Death Rituals in Tamil Culture:  Traditional norms and Social Interaction (A Study Based on the Pattipalai Division of  Batticaloa)

தமிழர் பண்பாட்டில் மரணச்சடங்கு
Abstract
          
       Rituals occupy a significant place in Tamil cultural anthropology. Among them, death rituals hold a distinctive position in both their structural and emotional dimensions, as they are deeply interwoven with the everyday lived experiences of the people. This study investigates how death—an unavoidable natural event—becomes a social and religious process of identity construction within Tamil culture. Death rituals function as cultural mechanisms that reorganize social relationships, express spiritual beliefs, and embody emotional responses.
                     
            Although Tamil communities have observed diverse forms of death rituals from ancient times to the present, many traditions have been altered, discontinued, or reshaped through formal regulations, while several customs continue to be preserved across generations. The influence of colonial ideologies and Sanskritization also emerges as an important factor shaping the contemporary understanding and performance of these rituals.The primary objective of this study is to explain the cultural norms, ritual procedures, and religious practices associated with death ceremonies, and to examine their contribution to the Tamil life-cycle system. Drawing on literary sources, folk traditions, and contemporary social practices, the study highlights how death rituals operate as a social structure that reinforces     
        
              Tamil identity and sustains cultural values and meanings related to existence and mortality. Focusing on the death-related practices of the Pattipalai division in the Batticaloa littoral, the research analyses how a communities closely structured cultural system is preserved and transmitted through ritual performance. As the Batticaloa littoral community has retained a relatively traditional way of life compared to other regions, and given the absence of prior systematic studies on this theme, the present research seeks to fill an essential scholarly gap.

Keywords: Tamil culture, death rituals, social custom, religious belief, symbolism of death.


“தமிழர் பண்பாட்டில் மரணச்சடங்கு: மரபும் சமூக ஊடாட்டமும் (மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)”

ஆய்வுச் சுருக்கம்
         
       தமிழர் பண்பாட்டியலில் சடங்குகள் முக்கியமாகின்றன. குறிப்பாக மக்களது நடைமுறை வாழ்வியலில் பின்னிப் பிணைந்துள்ள சடங்குளில் மரணச் சடங்கானது அதன் அமைப்பியல் மற்றும் உணர்வியலிலும் ஏனையவற்றை விட தனித்துவமான கவனிப்பை பெறுகின்றது. இவ்வாய்வு தமிழர் கலாச்சாரத்தில் மரணம் எனும் இயற்கைச் சம்பவம் எவ்வாறு ஒரு சமூக மற்றும் மத அடையாளச் செயல்முறையாக மாறுகிறது என்பதை ஆராய்கிறது. மரணச் சடங்குகள் சமூக உறவுகளை மீளமைக்கும் கலாச்சார நிகழ்வுகளாகவும், ஆன்மீக நம்பிக்கைகளின் வெளிப்பாடாகவும், உணர்வுகளின் பிரதிபலிப்பாகவும் அமைகின்றன. தமிழர் தொல்சீர் வரலாறு முதல் இற்றை வரை மரணச் சடங்குகள் பற்றிய பல்வேறு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தபோதும் அவற்றில் பல வழக்காறுகள் இல்லாமல்லாக்கப்பட்டும் பல விதிமுறைகள் திணிக்கப்பட்டும் வந்தும் உள்ளன. இன்னும் பல மரபுமுறைகள் தொடர்ச்சியாகவும் பேணப்படுகின்றன. இவற்றில் காலனியசித்தாந்தம் மற்றும் சமஸ்கிரத மயமாக்கம் என்பவற்றின் ஆதிக்கம் மேலும் கவனத்தில் கொள்ள வேண்டிய முனைப்பாகவும் உள்ளது. ஆய்வின் முக்கிய நோக்கம், இறப்புச் சடங்குகளில் இடம்பெறும் மரபு, விதிமுறைகள் மற்றும் மதச் செயல்பாடுகள் ஆகியவை தமிழர் வாழ்க்கைச் சுழற்சியில் ஆற்றும் பங்களிப்பை விளக்குவதாகும். இலக்கிய ஆதாரங்கள், மக்கள் மரபுகள், மற்றும் தற்கால சமூக நடைமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வு, இறப்புச் சடங்குகள் தமிழர் அடையாளத்தின் தொடர்ச்சியை உறுதிப்படுத்தும் சமூக கட்டமைப்பாகவும், வாழ்வியல் அம்சங்களில் நிலையான வடிவாகவும் விளங்குவதை வெளிப்படுத்துகிறது. ஒர் சமூகம் தமக்குள் கொண்டிருக்கும் இறுக்கமான கட்டமைப்பு அதன் இயங்கியலில் எவ்வாறு கடைப்பிடிக்கப்பட்டு தொடர்ச்சியாக பரிமாற்றம் செய்யப் படுகின்றன என்பதனை மட்டக்களப்பு படுவான்கரை பட்டிப்பளை பிரதேச மக்களின் மரணச்சடங்கு சார் நடைமுறைகளை ஆய்வு எல்லலையாக கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப் படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைப்பிரதேச மக்களின் வாழ்வுமுறை மற்றும் வழாக்காறுகள் ஏனைய பிரதேச மக்களின் வாழ்வைவிட இன்னும் பழமை மாறாது தொடர்ச்சியாக பேணி வருவதனாலும்;, இவ்விடயம் சார்ந்து இதுவரை எவ்வித ஆய்வும் மேற்கொள்ளப்படாத நிலையில் இவ்வாய்வு முன்னெடுக்கப்படுகின்றது.

திறவுச் சொற்கள்
 : தமிழர் கலாச்சாரம், இறப்புச் சடங்கு, சமூக மரபு, மத நம்பிக்கை, மரணக் குறியீடுகள்

அறிமுகம்         
          ஒவ்வொரு சமூகங்களும் அல்லது குழுக்களும் தங்களால் பேணி வரும் மொழி பண்பாடு கலை தொழில் குறித்த மரபுகள் தொடர்ச்சியாக கை மாறவும்,  பேணவும், பாதுகாக்கவும் உரிமையுடவர்களாக உள்ளனர். இன்றைய சூழலில் வெவ்வேறு சமூகப் பிரிவினரும் கொண்டாடும் மரபுகள், பண்பாடுகள் பல மாறுதல்களை கண்டுதான் வந்திருக்கின்றன. அவை ஏற்றும், ஏற்காமலும், திணிக்கப்பட்டும், திட்டமிட்டும் ஆதிக்க அறிவின் பிடியில் பௌதீக மற்றும் சமூக எதார்த்தத்தை விட அதிக ஆற்றல் கொண்ட  மிகை எதார்த்தத்தினை உள்வாங்கி சமகால அறிவு கட்டி எழுப்புகின்றது. இக் கருத்தாக்கத்தை மேலும் விரிவுபடுத்தின் உலகமயமாக்கம், காலனியம், சமஸ்கிரத பரவலாக்கங்களின் கொள்கைகள் தமிழர் பண்பாட்டு வாழ்வு மரபுகளை கபளிகரம் செய்யவும் தமக்கேற்றால் போல் தமது கொள்கையாக்கங்களை வெகுஜனப்படுத்தவும், அதன் மூலம் பன்னாட்டு பெரு நிறுவனங்கள் உலக மூலதனத்தை விருத்தி செய்யவும், தடையாக உள்ள உள்;ர் பண்பாடு மற்றும்மரபுசார் அறிவியல்களை முற்று முழுதாக அழித்து நிர்மூலப்படுத்துவதையே கருத்தில் கொண்டு செயல்படுத்தின. மானிட வாழ்வானது கால ஓட்டத்தோடு இணைந்த பிறப்பு – இறப்பு – பிறப்பு சுழற்சித்தன்மை கொண்டது. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் இளமை, பருவமடைதல், முதுமை எனும் வரிசையில் நிலைமாற்றங்கள் ஏற்படுகின்றன.

“வாழ்வியல் பண்பாடுகளுக்குரியது ஆகையால் மேற்கூறிய உயிரியல் நிலையில்அமையும்   இந்த நிலைமாற்றங்கள் பண்பாட்டு வயப்படுகின்றன.இதில் ஒவ்வொரு நிலைமாற்றங்களும் ஒரு சடங்கு நிகழ்வோடு பண்பாட்டு  வயப்படுகிறது.” (பக்தவத்சல பாரதி 2002:18)
         
       சமூக குழுக்கள் தாம் கடைப்பிடித்த மரபுகள்  விதிகளாக்கப்பட்டு இவ்விதிகளை சமூக ஊடாட்டமாக கையளிக்கும் தன்மையினை சமூகநெறி கைமாறுதலிற்கான பொறிமுறையாக கட்டமைத்தும் இருக்கின்றது. சடங்கென்பது சமயம் அல்லது மரபுவழியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட குறிப்பிட்ட சில செயல்முறைகளின் தொகுப்பு ஆகும். ஒரு மனிதரின் வாழ்வில் நிகழும் முக்கிய நிகழ்வுகளை குறித்து ஒவ்வொரு சமூகமும் அவை தொடர்பான சடங்குகளை கொண்டிருக்கின்றது. இங்கு நம்பிக்கை மிக உயிர்ப்பு தன்மையானதாக அமையும்.
சடங்குகள் செய்யப்படுவது குடும்பங்கள் தழைக்க, நோயின்றி வாழ, பழி பாவங்களைப் போக்க, துன்ப துயரங்கள் விலக, உறவுகள் நீடிக்க, எதிரிகளை தண்டிக்க, இயற்கையை  வசப்படுத்த, விஞ்சிய ஆற்றலை பெற என்றவாறு பல்வேறு  நோக்கங்கள்  மற்றும் எதிர்பார்ப்புகளை முன்னிட்டு சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. இத்தகைய சடங்குகள் மக்களினால் கூட்டாக மேற்கொள்ளப்படுபவையாகவும் உள்ளன. தமிழர் பண்பாட்டியல் பல்வேறு வகையான வாழ்க்கை வட்டச் சடங்குகளை கொண்டுள்ளது. பிறப்பு, பெயர் சூட்டுதல், காது குத்துதல், பிறந்தநாள் விழாக்கள், பருவமடைதல், திருமணம், வளைகாப்பு, இறப்பு, நினைவு நாள் கடைப்பிடித்தல் என பல அடங்குகின்றன. இதில் மரணச்சடங்கு ஏனையவற்றை விட உணர்வு நிலைப்பட்ட செயல்பாடுகளும் பல்வேறு பண்பாட்டு அம்சங்களும் காணப்படும் ஒன்றாக விளங்குகின்றது. மனித வரலாற்றில் இறப்பினை பெருந்துயராக கொண்டு இறந்தவரின் உடலை ஏனையோர் புசித்தல், தங்களுடன் நீண்ட நாள் வைத்து பாதுகாத்தல், புதைத்தல், புதைத்த உடலை ஒவ்வொரு வருடமும் புதைத்த இடத்திற்கு சென்று தோண்டியெடுத்து சடங்கு செய்தல், எரித்தல், இறந்தவருடன் உடன் கட்டையேறுதல் என மரணம் தொடர்பான பல நம்பிக்கைசார் நடைமுறைகள் காணப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு சமூக இனக்குழுக்களதும் மரணம் தொடர்பான சடங்குப் பண்பாடு வெவ்வேறு தன்மை கொண்டவை.
    
“தமிழர் மத்தியில் காணப்படும் மரணச்சடங்குகள் பிரதேசத்துக்கு பிரதேசம் வெவ்வேறு வகையில் பன்முகப்பட்டவை. அவை நிகழ்த்தப்படும் காலம், இடம், சூழல், தேவை, நோக்கம் போன்ற காரணிகளை முன்வைத்து அவற்றின் தன்மைகள் வேறுபடுகின்றன”.  (பக்தவத்சல பாரதி 2002:183) “ஒவ்வொரு சமூகத்தின் சடங்குகளும் தனித்தன்மைகள் கொண்டிருப்பினும் பண்பாடுகளுக்கு இடையில் நிகழும் சடங்குகளை ஒப்பிட்டு ஆராயும் போது இவற்றுக்கிடையே பொதுத்தன்மைகள் காணப்படுவதையும் அறிய முடிகிறது”. (பக்தவத்சல பாரதி 2002:183)
         
     இவ்வாய்வின் எல்லையாக குறிப்பிடப்படும் மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசம் ஏனைய பிரதேச நடைமுறைகளை விட இங்கு சற்று வித்தியாசமான மரணச்சடங்கு முறைகள் உள்ளன. குறிப்பாக குடி மரபின் தாக்கம் அதனூடான மரணச்சடங்கின் கட்டமைப்பும் ஆக்கப்பட்டு தொடர்ச்சியாக பேணப்படும் தன்மையினை அவதானிக்க முடியும். இப்பிரதேச மக்களின் இச்சடங்கு முறைமையில் குடிசார் நடைமுறைகள் உள்ளீர்க்கப்பட அடிப்படைக் காரணமாய் அமைவது கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் குடிமுறை சடங்குப் பாரம்பரியமாகும். இவ்வாலய நடைமுறைப் பண்பாடுகளின் இயக்கமே மரணச்சடங்கிலும் தாக்கம் செலுத்துகின்றது. தமிழ் பண்பாட்டில் எண்ணிக்கையில் அதிக சடங்கு முறைகள் காணப்படுகின்ற போதும் ஆய்வு தலைப்பை அடிப்படையாகக் கொண்டு மரணச் சடங்கே இதன் ஆய்வின் பொருண்மையாக உள்ளது. எனவே மரணச் சடங்கு முறையில் உள்ள மரபு, விதி, சமூகம் சார் விடயங்கள் என்பவற்றைக் கொண்டு மரணத்திற்கு முன்னும், பின்னும் உள்ள சடங்குகளின் ஒழுங்கமைப்புகள், இறந்தவர்களின் குடும்பங்களின் மனநிலையில் அவர்களது துக்கத்தில் சமூகத்தின் பங்கெடுப்புகள், சடங்குகள் எவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் உளவியல் ஆற்றுப்படுத்தலில் தாக்கம் செலுத்துகின்றன என்பதையெல்லாம் மானிடவியல் நோக்குடன்  ஆராயப்படுகின்றது.

இலக்கிய மீளாய்வு
         
        தமிழர் சமூகத்தில் மரணியம் (ஆழசவயடவைல) குறித்த சிந்தனை தத்துவம், மனிதவியல், சமூகவியல், மரபியல் ஆகிய துறைகளில் விரிவாகப் பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே உள்ள ஆய்வுகள், தமிழர் மரணச் சடங்குகள் அநவயிhலளiஉயட (இயற்பின் புறம்பான) சிந்தனை, சமூக ஒற்றுமை, மற்றும் சடங்கு தொடர்ச்சி ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் பண்பாட்டு உலகக் காட்சியாக இருப்பதைக் காட்டுகின்றன. இவ்வாய்வு, இத்துறையில் முன்னர் வெளிவந்த முக்கியமான கோட்பாடுகள் மற்றும் ஆய்வுகளை ஒருங்கிணைத்துப் பரிசீலிக்கிறது.
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசத்தின் மரணச் சடங்கு தொடர்பான ஆய்வுகள் மிக வரையறுக்கப்பட்டுள்ளன. மரணியத்தை தத்துவம், சடங்கு, சமூக அமைப்பு ஒருங்கிணைந்த பார்வையில் அணுகும் ஆய்வுகள் குறைவு. மரணச் சடங்குகளில் இன்றைய மாற்றங்கள் குறித்து தனித்த ஆய்வுகள் இல்லை. இத்தகு இடைவெளிகளை இவ்வாய்வு நிரப்புகிறது. பண்டைத் தமிழர் சிந்தனையில் மரணம் ஒரு முடிவாக அல்ல ஒரு நிலைமாற்றமாக கருதப்படுகிறது. ஆய்வின் ஆதாரங்களில், மரணம் என்பது “உயிர் நிலையற்றது” என்ற உண்மையையும், அதனுடன் “சமூக நெறியின் நிலைத்தன்மை” என்பதைவும் வலுப்படுத்தும் வாழ்க்கைக் கூறாக விளக்கப்படுகிறது. பு. துழாn ளுயஅரநட (2002) போன்ற ஆய்வாளர்கள், தமிழர் மரபில் மரணத்தை ஏற்றுக்கொள்வது ஒரு தனித்துவமான பண்பாட்டு சடங்கு அமைப்பின் மூலம் நிகழ்வதாகக் குறிப்பிடுகின்றனர்.

மரணச் சடங்கும் அதன் ஒழுங்குமுறையும்
         
      மனிதர் தோன்றிய காலம் முதல் சடங்குகளும் தோன்றி விட்டன மனித வாழ்வியலில் சடங்குகள் நீங்காத இடம் பிடித்துள்ளது.  சடங்கினை வாழ்வுச் சடங்கு, இறப்புச் சடங்கு என பிரித்தும் பார்க்கலாம் அவற்றை மங்கல சடங்கு, அமங்கல சடங்கு எனவும் அழைக்கும் முறைமையுண்டு.
    
“இறப்புச் சடங்கு செய்யப்படுவதன் நோக்கம் தாங்க முடியாத துக்கத்தை வெளிப்படுத்த, இறந்தவர்கள்  கடவுளர்களாக இருந்து அவர்கள் குடும்பத்தை வழிநடத்தவும், அக்குடும்பத்திற்கும் இறந்தவருக்கும் உள்ள உறவை முறித்து கடவுளின் பாதத்தை சென்றடையவும் என்ற நம்பிக்கையில் பல நெறிமுறைகள் செய்யப்படுகின்றன.” (முனைவர், ரா.பிரித்தா, உதவி பேராசிரியர் புறநானூற்றில் இறப்புச் சடங்குகள்)
         
      ஆய்வின் எல்லைக்குட்படுத்தப்பட்ட படுவாங்கரைப் பிரதேசம்  நகரத்தை அண்டிய பிரதேசங்களை விட கலை, கலாசார, பண்பாட்டு மரபு முறைவுகளுடன் மக்கள் இணைந்து வாழுகின்ற ஓர் தன்மையினைக் அவதானிக்க முடியும்.  இதற்கு அடிப்படை நகரமயமாக்கத்தின் தாக்கம் குறைவு மேலும் முப்பது வருட கால யுத்தத்தின்பிடியில் இப்பிரதேசம் காணப்பட்டதும் இன்னுமொரு காரணமாகும்.
கொக்கட்டிச்சோலை ஆலயத்தின் சடங்கு சம்பிரதாயங்கள் குடிமுறை மரபிற்குட்பட்டவையாக காணப்படும் சந்தர்ப்பத்தில் அதன் இறுக்கம் சார் விதிமுறைகள் மரணச் சடங்கு நெறிமுறையிலும் தாக்கம் செலுத்துகின்றது எனலாம்.

பிரதேசத்தில் குடிமுறை 
         
      குடி மற்றும் சாதி முறைகள் பற்றி மட்டக்களப்பு மான்மியம், மாகோன் வரலாறு, மட்டக்களப்பு குகன் குல முக்குக வரலாறு, முக்குகர் தொடர்பான கல்வெட்டுப் பாடல்கள், மட்டக்களப்பு வரலாறு ஓர் அறிமுகம், மட்டக்களப்பு வாழ்வும் வழிபாடும், மட்டக்களப்பு பூர்வ சரித்திரம் போன்ற நூல்கள் ஊடாக மட்டக்களப்பின் பூர்வீக குடிகள் குடியேற்றங்கள் தொடர்பாக அறியக்கூடியதாக இருக்கின்றது.  பிரதேசத்தில் தற்போதைய நிலையில் கீழ் வரும் குடிகளை அடையாளப்படுத்த முடியும். உலகிப்போடிகுடி, படையாட்சிகுடி, பணிக்கனார்குடி, கச்சிலாகுடி, கோப்பிகுடி, பெத்தான்குடி சட்டிகுடி, பொன்னாச்சி குடி என்பனவாகும். இக்குடிகளின் ஒழுங்குமுறையிலேயே தான்தோன்றீஸ்வரர் ஆலய திருவிழா நடைபெறுகிறது. முதல் நாள் திருவிழா பொன்னாச்சி குடியினருக்கும், இறுதி நாள்த் திருவிழா  உலகிப்போடி  குடியினருக்குமாக மேற்கூறிய முறையே ஒவ்வொரு குடியினருக்குமாக நடைபெறும். இதேபோன்று குடிமுறைமை அடிப்படையில் மரணச்சடங்கின் விதிமுறைகளும் கட்டமைக்கப்படுகின்றது. இனி மரணச்சடங்கில் காணப்படும் செயலொழுங்கு முறையினை ஆராயலாம். இது ஒரு ஒழுங்குமுறையில் நிகழ்த்தபடும்.

ஒப்பாரி வைத்தல்
         
          ஒருவர் இறந்தவுடன் அக் குடும்பத்தில்  இருப்போர் சத்தமிட்டு ஒப்பாரி வைப்பர். சத்தமிட்டு அழுகின்ற முறைமை ஒப்பாரி வைத்தல் என அர்த்தப்படுகின்றது. ஒப்பாரி சத்தம் கேட்டவுடன் அயற் சூழலில் உள்ள அனைவரும் ஒன்றிணைவர். அவ்விடத்தில் ஆரம்ப கட்ட வேலைகளை செய்வர் வேலி பிரித்தல், வளவினை சுத்தப்படுத்தல், பந்தல் நாட்டுதல், இருக்கைகளை ஏற்பாடு செய்தல் என பல அடங்கும். ஒப்பாரி  செய்து அழுதலில் இறந்தவரின் பெருமைகளை சொல்லி பாடல் வடிவில் அழுகின்ற முறையை அவதானிக்கலாம். மரணம் நிகழ்ந்த ஊூரில் ஒப்பாரிப் பாடல்கள் பாடக்கூடிய பலர் இருப்பர் மரண செய்தி கேட்டவுடன் அவர்கள் அவ்விடத்தில் வந்து விடுவர் மலையகம், யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் தொழில்முறை சார் ஒப்பாரி பாடல்பாடும் குழுவினர்  காணப்பட்டும் இருக்கின்றனர். அதேபோன்று மார்படித்துப் பாடும் பாடல் முறைகளையும் குறிப்பிடலாம். பட்டிப்பளை பிரதேச மரணச்சடங்குகளில் மரணவீட்டிற்கு வருகின்ற இறந்தவரின் உறவுகளை கட்டி அணைத்து  ஒப்பாரி வைத்து அழுகின்ற முறையினைக் காணலாம். கீழ்வருமாறு இப் பாடல் அமையும்.

எண்டழகு ராசாவே ராசாவே
என்னை விட்டு போனியே ராசாவே ராசாவே
எண்டழகு ராசாவே
எண்டழகு ராசாவே  (ந.தெய்வானை வயது-75)
எனப் பல்வேறு வகையில் பாடுவோரின் கற்பனைக்கு அமைவாக ஒப்பாரிப் பாடல் அமையும்.

சாவியளம் சொல்லுதல்
         
      ஒரு வீட்டில் இறந்த செய்தியை ஏனையோருக்கு எடுத்துச் செல்லும் நபரை சாவியளம் சொல்லி என அழைப்பர். அவரை இழவு சொல்லி எனவும் கூறப்படுகிறது. இலத்திரனியல் தொடர்பு சாதனங்கள், போக்குவரத்து இல்லாத அன்றைய சூழலில் அயல் கிராமங்களுக்கு சென்று குறித்த நேரத்துக்குள் இறந்தவர் செய்தியை அறிவித்து அவர்களை அழைத்து வரும் பொறுப்பு இவருக்குண்டு. எனவேதான் அவருக்கான ஊதியம் கிடைக்கப்பெறும் மிக விரைவாக செயல்படக்கூடிய ஒருவராகவும் அதே போல் சமூகங்கள் ஏனைய கிராமங்கள் மற்றும் நல்ல ஆளுடைத் தொடர்பு கொண்டவராகவும் இவர்கள் காணப்படுவர்.

ஊர்த்தலைவரை அழைத்தல்         
     பட்டிப்பளைபிரதேச மக்களிடையே கிராமங்கள் தோறும்; இடம்பெறும் மரணச் சடங்கின் கடமைகள் மற்றும் நடைமுறைகளை முகாமைத்துவம் செய்வதற்காக ஊர்த் தலைவர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் குறித்த மரணம் இடம்பெற்ற வீட்டிற்கு சென்று சடங்கிற்குரிய வேலைகளை எவ்வாறு செய்ய வேண்டும்  என்பதனையும் மரணச் சடங்கிற்கு தேவையான பொருட்கள் மற்றும் ஏனைய விடயங்களை தயார் செய்வதற்கான ஆலோசனைகளையும் வழங்குவர்.

பறையடித்தல்
         
        மரணச் சடங்கில் இறந்தவரின் வசதி வாய்ப்பினை அடிப்படையாகக் கொண்டு பறையிசை நிகழ்த்தப்படும். ஒருவர் இறந்து விட்டார் என்பதனை பிறருக்கு அறிவிப்புச் செய்வதாக இப்பறை அறிவிப்பு அமையும். இதற்காக பறையர் சமூகத்தைச் சேர்ந்த கலைஞர்கள் அழைக்கப்பட்டு அவர்களுக்கு பொருத்தங்கள் பேசி அதன் மூலம் அவர்களை வழிநடத்தும் பண்பு காணப்படும். இதற்கு பொறுப்பாக அக்கிரமத்தில் ஒருவர் இருப்பார். அவரிடம் கூறுமிடத்து குறித்த நபர் பறையிசைக் கலைஞர்களை அழைத்து வரவும், அவர்களுக்கான வசதிகளை செய்து கொடுக்கவும் உரியவராவர்.

கூரை முடி வைத்தல்
         
       குடிப் பாரம்பரியம் உள்வாங்கபட்டதன் பின் அதாவது முக்குகச் சட்டத்தின் கீழ் கூரை மூடி வைத்துக் கொள்ளும் பண்பாடு உருவாகின்றது. இறந்தவர்களின் குல கௌரவத்தை எடுத்துக்காட்டி அவருக்கு மரியாதை செய்வதற்காக இவை செய்யப்படுகின்றன. பட்டிப்பளைப்பிரதேச மரணச்சடங்குகளில் கூரைமுடி வைத்தல் முறையினை சலவை தொழிலாளர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரே இதனைச் செய்வார். இறந்தவரின் வீட்டின் மேற்கூரையில் கும்பங்கள் வைத்து சடங்கு செய்யும் முறையினை இது குறிக்கின்றது. முக்குகர் குடிப் பிரிப்புகளை வைத்தே கும்பங்களின் எண்ணிக்கை அமையும் இதனை நன்மைக்கும் தீமைக்கும் ஆன கூரை முடி எனக் கூறுவர். இது பற்றி “சாதித் தெய்வ கல்வெட்டு”;  கீழ்வரும் பகுப்பில் வகுத்துள்ளது.

இல    குடி    கூரைமுடி

1.கலிங்க குடி         – 13

2.உலகிப்போடி குடி-11

3.படையாட்சி குடி  -09

4.வேளாளர்            -07

5.ஏனைய குடிகள்  -03 
எனும் அடிப்படையில் அமையும் இதனை

சீர்  பெற்றிலங்குவுயர் வாழிழநகர் மேவு தென்னவன் சென்னி கொங்கன்தீரரென மூவரரசான்டு வருநாளிலே திறமை நலமேவுவரிசை செய் திட்ட மரபெக் காலமும் பூசுரன் நிரலரசன் வணிகருழவர்சிறைகள் பதினெட்டு டனவர்கள் பெருவரிசை தீர்த்துட்ட செய்தியது கேள்பார் பெற்ற பரிதிக்குல கலிங்க மரவினோர் பதின்மூன்று கும்பமும்தேங்கினுயர் பாழை தனிப்பாவாடை மேற்கட்டி தாரை தவில் குழல்வீணை       
                                                                                     (நன்மைக்கும் தீமைக்குமான கும்ப வரிசை கல்வெட்டுப் பாடல்)
இறந்தவரின் உடலை குளிப்பாட்டுதல்         
       இறந்தவரின் உடலை சுத்தம் செய்யும் சடங்காக இது அமையும். ஒரு கட்டில் அல்லது உயரமான ஒரு பலகையில் இறந்தவரை வைத்து சுற்றி துணியினால் கட்டி அல்லது ஏனையோரால் பிடித்து தண்ணீரைக் கொண்டு அவர் மேல் ஊற்றுவர். இறந்தவர் ஆணாக இருப்பின் நாவித சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை அழைத்து அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களால் முகச்சவரம் செய்யும் முறையும் காணப்படுகின்றது.
 
“இறக்கப் போயினும் சிறக்க போக வேண்டும்” எனும் பழமொழியும் இப்பிரதேசத்தில் புழங்கு நிலையில் உள்ளது. (அருள்ராஜசிங்கம், வயது-68)
         
         எனவே கணவனை இழந்த பெண்கள் மூவர் மூன்று குடத்தில்  மேலே இருவர் துணி பிடித்து வர (வெள்ளை படித்தல்) கிணற்றில் நீர் எடுத்து வருவர். இறந்தவர் ஆண் அல்லது பெண் என்பதற்கு அமைவாக தாய் தந்தை கணவன் அல்லது மனைவி பிள்ளைகள் என யாரோ ஒருவர் குளிப்பாட்டும் செயலில் ஈடுபடுவர். பின்னர் அவரது உடலுக்கு வாசனைத் திரவியங்கள் தெளித்து புதிய ஆடைகள் அணிவித்து நெற்றியில் திருநீறு சந்தனம் பூசி வீட்டின் உள்ளே அல்லது வெளியே ஏனையோர் பார்வையிட இறந்தவரின் உடல் வைக்கப்படும். இறந்தவரை சாமுலை பக்கம் தலை வைத்து காலை எதிரே நீட்டி (சாமுலை என்பது தென்மேற்குத் திசையாகும்) தலைப்பகுதியில் தேங்காய் எண்ணெய் விளக்கு வைப்பர்.
பாடை கட்டுதல்
         
      பாடை கட்டுதல் என்பது நுணுக்கமும் அறிவும் கொண்ட செயற்பாடாகும். இறந்தவர்களின் உடலை தூக்கிச் செல்வதற்கான வலிமையாகவும் அதனுள் இறந்தவர்களின் உடலை வைத்து சுமக்க கூடிய வகையில் அளவுடையதாகவும் கட்டுதல் வேண்டும். அத்துடன் விதிமுறைகளுக்கு அமைவாக அதன் முடி மற்றும் அழகியலுடன் கட்டுதல் அவசியம். பாடைகட்டுவதற்கு அதிக பணம் செலவழிப்பதில்லை பெரும்பாலும் இயற்கை உள்ளீடுகளையே அதிகம் பயன்படுத்தப்படுகின்றனர். பாடை கட்டுதலென்பது எல்லோராலும் செய்யக் கூடிய செயற்பாடன்று. அதற்கு அக்கிராமத்தில் அனுபவம் மற்றும் அது சார்ந்த அறிவுள்ளவர்கள் காணப்படுவர். அவர்களே பாடைகட்டும் வேலைப் பாடுகளைச் செய்வர்

மடு வெட்டுவதற்காக ஆட்களை மயானத்திற்கு அனுப்புதல்
         
       இறந்தவரின் உடலினை அடக்கம் செய்யும் நேரத்தினை தீர்மானித்த பின்பு கடமை செய்வதற்கு இரண்டு மணித்தியாலத்திற்கு முன் மூவரை மயானத்துக்கு அனுப்புவர். இவர்கள் அவ்வூரில் மடுவெட்டுவதற்கு பிரபல்யமானவராக இருப்பர். இறந்தவரின் உடலை புதைப்பதற்கு சரியான அளவு கொண்டதாய் வெட்டுதல் வேண்டும். செல்கின்றவர்களிடம் மண்வெட்டி, கத்தி ஆகிய இரண்டு ஆயுதங்களை கொண்டு செல்வர். அதற்கு மேல் கொண்டு செல்ல முடியாது எனும் மரவுண்டு. அத்துடன் மூன்று பேர் மட்டுமே செல்ல முடியும். இங்கு செல்கின்றவர்களுக்கு ஒரு போத்தல் மதுபானம் வழங்கும் முறை இப்பிரதேசத்தில் உள்ளது.

வீட்டில் நடைபெறும் சடங்குகள்
         
      இறந்தவரை அடக்கம் செய்ய கொண்டு செல்வதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு  முன் வீட்டில் செய்யும் நிகழ்வு இதுவாகும். மயானத்திற்கு வீட்டிலுள்ள பெண்கள் செல்ல இயலாது என்பதனாலேயே இக்கடமை வீட்டில் நடைபெறுகிறது. இதில் முதலாவதாக தந்தை அல்லது தாய் இறந்தால் பிள்ளைகளும், பிள்ளைகள் இறந்தால் தந்தையும் இவர்கள் எவரும் இல்லாத நிலையில் அக்குடும்பத்தில் இருக்கும் ஒரு உறவினர் கடமைகளைச் செய்வர். ஆண்களாலேயே முதற்கடமை செய்யப்படும். இருவர் மேலே வெள்ளை பிடிக்க தலையில் மஞ்சள் கலந்த அரிசியினை வட்டி எனும் பாத்திரத்தில் எடுத்து வெள்ளைத் துணியினால் மூடி இறந்தவரின் உடலை எட்டு முறை வலம் வந்து அவரது அருகில் முழங்காலில் பின்புறமாக கையை பின் வைத்து மூன்று தடவை அரிசி மற்றும் தண்ணீரை தெளிப்பர். அதன் பின் கிராமத் தலைவர் குடிகள் சார்ந்து ஒவ்வொரு குடிகளையும் அழைப்பர். குறித்த குடியினை பிரதிபலிக்கும் வகையில் யாரோ ஒருவர் மேற்கூறிய வகையில் கடமையினைச் செய்வர். இறந்தவரின் உடலை சுற்றி வலம்வரும் எண்ணிக்கை பின்வருமாறு அமையும்.
 
உலகிப் போடி குடி – 7 
கலிங்ககுடி – 6 
படையாட்சி குடி – 5 
பணிக்கனார்குடி – 4 
கச்சிலாகுடி – 3 
கோப்பி குடி – 2 
பெத்தான்குடி – 1   (வே. மகேசரெத்தினம் 2015 : 18)
         
       அவற்றை செய்த பின்பு குடும்பத்தின் ஏனைய உறவினர்களால் வாய்க்கரிசி போடப்பட்டு கால் கழுவும் பண்பாடும் காணப்படும். வாய்க்கரிசி மற்றும் தண்ணீர் மூன்று தடவை வாயில் இட்டு காலினையும் கழுவுவர். பின்னர் பட்டினத்தார் பாடல் மற்றும் தேவாரம் பாடி பாடையில் தூக்கி வைக்கப்படும். இறுதியில் பாடையின் நடுவே அமையும் கூராக அமைக்கப்பட்ட கம்பில்  முடி பொருத்தப்படும். அடுத்து வீட்டின் வாயிலை விட்டு வெளியேறும் போது மூன்று தடவை முன் பின் இழுத்து நகர்த்தப்படும் மரபுண்டு. இறந்தவரின் உடலை கொண்டு செல்கின்ற போது நெற்பொரி தூவுதல், சிறு பந்தினை முன் பின் எறிதல் என்பனவும் நடைபெறும். கடமை செய்தவர்கள்  பாடையின் முன் தலையில் நீர் நிரப்பிய கூடத்தில் சிறு விறகு துண்டு ஒன்றினையும் இணைத்து சுமந்து செல்வார். இவையனைத்திற்கும் காரண காரியங்கள் உண்டு.

சந்தி மறித்து ஆடுதல்
         
        பறையிசை கலைஞர்களால் இறந்தவரின் உடலை தூக்கிச் செல்லும்போது பிரதான சந்திகளில் பறை அடித்து சந்தி மறித்து ஆடுவர். இதன் போது வெள்ளை துணி ஒன்றினை விரித்து இருப்பர்  அச்சந்தர்ப்பத்தில் சுற்றி இருப்போர் தங்களால் முடிந்த பணத்தினை இத்துணியில் போடுவர். பாடையினை தூக்கிச் செல்லும்போது கால்ப் பகுதி முன்னாலும் தலைப்பகுதி பின் புறமாகவும் இருக்கும் வகையில் நால்வர் தூக்கிச் செல்வர்.

மயானத்தில் நடைபெறும் கடமைகள்
         
         மயானத்துக்குச் சென்றவுடன் மூன்று தடவை பாடையினை தூக்கி வெட்டிய மடுவினைச் சுற்றி ஓரிடத்தில் வைத்த பின்  உள்ளிருக்கும் இறந்தவரின் உடலை வெளியே எடுத்து  வீட்டிற்குச் சென்று இறந்தவரின் உடலை பார்க்க முடியாதவர்களுக்காக மீண்டும் திறந்து  காண்பிக்கும் நடைமுறையுண்டு. பின்னர் வெட்டிய மடுவில் இறந்தவரின் உடலை வைத்து கொள்ளிக்குடம் ஏந்தி வந்தவரால் மூன்று தடவை மண் மற்றும் நீர் விடப்படும். தொடர்ந்து ஏனையோரால் மண் போடப்படும். மடு முறையாக மூடப்பட்டு நான்கு மூலைகளிலும் நான்கு இளநீர் வைக்கப்படும். பின்னர் தேவாரம் பாடி இறந்தவருக்கு கடமை செய்தவர் கொள்ளிக்குடத்தை தலையில் வைத்து மூன்று தடவை சுற்றி வர அதில் நாவித சமூகத்தைச் சேர்ந்த ஒருவர்  ஒவ்வொரு  சுற்றுக்கும் ஒரு தடவை நீர் நிரப்பிய குடத்தில்  கத்தியினால் வெட்டி விடுவர். அவ்வாறு மூன்று தடவை இது நடைபெற்றதும் குடத்தை கீழே போட்டு பின் பக்கம் பார்க்காமல் முன்னே பார்த்து மயானத்தை விட்டு வெளியேறுவர். இங்கு பறையர் சமூகத்தைச் சேர்ந்த பறையிசைக் கலைஞரால் நிலம் கூறும் நிகழ்வும் நடைபெறும் அவர் பறையில்  இசைத்து “மேலே வானம் சாட்சி கீழே பூமி சாட்சி ஆறடி நீளம் இரண்டடி அகலம் கொண்ட நிலத்தை…..” என்று தொடங்கி நிலத்தை விற்பார். அதன்போது ஒரு இறைசால் என்று பெறுமதியை முன் வைக்க ஏனையோரும் தொடர்ச்சியாக விலையினை வைத்து இறுதியில் ஏழு இறைசால் வரைக்கும் கொண்டு சென்று பின் ஊர்த் தலைவரால் அரிசி, ஒற்றை எண் கொண்ட பணம், வெள்ளைத் துணி என்பன அவருக்கு வழங்கப்படும். இறைசால் என்பது அக்காலத்தில் பயன்படுத்திய பணத்திற்குரிய பெயரை குறிக்கின்றது. இறந்தவரின் உடலை புதைக்கும் மரபு மட்டுமன்றி பிணத்தை எரிக்கும் நடைமுறையும் இப்பிரதேச மக்களிடையே காணப்படுகின்றன. இம்முறை பொருளாதார ரீதியாக வசதி படைத்தோராலேயே செய்யப்படுகின்றன. கடந்த பத்து வருட தகவலின்படி இரண்டு பிணங்களே எரிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.  அவ்வாறாயின் அதற்கென மயானத்தில் வேறு வகையான கிரியை முறைகள் உண்டு இப்பிரதேச மக்களிடையே புதைக்கும் பாரம்பரியமே அதிகம் காணப்படுகின்றது.

மாத்து மாற்றுதல்
         
      இறந்தவரின் உடலை அடக்கம் செய்து விட்டு வரும் வழியில் மாத்து மாற்றும் எனும் பாரம்பரியம் காணப்படும். இதனை ஊர்த்; தலைவர் வழிநடத்திச் செல்வார். சலவைத் தொழிலாளர் சமூகத்திலிருந்து குறித்த மரணச் சடங்கினை வழிநடத்தியவர் உறவினர்கள் இருக்கத்தக்கதாக மாத்திடுவார். இங்கு மன்முனை தேசம், மட்டக்களப்பு அதன் பின்பு ஏனைய கிராமங்களில் பெயர்களை கூறி ஒவ்வொரு துணியாக எடுத்துப் போடுவார் இறுதியில் விதானை, ஊர்ப்போடி, உடையார் ஆகியோருக்கு மாத்து சொல்லப்படும். அவ்வாறு செய்த பின்பு அவருக்கான கொடுப்பனவு ஊர் தலைவரால் வழங்கப்படும். மாத்து மாற்றுதல் என்பது  எட்டாம் நாள் சடங்கு வரைக்கும் வீட்டில் இருக்கின்றவர்கள் அணிவதற்காக  வழங்கப்படுகின்ற உடையை குறிக்கின்றது. அதேபோல் மயானத்தில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்து வீடு செல்கின்ற போது வீட்டின் வளவிற்கு முன் வாசலில் மஞ்சள்  கலந்த நீரை தலையில் தெளித்து கை, கால் கழுவி உள்ளே செல்லும் வழக்கமும் உண்டு. இதனோடு மூன்றாம் நாள் வரைக்கும் இளநீர் வைத்தல், மரணம் நடைபெற்று மூன்றாம் நாள் இரவு பொங்கல் வைத்தல,; எட்டாம் நாள் சடங்கு செய்தல். இதன் போது மயானம் சென்று  மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று என்ற ஒற்றை எண் அடிப்படையில் உறவினர்கள் சென்று பால் ஊற்றி வரும் சடங்கும் காணப்படும். இத்துடன் முப்பத்தியொராம் நாள்ச்; சடங்கும் நடைபெறுகிறது. அதன் போது “மகாளயம்” சடங்கு நடைபெறுவதைப் போன்று இறந்தவருக்கு விருப்பமான படையல்கள் செய்து உறவினர்களை அழைத்து விருந்தளிக்கின்ற ஒரு முறமையும் உண்டு.

மரணச் சடங்கின் வரவும் மாற்றமும்
         
       மரணச் சடங்கு பண்பாட்டு மரபுகள் இப்பிரதேச  மக்களிடையே அதன் அமைப்பாக்க ரீதியில் பலவை மாற்றம் பெற்று இருக்கத்தான் செய்கின்றன. குடி மற்றும் சமஸ்கிரத தாக்கங்கள் அதிகமான மரபுசார் நெறிமுறைகளை மாற்றியுள்ளன. அத்துடன் தற்கால நவீன இலத்திரனியல் தொடர்பாடல் மற்றும் ஏனைய சாதனங்களும் இதற்கு இன்னுமொரு காரணமாய் அமைகின்றது. குறிப்பாக  சாவியளம் சொல்லியின் பணிகள் தற்போதைய சூழலில்  மிகக் குறைவு. இதனை இன்றைய நவீன தொழில்நுட்ப தொடர்பாடல் சாதனங்கள் செய்கின்றன.  மரணம் நிகழ்ந்தவுடன் பிறருக்கு செய்தியை கடத்துவதற்காக வழங்கும் பறையிசை  தற்கால சூழலில் குடும்பங்களின் கௌரவம், அந்தஸ்தினை வெளிப்படுத்துகின்ற முறையினை அவதானிக்க முடியும். பாடை கட்டுதலிலிருந்து அதனோடு இணைந்த அனைத்து ஒழுங்கு விதிகளும் பல மாற்றங்களை  எதிர்கொண்டு தான் இருக்கச் செய்கின்றன. நகர் பிரதேசங்களை அவதானிக்குமிடத்து  உலோக கம்பிகளால் பாடையினை நிரந்தரமாக ஒட்டி இழுத்துச் செல்லும் தன்மைகளையும் அவதானிக்கவும் முடியும். பலர் மோட்டார் வாகனங்களிலும் இறந்தவரின் உடலை கொண்டு செல்கின்றனர். இவை போன்று மாத்து மாற்றுதல், கடமைகள் செய்தல் என்ற பல்வேறு நிலையில் மரபுகள் மாற்றம் பெற்றிருக்கின்றன. இதற்கு சாதிசார் பாகுபடுத்தல், இயற்கை உள்ளீடுகளை பெறுவதிலுள்ள தடைகள், இது பற்றிய அறிவு நுணுக்கம் தெரிந்தோர் இன்மை, நவீன இயந்திரங்களின் வருகை என பல காரணங்களை மரபின் மாற்றத்திற்குரிய காரணங்களாக அடையாளப் படுத்த முடியும்.

“அண்மைக்காலத்தில்  உலகமயமாகி வரும் அறிவு “பொருளாதார அறிவு” என அழைக்கப்படுகிறது. அது தொழில்நுட்ப அறிவு என்றும் அறியப்படுகிறது. உயர் ஆற்றல் கொண்ட நிர்வாக அறிவு, மேலாண்மை அறிவு என்றும் மதிக்கப்படுகிறது. அது எந்திர அறிவாகவும், பொறியியல் அறிவாகவும், மின்னறிவாகவும் உள்ளது. இவையெல்லாம் அந்த அறிவின் சிறப்புகள் ஆகும். ஆயின் அது சமூக அறிவாக இல்லை மானுட அறிவாக இல்லை சமூக நீதி, அறம், அழகியல், பண்பாடு ஆகியவை இவ்வாறு இடம்பெறுவதில்லை. அறிவு இன்றைய உலகமயமாக்கலில் எத்துறை வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறதோ அதேவேகத்தில் அதன் சமூக பண்பை இழந்து வருகிறது.” (நா முத்துமோகன் 2017 6)
         
      மரணச்  சடங்கின் ஒழுங்கமைப்பென்பது முற்போக்கானது அல்லது பிற்போக்கானது என்பதை தாண்டி ஒரு சமூகம் இச்சடங்கு நடைமுறைகளை எவ்வாறு அதன் அமைப்பாக்கத்தில் இறுக்கமாக கொண்டுள்ளது என்பதனை புரிதல் அவசியமாகின்து.

மரணச்  சடங்கில் சமூக பங்களிப்பு
         
        ஒரு சமூகம் தமது அறிவு, திறன், நுட்பம், மரபு, பண்பாடு, சமூக ஒருங்கிணைவு என அனைத்தையும் பயன்படுத்தும் முறை மரணச்சடங்கில் காணப்படுகிறது. இறந்தவரின் வசதி வாய்ப்பு கௌரவம் தாண்டி இறுதிச் சடங்கில் சமூகம் கலந்து கொண்டு தமது பங்களிப்பை ஏதோ ஒரு வகையில் செய்கின்ற தன்மையினை அவதானிக்க முடியும். சமூகம் கூட்டாக இணைதல், குடும்பத்தின் துயரில் பங்கு கொள்ளுதல், பந்தல் அமைத்துக் கொடுத்தல், சாவியளம் சொல்லுதல், பாடை கட்டுதல், கூரை முடி வைத்தல், கடமை செய்தல், தேவாரம் பாடுதல், வைகுந்தம்மானை பாடுதல், உணவு சமைத்துக் கொடுத்தல், மயானம் வரை சென்று இறுதிச் சடங்குகளில் பங்கு கொள்ளல்,  பொருளாதாரத்தில் கீழ் நிலையில் உள்ளவர்களாக இருப்பின் அவர்களுக்கு முடிந்த பணம் மற்றும் ஏனைய உதவிகளை வழங்குதல், இறந்தவர் சமூக முன்னேற்றங்களில் ஈடுபட்டவரெனின் அவரது பெருமைகளை கூறி இரங்கல் செய்தி ஆற்றுதல் என்ற பல்வேறு பங்களிப்பினை ஓர் சமூக அமைப்பாக்கத்தில் வலுவாக மரணச்சடங்கு கொண்டுள்ளது. இவை இன்றைய சூழலில் தன்னிறைவு மற்றும் சுயசார்வான இருப்பியலை பரவலாக்கம் செய்யவும் நீடித்து நிலைத்து நிற்கும் சமூக அபிவிருத்தியை பேணவும் ஓர் ஆரோக்கியமான சமூக கட்டமைப்பை கொண்டு செல்ல வெகுஜனப்படுத்தப்பட வேண்டியவையாகும். இறந்தவரின் குடும்ப உறவுகளின் மனரீதியான உணர்வுகள் விவரிக்க முடியாதவை. இந்நிலையினை புரிந்து சமூக அமைப்பாக்கம் உளவியல் ஆற்றுப் படுத்தலை அல்லது குணப்படுத்தலை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குகிறது. குறிப்பாக உளவியல் நோக்கில் அணுக சமூக கட்டமைப்பு சில பொறிமுறைகளைக் கொண்டுள்ளது. குறித்த குடும்பத்தின் சகல நிகழ்வுகளிலும் பங்கெடுப்பதன் மூலம் ஒப்பாரி, வைத்தல் கட்டி அணைத்து அழுதல், இறந்தவர்களின் பெருமைகளை இரங்கல் செய்தியாக தெரிவித்தல், இரவு நேரங்களில் கூட்டாக வந்து தங்கி நின்று பொழுதினைக் கழித்தல், அம்மானை பாடுதல் என அனைத்திலும் உளவியல் ரீதியாக துக்கங்களில் பங்குகொண்டு ஆற்றுப்படுத்துகின்ற முறையினை அறியலாம்.

முடிவு மற்றும் கலந்துரையாடல்
         
       மரணியம் என்பது தமிழரின் வாழ்வியல் சிந்தனையின் அடித்தளம். அது மரணத்தைப் பற்றிய அச்சத்திலிருந்து அல்ல, வாழ்வை முழுமையாக உணர்ந்த ஒரு தத்துவநிலைமையிலிருந்து உருவானது. உயிரின் நிலையற்ற தன்மையை உணர்ந்து, ஒவ்வொரு நாளையும் நெறிப்படி வாழ்வது என்ற மனித நேயப் பார்வை மரணியத்தின் மையக் கருத்தாகும். இருந்தும் சமகால மரணச் சடங்கு மரபுகள் குடும்பம், அந்தஸ்த்து, கௌரவம் என பொருளாதார ரீதியாக மாற்றம் பெற்றுள்ளது. சடங்கின் பின் வணிகமும், பெருமுதலாளித்துவமும் மறைந்துள்ளது. தமிழர் பண்பாட்டில் மரணச்சடங்கு: மரபும் சமூக ஊடாட்டமும் எனும் தலைப்பிலான இவ்வாய்வு மரணத்தின் நிலையில் நின்று ஓர் சமூகம் தன்னை வலுப்படுத்தவும், பலப்படுத்தவும் சில பொறிமுறைகளைக் கொண்டிருக்கிறது. சடங்கு ஒன்றினை செய்வதன் ஊடாக அச்சமுகம் ஓர் அமைப்பிற்குள் அல்லது இறுக்கத்திற்குள் இருக்கும் அதேவேளை குறித்த சடங்கினைச் செய்ய வேண்டுமெனில் அச் சமூகம் சிறந்த அமைப்பாக்கம் அல்லது இறுக்கத்திற்குள் இருக்க வேண்டும். இவை சுழற்சி முறையில் நடைபெறும் இதனை இவ்வாறு காட்டலாம்.

சமூக அமைப்பாக்கம் – சடங்கு – சமூக வலுவாக்கம்       
      பட்டிப்பளை  பிரதேசத்திலுள்ள மரணச் சடங்கு பண்பாட்டு முறைமை ஒரு சமூகத்தை அமைப்பாக்கம் செய்வதில் பங்குவகிக்கின்றது என்பதனை சமூகப் பங்களிப்பு மற்றும் மரணச் சடங்கில் காணப்படும் செயலொழுங்கு கட்டமைப்புகள் மூலம் நிரூபிக்க முடியும். அத்துடன் மரணச் சடங்கு முறையிலுள்ள பிற்போக்கு அல்லது சமகாலத்திற்கு எதிரானதாக கருதும் சில விடயங்களை உரையாடலுக்கு உட்படுத்தல் அவசியமானது. குறிப்பாக குடிமரபு ரீதியாகவுள்ள உயர்வு தாழ்வு, கூட்டாக இயங்குதலில் அல்லது ஒரு பொது வெளியில் சாதிரீதியாக குறித்த ஒர் சமூகத்தை கீழானவர் எனக் காட்டுவது, குறிப்பாக கூறின்  கூரை முடி வைத்தல் மற்றும் சுற்றி வந்து கடமை செய்யும்போது காட்டப்படும் பாரபட்சம். அச்சந்தர்ப்பத்தில் அவ்வாறான தரப்பினரின் மனநிலை சார் உணர்வுகள் போன்றவையும், விளிம்பு நிலை சமூகங்களான பறையர், நாவிதர், சலவை தொழில் செய்வோர் ஆகியோர் கவனத்தில் கொள்ளும் விதம், மேலும் இச்சடங்கில் பெண்கள் வெறுமனே அழுகின்றவர்களாகவும் ஊதியம் செய்கின்றவர்களாகவும் கட்டமைத்துள்ள ஆணாதிக்க  பார்வை ஆழமாக பார்க்கப்பட வேண்டியவை. சமஸ்கிருத ஊடுருவல், காலனிய கருத்தாக்கம் மற்றும் உலகமயமாக்கம் போன்றவையின் விளைவு தற்கால சடங்கு முறையில் அதிக தாக்கம் காணப்படினும் இவற்றின் அதிகாரத்துவ பரவலாக்கத்திற்கு முன்னிருந்த தொன்மையான மரணச் சடங்கின் செயலொழுங்கு என்ன? அதனை மாற்றியதில் அல்லது மாற்றுவதன் தேவையின் தொடர் ஆய்வும் உரையாடலும் அவசியமாகின்றது. இன்றைய நவீன சமுதாயத்தில் மரணியத்தின் செய்தி – பொருளாதார வேகத்தின் நடுவே ஒழுக்க நெறி மறையக் கூடாது என்பதே. அது மனிதரை வாழ்வின் பொருள் உணர்த்தும் தத்துவமாக, “மனித வாழ்வின் சமநிலைத் தத்துவம்” என்ற புதிய பரிணாமத்தை நோக்கி வளர்கிறது. அதனால், மரணியம் என்பது கடந்தகாலத்தின் மரபு அல்ல அது காலம் கடந்த மனித வாழ்வின் நிலையான நெறியியலாகும்.

உசாத்துணை
1.முத்துமோகன். ந. (2017), அறிவின் உலகமயக்காலும் அறிவுச் சமூக பண்பாட்டில் வேர்கொள்ளல், மொழிதல், தொகு, 4, 1-13.

2.பக்தவக்சலபாரதி, ப. (2002), தமிழர் மானிடவியல். திருச்சி அடையாளம், தமிழ்நாடு.

3.பெர்னாட்சா, ச. முத்துகமரன், பி. (2016), இந்திய கலை வரலாறு, சாமிநாதர் நூல்நிலையம்.

4.முத்துமோகன். ந. (2014), பின்னை நவீனத்துவமும் மார்க்சியமும். செஞ்சுரி வுக்கவுஸ்.

5.விவேகானந்தராசா, த,(2014), உறவுகளின் பாலமாய் இளவு சொல்லிகள், மறுகா.

6.புரித்திகா, இரா, முனைவர், (09,இல 5, 2021), புறநானுற்றில் இறப்புச் சடங்குகள், அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழ்.

7.சுப்பிரமணியன், க, நா. (2005). தமிழர் பண்பாட்டு வரலாறு. சென்னை, நியூ செஞ்சுரி புத்தக நிலையம்.

8.Radhakrishnan, S. (1923/1927). Indian Philosophy (Vol. 1–2). OUP

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

இ.குகநாதன்

முதுதத்துவமாணி ஆய்வாளர்,

ஆசிரியர் SLTS 2-II,  
மட்டக்களப்பு,
இலங்கை


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here