Abstract
Sangam literature paints a vivid picture of the ancient Tamils as a remarkably mature and sophisticated society. These classical texts reveal a community deeply in tune with nature, adapting their culture to the five distinct landscapes (thinai) they inhabited. Their scientific prowess was extensive, ranging from astronomy and the ability to predict celestial events to practical knowledge of medicine, agriculture, and even chemical processes. This scientific worldview, which stretched from the atomic to the cosmic, is the focus of this study. To prove this, this paper will analyze the profound psychological insights embedded within the poems of the Kuruntokai.
“குறுந்தொகை கூறும் உளவியல்”
ஆய்வுச் சுருக்கம்
அறிவு முதிர்ச்சி பெற்ற ஒரு சமூகத்தினராகப் பண்டையத் தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். ஐவகை நிலத்திலும் இயற்கைச் சூழலுக்கு ஏற்ப பண்பட்ட சமூகமாக வாழ்ந்து வந்துள்ளனர் என்பதை சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. விண்ணிலும் மண்ணிலும் நடக்கின்ற நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து வாழ கற்றுக் கொண்ட தமிழர்கள் நாள்,கோள்,விண்மீன்கள் ஆகியன பற்றிய வானியல் அறிவும் மருத்துவச் சிந்தனையும் வேளாண் நுட்பங்கள் பற்றிய சிந்தனையும் வேதியியல் மாற்றங்களையும் நன்கு உணர்ந்து அறிவியல் சிந்தனைகளில் ஆழமாக சிந்தித்துள்ளனர் . தமிழர்களின் வாழ்வில் அறிவியல் சிந்தனை என்பது அணுவில் தொடங்கி அண்டம் வரை பரவிக் கிடக்கின்றது இதனை மெய்ப்பிக்கும் வகையில் குறுந்தொகையில் கூறப்பட்டுள்ள உளவியல் கூறுகளை மையமிட்டதாக இந்த ஆய்வுக் கட்டுரையானது அமைக்கப்பட உள்ளது.
முன்னுரை
மனிதர்களின் உள்ளங்களை ஊடுருவி ஆழமாகச் சென்று அகழாய்வு செய்யும் அறிவியல் துறை உளவியல் எனப்படும், இவ்வுளவியல் மாந்தர்களின் செயல்பாடுகள், புலன்களின் புலன்பாட்டு நெறிகள்,அடி மனதில் பன்முக நிலைகள் போன்றவற்றை அறிய உதவும், குறுந்தொகை மாந்தர்களின் கூற்றுகள் அதனை வெளிப்படுத்துவதில் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது .குறுந்தொகை கட்டமைப்பு மட்டுமின்றி கருத்தியலை புலப்படுத்தும் சொல் அமைப்பிலும் படைப்பாக்க உளவியலை தன்னகத்தே கொண்டுள்ளது. எண்ணமே சொல்லாக வெளிப்படும். சொல்லே செயலாக வெளிப்படும் . செயலே பழக்கமாக உருவாகும். பழக்கமே குணமாக நிலைபெறும் என்ற நடத்தை உளவியலையும் குறுந்தொகை கூறும் சிறப்பினை இக்கட்டுரையானது எடுத்து விளக்குகிறது .
உள்முகச் சிந்தனை உளவியல்
குறுந்தொகப் பாடல்களை முழுவதும் உணர்ந்து விளங்கிக் கொள்ள உளவியல் வழிலான அணு முறைகள் பெரிதும் உதவும் .சங்க காலப் புலவர்கள் பெற்றிருந்த உளவியல் ஆளுமைக்கு உரைககல்லலாத் திகழ்ந்தவை குறுந்தொகை பாடல்கள் எனலாம் தலைவியின் களவு ஒழுக்கம் உடன்போக்கு போன்றவை குறித்துச் செவிலித்தாய் கூற்றாக வரும் குறுந்தொகை பாடல்கள் உளவியல் சிந்தனைகளை உள்ளடக்கியதாகும். வெள்ளிவீதியாரின் பாடலில் தலைவனோடு பாலை நிலத்தில் உடன்போக்கு சென்ற தலைவியை தேடிச்சென்றும் காண முடியாமல் வருந்தி கூறும் செவித்தாய் கூற்று இதற்கு சான்றாக அமைகின்றது.
“காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாள் இழந்தனவே
அகல் இரு விசும்பின் மீனும்
பலரே மன்றஇவ் உலகத்து பிறரே “
செவிலித்தாய் முதுமை அடைந்தவள் என்பதாலும் பாலை நிலத்தில் நடந்து செல்வதற்கு கடினமாக இருக்கும் என்பதனாலும் நடந்து அவளுக்கு கால்கள் ஓய்ந்தன. மகளையும் மகளின் தலைவனையும் காணும் முயற்சியில் அவள் வெற்றி பெற்றிருந்தால் தனது கால்களின் வேதனை பற்றிக் கவலை கொண்டிருக்க மாட்டாள். பாலை நிலத்தில் நெடுந்தொலைவில் ஆணும் பெண்ணுமாக இணைந்து வருவோரை நோக்கி இவ்விருவர் நம் மகளும் அவள் தலைவனும் போலும் என்று எண்ணி கூர்ந்து நோக்கினாள், அவ்விருவரும் அருகில் வர இவ்விருவர் தன் மகளும் அவள் தலைவனும் அல்ல என்பதை அறிகிறாள் பின்னர் இவ்வாறு வருவோரை நோக்கி மனம் வெறுக்கிறாள் .
செவிலித்தாய் ஆணும் பெண்ணுமாக இணைந்து வரும் சிலரை நேரில் கண்டாள் தன் மனதில் எதிர்பார்ப்பு ஏக்கம் ஏமாற்றம் சலிப்பு சோர்வு முதலிய துன்பியில் உணர்வுகளால் பாதிப்படைந்து, உலகில் ஆண் பெண் இணையர் எண்ணிக்கை இவ்வளவு அதிகமாக என்று வியப்பும் துயரமும் கலந்த அவள் கூற்றில் உள்ள உள்முக சிந்தனையை உளவியல் பன்முகத்தோடு நோக்கியது சிந்தித்து மகிழத்தக்கது.
நடத்தை உளவியல் சிந்தனை
குறுந்தொகை பாடல்களில் நடத்தை உளவியல் சிந்தனைகள் (psychological realism) உண்மையாகவே ஓங்கி நிற்கின்றன. மோசிகீரனாரின் பாடலில் வரும் செவிலித்தாய் தலைவியின் ஆழ் மனதில் இருந்த களவு ஒழுக்கத்தை தான் அறிந்து கொள்ள நேர்ந்த சூழலை தலைவியின் நடத்தை உளவியல் மூலம் அறிகிறாள். செவிலித்தாய் தன் மகளை ஒரு முறை தழுவியதோடு விட்டு விடாமல் மீண்டும் தழுவிய போது ‘நான் வியர்வை அடைந்தேன் ‘என்றாள் மகள் அவளுக்கு வெறுப்பு உண்டான காரணத்தை நான் அப்போது அறியவில்லை ஆனால் இப்போது அறிந்தேன் என்கின்றாள் செவிலித்தாய் இக்கருத்தை புலப்படுத்தும் விதமாக
“பெயர்த்தெனன் முயங்கயான் வியர்த்தனென் என்றள்
இனி அறிந்தேன் அது துனி ஆகுதலே”
என்ற பாடல் அடிகள் அமைந்துள்ளது .தலைவியானவள் வியர்க்கிறது என உரைத்ததில் என்னை தழுவ வேண்டாம் என்ற நடத்தை உளவியல் புலப்படுகிறது. இரவில் தலைவன் நினைவால் உண்டான உடல் வெப்பம் காரணமாக வியர்க்கிறது என கூறிய நடத்தை உளவியலும் வெளிப்படக் காணலாம் .செவிலித் தாயின் தழுவுதலால் எப்போதும் மகிழ்ச்சி அடையும் தலைவி தலைவனின் தழுவுதலால் பெரும் இன்பத்தை அனுபவித்ததும் பிறர் தழுவுதலை வெறுப்பவளாகி வியர்க்கிறது என்று செவிலித் தாயிடமே சினம் கொள்ளும் நடத்தை உளவியல் பாங்கு இதுவாகும்.
உவகை உளவியல் சிந்தனை
மனிதன் செயலையும் அனுபவத்தையும் அறிவியல் முறையில் ஆராய்வதை உளவியல் எனலாம். இதனை மனித மனத்தின் உள் மனம் சார்ந்த உளவியல் என்றும் கூறலாம். தன் மகள் கணவனோடு இன்பம் தரும் இனிய இல்லறம் நடத்துவதை அறிந்து செவிலித் தாயும் நற்றாயும் மகிழ்ச்சி அடைவதைக் குறித்து கூடலூர் கிழார் பாடும் பாடலில் உவகை உளவியல் புலப்பட காணலாம்.
“முளி தயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக்
நுண்ணிதின் மகிழ்ந்தன ஒண்ணுதன் முகனே”
தலைவியின் உணவு சமைக்கும் திறனும். தலைவனின் அன்பான பாராட்டும் பாராட்டல் தலைவி கர்வம் கொள்ளாமல் மனதிற்குள் உவகை கொள்ளும் பண்பும் செவிலித் தாயின் உளவியல் திறத்தினால் கண்டறியப்பட்டன. மேலும் இனிது என கணவன் உண்டது ஏன் என்ற வினாவிற்கு தொல்காப்பியம் கற்பியல்
“எனது சுவைப்பினும் நீகை தொட்டது
வானோர் அமுதம் புரையுமால் எமக்கென”
எனும் நூற்பா இதற்கு விடையாக அமைவதை காணலாம். இதன் பொருள் அமிர்தத்திற்கு மாற்றாகிய நஞ்சை உண்டாலும் தலைவியின் கைபட்ட பொருள் தலைவனுக்கு தேவலோக அமிர்தம் போன்றுதான் இருக்கும் என்பதாகும் . தலைவியின் ஆடையும் உடம்பும் அழுக்குற்றதை நற்றிணை
“நெய்யும் குய்யும் ஆடி மெய்யோடு
மாசு பட்டன்றே கலிங்கமும் தோளும்”
என்ற பாடல் அடிகள் மெய்ப்பிப்பது இங்கு உணர முடிகின்றது.
முடிவுரை
உளவியல் அறிஞர்கள் தோன்றுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மனிதர் மனங்களின் ஆழத்தை கண்டறிந்து அதிசயிக்கும் வகையில் பாடல்களை புனைந்தோரின் உளவியல் கருவூலம் குறுந்தொகையாகும். குறுந்தொகை நன்கு அறியப்பட்ட மனித மனத்தின் உளவியல் சிந்தனைகளை மட்டும் இன்றி அறியப்படாத ஆழ்மனத்தின் உளவியல் கூறுகளையும் தன்னகத்தே தாங்கி நிற்கும் பெருமையை இக்கட்டுரையானது வெளிப்படுத்துகிறது.
பயன் பயந்த நூல்கள்
1.கு.வெ பாலசுப்பிரமணியன் (உரை ), நற்றிணை.
2.உ வே சாமிநாதையர் (உரை)., புறநானூறு.
3.க.முருகேசன்.,செவ்வியல் இலக்கியச் சித்திரங்கள் .
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் நளினி. வெ,
உதவிப் பேராசிரியர் (தமிழ் ),
மொழி, பண்பாடு மற்றும் சமுதாயம்- துறை,
அறிவியல் மற்றும் மானுடவியல் புலம்,
எஸ். ஆர். எம். அறிவியல் மற்றும்
தொழில்நுட்பவியல் நிறுவனம்.
இராமபுரம், சென்னை-87
இனியவை கற்றல்




முனைவர் நளினி. வெ, 

