The Dravidian Movement and Tamil Literature|Dr. A. Sedhupathi

திராவிட இயக்கமும் இலக்கியப் பணியும்
Abstract       
         The writers of the Dravidian movement showed great interest in literary works until they came to power. Social reform and rationality were both included in their works. They looked at the form, content, and reality that are talked about a lot today in a superficial way. Therefore, the reality of the context of the story and the character development did not receive any emphasis. This is the reason why, despite their creativity, the writers of the Dravidian movement were generally not talked about much by literary scholars.


“திராவிட இயக்கமும் இலக்கியப் பணியும்”

முன்னுரை
         
        திராவிட இயக்கப் படைப்பாளிகள் ஆட்சிக்கு வரும்வரை இலக்கியப் படைப்புகளில் மிக ஆர்வம் காட்டினர். சமூக சீர்திருத்தம், பகுத்தறிவு இவை இரண்டும் அவர்களின் படைப்புகளில் உள்ளடக்கமாகியது. இன்று அதிகமாகப் பேசப்படும் உருவம், உள்ளடக்கம், எதார்த்தம் போன்றவற்றை அவர்கள் மேலோட்டமாகப் பார்த்தார்கள். அதனால் கதையின் சூழல், பாத்திரப்படைப்பு ஆகியவற்றின் எதார்த்தம் அழுத்தம் பெறவில்லை. படைப்புத்திறன் இருந்தும் திராவிட இயக்கப் படைப்பாளிகள் பொதுவாக இலக்கியவாதிகளால் அதிகம் பேசப்படாமல் போனதற்கு இதுவே காரணம்.

இலக்கியங்கள் – ஒரு பார்வை
         
         “எண்ண எழிலுக்கு எழில் ஊட்ட எழுத்தாளன் இலக்கிய கலைத்திறன்களை எவ்வண்ணம் புனைந்துள்ளான் என தெரிவு செய்வது மரபு வழிப்பட்ட தெனினும் அம் மரபின் வளர்ச்சியாகவே இன்று படைப்பு முழுவதும் அவன் தனது எண்ணங்களை எவ்வண்ணம் கவினுறுத்தி தந்துள்ளான் என தெரிவு செய்வது நடை ஆய்வின் கோட்பாடு ஆகும்.” ஒரு படைப்பினை முழுமையாக நோக்க நடையியலாளர் பல்வேறு களங்களை சுட்டிக்காட்டி உள்ளார். இலக்கிய வடிவிற்கும் உணர்த்தும் கருத்திற்கும் உள்ள தொடர்பு படைப்பின் தொடக்கம் எவ்வாறு அமைகிறது? முடிவு எங்ஙனம் இருக்கிறது உள் அமைப்பு கூறுகள் யாவை என சில களங்களை படைப்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார் அண்ணா. ஆகவே அறிஞர் அண்ணாவின் படைப்புகளை ஆழ்ந்து பார்க்கும் போது படைப்பின் வடிவமைப்பு, கூற்று நெறி, கருத்து, கருத்துக்கும் வடிவுக்கும் உள்ள உறவு எனும் களங்கள் பொருத்தமாகிறது.

புதினங்களின் தொடக்கங்கள்         
       அறிஞர் அண்ணாவின் முதல் புதினம் வீங்கிய உதடு வாடிப்போன மல்லிகை பூவினை வீசி எறிந்து விட்டு வேறு மலரை பூக்காரன் தொடுக்கிறான். வீசப்பட்ட மலர்கள் தெருவில் விளையாடும் சிறுவர்கள் விளையாட்டுக்குப் பயன்படுகிறது. எனும் உவமையில் கதையை தொடங்குகிறார். விலை மகளாக்கப்பட்ட சமுதாயக் கொலையை உவமையாக அண்ணா படைத்தது புதுமையான தொடக்கமாகும்.
         
      கோடையில் தாகம் கொண்டவன் இளநீர் பருகியதும் இன்பம் பெறுவது போன்று தேவருக்கு அவர் மனைவி சூடாவின் புன்சிரிப்பு அமைந்தது. எனும் உவமையில் ‘தசாவதாரம்’ எனும் புதினம் தொடங்கி கள்வனெனக் கடுஞ்சிறையில் தள்ளப்பட்ட தேவர் மனைவி சூடாவின் முயற்சியால் கள்வன் அல்ல என்று மெய்பிக்கப்பட்டு விடுதலைப்பெற்று அவர்கள் இன்புற்றிட முடியும் என்ற கதையினையே குறிப்பாக புலப்படுத்துகிறது உவமை.
         
      கலிங்க ராணி, ரங்கோன் ராதா எனும் புதினங்கள் கதை மாந்தர் உரையாடல்களில் தொடங்கிக் கதைக் கருக்களை அறிமுகப்படுத்துகின்றன. ‘இன்ப ஒலி’ எனும் புதினம் பெற்றோம் விடுதலை என்று மகிழ்ச்சியொலி எங்கும் ஒலிக்க தொடங்குவது அண்ணா தமிழக முதல்வராக பொறுப்பேற்ற போது எழுந்த வெற்றி பெருமித ஒலியை நினைவூட்டுகிறது.

குறும் புதினங்கள்
         
       அறிஞர் அண்ணாவின் முதல் குறும் புதினம் ‘கோமளத்தின் கோபம்’ ஆரியத்தின் சூழ்ச்சியினால் சிறைக்கு சென்றவன் விடுதலை பெறும் காட்சியாக தொடங்குகிறது. “1939 தொடக்கத்தில் தமிழ் மொழி காக்க முதன்முறையாக ராஜகோபால ஆச்சாரியரால் அறிஞர் அண்ணா சிறைக்கனுப்பப்பட்டு விடுதலை பெற்ற காட்சியை இப்புதினத்தில் தொடக்கமாக சேர்த்திருப்பார்.” 18 குறும் புதினங்களில் கபோதிபுரக்காதல், மக்கள் தீர்ப்பு, பவளபஸ்பம், சந்திரோதயம், கடைசிக்களவு, அப்போதே சொன்னேன், சிங்களசீமாட்டி என்பன உரையாடல் தொடக்கமாகி கதை கருவை குறிப்பால் உணர்த்துகின்றது.

சிறுகதைகள்
         
        அண்ணாவின் முதல் சிறுகதை ‘கொக்கரக்கோ’ ஒருநாள் மாலை நான் கடற்கரை முன்பு கண்மூடி மௌனமாக உட்கார்ந்து கொண்டிருந்தேன் கண்களை மூடுவதும் மௌனமாவதும் கனவு காண்பதும் சகஜம் தானே என சங்கர் கதை கூறும் நெறியில் கதை தொடங்குகிறது சங்கரின் நண்பர் சுந்தரம் இதழ் ஒன்றை நடத்தி தோல்வி கண்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மன நலமற்று திரியும் கதை முடிவை சுந்தரின் மணக்கண் குருடாகி கனவு பிதற்றலுமாக அமைந்ததை குறிப்பால் தெரிவிக்கிறது. 42 சிறுகதைகளின் தொடக்கங்கள் விறுவிறுப்பான தொடக்கங்களாகவும் கதை மாந்தர்களையும் அவர்தம் பண்புகளையும் அறிமுகம் செய்கின்றன. “வழக்குரை காட்சிகளில் ஆறு சிறுகதைகளும் உருவகம் உவமைகளில் 12 சிறுகதைகளும் உவகை, அவலம், சினம், வியப்பு ஆகிய உணர்ச்சி வீச்சில் 25 சிறுகதைகளும் தலைப்புத் தொடரை விளக்கி நான்கு சிறுகதைகளும் அமைந்துள்ளது.”
வாழ்த்துரையிலும், மடலிலும், இதழ்ச்செய்தியிலும், விளம்பரத்திலும் அறிவிப்பிலும் வரவு செலவு பட்டியலிலும் தொலைபேசி உரையாடலிலும் முன்னுரையிலும் நாடக காட்சியிலும் என பல நிலைகளில் பல்சுவை திறனில் விரைந்து படிக்கத் தூண்டும் வேட்கையுறச் செய்யும் வகையில், பிற கதைகளின் தொடக்கங்கள் அமைந்துள்ளன. அண்ணாவின் புனைவுகள் மக்களுக்கு ஆர்வமூட்டும் வகையிலும் விரும்பி படித்து சுவைக்கவும் ஏற்ற சூழலுடன் மொழித் திறனுடன் தொடங்கப் பெறும் திட்ட பாங்கு பெற்று இயல்வது தெளிவாகிறது. புனைவுகளின் தொடக்கங்கள் கலைத் திறனுடனும் கருத்துச்செறிவுடனும் திட்டமிட்டு தொடங்கப் பெற்றிருக்கையில் அவை திட்டமிட்டன அல்ல என்று குறிப்பிடுகிறார்.

மடல்கள்
         
       1937 ஆம் ஆண்டு முதல் விடுதலை பத்திரிக்கையிலும் 1942 ஆம் ஆண்டு முதல் 1955 ஏப்ரல் வரை ‘திராவிட நாடு’ கிழமை இதழிலும் அறிஞர் அண்ணா தீட்டிய மடல்கள் பரதன், சமதர்மன், நீலன் எனும் புனைப்பெயர்களில் எழுதப்பட்ட திறந்த மடல்கள் ஆடி அடங்கினீரே, அலகாபாத் பண்டிதரே, தமிழ் பண்டிதர்கட்கு, நன்னிலம் நண்பர்கட்கு, வாலாஜா திமுக தோழர்கட்கு, மக்கு மகாலிங்கத்திற்கு திருநாள் கொண்டாடும் தோழர்கள் அன்புள்ள அண்ணா மேயரே என விழி தொடக்கங்கள் பல்நெறிப்பட்டு இயல்கின்றன. மே 8, 1955 முதற்கொண்டு தம்பி என்னும் விளியேற்று அண்ணன் எழுதும் மடல்கள் அழைப்பு, அழைப்பிதழ், கற்பனை சூழல், கவிதை, மடல், கதை, மேற்கோள், நூல் அறிமுகம், மடல் தலைப்பு, விளக்கம், இதழியல் திறன்கள், தமது வாழ்க்கை நிகழ்ச்சி உவமை கூறியன நினைவூட்டல், சுவை, மெய்ப்பாடு, தொடர்கதைத் திறன், மடல் எழுதாமைக்கு வருத்தம் தெரிவித்தல், அரசியல் பணி வசவாளர் தூற்றல் கற்பனை நிகழ்ச்சி முதலான தொடக்கத் திறன்கள் பெற்றுத் திகழ்கின்றன.

கட்டுரைகள்
         
        கருத்துகளுக்கு முழு முன்னுரிமை தந்து அவற்றைத் தொடர்புபடுத்திப் பகுத்து ஒப்பிட்டும் மறுத்தும் சான்றளித்தும் தொகுத்தும் எழுதும் மடல்கள் கட்டுரை வடிவேற்கின்றன. கண்ணீர் எனும் மடல், தசாவதாரம் எனும் புதினம், இரக்கம் பற்றிய விளக்கம், இன்ப ஒளி புதினத்தில் நாட்டுப்பற்று பற்றிய விளக்கம், கலிங்க ராணி, ஆரியனின் பண்பு எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் எனும் மடலிடையே குடியாட்சி முடியாட்சி விளக்கம் யாவும் கட்டுரை நடை பயில்கின்றன.
         
         கருத்துப் புலப்பாட்டு நெறியில் அண்ணா மேற்கொள்ளும் விளக்க நடையும் ஆய்வுக்குரிய களமாகிறது. கருத்தை விளக்கும் முறையில் அறிஞர் அண்ணா அவர்கள் தனித்தமிழ் நடையினையே பெரிதும் கையாள்கிறார். தன்னலத்தை துளியும் கருதாதவன் என்றோ தன்னல நோக்கமே எழாத நிலையினன் என்றோ ஒருவரைப் பற்றிக் கூறி பெருமைப் படுத்துவதைக் காட்டிலும் உண்மையான பெருமை என்னவென்றால் தன் நலத்தை வென்றவன் தன்னல உணர்ச்சியால் தாக்கப்பட்டும் தாழ்ந்து விட மறுத்தவன் தன்னல உணர்ச்சியுடன் போரிட்டு வெற்றி கண்டவன் என்பதில் தான் பெருமை இருக்கிறது. குடும்ப பாசம் என்னும் மடலில் நான் நாம் எனும் சொற்களையும் பொருள் பொருத்தம் நாநலம் எனும் மடல்களில் அச்சொற்களையும் விளக்கும் நெறி தனித்தன்மை பெறுகிறது.

எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
         
       ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்பதே தந்தை பெரியாரின் முழு முதல் நோக்கு; அவரது இறுதி நோக்கமும் அதுதான் பெரியாரின் எழுத்துக்களை, பேச்சுக்களை செயல்பாடுகளில் விடுபடுதல் இல்லாமல் உற்று நோக்குபவர்களால் மட்டுமே உணர முடியும். அங்கொன்றும் இங்கொன்றுமாய் நுனிப்புல் மேய்பவர்கள் பெரியாரைப் பற்றித் தெரிந்து கொள்ள நினைத்தால் அவர்கள் ஏமாந்து போவார்கள். அவர்கள் முழுமையாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
          தமிழ்நாட்டில் தமிழுக்கென்று தனியாய் எத்தனை பள்ளிக்கூடம் இருக்கிறது என்று குடிஅரசு 07-03- 1926 இல் கேட்டது முதல் தொடர்ச்சியாகத் தமிழை அதற்குரிய இடத்தில் வைக்கவே பெரியார் செயல்பட்டார். இறுதிக் காலத்தில் எழுதிய தலையங்கத்திலும் இதனை வலியுறுத்தி இருக்கிறார்.
         
      தந்தை பெரியாரின் தமிழ் என்பது மதக்கலப்பு இல்லாதது ஆகும் தமிழில் எழுதப்பட்டு இருப்பதால் அவை அனைத்தும் புனிதம் என்று நினைக்க மாட்டார். இந்தத் தமிழ்ச் சமுதாயம், தமிழ் மக்கள் எப்படியாவது முன்னேறிச் சென்று விட வேண்டும் என்ற அக்கறையும் துடிப்பும் மட்டுமே அவரை ஆங்கிலம் படியுங்கள் என்று சொல்லச் சொன்னது. தமிழ் தமிழ் என்று சொல்லித் தமிழன் அத்தோடு நின்று விடக்கூடாது; சாதித் தமிழனாய் கிராமங்களுக்குள் முடங்கி விடக்கூடாது என்று அவர் நினைத்தார்.
         
         தமிழ் படித்தால் மட்டுமே போதுமானது என்று இருந்து விடக்கூடாது என்றார் அவர். தமிழை யாருக்கும் கற்றுத் தர வேண்டியது இல்லை அது குருதியோடு இருக்கிறது. ஆங்கிலம் கசடற கற்றுத் தர வேண்டும் என்று உறுதியாகச் சொன்னார்.  “நாம் மிகப் பெரிய சமுதாயம். நாம் எவ்வளவு முன்னுக்கு வர வேண்டியவர்கள்? நாதியற்றுப்போய் காட்டுமிராண்டியாக அல்லவா இருக்கிறோம். சொல்லுங்கள் வெளிநாட்டுக்காரனைப் பாருங்கள், நீ வேட்டி கட்டிக்கிட்டு இருந்தபோது அவர்கள் ஆண் பிள்ளையையும் பெண் பிள்ளையையும் ஒன்று போல் வளர்த்தனர். இன்றைய காலகட்டத்தில் அவர்கள் ஆகாயத்தில்லவா பறக்கின்றனர் என்று நம் மக்களின் நிலை பற்றி அவருடைய ஏக்கம் இருந்தது. 19.12.1973 அன்று தனது இறுதிச் சொற்பொழிவில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.” ஆங்கிலம் படித்து உலகம் முழுக்கச் செல். எங்கு சென்றாலும் பிழைத்துக் கொள்ளலாம் என்பது அவரது எண்ணமாக இருந்தது. அதே நேரத்தில் தமிழகத்தில் தமிழாட்சி இருக்க வேண்டும் என்பதே அவரது முழக்கம்.

எப்போதும் தமிழுக்காக         
       தமிழைப் பெருமைக்குரியதாகவோ சுவை மிகுந்ததாகவோ இன்னும் சொல்லப்போனால் பழம்பெருமைக்காகவோ இன்னும் சொல்லப்போனால் நாமெல்லாம் தமிழர் என்பதற்காகவோ அல்லாமல் தமிழைப் பயன்பாட்டு மொழியாக ஆக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராய் பெரியார் திகழ்ந்தார். அத்தகைய தகுதி படைத்த தமிழ் மொழியை உலகில் அனைவராலும் பயன்படுத்தப்படும் மொழியாக மாற்ற வேண்டும் எனப் பாடுபட்டவர். மேற்கண்ட தகுதிகள் தமிழுக்கு இல்லையா என்று மொண்ணையாகச் சிந்திப்பவர்கள் தங்களை 60, 70 ஆண்டுகளுக்குப் பின்னே அழைத்து சென்று சிந்திக்க வேண்டும் பெரியார் அவர்கள் இறந்து ஏறத்தாழ அரை நூற்றாண்டுகள் ஆகப்போகிறது. அவர் இறப்பதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து தமிழுக்காகப் பேசியும் எழுதியும் போராடியும் வந்தார். எனவே அவரது சொற்களை அவர் வாழ்ந்த காலகட்ட சூழலுடன் பொருத்திப் பார்த்துச் சிந்திக்க வேண்டும்.
         
       “பெரியாரின் போராட்ட குணத்தை அதிகம் ஆக்கியது இந்தி எதிர்ப்பு போராட்டம் தான். 1938ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்ட வடிவம் கொண்டாலும் தந்தை பெரியார் தனது இந்தி எதிர்ப்பை 1929 ஆம் ஆண்டிலேயே தொடங்கி விட்டார். குடியரசு இதழில் தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.”17 இதன் தலைப்பே பெரியாரை அடையாளப்படுத்தும். தமிழிற்குத் துரோகமும் ஹிந்தி பாஷையின் ரகசியமும் என்பது தான் சித்திரபுத்திரன் என்ற புனைப் பெயரில் அவர் எழுதிய கட்டுரைக்கு இட்ட தலைப்பாகும்.
         
        மதம் கலவாத தமிழைப் பெற தந்தை பெரியார் விரும்பினார். மதம் கலவாத தமிழ்ப் புலவர்கள் மிகுதியார் வர வேண்டும் என்றார். 1932 ஆம் ஆண்டில் துறையூரில் தமிழ்ப் புலவர்கள் மாநாடு, தமிழ் மாணவர் மகாநாடு நடந்தது. இதில் சீர்திருத்த நோக்கம் கொண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனைப் பெரியார் ஆதரித்தார். அம்மாநாட்டில் சமயம் சார்ந்த பாடல்கள் பாடப்பட்டதைக் கண்டித்தார். சுயமரியாதை இயக்கத்தவர் சிலர் அம்மாநாட்டில் கலந்து கொண்டது சில புலவர்களும், சில சைவர்களுக்கும் பிடிக்கவில்லை. மாநாட்டில் இது சலசலப்பையும் உருவாக்கியது. இதையொட்டி எழுதப்பட்ட தலையங்கத்தில் பெரியாரின் முழு முதல் நோக்கம் விளக்கமாக வெளிப்பட்டது,
         
          சுயமரியாதைத் தோழர்கள் தமிழ்மொழி வளர்ச்சி விஷயத்தில் எந்த வகையிலும் மற்ற பண்டிதர்களுக்கும் தமிழ் அபிமானிகளுக்கும் பிற்பட்டவர் அல்லர் என்று தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கு சுயமரியாதைத் தோழர்கள் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டதும், தமிழ் வளர்ச்சிக்கான தீர்மானங்களில் முக்கியப் பங்கு எடுத்துக் கொண்டதுமே உதாரணமாகும். உண்மையில் ஹிந்தி மொழியைக் கண்டிப்பதாக மாநாட்டில் மெஜாரிட்டியினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சுயமரியாதைத் தோழர்கள் இல்லாவிட்டால் தோற்றே போயிருக்கும். ஹிந்தி கண்டனத் தீர்மானத்தை சிலர் எதிர்த்த பொழுது, அவ்வெதிர்ப்புக்குச் சரியான பதில் கூறினார். மற்ற பண்டிதர்கள் விரும்புவது போல புராணங்களை எழுதுவதும், அவர்களைப் பற்றிப் பேசுவதும், தேவார திருவாசகங்களைப் பாடுவதும் தான் தமிழ் வளர்ச்சி என்று சுயமரியாதைத் தோழர்கள் கருதுவதில்லை. மக்களுடைய வாழ்க்கைக்குப் பயன்படக் கூடியதும், அறிவையும், திறமையையும், தைரியத்தையும், உண்டாக்கக் கூடியதும் ஆகிய சிறந்த கலைகளை எல்லாம் தமிழில் எழுதிப் பரவச் செய்வதன் மூலம் மக்களுடைய அறிவையும் தமிழ்மொழியையும் செம்மை செய்வதே தமிழ் வளர்ச்சி என்று கருதுபவர்கள் என்று கூறுகின்றோம். இதுதான் உண்மையான தமிழ் வளர்ச்சிக்கான வழியுமாகும்.
         
         எது உண்மையான தமிழ் வளர்ச்சி என்று பெரியாரின் சிந்தனை இந்த ஒரு கட்டுரையின் மூலம் புரிய வேண்டும். வெறும் தமிழ்ப்பாட்டு, தமிழ்ச்சுவை தமிழை வளர்க்காது என்பதில் உறுதியாக இருந்;தார். “நம் பண்டைத் திராவிட மக்களிடையே இரண்டு பெரியோர்களைக் குறிப்பிட வேண்டுமானால் ஆண்களில் வள்ளுவரையும், பெண்களில் அவ்வையாரையும் நாம் சிறந்;த அறிவாளிகளாகக் குறிப்பிட வேண்டும்.” தமிழைச் சமயம், சுவை என்ற இரண்டு சிமிலுக்குள் அடைத்த சைவர்களை தமிழ் மொழியின் முட்டுக்கட்டை என்று விமர்சித்தார்;. இதுதான் அவரின் எழுத்துச் சீர்திருத்தத்துக்கும் அடித்தளமாய் இருந்தது. தமிழையும் மதத்தையம் பிரித்து, தமிழை அறிவு மற்றும் அறிவியல் மொழியாக்க வேண்டுமென்று விரும்பினார். அந்த அடிப்படையில் அனைத்து இடங்களிலும் தமிழ்மொழி ஆட்சி செய்ய வேண்டும் என்றார்.
         
          தந்தை பெரியார் அவர்கள் எப்படி ஆனாலும் தமிழ் மொழி உணர்ச்சி தமிழ் மக்களுக்கு இன்றியமையாதது அதன் மூலம் தமிழ் மக்கள் ஒன்று சேர வசதி உண்டு. தலைவர் திரு. வி. க. அவர்களும் அமைச்சர் கா. நமசிவாய முதலியார் அவர்களும் இத்திருநாளை இல்லாமல் தமிழ் மக்களுக்கு ஒரு புது எழுச்சியையும் ஊக்கத்தையும் உண்டாக்கும் திருநாளாக செய்ய வேண்டும். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு ஊரிலும் தலைமை திருநாள் நடைபெற செய்ய வேண்டும். தீபாவளி போன்ற மூடநம்பிக்கையும் சுயமரியாதை அற்றதும் ஆபாசமானதுமான பண்டிகைகள் கொண்டாடுவதை விட இப்படி திருநாள் என்று தமிழ் மக்கள் கூட்டுறவுக்கும் மகிழ்ச்சிக்கும் கொண்டாட்டத்திற்கும் அனுகூலமாக திருநாள் விழாவை பரப்ப வேண்டும். நமது பெண்களுக்கு பகுத்தறிவும் சுயமரியாதையும் இருந்தாலும் ஒரு நாள் வேண்டி இருப்பதால் தீபாவளியையும் மாரியம்மன் பண்டிகைகளையும் கொண்டாட ஆசைப்படுகின்றனர் என்று குறிப்பிடுகிறார் தந்தை பெரியார்.

முடிவுரை         
       படைப்புகள் மூலம் சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள் பற்றியும், மேலும், இலக்கியப் படைப்புகள், கருத்துக் குவியல், புதினங்களின் தொடக்கங்கள், குறும் புதினங்கள், மடல்கள், கட்டுரைகள், தமிழ் மொழியின் மீட்சி, தமிழ் மொழி காக்க வந்த கலைஞர், காலங்காலமாகத் தமிழின் நிலை, வழக்குச் சொல், தமிழின் பெருமை, மொழி என்பது போர்க்கருவி, திராவிட இயக்கத்தவர்களின் இலக்கியப் பணிகள் போன்ற உட்தலைப்புகளில் கருத்துக்கள் அனைத்தும் முழுமையாக இக்கட்டுரையில் தரப்பட்டுள்ளது.

துணைநூற்பட்டியல்
1. முனைவர் இராமசுவாமி மு, ‘திராவிட இயக்கமும், கலைத்துறையும்’, எண். 120, என்.டி.ஆர் தெரு எண். 120, என்.டி.ஆர் தெரு ரங்கராஜபுரம், கோடம்பாக்கம் சென்னை – 600 001

2. உதயகுமார், ‘திராவிட இயக்கத்தின் தாக்கம்’, திராவிடப் பள்ளி வெளியீடு, என்.டி.ஆர் தெரு, ரங்கராஜபுரம், கோடம்பாக்கம் சென்னை – 600 001

3. முனைவர் சுலோச்சனா நா, ‘திராவிட வேரும் விழுதுகளும்’, நாம் தமிழர் பதிப்பகம்,
  சென்னை – 600 015 ஆண்டு – 2013    

4. முத்துக்குமார் ஆர், ‘திராவிட இயக்க வரலாறு பாகம் 1’, கிழக்கு பதிப்பகம்,
  இராயப்பேட்டை, சென்னை – 600 016 ஆண்டு – 2010

Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் அ.சேதுபதி
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,

ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி,

பெருந்துறை, ஈரோடு – 638 057

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here