Irattai Kapiyangal Kaattum Panpattu Kurugal| S.Ramachandran

இரட்டை காப்பியங்கள் காட்டும் பண்பாட்டு கூறுகள்
Abstract
         
          This article examines the cultural values depicted in the twin epics Silappathikaram and Manimekalai. These classical Tamil works reflect the social, ethical, and cultural life of ancient Tamil society. The study highlights how literature serves as a mirror of civilization, revealing customs, traditions, moral principles, and social structures of the time. A key focus is on the concept of culture as expressed through language, literature, arts, religion, political systems, education, and social practices. The epics emphasize the importance of moral conduct, charity, and virtuous living. Concepts such as timely charity (aram), hospitality (virundhombal), and righteous living are strongly embedded in the narratives. The characters of Kovalan, Kannagi, Kaundiyadigal, and Madhavi exemplify these values through their actions and experiences.
  The paper also discusses the significance of hospitality as a core social value, where guests are treated with respect and care. The role of women in upholding household and social ethics is also evident, particularly through characters who demonstrate compassion, responsibility, and moral strength. Furthermore, Manimekalai emphasizes the eradication of hunger and poverty as the highest form of charity. The epic portrays humanitarian service as a central ethical duty, advocating for feeding the hungry and alleviating suffering as the noblest form of virtue. In conclusion, the twin epics collectively portray a comprehensive picture of ancient Tamil cultural and ethical values, highlighting the importance of righteousness, charity, hospitality, and social responsibility as fundamental elements of Tamil civilization.


“இரட்டைக் காப்பியங்கள் காட்டும் பண்பாட்டுக் கூறுகள்”

முன்னுரை
         
    சிலப்பதிகாரம், மணிமேகலை பெருங்காப்பியத்திற்குரிய இலக்கணங்கள் கொண்டு விளங்கிறது. இக்காப்பியத்தில் கூறப்படும் பண்பாடு பல்வேறு சிறப்புக்களைத் தன்னகத்தே உள்ளடக்கியது.  இது பழக்கத்தாலும், பயிற்சியாலும், முயற்சியாலும் மனித மனத்தில் ஒரு பதிவை ஏற்படுத்துவதாகும். இக்காப்பியத்தில் புதைந்து கிடக்கும் அக்கால மக்களின் உண்மையான வாழ்வியல் கூறுகளுள் பண்பாடு குறித்த கருத்துகளை இக்கட்டுரை ஆராயும்.

பண்பாடு
         
       ஓரினத்தின் பண்பாடு அதன் இலக்கியம், நடையுடை, மொழி, கலைகள் குறிக்கோள் சமயக் கொள்கை, அரசியற்கொள்கை, அரசியல் வரலாறு, சமுதாய நிலை, பெண்களின் நிலை, அறிவியல் சிறப்பு, கல்வி நிலையங்கள் மூலமே விளக்கமுறுகின்றது;1 என்று தட்சினாமூர்த்தி கூறுகிறார். பண்டைத் தமிழகத்தின் அரசியல், சமூக பண்பாடு நிலையினை பெரும்பாலும் இலக்கியச் சான்றுகளிலிருந்தே அறிகிறோம். உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் பிறரை வாழ்த்துகின்ற பொழுது உள்ளன்போடு வாழ்த்துவது வாழ்த்தாகும். வாழ்த்து என்பது வாழ்வைச் சிறப்பித்து உரைப்பதால் வாழ்த்தாயிற்று. அது மிகச் சிறந்த அறப்பண்பாடாக இருந்ததோடு மட்டுமல்லாது, அவர் செய்த செயல் இன்னும் சிறக்க அது ஒரு தூண்டு கோலாக அமையக்கூடிய சிறப்புதன்மை உள்ளது.   இளங்கோவடிகள் கோவலன், கண்ணகி திருமண விழாவை முதல் காதையில் நம் கண்முன் காட்சிப் படுத்துகிறார். அவ்விழாவைக் காண மகளிர் அனைவரும் வருகின்றதை வரிசைப்படுத்துகிறார். பெண்மைக்கு விளக்கமாக அணி மணி புனைந்து வந்த சிலர் மகளிர்,

காதலற் பிரியாமல் கவவுக்கை நெகிழாமல் தீது அனுக்2
         
       என்று சில மலர்களைத் தூவி திருமணத் தம்பதிகக்கு வாழ்த்துக் கூறும் செய்தியைக் காண முடிகிறது.

அறம் செய்யும் காலம்
         
       பொதுவாக அறம் என்ற சொல்லுக்குத் தானம், தர்மம் என்று கூறுவார்கள், ஆனால் நல்ல செய்ல்கள் எல்லாமே அறமாகும் என்பர். அறச்செயல்களை அன்றே செய்ய வேண்டும், காலம் தாழ்த்த கூடாது, வலக்கையால செய்யும்  தானம் இடக்கைக்கு தெரியக் கூடாது, ஏனெனில் வலக்கையில் இருந்து இடக்கைக்கு மாறும் நேரத்தில் மனம்மாறக் கூடும் என்பதே அதன் நோக்கமாகும். இதனை,

நாளை செய்குவம் அறம் எனில் இன்றே
கேள்வி நெல்லுயிர் நீங்கினும் நீங்கும்
இது என வரைந்து வாழுநாள் உணர்ந்தோர்
முதுனீர் உலகில் முழுவதும் இல்லை3
         
       என்ற சிலப்பதிகார அடிகளால் அறியலாம்.  காலத்தை வரையறுத்து வாழ்வோர் உலகில் எவருமில்லை. அறச்செயல்களை நாளை செய்வோம் என்றால் இன்றே உயிர் போனாலும் போகும். ஆகையால் உடனே அறச்செயல்கள் செய்யவெண்டும் என்ற கருத்து புலனாகிறது. ஒருவரின் நல்லறப் பயனானது அவருக்கு மட்டுமில்லாது அவரைச் சார்ந்தவருக்கும் மகிழ்ச்சியைத் தரும். நல்வினை தீவினை எனும் இருவகை வினைகளில் நாம் எதைச் செய்தாலும அதற்குரிய பலன் வந்தே தீரும் என்பது நியதியின் பண்பாடாகும். ஆகவே என்றும் நல்லறம் புரிதல் நம்மையத் தரும் பண்பாடாகக் கருதப்படுகிறது.

நண்ணும் இருவினையும் நண்ணுமின்கள் நல்லறமே4 
         
      என உரைக்கிறது சிலப்பதிகாரம். சிலப்பதிகார காப்பியத் தலைவி கண்ணகி கோவலனை பிரிந்து இருந்த காலங்களில் தன்னால் நல்லறம் செய்ய முடியாமல் போனதை தன் கனவனிடம் சொல்லி வருந்தியதை இளங்கோவடிகள் கூறுகிறார்.

அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்த்தலும் தொல்லோர் சிறப்பில்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை5
         
      எனும் வரிகள் அவலத்தை தெளிவுப்படுத்துகின்றன.

விருந்தோம்பல்
         
       இல்லறத்தில் கனவனும் மனைவியும் இணைந்து ஆற்ற வேண்டிய அறம் எனும் விருந்தோம்பல் பண்பாடாகும். காலம் தொட்டு நிகழ்ந்து வரும் இவ்பண்பாட்டை தொல்காப்பியர் விருந்துதோம்பலையும் இணைத்துக் கூறுகிறார். இதனை,

விருந்துபுறந்தருதலும் சுற்ற ஓம்பலும்6         
     என்ற வரிகளில் அறியப்படுகிறது. சிலப்திகாரத்தில் மாநகர பெண்கள் விருந்தோம்பல் பண்பில் சிறந்து விளங்கினர். இடையர்குல பெண்ணான மாதிரியும், ஐயையும் கண்ணகி, கோவலன், கவுந்தியடிகள் ஆகிய மூவரையும் வரவேற்று அவர்கள் தங்குவதற்கு இடமும் சமைப்பதற்கு புதிய பாத்திரங்கம் வழங்கி ஐயை என்பவள் கண்ணகிக்கு உதவி செய்வதையும் நோக்குகின்ற பொழுதும் இடையற்குல பெண்ணான மாதரி கலக்கமுற்று வந்தவரையும் பாதுகாத்து இருந்தாள் என்பது புலனாகிறது.
         
        அடைக்கலக்காதையில் கவுந்தியடிகள் கண்ணாகியை மாதிரியிடம் அடைக்கலப்படுத்தும் போது, அவளுடைய குலப் பெருமையை எடுத்துரைக்கிறார். இவள் பெரும் வாணிகனின் செல்வமகள் இவளை யார் வேண்டுமானலும் தன் வீட்டிற்கு விருந்தாக விரும்பி அழைத்துச் செல்வர். அப்படிப்பட்ட பேரழகும் கற்பிற் சிறந்தவள் என்று பலவாறு கவுந்தியடிகள் கூறுகிறார். இதை,

மங்கல மடந்தையை நன்னீர் ஆட்டி
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் தீட்டி
தோமன் கூந்தல் சின்மலர் பெய்து
தூமடி உடீஇத் தொல்லோர் சிறப்பின்
ஆயமும் காவலும் ஆய்இமை தனக்குத்
தாயும் நீயே ஆகித் தாங்கு7
         
      எனும் பாடல் வரிகளில் கவுந்தியடிகள் மாதிரியிடம் கண்ணகிக்குத் தோழியாகவும் தாயாகவும் இருந்து பாதுகாப்பளித்துக் காப்பாயாக என்ற கருத்து வெளிப்படுகிறது.

அறப்பண்புகள்
         
       மாதரி தெய்வத்திற்குப் பால் சோறு படையல் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த கவுந்தியடிகளை கண்டு இருக்கரம் கூப்பி வணங்கினாள் இப்பண்பு அறத்தின்பாற்பட்ட செயலாகும்.

அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்இய
புறம்சிறை மூதூர்ப் பூங்கண் இலக்கிக்குப்
பால்மடை கொடுத்துப் பண்பின் பெயர்வோள்
ஆயர் முதுமகள் மாதரி என்போள்
         
என்னும் வரிகளால் தெளியலாம். மேலும் மாதரி நாள்தோறும் அறப்பயன் செய்து வருவதை அடைக்கலக்காதையில்,

ஆகாத்து ஓம்பி ஆப்பயன் அளிக்கும்
கோவலர் வாழ்கைஒர் கொடும்பாடு இல்லை
தீதிலள் முதுமகள் செவ்வியல் அனியள்
இடைக்குல மடந்தைக்கு அடைக்கலம் தந்தேன்8
         
      என்ற வரியின் மூலம் வெளிப்படுகிறது. தவத்தில் சிறந்த முனிவர்கள் அடைக்கலமாகக் கொடுக்கப்படுகின்ற பொருளை நன்றாகப் பாதுகாத்து, ஒப்படைப்பதெ இல்லறத்தில் இருக்கும் மனைவியின் கடமையாகும்.

மணிமேகலை காட்டும் பண்பாடு
         
      ஆபுத்திரன் என்பவன் வேள்வியில் பலி கொடுப்பதர்கெனப் பார்ப்பனர் கட்டி வைத்திருந்த பசுவை அவிழ்த்து விடுகிறான். அதைக் கண்ட பார்ப்பனர்கள் அவன் பிறவி இழிந்தது என்று தூற்றுகின்றனர். அவன் அமைதியாக உங்கள் முனிவர்கள் பசு வயிற்றிலும் பிறந்தவர்களாயிற்றே என்று மறுமொழி கூறுகிறான். ஆபுத்திரன் ஊரைவிட்டு விரட்டப்படுகிறான். ஆபுத்திரனுக்கு தெய்வம் அமுதசுரபியை அளிக்கிறது. அமுதசுரபி கொண்டு ஆபுத்திரன் அறம் செய்கிறான். பிறர் பசி தீர்க்க அதனைப் பயன்படுத்த முடியாத நிலையில் கோமுகி என்ற பொய்கையிலே அதனை விட்டெறிந்து விட்டு உண்ணா நோன்பிருந்து உயிர் விடுகிறான். அப்பாத்திரமே பிறகு மணிமேகலையின் கையை அடைகிறது. மணிமேகலை சிறைச்சாலையை அறச்சாலை ஆக்குகின்றாள்

பசிப்பிணி அகற்றல்
மணிமேகலைக் காப்பியம்,

“பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்க்9
         
      என வாழ்த்தித் தொடங்குகின்றது. தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் சகத்தினை அழித்திடுவோம் என்றார். பாரதி. அதுபோல பசிப்பிணிப் போக்கும் அறம் செய்வதை முதன்மையாகக் கொண்டுள்ளது.

மண்டினி நாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டிக் கொடுத்தோர்  உயிர்கொடுத்தோர்10
         
என்பதனையே பாவிகமாகக் கொண்டு காவியம் பாடினார் சாத்தனார். அவர் பசியின் கொடுமையைப் பின்வருமாறு விளக்குவார்.

குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும் பிடித்த
கல்விப்பெரும்புனை விடூஉம் நாண அணிகளையும் மான்எழில்
சிதைக்கும் பூண்முலை மாதரொடு புறஙடகடை நிறுத்தும்
பசிப்பிணி என்னும் பாவி11
         
இக்கொடுமையை ஒழித்தலே உலகிலுள்ள  அறத்தில் எல்லாம் சிறந்தது. என்பதனை

ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர் ஆற்றா மாக்கள் அரும்பசிகளைவோர் மேற்றே உலகின்மெய்ந்நெறி வாழ்க்கை12
         
என்று வற்புறுத்துகின்றார்.

முடிவுரை         
    பண்டைத் தமிழர்களின் அறப்பண்புகளாகிய அறம் செய்யும் காலம், தானம், விருந்தோம்பல், பாதுகாத்தல், உபசரிப்பு முதலியவைகளை சிலப்பதிகாரம் கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் மாதரி, ஐயை முதலிய பாத்திரங்களில்  வாயிலாகப் பண்பாட்டைக் காண முடிகின்றது.

சான்றெண் விளக்கம்
1.அ.தட்சினாமூர்த்தி – தமிழர் நாகரிகமும் பண்பாடும், ப.22

2.மாணிக்கவாசன் சிலப்பதிகாரம் தெளிவுரை- மங்கல வாழ்த்துப் பாடல் 1:61,62

3.மேலது- சிலம்பு நடுகற் காதை -28 179-182

4.மேலது- சிலம்பு கொலைக்களக் காதை -16 வெண்;பா

5.மேலது- சிலம்பு கொலைக்களக் காதை -16 71-73

6.ச.திருனானசம்பந்தம் – தொல்காப்பியம் பொருளதிகாரம்; கற்பியல் – 11

7.மாணிக்கவாசன் சிலப்பதிகாரம் தெளிவுரை- அடைக்கலக்காதை -15 131-136
8.மேலது- சிலம்பு அடைக்கலக் காதை -15 120-123,130

9.துரை. தண்டபாணி – மணிமேகலை பதிகம். 116, 117

10.மேலது- பாத்திரம் பெற்ற காதை 95,96

11.மேலது- பாத்திரம் பெற்ற காதை 76, 80

12.மேலது- பாத்திரம் பெற்ற காதை 92, 94

துணை நூற்பட்டியல்
1.அ.தட்சினாமூர்த்தி – தமிழர் நாகரிகமும் பண்பாடும், யாழ் வெளியீடு,

2.ச.திருனானசம்பந்தம் – தொல்காப்பியம் பொருளதிகாரம் மூலமும் உரையும், கதிர் பதிப்பகம், திருவையாறு.

3.மாணிக்கவாசன்-சிலப்பதிகாரம் தெளிவுரை, உமா பதிப்பகம்.

4.துரை. தண்டபாணி – மணிமேகலை தெளிவுரை, உமா பதிப்பகம்.

5.க.ப.அறவாணன் – சமூகவியல் பார்வையில் சிலப்பதிகாரம், தமிழ்கோட்டம்

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
சீ.இராமச்சந்திரன்
பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர் (தமிழ்)
வி.இ.டி.கலை மற்றும் அறிவியல் கல்லூரி (இருபாலர்)
திண்டல், ஈரோடு மாவட்டம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here