Keeranur Zakir Rajavin Puthinangalil Samuthaayach Sinthanaigal|M.Mohammed Rukman

Abstract
         
           Among Islamic Tamil writers, Keeranur Jagirraja is a prominent creator who has established his presence in various fields such as short stories, novels, criticism, literary discourse, and literary forum discourse. Through his literary works, it is his nature to convey special and big messages in a few words, taking the lifestyle of the people, social standing, cultural strategies, feminism, the lives of marginalized people, and Islamic religious principles as the basis. The main objective of this article is to examine the social thoughts expressed in the author’s novels.

“கீரனூர் ஜாகிர்ராஜாவின் புதினங்களில் சமுதாயச் சிந்தனைகள்”
         
         இசுலாமியத் தமிழ் எழுத்தாளர்களுள் சிறுகதை, புதினம் , விமர்சனம்,  இலக்கியப் பேச்சு, இலக்கிய மன்றக் கூட்டச் சொற்பொழிவு என்று  பன்முக நோக்கில் தன் இருப்பை நிறுவிக் கொண்டிருக்கும் கீரனூர் ஜாகிர்ராஜா  தலை சிறந்த படைப்பாளி ஆவார். இவரின் இலக்கியப் படைப்புகள் மூலம் மக்களின் வாழ்வியல், சமூக நிலைப்பாடு, பண்பாட்டு உத்திகள், பெண்ணியம்,விளிம்புநிலை மக்களின் வாழ்வு, இஸ்லாமியச் சமயக் கொள்கைகள் ஆகியவற்றை அடிநாதமாகக்  கொண்டு   சிறப்புற மிகப்பெரிய செய்திகளையும் சில சொற்களால் சொல்வது இவரின் இயல்பு. ஆசிரியரின் புதினங்களில் வெளிப்படும் சமுதாயச் சிந்தனைகளை ஆய்வதே இக்கட்டுரையின் தலைமை நோக்கமாக அமைகின்றது.

முதிர்கன்னியின்துயர் 
         
      இன்றைய சமுதாயத்தில் முதிர்கன்னிகளின் எண்ணிக்கை என்பது அதிகமாகவே  காணப்படுகிறது. காரணம் வரதட்சணை. அதுவும் இல்லை என்றால் ஏதேனும் ஒரு குறையினைக் கூறுகிறார்கள். ஒரு பெண் குண்டாக இருந்தால் பூசணிக்காய் மாதிரி குண்டாக இருக்கிறாள் என்கிறார்கள். ஒல்லியாக இருந்தால் முருங்கைக்காய் மாதிரி ஒல்லியாக இருக்கிறாள் என்கிறார்கள்.  முடி கம்மியாக இருந்தால் தேங்காய்க் குடுமிப் போல் முடி இருக்கிறது, கண்கள் வெளித் தள்ளியிருந்தால் பெருங் கண்ணாக இருக்கிறது என்கிறார்கள். கண்கள் உள்ளே சென்று இருந்தால் பொந்துக் கண்ணாக இருக்கிறது என்கிறார்கள். உதடு வீங்கி இருந்தால் உதடி என்று சமுதாயம் ஒதுக்குகிறது. ஆகவே இவ்வுலகில் எல்லா பொருள்களிலும் ஏதேனும் ஒரு குறை இருக்கத்தான் செய்கின்றன. இவ்வாறு ஏதோ ஒரு காரணத்தால் பெண்ணானவள் தட்டிக் கழிக்கப்பட்டு திருமண வாழ்க்கையில் பின்னடைவினை அடைகிறாள். இதை  ஞாயிறு கடை உண்டு புதினத்தில் ஆசிரியர் சிறப்பாக எடுத்துக் கையாண்டுள்ளார். அமானுல்லா புரோக்கர் தனது மகளுக்கு வரும் வரன்கள் தட்டிக் கொண்டே செல்கின்றன என்ற மனவேதனையும் ஆதங்கமும் அடைவதுடன் உறவுக்காரர்கள் யாரும் தன் மகளை மணம்முடிக்க முன்வரவில்லை என்றும்  மனவேதனையை வெளிப்படுத்துகிறார். இதனை ஆசிரியர்,

” ‘ஊரும் உறவும்’ என்றதும் அமானுல்லா புரோக்கருக்கு கோபம் வந்துவிட்டது. ‘சொந்தத்துல ஏழெட்டு மாப்பிள்ளைங்க இருக்கானுங்களே. எவனாச்சும் நம்ம புள்ளைய கட்டிக்க சம்மதிச்சானுங்களா? நெறம் கம்மி பல்லு கோணல் வாய் கோணல்ன்னு காரணஞ் சொல்லி தட்டிக் கழிச்சானுங்கதான். நீ என்னமோ ஊரு ஒறவுங்குற. அவனுங்க கெடக்கறானுங்க சல்லிப் பயலுக” (கீரனூர் ஜாகிர்ராஜா, ஞாயிறு கடை உண்டு, ப.24)
         
        எனும் வரிகளில் சுட்டிக்காட்டுகிறார். எனவே ஆண்கள் பெண்களுக்கு வாழ்க்கை தர முன் வருதல் வேண்டும். கன்னிப் பெண்கள் விடிகின்ற பெருமூச்சு இச்சமூகத்தை எரிக்கும் நெருப்பு என்பதை உள்ளத்தில் கொண்டு ஏழை குமரிப் பெண்களை எவ்விதமான எதிர்பார்ப்பும் இன்றி திருமணம் முடிக்க வேண்டும் இன்னும் கருத்தினை ஆசிரியர் இங்கு மறைமுகமாகச் சாடுகிறார்.
 குடும்பச் சூழல் காரணமாக பெண்கள் வேலைக்குச் சென்றுத் தன்னுடைய வாழ்நாளில் பாதி நாட்களைக் கழிக்கிறார்கள். குடும்பப் பொறுப்புகளை முன்னெடுத்து நடத்துகிறார்கள். பொறுப்புகள் மிகுந்திருப்பதால் அவர்கள் திருமண வாழ்வைக் குறித்து சிந்திக்க மறந்து விடுகிறார்கள். தனக்கான துணையைத் தேடி இறுதியில் ஏமாற்றம் அடைகின்றனர்.இதனை ஆண்டாள் பிரியதர்ஷினி,

“வனவாசம் தாண்டியும்வந்துசேராதராமனைத் தவிர்த்துக்கிளம்புகிறாள் சரஸ்வதிதானேவில்லேந்தி” (ஆண்டாள் பிரியதர்ஷினி, சரஸ்வதியின் ஆயுத எழுத்து,  ப.89)
         
       இவ்வரிகளில் பெண்ணே இனியாவது உனக்கான வாழ்க்கைத் துணையைத் தேடு என வழிபடுத்துவதை அறிய முடிகிறது.
 
இறைச்சியில் கலப்படம்         
        இவ்வுலகில் பல்வேறு பணி வாய்ப்புகளில் பல சிரமங்களுக்கு இடையில் நாம் பணம் சம்பாதிப்பதன் நோக்கம் இரண்டே இரண்டுதான். நாம் பிடித்ததை எல்லாம் உண்ண வேண்டும் என்பதற்காகவும் பிடித்ததை எல்லாம் நாம் வாங்கி அதனை உபயோகப் படுத்த வேண்டும் என்பதற்காகவும் தான். ஆனால், நாம் வாங்கி உண்ணும் உணவுகளில் கலப்படம் என்பது பல்கிப் பெருகிவிட்டது. மல்லித்தூளில் மாட்டுச் சாணத்தைக் கலப்பதும் மஞ்சளில் கான்பிளவர் மாவைக் கலப்பதும் இயல்பாகிவிட்ட காலத்தில் நாம் வாழ்கிறோம். இதைவிடக் கொடுமை என்னவென்றால் கோழிக்கு ஊசி செலுத்தி ஆறு மாதத்தில் வளர வேண்டிய கோழியை இரண்டு மாதத்தில் பருமனடையச் செய்து  அதனை நாம் உண்ணுகின்ற வாழ்க்கைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். அது உடலுக்கு மிகவும் கெடுதி என்பதை நாம் அறிவோம். அதையும் மிஞ்சும் அளவிற்கு மீனுக்கும் ஊசி செலுத்துதல், மருந்து தெளித்து விடுதல் போன்ற வக்கிரகங்கள், வன்முறைகள் இந்த சமூகங்களில் நடந்துக் கொண்டிருக்கின்றன. இவை உடல் நலத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் மிகவும் தீங்கு தரக்கூடியாது. இப்படிப்பட்ட நிலையை தன்னுடைய ஞாயிறு கடை உண்டு புதினத்தில் ஆசிரியர் கொடுவா வகாபு மூலம்  காட்டுகிறார்.

“ஏப்பா கோழிக்கடைக்காரனுவல்லாம் கிலோ எண்பது தொன்னூறுன்னு போர்டு மாட்டி டெய்லி ஐநூறு கிலோ அறநூறு கிலோ விக்கிறானுவ… நம்மாளுவ கோழி குண்டில என்னென்ன ஊசிபோட்டு கண்டமேனிக்கு அத சதப்போட வைக்கிறானுவன்னு புரிஞ்சுக்காம கண்ண மூடிக்கிட்டு தின்னு தொலைக்கிறானுவ…’ என்றான்.மீன்ல ஏதோ கெமிக்கல கலக்கறானுவ அது இதுன்னு டிவில சொல்றானுவப்பா. ஜனங்க அத நம்பிட்டு வரமாட்டேங்குதுவ…”       (கீரனூர் ஜாகிர்ராஜா, ஞாயிறு கடை உண்டு, பக்159-160)
         
       மேற்கண்ட வரிகளின் மூலம் நாம் இதை அறிய முடிகிறது. எனவே உண்ணும் இறைச்சியில் கலப்படம் என்பது நஞ்சை விதைப்பதற்கு சமம். எனவே அப்படிப்பட்ட தேவையற்ற காரியங்களால் சில சமயம் உயிர் பறிபோகும் அபாயங்களும் ஏற்படக்கூடும் என்பதால் நாம் விழிப்புணர்வுடன் இறைச்சியினை வாங்குதல் வேண்டும்.

தாயன்பு           
      தன்னுடையக் குழந்தை வயிற்றில் இருக்கும் பொழுது அதை தொட்டுத் தொட்டு ரசித்து இன்பம் அனுபவித்தவள் தாய். தன்னுடைய குழந்தை கருப்பா சிகப்பா என்று தெரியாது. எப்படிப்பட்ட தோற்றப் பொழிவுடன் இருக்கும் என்று தெரியாது. ஆணா, பெண்ணா என்று தெரியாது, ஆனால், குழந்தைப் பிறக்கும் முன்பே கருவிலிருந்து நம்மை நேசிக்கத் தொடங்கியவள்  நம்முடையத் தாய். அப்படிப்பட்ட தாயை நாம் மதிக்க வேண்டும். தாய்மையைப் போற்ற வேண்டும்.
நான்மணிக்கடிகை தாய்மையின் சிறப்பினை கூறுகையில்,

“…….ஈன்றாளோடுஎண்ணக் கடவுளும் இல்” ( நான்.57:3-4)
         
           என்ற அடிகள் ஒருவருக்கு தாயை விட சிறந்த தெய்வம் இல்லை என குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் தாயின் பாதத்தில் சொர்க்கம் இருப்பதையும் தந்தையின் பொருத்தத்தில் இறைவனின் பொருத்தம் இருப்பதையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. தாய்மையின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது ஆசிரியரின் தனிப்பட்ட கருத்தாக அமைகிறது. வடக்கேமுறிஅலிமா புதினத்தில் அஹமது குட்டி தன்னுடைய தாயின் உயிர் பிரியும் வேளையில் அருகில் இருந்து பணிவிடைகள் செய்தார் என்பது ஆசிரியரால் புதினத்தில் காட்டப்பட்டுள்ளது.

“தாயின் காலடியில் சுவர்க்கமிருப்பதால் அஹமதுகுட்டி அருகிலிருந்து பணிவிடைகள் செய்தார்.” (கீரனூர் ஜாகிர்ராஜா, வடக்கேமுறிஅலிமா, ப.15)
           
       எனும் வரிகளில் ஆசிரியர் சுட்டுகிறார். பெற்றோர் உயிருடன் இருக்கும் பொழுதே நாம் அவர்களைக் கொண்டாட வேண்டும். அவர்களுக்கு நாம் மதிப்பு செய்ய வேண்டும். அவர்களுடைய எண்ணங்களை நாம் வண்ணங்களாக்க வேண்டும். நம் சிறுவயதில் நம்மை அவர்கள் எப்படிப் பேணிப் பாதுகாத்தார்களோ அதுபோல நாமும் அவர்களை கண்ணின் மணியாய் கருத்தின் ஒளியாய்ப் பேணிப் பாதுகாத்தல் மறுமைக்கும் நமக்கு நல்வினையாக அமையும். எனவே பெற்றோரின் மனம் நோகடிக்காத குழந்தை எதுவோ அதுவே நல்ல குழந்தை என்பதும் ஆசிரியரால் மறைமுகமாக இங்கு சுட்டிச் செல்லப்படுகிறது.

பணியிடத்தில் பெண்களின் நிலை
         
          பெண்கள் தங்களுடைய குடும்பத்தில் ஏதோ ஒரு வறுமையின் காரணமாகவோ, குடும்பத்தில் குடும்பத் தலைவன் சரியில்லாததன் விளைவாகவோ பணிக்குச் செல்லும் அவலநிலை இச்சமூகத்தில் நிலவுகிறது. ஆனால் அதைப் பணியிடத்தில் முதலாளிமார்கள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். யாரும் இல்லாத நேரத்தில் பணிப் பெண்களிடம் தகாத வார்த்தைகளும் இச்சை உணர்வைத் தூண்டக்கூடிய விதமாகவும் அவர்களின் மன உணர்வுகளைத் தூண்டிப் பார்க்கும் வண்ணமாகவும் நடந்துக் கொள்வது இச்சமூகத்தில் மறைமுகமாக  ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஞாயிறு கடை உண்டு புதினத்தில் ரெடிமேட் கடையில் நடக்கக்கூடிய முதலாளித்துவ வக்கிரகங்களை ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளது இவ்விடம் காட்டப்படுகிறது.

“ஒங்கம்மாவுக்கு இன்னுமா பீரியட் வர்ரது நிக்கல?”“என்ன திடீர்னு சதப்போட்ருக்க… வீட்ல மாப்ள கீப்ள பாக்கறாங்களா என்ன? இடுப்புல்லாம் பிதுங்கிக் கெடக்கு…” (கீரனூர் ஜாகிர்ராஜா, ஞாயிறு கடை உண்டு, ப.128)

          இவ்வாறெல்லாம் பணிப்பெண்களிடம் முதலாளிமார்கள் பேசுமாறு அமைத்துக் காட்டியுள்ளார். பெண்களுக்கு திரும்பி பேசத் தெரியாமல் எல்லாம் இல்லை. எதிர்த்துப் பேசினால் நம்மை வேலையை விட்டு முதலாளிக்கு தூக்கி விடுவாரோ, சோற்றுக்கு என்ன செய்வது, கடன்காரன் தொல்லைக்கு என்ன பதில் சொல்வது என்பதற்கு அஞ்சி, தங்கள் மனதுக்குள் நொந்து யாரிடமும் சொல்ல முடியாமல் உளவியல் ரீதியாகவும் பணிப்பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்னும் நிலைப்பாடு நோக்கலாகிறது. எனவே பணிப் பெண்களின் மன உளவியலையும் உள்ள கிடக்கைகளையும் வாழ்வியல் போராட்டங்களையும் ஆசிரியர் இவ்விடம் எடுத்துக்காட்டியுள்ளது சமூகத்தில் நான்கு பேர் இனியாவது பணிப்பெண்களிடம் முறையாக, மரியாதையாக நடந்து கொள்ள வாய்ப்பளிக்கும் என்னும் நோக்கத்திலேயே இவ்வாறு ஆசிரியர் பயன்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவியலும் விருத்தசேதனமும்
         
            விருத்தசேதனம் என்பது ஆண்கள் தங்கள் ஆணுறுப்பின் முன் தோலை நீக்கம் செய்யும் முறை ஆகும். இது ‘கத்னா’ என்றும் சொல்லப்படுகிறது. விருத்தசேதனம் செய்வதன் மூலமாக ஆணுறுப்பில் ஏற்படுகின்ற சிக்கல்கள் பலவற்றிற்கு தீர்வாக அமைகிறது என்று அறிவியல் நமக்கு எடுத்துக் கூறுகிறது. நபிகள் நாயகம் காலம் தொட்டு  இஸ்லாமியர்கள் தொன்றுதொட்டு செய்யக்கூடிய  பண்பாடாக இருக்கிறது. இஸ்லாமியப் பண்பாடுகளை வாழ்வியல் விழுமியங்களை தன்னுடைய புதினங்களில் ஆசிரியர் முத்தாய்ப்பாய் கையாண்டுள்ளது இஸ்லாமிய மக்களுடைய வாழ்வியலையும் பண்பாடையும்  இச்சமூகத்திற்கு எடுத்துக் கூறி அதன் நல்வினைகளைப் புகட்டுவதற்கு சொல்லப்பட்டவை ஆகும். ஆகவே அதன் நல்வினைகள் யாவையும் மக்கள் அறியவும் இது ஒரு தொடுகோடாக அமைகின்றன.

“மாலி கத்தியைத் தீட்டி சற்றைக்கெல்லாம் “தீன் தீன் முஹம்மது.தீன் நீன் முஹம்மது…”என்று சேர்ந்து குரல் எழுப்பினார்கள். ரத்தம் தோய்ந்த கத்தியைக் கழுவிக் கொண்டான் மாலி அவன் கையில் வெற்றிலைத் தாம்பூலத்துடன் மடிந்து நூற்றியொரு ரூபாய் கொடுத்த குட்டிலெவை குழுமியிருந்தவர்களைக் காவத்துடன் பார்த்தார்.கத்னா செய்யப்பட்ட ரகமத்துல்லாவும் இக்பாலும் பாயில் படுக்க . துணி உரசாமலிருக்க இருவருக்கும் உயரத்தாக்கிக் கட்டியிருந்தது” கீரனூர் ஜாகிர்ராஜா, துருக்கிதொப்பி, ப.158
           
        விருத்தசேதனத்தின்  முறைப்பாடுகளை ஆசிரியர் இவ்விடம் எடுத்துக்காட்டி இருக்கிறார். பிரான்மலை கள்ளர் சமூக இனத்தினர் கூட விருத்தசேதனம் செய்து கொள்வது இன்னும் வழக்கத்தில் இருக்கிறது என்னும் செய்தி இங்கு கூடுதலாக தரப்படுகிறது. எனவே ஆணுறுப்பில் சிறுநீர் தேங்குவதால் பல்வேறு நோய்க்கிருமிகளும் தொற்றுகளும் ஏற்பட அபாயங்கள் இருப்பதால் ஆண்கள்  விருத்தசேதனம் செய்துக் கொள்வது சாலச் சிறந்ததாகும்.

ஊனமுற்றோர்களின் நிலை
         
         இந்த உலகில் நாம் மிகவும் பாவப்பட்டவர்களாக உடல் ஊனமுற்றோரை நினைக்கிறோம். ஆனால் உடல் நன்றாக இருப்பவரைக் காட்டிலும் உடல் ஊனமுற்றோர் பல்வேறு துறைகளில் தங்களுடைய இருப்பை நிலை நிறுத்தி சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் ஒருவரை ஊக்கப்படுத்தவில்லை என்றாலும் கூட பரவாயில்லை. யாரையும் மனச்சோர்வு அடைய வைக்கக் கூடாது என்பதைத் தெரிந்திருக்க வேண்டும். யாருடைய மனதும் புண்படாமல் நடந்துக் கொள்ள வேண்டும். உடலாலோ, மொழியாலோ, செய்கையாலோ உடல்மாறுபாடு உடையவர்களை நாம் தாழ்வாகப் பேசும் பொழுது அவர்களுக்குள் தன்னை அறியாமல் மனச்சோர்வும் தாழ்வு மனப்பான்மையும் ஏற்படும் என்பதை மீன் குகைவாசிகள் புதினத்தில் ஆசிரியர் சலீமின் உள்ளக் கிடக்கையின் மூலம் வெளிக்காட்டியுள்ளார். ஆகவே நாம் கேலி, கிண்டல்கள் செய்வது நமக்கு அந்த நேரத்தில் இன்பம் அளிப்பதாக நினைக்கிறோம். ஆனால் நம்முடைய ஒவ்வொரு சிரிப்பும் ஊடல் ஊனமுற்றோரை மன மனநோவினை அடையச் செய்யும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எனவே அப்படிப்பட்ட நிலைகளில் இருந்து உடல் ஊனமுற்றோரையும் நம்மில் ஒருவராக கருதிக்காத்தல் வேண்டும். சிலர் உடல் ஊனமுற்றோரை பார்ப்பதே கெட்ட சகுனமாக கூட எண்ணுகிறார்கள். அதையெல்லாம் தவிர்த்து நம்மில் ஒருவர், நம் குடும்பத்தில் ஒருவர் என்று எண்ணினால் இந்த சமூகம் வளம்பெறும் என்பதையும் ஆசிரியர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

“நா மாடியில் வந்து உக்காரும்போதெல்லாம் இவுளுங்க என்னெ நொண்டி நொண்டின்னு சீண்டிவிட்டுக்குட்டே இருப்பாளுங்க. என்ன செய்வாளுங்க தெரியுமா? அக்கா தங்கச்சிங்க மூணு பேரு. ஒருத்தி என்னால் காலுக்கு செருப்புப் போட முடியாதுன்டு கை ரெண்டுலயும் செருப்ப மாட்டிகிட்டு காட்டுவா. இந்தவெயிலத் தாங்க முடியாம கையில செருப்ப மாட்டி தரையில் ஊனிக்கிட்டே மாடிக்கி வருவேன்ல, அத கிண்டல பண்ணுவா. ரெண்டாவதுள்ளவ கைய காலத் தரையில் வச்சு என்ன மாதிரியே தவழ்ந்து காட்டுவா. இன்னொருத்தி நா பின்னால் குந்திக் குந்தி மாடிக்கி ஏறி வருவேன்ல அப்டி நடிச்சுக் காட்டுவா. மரி இருந்தப்ப இவுளுங்க அராஜகம் ரொம்ப இருந்துச்சு. மரியும் ஒன்னப்போலவே இதெல்லாங் கண்டுக்கமாட்டா. என்னா இதெல்லாம் பாத்துட்டு சும்மா இருக்க முடியாது…” (கீரனூர் ஜாகிர்ராஜா,மீன்குகைவாசிகள், ப.143)
         
         நொண்டி, குருடு, ஊமை, செவிடு என்று குறைகளை வக்கிரகப்படுத்தாமல் அவர்களது உள்ளக் கிடக்கைகளையும் உணர்வுகளையும் நாம் புரிந்துக் கொண்டு நடக்க வேண்டும் என்பதையும் ஆசிரியர் வெளிப்படையாகக் காட்டியிருக்கிறார். ஆகவே தன்னுடைய எழுத்தின் இருப்பை ஆணித்தரமாக பல்வேறு ஆக்கங்களை முன்னிறுத்தி சமுதாயத்திற்கு வளமானக் கருத்துக்களை நேர்முகமாகவோ மறைமுகமாகவோ கீரனூர் ஜாகிர்ராஜா பதிவு செய்கிறார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

குதிக்கிற, ஓடுகிற, தாவுகிற,
விதவிதமாய் நடக்கிற,
ஒருவர்கூட மற்றவரைப் போல் நடப்பதில்லை
பாடல்களுக்கு தாளமிடுகிற,
நீந்துகிற மலையேறுகிற,
புல்வெளிகளில் திரிகிற,
தப்பியோடுகிற,
போருக்குச் செல்கிற,
படைவீரர்கள் கால்கள் உண்மையானதல்ல
நேசித்தவரை நாடிச் செல்கிற,
சிகரெட்டை நசுக்குகிற,
மயானங்களிலிருந்து திரும்புகிற,
விலங்கு பூட்டப்பட்ட,
பெருவிரல்கள் சேர்த்துக் கட்டப்பட்ட,
வாகனங்களை ஸ்டார்ட் செய்கிற,
வரிசையில் நிற்கிற,
தையல் எந்திரத்தில் உதறுகிற,
சுருங்கிய தோலுடைய,
நரம்புகள் புடைத்த,
சிரங்கு தின்ற,
குஷ்டத்தில் அழுகிய,
முத்தமிட தூண்டுகிற கால்கள்.
 
யாரைப் பார்த்தாலும்
நான் பார்ப்பது கால்கள்.
ஒட்டுவேன்
என் கால்கள் ஆல்பத்தில்
எல்லாக் கால்களையும். 
பெட்டிக்கடியில்
ஒளித்து வைத்துவிடுவேன்
அன்னியர் பார்த்துவிடாமல்
என் போலியோ கால்களை மட்டும்..!”
                             (மனுஷ்ய புத்திரன்,என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள், ப. 38)
         
         இக்கவிதையின் மூலம் மனுஷ்ய புத்திரன் பல்வேறு வகையான கால்களைக் காட்டுகிறார். இருப்பினும் போலியோ பாதிக்கப்பட்ட தன்னுடைய கால்களை ஊனமுற்ற ஒருவர் பெட்டிக்கடியில் யாரும் பார்த்து விடாத வண்ணம் மறைத்து வைப்பதையும் இவ்விடத்தில் குறிப்பிடுகிறார். ஆகவே ஊனமுற்றோர்கள் பிறர் தன்னைக் கேலி, கிண்டல் செய்து விடக்கூடாது என்பதில் அதிக கவனமாக இருப்பார்கள் என்பது இதன் மூலம் அறிய இயலுகிறது. எனவே அவர்களின் உளப் பாங்கினை அறிந்து நாமும் அவர்களை நோவினை செய்யக்கூடாது என்பதையும் இங்கு ஆசிரியர் மறைமுகமாகக் காட்டுகிறார்.

நிறைவுரை
         
          முதிர்கன்னிகள் இல்லாத சமூகமாய் என்று இச்சமூகம் தலை எடுக்குமோ அன்றே நாடு வளமுடையதாக அமையும் எனலாம். உண்ணும் உணவுப் பொருட்களில் கலப்படத்தை ஏற்படுத்துவதன் மூலமாக அது மனித உடல் நலத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் மிகப்பெரிய தீங்கினை ஏற்படுத்துகிறது. இருப்பவன் தொலைப்பதும் இல்லாதவன் தேடுவதும் தாயின் அன்பாகும்.எனவே,நம்முடையப் பெற்றோரை  பேணிப் பாதுகாத்தல் வேண்டும். குடும்ப சூழ்நிலையால் பணிக்கு வரும் பெண்களிடத்தில் கண்ணியமான முறையில் முதலாளிமார்கள் நடந்து கொள்வது அப்பணிப்பெண்களுக்கு நாம் செய்யும் மரியாதையாகும். விருத்தசேதனம் உடல் நலத்திற்கு நலவாக அமைகிறது. பல நோய்த்தொற்றுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. அவை சமயம் சார்ந்த ஒன்றாக நாம் கருதாமல் உடல்நலம் சார்ந்ததாக கருதுதல் வேண்டும். சமூகமுன்னேற்றம் அடைய வேண்டுமானால் இவ்வாக்கக் கூறுகளில் தனித்த நிலையுடன் முன்னேற்றம் பெறுவதை விட வேறு வழியே இல்லை என நாம் ஒல்லும் வகையில் உணர்தல் வேண்டும்.

பார்வைநூல்கள்
1. கீரனூர் ஜாகிர்ராஜா, ஞாயிறு கடை உண்டு கீரனூர் புக்ஸ், 48/25,5A தென்றல் நகர், முனிசிபல் காலனி, தஞ்சாவூர் – 613 007. இ. ப – மார்ச் 2025

2. கீரனூர் ஜாகிர்ராஜா, மீன்குகைவாசிகள்,எதிர்வெளியீடு, 96,நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி 642002, இ. ப ஆகஸ்ட் 2013

3. கீரனூர் ஜாகிர்ராஜா, வடக்கேமுறிஅலிமா, எதிர்வெளியீடு, 96,நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி 642002 மு.ப – டிசம்பர் 2013

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
திரு. மு. முகமது ருக்மான்,
முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம் )
தமிழ்த்துறை,
எஸ்.ஐ.வி.இ.டி கல்லூரி,
கௌரிவாக்கம், சென்னை – 14.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here