Abstract
Although many literature appeared in Tamil, Sangam literature is unique. These books are the majority of love and war. There is many evidences about the culture of the Tamil people who lived in the second century AD in Sangam literature. This article is mentioned in the illustrations that were spoken of at the girlfriend in one of the eight years. It is a vault that depicts the life of the ancient Tamil with the adjective of the good CD. From four feet to eight feet, the bottom of the song. The most cited book is short in literary texts. The CD is also known as four hundred. In this case, the five -year -old is the companion who has been created with a variety of angles. The essence of such a proud friend examines the highlights of the illustrations in the CD.
“குறுந்தொகையில் தோழிக்கூற்று – உவமைகள்”
ஆய்வுச் சுருக்கம்
தமிழில் பல இலக்கியங்கள் தோன்றியிருந்தாலும் சங்க இலக்கியங்கள் தனி சிறப்பு உடையன. இவ்விலக்கியங்கள் காதலையும் போரையும் பெரும்பான்மையாக மொழிவன. சங்க இலக்கியங்களில் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் மக்களின் பண்பாடு பற்றிப் பல சான்றுகள் உள்ளன. எட்டுத்தொகையில் ஒன்றான குறந்தொகையில் தோழிக்கூற்று நிகழும் இடங்களில் பேசப்பட்ட உவமைகள் பற்றி இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளன. நல்லக் குறுந்தொகை என்ற அடைமொழியோடு பழந்தமிழரின் வாழ்வியலைச் சித்தரிக்கும் பெட்டகமாகத் திகழ்கிறது. நான்கு அடி முதல் எட்டடி வரை பாடலின் அடிவரையறைக் கொண்டது. இலக்கிய நூல்களில் அதிக மேற்கோள்களாக கையாளப்பட்ட நூல் குறுந்தொகை ஆகும். குறுந்தொகை நானூறு எனவும் பெயர் பெறும் .இப்பெயர் வழக்கு இறையனார் களவியல் உரையால் அறியப்படுகிறது. இவ்விலக்கியத்தில் ஐந்திணைகளிலும் பல்வேறுக் கோணத்துடன் படைக்கப்பட்டிருப்பவள் தோழியேயாவாள். இத்தகைய பெருமை வாய்ந்த தோழியின் இன்றியமையாமையை இவ்வாய்வு குறுந்தொகையில் தோழிக்கூற்று உவமைகளின் சிறப்புகள் பற்றி ஆராய்கிறது.
முன்னுரை
உவமை என்பது பொருளைத் தக்க ஒப்புமைக் கொண்டு உணர்த்துவதாகும். பொருளின் தலைமையைப் புலப்படுத்துவது உவமையாகும். உவமை நான்காகும். அஃது பண்பு, தொழில், பயன், உரு. முதலில் பொருளோடு பொருளினை ஒப்புவமைப்படுத்துவது ஆக உவமை என்பதற்கு இணையாகக் காட்டும் ஒப்புமை விளக்கம் தருகிறது கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி. ஒரு புலவன் தான் எழுதும் செய்யுளில் ஒருக் கருத்தை நிலைநிறுத்த அதேத் தன்மைக் கொண்ட மற்றொருப் பொருளோடு ஒப்பிட்டுப் பேசுவதற்கு உவமையைக் கையாளுகிறான். களவொழுக்க காலத்தில் மட்டுமன்றிக் கற்புக் காலத்திலும் தலைவியின் கூடவே இருந்து உதவுபவள் தோழி. தலைமக்கள் விரைந்து சென்று இல்லறம் நடத்துகையில் தலைவன் தன் நிலையிலிருந்து தாழ்ந்து சில நேரங்களில் பரத்தை என்னும் பொருட்பெண்டிரைத் தேடிச் செல்வான். அவ்வாறு செய்கையில் இரவுச் சோற்றுக்குத் திண்டாடிய முந்தைய நிலையைத் தலைவன் மறந்து பரத்தையர் சுகம்தான் பெரியது என்று எண்ணிய தலைவனை இடித்துக் கூறுபவளாக தோழி விளங்குகிறான். இக்கட்டுரையில் தோழி, நட்புக்கு இலக்கணமாகவும், களவிலும், கற்பிலும் தலைவன் தலைவி இருவருக்கும் அறநிலை வழுவாது பண்போடு இருக்கும் நிலையை இங்குப் பார்க்க முடிகிறது.
உவமையின் வகைகள்
இளம்பூரனார், தொல்காப்பியர் உவமை இயலுக்கு உரை எழுதும் போது பின்வருமாறு எழுதுகின்றார்.
புலன் அவ்வாறன புலன் ஆதலும்
அலங்காரமவிக் கேட்டார்க்கு
இன்பம் பயத்தலும்”
உவமையின் பயன் எனகிறார். தொல்காப்பியர் உவமையின் வகைகளாக ”வினை பயன் மெய் உரு என்ற நான்கே வகை பெற வந்த உவமைத் தோற்றம்” (தொல் நூற்.22) இவற்றையே தண்டி யலங்கார ஆசிரியர் பண்பு தொழில் பயன் என மூன்றாக அடக்கிக் கூறுவார்.
“பண்பும் தொழிலும் பயனும் என்று இவற்றின்
ஒன்றும் பலவும் பொருளோடு புணர்ந்து
ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை” (தண்டி நூற்பா 21)
உவமை என்றால் என்ன?
தெரிந்த ஒரு பொருளைக் கொண்டு தெரியாத ஒன்றை விளக்குவது உவமை என்பர். அதுபோல் செய்யுள்களில் அழகுற அமைந்து காணப்படுவது உவமை. தண்டி அலங்காரம் என்னும் இலக்கண நூல் அணிவகைகளைச் சுட்டி சொல்லும் வகை பல எனினும் உவமைஅணியை மட்டும் ஆய்வு செய்வதே இக்கட்டுரை தன் நோக்கமாகக் கொண்டுள்ளது.
தோழியின் பண்பு
“முன்னுறவுணர்தல் குறையுறவுணர்தல்
இருவரும் உவழி அவன் வரவுணர்தல் என்று
அம்முன்றென்ப தோழிக்கு உணர்ச்சி ” (இறையனார் அகப்பொருள் 7 )
என்ற இறையனார் களவியல் நூற்பா வழித் தோழியானவள் தலைவியது காதல் வயப்பட்ட நிலைமை, உடல் மாற்றம், செயல் மாற்றம், கண்டு உணா்தல், குறையுற்ற வழி உணர்தல், தலைவி தோழி இருவருள்ளவிடத்துத் தலைவன் வந்துழி உணர்தல் என்ற மூன்று நிலைகளில் தன்னுடைய மதியை உடன்படுத்தித் தலைமக்களது காதலுக்குத் துணைபுரிவாள் என்பது புலனாகிறது.
தோழி – அறத்தொடு நிற்றல் (பண்புவமை)
”அரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கை
மேக்கு எழு பெருஞ்சினை இருந்த தோகை
பூக்கொய் மகளிரின் தோன்றும் நாடன்
தகாஅன் போலத் தான்தீது மொழியினும் ….” ( 26 – குறிஞ்சி)
நற்றாயும், செவிலித்தாயும் தலைமகளது வேறுபாடு கண்டு, “இதற்கு காரணம் யாது? என்று கட்டுவிச்சியை கேட்கின்ற பொழுது, ‘தலைமகளது வேறுபாட்டிற்குக் காரணம் பிறிதோர் தெய்வம்’ என்று கூறக்கேட்டு, தோழி அறத்தொடு நின்றது. இப்பாடலில் அரும்புகள் ஏதுமின்றி மலர்ந்த, கரிய அடிப் பகுதியை உடைய வேங்கை மரத்தின் மேற்பகுதியில் வளர்ந்துள்ள பெரிய கிளைகளில் தங்கியுள்ள மயிலானது, மலர்களைக் கொய்யும் இளமகளிரைப் போலக் காட்சியளிக்கிறது என்பதன் மூலம் பண்புவமைக் கையாளப்பட்டுள்ளமையை அறியமுடிகின்றது.
தோழி – வாயில் நிற்றல் (தொழில் உவமை)
யாய் ஆகியளே மாஅயோளே
மடை மாண் செப்பில் தமிய வைகிய
பெய்யாப் பூவின் மெய் சாயினளே;
பாசடை நிவந்த கணைக் கால் நெய்தல்
இன மீன் இருங் கழி ஓதம் மல்குதொறும்
கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும்
தண்ணம் துறைவன் கொடுமை
நம் முன் நாணிக் கரப்பாடும்மே (நெய்தல் 9 )
களவு ஒழுக்கத்தில் தோழி தலைவனைத் தலைவியோடு தொடர்பு கொள்ள அனுமதிக்கும்போது இந்தச் சொற்களைக் கூறி அனுமதிக்கிறாள். மாந்தளிர் போன்ற மேனிநிறம் கொண்ட இவள் தாய் ஆகிவிட்டாள். பெய்யாப்பூ என்பது பொங்கல்-சோறு. சமைத்த பானையில் பொங்கல் சோறு இருப்பது போல இவள் உடல் நலம் தோற்றம் தருகிறது. இதற்காக இவள் தனக்குள்ளே நாணம் கொள்கிறாள். அந்த நாணத்தை மறைக்க முயல்கிறாள். துறைவன் செய்த கொடுமை வெளிப்பட்டுவிடுமே என்று எண்ணி மறைக்க முயல்கிறாள். நெய்தல் பூ நீரில் மூழ்கி எழுவது மகளிர் நீரில் மூழ்கி எழும்போது அவர்களது கண்கள் மூழ்கி எழுவது போலத் தோன்றும் துறை. (நெய்தல் பூ – மகளிர் கண்களுக்கு உவமை இப்பாடலில் கயமனார் பொங்கல் சோறு – உடலம் தோற்றம், நெய்தல் பூ நீரில் மூழ்குதல் – கண்கள் மூழ்கி எழுவது போன்ற உவமைகள் கையாண்டுள்ளார்.
பாலை – தோழிக்கூற்று (உள்ளுறை உவமம்)
பொருள் ஈட்டுவதற்காகத் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். தன்னைவிட்டுப் பிரிந்த சென்ற தன் காதலன் தன்னை நினைத்துக் கொண்டிருப்பானோ அல்லது மறந்திருப்பானோ என்று தலைவி வருந்துகிறாள். “அவர் சென்ற வழியில் ஆண்பல்லி தன் துணையாகிய பெண்பல்லியை அழைப்பதைக் கேட்டவுடன் அவருக்கு உன் நினைவு வரும். அவர் விரைவில் மீண்டும் உன்னிடம் வருவார்.” என்று தலைவிக்குத் தோழி ஆறுதல் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
”உள்ளார் கொல்லோ தோழி கள்வர்
பொன்புனை பகழி செப்பங் கொண்மார்
உகிர்நுதி புரட்டும் ஓசை போலச்
செங்காற் பல்லி தன்றுணை பயிரும்
அங்காற் கள்ளியங் காடிறந் தாரே”. ( பாலை – 16)
தோழி, பாலை நிலத்தில் உள்ள வழிப்பறிக் கள்வர், இரும்பினால் செய்யப்பட்ட தம் அம்பை சுத்தம் செய்வதற்காக, அதை நக நுனியால் புரட்டுவதால் உண்டாகிய ஒலியைப் போல ஒலி எழுப்பும், சிவந்த கால்களை உடைய ஆண்பல்லியானது, தன் துணையாகிய பெண்பல்லியை அழைக்கும் இடமாகிய, அழகிய அடியை உடைய கள்ளிச் செடிகளோடு கூடிய பாலை நிலத்தைக் கடந்து (பொருள் தேடுவதற்காகச்) சென்ற தலைவர், என்னை நினைக்க மாட்டாரோ? ஆண்பல்லி தன் துணையாகிய பெண்பல்லியை அழைக்கும் பாலை நிலத்தில் செல்பவர் அது கேட்டுத் தன் காதலியை நினைவு கொள்வார் என்பது உள்ளுறை உவமம்.
குறிஞ்சி தோழிக்கூற்று (உருவுவமை)
கட்டுவிச்சி அந்த மலையைப் பற்றிப் பாடினால், தலைவியின் மகிழ்ச்சியைக் கண்டு, தலைவியின் செவிலித்தாயும் தாயும் அந்த மலையில் வாழும் தலைவனுக்கும் தலைவிக்கும் உள்ள தொடர்பைப் பற்றிப் புரிந்து கொள்வார்கள் என்று தோழி எண்ணுகிறாள். ஆகவே, அந்த மலையைப் பற்றி மீண்டும் மீண்டும் பாடும்படித் தோழி கட்டுவிச்சியிடம் கூறுகிறாள்.
”அகவன் மகளே அகவன் மகளே
இன்னும் பாடுக பாட்டேஅவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே”. (குறிஞ்சி – 23 )
இப்பாடலில் சங்குமணி மாலை போலக் கூந்தல் (நிறம்) கட்டுவிச்சிக்கு உள்ளதாகக் உவமைப் பேசப்பட்டுள்ளது., கட்டுவிச்சி வயதில் முதிர்ந்து நரைத்த முடியுடையவளாக இருந்தாள் என்பதைக் குறிக்கிறது. தலைவனின் பிரிவால் தோன்றிய வருத்தத்தைத் தாங்க முடியாமல் தலைவி அழுதுகொண்டிருக்கிறாள். அதைக் கண்ட தோழி, “நீ தலைவனோடு சேர்ந்து இருந்தக் காலத்தில் மகிழ்ச்சியோடு இருந்தாய். இப்பொழுது ஏன் அழுகிறாய்? தலைவன் திருமணத்திற்குப் பொருள் தேடுவதற்காகக்தானே சென்றிருக்கிறான். நீ அழுவதை நிறுத்து. அவன் விரைவில் வந்து உன்னைத் திருமணம் செய்துகொள்வான்.” என்று கடிந்து கூறுகிறாள்.
குறிஞ்சி. தோழிக்கூற்று ( பண்புவுவமை )
”நறையகில் வயங்கிய நளிபுன நறும்புகை
குவளை யுண்கண் கலுழப் பசலை யாகா வூங்கலங் கடையே.” (குறிஞ்சி. 339)
இப்பாடலில், “நறை அகில் வயங்கிய நளி புன நறும் புகை” என்ற வரியில், புனத்தில் உள்ள அகில் மரங்கள் தீப்பற்றி எரிந்ததால் உண்டான நறுமணப் புகை, தலைவன் இனி வருவதாகக் கூறி வந்ததால் ஏற்படும் மகிழ்ச்சிக்கு உவமையாக வருகிறது. தலைவன் மீது காதல் கொண்ட தலைவியின் மனம், அகில் புகை போல இனிமையானதாக இருப்பதை இது குறிக்கிறது. தலைவன் பிரிவால் வருந்தும் தலைவிக்கு, அவன் இனி வருவான் என்ற செய்தி மனதுக்கு இனிமையையும் ஆறுதலையும் அளிக்கிறது. அகில் புகையானது, காட்டில் தீப்பற்றி எரிவதால் உண்டாக்கும் நறுமணம் போல, அவனது வருகை குறித்த செய்தியும் மனதிற்கு மகிழ்ச்சியைத் தருவதோடு, அவனது பிரிவின் துயரத்தை மறக்கச் செய்கிறது. என்னும் குறுந்தொகைப் பாடல் உணர்த்துகிறது.
தோழி – தலைவிக்கு ஆறுதல் மொழிக் கூறுதல்
”நீர்வார் கண்ணை நீயிவண் ஒழிய
தேமூர் ஒண்ணுதல் நின்னொடுஞ் செலவே” (பாலை – 22)
நீர் வடியும் கண்களையுடைய தோழி ( தலைவியே!)! உன்னை இங்கே தனியாக விட்டுவிட்டு யாரால் பிரிந்து செல்ல முடியும்? கடம்ப மலரை உடைய கடம்ப மரங்கள், மலைப்பக்கத்திற்கு அழகு செய்கின்றன. வேனிற் காலத்தில் அந்த மலர்கள் மலர்வதால், அவற்றைத் தாங்கி நிற்கும் அழகிய கிளைகளும் மணம் உடையனவாக உள்ளன. அந்த மலர்களின் நறுமணம் போல் மணம் கமழும் ஒளி பொருந்திய நெற்றியை உடைய உன்னை உன் தலைவர் கூடவே அழைத்துச் செல்வார். கடம்ப மரத்தின் மலர்கள் தாங்கி நிற்கும் கிளைகளின் நறுமணமும், அதன் அழகு நீங்கிய பிறகு மீண்டும் மலரும் தன்மையும், தலைவியின் அழகும் இனிமையும் உடைய ஒண்ணுதல் (ஒளி பொருந்திய நெற்றி) ஆகியவற்றுடன் ஒப்பிடப்படுகிறது. தலைவன் பிரிந்து செல்ல முடியாது என்றும், பிரிந்தாலும் தலைவியைத் தன்னுடன் அழைத்துச் செல்வார் என்றும் தலைவிக்கு நம்பிக்கை அளிக்கப்படுகிறது. கடம்ப மலரின் நறுமணம்: மலைப்பக்கத்திற்கு அழகு சேர்க்கும் கடம்ப மரங்கள், வேனிற் காலத்தில் மலர்ந்து நறுமணத்தைப் பரப்புகின்றன. இந்த நறுமணம் போல, தலைவியின் ஒளிபொருந்திய நெற்றியில் இருந்து மணம் கமழும். இந்த உவமை, தலைவியின் துயரத்தைக் போக்கி, அவளுக்கு நம்பிக்கையையும், இனிமையையும் அளிக்கிறது.
தோழித் தலைவனுக்காக தூதுச் செல்லல் (தொழில் உவமை)
பரத்தையிடம் இருந்து மீண்டுவந்த தலைவன், தலைவியோடு வாழ விரும்புகிறான். அவன் தன் மனைவியின் தோழியைத் தனக்காகத் தலைவியிடம் தூதுசெல்லுமாறு வேண்டுகிறான். “நான் என் தவறை உணர்ந்தேன். இனி, இது போன்ற தவறு செய்ய மாட்டேன்.” என்று தோழியிடம் சூளுரைக்கிறான். தோழி , “நான் உன்னுடைய சூளை நம்ப மாட்டேன். என் நலத்தைத் திருப்பித் தந்துவிட்டு, உன் சூளை நீயே எடுத்துக்கொண்டு செல்வாயாக.” என்று கூறித் தோழி அவனுக்காகத் தலைவியிடம் தூது போக மறுக்கிறாள்.
”பாசவ லிடித்த கருங்கா ழுலக்கை
ஆய்கதிர் நெல்லின் வரம்பணைத் துயிற்றி
கொண்டனை சென்மோ மகிழ்நநின் சூளே.” (மருதம் – 238)
இப்பாடலில் உள்ள உவமை நயம் தொண்டி நகரத்தில் உள்ள பெண்கள், வயல் வரப்பில் தங்கள் நெல் உலக்கையைச் சாய்த்துவிட்டு, மணல் அள்ளி விளையாடும் போது மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதுபோன்ற மகிழ்ச்சி தலைவன் தன்னுடன் இருக்கும்போதுதான் இருக்கும். தொண்டி நகரம்: இது மேற்குக் கடற்கரையில் இருந்த ஒரு நகரமாகும். தலைவன் பிரியுமிடத்து, தன்னுடைய மகிழ்ச்சியும் அழகு நலமும் வாடிவிடும் என்பதையும், அதனால் அவன் உடனிருத்தல் அவசியம் என்பதையும் இந்த உவமையின் மூலம் தலைவி உணர்த்துகிறாள்.
தோழியாவாள் – தலைவியைத் தேற்றல்
இன்பத்தில் மட்டுமல்லாமல் துன்பத்திலும் பங்கு கொண்டு, தன்மை தோழி என்பவள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு கடுஞ்சொல்லால் சுட்டி இருவருக்குள்ளும் எவரேனும் தவறு செய்தால் பொய்க்கோபம் காண்பித்து தலைமக்களை வரைவிற்கு உடன்பட வைத்தலையே கடமையாகக் கொண்டிருந்தான் என்பதை,
”வினையே ஆடவர்க் குயிரே வாணுதல்
மனையுறை மகளிர்க் காடவர் உயிரென
நமக்குரைத் தோருந் தாமே
அழாஅல் தோழி அழுங்குவர் செலவே.” (பாலை 135)
என்ற குறுந்தொகை பாடல் இவற்றிற்கு சான்று பகர்கின்றது. இல்லறம் புரிவதற்குரிய பொருளை ஈட்டுதல் ஆடவர்க்கு உயிர் போன்ற என்றும் அவ்ஆடவரைப் போற்றுதல் மனையில் உறைகின்ற மகளிர்க்கு உயிர் என்றும் தோழி தலைமகளைத் தேற்றுபவளாக அமைகின்றாள். தலைவன் பொருள் தேடுவதற்காகப் பிரிந்து செல்ல எண்ணிக்கொண்டிருக்கிறான். அதை அறிந்த தலைவி வரப்போகும் பிரிவை நினைத்து வருத்தத்தோடு அழுதுக்கொண்டிருக்கிறாள். அப்பொழுது, தோழி அங்கு வருகிறாள். அவள் தலைவியை நோக்கி, “ஆடவர்தான் மகளிர்க்கு உயிர் என்று கூறிய தலைவர் உன்னைவிட்டுப் பிரிந்து செல்லமாட்டார். நீ வருந்தாதே!” என்று ஆறுதல் கூறுகிறாள்.
உவமையின் பொருள்
தலைவன், பொருள் தேடுவதற்காக வெளியூர் செல்ல எண்ணியிருப்பதை அறிந்த தலைவி வருந்துகிறாள். அப்போது தோழி, “ஆடவர்களுக்கு தொழில் உயிர் என்றால், அந்தத் தொழிலைக் கைவிடாமல் இருப்பார்கள். அதேபோல், மகளிருக்கு ஆடவர் உயிர் என்றால், தலைவன் உன்னை விட்டுப் பிரிந்து செல்ல மாட்டான். ஏனென்றால், உனக்கு வாழ்வளித்த நீ, உன்னை விட்டுப் பிரிய மாட்டார்” என்று ஆறுதல் கூறுகிறாள். இங்கு வினை என்பது தலைவனின் தொழிலையும், உயிர் என்பது அவனது வாழ்க்கையையும் குறிக்கும் உவமை ஆகும்.
முதமையிலும் இளமை (பண்புவுவமை)
”பெரு நன்று ஆற்றின், பேணாரும் உளரே?
ஒரு நன்று உடையள் ஆயினும், புரி மாண்டு,
புலவி தீர அளிமதி இலை கவர்பு,
ஆடு அமை ஒழுகிய தண் நறுஞ் சாரல்,
மென்நடை மரையா துஞ்சும்
நன் மலை நாட! நின் அலது இலளே.” ( குறிஞ்சி 115)
இப்பாடலில் மலைப்பக்கத்தில் மெல்லிய நடையுடன் மரையாமான்கள் உறங்கும் காட்சியை உவமையாகக் காட்டப்படுகிறது. ‘‘இவள் நினக்குப் பலவகையிலும் இன்பம் தரும் நிலையில் இருக்கின்றாள்; இவள்பால் இப்பொழுது நீ அன்பு பூண்டு பாதுகாத்தல் பெரிதன்று. பெரிய உபகாரம் செய்தாரைப் பாதுகாத்தல் உலகில்யாவர்க்கும் இயல்பே. ஆதலின் இவளால் இப்பொழுது பெறும் இன்பத்தை அடைய முடியாத முதுமைப் பருவத்திலும் இவளுக்கு நின் பாலுள்ள அன்பொன்றையே கருதிப் பாதுகாத்து வருவாயாக. இவளைப் பாதுகாப்பதற்கு வேறு யாரும் இலர்” என்று தோழிக் கூறித் தலைவியைத் தலைவனுடன் விடுத்தாள். மரையா (ஒருவகை விலங்கு) தனக்குப் பயன்படாது ஓங்கி வளர்ந்த மூங்கில்களையுடைய சாரலாயினும் தனக்குப் பயன்படும் இலைகளைத் தேடியுண்டு அதன்கண் அன்புவைத்துத் துயில்வதுபோல நினக்குப் பயன்படாத மூப்புடையளாயினும் நினக்கு உவந்த நல்லியல்பு கண்டு இன்புற்று இவள்பால் அன்பு வைத்து ஒழுகுவாயாக என்று தோழித் தலைவனிடம் கூறுவதை அறியமுடிகின்றது.
முடிவுரை
இவ்வாறு தலைமக்களின் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியில் மகிழ்ச்சியுற்றும், துயரத்தில் துன்புற்றும் தனக்கென முயலாதோன் தன்னுடைய வாழ்வையே அவர்களுக்காக அர்ப்பணிப்பவள் தோழி. தலைமக்கள் வாழ்வில் பல முக்கிய முடிவுகளை எடுத்து தேவையான இடங்கள் இடித்தும் பழித்தும் வழி நடத்துபவளாக அமைபவள், தோழி என்பவள் உண்மையை எல்லோராலும் எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
துணை நூல்கள்
1.தண்டியலங்காரம் – டாக்டர் கு. முத்துராசன், யாழ் வெளியீடு, சென்னை – 600 040
2. தமிழ் இலக்கிய வரலாறு – முனைவா் பாக்யமேரி, நியுசெஞ்சரி புக்ஹவுஸ், சென்னை.
3. குறுந்தொகை மூலமும் உரையும் – முனைவா் வீ.நாகராசன், நியுசெஞ்சரி புக்ஹவுஸ், சென்னை.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
தி.சொர்ணாஞ்சலி
ஆய்வு மாணவர், முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு,
இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரி – திருவாரூர்.
ஆய்வு நெறியாளர்,
முனைவர் கோ.மலர்விழி
தமிழ்த்துறைத் தலைவர்,
இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரி – திருவாரூர்.