Yogic Life shown in Naladiyar|S.Malathi

நாலடியார் காட்டும் ஓக வாழ்வியல் - ச. மாலதி
Abstract
           
     Mental health is equally important to human well-being as physical health. In the past, humans used to live a simple and peaceful life, in harmony with nature. But, adapting to the rapid advancements in modern technology is essential for human survival in today’s world. As a result of this, he now leads an anti-natural lifestyle. Hence, the human body and mind are becoming sick. In this scenario, yoga becomes an essential for preserving mental and physical well-being among people. In this era of rampant commercialization, it is crucial for us to grasp the ancient wisdom of our forefathers in order to understand the true essence of yoga and how it can enhance our well-being, both physically and mentally. This article compares the Jain sages’ Naladiyar song to the Atanga yoga standards of Iyama, Niyama, Adhana, Pranayama, Pratyakara, Dharana, Dhyana, and Samadhi as described in Thirumandram, the first Tamil book to comprehensively explore the practise of yoga. Additionally, it has been noted how yoga aspects influenced the ancient Tamil people’s way of life, which was centred on nature and morality. Yoga is not just a physical activity, but a way of life that nurtures the mind, as exemplified by the songs of Naladiyar. In addition, it demonstrates how essential it is for people to conduct themselves following yogic principles in the modern world.

Keywords: yoga, Atanga yoga, Naladiyar, Thirumandiram, Iyama, Niyama, Adhana, Pranayama, Pratyakara, Dharana, Dhyana,  Samadhi.


நாலடியார் காட்டும் ஓக வாழ்வியல்

ஆய்வுச் சுருக்கம்
         
        மனிதனின் நலம் என்பது உடல்நலத்தினை மட்டுமன்று; அஃது மனநலத்தினையும் சார்ந்தது. இயற்கையோடு இணைந்து எளிமையாகவும் அமைதியாகவும் வாழ்ந்துகொண்டிருந்த மனிதன், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து வாழவேண்டியத் தேவை ஏற்பட்டுவிட்டது. இது அவன் வாழ்க்கைமுறையை இயற்கையிலிருந்து விலகி ஓடவைத்திருக்கிறது. இவ்வோட்டம் மனிதனின் உடலையும் மனத்தையும் நலம் குன்ற வைத்துள்ளது. இந்நிலையில் மனிதனின் உடலையும் மனத்தையும் நலமுடன் பேணுவதற்கு ஓகம் முக்கியப் பங்குவகிக்கிறது. அதுவே, வணிகமாகிவிட்ட இக்காலக்கட்டத்தில், நம் முன்னோர்கள்  ஓகப் பயிற்சிகளை எவ்வாறு கடைபிடித்து,  தங்கள் உடலையும் மனத்தையும் ஆரோக்கியத்துடன் வைத்துக்கொண்டனர் என அறிவது தேவையாகிறது. இக்கட்டுரையில், ஓகக் கலையை முழுமையாகப் பேசும் முதல் தமிழ் நூலான திருமந்திரம் வரையறுத்துள்ள அட்டாங்க யோக நெறிகளான இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம் மற்றும் சமாதி போன்றவற்றின் கூறுகள், சமண முனிவர்கள் பாடிய நாலடியாரில் பொருத்திப் பார்க்கப்பட்டுள்ளது. மேலும், பழந்தமிழ் மக்களின்   வாழ்வியல் செயல்பாடுகள் இயற்கைச் சார்ந்தும் அறநெறியோடும் இருந்தமையில் ஓகக் கூறுகளின் பங்கு குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. ஓகம் என்பது உடலினை வருத்திச் செய்யும் பயிற்சிகள் மட்டுமல்லாமல்  மனத்தையும் பண்படுத்தும்  வாழ்வியலாக இருந்தமையை நாலடியார் பாடல்கள் வழி வெளிக்கொணரப்பட்டுள்ளது. அதோடு, இன்றைய நாளது செயல்பாடுகளில், ஓக நெறிமுறைகளை மக்கள் கடைபிடித்து வாழவேண்டியதின் இன்றியமையாமையும் உணர்த்துவதாக அமைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்         
       அட்டாங்க ஓகம், ஆதனம், இயமம், ஓகம், சமாதி, தாரணை, தியானம், திருமந்திரம், நாலடியார்,  நியமம், பிரத்தியாகாரம், பிராணாயாமம்.

முன்னுரை
         
       மனிதனின் உடலையும் மனத்தையும் நலமுடன் வைக்கும் ஓர் ஒப்பற்ற பயிற்சிதான் ஓகக்கலை. குடும்பமாகச் சேர்ந்து வாழ்ந்து, இன்ப-துன்பங்களைப் பகிர்ந்துகொண்ட மனிதன் இன்றைய வாழ்முறைச் சூழலில் தனித்தனியாக வாழ்கிறான். இச்சூழலில், வாழ்க்கையை மகிழ்ச்சியாக அமைத்துக்கொள்ள கூடுதல் அக்கறையை உடல்நலத்திலும்  மனநலத்திலும் செலுத்தவேண்டியுள்ளது; உடலையும் மனத்தையும் நலமுடன் பேணுவதற்கு ஒவ்வொரு மனிதனும் தமக்குத்தாமே முயற்சியும் பயிற்சியும் செய்யவேண்டியிருக்கிறது. உடலையும் மனத்தையும் ஒருங்கிணைத்து, தனிமனிதனின் வாழ்வியல் செயல்பாடுகளைச் செம்மையாக்குவதில் ஓகக்கலை பெரும்பங்கு வகிக்கிறது. இயற்கையை விட்டு விலகியும் தனித்தீவாகவும் வாழ்ந்துகொண்டிருக்கும் இக்காலத் தலைமுறைக்கு ஓக வாழ்க்கை நெறிகளின் இன்றியமையாமையை உணர்த்துவதோடு, பழந்தமிழரின் வாழ்வியலில் ஓக நெறிகள் பெற்றிருந்த இடத்தை அறிவதும் அதுகுறித்தான நுட்பங்களை மீட்டுருவாக்கம் செய்வதும் தேவையாக இருக்கிறது. அந்தவகையில், பதினெண்கீழ்க்கணக்கில் சமண முனிவர்கள் எழுதிய நாலடியாரை ஆய்வுக்களமாகக் கொண்டு இக்கட்டுரை அமைந்துள்ளது.      
         
     ‘நாலடியார் காட்டும் ஓக வாழ்வியல்’ என்ற தலைப்பில் அமையும் இக்கட்டுரை, உடலை வருத்திச் செய்யும் உடற்பயிற்சி மட்டுமல்லாமல், செம்மையான வாழ்க்கை நெறிமுறைகளைப் பின்பற்றி வாழும் வாழ்க்கைமுறையே ஓகம் என்பதைக் கருதுகோளாகக் கொள்கிறது.  மேலும், உடல்நலத்தோடு மனநலத்தையும் பேணும் ஓக வாழ்க்கை முறையின் தேவையை, இன்றைய தலைமுறைக்கு உணர்த்துவதை  நோக்கமாகக் கொள்கிறது.

ஓகம் – விளக்கம்           
        ‘யூஜ்’ என்ற வடசொல் திரிந்து, யோகா என ஆங்கிலத்திலும் வடமொழியிலும் யோகம் எனத் தமிழிலும் வழங்கப்படுகிறது. அகரமுதலி செந்தமிழ் சொற்களஞ்சியம் அதனை  ‘ஓகம்’  என்று  முழுமையான தமிழில் வழங்கி, அதற்கு உடலியற் கலை எனப் பொருள் வழங்கியுள்ளது. மேலும், ஓகம் என்பதற்கு  மூச்சுடன் கலந்த உடற்பயிற்சி எனப்  தமிழ் – தமிழ் பையடக்க அகராதி பொருள் தருகிறது (செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், ப.69). பொதுவாக ஓகம் என்றால், ஒன்று மற்றொன்றுடன்  இணைதல், கலத்தல் மற்றும் ஒன்றுதல். உடலைக் கருவியாக்கி அதன்வழியாக உள்ளத்தை உயிரைக் கட்டியாள்கிற எல்லா முயற்சிகளும் ஓகமாகிறது.  அவ்வாறு கட்டியாண்டு ஓகம் செய்தவர்கள் ஓகிகள் என்று ஆறுமுகத் தமிழன் கரு. உயிர்வளர்க்கும் திருமந்திரம் என்ற கட்டுரையில்  விளக்கம் தருகிறார். (இந்து தமிழ்திசை, 20.ஜூன் 2018). இவற்றிலிருந்து உடலும் உயிர் மனம் மூன்றும்  இணக்கமாக இருக்க பழகும் பயிற்சிகள்   ஓகம் என்று புரிந்துகொள்ளலாம்.
         
         பதஞ்சலியின்  ‘யோகசூத்திரம்’ மற்றும்  வியாசரின் ‘பகவத் கீதை’ இரண்டு நூல்களும் ஓகம் குறித்து விரிவாக விளக்கியுள்ளன. தமிழில்  திருமூலரின் ‘திருமந்திரம்’ ஓகம் குறித்த  விளக்கங்களையும்  பயிற்சி முறைகளையும்   விளக்கியுள்ள முதல் நூலாகும்.  ஓகத்தினைத் திருமந்திரம் எட்டு வகையான  நிலைகளாகப் பிரித்து அதை வாழ்வியல் முறையாக வகுத்துக்கொடுத்துள்ளது. அவ்வெண்வகை ஓக நிலைகளை அட்டாங்க யோகம் என்கிறார் திருமூலர்.
                            
இயம நியமமே எண்ணிலா ஆதனம்                       
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரம்                       
சயமிகு தாரணை தியானஞ் சமாதி                       
அயமுறும் அட்டாங்க மாவது மாமே.         (திருமந்திரம், பா.552)
      என்ற திருமந்திர சூத்திரம், 1.தீதகற்றல் 2.நன்றாற்றல் 3. இருக்கை நிலைகள் 4. வளிநிலை 5.தொகை நிலை 6.பொறை நிலை 7.நினைதல் 8.நொசிப்பு என்னும் ஓக நிலைகளைக்  கூறுகிறது. இவ்வெட்டு ஓக நிலைகளின் அடிப்படையில்,  நாலடியார் பாடல்களில் பொருத்திப் பழந்தமிழர்களின் ஓக வாழ்வியல் முறைகளைக் காண்கிறது இக்கட்டுரை.
 
இயமம் – தீதகற்றல்         
        தன்னிடம் உள்ள தீயகுணங்களை நீக்கி நல்ல குணங்களை பழகிக்கொள்ளுதல்தான்,  மனிதன் மேன்மையடைவதற்குச் செய்யவேண்டிய முதல் செயலாகும். அதனையே திருமத்திரம், ஓகத்தின் முதல் நிலையாக ‘இயமம்’ என்று வகுத்து, மனிதன், தீய குணங்களை நீக்க கடைபிடிக்கவேண்டிய பத்து தீதகற்றும் குணங்களை   பட்டியலிட்டுள்ளது.
     கொல்லாமை, பொய்யாமை, களவு செய்யாமை, நல்ல குணங்கள், அடக்கமுடைமை, நடுநிலைமை எனும் விருப்பு வெறுப்புகள் இன்மை, பகுத்துண்டல், குற்றமின்மை, கள்ளுண்ணாமை, காமம் இன்மை என்னும் பத்தினையும் உடையவனே இயம யோகம் கைவரப் பெற்றவனாவான் என்பதைத்   திருமந்திரம்  தீதகற்றலுக்கான குணங்களாகச் சுட்டுகிறது. (திருமந்திரம், பா.554)

கொல்லாமை          
   நல்ல ஒழுக்கம் எனப்படுவது யாதென்றால், எந்தவொரு உயிரையும் கொலை செய்யாமல் காக்கும் நெறி(திருக்குறள், பா.324)  என்கிறார் வள்ளுவர். அத்தகைய நெறியைக் கடைப்பிடிக்காமல் உயிர்க் கொலைப் புரிவோர் மிகுந்த துன்பத்தில் உழல்வர்    என்பதும் சான்றோர் கருத்து. இதனை,
                    
இரும்பார்க்கும் காலராய் ஏதிலார்க் காளாய்க்                 
கரும்பார் கழனியுட் சேர்வர் – கரும்பார்க்கும்                 
காட்டுளாய் வாழுஞ் சிவலும் குறும்பூழும்                  
கூட்டுளாய்க் கொண்டுவைப் பார்.                 (நாலடியார், பா.122:3-4)
       என்ற நாலடியார் பாடல், காட்டில் வாழும் பறவைகளான காடை, கவுதாரி போன்ற பறவைகளைப் பிடித்து கூண்டில் அடைத்து வைப்பவர்கள், தொடரும் பிறவிகளில் இரும்பு விலங்குகளால் பூட்டப்பெற்ற அடிமைகளாகத் துன்புறுவர் என்று குறிப்பிடுவதிலிருந்து, உயிர்களைக் கொல்வதால் உண்டாகும் துன்பங்களை எடுத்துரைத்துக் கொல்லாமையை வலியுறுத்துவதினை ஓகத்தின் இயம நிலையாகக் காணமுடிகிறது.
நடுநிலைமை         
பல்வேறு நற்குணங்கள் இருந்தாலும் நடுநிலைமையே சான்றோர்க்கு அணியானபடியால் நாலடியாரும் மனிதர் மேன்மையடைய நடுநிலைமை தேவை என்பதை பின்வருமாறு விளக்குகிறது.
                             
———————-நயமுணராக்                       
கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும்,                       
வையார் வடித்தநூலார்.                      (நாலடியார், பா.163:3-4)
        என்ற பாடலடிகள், நல்லொழுக்கமில்லா மனிதர்களின் புகழ்ந்துரையும் இழிந்துரையும் பெரியோர் ஒக்கவே நோக்குவர் என்று குறிப்பிட்டுள்ளது. இதிலிருந்து, ஒருசார்பாக இயங்குதல் தீமையையே விளைவாகக் கொடுக்கும் என்பதால்,  மனிதருக்கு விருப்பு வெறுப்பில்லா நடுநிலைமை என்ற அறிவின் செயல்பாடு தேவை என்பது தெளிவுறுகிறது.

அடக்கமுடைமை
         
       அடக்கமுடைமையாவது மனம்‌, மொழி, மெய்கள்‌ தீய நெறிகளிலே செல்லாமல்‌ அடங்கி ஒழுகுதல்‌ ஆகும்‌ என்று டாக்டர். சஞ்சீவி குறிப்பிட்டுள்ளார் (திருக்குறள்‌ அமைப்பும்‌ முறையும்‌, ப.48). இதனை ஓகத்தின் இயமப் பண்பாக திருமந்திரம் வகுத்துள்ளதைப்போல்  நாலடியாரும் சுட்டுகிறது
                            
பெரியார் பெருமை சிறுதமைமை ஒன்றிற்கு                         
உரியார் உரிமை  அடக்கம்.        (நாலடியார், பா.170:1-2)
      என்ற பாடலடிகள், பெரியோர்க்குப் பெருமைத் தருவது பணிவுடைமை என்பது போல வீடுபேற்றினை வேண்டுவர்க்கு அடக்கம் இன்றியமையாதது  என்று கூறுகிறது. எனவே, அடக்கமுடைமை ஓகப்பயிற்சியின் அடிப்படையான இயல்பாகக் சான்றோர் சுட்டுவதை உணரமுடிகிறது.

பகுத்துண்டல்         
       பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்ற வள்ளுவரின் வாக்கைச் சமண முனிவர்களும் மக்களுக்கு கற்பித்துள்ளனர். இதனை,
                  
பரவன்மின் பற்றன்மின் பார்துண்மின் யாதும்                
கரவன்மின் கைத்துண்டாம் போழ்து.               (நாலடியார்,  பா. 92:3-4)
       என்ற பாடலடிகள், மேலும் மேலும் பொருள் தேடி அலையாதிருங்கள், தமக்கு மட்டும் என்று பற்றிக்கொண்டிருக்காதீர்கள், பலருக்கும் பகுத்துக் கொடுத்து உண்ணுங்கள் மேலும், கையிலிருப்பதை ஒளிக்காமல்  கொடுத்து உதவுகள் என்று,  அறிவுறுத்துகிறது.  இது, எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் நினைத்து பகிர்ந்துண்டு வாழ்தல் மனிதரை இயல்பாகத் தீயவற்றிலிருந்து விலகி நற்செயலைச் செய்விக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
 
காமம் இன்மை
         
      எய்யப்பட்ட அம்பு, நெருப்பு, சூரியனின் வெப்பம் போன்றவைப் புறவுடலைச் சுடும் ஆனால்  காமம், மனத்தை  மிகுந்த வெப்பமுடையதாக்கிக், கவலையை உண்டாக்கிச் சுடும். (நாலடியார், பா. 89) மேலும், காமத்தீ ஒருவனுக்கு மனத்தில் உண்டாகிவிட்டால், நீரில்  மூழ்கினாலும் குன்றின் மேல் ஏறி ஒளிந்துகொண்டாலும் சுடும் எனக்  மிகுதியான காமத்தின் துன்பத்தை எடுத்துக் கூறுகிறது. (நாலடியார், பா. 90) எனினும் இத்தகைய காமநோய்  அறிவை உரமாக உடைய மனவலிமை மிக்கவரிடம்  மிகாது, அவ்வாறு மிகுந்தாலும்  மற்றவர் அறிய வெளிப்படாமல் உள்ளேயே தணிந்து ஆறிவிடும் என்பதைப் பின்வரும் நாலடியார் பாடல் சுட்டுகிறது.
                            
பரவா, வெளிப்படா, பல்லோர்கண் தங்கா;                       
உரவோர்கண் காமநோய் ஓஓ!- கொடிதே!                       
விரவாருள் நாணுப் படல்அஞ்சி யாதும்                       
உரையாதுஉள் ஆறி விடும்.                         (நாலடியார், பா. 88:2)
 
     இவற்றிலிருந்து, மிகுதியான காமம் பெரும் துன்பம் தருவதால் அதனை, மிகாமல்  காக்கவேண்டும் என்பதை   உணர்ந்துகொள்ளமுடிகிறது.

நல்ல குணங்கள்
          அறநெறிச் செயல்களைத் தெரிந்துகொள்ளுங்கள், உயிரைக் கொல்லும் எமனுக்குப் பயப்படுங்கள், மற்றவர்களின் கடுஞ்சொல்லைப் பொறுத்துக் கொள்ளுங்கள், வஞ்சகச் செயல்களைப் பொறுத்துக் கொள்ளுங்கள். தீச்செயல் செய்பவர் நட்பினை வெறுத்து ஒதுக்குங்கள் மேலும், எப்போதும் பண்பில் பெரியவர்  கூறும் சொற்களைக் கேட்டுப் பின்பற்றுங்கள் (நாலடியார், பா.172) என்று நாலடியார் நற்குணங்களைப் பட்டியலிடுகிறது. அதோடு, இயமத்தில் கடைபிடிக்க வேண்டிய  கள்ளுண்ணாமை, பொய்யாமை, களவு செய்யாமை,  போன்ற தீதகற்றும் செயல்களையும் பின்வரும் பாடலில் சுட்டுகிறது. 
கள்ளார்கள் ளுண்ணார் கடிவ கடிந்தொரீஇ                        
எள்ளிப் பிறரை யிகழ்ந்துரையரா – தள்ளியும்                        
வாயிற் பொய் கூறார்.                        (நாலடியார், பா. 157:2-3)
          திருமந்திரம் கூறும் இயமத்திற்கான நியதிகளை நாலடியார், ஓக நெறி எனத் தனித்து வகுக்காமல், மனிதரின் வாழ்வியல் நெறிகளாக, அவர்களின் நாளது செயல்பாடுகளில் கடைப்பிடிக்க வேண்டியச் செயல்பாடுகளாக அறிவுறுத்தியுள்ளதிலிருந்து, பழந்தமிழரின் வாழ்வியல் முறையாக ஓக நிலைகள் இருந்தமைத் தெளிவாகிறது.

நியமம் – நன்றாற்றல்         
       நற்செயல்களே மனிதனை நல்ல சிந்தனையோடும் மேன்மையுடைய குணங்களோடும் இருக்கப் பழகுகிறது. இதனைத்,  ‘தவஞ்செபஞ் சந்தோடம்’  என்ற திருமந்திர சூத்திரம் தனித்திருந்து இறைவனைத் தியானித்தல், மந்திரங்களை ஒரு மனத்துடன் ஓதுதல், அக மகிழ்வோடிருத்தல், கடவுள் நம்பிக்கை கொள்ளுதல், தானம் செய்தல், விரதம் இருத்தல், மெய்யறிவு பெறுதல், இறைவழிபாடு செய்தல், பரம்பொருளை அகச்சிந்தனைச் செய்தல், தெளிந்த அறிவுடையச் செயல்கள் போன்ற நன்னெறிகளைக் கடைப்பிடித்தல் ஓகத்தின் இரண்டாம் நிலையான  நியமம் எனத் திருமந்திரம் வரையறுக்கிறது.  (திருமந்திரம், பா.557) விரதமும் தவமும் மனிதன்  வாழ்க்கையை ஒழுக்க நெறியில் வாழ்வதற்குத் தேவை என்பதை,
                            
ஊக்கித்தாம் கொண்ட விரதங்கள் உள்ளுடையத்                          
தாக்கருந் துன்பங்கள் தாந்தலை வந்தக்கால்                          
நீக்கி நிறூஉம் உரவோரே நல்லொழுக்கம்                          
காக்கும் திருவத் தவர்.                      (நாலடியார், பா.57)
          என்ற நாலடியார் பாடல்,  தாம் தொடங்கிய விரதங்களில் இடையூறுகள் வந்தால், உறுதியான மனவலிமையுடன்  தடைகளை நீக்கி, விரதங்களைக் காத்து முடிக்க வல்ல நல்லொழுக்கமானவர்களைத் தவம் செய்பவர் என்கிறது. இதில், தவம் மற்றும் விரதம் ஆகியவற்றைக் கடைப்பிடிக்க மனவுறுதி தேவை எனச் சுட்டியிருப்பதன் மூலம்  அக்கால மக்கள்  விரதம், தவம் போன்ற  நியமங்களைக் கடைப்பிடித்து வாழ்ந்தமை  தெரியவருகிறது.

ஆதனம் – இருக்கை
         
          உடலைப் பல்வேறு கோணங்களில் நிறுத்தி, பயிற்சி செய்தல் ஆதனம் அல்லது இருக்கை நிலை எனப்படும். இதில் பத்மாசனம் முதலாகப் பல முக்கிய  இருக்கை நிலைகள் உள்ளன என்பதை,   ‘பங்கய மாதி பரந்தபல் ஆதனம் அங்குள வாம்’ (திருமந்திரம், பா. 540) என்று திருமூலர் கூறியுள்ளார்.  உடலினை உறுதி செய்யும் பயிற்சிகள் குறித்த தகவல்கள்  நாலடியாரில் காணப்படவில்லை எனினும், உறுதியான உடலினைக் கொண்டு பயனுள்ளச் செயல்களைச் செய்யவேண்டும் என்று  பின்வரும் பாடல்வழி குறிப்பிடுகிறது.
                                 
யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற                 
யாக்கையா லாய பயன்கொள்க                          (நாலடியார், பா. 28:1-2) 
பிராணாயாமம் – வளிநிலை
         
    இன்றையச் சூழலில், பரவலாக மக்களிடையே ஓகப்பயிற்சியாகக் கற்றுக்கொள்ளப்படுவது பிராணாயாமம் ஆகும். வளிநிலை என்பது உடலுக்குள்  இயங்கும் உயிர் மூச்சுக்காற்றைக் கட்டுக்குள் கொண்டுவருதல்  ஆகும்.  இதனை, திருமூலர் பிராணன் மனத்தொடும் பேராது அடங்கி (திருமந்திரம், பா. 567) என்ற திருமந்திர சூத்திரத்தில் விவரித்திருக்கிறார். 
          நாலடியார், ஓக நிலையான மூச்சுக்காற்றைக் கட்டுப்படுத்தும் பயிற்சி முறைகளை விளக்கவில்லையெனினும் உயிர்க்காற்றின் இயக்கத்தைக் குறிப்பிட்டுள்ளது.  ‘தோற்பையுள் நின்று  தொழிலறச் செதூட்டும் கூத்தன்’ (நாலடியார், பா. 26:3-4) என்றப் பாடலடி, தோல் போர்த்திய உடலினுள் நடக்கவேண்டிய இயக்கத்தை நிகழவைப்பது, உயிர் (மூச்சுக்காற்று)  என்று குறிப்பிட்டுள்ளமை,  உயிர் காற்று குறித்த அக்கால மக்களின் நுண்ணறிவைக் காட்டுகிறது.

பிரத்தியாகாரம் – தொகை நிலை
         
        புலன்கள் வழி மனம்  செல்வதை நிறுத்தித் தன்னுள் நடக்கும் நிகழ்வுகளை அறிதல் பிரத்தியாகாரம் என அழைக்கப்படுகிறது. மனம் போகும் வழியில் மனிதன் செயல்படாமல், ஆராய்ந்து நல்வழியில் செயல்படுவதற்குத் தொகை நிலை எனக் கூறப்படும் பிரத்தியாகாரம் உதவிசெய்கிறது.  ‘கண்டுகண் டுள்ளே கருத்துற வாங்கிடிற் கொண்டுகொண் டுள்ளே குணம்பல காணலாம் ’( திருமந்திரம், பா. 578)  என்ற திருமந்திர சூத்திரம், புறத்தே ஓடுகின்ற மனத்தை அகத்தில் நிற்குமாறு செய்திட்டால் மனத்தில் சிறிது சிறிதாக இருள் நீங்கி, ஒளிபெறலாம் எனப் பிரத்தியாகாரம் பயிற்சிமுறையைத் தந்துள்ளது.
                            
மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற                         
ஐவாய வேட்கை அவாவினைக் – கைவாய்                       
கலங்காமல் காய்த்துய்க்கும் ஆற்றல் உடையான்                       
விலங்காது வீடு பெறும்                              ( நாலடியார், 59:1-4)
 
         என்ற நாலடியார் பாடல், மெய், வாய், கண், மூக்கு, காது  என்னும் ஐந்து புலன்களின்   அதீத ஆசைகளை அடக்கியும், அளவு மீறி  அவற்றின் வழிச் செல்லாமல் பாதுகாத்து நல்ல வழியில் செல்லுமாறு  வாழும் மனவலிமை உடையவர்கள் உயரிய பேரின்ப  புகழ் வாழ்வைப் பெறுவார்கள் என அறிவுறுத்துகிறது. இது,  புலன்வழி செல்லும் மனத்தினை நல்ல வழியில் செலுத்தவேண்டும் என்ற திருமூலர் கூறும் பிரத்தியாகாரத்தின் வரையறையோடு பொருந்துவதனால், அக்கால மக்களிடையே ஓக பழக்கங்கள் இருந்தன என்பதும் அவற்றை மக்கள் பின்பற்றுவதற்கு அறிவுறுத்தப்பட்டதும் தெரியவருகிறது.

தாரணை – பொறைநிலை
         
            ஓக நிலைகளில் ஆறாவது  நிலை, பிரத்தியாகாரத்தின் மூலம் புலன்வழி செல்லாமல், உள்ளே திருப்பிய மனத்தை அலைபாயவிடாமல் அகத்தே நிலைபெறச்செய்தல் பொறைநிலையாகியத் தாரணையாகும். ( திருமந்திரம், பா. 578) 
      
நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்                       
தலையாயார் தங்கருமம் செய்வார்.               ( நாலடியார், 52:1-2)
       என்ற பாடல், நோய் மூப்பு சாக்காடு  இவை மூன்றும்  நிலையற்றவை என்பதை உணர்ந்த மேலோர், தன்  உயிர் உய்யும் வகையான கடமைகளைச்  செய்வர் என்று பாடியுள்ளது. நிலையற்றவற்றை நீக்கி நிலைபேற்றைப் பெறுவதற்கான தவமுயற்சிகளாகிய தன்கடமைய செய்வார்கள்  என்பது நாலடியார் சிந்தனை. இச்சிந்தனை தேவையற்றதில் மனதைச் செலுத்தாமல் தன் கடமையில் மனதை நிறுத்தல் என்ற பொறைநிலையை உணர்த்துவதாகவுள்ளது.

தியானம் – நினைதல்         
         தாரணையில் குறிப்பிட்டவாறு பொறி புலன்கள் நீங்கி மனம் ஒடுங்கி இறை நினைவில் இருப்பது தியானம். இதனை இரு நிலைகளாகக் கூறுகிறார் திருமூலர், அதாவது, உச்சியில் ஒளி வடிவாக இறைவனைத் தியானிப்பின், அது சக்தி  தியானமாகும்; இறைவனை உச்சியில் அருவமாகத் தியானித்தல் சிவத் தியானமாகும். இதனைப் பின்வரும் திருமந்திரச் சூத்திரம் சுட்டுகிறது. 
                  
வருமாதி யீரெட்டுள் வந்த தியானம்               
பொருவாத புந்தி புலன்போக மேவல்               
உருவாய சத்தி பரத்தியான முன்னுங்               
குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே.        (திருமந்திரம், பா. 598 )
        ‘உள்ளத்தான் உள்ளி’ (நாலடியார், பா. 64:3) என மனத்தால் நினைத்தலைப் பற்றிக் கூறும் நாலடியார், தியானம் செய்வது ஒருவரின் வாழ்க்கைச் செயல்பாடுகளில் தலையாய கடமையாக இருக்கவேண்டும்  என்பதை,  ‘தலையே தவமுயன்று வாழ்தல் ஒருவர்க்கு’ (நாலடியார், 365:1) என்று  அறிவுறுத்துவதைப் பார்க்கமுடிகிறது.

சமாதி – நொசிப்பு         
சமாதி என்னும் முடிவுநிலை, இயமம் முதலிய ஏழு ஓக நிலைகளிலும் வழுவாது கடைப்பிடிப்பதால் அடையும் நிலையாகும். இதனை,  ‘சமாதி யமாதியில் தான் செல்லக் கூடும்’ (திருமந்திரம், பா. 618) என்ற திருமந்திர சூத்திரம், இயமம் முதல் தியானம் வரை  பழகியபின் இறையோடு ஒன்றி நிற்கும் நிலையேச் சமாதி என்று வரையறுக்கிறது. 
          எனவே, ஓகப் பயிற்சிகளைத் தொடர்ந்து பழகவேண்டியத் தேவையைப் பின்வரும் நாலடியார் பாடல் இயம்புகிறது. 
                              
விளக்குப் புகஇருள் மாய்ந்தாங் கொருவன்
                            
தவத்தின்முன் நில்லாதாம் பாவம் – விளக்குநெய்
                            
தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை
                            
தீர்விடத்து நிற்குமாம் தீது.                                 (நாலடியார், 51:1-4)

          என்ற பாடல், இருள் சூழ்ந்திருக்கும் இடத்தில் ஒரு விளக்கு ஏற்றப்பட்டால், அங்கு இருள் மறைந்து விடுவது போல,  ஒருவர் செய்கின்ற தவம் அவர் முன்பு செய்த பாவங்களை நீக்கும். எந்த விளக்கினால் இருள் மறைந்ததோ, அந்த விளக்கின் நெய் குறைந்து வற்றிவிட்டால், அங்கு இருள் மீண்டும் பரவும். அது போன்று நல்வினைத் தீருமானால், வாழ்வில் தீயவை வந்து நிற்கும் என்று அறிவுறுத்துவதின் மூலம், அத்தீயவற்றைப் போக்கத் தவம் என்பது தொடர்ந்து செய்யக்கூடியது என்பதை எடுத்துக்காட்டியுள்ளது.

முடிவுரை
         
    உடற்பயிற்சி மட்டுமே ஓகமல்ல, உள்ளத்தை ஒருமைப்படுத்துவதே ஓகத்தின்  இன்றியமையாத இலக்காகும்.  மனிதன் இவ்விலக்கை அடைவதற்கு   உள்ளமும் உடலும் தூய்மையோடு வைத்திருக்க வேண்டியுள்ளது. மனத்தில் எந்தவிதமான அகத்தடையும் புறத்தடையும்  உண்டாகாமல் இருக்க, இயம நியமங்களை ஓகவாழ்வியலின் தொடக்க நிலைகளாகப் பின்பற்றினர். இவற்றை  ஒழுக்க நெறிகளாக, தம் வாழ்க்கை முறையின் செல்நெறியாகப் பழந்தமிழர் கொண்டிருந்தனர் என்பதை  மேற்கண்ட  நாலடியார்  செய்திகள் வழி அறிந்துகொள்ளமுடிகிறது.
          அதேபோல், மூச்சுக் காற்றின் இயக்கமும்  உடலின் அசையா நிலையும் உள்ளத்தினை ஒருமைப்படுத்த உதவும். இதற்காகத்தான், பிராணாயாமம் முதல் தியானம் வரை பயிற்சிகளாகப் பழகி சமாதி என்ற ஒன்றுதலை எய்தினர். அவற்றை நாலடியார் பயிற்சிமுறைகளாகக் கூறாவிடினும் அவை சான்றோர்களால்  கடைப்பிடிக்கப்பட்டும் மக்களுக்குக்  கடமையாக வலியுறுத்தப்பட்டும் வந்தன என்பதையும் அறியமுடிகிறது. மனிதன் ஆரோக்கியத்துடனும்  ஆனந்தமாகவும் வாழ்வதற்கு உடலும் மனதும் ஒன்றிணைந்து இயங்குவது தேவையாகிறது. அவ்வொருங்கிணைப்பை ஓகப் பயிற்சிகள்  உண்டாக்குகின்றன. மேலும் அவை, நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையாக இருந்தன என்பதையும் உணர்ந்து, நம்மிடமுள்ள தீதகற்றி, நன்றாற்றி உடலையும் மனத்தையும் வலிமையோடும் தூய்மையோடும் பேணிக்காக்கச் சிறந்த வழியாக ஓகப் பயிற்சிகள்   உள்ளன என்பதையும் அறிந்துகொள்ளமுடிகிறது.
துணை நூற்பட்டியல்
1.ஆறுமுகத் தமிழன், கரு. “உயிர்வளர்க்கும் திருமந்திரம் 36”, இந்து தமிழ்திசை, 20.ஜூன்    2018). https://www.hindutamil.in/news/spirituals/130125-36.html. 29.11.2023 அன்று       அனுகப்பட்டது.

2.சண்முகம் பிள்ளை (தொகு), தமிழ் – தமிழ் அகரமுதலி அகராதி. உலகத் தமிழாராய்ச்சி       நிறுவனம், தரமணி, சென்னை, மீள்பதிப்பு- 2015.

3.சிங்காரவேலு முதலியார் ஆ. அபிதான சிந்தாமணி அகராதி. சீதை பதிப்பகம், சென்னை.16  ஆம் பதிப்பு – 2018.

4.சிவராஜன், க. திருமூலரின் அஷ்டாங்க யோகம். அழகு பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு – 2007.

5. ஞானானந்தா. திருமந்திரக் கருத்து.  சிவஞான சுவாமிகள் பேரவை, விக்கிரமசிங்கபுரம்,      மறுபதிப்பு – 29 ஏப்ரல் 2004.

6. பாலசுந்தரம் பிள்ளை, தி.சு. (உரை) . நாலடியார், கழக வெளியீடு, சென்னை – 2007.

7. புலவேறு அரிமதிதென்னகன். நாலடியார் நயவுரை. வசந்தா பிரசுரம், சென்னை – டிசம்பர்   2002.

8. ஸ்ரீசந்திரன், ஜெ. (உரை). நாலடியார், வர்த்தமானன்  பதிப்பகம், சென்னை – 2000.

9. ஸ்ரீநிவாசன், தே. ஆ. திருமந்திரக் கட்டுரை மூன்றாம் தந்திரம், திருவாவடுதுறை ஆதீனம்,           திருவாவடுதுறை. முற்பகுதி – தை 1963.

10. ஜம்புநாதன்‌ எம்‌. ஆர்‌. யோகாசனங்கள், ஜம்புநாதன் புஸ்தக சாலை, சென்னை, இரண்டாம் பதிப்பு- 1928.

References
1.Arumugathamizhan, karu. “Uyir Vllarkum Thirumanthiram 36”, Hindu Tamilthisai,20.June 2018.           https://www.hindutamil.in/news/spirituals/130125-36.html. Accessed on 28.11.2023.

2.Shanmugampillai (edt), Tamil – Tamil Agaramudali Dictionary. International Institute of Tamil Studies,   Chennai, Revised edition – 2015.

3.Singaravellu mudaliyar, A. Abithana Chinthamani dictionary.  Seethai Publication, Chennai, 16th edition   – 2018.

4.Sivarajan, K. Thirumularin Ashttanga yogam. Azhagu Publication, Chennai, First edition – 2007.

5.Gnanandha.Thirumanthira karuthu. Sivagnana Swamigal Peravai,  Vikramasinkapuram, Reprint – 29    April 2004.

6.Balasundaram Pillai, T.S. Nalladiyar,  Kazhaga Publication, Chennai – 2007.

7.Pulaveru Arimadithennakan. Nalladiyar Nayavurai. Vasantha Publication, Chennai – 2002.

8.SriChanthiran, J. Nalladiyar, Varthamanan Publication, Chennai – 2000.

9.Srinivasan, T.A. Thirumanthira Katturai 3rd Thanthiram, Thiruvavaduthurai aadiinam,    Thiruvavaduthurai. First part –  1963.

10.Jambunadan M.R. Yogasanangal, Jambunathan bookstore, Chennai, Second edition – 1928.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
ச. மாலதி,
Iniyavaikatral_Article_Publishedமுனைவர் பட்ட ஆய்வாளர்: பதிவு எண்  2819,

நெறியாளார். முனைவர் ஆ. மணவழகன்,
இணைப் பேராசிரியர்,

சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்,
         உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.







LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here