Alaraal Arilakum Varalattruch Seithikal|Geetha T

அலரால் அறியலாகும் வரலாற்றுச் செய்திகள்
Abstract
          Sangam literature serves as a treasure trove of knowledge about the history of the Tamil people. Sangam literature is categorized into two themes: Akam (internal/personal) and Puram (external/public). The Akam works of Sangam literature effectively illustrate the pre-marital and marital customs of the Tamil people. The fact that the characters in these works—the hero, heroine, confidante, mother, foster mother, and friend—are referred to without using their proper names reflects the cultural traditions of our ancient Tamils. The hero and heroine have to navigate through several stages in society during their clandestine and married lives. One such stage is the emergence of gossip. Gossip arises when the clandestine relationship of the hero and heroine becomes public knowledge, and also when the hero is involved in extramarital affairs during their married life, and this becomes known to the community. Historical information is also embedded within such instances of gossip. The objective of this article is to bring this information to light.


“அலரால் அறியலாகும் வரலாற்றுச் செய்திகள்”

முன்னுரை
         
         வரைவு (திருமணம்) கடாஅதலின் (வலியுறுத்தல்) பொருட்டே அலர் தோன்றுகிறது. சங்க இலக்கியத்தில் களவு மணம் தவறாகக் கொள்ளப்படவில்லை. பெண்கள் தங்களுக்கு ஏற்ற தலைவனைத் தாமாகவே தேடிக் கொள்வதும், களவு மணம் புரிவதும், உடன்போக்கில் ஈடுபடுவதும் சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே இருந்துள்ளது. ஆயினும் தலைவன், தலைவி களவு ஒழுக்கத்தினை அறிந்த ஊர்ப் பெண்டிர் அவர்கள் உறவைப் பற்றித் தமக்குள் பேசிக்கொள்ளும் நிலையும் இருந்துள்ளது. இதன் காரணம் என்னவென்று ஆராய்ந்தால் அது தலைவன், தலைவி, களவு வாழ்வு கற்பு வாழ்வாக மலரவே துணையாக இருந்துள்ளது என்பது விளங்கும். ஆணின் மனம் என்றும் களவு வாழ்வினையே நீட்டிக்க விரும்பும். ஏனெனில் களவு காலத்தில் எந்தவித சுமையும் இன்றித் தலைவியுடன் கூடியிருக்கும் இன்பத்தையே தலைவனின் மனம் பெரிதாக எண்ணும். ஆனால் தலைவி மனமோ தனக்குச் சமுதாயத்தில் மனைவி என்னும் தகுதி கிடைப்பதனையே பெரியதாக எண்ணும். நேரடியாகத் தலைவனிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படிக் கூறுவது அவன் மேல் நம்பிக்கை இல்லாத நிலையைச் சுட்டுவதாக அமையும். ஆனால் தலைவியைப் பற்றிப் பிறர் தவறாகக் கூறினால் அதனைத் தலைவனது மனம் ஏற்றுக்கொள்ளாது. ஆகவே ‘‘அலர்” தோன்றியதாகக் கூறி மிகுதியும் அக இலக்கியத்தில் வரைவு கடாஅதல் நிகழ்கின்றது. வரைவு கடாதலின் பொருட்டே அலரும் விரித்துரைக்கப்படுகிறது. அகநானூற்றில் அலர் வழி அறியலாகும் வரலாற்றுச் செய்தியை இக்கட்டுரை ஆராய்கிறது

அலர் – விளக்கம்         
     அலர், அம்பல், கவ்வை ஆகியவை ஒத்த பொருளைத் தரும் சொற்களாகும். இலக்கியத்தில், கற்புக் காலத்தில் தலைவன் தலைவியை நெடுநாள் பிரிந்தால் ஊரார் கூறும் சொல் “பழிச்சொல்” என்று குறிக்கப்படுகின்றது. மன்னன் தவறு செய்தால் அவனைத் திருத்துவதற்காகக் கூறும் சொற்கள் ‘‘செவியறிவுறூஉ” என்று சுட்டப்படுகின்றது. ஆனால் களவுக் காலத்தில் தலைவன் களவொழுக்கத்தை நீட்டிக்கையில் ஊர்ப்பெண்கள் கூறும் சொற்களே அம்பல், அலர், கவ்வை என்று சுட்டப்படுகின்றது. அம்பல் என்பது முகிழ் முகிழ்த்தல் என்றும் அலர் என்பது சொல் நிகழ்தல் என்றும் உரைப்பர் நச்சினார்க்கினியர். இறையனார் களவியலுரையாசிரியர், ‘‘அம்பல் என்பது சொல் நிகழாதே முகிழ் முகிழ்த்துச் சொல்வதாயிற்று, இன்னிதின் கண்ணது என்பது அறியலாகாது. அலர் என்பது இன்னானோடு, இன்னாளிடை இது போலும் பட்டதென விளங்கச் சொல்லி நிற்பது. அம்பல் என்பது பெரும் போதாய்ச் சிறிது நிற்க அலரும் என நிற்பது. அலர் என்பது அப்பெரும்போது தாதும் அல்லியும் வெளிப்பட மலர்ந்தாற்போல நிற்கும் நிலைமையென வேற்றுமை சொல்லப்பட்டதாம்” என்று விளங்குவர்.
கௌவை என்பதற்குக் ”கலக்கம், துன்பம், பழிச்சொல்” எனறு தமிழ்ப்பேரகராதி பெருள் கூறும். ஆகவே இளம் பெண்ணின் காதல் ஒழுக்கம் பற்றி ஊர் மகளிர் வாய்க்குள் பேசிக் கொள்வது அம்பல் என்றும் வெளிப்படையாகப் பேசுவது அலர் என்றும் குறிக்கப்படும் எனலாம்.

அலர் தூற்றுவோர்
       சங்க இலக்கியங்களில் அலர் தூற்றுபவர் பெண்களாகவே சுட்டப்படுகின்றனர். இதனை,

வெவ்வாய்ப் பெண்டிர் (குறுந். 373, அகம். 50)
அலர் வாய்ப் பெண்டிர் (நற். 36)
அம்பல் மூதூர் அலர்வாய்ப் பெண்டிர் (நற். 143)
அலர்வினை மேவல் அம்பல் பெண்டிர் (அகம். 203)
         
அலர் தூற்றுபவர்களாகப் பெண்களே அமைகின்றனர் என்பதை இச்சான்றுகளின் வழி அறியலாம்.

தலையாலங்கானம் போர்
         
        தலையாலங்கானத்துப் போர் என்ற போர் சங்ககாலத்தில் நடந்த தலைசிறந்த புகழ்பெற்ற போராகும் இப்போர் நெடுஞ்செழியனுக்கும் ஏழு மன்னர்களுக்கும் இடையில் நடந்தது. போரில் நெடுஞ்செழியன் வென்றான். இப்போர் நடைபெற்ற இடமான தலையாலங்கானம் சோழ நாட்டில் தற்கால திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம் சிமிழி ஊராட்சியிலுள்ள ஒரு கிராமமாகும். பிற்காலத்தில் இது தலையாலங்காடு என்று வழங்கிற்று. சோழ நாட்டில் உள்ள இவ்வூரில் சோழனுடன் சேர்ந்து போரிட்ட சேரனையும், திதியனையும், எழினியையும், எருமையூரனையும், இளங்கோ வேண்மானையும், பொருணனையும் ஒருவனாக நின்று பாண்டியன் நெடுஞ்செழியன் போரிட்டுத் தோற்றோடச் செய்தான். தலையாலங்கானத்தில் பெற்ற இப்பெரு வெற்றியின் காரணமாகவே இவன் ‘தலையாலங்கானத்துச் செருவென்ற’ பாண்டியன் நெடுஞ்செழியன் என்று அடைமொழியுடன் அழைக்கப்படுகிறான். எழுவரின் போர்முரசுகளையும், வெண்கொற்றக் குடைகளையும் செழியன் தன்னகப் படுத்திக்கொண்டான்.  பலரும் புகழும்படிப் படைகளைக் கொன்று குவிக்கும் களவேள்வி செய்தான். அப்போது வெற்றி பெற்ற செழியனின் படைவீரர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அந்த ஆரவாரம் போல ஊர் அலர் தூற்றுகிறது என்று தலைமகள் தலைமகனிடம் கூறுவதை,

கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச் செழியன்
ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப,
சேரல், செம்பியன், சினம் கெழு திதியன்,    
போர் வல் யானைப் பொலம் பூண் எழினி,
நார் அரி நறவின் எருமையூரன்,
தேம் கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
இருங்கோ வேண்மான், இயல் தேர்ப் பொருநன், என்று
எழுவர் நல் வலம் அடங்க, ஒரு பகல்
முரைசொடு வெண்குடை அகப்படுத்து, உரை செல,
கொன்று, களம்வேட்ட ஞான்றை,
வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே!    (அகம்.36 : 13-23)
         
என்ற அடிகள் குறிப்பிட்டுள்ளன. இதன்வழி அலர் தூற்றுவதற்குப் போரின் ஆராவார ஒலியை ஒப்பிட்டுள்ளதை அறியமுடிகிறது.

குறுக்கைப் பறந்தலைப் போர்
         
      எவ்வி என்னும் வள்ளல் மிழலை நாட்டின் நீடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். மிழலை நாடு இப்போது திருவீழிமிழலை என்று வழங்கப்படுகிறது. இந்த ஊருக்கு அண்மையில் அன்னியூர் என்னும் பகுதி உள்ளது. அன்னி என்னும் அரசன் இதனை ஆண்டுவந்தான். அவன் பெயரால் இந்த ஊரின் பெயர் அமைந்துள்ளது. இந்த அன்னிக்கும் பொதியமலை நாட்டு மன்னன் திதியன் என்பவனுக்கும் இந்தக் குறுக்கைப் பறந்தலை என்னும் ஊரில் போர் நடந்தது. போரில் அன்னி கொல்லப்பட்டான். எவ்வி அறிவுரையைக் கேளாமல் போரிட்டு அன்னி மாண்டான். அன்னி கோசர் குடி மன்னன். அவனது காவல்மரம் புன்னை. இந்தக் காவல்மரம் போரின்போது வெட்டி வீழ்த்தப்பட்டது. அதனைக் கண்டு வயிரியர் ஆரவாரத்துடன் தம் யாழில் இன்னிசை பாடினர். அந்த யாழிசை போல அவரையும் என்னையும் பற்றி அந்த ஊர் மக்கள் அலர் தூற்றட்டும் என்று தலைவி தோழியிடம் கூறுவதை,

அரி நுண் பசலை பாஅய்,
பீரத்துஎழில் மலர் புரைதல் வேண்டும்.
அலரே,அன்னி குறுக்கைப்பறந்தலை,
திதியன்தொல் நிலை முழுமுதல் துமியப் பண்ணி,      
புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர்
இன் இசை ஆர்ப்பினும்பெரிதே                 (அகம்.45 : 7-12)
         
          என்ற அடிகள் குறிப்பிட்டுள்ளன. இதன் வழி அன்னிக்கும் திதியனுக்கும் நடந்த போர் பற்றியும், போரின் இறுதியில் காவல் வெட்டப்படும் மரபினையும், வெற்றிக்குப்பின் வயிரியர் ஆர்த்த வெற்றி இசை முழக்கத்தைம் அதனோடு அலர் ஒப்பிட்டுப் பேசப்பட்டதையும் அறியமுடிகிறது.

பரூவூர்ப் போர்
         
       கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் எனப்படும் பழமலை பரணிடப்பட்டது 2011-10-11 யவ வாந வந்தவழி இயந்திரம் ஊரைச் சூழ்ந்துள்ள ஊர்களில் ஒன்று பருவூர். இது சங்ககாலத்தில் நெல் விளையும் நிலமாகத் திகழ்ந்தது. இந்த ஊரில் சேர வேந்தன் பொறையனும் பாண்டியனும் ஒன்று சேர்ந்து சோழனைத் தாக்கினர். சோழப் பெருவேந்தன் சார்பில் அஃதை என்ற பெண்ணின் தந்தை போரிட்டான். போரில் இருபெரு வேந்தரும் இறந்தனர். போர் நடந்த இடம் பருவூர்ப் பறந்தலை. இந்தப் போரில் இருபெரு வேந்தந்தர்களின் போர்யானைகளையும் அஃதை தந்தை கைப்பற்றிக்கொண்டான். இந்தச் செய்தி ஊருக்கெல்லாம் தெரிந்தது போலத் தலைவன் பரத்தை ஒருத்தியோடு ஊரில் திரிந்தது ஊருக்கெல்லாம் தெரிந்து அலராகிவிட்டது என்று தோழி தலைவனிடம் கூறித் தலைவனை அவன் வீட்டுக்குள் நுழையக்கூடாது என்று சொல்லித் தடுப்பதாகப் பாடல் அமைந்துள்ளது. இதனை,

செம்பொற் சிலம்பின், செறிந்த குறங்கின்,
அம் கலுழ் மாமை, அஃதை தந்தை,
அண்ணல் யானை அடு போர்ச் சோழர்,
வெண்ணெல் வைப்பின் பருவூர்ப் பறந்தலை,
இரு பெரு வேந்தரும் பொருது களத்து ஒழிய,          
ஒளிறு வாள் நல் அமர்க் கடந்த ஞான்றை,
களிறு கவர் கம்பலை போல,
அலர் ஆகின்றது, பலர் வாய்ப் பட்டே           (அகம்.96 : 11-18)
என்ற அடிகளின் வழி அறிந்து கொள்ளமுடிகிறது.

நெடுஞ்சேரலாதன் – கடம்பர் போர்
         
        கடம்பர் சேரநாட்டின் வட எல்லைப் பகுதியில் கடம்பின் பெருவாயில் பகுதியில் வாழ்ந்துவந்தனர். பிற்காலத்தில் கதம்பர்ஜ1ஸ என்ற பெயரில் தலைதூக்கிய மக்களின் முன்னோடிகள் என்று கருதப்படுகின்றனர். கடம்பர் என்போர் குயவர் குலத்தை சார்ந்தவர் என்று பொருள் இருக்கிறது சங்க இலக்கியகளில் குயவு தொழில் செய்பவர்கள் கடம்பகுலத்தான் என்று கூறுகிறது. கடம்பர் கடம்பு மரத்தைச் சின்னமாகக்கொண்டு கடலாட்சியில் ஈடுபட்ட வம்சாவளியினராவர். கடம்பர் ஆரம்ப காலங்களில் கடலாட்சி செய்த இனத்தவர்கள் என பதிற்றுப்பத்தில் குறிப்புகள் உள்ளன.பாணன்(பாட்டு) பறையன்(தோல் இசை) துடியன்(நடிகன்) கடம்பன் (முரசு)எனும் நால் வகை குடிகளில் ஒன்றாக கடம்ப இனம் சங்க இலக்கியங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கடம்பு மரத்தைக் காவல்மரமாகக் கொண்ட மக்களோடு போரிட்டான். அவர்களை வென்றான். அவர்களது கடம்ப மரத்தை வெட்டிக் கொண்டுவந்து அந்த மரத்தால் தனக்குப் போர்முரசு செய்துகொண்டான். அந்த முரசத்தின் ஒலி போன்று நீ பரத்தையுடன் கொண்ட நட்பை மக்கள் அலர் பேசுவதாக தலைவி தலைவனிடம் கூறுவதை,

தோளும் தொல் கவின் தொலைய, நாளும்
நலம் கவர் பசலை நல்கின்று நலிய,
சால் பெருந் தானைச் சேரலாதன்
மால் கடல் ஓட்டி, கடம்பு அறுத்து, இயற்றிய
பண் அமை முரசின் கண் அதிர்ந்தன்ன,           
கவ்வை தூற்றும் வெவ் வாய்ச் சேரி
அம்பல் மூதூர் அலர் நமக்கு ஒழிய              (அகம்.347 : 1-7)
என்ற அடிகளானது பதிவுசெய்துள்ளன.

எழினி – மத்தி போர்
         
          மத்தி சங்ககால மன்னர்களில் ஒருவன். இவனது தலைநகர் வெண்ணி. மத்திக்கும் கல்லா எழினி என்பவனுக்கும் இடையே போர் மூண்டது. போரில் கல்லா எழினியின் பல்லைப் பிடுங்கிக்கொண்டு வந்து மத்தி தன் கோட்டையின் வாயில் கதவில் பதித்துக்கொண்டான். பதித்த பல் வெண்மணி போல் விளங்கியதால் வெண்மணி என்னும் ஊரின் பெயரே வெண்மணிவாயில் என வழங்கப்படுவதாயிற்று. இந்த மத்தியின் நாட்டில் இருந்த ஓர் ஊர் கழார். அது காவிரிக்கரையில் இருந்தது. வெண்மணிவாயில் என்பது இவன் நாட்டில் இருந்த ஓர் ஊர் என்றும், கழார் என்னும் ஆற்றங்கரையூர் இவனது தலைநகர் என்றும் கூறுவர். இவன் பரதவன் கோமான் என்றும் கூறப்படுதலால், இவனது ஊர் கடற்கரையை ஒட்டி இருந்த ஆற்றங்கரையூர் என்பது பெறப்படும். மத்தியின் நாட்டில் உள்ள கடலலை முழங்குவது போன்று ஊரார் அலர் தூற்றுவதாக தோழி தலைவியிடம் கூறுவதை,

நெடுஞ் சேண் நாட்டில் தலைத்தார்ப் பட்ட
கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய
வன்கண் கதவின் வெண்மணி வாயில்,
மத்தி நாட்டிய கல் கெழு பனித் துறை,              
நீர் ஒலித்தன்ன பேஎர்
அலர் நமக்கு ஒழிய, அழப் பிரிந்தோரே (அகம்,211 : 12-17)
என்ற அடிகளின் வழி அறிந்து கொள்ளலாம்.

கட்டி – தித்தன் – பாணன் போர்
         
        பாணன், கட்டி இருவரும் சேர்ந்துகொண்டு உறையூர் அரசன் தித்தன் வெளியனைத் தாக்க வந்தனர். உறையூர் அவையில் பாடும் பாணர்கள் கிணையை முழக்கினர்.  அந்த முழக்கத்தைக் கேட்ட இருவரும் போர் முரசம் முழங்குகிறது என்று எண்ணி அஞ்சிப் போரிடாமலேயே ஓடிவிட்டனர். அந்தச் செய்தி அறிந்து உறையூர் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அந்த ஆரவாரம் போல உன்னையும் அவளையும் பற்றி அலர் தூற்றுகின்றனர் என்று தலைவனிடம் தோழி கூறுவதை,

வலி மிகும் முன்பின் பாணனொடு, மலி தார்த்
தித்தன் வெளியன் உறந்தை நாள் அவைப்
பாடு இன் தெண் கிணைப் பாடு கேட்டு அஞ்சி,           
போர் அடு தானைக் கட்டி
பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே          (அகம்.226 : 13-17)
என்ற அடிகள் பதிவு செய்துள்ளன.

முடிவுரை
         
          சங்க காலத்தில் அலர் பேசுவது என்பது ஒரு மரபாகப் போற்றப்பட்டு வந்துள்ளது. அலர் பேச்சின் மூலம் தலைவன் தலைவி திருமணம் உறுதி செய்யப்படுகிறது. அதாவது உடன்போக்கிலோ அல்லது தமர் கொடுப்பவோ திருமணம் செய்யும் சூழல் உருவாகிறது. அலர் தூற்றுவதற்குப் பெரும்பாலும் போரில் வீரர்கள் முழங்கும் முழக்கத்தினையோ அல்லது கடல், ஆறு போன்றவற்றின் ஆராவாரத்தையோ ஒப்பிடுவதைக் காணமுடிகிறது. அலர் தூற்றுலதின் சங்ககால வரலாற்றுச் செய்திகளை அறிந்துகொள்ளமுடிகிறது.

பார்வை நூல்கள்
1.செயபால்.இரா., (உ.ஆ), அகநானூறு மூலமும் உரையும், தொகுதி -1,2, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை – 60098. முதற்பதிப்பு, ஏப்ரல் – 2004.

2.மேலது, குறுந்தொகை மூலமும் உரையும், தொகுதி -1,2, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை – 60098. முதற்பதிப்பு, ஏப்ரல் – 2004.

3.மேலது, நற்றிணை மூலமும் உரையும், தொகுதி -1,2, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை – 60098. முதற்பதிப்பு, ஏப்ரல்

Iniyavaikatral_Article_Publishedஆய்வாளர்
திருமதி தி.கீதா,

முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதிநேரம்)
தமிழ்த்துறை

வி.இ.டி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி (இருபாலர்),

திண்டல், ஈரோடு –  9.

பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.

நெறியாளர் 
முனைவர் ந.பரமசிவம்,

உதவிப்பேராசிரியர்,

தமிழ்த்துறை

வி.இ.டி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி (இருபாலர்),

திண்டல், ஈரோடு –  9.
பாரதியார் பல்கலைக்கழகம்,கோவை. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here