Naalaayira Thivviyap Pirapanthamum Vainava Uraiyasiriyarkalum|T.Elumalai

Abstract
        The writers who have emerged as the fountains of knowledge that have led to the change and rise of the Tamil language are the ones who have enriched themselves with their powerful and captivating texts, capturing the subtle ideas in the texts in a way that makes the readers understand them. At the same time, it can be said that ‘those who have preserved the language by capturing and interpreting the Tamil texts and their greatness in a way that makes others understand them’1. We know that such writers have displayed their profound knowledge of grammar and literature in their texts. In this regard, the purpose of this research article is to examine the news about those who have seen texts in the world of Vaishnava literature.


“நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமும் வைணவ உரையாசிரியர்களும்”

ஆய்வுச் சுருக்கம்        
      தமிழ் மொழியின் மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் ஊற்றெடுக்கும் அறிவு திறல்களாக வளம் வந்தவர்கள் உரையாசிரியர்கள். நூல்களில் உள்ள நுட்பமான கருத்துக்களை படிப்பவர்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் எடுத்து இயம்பக் கூடிய ஆற்றல் உடைய உரைவீச்சுகளால் உள்ளம் கவர்ந்தவர்கள்.அதே நேரத்தில் ‘தமிழ் நூல்களையும் அதன் அருமை பெருமைகளையும் மற்றவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் எடுத்து உரைத்து மொழி காத்தவர்கள் எனக் கூறலாம். அத்தகைய உரையாசிரியர்கள் இலக்கணத்திற்கும் இலக்கியத்திற்கும் ஏற்றவாறு தம் நுன்மான் புலமையை வெளிப்படுத்தியுள்ளமையை     அவரவர்  உரைகளே சான்றாக இருக்க அறிகிறோம். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில்  வைணவ உரையாசிரியர்களின் பங்களிப்பு குறித்து  ஆராய்வது இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

திறவுச்சொற்கள்
      
                 பெரியவாச்சான் பிள்ளை  – வைணவம் – வைணவ உரை – ஆழ்வார்கள் – நாலாயிர திவ்விய பிரபந்தம் – உரை ஆசிரியர்கள்- திவ்யம் – நன்மை.

முன்னுரை
                 
           திருமாலிய வழிபாட்டை முன்னிறுத்திப் பாடப்பட்டப் பாசுரங்களைக் கொண்டது நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம். ‘பிரபந்தம்’ என்பது நன்றாகக் கட்டப்பட்டது எனப்பொருள்படும்.  ‘திவ்வியம்’ என்பது ‘நன்மை, தெய்வத்தன்மை’ எனவும் பொருள்படும். எனவே இறைத்தன்மை பொருந்திய பாசுரங்களின் தொகுப்பே ‘திவ்வியப்பிரபந்தங்கள்’ ஆகும்2. ‘நாலாயிரம்’ என்பது பாசுரங்களின் எண்ணிக்கையாகும் திருமாலின் இயல்புகளையும் அவரது அருட்தன்மைகளையும் அடியார்கள் கொண்டிருக்கும் அளப்பறிய பக்தியினால் தமக்குடனான ஈடுபாட்டையும் எடுத்துரைக்கும் பெட்டகமாக விளங்குகிறது.
       இதனை திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி, திருப்பாவை, நாச்சியார் திருமொழி, பெருமாள் திருமொழி, திருச்சந்த விருத்தம், திருமாலை, திருப்பள்ளி எழுச்சி,அமலணாதிபிரான்,கண்ணிநுண் சிறுத்தாம்பு, பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திரு நெடுந்தாண்டகம், முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி,மூன்றாம் திருவந்தாதி, நான்காம் திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவெழுக்கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் ,திருவாய்மொழி என முறைப்படுத்தப்பட்டு தொகுத்தவர் நாதமுனிகள் என்றாலும் அவற்றை நன்கு படித்து பிறர் அறியும் வண்ணம் உரை வகுத்துக் கொடுத்தவர்கள் வைணவ உரையாசிரியர்கள் எனலாம். அவர்கள் வைணவ மரபுகளை பின்பற்றி வாழ்ந்து  வழிபாட்டு முறைமைகளை நன்கு உணர்ந்தவர்களாக இருந்துள்ளனர். மேலும் தமிழ் மற்றும் வடமொழி புலமை மிக்கவர்களாகவும் இருந்தமையால் மணிப்பிரவாள நடையில், உரை நூல்களைத் தந்துள்ளனர். பாசுரங்களுக்குரிய வகையில் சொற் பொருள் விளக்கம், பொருள் நயம், வினா-விடை போக்கு, உவமை நயங்கூறுதல், பிற நூல்களை ஏற்ற  இடங்களில் மேற்கோள் காட்டி விளக்குதல் ஆகியவற்றில் தலை சிறந்தவர்களாக இருந்திருக்கின்றனர்.  அத்தகைய வைணவ உரையாசிரியர்கள் பற்றிய பதிவுகளாக இக்கட்டுரை அமைகிறது.

வைணவ உரை முன்னோடிகள்
  
       ஆழ்வார் பெருமக்களால் அருளிச் செய்யப்பட்ட பாசுரங்களை தமது அனுபவத்தால் உணர்ந்து அறிவால் ஆராய்ந்து நுட்பமாகவும் திப்பமாகவும் தெள்ளத் தெளிவாக தமக்கே உரிய வகையில் எடுத்து வாய் வழியாக உரை விளக்கம் தந்தவர்களான  குரு பாரம்பரிய வழி நின்ற ஆச்சாரியர்களான நாதமுனிகள், ஆளவந்தார், இராமானுஜர், எம்பார், கூரத்தாழ்வார், திருவரங்கத்தமுதனார், அனந்தாழ்வான் முதலி ஆண்டான் அம்மங்கி அம்மாள் பிள்ளை திருநறையூரரையர் ஆகியோர் உரை முன்னோடிகளாக கருதப்படுகின்றார்கள்.

வைணவ உரையாசிரியர்கள் 
           
       வைணவ கொள்கைகள் தத்துவார்த்த விளக்கங்கள் சமய மரபுகள் போன்றவற்றை உள்ளடக்கி ஆழங்கால் பட்டநிலையில் அடுத்து வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ளளவும் தெரிந்து அதன் வழி நடக்கவும் பாசுரங்களில் உட்பொதிந்துள்ள கருத்துகளைக் கொண்டு சேர்பதற்குரிய  தேவை ஏற்பட்ட காரணத்தால்,  எழுத்துருவில் உரை விளக்கம் தர வேண்டியது ஆயிற்று. அவ்வாறு நூல் வடிவில் உரை விளக்கம் தந்தவர்களாக  ‘திருக்குருகைப்பிரான் பிள்ளை, பட்டர், நஞ்சீயர், நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை,வாரிகேசரி அழகிய மணவாளசீயர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், மணவாள மாமுனிகள் போன்றோரை வைணவ உரையாசிரியர்களாகப் போற்றப்படுகிறார்கள்’3. இவர்கள் யாவரும்  ‘விசிட்டாஅத்வைதம்’ என்று சொல்லப்படுகின்ற வைணவ தத்துவார்த்தங்களை மிகச் சிறப்பாக தத்தமக்குரிய அனுபவ இயல்புகளை யதார்த்தமாக எடுத்து கூறி, படிப்பவர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் உரைவீச்சுகளுக்கு உரியவர்களாக இருக்க அறிகிறோம்.

உரைகளின் சிறப்பு      
          பாசுரங்களுக்கு  உரை இயற்றிய வைணவப் பெரியோர்கள் தாம் கற்ற கலைகள் அனைத்தையும் தம் உரைகளில் வழங்கிச் சென்றுள்ளனர். அப்பெரியவர்களின் இதய ஒலிகள் பலப்பல வகையாய் உரைகளின் வாயிலாக வெளிப்படுகின்றன. பாடல்களின் ஆழ்ந்த பொருள்களை மிக்க நயம்படப் புலப்படுத்தி எழுதியுள்ளனர். மிக அரிய செய்திகளும் விளக்கங்களும், நுண்கலைச் சொற்களும் உரைகளில் பொதிந்து கிடக்கின்றன. இவ்வுரைகள் தனி இலக்கியமாகவும், வைண சமய தத்துவ விளக்கமாகவும் போற்றப்படுகின்றன. பிற்காலத்தில் வைணவர்கள் ஆழ்வார்களின் பாடல்களைவிட, உரைவிளக்கங்களையே சிறந்தவையாகக் கருதிப் பின்பற்றினர். விளக்கம் கூறிச் சமயக் கருத்துக்களைப் பரப்ப உரைகளையே ஏற்று சான்றுகளாகக் கொண்டனர் என்பதற்க்கு சான்றாகும். திவ்வியப் பிரபந்த உரையாசிரியர்களின் சிறப்பை டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர், “அவர்களுடைய உரையில் ஒரு பாடலுக்கு உரை கேட்டு விட்டால் மனம் வேறு ஒன்றில் செல்லாது”4 என்று கூறிப் புலப்படுத்துகின்றார். (சங்கத் தமிழும் பிங்காலத் தமிழும், ப.162) என்பது கூறத்தக்கது.

நடையும் மொழியும்
      
          வியாக்கியானங்கள் பேச்சு நடையில் அமைந்துள்ளன. கொச்சை மொழிகள் விரவியுள்ளன. இவற்றிலும் ஒருவகை அழகும் ஆற்றலும் வெளிப்படுகின்றன. கணக்கற்ற பழமொழிகள் வகைவகையான மரபுத் தொடர்கள், நல்ல நல்ல நாட்டுப்புறக் கதைகள், சுவையான பழக்க வழக்கங்கள், வியப்பூட்டும் நிகழ்ச்சிகள் ஆகியவை வியாக்கியானங்களில் நிரம்பியுள்ளன என அறிகிறோம்.

மணிப்பிரவாள நடை      
          ‘வெண்ணிற முத்துமணிகளையும் செம்பவளங்களையும் கலந்து முத்தும் பவளமும் ஒன்றன்பின் ஒன்று வருமாறு அமைத்து மாலை கட்டுவதுபோல, வடமொழிச் சொற்களைத் தமிழ்மொழியுடன் இடையிடையே கலந்து எழுதும் இலக்கிய நடை மணிப்பிரவாள நடை என்று பெயர் பெற்றது’5. இருவேறு தனி இயல்புகளை உடைய இரு மொழிகளை ஒன்று சேர்க்கும் முயற்சியில் பிறந்ததே இந்நடையாகும். மணிப்பிரவாளம் என்ற தொடரில் உள்ள மணி முத்தையும். பிரவாளம் பவளத்தையும் குறிக்கும். தமிழ், வடமொழி இரண்டனுள் எது முத்து. எது பவளம் என்ற வினாவை எழுப்பி விடை காண்பது வீண் வேலையாகும். முத்து, பவளம் இரண்டும் விலையுயர்ந்த பொருள்களே வடமொழி, தமிழ் இரண்டையும் சிறப்பாகக் கருதியவர்களே மணிப்பிரவாள நடையைத் தோற்றுவித்தனர் என அனுமானிக்க இடம் அளிக்கிறது.
   மணிப்பிரவாள நடையில், வட சொற்களும் தொடர் மொழிகளும் தமிழுடன் விரவிவரும். தமிழில் உள்ள இடைச்சொற்களும் வினைமுற்று எச்சங்களும் வந்து கலக்கும் வடமொழி வினைச் சொற்களும் வந்து சேரும், வடமொழிப் பெயர்ச்சொற்கள் வடமொழி வேற்றுமை உருபேற்று வழங்கும் பிராகிருதமொழிச் சொற்களும் இடம்பெற பார்க்கமுடிகிறது.

நாதமுனியின் வழித்தோன்றல்
       
        வீர நாராயணபுரத்தில் வாழ்ந்த நாதமுனியின் மைந்தர் ஈசுவரமுனி, ஈசுவர முனியின் மைந்தர் ஆளவந்தார். ஆளவந்தாருக்கு யமுனைத் துறைவர் என்ற பெயரும் உண்டு. ஆளவந்தார் வைணவ ஆசாரியர்களில் சிறப்புடன் விளங்கினார். இவருக்குச் சீடர் பலர் தோன்றினர் என்றும் கூற அறிகிறோம்.

ஆறாயிரம் படி
     
            நாதமுனிகள் காலம் முதல் இராமானுசர் காலம் வரை, திருவாய் மொழிக்கு வாய்மொழி வாயிலாகவே உரைகள் கூறப்பட்டு வந்தன. ஆறாயிரப்படியே முதன் முதலில் எழுத்து வடிவில் தோன்றிய திருவாய்மொழி வியாக்கியானம். இதுவே பிற்கால வைணவ உரைகளுக்குத் தோற்றுவாய். இதனை இயற்றியவர், ஆளவந்தாரின் சீடராகிய பெரிய திருமலை நம்பியின் புதல்வாரன பிள்ளான் என்பவர். பிள்ளான் 1062 இல் தோன்றினார். இவர் இராமானுசரின் உள்ளங்கவர்ந்த நன் மாணாக்கர், ஆசானின் குறிப்பறிந்து நடந்து கொண்ட சீடர் என்று தெரிந்துக் கொள்ளமுடிகிறது. மேலும்,
       இராமானுசரின் கட்டளையை மேற்கொண்டு இவர். 6000 படி என்ற வியக்கியானம் இயற்றினார். இவரது வியாக்கியானத்தைக் கண்டு மகிழ்ந்து இராமானுசர் இவருக்கு (நம்மாழ்வார் நினைவாக) ‘திருக்குருகைப் பிரான்’ என்று பெயரிட்டார்’6. 6000 படியின் பெருமையையறிந்து, “யாம் செய்த ஹ பாஷ்யத்தைப் போலவே, இதுவும் காலட்சேபத்தில் வைக்கப்படுவதாக” என்று பணித்தார் இராமானுசர்.

பராசரபட்டர்
        
         கூரத்தாழ்வாரின் மைந்தர். கி.பி.1123 -ல் பிறந்தவர். இராமானுசரின் சீடர் ஆன பின், இவருடைய கீர்த்தி விளங்கி வரும் காலத்தில் வடநாட்டிலிருந்து மாதவசூரி என்னும் வேதாந்தி, அனைவரையும் தர்க்கத்தில் வென்று மிக்க சிறப்போடு திருவரங்கம் வந்தார். அவரைப் பட்டர் சென்று பார்த்து வெற்றி கொண்ட செய்தியை நஞ்சீயர் வரலாற்றால் அறியலாம். தோற்ற அந்த வேதாந்தியே இவருடைய மாணாக்கராகி, நஞ்சீயர் என்று பெயர் பெற்றார் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பட்டர் திருநெடுந்தாண்டக வியாக்கியானத்தில் மிகவும் வல்லவர். அதிலும் சிறப்பாக 21 ஆவது பாடலாகிய,
“மைவண்ண நறுங்குஞ்சிக் குழல்பின்தாழ”7
என்ற பாடலுக்கு மிகவும் விரிவாகப் பிரசங்கம் செய்த்தான செய்தியும் அறியலாகிறது.

மணவாள மாமுனி
         
       இராமானுசருக்குப்பின், ஆசாரியார் பரம்பரையில் சிறப்புடன் விளங்கியவர் மணிவாள மாமுனிகள். ஐவர் ஆழ்வார் திருநகரியில் 1370 இல் (சாதாரண ஆண்டு, ஐப்பசி மாதம் மூல நட்சத்திரத்தில் தோன்றினார். பெரியாழ்வார் திருமொழிக்கும், இராமானுச நூற்றந்தாதிக்கும் விளக்கம் எழுதிப் புகழ் பெற்றவராகக் காணப்படுகிறார்.

ஆழ்வார் பாடல்களும் ஆசாரியார்கள் விளக்கமும்
        
      திருவாய்மொழிக்கு வியாக்கியானங்கள் L160 தோன்றியது போல, திருவிருத்தத்திற்கும் ஐந்து உரைகள் தோன்றியுள்ளன. “நம்பிள்ளை பெரியவாச்சான் பிள்ளை அழகிய மணவாள சீயர் அப்பிள்ளை பெரிய பரகால சுவாமி ஐவரும் விளக்கவுரை கண்டுள்ளனர். இவற்றுள் இப்போது பெரியவாச்சான் பிள்ளை விளக்கம் ஒன்றே கிடைக்கின்றது. அப்பிள்ளையுரை, முதல் பதினைந்து பாடல்களுக்கு மட்டுமே கிடைக்கின்றது”8. ஏனையவை மறைந்து விட்டன. (பூவராகம் பிள்ளை, கரந்தைக் கட்டுரைகள், ப.274). நம்பிள்ளை திருவாய்மொழிக்கு ஒன்பதாயிரப்படி (நஞ்சீயர் கூறிய விளக்கவுரை) எழுதி அருளியதோடு நம்மாழ்வாரின் பெரிய திருமொழி, திருவிருத்தம் தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருப்பள்ளி எழுச்சி ஆகியவற்றிற்கு விளக்கம் எழுதியுள்ளார் என்பது தெரியலாகிறது.
நஞ்சீயர் மதுரகவியாழ்வாரின் கண்ணிநுண் சிறுதாம்புக்கு இயற்றியுள்ளார். மேலும், ஆண்டாளின் திருப்பாவைக்கு ஈராயிரப்படி, திருப்பல்லாண்டு வியாக்கியானம் ஆகியவற்றை அருளி இருக்கின்றார். அதுபோல, அழகிய மணவாள சீயர் திருவிருத்த வியாக்கியானம் இயற்றியுள்ளார். மேலும், அவர் தீபப் பிரகாசிகை, கீதா சாரம் முதலிய பல நூல்களை இயற்றியுள்ளார். இப்பெரியார் சோழவள நாட்டில், திருவெள்ளியங்குடி என்கிற திவ்விய தேசத்திற்கு ஒரு கல் தொலைவில் உள்ள, சேங்கநல்லூர் எனும் ஸ்தலத்தில் கலி 4329 சர்வஜித்து ஆவணி மாதம் ரோஹிணி நட்சத்திரத்தில் (க்ருஷ்ணபகவான் திருவவதரித்த அத்தத்தின் பத்தாநாளில்) அவதரித்தார். இவர் கி.பி.1228 ல் பிறந்தார் என்பது வரலாறு. பெரியவாச்சான் பிள்ளை, நாலாயிர திவ்வியப் பிரபந்தம் முழுமைக்கும் வியாக்கியானம் எழுதி வியாக்கியான சக்ரவர்த்தி என்னும் புகழைப் பெற்றார். இவரைக் குருபரம்பரா பிரபாவம், ‘அநந்தரங்கம் பிள்ளை பெரியாழ்வார் திருமொழி முதலான ஆழ்வார்கள் அருளிச் செயல்களுக்கு எல்லாம் வியாக்கியானம் செய்தருளி லோகத்தை வாழ்வித்தருளினார்”9 என்று புகழ்ந்து கூறுகின்றது.
        
     இவர்களேயன்றி இவர்கள் காலத்திற்குப் பின்னும் பல சான்றோர்கள் தோன்றி, ஆழ்வார்கள் பாடலுக்கு உரை எழுதியதோடு வைணவ தத்துவப் பொருளை விளக்கிக் கூறும் நூல்களை இயற்றினர். அவர்களில் பிள்ளை லோகாச்சாரியார், மணவாள மாமுனிகள், வேதாந்த தேசிகர், அழகிய மணவாளப் பெருமான் நாயனார் போன்றோர்களையும் உன்டாக்குவர்.

செய்யுள் வடிவ உரை
         
        நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பொருளைச் சுருக்கமாய் மதுரகவியாழ்வார் “கண்ணிநுண் சிறுத்தாம்பு” என்ற பகுதியில் பாடித்தந்துள்ளார். கம்பர் இயற்றிய ‘சடகோபர் அந்தாதி’ நம்மாழ்வாரைப் போற்றிப் பாடுகின்றது. திருவாய்மொழிப் பதிகம் ஒவ்வொன்றின் கருத்தையும் சுருக்கி வெண்பா ஒன்றில் அமைத்துப்பாடும் நூல், திருவாய்மொழி நூற்றந்தாதி இருப்பதாக அறியலாகிறது.

தனியன் உரை
        
        திவ்வியப் பிரபந்தத்தில், ஒவ்வொரு நூலின் முன்னும் பின்னும் சிறப்புப் பாயிரப்பாடல் ஒன்றோ பலவோ உள்ளன. இவை நூலின் கருத்தைச் சிறப்பிக்கின்றன.நூலியற்றிய ஆழ்வார்களைச் சிறப்பிக்கின்றன. இவற்றைத் ‘தனியன்’ என்று கூறுவது வழக்கம், நூலுள் சேராமல், தனித்து நிற்றலின் தனியன் என்ற காரணப் பெயரால் வழங்குகின்றது. தனியன்கள் எல்லாவற்றிற்கும் பிள்ளை லோகாசார்ய ஜீயர் சிறந்த உரை இயற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குரு பரம்பரா ப்ரபாவம்
       
   மணிப்பிரவாள நடையில் வைணவச் சான்றோர்கள் ஆழ்வார்களின் பாடல்களுக்கு எழுதிய வியாக்கியானங்களோடு, ஆழ்வார்களின் வரலாற்றையும் வைணவத்தை வளர்த்த ஆசிரியர்களின் தொண்டையும் வியாக்கியானம் எழுதிய உரையாசிரியர்களின் அருட்செயல்களையும் விளக்கிக்கூறும் குருபரம் பரா ப்ரபாவம்’ என்னும் உரை நடை நூல்களையும் இயற்றியுள்ளனர். குருபரம்பரையைக் கூறும் நூல்கள் வைணவச் சான்றோர்களின் வாழ்க்கையை, வரலாற்றுப் பின்னணியுடன் வாய்மொழிக் கதைகளை இணைத்துத் தெய்வீக நிகழ்ச்சிகளோடு தொடர்புபடுத்திக் கூறுகின்றன. கற்பவர் உள்ளத்தில் வைணவச் சான்றோரிடம் பெருமதிப்பும் பக்தியும் ஏற்படுத்தும் வகையில் அவை அமைந்துள்ளன. அது நூல்களில் இலக்கியச் சுவையும் நயமும் உண்டு.
        குருபரம்பரையைக் கூறும் நூல்கள் பல உள்ளன. பின் பழகிய பெருமாள் சீயர் இயற்றிய (6000 படி) குருபரம்பரையே காலத்தால் முற்பட்டது. பலவகை நயங்களால் சிறந்து விளங்குவது அந்நூல் வைணவச் சான்றோர்களாலும் தமிழ் அறிஞர்களாலும் பெரிதும் போற்றப்படுகின்றது. நம்மாழ்வார் பாடியுள்ள திருவாய் மொழிக்குப் பலர் உரை வகுத்துள்ளனர். அவ்வாறு உரை வகுத்து அதனைக் காத்தருளிய உரைகாரர்தம் பெருமையினைப் பின்வரும் வெண்பா ஒன்று வெளிப்படுத்துகின்றது.

“பிள்ளான்நஞ் சியர் பெரியவாச் சான்பிள்ளை
தெள்ளார் வடக்குத் திருவீதிப் பிள்ளை
மணவாள யோகிதிரு வாய்மொழியைக் காத்த
குணவாளர் என்றுநெங்சே கூறு.”
    பிள்ளான் ஆறாயிரப்படியையும், நஞ்சீயர் ஒன்பதினாயிரப் படியையும். வாதிகேசரி அழகியமணவாளச்சியர் பன்னீராயிரப் படியையும், பெரியவாச்சான் பிள்ளை இருபத்துநாலாயிரப் படியையும், வடக்குத் திருவீதிப் பிள்ளை முப்பத்தாறாயிரப் படியையும் இயற்றினர். முப்பத்தாறாயிரப்படியினை ‘ஈடு’ என்று கூறிச் சிறப்பிக்கும் வைணவ உலகம். இவை இவ்வாறு இருக்க, ஆழ்வார்கள் பாடியருளிய பாடல்கள் எல்லாவற்றிற்கும் உரையெழுதியவர் பெரியவாச்சான்பிள்ளை ஒருவரே. ஆண்டாள் பாடியுள்ள திருப்பாவைக்கு அவர் வகுத்துள்ள வியாக்கியானம் மூவாபிரப்படி என்று குறிப்பிடப்பெறும்.

முடிவுரை  
       வைணவ உரையாசிரியர்களால் இயற்றப் பெற்ற பேருரைகளாகிய வியாக்யானங்கள்’ அவர்கள் தென்சொற் கடந்து வடசொற்கலைக்கு எல்லை தேர்ந்த அருளாளர்களாக விளங்கியதால் வடசொற்களும் தமிழ்ச் சொற்களும் விரவிக் கலந்த மணிப்பிரவாள நடையில் எழுதினார்கள். உளவியல் சார் மாற்றங்களை மையப்படுத்தி, நடைமுறை சார்ந்த கருத்துக்களோடு தத்துவார்த்தங்களை தகுந்த இடத்தில் புகட்டி கூறும் போக்கு இவர்களின் உரைகளில் வெளிப்படுவதைக் காண முடிகிறது, இக்கட்டுரையினை  தொடர்ந்து  இன்னும் பல கோணங்களில் ஆராய  முடியும்.

சான்றெண் விளக்கம்
1.தெ.ஞானசுந்தரம், வைணவ உரைவளம் ப.29

2.பி.ஆர்.நரசிம்மன், வைணவ மரபும் மெய்ப்பொருளியலும், ப.107

3.மா.பெ.சீனிவாசன், திவ்விய பிரபந்த இலக்கிய வகைகள், ப.130

4.சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும், ப.162

5.மு.வரதராசனார், மொழிவரலாறு, ப.134

6.கிருஷ்ணசாமி ஐயங்கார், திருவாய்மொழி வியாக்கானம், ப.318

7.திருநெடுந்தாண்டகம் வியாக்கானம், ப.221

8.பூவராகம் பிள்ளை, கரந்தைக் கட்டுரை, ப.274

9.அநந்தரங்கம் பிள்ளை, பெரியாழ்வார் திருமொழி, ப.53
                                                                          
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
தீ.எழுமலை

முழு நேர முனைவர் பட்ட ஆய்வாளர்

தமிழாய்வுத்துறை

கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி
 
திருவண்ணாமலை.

Iniyavaikatral peer reviewedநெறியாளர்
முனைவர் ந. குப்புசாமி
இணைப்பேராசிரியர்  & நெறியாளர்

தமிழாய்வுத்துறை

கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி

திருவண்ணாமலை.

இணை நெறியாளர்
முனைவர் மு.கலைமாமணி
இணைப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
தமிழ்த்துறை

கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி

திருவண்ணாமலை.

இனியவை கற்றல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here