Grammar Texts in Tamil|Dr.G.Vijayakumari

Abstract
         Starting from the 10th century Palanipatiyal to the 20th century Yappu Book, the contribution of the grammar books to the development of grammar, but in this article only the 12th Palanipatiyal, which is an introductory text, have been compiled and considered here. The 8th century AD can be considered a significant period in the history of the Tamil language. Since the entire state of Tamil Nadu was under foreign rule, the culture of the Tamil language was in disarray. Grammars were composed as a safeguard or shield for the language so that the Tamil language would not be disturbed by the influence of other languages. During the Tolkappiyar period, grammars were made only for writing, words and meaning. But in the medieval period, the grammatical roots summarized in the Tolkappiya Mathathikaram had to be expanded and the grammars such as Yappu, Ani, Patiyal, and Nikandu had to be developed. Pon. Kothandaraman explains this idea as follows.


“தமிழில் பாட்டியல் இலக்கண நூல்கள்”

ஆய்வுச் சுருக்கம்
        பத்தாம் நூற்றாண்டின் பன்னிருபாட்டியல் தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் யாப்பு நூல் ஈராக இலக்கண நூல்கள், பாட்டியல் இலக்கண வளர்ச்சிக்கு அளித்துள்ள பங்களிப்பு, ஏறாலம் ஆனால் இக்கட்டுரையில் பன்னிரு பாட்டியல் மட்டும் இதுகாறும் அறிமுக நிலையில்  பாடநூல் கூறிய செய்திகள் இங்கு தொகுத்து நோக்கப்பெற்றன.

முன்னுரை
       தமிழ்மொழி வரலாற்றில் ஒரு குறிப்பிடத் தகுந்த காலமாக கி.பி.8ஆம் நூற்றாண்டைக் கூறலாம். தமிழகம் முழுவதும் வேற்றவர் ஆட்சியில் இருந்தமையால் தமிழ்மொழி பண்பாடு போன்றவை சீர் குலைந்திருந்தன. பிற மொழியின் செல்வாக்கினால் தமிழ்மொழி சீர்குலைந்து போகாமல் இருக்க மொழிக்குக் காப்புச்சட்டமாக அல்லது கவசமாக இலக்கணங்கள் இயற்றப்பட்டன. தொல்காப்பியர் காலத்தில் எழுத்துக்கும் சொல்லுக்கும் பொருளுக்கும் மட்டுமே இலக்கணங்கள் செய்யப்பட்டன. ஆனால் தொல்காப்பிய பொருளதிகாரத்தில் சுருக்கமாகக் கூறப்பட்ட இலக்கண மூலங்களை விரித்து யாப்பு, அணி, பாட்டியல், நிகண்டு ஆகிய இலக்கணங்கள் செய்ய வேண்டிய நிலை இடைக்காலத்தில் ஏற்பட்டது. பொன். கோதண்டராமன் இக்கருத்தைப் பின்வருமாறு விளக்குகிறார்.
”தமிழில் தொல்காப்பியர் காலத்திலேயே இலக்கணம் என்பது எழுத்து, சொல், பொருள் என மூன்றையும் உட்படுத்தியது. இவையே பிற்காலத்தில் விரிந்து விளக்கம் பெற்று எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்று ஆராய்ந்தாகவும், மேலும் பாட்டியல் என்று ஒன்று பிரிந்து ஆறாகவும் வளர்ந்தன” “இடைக்காலத்தில் யாப்பியலுக்கும் அணியியலுக்கும் பாட்டியலுக்கும் தனித்தனியே இலக்கணங்கள் எழுந்தமையால்தான் இக்காலத்தை (கி.பி.8ஆம் நூற்றாண்டு) இலக்கண நூலெழுச்சிக் காலமென மு.அருணாசலம் கூறுகிறார்”

      ஒரு மொழியில் இலக்கியங்கள் பல்கிப் பெருகிய பின்னரே அம்மொழிக்கு இலக்கணங்கள் தோன்றும் என்பது பொதுவான கருத்து. இது இல்லாமல் வேறு சில காரணங்களினாலும் ஒரு மொழிக்கு இலக்கணங்கள் தோன்றும் என்பர் பொன். கோதண்டராமன். இலக்கணங்கள் எப்போது பிறக்கின்றன என்ற கேள்விக்குப் பின்வருமாறு கூறுகிறார். “வேற்று நாட்டவரின் தொடர்பும் வேற்று மொழியினரின் தொடர்பும் வேற்றுப் பண்பாட்டினரின் தொடர்பும் ஏற்படும் போதுதான் நாம் நம் நாட்டைப் பற்றியும் நம் மொழியைப் பற்றியும் நம் பண்பாட்டைப் பற்றியும் எண்ணி வரையறை செய்யத்துவங்குகிறோம். இந்தத் தொடர்பு ஏற்படாத போது நம்நாடு நம்மொழி நம் பண்பாடு என்று வேறு பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.”

       இக்கூற்றையொட்டிப் பார்க்கும் போது பின்வரும் உண்மை புலப்படுகிறது. அதாவது “வேற்று மொழியின் செல்வாக்கு அல்லது ஊடுருவல் உச்ச நிலையை அடைந்தபோது ஏற்பட்ட தமிழ் மொழியின் சீர்குலைவைப் போக்க பல்வேறு நிலைகளில் மொழியின் அமைப்பை வரையரைப் படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது” என்று அரங்க நலங்கிள்ளி பாட்டியல்கள் ஓர் ஆய்வு நூலில் குறிப்பிடுகிறார். இதனால் மொழிக்குக் காப்புச் சட்டமாகப் பல்வேறு வகையான இலக்கணங்கள் தோன்றின. அவற்றுள் பாட்டியல் என்பதும் ஒன்று.
தமிழ் இலக்கண வரலாற்றில் பாட்டியல் என்ற இலக்கண வகை கி.பி.8ஆம் நூற்றாண்டில் தோன்றியிருக்க வேண்டும். ஆயினும் கி.பி.10ஆம் நூற்றாண்டில் எழுந்த பன்னிரு பாட்டியல் என்ற நூலே கிடைக்கின்ற பாட்டியல் நூல்களுள் காலத்தால் முந்தைய நூலாகத் தெரிகிறது. பாட்டியல் என்ற இலக்கண வகைக்கான வித்து தொல்காப்பியச் செய்யுளியலில் ஊன்றப்பட்டுப் பின்பு அது முறையே காலந்தோறும் வளர்ந்து கி.பி.8ஆம் நூற்றாண்டளவில் உச்ச நிலையை அடைந்தது. இடைக்காலம் தொடங்கி இக்காலம் வரையிலும் பாட்டியல் நூல்கள் எழுந்து கொண்டே இருக்கின்றன. இவ்வகை இலக்கண நூல்கள் இலக்கிய வகைப்பாடு பற்றிப் பேசுவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளன. சிறிய அளவில் இலக்கணம் தொடர்பான பிற செய்திகளையும் கூறுகின்றன. இலக்கிய வகைப்பாட்டைப் பற்றி விரிந்த நிலையில் பேச எழுந்த இலக்கண வகைக்குப் பாட்டியல் என்று பெயர் இடப் பட்டமைக்கான காரணம் என்ன என்பதையும் இவ்விலக்கண வகை தோன்றுவதற்குக் காரணமாக அமைந்த மூலங்கள் எவை என்பதையும் ஆராயப்பட உள்ளன.

பாட்டியல் பெயர்க் காரணம்
       பாட்டியல் என்னும் சொல்லுக்கான விளக்கத்தினைப் பாட்டு இயல் என்ற இரு சொற்களின் இணைப்பாகவே பெறமுடிகிறது. இவற்றுள் பாட்டு என்ற சொல் தொல்காப்பியர் காலத்தில் இலக்கியம் என்ற சொல்லாட்சிக்கு வரவில்லை. ஆனால் இலக்கியத்தை உணர்த்த வேறு சொல் ஆளப்பட்டு வந்தது. அது செய்யுள் என்ற சொல்லாகும். தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் இலக்கியங்களை எல்லாம் செய்யுள் எனத் தொல்காப்பியம் கூறுகிறது’ எனக் கூறும் கருத்தும் மேலே சொன்ன கருத்திற்கு வலுவூட்டுகிறது. செய்யுள் என்ற சொல் தொல்காப்பியர் காலத்தில் இலக்கியத்தைக் குறிக்க கையாளப்பட்டு வந்தது என்பதற்குத் தொல்காப்பியத்திலிருந்தே சில எடுத்துக்காட்டுகளைக் காணலாம். தொல்காப்பியர் தம் காலத்து இலக்கியங்களைப் பின்வருமாறு வகைப்படுத்திக் காட்டுகிறார். “எழுநிலத் தெழுந்த செய்யுள் தெரியின் அடிவரை யில்லன ஆறென மொழிப”5 “அவைதாம் நூலினான உரையினான நொடியொடு புணர்ந்த பிசியினான ஏது நுதலிய முதுமொழி யான மறைமொழி கிளந்த மந்திரத் தான கூற்றிடை வைத்த குறிப்பினான”6 இவ்விரண்டு நூற்பாக்களிலும் கவனிக்க வேண்டுவது முதல் நூற்பாவின் முதல் வரியிலுள்ள செய்யுள் என்னும் சொல் அடுத்த நூற்பாவிலுள்ள இலக்கிய வகைகளைக் குறித்து நிற்கிறது. இதிலிருந்து தொல்காப்பியர் காலத்தில் செய்யுள் என்ற சொல் இலக்கியங் களைக் குறிக்கும் பொதுச்சொல்லாக இருந்திருக்கிறது என்பது தெரிகிறது. இது பற்றித் தமிழண்ணல் கூறுவதைக் கீழே காணலாம்.
         
      “தொல்காப்பியம் செய்யுள் என்ற சொல்லையே இலக்கியப் பொருளில் வழங்குகிறது. நல்லிசைப் புலவர் செய்யுள் உறுப்பென வல்லிதிற் கூறி வகுத்துரைத்தனரே தொல்காப்பியம் 1959 என இலக்கியம் அனைத்திற்கும் பொதுப் பெயராகவும் செவியுரைச் செய்யுள் அங்கதச் செய்யுள் எனத் தொல்காப்பியம் 1385-1386 தனித்தனி இலக்கிய வகைகளின் பெயராகவும் இச்சொல் தொல் காப்பியத்தில் இடம் பெற்றுள்ளது.” இக்கூற்றாலும் மேலே சொன்ன கருத்து வலிமை பெறுவதைக் காணமுடிகிறது. தொல்காப்பியரின் செய்யுளியல் என்ற சொல் லாட்சியும் மேற்கூறிய கருத்திற்கு அரண் செய்கிறது. அதாவது செய்யுள்+ இயல் = செய்யுளியல். செய்யுள் என்பது இலக்கியத் தையும் இயல் என்பது இலக்கணத்தையும் உணர்த்துகின்றன. எனவே செய்யுளியல் என்பதற்கு இலக்கியம் பாடுதற்குரிய இலக்கணம் எனப் பொருள் கொள்ளலாம். அக்காலத்தில் சிறுபான்மை பாட்டு என்ற சொல்லும் இலக்கியத்தைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டு வந்தது. இது தொல்காப்பியர் கால நிலை. தொல்காப்பியர் காலத்திற்குப் பின் சங்க காலத்தில் இலக்கியத்தைக் குறிக்க பாட்டு என்ற சொல்லே பெருமளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு ‘முல்லைப் பாட்டு’, ‘குறிஞ்சிப் பாட்டு’ என்னும் சங்க இலக்கியங் களின் பெயர்களே சான்றாக உள்ளன.

        சங்ககாலத்தில் ஆளப்பட்டு வந்த பாட்டு என்ற சொல் இலக்கியம் என்ற பொருளிலேயே பாட்டியல் நூல்களின் காலம் வரை அதாவது கி.பி.13ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து ஆளப்பட்டு வந்திருக்கிறது. எனவே தான் இலக்கிய வகைகளைப் பற்றிக் கூறுகின்ற நூல்களுக்குப் பாட்டியல் எனப் பெயரிட்டு நூல் செய்தனர். இக்கருத்து மு.சண்முகம் பிள்ளை கூறும் கருத்து. “பாட்டு என்பது புலவனால் பாடப் பெறும் இலக்கிய வகைகளைக் குறித்து வழங்கும் பொதுப் பெயராகக் கொள்ளத்தகும்”
இதுவரை இலக்கிய வகைகளைப் பற்றிக் கூறுகின்ற நூல்களுக்குப் பாட்டியல் என்னும் பெயரமைந்தமைக்கான காரணம் வரலாற்றியல் நோக்கில் ஆராயப்பட்டது. இந்தக் கட்டுரையில் பன்னிரு பாட்டியல் மட்டும் கூறப்பட்டுள்ளன.

பன்னிரு பாட்டியல்
         
      இன்று பாட்டியல் எனும் இலக்கண வகைக்கு முதல் நூலாகக் கிடைப்பது பன்னிரு பாட்டியலேயாகும். கா.ர. கோவிந்தராசன் இந்நூல் பன்னிரு பொருத்தங்களைக் கூறுவதால் பன்னிரு பாட்டியல் எனப் பெயர் பெற்றது என்பர்.’ இப்பாட்டியல் நூற்கு முந்தையன் வாகப் பல பாட்டியனூல்கள் தோன்றியுள்ளன. அவற்றுள் ஒன்று கூட முழுமையாகக் கிடைக்கவில்லை. அரை குறையாயும், சிதைந்தும், மேற்கோள்களின் வாயிலாகவும் அறியப்படும், பழம் பாட்டியனூல்களுள் இரண்டினை (இந்திரகாளியம், அவிநயம்) ஆகும். இந்நூல் பன்னிரு புலவர்களால் பாடப்பட்டதால் பன்னிரு பாட்டியல் எனும் பெயர் பெற்றது எனும் கருத்தும் நிலவுகிறது என்பது மருதூர் அரங்கராசன் கருத்து.
இந்நூலின் பெயர்க்காரணம் பற்றி மேலும் ஆராயும் போது பின்வரும் கருத்தும் எண்ணத் தக்கதாய் உள்ளது. தொகுப்பு முறைகளில் பன்னிரண்டு பன்னிரண்டாகத் தொகுக்கும் முறை இடைக்காலத்தில் இருந்து வந்தன. அதோடு நூல்களுக்குப் பன்னிரண்டு எனும் எண்ணைச் சேர்த்துப் பெயர் சூட்டும் முறையும் இருந்து வந்தது. சான்றாகப் பன்னிரு திருமுறை, பன்னிரு படலம் ஆகிய நூல் பெயர்களைக் கூறலாம். இம்முறையே இப்பாட்டியல் இலக்கணத்திற்கும் பயன்படுத்தப்பட்டுப் பன்னிரு பாட்டியல் என வைக்கப்பட்டிருக்கலாம். இக்கருத்தை நலங்கிள்ளி ஆய்வில் குறிப்பிடுகிறார்.

நூலாசிரியர் காலம்
    இந்நூலாசிரியரின் வரலாற்றை அறிந்து கொள்ளச் சிறப்புப் பாயிரமோ பொதுப் பாயிரமோ உதவுவனவாக அமையவில்லை. மூல நூலுக்குரிய ஆசிரியர் பெயர் தெரியாமையால் இந்நூலின் காலம் பற்றிச் சரியாகத் துணிய முடியவில்லை. இலக்கியம் கண்டதற்கே இலக்கணம், உலா, அந்தாதி, கலம்பகம் போன்ற இலக்கியங்கள் கி.பி.8 ஆம் நூற்றாண்டளவில் தோன்றின. இவற்றிற்கு இலக்கணம் பன்னிரு பாட்டியலில் காணப்படுகிறது. எனவே இந்நூல் கி.பி.10 ஆம் நூற்றாண்டளவில் தோன்றியிருக்க வேண்டும் என்ற ஒரு கருத்து இருக்உறவில் இக்கருத்தையொட்டியே இலக்கிய வாலாற்றாசியரான மு.அருணாசலம் பன்னிரு பாட்டியலின் காலத்தைக் கி.பி.10 ஆம் நூற்றாண்டு என்பர்.

📜 இந்நூலை எழுதிய ஆசிரியர் ஒருவர் தான். அவர் பிற பாட்டியல் நூல்களினின்றும் தம் கருத்துக்கு இயைபுடைய நூற்பாக் களை ஆங்காங்கு எடுத்தாண்டுள்ளார் என்பது ஒரு கருத்து.

📜அகத்தியர் மாணாக்கர் பன்னிரண்டு பேர் சேர்ந்தெழுதிய பன்னிரு படலம் போலப் பன்னிரண்டுபேர் சேர்ந்தெழுதியதே இப்பன்னிரு பாட்டியல் ஆகும் என்பது இன்னொரு கருத்து.

📜தம்காலத்து வழங்கிய பன்னிரண்டு பாட்டியல் நூல்களி னின்றும் ஒருவர் தொகுத்ததே இப்பன்னிரு பாட்டியல் என்னும் நூலாகும். அத்தொகுப்பாசிரியர் பெயர் அறியக் கூடவில்லை என்பது வேறொரு கருத்து.

நூலமைப்பு
    இந்நூலின் தொடக்கம் நூலாசிரியரின் தற்சிறப்புப்பாயிரம் ஆகும். இந்நூலில் நூலாசிரியரின் பாயிரத்தோடு சேர்ந்து இருநூற்று முப்பத்திரண்டு நூற்பாக்கள் உள்ளன. இந்நூலில்,

இயல் நூற்பா
     எழுத்தியல்- 51சொல்லியல் -32 இனவியல் -148 என மூன்று இயலமைப்புகள் காணப்படுகின்றன. இந்நூலில் இடம் பெற்ற நூற்பாக்களோடு ஒத்த கருத்துடைய பொய்கையார் முதலிய பதின்மூவர் பாடிய நூற்று முப்பத்தேழு நூற்பாக்கள் மேற்கோள்களாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நூற்பாக்கள் மேற்கோள் கருத்துக்காகக் கையாளப் பட்டிருந்தாலும் இவற்றை உரைப் பகுதியில் மூல நூற்பாவிற் கருத்தே அமைக்கப்பட்டுள்ளமை புதிய நோக்காக உள்ளது. நூல் மூன்று இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவினுள்ளும் கூறப்படுகிற செய்திகளுக்குத் தனித் தலைப்பும் ஒவ்வொரு தனித்தலைப்பும் ஒன்றிற்கு மேற்பட்ட செய்திகளைக் கூறுமாயின் அவற்றிற்குத் துணைத் தலைப்பும் கொடுத்து நூற்பாக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சான்றாக இனவியல் எனும் மூன்றவாது இயலினுள் பிள்ளைப் பாட்டைப் பற்றிக் கூறுகிற நூற்பாக்கள் அனைத்திற்கும் ஒட்டு மொத்தமாகப் பிள்ளைப் பாட்டு எனும் தனித் தலைப்பையும் அவற்றிற்குள்ளே அமையும் கிளைச் செய்திகட்கு ஆண்பாற் பிள்ளைப் பாட்டியல் அமைத்தற்குரிய நிலைகள். பெண்பாற் பிள்ளைப் பாட்டியல் அமைத்தற்குரிய நிலைகள் எனும் துணைத் தலைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளமையைக் கூறலாம்.

நூலில் பேசப்பட்டுள்ள செய்திகள்எழுத்தியல்
    முதற் சீரின்கண் அமைந்தற்குரிய எழுத்தாலாகும் பொருத்தங்களைக் கூறுதலான் இது எழுத்தியலென்னும் பெயர் பெற்றது. இங்கு எழுத்து என்பது ஆகுபெயரால் என இவை பொருத்தங்களை உணர்த்தி நின்றது. நூலின் எழுத்தியல் என்ற முதலாவது பகுதியில் தற்சிறப்புப் பாயிரத்திற் கருத்து. 1. பிறப்பு 2. வருணம் 3.கதி 4. உண்டி 5. பால் 6. தானம் 7. கன்னல் 8. புள் 9. நாள் ஆகிய ஒன்பது பொருத்தங்கள் கூறப்பட்டுள்ளன. ஒன்பது பொருத்தங்களும் இலக்கியத்தின் முதலெழுத்து அமைய வேண்டிய முறை பற்றிக் கூறுகின்றன.
         
      1.மங்கலச் சொல் பொருத்தம் 2. பெயர்ப்பொருத்தம் 3. சீர்ப்பொருத்தம் எனும் மூன்று பொருத்தங்கள் கூறப்பட்டுள்ளன. எழுத்தியல் சொல்லியல் ஆகிய இரண்டுமே முதன் மொழிக்கான பொருத்தங்கள் பற்றியே கூறுகின்றன.

📜பிறப்பு – எனும் பகுதியில் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டையும் படைத்தான் பிரமன். ஏனைய பதினெட்டு மெய்களையும் கண்ணுதலோன், திருமால், முருகன், இந்திரன், சூரியன், சந்திரன், குபேரன், கூற்றுவன், வருணன் எனும் ஒன்பது பேரும் முறையே இரண்டிரண்டெழுத்தாகப் படைத்தனர் என்று கூறப்பட்டுள்ளது.

📜வருணம் – அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், சாதிக் குரிய எழுத்துகள் பற்றிக் கூறப்படுகின்றன.

📜கதி-வானவர், மக்கள், நரகர், விலங்கு என நான்கு கதி யினரைக் கூறி ஒவ்வொரு கதியினருக்கும் உரிய எழுத்துகள் கூறப்படுகின்றன.

📜உண்டி – அமுதம், விடம் (அல்லது) நஞ்செழுத்துகள் இவை என்றும் விவரிக்கப்படுகின்றன.

📜பால் – ஆண்பால், பெண்பால், அலிப்பால் என மூன்றாகப் பகுக்கப்பட்டு ஒவ்வொரு பாலிற்கும் உரிய எழுத்துகள் வரை யறுக்கப்படுகின்றன.

📜தானம் -உயிர் எழுத்துகளும், மெய் எழுத்துகளும் பாலன், குமரன், அரசன், மூப்பு, மரணம் இவ்வகை தானங்கள் அடக்கப் படுகின்றன.

📜கன்னல், புள்-இரண்டு பொருத்தங்களும் ஏனைய பாட்டியல் நூல்களில் காணப்படாதவை. நேரம் நிமிர்த்தம் ஆகும்.

📜நாள் – எழுத்துகளைக் கார்த்திகை தொடங்கி இருபத்து ஏழு நாட்களுக்கும் பகுத்து, பாட்டுடைத் தலைவனின் பிறந்த நாளுக்குரிய எழுத்துடனோ அல்லது அவனது இயற்பெயர் எந்த நாளுக்குப் பொருந்தி வருகிறதோ அந்த நாளுக்குரிய எழுத்துடனோதான் அவனைப் பற்றிப் பாடும் பிரபந்தத்தின் முதன் மொழியைத் தொடங்க வேண்டும் எனக்கூறப்படுகிறது.

சொல்லியல்
       முதற் சீர்க்கண் அமைத்தற்குரிய சொல்லினது பொருத்தங் கூறுதலால் இவ்வியல் இப்பெயர் பெற்றது. சொல் என்ற ஆகு பெயராய் சொல்லாகும் பொருத்தங்களை உணர்த்தி நின்றது. இது முதன் மொழிக்காகும் சீர் பற்றிக் கூறுகிறது. இதில் கணப்பொருத்தம் மங்கலப் பொருத்தம், பெயர்ப் பொருத்தம், ஆகியவை கூறப் பட்டுள்ளன. கணப் பொருத்தத்தில் இயமான கணம் (துறக்க கணம்) சந்திர கணம், நிலக் கணம், நீர்க்கணம், சூரிய கணம், ஆகாய கணம், தீக்கணம், வாயுக்கணம் என எண்வகைக் கணங்கள் கூறப்பட்டுள்ளன.
இவற்றுள் முதல் நான்கு நன்மை பயப்பன எனவும், பின் நான்கு தீமை பயப்பன எனவும் கூறப்படுகின்றது. ஒவ்வொரு கணமும் இவ்வியல் அசைகளைக் கொண்டது எனக் கூறப்படுகிறது. சான்றாக நேர் நேர் நேர் என்னும் இம்மூன்று அசையினாலாகிய சீர் இயமான கணம் எனப்படும். இந்தக் கணத்தில் (மூவசைச் சீர்) பாடலைத் தொடங்கினால் அது தலைவர்க்கு வாழ்நாளைப் பயக்கும் என்று கூறப்படுகிறது. மங்கலப் பொருத்தத்தில் முதன் மொழிக்காகும் மங்கலச் சொற்களின் பாட்டியல் தரப்பட்டுள்ளது. அவை பொன், பூ, திரு, மணி, புனல், ஆரணம், கடல், செங்கதிர், திகிரி, தேர், பாரி, எழுத்து, மா, நிலம், கங்கை, மலை, புகழ், அமுதம், கார், புயல், உலகம், களிறு, அருந்ததி, பாரி, மதி, நாள், சீர், ஞெண்டு என்பனவாம். அடுத்துப் பெயர்ப் பொருத்தத்தில் குலப்பெயர், குடிப்பெயர், கோத்திரப் பெயர், குணப்பெயர். மனப்பெயர், ஆணைப் பெயர், சிறப்புப் பெயர், சிறப்பியற் பெயர் ஆகியவற்றின் இலக்கணங்கள் கூறப்பட்டுள்ளன.

இனவியல்
      இலக்கியத்தின் பல்வேறு வகைகளை எடுத்தியம்புவதால் இவ்வியல் இப்பெயர் பெற்றது. இதன் முற்பகுதியில் ஒவ்வொரு பாவிற்கும் இனம் வகுத்து (சாதி) இவ்வில் இனத்திற்குரியவரைப் பாட இப்பாவே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற செய்தி கூறப்படுகிறது. அடுத்து இலக்கிய வகைகளைப் பற்றிக் கூறும் பகுதியில் அறுபத்து நான்கு இலக்கிய வகைகளின் பெயர்களும் அவற்றிற்கான இலக்கணமும் கூறப்படுகிறது. இந்நூல் கூறும் இலக்கிய வகைகள் கூறுகின்றன. இலக்கிய வகைகளுக்கான இலக்கணம் கூறுவதோடு இந்நூல் முடிவடைகிறது.

தனிச்சிறப்பு
     பாட்டியல் என்ற இலக்கண வகைக்கு முதல் நூலாக நமக்குக் கிடைப்பது இந்நூலே. பாட்டியல் இலக்கணங்களைக் கூறுகின்ற சிறப்பான நூல்களில் இதுவும் ஒன்று. கருத்துகளைச் சங்கிலித் தொடர்போல் கூறியுள்ள போக்கு நூலின் தனித்தன்மைகளில் குறிப்பிடத்தகுந்த ஒன்று. நூற்பாக்கள் எளிமையும், தெளிவும், சுருக்கமும் கொண்டிலங்குகின்றன. இந்நூலுக்குக் கா.ர.கோ.விளக்கவுரை மட்டும் உள்ளது.

முடிவுரை
       இவ்வாறு பத்தாம் நூற்றாண்டின் பன்னிருபாட்டியல் தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் யாப்பு நூல் ஈராக இலக்கண நூல்கள், பாட்டியல் இலக்கண வளர்ச்சிக்கு அளித்துள்ள பங்களிப்பு, இதுகாறும் அறிமுக நிலையில் இங்கு தொகுத்து நோக்கப்பெற்றன. தனியொரு வகையாகப் பாட்டியல் தோன்றி வளர்ந்து நிலைபெற்ற வரலாற்றை இக்கடுரையில் நோக்கப் பெற்ற செய்திகளால் தெளிவாக உணர முடியும்.

துணை நூற்பட்டியல்
1.அரங்கராசன். ச. மருதூர் ‘இலக்கண வரலாறு பாட்டியல் நூல்கள், பாலமுருகன் பதிப்பகம், மருதூர் அஞ்சல் உடையார் பாளையம் வட்டம், திருச்சி மாவட்டம், முதல்பதிப்பு: டிசம்பர் 1983.

2.அரங்க நலங்கிள்ளி,’பாட்டியல்கள்’ (ஓர் அறிமுகம்), வாணிதாசன் பதிப்பகம், புதுவை – 607 402. முதல் பதிப்பு: 1986.

3. அரங்க நலங்கிள்ளி,’பாட்டியல்கள்’ – ஓர் அறிமுகம், ஆய்வேடு, 1983.

4.அறவாணன் (உ.ர்) (ப.ர்), ‘அவிநயம்’ ஜைய இளைஞர் மன்றம், சென்னை-17. முதல் பதிப்பு: 1974, நவம்பர்.

5.அருணாசலம். மு., ‘தமிழ் இலக்கிய வரலாறு’, பதின்மூன்றாம் நூற்றாண்டு, முதல்பதிப்பு: 1970, தி.ப. 2005.

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் ஞா.விஜயகுமாரி
உதவிப் பேராசிரியர்,
 
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி,

மீனம்பாக்கம்,  – சென்னை-61

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here