9. பார்த்த நாள்: 11 நவம்பர் 2022.
17.National Geographic Society . “Biodiversity”. education national geographic, பதிவு நாள்: 20 மே 2020. பார்த்த நாள்: 24 நவம்பர் 2022. https://education.nationalgeographic.org/bresource/biodiversity
18.“Water Lilies”. The Pond Digger, Muffin group. https://theponddigger.com/water-lilies/ பார்த்த நாள்: 18 நவம்பர் 2022.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
ச. மாலதி,
முனைவர் பட்ட ஆய்வாளர்
பதிவு எண் 2819,
நெறியாளார்
முனைவர் ஆ. மணவழகன்,
இணைப் பேராசிரியர்,
சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை,