Abstract
From a global perspective, the pursuit of universality and tolerance within literary creations constitutes the field of Comparative Literature. Within this framework, Silappathikaram by Ilango Adigal and Red Tea, an English novel authored by P.H. Daniel and translated into Tamil as Eriyum Panikkadu by R. Murugavel, are taken for comparative analysis. Elango Adigal, belonging to the Chera dynasty and the younger brother of Cheran Senguttuvan, composed Silappathikaram in epic form. Through the life story of Kovalan and Kannagi, who hailed from the merchant community, he sought to unite the three Tamil dynasties as well as diverse religious traditions, while simultaneously imparting three essential truths of worldly existence to society. In 1969, Paul Harris Daniel authored the novel Red Tea, which vividly portrayed the socio-economic hardships of tea plantation workers. Its Tamil translation, Eriyum Panikkadu, published in 2007, recounts the untold story of thousands of oppressed laborers whose lives were consumed on the enchanting yet famine-stricken slopes of the hill regions, which today stand as centers of beauty and as significant contributors of foreign exchange through tea estates. The novel underscores the brutalities jointly perpetrated by the British colonial administration and the allied industrial establishments of that period. This paper seeks to undertake a comparative study of the lives of Karuppan and Valli, as depicted in Eriyum Panikkadu, with those of Kovalan and Kannagi in Silappathikaram, particularly examining the disparities in their socio-economic conditions.
KEY WORD
Silapathikaram,Red tea,Eriyum Pani Kadu,Elangovadikal,R.Murugavel,porulvayin pirivu,
ஒப்பீட்டு நோக்கில் சிலப்பதிகாரம் மற்றும் எரியும் பனிக்காடு
அறிமுகம்
உலகளாவிய நோக்கில் இலக்கியப் படைப்புகளில் பொதுமையையும் பொறுமையையும் காண முயல்வது ஒப்பிலக்கிய ஆய்வாகும். இவ்வகையில் இளங்கோவடியின் சிலப்பதிகாரமும் பி. எச். டேனியல் Red Tea என ஆங்கிலத்தில் எழுதி இரா.முருகவேள் அவர்களால் தமிழில் எரியும் பனிக்காடு என மொழிபெயர்க்கப்பட்ட நாவலும் ஒப்பாய்விற்கு உட்படுத்தப்படுகின்றன. இளங்கோவடிகள் சேர மரபில் தோன்றியவர். சேரன் செங்குட்டுவனின் தமையன். இவர் மூவேந்தர்களையும் பல சமயங்களையும் இணைத்து உலகியல் உண்மை மூன்றையும் மக்களுக்கு உணர்த்தும் வகையில் வணிகக்குலம் சேர்ந்த கோவலன் கண்ணகியின் வாழ்க்கையைக் காப்பியமாக வடித்துள்ளார். 1969 ஆம் ஆண்டு பி.எச்.டேனியல் அவர்கள் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வியல் சிக்கல்களைப் படம்பிடித்துக் காட்டும் வகையில் எழுதிய Red Tea நாவலின் மொழிபெயர்ப்பாக தமிழில் 2007 ஆம் ஆண்டு வெளியான எரியும் பனிக்காடு, இன்றைய எழில் மிகுந்த மலை நகரங்களையும் அன்னியச் செலவாணியை அள்ளித்தரும் தேயிலை தோட்டங்களையும் கட்டி அமைக்கக் கூட்டம் கூட்டமாகப் பலிக் கொடுக்கப்பட்ட அந்தக் கண் கவரும் பசிய சரிவுகளில் புதையுண்டு போன ஆயிரம் ஆயிரம் ஒடுக்கப்பட்ட மக்களின் கதை தான். பிரிட்டிஷ் அரசும் அந்நாட்டுத்தொழில் நிறுவனங்களும் வேறு வேறு அல்ல என்றிருந்த காலத்தில் அவை ஒன்றிணைந்து அரங்கேற்றிய கொடுமைகள் தான் இந்நாவல். எரியும் பனிக்காடு நாவல் கூறும் கருப்பன் வள்ளியின் வாழ்வியலையும் சிலப்பதிகாரம் கூறும் கோவலன் கண்ணகியின் வாழ்வியலையும் இவர்களின் பொருள்வயின் பிரிவினையும் ஒப்பிட்டு ஆராய இக்கட்டுரை முயல்கிறது.
ஆய்வு நோக்கம்
பொருள் வயிற் செலவில் மக்களின் வாழ்வியலை சிலப்பதிகாரம் மற்றும் எரியும் பனிக்காடு நாவல் வழி ஒப்பிட்டு ஆராய்ந்து கூறுவதே நோக்கமாகும்
ஆய்வு அணுகுமுறை
இவ்வாய்வானது இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தையும் பி எச் டேனியல் ஆங்கிலத்தில் எழுதி இரா.முருகவேல் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட எரியும் பனிக்காடு நாவலையும் ஒப்பாய்வு அணுகுமுறைக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாய்விற்குச் சிலப்பதிகாரம் மற்றும் எரியும் பனிக்காடு முதன்மை தரவுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது இவை சார்ந்த கட்டுரை நூல்கள் இதழ்கள் மின்னுலகக் கருத்துக்கள் முதலியவை ஆய்வு தரவுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
குடும்ப நிலை
“போகமும் நீள் புகழ் மன்னும் புகார் நகர் “ (சிலம்பு.மங்கல வாழ்த்துப் பாடல்: பா.வரி 22)
என்ற சிறப்புக்குரிய நீண்ட புகழும் போகமும் கொண்ட பூம்புகார்கண் அரசர்களும் விரும்பக்கூடிய பெரும் செல்வம் கொண்ட வணிகக் குலம் சார்ந்த மாநாய்கன் மகள் கண்ணகியும் ஒப்பற்ற குடிகளாகிய தன் கிளைகளோடு கூடி மிக்கோங்கிய செல்வத்தை உடையவனான மாசாத்துவானின் மகன் கோவலனும் திங்கள் ரோகிணியோடு கூடும் நல்ல நாளிலே மணம் புரிந்தனர்.
உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவிற் பரதர் மலிந்த பயங்கெழு மாநகர்
(சிலம்பு.மனையறம்.பா.வரி.2)
எல்லையற்ற சிறப்பைக் கொண்ட பூம்புகார் நகரிலே கோவலனும் கண்ணகியும் ஏழு நிலை கொண்ட மாடத்தில் இன்புற்று வாழ்ந்தனர். அரசர்கள் விரும்பக் கூடிய அளவிற்குச் செல்வங்களைக் கொண்டவர்களாக வணிகர்கள் இருந்துள்ளனர். மனையறம் படைத்த காதை, கோவலன் கண்ணகியின் செல்வ நிலையைத் தெளிவாக விளக்குகிறது. மேலும், மாதவியுடன் இன்பத்தில் திளைத்து மீண்டும் வந்த கோவலன் கண்ணகியிடம்
குலந்தருவான் பொருள் குன்றந் தொலைந்த
இலம்பாடு நாணு த் தருமெனக் கென்ன (கனாத்திறம் உரைத்த கதை:பா.வரி.70)
எனக் கூறும் செய்தியானது கோவலன் முன் மலை போன்ற செல்வத்தைக் கொண்டிருந்தான் என்பதை அறிய முடிகிறது. இவ்வாறு புகார் நகரில் பெரும் செல்வம் கொண்ட வணிகக் குடும்பத்தைச் சார்ந்த கோவலன் கண்ணகியின் செல்வ நிலையினையும் பின் மாதவி மீது கொண்ட மையலினால் செல்வம் இழந்து நின்ற வறுமை நிலையையும் சிலப்பதிகாரம் தெளிவாக விளக்குகிறது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மயிலோடை கிராமத்தில் மொத்தம் 30 வீடுகள் மட்டுமே உள்ளன அதில் ஒரு வீடு மட்டுமே செங்கல்லால் கட்டப்பட்டது ஊர் மக்கள் அனைவரும் பக்கத்து ஊர்களில் உள்ளவர்களின் நிலத்தில் கூலி வேலை செய்பவர்கள். இதில் இருந்தே ஊர் மக்களின் வறுமை நிலையை அறிய முடிகிறது. மயிலோடை கிராமத்தைச் சேர்ந்த கருப்பன், தனது அக்கா மகளான வள்ளியைத் திருமணம் செய்து கொண்டு மூங்கிலும் பனையோலையும் கொண்ட கூரை வீட்டில் பசியின் கோரத்தாண்டவத்தின் நடுவே வாழ்ந்து வந்தான். கருப்பன் ஒரு கிழிந்த பாயில் சுருண்டுப் படுத்துக் கொண்டிருந்தான். ஊமை எரிச்சலாக இருந்த பசி அதிகாலையில் புது வேகம் பெற்றுக் கருப்பனைப் படுத்தியது.
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு. (குறள்:1029)
என்ற திருவள்ளுவரின் வாக்குப் படி, தான் பசி துன்பத்தில் இருந்தாலும் தன் குடியைக் காக்க கருப்பனின் மனம் மட்டும் குடும்பத்தின் அவசரத் தேவைக்காக இரண்டு மூன்று ரூபாய் புரட்டத் திட்டம் தீட்டிக்கொண்டு, தன் பசியைப் பொருட்படுத்தாமல் அதிகாலையே கழுத்தாறு நோக்கி செல்கிறான். கருப்பன் கடுமையாக உழைக்கும் உழைப்பாளி. வறட்சியால் ஏற்பட்ட வறுமையினால் வேலை கிடைக்காமல் குடும்பத் தேவையை நிறைவேற்ற போராடிக் கொண்டிருந்தான். குடும்பத்தின் பசி துன்பத்தைப் போக்க கால் கொலுசையும் வீட்டிலிருந்த மண்சட்டிகளையும் அடகு வைத்து நிறையத் தண்ணீருடன் ஒரு கைப்பிடி ராகி மாவு கலந்த கஞ்சியை ஒரு நாளிற்கு ஒரு வேலை மட்டும் உண்டு வாழ்ந்து வந்தனர். “கூரையாக வேயப்பட்டிருந்த பனை ஓலை ஏறக்குறைய இறுதி மூச்சு விட்டுக் கொண்டிருந்தது. அதில் எண்ணற்ற ஓட்டைகளின் வழியே அறைக்குள் புகுந்த நிலவொளியில் எதிர் மூலையில் கிழிந்த நாராகக் கிடந்த அம்மாவின் உருவம்” (இரா.முருகவேள்,எரியும் பனிக்காடு, பக்:15) இவ்வாறு கருப்பனின் குடும்ப நிலையானது, ஓட்டை நிறைந்த வீடும். வீட்டிலிருந்த பொருட்களை அடகு வைத்து ராகிக் கலந்த ஒரு வேலை மட்டும் உண்ணக்கூடிய நிலையுமான வறுமை, அவனையும் அவன் குடும்பத்தையும் ஆட்டிப் படைத்திருந்தது.
பொருள்வயிற் பிரிவு
பண்டையக் காலந்தொட்டு மக்கள் ஓர் இடத்தில் நிலைத்துத் தங்காமல் உணவு தேடி இடம் விட்டு இடம் நகர்ந்து கொண்டே இருந்தனர். மக்கள் நாகரிகம் பெற்று கூடி வாழத் தொடங்கிய பின் கல்வி, பொருளீட்டுதல், போர் போன்ற காரணங்களுக்காகத் தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு இடம்பெயர்ந்தனர். இத்தகைய இடம்பெயர்வினை தொல்காப்பியர்,
ஓதல் பகையே தூது இவை பிரிவு (தொல்.பொருளதிகாரம்:27)
என இடம்பெயர்வினைப் பிரிவு எனக் குறித்துள்ளார். கல்வி, பகை, தூது மட்டும் இன்றிப் பொருள்வயிற் பிரிவினையும் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.
இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே (தொல்.பொருளதிகாரம்:30)
இதன்மூலம் மக்கள் பொருளீட்டுவதற்காக ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்தனர் என்பதை அறியலாம். இவ்வாறு பொருளீட்டுவதற்குச் செல்லும் தலைவன் தலைவியை உடன் அழைத்துச் செல்வதும் உண்டு.
குலந்தருவான் பொருள் குன்றத் தொலைந்த
இலம்பாடு நாணுத் தருமெனக் கென்ன (கனாத்திறம் உரைத்த கதை:பா.வரி70)
சிலப்பதிகாரத்தில் கோவலன், கண்ணகியை மணந்து இன்புற்று வாழ்ந்தான். பின் அரங்கேற்றக்காதையில் மாதவியின் மீது கொண்ட மையலினால் கண்ணகியை மறந்து மாதவியுடன் வாழ்ந்தான். பின் மாதவியிடம் ஊடி கண்ணகியை நாடி வந்து மாதவியின் தாயான சித்திராபதியால் தனது செல்வங்களை எல்லாம் இழந்த நிலை எண்ணி நாணம் அடைந்து நிற்கிறான்.
நலங்கேழ் முறுவல் நகைமுகங் காட்டிச்
சிலம்புளக் கொண்மெனச் சேயிழை கேளி (கனாத்திறம் உரைத்த கதை:பா.வரி72)
கோவலனின் நிலையைக் கண்ட கண்ணகி, மாதவிக்குக் கொடுக்கப் பொருள் இல்லாத காரணத்தினால் கோவலன் வருந்துகிறான் என்று எண்ணிச் சிறுநகைப் புரிந்து தனது காற்சிலம்பினை கோவலனிடம் தருகிறாள்.
சிலம்பு முதலாகச் சென்ற கலனே
டுலந்தபொரு ளீட்டுத லுற்றன் மலர்ந்த சீர்
மாட மதுரை யகத்துச் சென்றேன் (கனாத்திறம் உரைத்த கதை:பா.வரி74)
சிலம்பினைப் பெற்றுக் கொண்ட கோவலன், கண்ணகியை நோக்கி இக்காற் சிலம்பைக் கொண்டு மதுரைச் சென்று இழந்த செல்வங்களை மீண்டும் பெற்று விடலாம் என்று கூறி, விடியற் பொழுதிலே கோவலன் கண்ணகியை மதுரை நோக்கி அழைத்துச் சென்றான். போகும் வழியில் சமணத் துறவியான கவுந்தியடிகளிடம் ஆசிப் பெற்று. வரைபொருள் வேட்கையின் காரணமாக மதுரைச் செல்லும் செய்தியைக் கூறினர்.
பாடகச் சீறடி பறப்பகை யுழலா
காடிடை யிட்ட நாடுநீர் கழிதற்கு
அரிதிவள் செவ்வி அறிகுறிநா யாரோ (நாடு காண் காதை:52)
எனக் கவுந்தியடிகள் கண்ணகியின் மென் பாதங்கள் மதுரை செல்வது கடினம் என்றார். கோவலன்,கண்ணகி இருவரும் பொருள் செலவுப் போக்கொழுக்கவில்லை. கவுந்தியடிகள், கோவலன் கண்ணகியுடன் மதுரை நோக்கிச் சென்றார். போகும் வழியில்
கழனிச் செந்நெற் கரும்புசூழ் மருங்கில்
பழனத் தாமரைப் பைம்பூங் கானத்துக்
கம்புட் கோழியுங் கனைக்குர னுரையுந் (நாடு காண் காதை:113)
எனப் பல்வேறு இயற்கை காட்சிகளை ரசித்தவாறு மதுரை நோக்கிச் சென்றனர். போகும் வழியில் பல இடங்களில் தங்கி இளைப்பாரி, பல இன்னல்களைக் கடந்து மதுரையை அடைந்தனர். கவுந்தியடிகள், கோவலன் கண்ணகி இருவரையும் மாதரிடம் அடைக்கலம் புக செலுத்துகிறார். வணிகக் குலத்தில் பிறந்து, பொருள்வயிற் பிரிந்து, மதுரை அடைந்து, கால் சிலம்பினை விற்கும் பொருட்டுப் பொற்கொல்லனை அடைந்து, கோவலன் திருட்டுப் பழிக்கு ஆளாக்கப்பட்டு இறந்துப்படுகிறான். கண்ணகி வழக்குரைத்து அரசனை எதிர்க்கிறாள் அரசன் தவறு உணர்ந்து இறக்கிறான். பின் சேர மன்னன் கண்ணகிக்குச் சிலை எழுப்புவதாகக் காப்பியம் நிறைவுறுகிறது.
🎯 சிலப்பதிகாரத்தில் மாதவிடம் கொண்ட காதலின் காரணமாகக் கோவலன் மலைபோல் குவிந்த செல்வத்தை இழக்கிறான். கருப்பன் வறட்சியின் காரணமாக வீட்டில் இருந்த பொருட்களை இழந்து வறுமையில் அல்லற்படுகிறான்.
🎯 கண்ணகி கோவலனின் கவலையைப் போக்க கால் சிலம்பினை வறுமை சூழலில் அளிப்பதைப் போலவே வள்ளி, வறுமை சூழலில் கருப்பனிடம் கால் கொலுசு கொடுத்து குடும்பத்தின் பசியாற்றினாள்.
🎯 கண்ணகியின் பாதம் கதா தூரம் செல்ல தயங்கும் என்பதைக் கவுந்தியடிகள் கூறியதை போலக் கருப்பனின் தாய் முத்தாத்தாள் வள்ளி கருப்புனுடன் செல்லும் பொருள் வயிற் பிரிவை ஒழிக்க முற்படுகிறாள்.
🎯 கோவலன் கவுந்தியடிகள் வார்த்தையை வணங்கி மறுப்பது போலவே கருப்பனும் தாயின் சொல்லை மறுத்து தாயின் மனதை மாற்றுகிறான்.
🎯 மதுரையை நோக்கி செல்லும் வழியில் கண்ட அனைத்து காட்சிகளையும் ரசித்துக்கொண்டே கோவலனும் கண்ணகியும் பெரு நம்பிக்கையுடன் பயணம் செய்தனர் அதுபோலவே கருப்பனும் வள்ளியும் பெரு நம்பிக்கையைச் சுமந்து தேயிலை தோட்டம் நோக்கி சென்றனர்.”புதிய நட்பும் நம்பிக்கையும் தந்த இன்பமான மனநிலையில் அவர்கள் சிரித்து பேசியும் நையாண்டி செய்து கொண்டும் வாக்களிக்கப்பட்ட நிலத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தனர்”( இரா.முருகவேள்,எரியும் பனிக்காடு, பக்:63)
🎯 கோவலனும் கண்ணகியும் செல்லும் வழியில் பல இடங்களில் தங்கி இளைப்பாறினர் இதுபோலவே கருப்பன் வள்ளி மற்றும் உடன் சென்ற பலரும் பல்வேறு இடங்களில் தங்கி, நடந்து நடந்து கால் ஓய்ந்து தேயிலை தோட்டம் அடைந்தனர்.
🎯 கோவலனுக்கும் கண்ணகிக்கும் மாதரி அடைக்கலம் அளித்து, தனி இடம் கொடுத்து தேவையான பொருட்களையும் கொடுத்ததைப் போன்று தேயிலை தோட்டத்தில் கருப்பனுக்கும் வள்ளிக்கும் கால்நீட்டி படுக்க முடியாத அளவிற்குத் தனியிடம் வழங்கப்பட்டுச் சமையலுக்குத் தேவையான பொருட்கள் போர்வை போன்றவை வழங்கப்பட்டது.”அரிசியும் மற்றவைகளும் வாங்கிக் கொண்டு லைனுக்கு திரும்பியதும் அவர்களுக்கு இருப்பிடங்கள் ஒதுக்கி தரப்பட்டன. கருப்பனுக்கும் வள்ளிக்கும் மட்டும் அதே லைனில் ஒரு அறையின் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டது”(இரா.முருகவேள்,எரியும் பனிக்காடு,பக்:72)
🎯 கோவலன் காற்சிலம்பினைப் பொற்கொல்லனிடம் கொண்டு சென்று பொய் வழக்கு சாற்றப்பட்டு இறந்து படுகிறான். கருப்பன் வள்ளி இருவரும் கங்காணியின் பொய்வாக்கால் தேயிலை தோட்டம் அடைந்து பல இன்னல்களை எதிர்கொள்ள முடியாமல் வலிகளைப் பொறுத்து இறுதியில் வள்ளி நோய்வாய்ப்பட்டு இறக்கிறாள்.
🎯 தன் கணவன் கள்வன் இல்லை என வழக்காற்றி மன்னனின் தவறினை உணர்த்தி வெற்றி காண்கிறாள் கண்ணகி.
🎯 வணிகக் குலப் பெண் கண்ணகி, தன் கணவனுக்கு ஒரு நாட்டின் அரசனால் ஏற்பட்ட அநீதியை எதிர்த்து போராடும் சுதந்திரம் இருந்தது. கருப்பன் தன் மனைவி போதிய உணவு இல்லாமலும், மருத்துவ வசதி இல்லாமலும், போதிய ஓய்வு கிடைக்காமலும் இறந்து பட்டால் என்று தெரிந்தும் அவனது உரிமை குரல் ஊமையாகவே இருந்தது. பொருள்வயின் பிரிவானது வணிகருக்கும் வேளாளருக்கும் உரியது எனத் தொல்காப்பியர் கூறுகிறார்.
பொருள்வயின் பிரிதலும் அவர்வயின்ன் உரித்தே (தொல்.பொருளதிகாரம்:35)
பிரிவு மட்டுமே இருவருக்கும் உரியது போலும். வாதிட்டு நீதி பெறும் உரிமை வணிகக் குலத்துடன் நின்று விட்டது. போலும் எனவேதான், தன் மேலதிகாரி ஒருவரையும் எதிர்த்துக் கேள்வி கேட்கும் உரிமை வேளாள பொருளீட்டு வந்த மக்களிடம் பாதிக்கப்பட்டுள்ளது. “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என இறைவனை எதிர்த்து எரியூட்டப்பட்ட நக்கீரர், தவறு இழைத்த அரசனைத் தட்டிக் கேட்கும் பெண்கள் என அநீதியை எதிர்த்து குரல் கொடுக்கும் உரிமையைப் பெற்றிருந்த தமிழ் மக்களின் வாழ்க்கை சூழல் காலப்போக்கில் மாறியது. வியப்பே. அரசர்,அந்தணர், வணிகர், வேளாளர் என்னும் பிரிவு பெயரளவில் இருந்த காலத்தில் மக்கள் நீதியைச் சரியான முறையில் பெற்றனர். இந்த நான்கு வர்ணப் பாகுபாடு மக்களின் ஆழ்மனம் சென்று வெவ்வேறு இனமாகக் காண நேரிட்ட காலச்சூழலில் மக்கள் நீதி பெற அல்லலுற்றனர். அநீதிகளை எதிர்த்துக் கேள்வி எழுப்பும் தன்மை இழந்தனர். இறைவனின் தவறினைச் சுட்டிக்காட்டும் மக்களின் மனநிலை மாறி. இறைவன் தானே என எண்ணி ஆதிக்கம் செலுத்த,உழைக்கும் மக்களின் ஆவி அவர்களின் உள்ளங்கையில் சிக்குண்டது.
இன்னல்கள்
செல்வம் நிறைந்த வணிகக் குடியில் பிறந்து பொருள்களை இழந்து ஊழ்வினைக் காரணமாக மதுரை புறப்பட்டு மலர் போன்ற கண்ணகியின் பாதங்கள் பல இன்னல்களை அடைந்தது.
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு (குறள் 1029)
தன் குடிக்குக் குற்றம் வராமல் தடுக்கப் புகாரைத் தகர்ந்து. பொருளீட்டிக் குடி பெருமையைக் காக்க மதுரை அடைந்து. ஏழு மாடத்தில் இருந்த கோவலன் கண்ணகி இருவரும் சிறுவீட்டில் தங்கி. புது வாழ்க்கைக்குத் தயாராகிய வேளையில் பொற்கொல்லனால் பொய் வழக்கில் சிக்குண்டு மன்னரின் ஆணை கோவலனின் உயிரைப் பறித்தது. இவ்வாறு கண்ணகி கணவனைப் பிரிந்து அறம் செய்ய முடியாமல் பல துன்பங்களை அடைந்தாள். கணவன் மீண்டும் வந்தபின் பொருள் இல்லாமையைப் பொருட்படுத்தாமல் காற்சிலம்பு கொடுக்க. மதுரை வந்து மீண்டும் கோவலனைப் பிரிந்து பெரும் துன்பத்தை அடைந்து அழற்பட்டாள். கருப்பனும் வள்ளியும் கங்காணியின் வார்த்தைகளை நம்பி குடும்பத்தின் வறுமை நிலை மாற்றத் தேயிலை தோட்டம் செல்ல முடிவு செய்து செல்லும் வழியில் எல்லாம் பல துன்பங்களை எதிர்கொண்டு பசி மற்றும் கூட்ட நெரிசலில் சிக்குண்டு தேயிலை தோட்டம் அடைந்து.”அரிசியும் மற்றவைகளும் வாங்கிக் கொண்டு லைனுக்கு திரும்பியதும் அவர்களுக்கு இருப்பிடங்கள் ஒதுக்கி தரப்பட்டன. கருப்பனுக்கும் வெள்ளிக்கும் மட்டும் அதே லைனில் ஒரு அறையின் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டது”. (இரா.முருகவேள்,எரியும் பனிக்காடு,பக்:72) ஓர் அறையில் சிறு பகுதியில் கால் நீட்டிப் படுக்க இயலாமல் துன்புற்று இருந்தனர்.
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண் (56)
எனத் திருவள்ளுவர் கூறும் வாழ்க்கைத் துணை நலத்தின் கூறினைக் கொண்டவளாக வள்ளி, தன் கற்பு நெறியில் தன்னையும் காத்துக் கொள்ளவும் தன் கணவனான கருப்பனை காப்பாற்றிக் கொள்ளவும் தகுதி அமைந்த தன் புகழையும் காப்பாற்றிக் கொள்ளவும் ஒவ்வொரு நாளும் போராடி வெற்றி கண்டாள்..“வேலை செய்யும்போது கம்பளில் சுற்றிக் கொண்டாலும் கூட சில நிமிடங்களில் உடல் முழுவதும் மழையில் நனைந்து ஊறிப் போனது”.(இரா.முருகவேள்,எரியும் பனிக்காடு,பக்:135) இப்போராட்டத்தில் கருப்பனும் வள்ளியும் பல நாள் நோயுற்று பல ஏசல்களையும் சாட்டையடிகளையும் அப்போது சிறு பரிசாகப் பெற்று கால் நீட்டி படுக்க இயலாத சிறு அறையில் தங்கி சத்தான உணவு கிடைக்காமல் கொட்டும் மழையில் அட்டைகளின் நடுவில் ரத்த சுவடுகளுடன் உழைத்தனர். கற்பு காக்க காட்டுமிராண்டிகளிடம் உதைப்பட்டு, “ரத்தம் வழிவதை தடுக்க அவர்கள் கொழுந்து இலைகளையோ,மெல்லிய காகிதத் துண்டுகயோ அட்டை கடித்த இடத்தில் ஒட்டிக்கொண்டனர்”. இறுதியாகப் போராட்டத்தின் பெரும்பரிசாக வள்ளி மரணம் அடைந்தாள். கருப்பனின் வேதனை பெருகி வீடு திரும்ப முடியாமல் மீண்டும் வாழ்க்கை போராட்டத்தில் குதித்தான்.
தொகுப்புரை
இளங்கோவடிகளால் எழுதப்பட்ட சிலப்பதிகாரமும் பி.எச்.டேனியல் அவர்களால் எழுதப்பட்டுத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட எரியும் பனிக்காடு இரண்டும் வெவ்வேறு காலங்களில் தோன்றினாலும் சொல்லப்பட்ட செய்திகள், மக்கள் அடைந்த துன்பங்களில் தாக்கமானது புத்தகங்களின் பக்கங்களின் வழியை நிறைந்து வந்து மனதில் சில கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாக உள்ளது. சிலப்பதிகாரத்தில் குன்று போன்ற செல்வம் குறைந்ததை எண்ணி கோவலனே மதுரைச் செல்ல கண்ணகியை உடன் அழைக்கிறான். எரியும் பனிக்காடு நாவலிலும் கருப்பனே வள்ளியிடம் குடும்பச் சூழலை விளக்கி தேயிலை தோட்டம் செல்ல உடன் அழைக்கிறான். இவ்விரு நூல்களிலுமே பொருள்வயின் பிரிவின் போது இரண்டு தம்பதியரும் ஞாயிறு உதிப்பதற்கு முன் தம் ஊரை விட்டு வெளியேறுகின்றனர். கோவலன் பொருள் இல்லாமையை எண்ணி வருந்தும் வேளையில் கண்ணகி தன் காற்சிலம்பைத் தருகிறாள். வள்ளியும் தனது குடும்பச் சூழ்நிலை உணர்ந்து தனது கொலுசை அடகு வைத்துக் குடும்பத்தைக் காக்கிறாள். இவ்விரு பெண்களின் மன ஓட்டம் ஒன்றாகவே உள்ளது. இருவரும் தன்னை மட்டும் காத்துக் கொள்ளாமல் தன் குடும்பத்தைக் காப்பதில் கருத்து ஒற்றுமை உடையவர்களாக உள்ளனர். இவ்வாறு இக்கட்டுரை, பல்வேறு ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் கொண்ட இவ்விரு நூல்களையும் ஒப்பிட்டு ஆராய்ந்து விளக்குகிறது.
துணைநூல் பட்டியல்
1.திருஞானசம்பந்தம்,ச.தொல்காப்பியம் பொருளதிகாரம் மூலமும் உரையும். கதிர் பதிப்பகம், 2020.
2. முருகவேள், இரா. எரியும் பனிக்காடு. ஐம்பொழில் பதிப்பகம்( ம ) சீர் வாசகர் வட்டம்,2007.
3. காசி விசுவநாதன், வெ. பெரி. பழ. மு. (பதிப்பாசிரியர்). சிலப்பதிகார மூலமும் நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரையும். தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி, 1953.
4. திருக்குறள் பரிமேலழகர் உரை, சைவ சித்தாந்த நூல் பதிப்புக் கழகம், திருநெல்வேலி, 1951.
5. முருகையா சதீஸ். “ஔவையாரும் வள்ளுவரும் வலியுறுத்தும் நீதிக்கருத்துக்கள்: திருக்குறள் மற்றும் ஆத்திசூடியை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஒப்பாய்வு”.தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ்.(2022):102-109
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
இரா, சுபாஷினி,
உதவிப் பேராசிரியர்,
ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயா பல்கலைக்கழகம்,
காஞ்சிபுரம்.