Abstract
Summary of the study The flowers that can be found on the Silappathikaram and Manimekalai, also known as the Double Epic, are associated with the manga and are associated with culture.
இரட்டைக்காப்பியங்களில் மலரியல்
திறவுச்சொற்கள்
சிலப்பதிகாரம் ,மணிமேகலை, இளங்கோவடிகள், சீத்தலைச் சாத்தனார், மலரியியல், மலரும் மங்கையும், மலரும் மங்கையும், மலரும் மணமும், கடவுளும் மலரும், விழாவும் மலரும், மன்னரும் மலரும், பரிசும் மலரும், திருக்குறள்.
ஆய்வுச் சுருக்கம்
ஐம்பெருங்காப்பியங்களில் இரட்டைக்காப்பியம் என்று அழைக்கப்படும் சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையில் இடம்பெறக்கூடிய மலர்கள் மங்கையுடன் தொடர்பு உடையதாகவும், பண்பாட்டுடன் தொடர்புயைதாகவும் விளங்குகின்றன. அதுமட்டுமில்லாமல் மலர்களைப் பண் டத்தமிழர்கள் தங்கள் பெயர்காகவும் அமைத்து மகிழ்ந்தனர் மேலும் மன்னர்களின் அடையாளச் சின்னமாகவும் இம்மலர்கள் இரட்டைக்காப்பியங்களில் எவ்வாறு பதிவுச் செய்யப்பட்டுள்ளன என்பதை விளக்கும முகமாக இக்கட்டுரை அமைகிறது.
முன்னுரை
தமிழில் உள்ள ஐம்பெருங்காப்பியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை இவ்விரண்டுக் காப்பியங்களும் இரட்டைக்காப்பியங்கள் என்று அழைக்கப்படுகிறது. சிலப்பதிகாரம் சமண சமயத்தைச் சார்ந்தவை இதன் ஆசிரியர் இளங்கோவடிகள் ஆவர்.மணிமேகலை காப்பியம் பௌத்த சமயம் கருத்துக்களை வலியுறுத்துகிறது. இதன் ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார்.இவ்விரு காப்பியங்கள் வெவ்வேறு சமயங்களையும் ஆசிரியர்களையும் கொண்டாலும் சிலப்பதிகாரத்தின் கதைத் தொடர்ச்சி மணிமேகலை காப்பியத்தில் வருவதால் இவ்விரு காப்பியங்களை ‘இரட்டைக்காப்பியங்கள்” என அழைக்கப்படுகிறது. தமிழர்கள் இன்றளவிலும் மங்கலப் பொருளாகப் போற்றுபவை மலர்களே.பெண்களையும் அவர்களின் கண்களையும் வருணைச் செய்வதற்கு சங்க காலப் புலவர்கள் முதல் இக்காலக் கவிஞர்கள் வரை மலர்களைத் தான் உவமைப்படுத்துகின்றளர்.மலர்கள் அழகை மட்டும் தராமல் நம்முடைய பண்பாட்டில் பிரதிபலிப்பாக உள்ளது.இரட்டைக்காப்பிய காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறையினை மலர்கள் எவ்வாறு அழகுப்படுததுகிறது என்பதை விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
மலர்களின் வகை
மலர்களின் வகைகளை 99 என வகைப்படுத்தியுள்ளார் கபிலர் என்றாலும் வள்ளுவர் மூன்று வகையாக கூறியுள்ளர்.அவை,
‘காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்” (குறள் : 1227)
காலையில் அரும்பாகவும்,பகலில் போதாகவும்,மாலையில் மலராகவும் விளங்கும் மலரின் மூன்று நிலையினை வள்ளுவர் கூறியுள்ளார்.
‘அரும்ப விழ் செய்யும் அலர்ந்தன வாடா
சுரும்பின் மூசா தொல்யாண்டு கழியினும்” (மணி.3:67)
பதும பீடத்தில் அரும்புகளை இட்டால் மலராக நிற்கும்.மலர்ந்த மலர்கள் பல ஆண்டுகள் சென்றாலும் வாடாமல் இருக்கும்.
‘கோட்டின் கொடியினும் நீரினும் நிலத்தினும்
காட்டிய பூவின்” (சிலம்பு,22: 93-94)
மலர்கள் மரத்தின் செடியின் கிளையில் மலர்வதை கோட்டுப்பூ என்றும்,கொடியில் மலர்வதை கொடிப்பூ எனறும், நிலத்திலுள்ள புதரில் மலர்வதை நிலப்பூ என்றும்,நீரில் மலர்வதை நீர்ப்பூ என்றும் இளங்கோவடிகள் நான்கு வகைப்படுத்தியுள்ளார்.
வனமும் மலரும்
மங்கையர்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதற்காகவும், வாசனைப்பூச்சுகள் தயாரிப்பதற்காகவும் வனங்களில் மலர்களைப் வளர்க்கப்பட்டன. அவ்வனங்களுக்கு பெயர்களைச் சூட்டியுள்ளனர். மணிமேகலை தன் கழுத்தில் அணிந்திருந்த மாலையில் கண்ணீர் விழுந்தவுடன் அதைப் பார்த்த மாதவி தன்மகளை வேறொரு மாலையினை தொடுத்து கழுத்தில் அணியுமாறு மாதவி கூறினாள்.
‘பன்மல ரடுக்கிய நன்மரப் பந்தர்
இலவந் திகையின் எயிற்புறம் போகின்” (மணி.3:44-45)
மணிமேகலை அவளுடைய தோழி சுதமதியுடன் பல மலர்கள் நிறைந்த இலவந்திகை வனத்திற்கு மலர்களைப் பறிப்பதற்காகச் சென்றாள்.
‘வாவியைச் சூழ்ந்த வசந்தச் சோலை
இலவந்திகையினெயிற் புறம்போகி” (சில.10:31-32)
சிலப்பதிகாரத்தில்நீராவியல் சூழ்ந்த ஒரு வசந்தச்சோலை இலவந்திகை மலர்ச் சோலை என குறிப்பிடப்பட்டுள்ளது.
மலரும் மணமும்
அரும்பு நிலையிலும்,போது நிலையிலும் உள்ளடக்கிக் கிடக்கும் மணம்,மலராக விரியும் போது திசையெங்கும் மணத்தை பரப்புகிறது.
‘நாகம் நாறும் நாற்றம் நிறந்தன” (சிலம்பு.12 :2)
‘திருவ மாற்கு இளையாள் திரு முன்றிலே” (சிலம்பு.12 :4)
கொற்றவையின் அருளால் பாலை நிலத்தில் சுரபுன்னை, நரந்தை, சேமரம், மாமரம், வேங்கை, இலவம், புன்கு, வெண்கடம்பு, பாதிரி, புன்னை, குரா, கோங்கு ஆகிய மரங்களெல்லாம் மலர்கள் மலர்ந்து நறுமணம் வீசியது.
‘மாமலர் நாற்றம் போன்மணி மேகலை” (மணி.3:3)
மலர்களின் நறுமணம் பற்றி மணிமேகலை காப்பியத்திலும் சீத்தலைச் சாததனார் குறிப்பிட்டுள்ளார்.
மலரும் மங்கையும்
பெண்களை தமிழ் இலக்கியங்களில் மலர்களோடு தான் அதிகயளவில் ஒப்புமைப்படுத்தியுள்ளனார்.பெண்களோடு கண்களுக்குத் தான் மலர்களை பெரும்பாலும் ஒப்புமைப்படுத்தியுள்ளனார்.மலர்களோடு தொன்மைக் கால மகளிர் முதல் தற்காலத்தில் உள்ள மகளிர் வரை உறவுக் கொண்டுள்ளனர்.
“முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு” (குறள்:1234)
அரும்பு நிலையில் இருக்கும் மலரின் நறுமணம் போல பெண்ணின் புன் முறுவலில் பொருள் ஒன்று அடங்கிக் கிடக்கின்றது.வள்ளுவர் மலரின் தன்மையினைக் குறிப்பிடுவது போல பெண்ணின் தன்மையினை குறளின் வாயிலாக வெளிப்படுகிறது.
‘மாமலர் நெடுந்கண் மாதவி” (சிலம்பு.3 :170)
மாதவியின் கண்ணை மாமலர் நெடுங்கண் என மலரோடு ஒபபுமைப்படுத்திக் இளங்கோவடிகள் காட்டியுள்ளார்.
“நறுமலர் நாணின நண்கண்” (குறள்:1231)
மங்கையர்களின் கண்களுக்கு மலரினை வளளுவர் உவமையாகக் காட்டியுள்ளார்.
‘தாமரை செங்கண் தழல் நிறக் கொற்ற” (சிலம்பு.28:110)
கண்ணகியின் கண்களை செந்தாமரை போன்ற சிவந்த கண்கள் என இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார்.
‘மதுமலர்க் குழலியொடு மாமலர் தொடுக்கும்” (மணி.3:16)
பெண்கள் தலையில் விரும்பி மலர் அணியும் பழக்கம் இன்றளவில் வழக்கம் உள்ளது. மணிமேகலை தேன் பொருந்திய மலர்களை தலையில் தொடுத்துயிருந்தாள்.
கடவுளும் மலரும்
கடவுள் வழிபாடும் முறையில் மாற்றங்கள் இருந்தாலும் பூவை வைத்து கடவுளுக்கு வழிபாடும் முறை அரசர் முதல் பாமர மக்கள் வரைக் காணப்படுகிறது.கடவுளுக்குச் செய்யப்படும் எல்லா வகையான பூஜைகளும் மலர்கள் முக்கியப் பங்கு வகிக்கிறது. இறப்புச் சடங்குகளிலும் மலர்களைப் பயன்படுத்திகின்றனர்.நம்முடைய வாழ்வில் மலர்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றது.
‘…. மதுரை மூதூர்
கொன்றையஞ் கடைமு மன்றப் பொதியிலில்” (சிலம்பு.பதிகம்:40)
சிவப்பெருமான் கொன்றை மாலையைச் சூடினார்.
‘வண்துழாய் மாலையை மாயவன் மேல் இட்டு” (சிலம்பு.17:16)
திருமால் துளசி மாலையை ஆய்ச்சியர்கள் கழுத்தில் இட்டனர்.
‘தூநிற மாமணி சுடரொளி விரிந்த
தாமரை பீடிகை தானுண் டாங்கிடின்” (மணி.3:65-66)
வெண்மை நிறமுடைய மாணிக்கம் போன்று ஒளி உடையது பதுமபீடம் (தாமரை பீடிகை).கடவுளை வழிபாடும் பீடிகை தாமரை மலரை போன்ற அமைப்பில் இருந்தாக மணிமேகலை காப்பியம் குறிப்பிடுகிறது.
‘இடக்கை பொலம்பூந் தாமரை எந்தினும்” (சிலம்பு.5.69)
மதுரையில் மதுராபதி தெய்வம் இடக்கையில் பொன்னிறமான தாமரை மலரை எந்தியுள்ளது.
விழாவும் மலரும்
மலர்களை மங்கலப் பொருளாக வைத்து வழிபடும் முறையை நம் முன்னோர்கள் முதல் தற்போது உள்ள தலைமுறையினாரிடம் வரை இவ்வழக்கம் உள்ளது.
‘வாடா மாமலர் மாலைகள் தூக்கலின்
கைபெய் பாசத்துப் பூதங் காக்குமென்று” (மணி 3 : 50-51)
இந்திரனுக்கு விழாச் செய்யும் நாட்களில் பெருமைப் பொருந்திய வாடாத பூ மாலைகளை தொங்கவிட்டனார் என மணிமேகலை காப்பியம் குறிப்பிடுகிறது.
‘பூவும்,புகையும்,பொங்கலும் சொரிந்து” (சிலம்பு.5 : 69)
மன்னரும் மலரும்
மங்கல நிகழ்வான திருமணத்தின் போது மணமகன்,மணமகள் மலர் மாலை அணியக்கூடிய வழக்கம் இன்றளவில் நம்முடைய மரபில் இருந்து வருகிறது. பழங்காலத்தில் நாட்டினை ஆட்சிச் செய்த மன்னர்கள் மலர்களை மாலையாக அணிந்திருந்தனார் என சிலம்பதிகார காப்பியத்தின் மூலம் அறிய முடிகிறது.
‘ஆரங் கண்ணிச் சோழன் மூதூர்” (சிலம்பு.பதிகம் : 12)
‘ஆர்புனை சென்னி அரசற்கு அளித்து” (சிலம்பு.28 :211)
ஆத்தி மாலை சூடும் சோழன் என இப்பாடல் சோழ மன்னனின் அடையாளமாக அத்தி மாலை குறிப்பிடப்படுகிறது.
‘சினைஅலர் வேம்பன் தேரான் ஆகிக்” (சிலம்பு.பதிகம் : 28)
வேம்பம் பூவை மாலையாக சூடாக்கூடிய மன்னன் பாண்டியன் எனவே வேம்பன் தேரான் என சிலப்பதிகாரம் சுட்டுகிறது.
‘இலைதார் வேந்தன் எழில்வான் எய்த” (சிலம்பு.27 : 62)
சேரன் செங்குட்டுவன் இதழ் செறிந்த பனை பூவினை மாலையாக சூடினான்.
மலரும் பரிசும்
ஒருவரை வரவேற்காகவும்,வாழ்த்தவும் மலர்க் கொத்துகளை பரிசாக தரும் வழக்கம் இன்றைய காலக்கட்டத்திலும் நடைமுறையில் உள்ளது.
‘காவிதி; மந்திரக் கணக்கர் -தம்மொடு” (சிலம்பு.22 : 9)
எட்டி மரத்தின் பூங்கொத்துப் போன்று பொன்னால் செய்யப்பட்ட மலர்களை பரிசாக வழங்கினார்.
‘வருக தாம் வாகைப் பொலந்தோடு” (சிலம்பு.27 : 43)
சேரன் செங்குட்டுவன் போரில் வெற்றிப் பெற்ற வீரர்களை வருக என வரவேற்று அவர்களுக்கு பொன்னால் செய்யப்பட்ட வாகை மலரினைப் பரிசாக அளித்தார்.
தொகுப்புரை
🌻இரட்டைக்காப்பியங்களில் இடம்பெற்றுள்ள மகளிரோடு மலர்கள் எவ்வாறு இரண்டறக் கலந்துள்ளன என்பதை விளக்குவதாக உள்ளது.
🌻 மலரின் வகைகள் பற்றியும்,மலரும் தன்மை பற்றியும் இரட்டைக்காப்பியங்கள் விளக்குகின்றன.
🌻பெண்களைத் தமிழ் இலக்கியங்கள் மகளிரோடுதான் ஒப்பிட்டுக் கூறுகின்றன. இரட்டைக்காப்பியங்களும் மகளிரின் கண்களுக்கு மலர்களையே ஒப்புமைப்படுத்துகின்றள.
🌻கடவுளை வழிபடும் நிலையிலும் மலர்கள் முக்கிய இடத்தினை பெற்றுள்ளன.தெய்வங்களுக்கு மலர் மாலையைச் சூட்டி மகிழ்ந்தனர். விழாக்களிலும் மலர்கள் முக்கிய இடத்தினை பெற்றிருந்தன.
🌻 மூவேந்தர்கள் தங்கள் அடையாளச் சின்னங்களாகிய மாலைகளை அணிந்திருந்தனார் என்பது தெரிகிறது.
🌻எட்டி மரத்தின் பூ போன்று பொன்னால் செய்யப்பட்ட மலர்களைப் பரிசளித்துள்ளனர் என்பதையும் இரட்டைக்காப்பியங்களின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.
முடிவுரை
காப்பியக் காலத்தில் வாழ்ந்த மக்கள் அவர்களின் வாழ்க்கை முறையில் மலர்கள் கடவுளை வழிபாடுவதற்கும்,மன்னர்களின் அடையாளமாகவும் மலர்கள் முக்கியத்துவம் பெறுகிறது.விழாக்களில் அழகினைச் சேர்க்கும் வாடா மலர்களாகவும்,வீரர்களுக்கு பரிசளிக்கும் பொன் மலர்களாகவும்,நறுமணத்தை தரும் வசனை மலர்களாகவும்,இயற்கைக்கு அழகுச் சேர்க்கும் வன மலர்களாகவும் இரட்டைக்காப்பியங்கள் மலர்களின் மகத்துவத்தைக் கூறுகிறது.மலர்களில் வசனைத்தரும் மெல்லிய இதழ் மட்டும் இல்லை நம் மரபினை வெளிப்படுத்தும் வரலாறு ஆகும். இரட்டைக்காப்பியங்களில் உள்ள மலரியியலை இக்கட்டுரை விளக்குகிறது.
துணைநின்ற நூல்கள்
1.சிலப்பதிகாரம் – ராமையா பதிப்பகம்,பதிப்பு ஆண்டு : 2013, சென்னை – 14
2.திருக்குறள் – சாரதா பதிப்பகம், ஜி-4 சாந்தி அடுக்கம், 3,ஸ்ரீ கிருஷ்ணாபுரம் தெரு, ராயப்பேட்டை, பதிப்பு ஆண்டு : 2002, சென்னை -14.
3.மணிமேகலை – அமிழ்தம் பதிப்பகம், பி-11,குல்மோகர் குடியிருப்பு, 35,தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், பதிப்பு ஆண்டு : 2014 சென்னை – 17
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் ப. மணிமேகலை
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி
கோயம்புத்தூர் – 4