An Agricultural Thoughts in Inna Narpathu and Iniyavai Narpathu|M.Muvin

Abstract
         
         Nature has been the primordial companion of humankind since ancient times. Without the Nature forms the foundation of human life, and the central idea of Tamil thought is that humans cannot survive on this earth without the support and guidance of nature. The attachment that humans develop toward nature leads them to live in harmony with it, and this unity itself becomes the basic philosophy of agricultural life. Human livelihood is created through the integration of natural elements such as rain, land, season, and labour. In this context, the universal classic Thirukkural explains the relationship between nature and human life through chapters like “Invocation to God” and “The Greatness of Rain.” Similarly, the didactic texts of the Pathinenkilkanakku corpus, namely Inna Narpathu and Iniyavai Narpathu, indirectly record nature-oriented living while presenting the dual states of pleasure and pain in human life. Iniyavai Narpathu portrays harmonious living with nature, productive labour, and beneficial actions as sources of joy, thereby reflecting the prosperity of an agrarian society, whereas Inna Narpathu points to natural variations, lack of labour, and climatic hardships as sources of suffering, representing the challenges of agricultural life. Therefore, this study aims to analyse the relationship between nature and human life from the perspective of agricultural thought and to demonstrate that a nature-centred way of life, comprising both pleasure and hardship, constituted a stable agricultural philosophy in Tamil culture.

Keywords: Nature, Pleasure, Pain, Human, Society, Ecology.


“இன்னா நாற்பது இனியவை நாற்பதில் வேளாண்மைச் சிந்தனைகள்”

ஆய்வுச் சுருக்கம்        
        இயற்கை மனித வாழ்வின் அடித்தளமாக விளங்குகிறது. இயற்கையின் துணை, வழிகாட்டுதல் இன்றி மனிதன் வாழ இயலாது என்பதே இயற்கை மையச் சிந்தனையின் கருத்தாகும். இயற்கையின் மீது மனிதனுக்கு உருவாகும் பற்று, அவனை இயற்கையோடு ஒன்றிப்பட்டு வாழும் நிலைக்கு இட்டுச் செல்கிறது. இவ்வொற்றுமைவே வேளாண்மை வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவமாகும். மழை, நிலம், காலம், உழைப்பு ஆகிய இயற்கைத் தன்மைகளின் ஒருங்கிணைப்பால் மனிதன் வாழ்வாதாரத்தை உருவாக்குகின்றான். இவ்வகையில், உலகப் பொதுமறையாம் திருக்குறள் இயற்கை–மனிதன் தொடர்பை ‘கடவுள் வாழ்த்து’, ‘வான்சிறப்பு’ ஆகிய அதிகாரங்கள் வழியாக விளக்குகின்றது. இதேபோன்று பதினெண்கீழ்க்கணக்கு அறநூல்களான இன்னா நாற்பது மற்றும் இனியவை நாற்பது ஆகியவை இன்பமும் துன்பமும் என மனித வாழ்க்கையின் இரு நிலைகளை எடுத்துரைக்கும் போது, இயற்கை சார்ந்த வாழ்வியலை மறைமுகமாகப் பதிவு செய்கின்றன. இனியவை நாற்பதில் இயற்கையோடு ஒத்துழைத்து உழைத்து வாழ்தல், பயன்தரும் செயற்பாடு போன்றவை இன்பமாகக் கூறப்படுவது வேளாண்மைச் சமூகத்தின் வளமையை உணர்த்துகின்றது; இன்னா நாற்பதில் இயற்கை மாறுபாடுகள், உழைப்பின்மை, காலநிலைப் பாதிப்புகள் போன்றவை துன்பநிலைகளாக சுட்டப்படுவது வேளாண் வாழ்க்கையின் சவால்களை பிரதிபலிக்கின்றது. ஆகவே, இவ்வாய்வு இயற்கை–மனிதன் உறவினை வேளாண்மைச் சிந்தனைகளின் அடிப்படையில் ஆராய்ந்து, இன்பமும் துன்பமும் கலந்த இயற்கை வாழ்வியலே தமிழர் பண்பாட்டில் நிலையான வேளாண்மைத் தத்துவமாக அமைந்துள்ளது என்பதை விளக்குவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

குறிச்சொற்கள்: இயற்கை, இன்பம், துன்பம், மனிதன், சமூகம், சூழலியல்
முன்னுரை 
  
இயற்கை மனிதனை பக்குவப்படுத்தும் ஓர் அரிய கொடை. வாழ்க்கையை இயற்கையின் பார்வையில் அணுகுபவர்களால், இயற்கையை முழுதாக ரசிக்க முடியும். இதனைப் பற்றிய வெ இறையன்பு அவர்களின் கூற்று பின்வருமாறு,

“ போராட்டம் வாழ்க்கை என எண்ணுபவர்களால் வாழ்வில் வீசுகிற தென்றலையும்,
மழைச்சாரலையும், கலைப்பொருட்களையும் ரசிக்க முடியாது“
 ( இறையன்பு வெ, 2019 )
         
       எனும் கூற்றிலிருந்து இயற்கையும், வாழ்க்கையும் இணைந்து இருந்தால் அந்த வாழ்வு இன்பத்தைத் தரும் என்பதை அறிய முடிகிறது. அறங்களைப் போதிப்பது அற நூல்களின் இயல்பு. அவ்வகையில் துன்பம் எவையென்று சொல்லும் இன்னா நாற்பதிலும், இன்பம் எவையென உரைக்கும் இனியவை நாற்பதிலும் வேளாண்மையைப்  பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. அவற்றைக் கொண்டு, இருநூல்களும், இயற்கையை  அறம் வலியுறுத்தும் நோக்கில், ஆனால் இன்பம் மற்றும் துன்பம் என்ற எதிரெதிர் கோணத்தில் எவ்வாறு பதிவு செய்துள்ளன என்பது இவ்வாய்வில் நோக்கப்பட இருக்கிறது.

வேளாண்மையின் இன்பமும்,துன்பமும்
       விவசாயம் என்பது தமிழர் தம் தொழிலாகக் காலம் காலமாக இருந்து வருகிறது. மருத நிலம் விவசாயத்திற்கான பண்படுத்தபட்ட குடி நிலையாகவே இருந்துள்ளது என்பதற்கு சான்றுகள் சங்க இலக்கியங்களில் இருந்து கிடைக்கின்றன. நிலத்தைப் பண்படுத்தி வேளாண்மை செய்வதில் மனிதன் மட்டுமல்ல, மண்புழு போன்ற உயிரினங்களும்  பயன்படுகின்றன. உணவுக்கு உயிர்மை ஆதாரம் நிலம் என்பதை,

“எல்லா உயிரினங்களுக்கும் நிலைத்த தாய்மடி நிலம் அல்லவா?
அனைத்துயிர்க்கும் முன்தோன்றிய மூத்த பொருளும் நிலம் அல்லவா ? ”
 ( அரிபாபு பா.ச., 2014 )
    இக்கூற்று நிறுவுகிறது. அற இலக்கியங்களும் விவசாயம் பற்றியும், அது பற்றிய பதிவுகளையும் கொண்டிருக்கின்றன. விவசாயத்தைக் காக்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டிருக்கிறது. ஆனால் சங்க காலம் விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டிய அப்படியொரு பரிதாபகரமான  நிலையில் இருந்ததில்லை. விவசாயத்தை வாழ்வியலோடு இணைத்து செம்மையாக அணுக வேண்டிய தேவை தான் இருந்தது. சங்ககாலத்தின் பின் எழுந்த அற நூல்களாகத் திகழும் இன்னா நாற்பது மற்றும் இனியவை நாற்பதில் வேளாண்மை பற்றிய பதிவுகள் இருக்கின்றன.

“ ஏருடையான் வேளாண்மை தான் இனிது“ ( வேங்கடசாமி நாட்டார் ந மு, 2011 )
         
    எனும் இனியவை நாற்பது நூலில் இடம்பெற்றுள்ள இவ்வரியானது, சொந்தமாக ஏர் வைத்து உழுபவனின் விவசாயம் காண்பதற்கு இனிது என்கிறது.

“ எருதில் உழவர்க்கு போகீரம் இன்னா“ ( வேங்கடசாமி நாட்டார் ந மு, 2011 )
         
       எனும் இன்னா நாற்பதில் இடம்பெற்றுள்ள இவ்வரியானது, விதைத்த நெல்லுக்கு உரமிடுதல் பொருட்டு எரு ( உரம் ) தேவைப்படும். அத்தகைய உரமில்லாத உழவர்களுக்கு, மண்ணின் ஈரம் போய்விடுதல் துன்பமாகும் என்கிறது. உரம்போட மண்ணில் ஈரமிருத்தல் நல்லது. நிலத்தில் ஈரம் காய்ந்திருந்தால் உரமற்ற உழவர்களுக்குத் துன்பத்தைத் தரும்.
பாதுகாப்பு இல்லாமல் இருக்கும், அதேசமயம் அறுவடைக்குத் தயாராக இருக்கும் கரும்பினைக் காத்தல் கடினம் என்பதை

“ சிறையில் கரும்பினைக் காத்தோம்பல் இன்னா“  ( வேங்கடசாமி நாட்டார் ந மு, 2011 )
         
       எனும் இவ்வரி உணர்த்துகிறது. கொத்துக் கொத்தாய்ப் பழுத்து பறிக்க ஆளின்றி மாம்பழங்கள் நைந்து கீழே விழுந்து கிடத்தல் துன்பம் என்பதை

“ துணர் தூங்கும் மாவின் படுபழம் இன்னா“  ( வேங்கடசாமி நாட்டார் ந மு, 2011 )
         
      எனும் இப்பாடலின் வரி உணர்த்துகிறது. மேலே குறிப்பிட்டப்பட்டுள்ள வேளாண்மைச் சிந்தனைகள், அதாவது, உழவு, எருவிடுதல், விளைச்சலைப் பாதுகாத்தல் சிறந்தது என்ற பொருண்மையில் திருக்குறளில் உழவு எனும் அதிகாரத்தில் ஒரு குறட்பா அமைந்துள்ளது.

“ ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்  நீரினும் நன்றதன் காப்பு“ ( ஹெலினா தே, 2016 )
         
        எனும் குறளில், வயலில் ஏர் ஓட்டி உழுவது நன்று என்றும், அவ்வாறு உழுவதைக் காட்டிலும் உரமிடுவது சிறந்தது என்றும் களை எடுத்த பின் நீர் பாய்ச்சுதலைக் காட்டிலும், நோய் மற்றும் பிற விலங்குகளிடம் இருந்து காத்தல் சிறப்பு என்கிறது.

வேளாண்மைக்கு ஆதாரமாகும் நீர்
         
     நிரைப் போன்ற எளிமையானதும் ஒன்றுமில்லை. நீரைப் போன்று அத்தியாவசியமான ஒன்றுமில்லை. எந்த உயிருக்கும் நீரும், நீர் சார்ந்த தேவைகளும் இருந்து கொண்டே இருக்கின்றன. இதைத் தான் வள்ளுவர்,

“ நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்றி அமையாது ஒழுக்கு“ ( ஹெலினா தே, 2016 )
         
         என்று உணர்த்தியிருக்கிறார். மேலும் நீர் தமிழர்களின் வாழ்வில் மிகப் புனிதமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் அடையாளமாக இன்றும், எந்தக் கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றாலும் கும்பக்கலசத்திற்கு நீரால் பூசைகள் நடத்தப்பட்டு, பின்னர் தெய்வங்கள் உறைவதாக நம்பப்படும், புனித நதிகளில் அல்லது நீர்நிலைகளில்  இருந்து கொண்டு வரப்பட்ட நீர் பக்தர்களுக்குத் தெளிக்கப்படுகிறது. அதாவது  நீரின் மூலமாக தெய்வசக்தி கடத்தப்படுகிறது என்பதனை,

“ தெய்வங்களின் இடப்பெயர்ச்சிக்கு நீர் ஓர் ஊடகமாக அமைகின்றது என்பதும் ஒரு நம்பிக்கையாகும் ”
                                                                                                                                                                  ( பரமசிவன் தொ, 2022 )
         
     எனும் கருத்து உறுதிசெய்கிறது. இயற்கையில் நீர் அழகு, அதை தருமத்துடன் காத்தலும் வேண்டும் என்ற பொருளில் இனியவை நாற்பது ,

“ காவொடு அறக்குளம் தொட்டல் மிகஇனிதே“ (வேங்கடசாமி நாட்டார் ந மு, 2011 )
         
      என்கிறது. இவ்வரியானது சோலைகளை வளர்த்தல், அமைத்தல் இனிது அது அறம் என்று கற்பிப்பதோடு, தருமத்திற்காகக் குளம் வெட்டுதல் மிக இனிது என்கிறது. இவ்வரியில் வெறுமனே குளம் வெட்டுதல் என்று கூறியிருந்தால் அது வேளாண்மைக்குப் பயன்படும் குளம் என்று கருதுவதற்கு இடம் உண்டு. அறக்குளம் என்ற சொற்பயன்பாடு, வேளாண்மை முதல் விலங்குகள் நீர் அருந்துதல் வரை எந்த தருமத்திற்கும் பயன்படுத்தும் என்பதைக் குறிக்கிறது.
வறண்டு, நீரின்மையால் வாடிக் கொண்டிருக்கும் பயிருக்கு வான் மழை பொழிதல் இனிது என்ற பொருளில்,

“ வறனுழக்கும் பைங்கூழ்க்கு வான்சோர்தல் இனிதே“ ( வேங்கடசாமி நாட்டார் ந மு, 2011 )
         
         எனும் பாடல் இனியவை நாற்பதில் இடம்பெற்றுள்ளது. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்பது வள்ளலாரின் உச்சபட்ச உயிர்நேயம். பயிரின் வாட்டத்தை மட்டுமல்ல, எந்த உயிரின் வாட்டத்தையும் நீரினால் மட்டுமே போக்க முடியும் என்பது நீரின் குறைந்தபட்ச எதார்த்தம்.
இயற்கையில் நீர் இன்பத்தைத் தருவது எனும் நோக்கில்,

“ கான்யாற்றடைகரை ஊர் இனிது“  ( வேங்கடசாமி நாட்டார் ந மு, 2011 )
         
     இப்பாடல் வரி, காட்டில் ஓடும் ஆற்றின் கரையின்கண் உள்ள ஊர் இனிது என்கிறது. ஆற்றில் நீர் ஓடிக்கொண்டிருக்கும், அதன் கரையில் ஊர் இருத்தல் காண்பதற்கு இனிது என்கிறது. கரையில் உள்ள ஊர் இனியதாக இருப்பதற்குக் காரணம் ஓடும்  ஆறு என்பதில் ஐயமில்லை.
காட்டில் ஓடும் ஆற்றைக் கொண்டு, இன்னா நாற்பது எனும் நூல் ஒரு இடத்தில் அறம் வலியுறுத்தியுள்ளது. அவ்வரி பின்வருமாறு,

…………………………………………… இன்னாகான்யாறிடையிட்ட ஊர்“  ( வேங்கடசாமி நாட்டார் ந மு, 2011 )
         
      இப்பாடலானது, காட்டாற்றின் இடையில் உள்ள ஊர் இனிதல்ல, இன்னா என்கிறது. ஏனெனில், எப்போது வேண்டுமானால் வெள்ளம் போன்ற இயற்கை அபாயங்கள் வரலாம். எனவே, காட்டாற்றின் இடையே ஊர் இருத்தல் துன்பம் என்று கூறுகிறது. ஊரானது ஆற்றின் கரையில் இருக்கும்போது அது இன்பமென்றும், இதே நீரின் இடையில் ஊர் இருக்கும்போது அது துன்பம் என்கிறது. இது  சங்க காலத்தில் இருந்த நிலை அல்ல. இன்றும் நீர் சார்ந்த தேவைக்கான சூழலில் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருப்பதற்கு, சான்றாக பின்வரும் கூற்றினைக் கூறலாம்.

“ இன்று சுமார்300 ஆறுகள் நாடுகளின் தேசிய எல்லைகளைக் கடந்து பாய்ந்து கொண்டிருக்கின்றன. உலக மக்கள் தொகையில் 40 விழுக்காட்டினர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகள் கைநனைக்கும் ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலேயே வாழ்கின்றனர். பல்வேறு மொழி, பண்பாட்டுப் பாரம்ரியங்களை ஒருங்கிணைத்துப் பாயும் இந்த நீர் ஆதாரங்களினுள்ளே போர் அபாயத்தையும் தாண்டி அமைதிக்கும் ஒத்துழைப்புக்குமான மெல்லிய இழையோடிக் கொண்டிருப்பதையும் மறுப்பதற்கில்லை. ( ஐங்கரநேசன் பொ, 2010 )
         
        மேற்குறிப்பிடப்பட்டுள்ள கூற்றானது, நீர் மிக அவசியத் தேவை என்பதால், போரின் தூண்டுதலுக்கும், இதே நீரின் அவசியத்தன்மை கருதி உளவியல் ரீதியான சிந்தனையில் அமைதிக்கான காரணமாகவும் அமைகிறது என்பதை நிறுவுகிறது.

“ நெடுநீர் புணையின்றி நீந்துதல் இன்னா“ ( வேங்கடசாமி நாட்டார் ந மு, 2011 )
         
          இவ்வரியானது, நீச்சல் தெரியாமல், நெடிய நீரை, கடல் நீரையோ அல்லது ஆற்று நீரையோ படகின் துணையின்றி நீந்துதல் துன்பத்தைத் தரும். இயற்கையின் சூழ்நிலைகள் எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்ற அறிவுறுத்தல் நிலையில் நீரைக் கடக்க, படகு  தேவை என்பதை உணர்த்துகிறது.
குளம், குட்டை போன்ற நீர் நிலைகளில் ஏறுவதற்கும், இறங்குவதற்குமான வழி துறை, துறை தான் ஆபத்தில் தப்பிக்க வழி, அத்தகைய துறையை அறியாதவன் நீரினுள் இறங்கக் கூடாது என்ற சிந்தனையை

“ துறையறியான் நீரிழிந்து போகுதல் இன்னா“ ( வேங்கடசாமி நாட்டார் ந மு, 2011 )

     எனும் இன்னா நாற்பதின் வரி உணர்த்துகிறது.

முடிவுரை
🔔விவசாயம்இனிமைதான் என்றாலும், அதில் காலங்காலமாக துன்பமும் உள்ளது என்பது இயற்கையைப் பற்றிய புரிதலை மனிதனுக்குப் புகுத்த அற இலக்கியங்களான இன்னா நாற்பது இனியவை நாற்பது முற்பட்டுள்ளன என்பது புலப்படுகிறது.

🔔வேளாண்மைக்கு மட்டுமின்றி, தருமத்திற்காக குளங்கள் வெட்டுதல் நன்று என்ற உன்னத அறத்தை இனியவை நாற்பது பதிவு செய்துள்ளது.

🔔 மழை பருவம் தவறாது பெய்தால், அது இன்பத்தைத் தருவதாகவும், மழை பொய்த்துப் போனால் உலகத்து மக்கட்கெல்லாம் துன்பம் என்ற செய்தியை இன்னா நாற்பது உணர்த்தியுள்ளது

🔔 இயற்கையை புரிந்து கொண்ட மனிதன், அதோடு முரண்பட்டு எதிரான செயல்களில் ஈடுபடமாட்டான் என்ற புரிதலையும், அதே சமயம் இயற்கைக்கு எதிராக செயல்படக்கூடாது என்ற இயற்கை சார்ந்த அறங்களையும் இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்ற அறநூல்கள் வலியுறுத்துகின்றன

துணைநூற்பட்டியல்
1.அரிபாபு பா.ச., 2014, திணைமரபும் நவீனமும், கருத்துப்பட்டறை,. மதுரை, தமிழ்நாடு, இந்தியா

2.இறையன்பு வெ, 2019, வாழ்க்கை, விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா

3.ஐங்கரநேசன் பொ, 2010,  ஏழாவது ஊழி, சாளரம் வெளியீடு, சென்னை, தமிழ்நாடு, இந்தியா

4.பரமசிவன் தொ, 2022, அறியப்படாத தமிழகம், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், தமிழ்நாடு, இந்தியா

5.வேங்கடசாமி ந மு, 2011, இன்னா நாற்பது இனியவை நாற்பது மூ உ, சாரதி பதிப்பகம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா

6.ஹெலினா தே, 2016, திருக்குறள் புதிய உரை, விதை வெளியீடு, ஈரோடு, தமிழ்நாடு, இந்தியா

References
1.Aingaranesan, Po. (2010). Seventh Epoch (Ezhavathu Oozhi). Saalaram Publications, Chennai, Tamil Nadu, India.

2.Aribabu, P. S. (2014). Thinai Tradition and Modernity (Thinai Marabum Navinamum). Karuthupattarai, Madurai, Tamil Nadu, India.

3.Helena, De. (2016). Thirukkural – New Commentary. Vidhai Publications, Erode, Tamil Nadu, India.

4.Iraiyanbu, V. (2019). Life (Vazhkai). Vijaya Publications, Coimbatore, Tamil Nadu, India.

5.Paramasivan, Tho. (2022). Unknown Tamilakam (Ariyappadatha Thamizhagam). Kalachuvadu Publications, Nagercoil, Tamil Nadu, India.

6.Venkatasamy, N. Mu. (2011). Inna Narpathu & Iniyavai Narpathu – Commentary (Moolamum Uraiyum). Sarathi Publications, Chennai, Tamil Nadu, India.

ஆய்வாளர்
மு.முவின்,
Iniyavaikatral_Article_Publishedமுனைவர் பட்ட ஆய்வாளர்,

பதிவெண்-B1/TAM23PDEC0214/2023

தமிழ்த்துறை,

பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோவை, தமிழ்நாடு,

ஆய்வு நெறியாளர்
முனைவர் இரா.பரிமளம்,
உதவிப்பேராசிரியர்,

தமிழ்த் துறை,

பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை, தமிழ்நாடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here