MUSIC IN KURUNTHOGAI|Dr.M.RANI

குறுந்தொகையில் இசைகள் - முனைவர் மு.இராணி
Abstract
        There are no creatures on this earth who are not fascinated by music. Thus, music and musical instruments are found in the Kuruntogai, one of the eight volumes of Sangam literature. The Panars have mastered these musical instruments. This article aims to highlight the use of instruments such as the yazh, parai, panilam, padalai, muzhavu, kural, and the specialty of vallaipattu and the role of the Panars in the lives of the people of the Sangam period.

KEY WORDS : Yazh -panilam – parai – padalai – muzhavu – kural – Panar – vallaipattu.


குறுந்தொகையில் இசைகள்

ஆய்வுச்சுருக்கம்       
        இசைக்கு மயங்காத உயிர்கள் இப்புவியில் இல்லை. அவ்வகையில் சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகையில் இசைகளும் இசைகருவிகளும் காணப்படுகின்றன. இவ்விசைக் கருவிகளைத் திறம்படப் பாணர்கள் கையாண்டுள்ளனர். யாழ், பறை, பணிலம், பதலை, முழவு, குளிர், போன்ற கருவிகளின் பயன்பாட்டையும் வள்ளைப்பாட்டின் சிறப்பினையும் சங்க கால மக்களின் வாழ்வில் பாணர்களின் பங்கையும் எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

கலைச்சொற்கள் : யாழ் -பணிலம் – பறை – பதலை – முழவு – குளிர் –
 பாணர் – வள்ளைப்பாட்டு.

             சங்க இலக்கியம் என்பது பழந்தமிழ் இலக்கியங்களைக் குறிக்கும் ஒரு தொகுப்பாகும். இத்தொகுப்பு பண்டைய தமிழ் மக்களின் வாழ்வியலையும் பண்பாட்டையும் எடுத்துரைக்கும் ஒரு கருவூலமாகும். இக்கருவூலம் எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்னும் இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விலக்கியங்கள் அகத்திணை, புறத்திணை என வகுக்கப்படுகின்றன. அகத்திணை காதலையும் புறத்திணை வீரம், போர், அரசியல் போன்ற பிற செய்திகளையும் எடுத்தியம்புகின்றன. அவ்வகையில் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகையில் இசைக்கலை பற்றியும் பாணர்களின் இசை நுட்பம் குறித்தும் ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

எட்டுத்தொகை நூல்கள்       
“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு       
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்       
கற்றறிந்தோ ரேத்துங் கலியோடு அகம் புறம்என       
இத்திறத்த எட்டுத்தொகை”1
         
         நல்ல குறுந்தொகை எனச்சிறப்பிக்கப்படும் குறுந்தொகையில் நானூறு பாடல்கள் உள்ளன. குறுந்தொகை பாடலடிகள் நான்கு அடி சிற்றெல்லையும் எட்டு அடி பேரெல்லையும் கொண்டுள்ளன. இவற்றுள் குறிப்பாக 307, 391 ஆகிய இருபாடல்கள் மட்டும் ஒன்பது அடிகளைக் கொண்டுள்ளன. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார். தொகுப்பித்தவர் பெயர் அறியவில்லை.

குறுந்தொகையின் சிறப்புகள்       
           குறுந்தொகையில் கடவுள் வாழ்த்துப் பாடிய பெருந்தேவனாரையும் சேர்த்து 206 புலவர்கள் பாடியுள்ளனர். மேலும் கரிகால் வளவன், குட்டுவன் திண்தேர் பொறையன், பசும்பூண் பாண்டியன், போன்ற பேரரசர்களையும் பாரி, ஓரி, நள்ளி, நன்னன், போன்ற சிற்றரசர்களையும் இவ்விலக்கியம் எடுத்துரைக்கிறது.
“வினையே ஆடவர்க்கு உயிரே”2
 என்னும் அடி ஆண்களின் கடமையை எடுத்துரைக்கிறது. இவ்வடி இந்நூலுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.
தொல்காப்பியர் சுட்டும் இசைக்கருவி       
        தமிழில் முதலில் நமக்குக் கிடைத்த இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் இசைகள் பற்றியக் குறிப்புகள் காணப்படுகின்றன.

“தெய்வம் உணாவேமா மரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப”3
         
      என்று, தொல்காப்பியர் கருப்பொருளில் பறையையும் யாழையும் சுட்டுகிறார். அவ்வகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல். பாலை என்னும் ஐந்திணைகளுக்கும் உரிய பறைகளை முறையாக வெறியாட்டுப்பறை, நெல்லறிப்பறை, நாவாய்ப்பறை, ஆறலைப்பறை என்று வகைப்படுத்துவர்.  யாழினால் மீட்கக்கூடிய பண்களைக் குறிஞ்சிப்பண், சாதாரிப்பண், மருதப்பண், செவ்வழிப்பண், பாலைப்பண் என வகைப்படுத்துவர். குறுந்தொகையில் படுமலைப் பண்ணும் விளரிப் பண்ணும் இசைக்கப்படும்.

யாழ்       
       பாணர்கள் யாழினால் படுமலைப் பாலைப்பண்ணை வாசித்தனர். இவ்விசை வானோக்கி உயர்ந்து நல்லிசையாக முழங்கி நல்ல மழைவளம் தருகிறது.  அம்மழையின் செழிப்புக் காரணமாகப் பூத்த முல்லைப் பூக்களின் நறுமணம் எங்கும் வீசி மகிழ்விக்கின்றன என்பதை,
       
“எல்லாம் எவனோ? பதடி வைகல்       
பாணர் படுமலை பண்ணிய எழாலின்       
வானத்து எழும் சுவர் நல்லிசை வீழப்       
பெய்த புலத்துப் பூத்த முல்லைப்       
பசுமுகைத் தாது நாறும் நறுநுதல்       
அரிவை தோள்இணைத் துஞ்சிக்       
கழித்த நாள் இவண் வாழும் நாளே!”4
     என்னும் அடிகள் சுட்டுகின்றன. யாழ் – எழால். பாணர்கள் யாழ் மீட்டும் திறன் மிக்கவர்கள் என்பதும் யாழிசையால் பெற்ற சிறப்பினையும் அறியமுடிகிறது.

பறையும் பணிலமும்
         பணிலம் – சங்கு. அழகிய வளையல்களைத் தன் முன்கைகளில் அணிந்த தலைவி, அழகிய வீரக்கழலையும் செம்மையாகிய இலையைக் கொண்ட வெண்ணிற வேலைக்கொண்ட பாலைநிலத் தலைவனைப் பறை ஒலிக்கச் சங்கு முழங்கத் திருமணம் செய்து கொள்வது நாலூரில் உள்ள கோசரது மொழியைப்போல் உண்மையாகியது. என்பதை,

“பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு
தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய
நாலூர்க் கோசர் நன்மொழி போல
வாயா கின்றே தோழி ஆய்கழற்
சேயிலை வெள்வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே”5
        என்னும் அடிகள் சுட்டுகிறது. இதன்வழி பறையும் சங்கும் மங்கல இசைக் கருவியாகக் காணப்படுவதை அறியமுடிகிறது.

பதலை
       பதலை என்பது சங்ககாலத்தில் பாணர்கள் இசைப்பாட்டுகளுடன் பக்க வாத்தியமாக இசைத்து வந்த ஓர் இசைக்கருவி. ஒரு பக்கத்தில் மட்டும்தோல் போர்க்கப்பட்ட இசைக்கருவி.
பாணர்கள் ஒரு கண் பறையை இசைத்தனர் என்பதை,
  “பதலைப் பாணிப் பரிசிலர் கோமான்”6
என்னும் அடி சுட்டுகின்றன.

முழவு
         
           முழவு -முரசு. பனைமரத்தின் அடியானது முரசைப்போன்று உள்ளது. அப்பனை மரத்தின் கிளையில் கரிய கால்களையுடைய அன்றில் பறவை சிறிய கூடுகட்டி வாழ்கின்றன என்பதை,
         
“முழவு முதலரைய தடவுநிலைப் பெண்ணைக்
கொழுமட லிழைத்த சிறுகோற் குடம்பைக்”7
என்னும் அடிகள் எடுத்துரைக்கின்றன.

குளிர்
         
      குளிர் – மூங்கிலால் செய்த ஓர் இசைக்கருவி. திணைப்புனங்காப்போர் மூங்கிலை வீணைபோல் கட்டித் தம் விரலால் அசைத்து இசை எழுப்புவர் இவ்வாறு இசை எழுப்பும் கருவிக்கு குளிர் என்று பெயர்.
         
“சுடுபுன மருங்கிற் கலித்த வேனற்       
படுகிளி கடியுங் கொடிச்சிகைக் குளிரே
இசையின் இசையா இன்பானித்தே”8
      நன்கு விளைந்த திணைப்புனத்தில் வீழ்கின்ற கிளிகளைத் தலைவி குளிர் என்னும் இசைக்கருவி கொண்டு ஓட்டுவாள் என்பதை இவ்வடிகள் சுட்டுகின்றன.

வள்ளைப்பாட்டு
         
மகளிர் நெல் முதலிய தானியங்களை உரலில் இட்டு உலக்கையால் குற்றும் போது உண்டாகும் களைப்பினை நீக்கப் பாடப்படும் பாடல் வள்ளைப் பாடலாகும். தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தன்னுள்ளே சொல்லுவாளாய்ச் சொல்லியதை,
         
“பாவடி உரல பகுவாய் வள்ளை       
ஏதில் மாக்கள் நுவறலும் நுவல்ப       
அழிவ தெவன்கொலிப் பேதையூர்க்கே       
பெரும்பூண் பொறையன் பேஎம்முதிர் கொல்லிக்       
கருங்கட் தெயவம் குடவரை எழுதிய       
நல்லியற் பாவை அன்னஇம்       
மெல்லியற் குறுமகள் பாடினள் குறினே”9
        என்னும் அடிகள் சுட்டுகின்றன. வள்ளைப்பாட்டு களைப்பைப் போக்கும் மருந்தாவதை அறியமுடிகிறது.

பாணர்கள்       
          வில்லையுடைய படைகளைக் கொண்ட விச்சிக்கோ எனப்படும் விச்சியர்தம் தலைவன் வேந்தர்களோடு போர் புரியும் போது பாணர்கள் பாடுவர் என்பதை,
“சிறுவீ ஞாழல் வேர்அளைப பள்ளி       
அலவன் சிறுமனை சிதையப் புணரி       
குணில்வாய் முரசின் இரங்கும் துறைவன்       
நல்கிய நாள்தவச் சிலவே அலரே       
விமல்கெழு தானை விச்சியர் பெருமகன்       
வேந்தரொடு பொருத ஞான்றைப் பாணர்       
புலிநோக்கு உறழ்நிலை கண்ட       
கலிகெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே” 10
என்னும் பாடல் சுட்டுகின்றது.

பாணன் தூது         
          தலைவன் பரத்தை வீட்டில் இருந்து கொண்டு பாணனிடம் ’நான் இங்கு இல்லை என்றுத் தலைவியிடம் கூறு’ என்று,பாணனைத் தூது அனுப்புவான். பாணனும் அவ்வாறு பொய் கூறியதால், பாணன் மீது நம்பிக்கையில்லாத தலைவி, தலைவன் விரைவில் வந்து விடுவான் என்று சொல்லும் பாணனின் கூற்றும் பொய்யாகும் என்பதையும் ஒரு பாணன் பொய் கூறியதால் அனைத்துப் பாணர்களும் பொய் சொல்லும் கள்வர்கள் என்றுரைப்பதை,
         
“குருகுகௌக் குளித்த கெண்டை அயலது       
உருகெழு தாமரை வான்முகை வெரூம்உம்       
கழனியம் படப்பைக் காஞ்சி ஊர!       
ஒருநின் பாணன் பொய்ய னாக       
உள்ள பாணர் எல்லாம்       
கள்வர் போல்வர், நீ அகன்றிசி னோர்க்கோ”11         
         என்னும் பாடல் சுட்டுகின்றது. “ஒருமுறை கொக்குக் தப்பித்து அஞ்சியதால், அது போன்ற தோற்றமுள்ளத் தாமரை மொட்டுக்களைக் கண்டு கெண்டைமீன் அஞ்சுகிறது. ஒருவன் பொய் சொல்லவே ஊரிலுள்ள பாணர் எல்லோரும் பொய்யராகத் தோற்றுவதை, இது உள்ளுறை உவமையாக நின்று விளக்குகிறது.”12 இதன் வழி பாணன் தலைவனுக்காகத் தூது சென்றது புலப்படும்.

முடிவுரை         
           சங்ககால மக்களின் வாழ்வியலில் பாணர்களின் பங்கு இன்றியமையதது. யாழ், பறை, பணிலம், பதலை, முழவு, குளிர், போன்ற இசைக்கருவிகளைப் பாணர்கள் திறம்படக் கையாண்டுள்ளனர் என்பதைத் தெளிவுறுத்துகிறது.  பாணர்களின் யாழிசையால் நாடு சிறக்க நல்ல மழைவளம் பெற்றதை அறியமுடிகிறது. பறையும் சங்கும் மங்கல இசைக்கருவியாகக் காணப்படுவது புலப்படுகிறது. பாணர்கள் இசை மட்டுமல்லாது தலைவனுக்காகத் தலைவியிடம் தூது சென்றதும் புலப்படும்.

சான்றெண் விளக்கம்
1.மது.ச.விமலானந்தம், இலக்கிய வரலாறு, ப.39

2.குறுந்.135

3.தொல். அகத். 20

4.குறுந்.323

5.மேலது.15

6.மேலது.59

7.மேலது.301

8.மேலது.291

9.மேலது.89

10.மேலது.328

11.மேலது.127

12.தமிழண்ணல், குறுந்தொகை, மூலமும் உரையும், ப.168

துணைநூற்பட்டில்
1.விமலானந்தம் மது.ச., இலக்கிய வரலாறு, முல்லை நிலையம், 9, பாரதி நகர் முதல் தெரு. தி.நகர், சென்னை – 17.

2.தொல்காப்பியம் இளம்பூரணனார்,சாரதா பதிப்பகம், சென்னை.

3.தமிழண்ணல் முனைவர், குறுந்தொகை மூலமும் உரையும், கோவிலூர் மடாலயம், வர்த்தமான் பதிப்பகம், 21, இராமகிருஷ்ணா நகர், சென்னை – 17.

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் மு.இராணி
உதவிப்பயிற்றுநர்,
தமிழ்த்துறை,
அழகப்பா பல்கலைக்கழகம்,
காரைக்குடி.3

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here