Ilakkiyangalil Naattar Valakkatriyal|Dr.A.Janarthali Begam

இலக்கியங்களில் நாட்டார் வழக்காற்றியல் - முனைவர் அ. ஜனார்த்தலி பேகம்
Abstract
               
          The lore of the countryman is today known as ‘Folklore’. This article is designed to show that oral story-telling and story-songs expressing the natural feelings and celebrations of the people living in the rural villages while man lived harmonious with music, the expression of the history of the ancestors through the play and dance, the worship of the deities in the ancestral way and the celebration by offering what is necessary for those gods, the riddle proverb of the village and so on spread out as unwritten poetries in folklore.
Keywords: Verbal, Proverb, Riddle, Song, Dance


இலக்கியங்களில் நாட்டார் வழக்காற்றியல்

ஆய்வுச்சுருக்கம்
         
       நாட்டார் வழக்காற்றியல் இன்று நாட்டுப்புறவியல் என்று அழைக்கப்படுகிறது. இசைக்கு மனிதன் இசைந்து வாழ்ந்த காலம் நாட்டுப்புற கிராமங்களில் வாழும் மக்களின் இயற்கை உணர்வுகளையும் கொண்டாட்டங்களையும் வெளிப்படுத்தும் விதமாக வாய்மொழியாக கதை சொல்லல் கதைப் பாடல்கள், முன்னோர் வரலாற்றை நாடகம் மற்றும் கூத்தின் வழி வெளிப்படுத்துதல், முன்னோர் வழியில் தெய்வ வழிபாடு செய்து அத்தெய்வத்திற்கு தேவையானவற்றைப் படைத்து மகிழ்தல், விடுகதை, பழமொழி போன்றவை ஏட்டில் எழுதாக் கவிகளாக வலம் வந்தது நாட்டுப்புறவியலில் தான் என்பதை எடுத்துக் கூறும் வகையில் இக்கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.

கலைச்சொற்கள்
         
வாய்மொழி, பழமொழி, விடுகதை, பாட்டு, ஆடல்.

முன்னுரை
         
        மக்களின் வாழ்க்கை முறையினை எடுத்துரைப்பது இலக்கியங்களாகும். அத்தகைய இலக்கியங்களில் ஒன்றுதான் நாட்டுப்புறவியல் இவ்விலக்கியங்கள் எண்ணங்களை எவ்வகை நாகரீகமும் கலவாது இயற்கையான வழக்குச் சொற்களாகவே இடம்பெறுகின்றது. ஒரு நாட்டின், ஒரு சமூகத்தின், ஒரு மொழியின் பண்பாட்டுக் கூறுகள் நாட்டுப்புற இலக்கியத்தில் குறிக்கப்படுவதுபோல் வேறு எந்த இலக்கியத்திலும் குறிப்பிடுவதில்லை என்பதே உண்மை. உழைப்புக்கிடையே உவகை பெறவும் களைப்புக்கிடையே களிப்பை அடையவும், சோர்வை அகற்றிச் சுறுசுறுப்புறவும் இன்ப துன்பங்களை வெளிப்படுத்தும் விதமாக ஆடல்களாலும் பாடல்களாலும் நாட்டு மக்களின் மன மகிழ்ச்சிக்காக ஆக்கப்பெற்றவை நாட்டுப்புற இலக்கியங்கள் ஆகும்.

தொல்காப்பியமும் நாட்டுப்புறவியலும்
         
      பழமையான இலக்கண நூலான தொல்காப்பியத்தில் நாட்டுப்புறவியல் கூறுகளைப் பற்றி தொல்காப்பியர் கூறியுள்ளார். அகத்தியம் முதலாவதாகத் தோன்றிய நூல் எனினும் நமக்கு முழுமையாகக் கிடைத்த நூல் தொல்காப்பியமே. மரபு வழித்தோன்றி வாய்மொழி இலக்கியம் செழித்து வளர அடிப்படையாக அமைந்தது தொல்காப்பியமாகும்,
          இலக்கண நூலாயினும் இது இலக்கியச் சிறப்புகளையும் உள்ளடக்கியது. செய்யுளியலில் யாப்பின் வகைகளைக் கூறவந்த தொல்காப்பியர்.
         
“பாட்டு உரைநூலே வாய்மொழி பிசியே       
அங்கதம் முதுசொலோடவ் வேழ்நிலத்தும்       
வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்       
நாற்பே ரெல்லை அகத்தவர் வழங்கும்       
யாப்பின் வழியது என்மனார் புலவர்”(தொல்-பொருள்-செய்யுளியல். 79)
     என்று எடுத்துரைக்கிறார். பாட்டு, உரைநூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் ஆகியன தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே வழக்கில் இருந்தமையை அறியமுடிகின்றது.
தொல்காப்பியர் குறிப்பிடும் பண்ணத்தி இன்றைய நாட்டுப்புற இலக்கிய வகைகளுள் ஒன்றான நாட்டுப்புறப் பாடலைக் குறிக்கிறது. இசையுடன் கற்பனை கலந்து வாய்மொழியாக வழங்குவதைப் பண்ணத்தி எனக் குறிக்கப்படுகிறது. பண்ணத்தியை பிசியோடு ஒப்பிட்டு கூறுகிறார். இம்மரபை பின்பற்றியே சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்ட பாணர், பாடினியர், விறலியர், போன்றோர் வளர்ந்து வந்துள்ளது தெளிவாகின்றது. நாட்டுப்புற இலக்கியம் குறித்து, “நாட்டுப்புற இலக்கியம் ஆழங்காண இயலாத ஆழி போன்றது. இன்னும் எல்லா நாட்டுப்புறக்கலைகளையும் இலக்கியங்களையும் அறிந்துவிட்டோம் என்ற நிலை இல்லை. சிற்றூரில் விளையாடும் சிறுவர்களிடையே பயிலும் சில பாடல்கள் பலரறியாதவாறு பாடப்பெற்றும் வரலாம். நாட்டுப்புற இலக்கியத்தினைப் பாடல், ஆடல், கதைகள், கதைப்பாடல்கள், ஆடல்பாடல்கள், கூத்துகள், விடுகதைகள், பழமொழிகள் என்ற பிரிவுகளில் பெரும்பான்மையானவற்றை அடக்கிவிடலாம். இப்பிரிவுகள் அனைத்தும் ஆடல், பாடல் என்ற இருவகையுள் அடங்கும்”(அ.ஆறுமுகம், நாட்டுப்புற இலக்கியமும் பண்பாடும், பக்.12)
         என்று நாட்டுப்புறவியலுக்கு ஆறுமுகம் விளக்கமளிக்கின்றார்.
“பண்ணத்தி என்ற சொல்லுக்குப் பண்ணை விரும்புவது என்று பொருள். இசைப்பாட்டில் வரையறையான பொருள் அமைந்திருக்கும். இப்பாட்டிலும் இன்னோசை இருப்பினும் இசைப்பாட்டிற்குரிய வரையறையில்லை. ஆதலின் பண்ணமைந்த பாடல் எண்ணாமல் பண்ணத்தி என்றார்”(கி.வா.ஜகந்நாதன், மலையருவி, ப.9)
என்று கூறுகிறார். பண்ணத்தியை,
       
“பாட்டிடைக் கலந்த பொருளவாகியது”(தொல். பொருள். செய்யுளியல். 180)
         
        பாட்டின் இயலது, பிசியொடு மானும், அடி நிமிர்கிளவி ஈராறு ஆகும், அடியிகந்து வரினும் கடிவரையின்றே என ஐவகைத் தன்மைகளைக் குறிப்பிடுகின்றார். பேராசிரியர் தனது உரையில் மெய் வழக்கில்லாத புறவழக்குடையது என்றும் எழுதும் பயிற்சி இல்லாத புறவுறுப்புப் பொருட்களை உடையது என்றும் பண்ணத்திக்கு விளக்கம் சொல்வார். கற்பனை நிறைந்தது என்றும் வாய்மொழியாக வருவது என்றும் பொருள் கொள்ளலாம்.
         
பாட்டுமடை                    – கூடத்தினிடையில் வருவது
         
வஞ்சிப்பாட்டு                 – ஓடப்பாடல்
         
மோதிரப்பாட்டு            – நாடக நூல் வகை
         
கடகண்டு                       – பழைய நாடக நூல்

      ஆகிய நான்குமாம். ‘பண்ணத்தி என்றால் சிற்றிசையும் பேரிசையும் முதலாக இசைத்தமிழில் ஓதப்படுவன’ என்கிறார் இளம்பூரணர். மேலும்,
        “தொல்காப்பியர் கதைகளைப் பொருளொடு புணராப் பொய்மொழி என்று குறிப்பிடுகின்றார். பேராசிரியர் இதற்கு உரை எழுதும் போது, ‘யானையும் குருவியும் தம்முள் நட்பு கொண்டு இன்ன இடத்திற்குப் போய், இன்னவாறு செய்தன என்று ஒருவன் புனைந்துரைக்கும் வகையெல்லாம் இதன்பால் அடங்கின’ என்று விளக்குகின்றார்”(டாக்டர் சு.சண்முக சுந்தரம், நாட்டுப்புற இலக்கிய வரலாறு, பக்.70)
  இதனால் தொல்காப்பியர் காலத்தில் கதைகள் வழங்கப்பட்டன என அறியமுடிகின்றது. சங்கப் பாடல்களில் செறிந்துள்ள குன்றப்பாடல், குரவைப்பாடல், வேலன் பாடல், வள்ளைப் பாடல், சடங்குப்பாடல், துணங்கைப்பாடல், உழவர் பாடல், நீர் இறைப்போர் பாடல், ஊசல் பாடல் போன்றவை நாட்டுப்புறப் பாடல்களாகும். காப்பியங்களில் வரிப்பாடல்கள், குரவைப் பாடல்கள், உழவர் பாடல்கள், மன வாழ்த்துப் பாடல்கள், பந்தாட்டப் பாடல், ஊசல் பாடல், ஓலுறுத்தல் என்னும் தாலாட்டுப் பாடல், வள்ளைப் பாடல் போன்றவை இடம்பெற்றுள்ளன.
          கம்பரின் ஏற்றப் பாடல்களை வியந்து கூறுவர். மணிக்கவாசகர் ஊசல், சுண்ணம், சாழல், அம்மானை போன்ற நாட்டுப்புறப் பாடல்களைத் தழுவிப் பாடியுள்ளார். இவ்வாறு பாரதி காலம் வரை பல புலவர்கள் நாட்டுப்புறப் பாடல்களைச் சுவைத்தும், தொகுத்தும் வைத்துள்ளனர்.

சங்க இலக்கியத்தில் நாட்டுப்புறவியல்
         
             சங்க இலக்கியங்களில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐவகை நிலங்களிலும் வாழும் மக்கள் அந்தந்த நிலங்களுக்கு ஏற்றவகையில் பாடியும் ஆடியும் இன்புறும் காட்சிகள் இடம்பெறுகின்றன. ஆடலுடன் பாடிய பாடல்களும் கூறப்பட்டுள்ளன. நாட்டுப்புறப் பாடல்களின் செல்வாக்கினைப் பாரி மகளிரின் ‘அற்றைத் திங்கள்’ பாடலிலும் மாண்ட மன்னனுக்காகப் பாடும் ‘முல்லையும் பூத்தியோ’ பாடல் ஒப்பாரியின் சாயலை உடையன. நாட்டுப்புறப் பாடல்களில் ராசாத்தி, தங்கரத்தினமே என்ற சொற்கள் அடிக்கடி மீண்டும் வருவது போன்று ஐங்குறுநூற்றுப் பாடல்களில் வேழம், எருமை, கள்வன் போன்ற சொற்கள் மீண்டும் வருகின்றன.
       
“பறத்தெரு வீதியிலே – கண்ணே அங்கே               
பறச்சி கூடி நிற்கையிலே       
இடைத்தெரு வீதியிலே – கண்ணே அங்கே               
இடைச்சி கூடி நிற்கையிலே       
வலைத்தெரு வீதியிலே – கண்ணே அங்கே               
வலைச்சி கூடி நிற்கையிலே”(கி.வா.ஜகந்நாதன். மலையருவி, 223)
          என்ற நாட்டுப்புறப் பாடலில் மூன்றடுக்கு வருவது போன்று கலித்தொகை சங்க இலக்கியமானக் படலிலும் இடம்பெற்றுள்ளன. உடன்போக்கு போன தன் மகளைத் தேடி செல்கிறாள் செவிலி பாலை நிலத்தின் தன்மையைக் கூறி உவமையுடன் கூடிய இத்தகைய பாடலில் நாட்டுகப்புறக் கூறுகள் இடம்பெறுவதை அறிந்துகொள்ள முடிகின்றது.
       
“பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை       
மலையுளே பிறப்பினும் மலைக்கவைதா மென்செய்யும்       
நினையுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே;       
சீர்கெழு வெண்முத்த மணிபவர்க் கல்லதை       
நீருளே பிறப்பினும் நீர்க்கவைதா மென்செய்யும்;       
தேருங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே       
ஏழ்புண ரின்னிசை முரல்பவர்க் கல்லதை       
யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதா மென்செய்யும்,       
சூழுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே”(கலித்தொகை, பாலைக்கவி. 9)
     நும்மகள் நுமக்குமாங் கனையளே என்று மும்முறை திரும்ப வருகின்ற காரணத்தால் இங்கு நாட்டுப்புற வடிவம் இடம்பெற்றுள்ளதை உணரமுடிகிறது.

காப்பியங்களில் நாட்டுபுறவியல்
         
      காப்பியங்களிலும் நாட்டுபுற இலக்கியக் கூறுகள் செறிந்து காணப்படுகின்றன. ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள், கம்பராமாயணம், மகாபாரதம், புராணம் போன்றவற்றில் நாட்டுப்புறவியலின் செல்வாக்கினைக் காணமுடிகின்றது.
          சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையானது. ‘கோவா மலையாரம்’ என்றும் குன்றக் குரவையானது, ‘எற்றொன்றும் காணேம் புலத்தல்’ என்று தொடங்குகின்றன.
       
“எற்றொன்றும் காணேம் புலத்தல் அவர் மலைக்       
கற்றீண்டி வந்தப் புதுப்புனல்       
கற்றீண்டி வந்தப் புதுப்புனல் மற்றையார்       
உற்றாடின் நோம் தோழி நெஞ்சன்றே”           (சிலப்பதிகாரம், குன்றக் குரவை. 24:3)
       என்று குன்றக்குரவையில் இரண்டு மற்றும் மூன்றாவது அடியில் கற்றீண்டி வந்தப் புதுப்புனல் திரும்ப வருகின்றது. வரியும் குரவையும் பாடல்களாக மட்டுமல்ல செய்திகளாகவும் பல இடங்களில் காண முடிகிறது. மணிமேகலை மணிபல்லவத்தில் இருக்கும் போது தந்தையின் நினைவால் துயருறுகின்றாள்.
         
“கோற்றொடு மாதரொடு வேற்று நாடடைந்து       
வைவாழ் உழன்ற மணிப்பூண் அகலத்து ஐயாவே”(மணிமேகலை. 41-43)
என்று பாடுவது ஒப்பாரிச் சுவையை உணர்த்துவதாகும்.
       
“மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும்       
ஆடிய குரவை இஃதாமென நோக்கியும்”(மணிமேகலை.19: 65-66)
என்ற குரவைப் பாடல் வழி அறியமுடிகிறது.
விசயைக்குச் சுடுகாட்டில் பிள்ளை பிறக்கிறது. அதே நேரத்தில் கணவனின் இறப்பிற்கு அறிகுறியான ஓசை விண்ணில் எழுகின்றது. இச்சூழலில்,
       
“இவ்வாறாகி பிறப்பதோ இதுவோ மன்னர்க்       
கியல் வேந்தே”(சீவக சிந்தாமணி, நாமகள் இலம்பகம். பா.309)
என்று புலம்புவதன் மூலம் இதில் தாலாட்டு ஒப்பாரி இரண்டும் நிறைந்திருப்பதைக் காணமுடிகிறது. பெருங்கதையில் ஊசலாடிப் பாடும் பாடலை,
       
“வேங்கையொடு தொகுத்த விளையாட் டூசற்       
றூங்குபு மறலு குழைச்சிறு சிலதியல்       
பாடற் பாணியொ டளைஇ”(கம்பராமாயணம், உஞ்ஞைகாண்டம் மாலை. 23-25)
என்று குறிப்பிடுகிறது. வள்ளைப் பாட்டு, அம்மானை, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி, பந்து விளையாட்டு ஆகியவை கூறப்படுகிறது. இராமாயணம் நாட்டுப்புற இலக்கியக் கூறுகளை மூலமாகக் கொண்டது. ‘மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே’ என்ற ஏற்றப் பாடல் சிறப்பு வாய்ந்தது.
       
“கொன்றை வேய்ங்குழல் கோவலர் முன்றிலிற்       
கன்றுறக்குங் குரவை”(கம்பராமாயணம், பாலகாண்டம். 65)
         
    காப்பிய இலக்கியங்களில் காணப்படுகிறது. இதேபோன்று பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், இக்கால இலக்கியங்கள் என நாட்டுப்புறவியலின் செல்வாக்கு மிகுந்து காணப்படுகின்றன.

பழமொழி
         
          நாட்டுப்புற இலக்கியத்தில் பழமொழி ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. பேச்சு வழக்கில் வாழ்க்கையின் சாராம்சத்தை எடுத்துக் கூறவும், வாழ்க்கையின் அர்தத்தையும் தத்துவத்தையும் அதனுடன் உண்மையான எதார்த்தங்களைத் தெரிந்து கொள்ளவும் பழமொழி பயன்படுகிறது.
    மக்களின் அனுபவப் பெருமைகளின் சுருக்க வடிவமே பழமொழி. சமுதாயத்தின் தோற்றக் காலத்திலிருந்து தொடர்ந்து வருவது. ஏட்டிலக்கியத்திலும் எடுத்தாளப் பெறுவது, நுட்பம், சுருக்கம், அழுத்தம். எளிமை ஆகிய பண்புகளை உடையது. தொல்காப்பியம் பழமொழியை ‘முதுமொழி’ என்கிறது. பழஞ்சொல், முதுசொல், வசனம், சொலவு, சொலவடை போன்ற சொற்கள் பழமொழியைக் குறிக்கின்றன. ‘பல்லோர் கூறிய பழமொழி’, ‘தொன்றுபடு பழமொழி’ எனப் பழமொழிகளைப் பற்றி அகநானூறு கூறுகின்றது. பின்னர் தோன்றிய இலக்கியங்களிலும் பழமொழியின் வழக்கு காணப்படுகிறது. பதினென்கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான பழமொழி நானூறு பழமொழிகளைத் தொகுத்துத்தரும் நூலாக விளங்குகிறது. தண்டலையார் சதகம் என்னும் சதகநூல் பழமொழியின் களஞ்சியமாக விளங்குகிறது.
      பழமொழியைப் பற்றி பல்வேறு அயலக அறிஞர்கள் தத்தம் கருத்துக்களை தங்களது ஆய்வு நூல்களின் வழி வெளியிட்டுள்ளனர். பழமொழியானது, பழமையான நம்பிக்கைகளையும் வரலாற்றினையும் பண்பாட்டினையும் மனித உணர்வுகளையும் காட்டுபவையாக இருக்கின்றன. பழமொழிகள் சமுதாயத்தின் அனுபவ முதிர்ச்சியையும் அறிவுக் கூறுகளையும் விளக்கும் சான்றாகத் திகழ்கின்றன.
       
“பழமொழி என்ற சொல்லே பழமொழி பற்றிய சிறந்த       
வரையறையாக அமைந்துள்ளது என்கிறார் ஜான் லாசரஸ்”       
“பழமொழி என்பது உலகுக்கு உணர்த்தும் உண்மையை       
ஒரு சிறிய வாக்கியத்தின் மூலம் சுருக்கி கூறுவது ஆகும்.       
அப்பழமொழி முழுமையாக இல்லாவிடினும் அதை       
விளக்கிக் கூறும்போது முழுக்கருத்தும் வெளிப்படும்என்கிறார் துர்கா பகவத்” 
“பழமொழியானது எளிதில் கவனிக்கக்கூடிய, சேகரிக்கக்கூடிய       
தொன்மை வாய்ந்த கருத்தாகும். இருப்பினும் எளிதில்       
புரிந்து கொள்ள கடினமானது என்கிறார் ரிச்சார்டு டார்சன்”
                                                (டாக்டர் சு.சக்திவேல், நாட்டுப்புற இயல் ஆய்வு, ப.103)
            என்று பழமொழிகள் பற்றிய அறிஞர்கள் கருத்தினை அறிந்து கொள்ள முடிகின்றது.
 இறைமை சார்ந்த பழமொழிகள், இல்லறம் சார்ந்த பழமொழிகள், திருமணம் பற்றிய பழமொழிகள், உறவு முறைப் பழமொழிகள், பெண்மை நிலை பற்றிய பழமொழிகள், உழவியல் பழமொழிகள், மருத்துவப் பழமொழிகள், அறிவுரைப் பழமொழிகள், நம்பிக்கைப் பழமொழிகள், அறிவியல் பழமொழிகள், காலப் பழமொழிகள், தத்துவப் பழமொழிகள், பொருளியல் பழமொழிகள், சாதிப் பழமொழிகள், நகைச்சுவைப் பழமொழிகள், உளவியல் சார்ந்த பழமொழிகள், வரலாற்றுப் பழமொழிகள் என்று பழமொழிகள் பல்வேறு வகைப்படும். அவற்றில் ஒரு சில பழமொழிகளைப் பின்வருமாறு காணலாம்.
       
“அவனன்றி ஓரணுவும் அசையாது       
இல்லறம் பெரிது, துறவறம் சிறிது       
பெண்ணுக்குப் பெண்தான் சீதனம்       
தோட்டி போல் உழைத்துத்               
துரைபோல் சாப்பிட வேண்டும்       
நரிக்கு நாட்டாண்மை கொடுத்தால்               
கிடைக்கு இரண்டாடு கேட்கும்       
காடுகாத்தவனும் கச்சேரி காத்தவனும்               
பலனடைவான்”
     (அ. ஆறுமுகம், நாட்டுப்புற இலக்கியமும் பண்பாடும், பக்.143)
      என்று குறிப்பிடுகிறது. தத்துவத்துடன் கூடிய நகைச்சுவை மிகுந்ததாக பழமொழிகள் விளங்குகின்றன. ஒருவர் கூற்றுக்குச் சான்றாகத் திகழ்வது ‘பழமொழி’ என்று பொருள் தரும். பழமொழி என்ற சொல்லாட்சி தொல்காப்பியத்தில் இல்லை. பழமொழிக்கு விளக்கம் கூறுகையில் தொல்காப்பியர்.
       
“நுண்மையும் சுருக்கமும் ஒளியும் உடைமையும்       
மென்மை என்றிவை விளங்கத் தோன்றிக்       
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்       
ஏது நுதலிய முதுமொழி”(தொல். பொருள், செய்யுளியல். 177)
    என்று குறிப்பிடுகிறார். கருதிய பொருளை விளக்கும் வகையில் நுண்மை, சுருக்கம், தெளிவு, மென்மை ஆகிய பண்புகளுடன் பழமொழி விளங்கும் என்பது இதன் பொருளாகும். சங்க இலக்கியங்களிலும் பழமொழிகள் சொல்லாட்சி மிகுந்து காணப்படுகிறது. பழமொழியை தொன்றுபடு பழமொழி என்று அகநானூறு குறிப்பிடுகிறது.
         
“நன்று செய் மருங்கில் தீது இல் என்னும்       
தொன்றுபடு பழமொழி இன்று       
பொய்த்தன்று கொல்?”(அகநானூறு. 101:2-4)
நன்மை செய்தால் தீமை வராது என்னும் பழமொழி உண்மையாய் நிகழ்வதை என் வாழ்வில் கண்டுகொண்டேன் என்று தலைவி தோழியிடம் கூறுவதாக இப்பாடல் அமைக்கப்பட்டுள்ளதை காணமுடிகிறது.
    பதிணென் கீழ்கணக்கு நூல்களுள் ஒன்றான பழமொழி நானூறு வாழ்க்கைக்குத் தேவையானவற்றை விளக்கும் வகையில் அமைந்த நூலாகும். உறவினர் இல்லா ஊரும் ஒரு காடே என்பதை உணர்த்தும் பழமொழி,
       
“கல்வியால் அய கழிநுட்பம் கல்லர்முன்       
சொல்லிய நல்லவும் தீயவாம் – எல்லாம்       
இவர் வரைநாட! தமரை இல்லார்க்கு       
நகரமும் காடுபோன் றாங்கு”(பழமொழி நானூறு. 15)
         
பல நூல்களைக் கற்றறிந்து பெற்ற பயனால் அறிந்த பல நுணுக்கமான செய்திகளையும், கல்வி அறிவு இல்லாதவர்கள் முன்னே சொன்னால் அவையாவும் பொருளற்றவையாகத் தீய விளைவுகளையே உண்டாக்கும். எல்லாப் பொருள்களும் செறிந்து, சிறந்து விளங்குகின்ற மலைநாட்டு மன்னவனாயினும் தமரை – அதாவது சுற்றத்தார்கள் எவரையும் பெற்றிராத ஒரு நகரில் வாழ்பவனுக்கு அந்நகரமும் காடு போலவே இருக்கும். சுற்றத்தார் இல்லாத ஒருவன் தனிமைப்பட்டு துன்பப்படுவான் என்பதை பழமொழி நானூறு இன்றைய காலக்கட்டத்திற்கு தேவையான ஒன்றினை அன்றே உணர்த்தியது சிறப்பிற்குரியதாகும்.

விடுகதை
         
தொல்காப்பியம் குறிப்பிடும் பிசி என்பது விடுகதை ஆகும். விடுவிக்கப்பட வேண்டிய புதிர்கள் விடுகதை. இவற்றுக்குப் புதிர், அழிப்பின் கதை, வெடி, நெடி என்ற வேறு பெயர்களும் உண்டு. தொல்காப்பியம்,
       
“ஒப்பொடு புணர்ந்த உவமத்தானும்       
தோன்றுவது கிளந்த துணிவினானும்       
என்றிரு வகைத்தே பிசிவகை நிலையே”(தொல். பொருள், செய்யுளியல். 169)
         
இரு பொருள்களுக்கு உள்ள ஒப்புமைக் குணத்தோடு பொருந்தி வருகின்ற உவமைப் பொருளால் கூறுதல், உள்ளத்தில் தோன்றுகின்ற ஒன்றைக் கூற அதனால் மற்றொன்று தோன்றும் துணிவுடைய சொல்லால் கூறுதல் என்னும் இரண்டு வகையால் அமையும் என்கிறார்.
       
“நீராடான் பார்ப்பான் நிறம்செய்யான் நீராடில்       
ஊரொடு நீரில்காக் கை”(ச.திருஞானசம்பந்தம், தொல்காப்பியம் பொருளதிகாரம். 330)
என்பது தோன்றுவது கிளந்த துணிவினான் நெருப்பைக் குறித்தது எனப் பிசி வகை இரண்டிற்கும் சான்று காட்டி விளக்குகிறார். பிசி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இயல்பாகத் தங்களது பொழுதுபோக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
       
“பொட்டுப்போல இலை இருக்கும், பொரிபோல் பூப்பூக்கும்       
தின்னக் காய் கொடுக்கும் தின்னாப் பழம் பழுக்கும்”
                                   (ச.திருஞானசம்பந்தம், தொல்காப்பியம் பொருளதிகாரம். 330)
     என்பது ஒப்பொடு புணர்ந்த உவமமாய் முருங்கை மரத்தைக் குறித்தது. சங்கப் புலவர்கள் விடுகதைப் பண்புடன் பல பாடல்களை இயற்றியுள்ளனர். குறுந்தொகைப் பாடலொன்றில், தலைவன் பரத்தையோடு வாழ்ந்து தன் தவறை உணர்ந்து மீண்டும் தலைவியுடன் வாழ நினைக்கிறான். இதனை,
       
“மலையிடை இட்ட நாட்டரும் அல்லர்       
மரந்தலை தோன்றா ஊரரும் அல்லர்”(குறுந்தொகை. 203: 1-2)
தலைவன் இருக்கும் ஊருக்கும் நான் இருக்கும் இடத்திற்கும் இடையே மலைகள் ஏதும் இல்லை. அவரிருக்குமிடத்தில் மரங்கள் நிறைந்த காடுகள் இருப்பதால் காணமுடியாத ஊராரும் அல்லர் என்று தன் கணவன் அருகில் இருந்தும் காண வர இயலாததை தலைவி எடுத்துரைக்கின்றாள். மேலும்,
        “ஐதேய்ந்தன்று பிறையுமன்று       
மைதீர்ந்தன்று மதியுமன்று       
வேயமன்றன்னு மலையுமன்று       
பூவமன்றன்று சுனையுமன்று       
மெல்ல இயலும்இ மயிலுமன்று       
சொல்லத் தளரும் கிளியுமன்று”(கலித்தொகை. 55:9-14)
சங்க இலக்கிய காலகட்டங்களில் வழங்கப்பட்டவையாகும். தலைவியை நிலவு, மலை, மூங்கில் என்றெல்லாம் கூறி அவளற்றை வி நீ சிறந்தவள் என்று தலைவியின் அழகு நலன்களைப் புகழ்வதில் அழகிய நாட்டுப்புறக்கூறுகள் இடம்பெற்றுள்ளதை உணர முடிகிறது.

நாப்புறப் பாடல்களும், கதைகளும்
         
      நாட்டுப்புறப் பாடல்களில் இரண்டு வகையான உத்திகளைப் பின்பற்றுகின்றனர். ஒன்று நீண்ட பாடல்களை உருவாக்குதல் சூழலுக்கேற்பப் பாடலை மாற்றல். நாட்டுப்புறப் பாடலானது தாலாட்டில் தொடங்கி ஒப்பாரி வரை பல நிகழ்வுகளில் பாடப்படுகின்றன.
          காற்றிலே மிதந்த கவிதை நாட்டுப்புறப் பாடல்களின் முதல் தொகுப்பு நூலாகும்.
        “ஆரியக் கூத்தர் கழையிற் கட்டிய கயிற்றின் மேல் நின்று ஆடினர். அப்பொழுது பறை கொட்டப்பட்டது. தெருவில் ஆடவர்கள் மகளிரொடு கலந்து குரவைக் கூத்தாடினர். அப்பொழுது தொண்டகப்பறை கொட்டப்பட்டது”(ஆர்.ஆளவந்தார், தமிழர் தோற்கருவிகள், பக். 21)
நாட்டுப்புறப் பாடல் வடிவங்கள் குறிக்கப்படுகின்றன. ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு பாடப்படுவதாகும். நாட்டுப்புறப் பாடல்களில் பாடப்படும் சூழலின் தேவையைக் கருதி வேண்டுமளவு அடுக்கிப் பாடப்படும். தாலாட்டின் தொடக்கமான ‘ஆராரோ’ போன்ற ஒலிக்குறிப்பு வாய்ப்பாட்டை முதலில் இட்டு, குழந்தையை விளிக்கும் ‘கண்ணே’ போன்ற சொற்களை ஆங்காங்கே கூறுவதன் வாயிலாகக் கதைப் பாடல்களுக்குத் தாலாட்டு வடிவம் கிடைக்கிறது.
          இதே போன்று சரோசா அவர்கள் பாடிய கும்மிப்பாடல் ஒன்றில்,
         
“கூடையிலே கல்பொறுக்கி       
கூடையிலே கல்பொறுக்கி       
கூடையிலே கல்பொறுக்கி       
கோவிரங்கள் உண்டுபண்ணி       
கோவிரத்தின் உள்ளாலே       
கோவிரத்தின் உள்ளாலே       
கோவிரத்தின் உள்ளாலே       
குயிலுவந்து முட்டையிடும்”(ஆறு. இராமநாதன், தமிழர் கலை இலக்கிய மரபுகள், பக்.183)
         
நாட்டுப்புறப் பாடல்களை ஒருவர் பாடுவதைப் போலவே மற்றவர் பாடுவது கிடையாது. ஒருவரே ஒரு பாடலை மறுமுறை பாடும்போது மாற்றம் ஏற்படுகின்றது.
       “தமிழ் மனத்தின் ஆதி நிலையில் தொன்மங்களுக்கான அறிதிறன் கூறுகள் பல்வேறு தளங்களில் விரிவு பெற்றன. பலதார மணத்திற்குப் பாரதக் கதை. ஒருதார மனத்திற்கு இராமகதை. திருமாலின் பத்து அவதாரங்களும் பூவுலகின் பத்துத் தனித்தனியான சூழல்களுக்குத் தகவமையும் படிமலர்ச்சி நிலையாகும். கதைகள் அமைந்து காணப்படுகிறது”(பக்தவத்சல பாரதி, இலக்கிய மானிடவியல், பக். 194)
          பல்வேறு கதைப்பாடல்கள் கூறப்பட்டுள்ளன. ஆதி மனிதன் காட்டில் வேட்டையாடிச் சென்று திரும்பியவுடன் தன் அனுபவங்களை மற்றவர்களுக்குச் சொன்னதிலேயே கதையின் தொடக்கத்தைக் காணமுடிகிறது. தொல்காப்பியர் கதைகளைப் பொருளொடு புணராப் பொய்மொழி என்று குறிப்பிடுகின்றார். கதா சிந்தாமணி, கதாமஞ்சரி, விநோதரச மஞ்சரி, திராவிட மத்திய காலக் கதைகள், தக்காண பூர்வக் கதைகள், பூலோக விநோதக் கதைகள் போன்ற கதைகள் உருவாயின.

முடிவுரை
         
     நாட்டுப்புற இலக்கியம் மனிதன் வாய்மொழி தொடங்கிய காலம் முதலே தோன்றியது. வாய்மொழி தொடங்கி தங்களது உணர்வுகளின் வெளிப்பாடாகவே நாட்டுபுற இலக்கியம் இருந்து வந்தமையை அறிய முடிகிறது. பழமொழி, விடுகதையின் வாயிலாக வாழ்க்கையின் தத்துவங்களையும், எதிர்கால வாழ்வின் உண்மை நிகழ்வுகளையும் அறிகிறோம். புராணங்களையும் இதிகாசங்களையும் தெரிந்து கொள்ளும் ஒரு வாய்ப்பும் கதைப் பாடல்களின் வழி அறிந்து கொள்ள முடிகிறது. ஆடல், பாடல் என்ற பொழுதுபோக்குகளும் நிறைந்து காணப்படுகின்றன. இத்தகைய நாட்டார் வழக்காற்றியலை போற்றிப் பாதுகாத்திடல் நம் கடமையாகும்.

துணை நூற்பட்டியல்
[1] அ. ஆறுமுகம், நாட்டுப்புற இலக்கியமும் பண்பாடும், தேன்தமிழ்ப் பதிப்பகம், 85, சுப்பிரமணியம் பிள்ளைத்தெரு, சேலம்-1, முதற்பதிப்பு செப்டம்பர், 1984

[2] அடியார்க்கு நல்லார், சிலப்பதிகாரம் மூலமும் அரும்பதவுரையும், உ.வே.சா. பதிப்பகம், சென்னை, ஏழாம் பதிப்பு, 1960

[3] அ.மா. பரிமணம், கு.வெ. பாலசுப்பிரமணியன், கலித்தொகை மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை-98, 2014

[4] உ.வே. சாமிநாதைய்யர், குறுந்தொகை, கபீர் அச்சுக்கூடம், சென்னை, முதற்பதிப்பு, 1937

[5] ஆர்.ஆளவந்தார், தமிழர் தோற்கருவிகள், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், அடையாறு, சென்னை – 20, முதற்பதிப்பு டிசம்பர், 1981

[6] ஆறு. இராமநாதன், தமிழர் கலை இலக்கிய மரபுகள், மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத்தெரு, சிதம்பரம் – 1, முதல் பதிப்பு, டிசம்பர், 2007

[7] கி.வா.ஜகந்நாதன், மலையருவி, ப.9 சரசுவதி நூலகம், தஞ்சை – 1958 முதற்பதிப்பு

[8] ச.திருஞானசம்பந்தம், தொல்காப்பியம் பொருளதிகாரம், கதிர் பதிப்பகம், தெற்குவீதி, திருவையாறு-24, முதற்பதிப்பு மார்ச், 2020

[9] ஞா.மாணிக்கவாசன், பழமொழி நானூறு மூலமும் – தெளிவுரையும், உமா பதிப்பகம், மண்ணடி, சென்னை – 1, மூன்றாம் பதிப்பு, பிப்ரவரி, 2021

[10] டாக்டர் சு.சண்முகசுந்தரம், நாட்டுப்புற இலக்கியத்தின் செல்வாக்கு, 89 லிங்கிச் செட்டித்தெரு, சென்னை – 1, இரண்டாம் பதிப்பு. டிசம்பர் 1980

[11] டாக்டர் சு.சண்முகசுந்தரம், நாட்டுப்புற இலக்கிய வரலாறு, மணிவாசகர் நூலகம், சென்னை – 1, முதற் பதிப்பு, டிசம்பர், 1980

[12]மு.ந. வெங்கடசாமி நாட்டார், அகநானூறு, வையைப் பதிப்பகம், சென்னை, 1966

[13] டாக்டர் சு.சக்திவேல், நாட்டுப்புற இயல் ஆய்வு, ப.103, மணிவாசகர் நூலகம், சிங்கர்தெரு, பாரிமுனை, சென்னை – 1, இருபத்தி இரண்டாம் பதிப்பு, டிசம்பர், 2015

[14] டாக்டர். ரா. சீனிவாசன், கம்பராமாயணம், அணியகம், செனாய் நகர், சென்னை-30, மூன்றாம் பதிப்பு, 2000

[15] தேன்தமிழ்ப் பதிப்பகம், 85, சுப்பிரமணியம் பிள்ளைத் தெரு, சேலம் – 1, முதற்பதிப்பு, செப்டம்பர் 1984

[16] பக்தவத்சல பாரதி, இலக்கிய மானிடவியல், புத்தாநத்தம், திருச்சி.

[17] ஜெ. ஸ்ரீசந்திரன், மணிமேகலை மூலமும் தெளிவுரையும், தமிழ் நிலையம், உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை-17, முதற்பதிப்பு, 1996

[18] ஜெ. ஸ்ரீசந்திரன், சீவகசிந்தாமணி, தமிழ் நிலையம், உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை-17, முதற்பதிப்பு, 1996

Reference:
[1] A. Arumugam, Folk literature and culture, p. 143, published by Thenmozhi Press, 85, Subramaniam Pillayathru, Salem-1, first edition September, 1984

[2] Adiyarkku nallar, Silappathikaram, Text and Glossary, Vu. Ve. Sa. Publishing house, Chennai, seventh edition, 1960

[3] A.Ma. Parimanam, Ku.Ve. Balasubramanian, Kalitogai Source and text, New Century Book House, Chennai-98, 2014.

[4] Vu. Ve. Saminathayar, Kurunthogai, published by Kabir Press, Chennai, Frist edition, 1937.

[5] R. Aalavanthar, Leather Instruments of Tamil, World Tamil Research Institute, Athiyar, Chennai – 20, first edition, December, 1981 6.

[6] Aaru. Ramnathan, Tamil art and literary traditions, Meyyappan Publishing House, 53, New Street, Chidambaram – 1, first edition, December, 2007

[7] Ki.VA. Jagannathan, Malaiyaruvi, P. 9 Saraswati Library, Thanjavur – 1958 first edition.

[8] Sa. Tirunyanasampantham, Tholkappiyam, Porulathikaram, Kadir Publishing House, South Street, Thiruvaiyaru-24, first edition March, 2020

[9] Ya. Manicavasan, Proverb four hundred Text – Explanation, Uma Publishing House, Manadi, Chennai – 1, Third Edition, February, 2021

[10] Dr. Su. Sanmugasundharam, The influence of folk literature, 89 Lingich Chettitheru, Chennai – 1, second edition. December 1980.

[11] Dr. Su. Sanmugasundharam, History of folk literature, Manivasagar Library, Chennai – 1, first edition, December, 1980

[12] Mu. Na. Venkatasamy Nadar, Agananuru, Waiyai Publishing House, Chennai, 1966

[13] Dr. Shaktivel, Folklore Studies, p.103, Manivasagar Library, Singartheru, Pasis corner, Chennai – 1, 22nd edition, December, 2015

[14] Ra. Sinivasan, Kambharamayanam, Aniyagakam, Senoi Nagar, Chennai Nagar, Chennai-30, third edition, 2000

[15] ThenThamizh Press, 85, Subramaniam Pillai Street, Salem – 1, first edition, September 1984 The first edition.

[16] Bhaktavadsala Bharati, literary anthropology, Butthanatham, and Tirupati.

[17] J. Srichandran, Mani Maigalai – Text and explanation, Tamil Station, Usman Road, Thiyagaraya Nagar, Chennai-17, first edition, 1996.

[18] J. Srichandran, Sivagashintamani, Tamil Station, Usman Road, Diackara Nagar, Chennai-17, first edition, 1996

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் அ. ஜனார்த்தலி பேகம்,

உதவிப் பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை,

ஜமால் முகமது கல்லூரி (தன்னாட்சி),
திருச்சிராப்பள்ளி – 620 020, தமிழ்நாடு, இந்தியா.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here