Abstract
The single line of “not waterless” will include all that emphasizes the need for water management. There is a lot of evidence in the Sangam literature that the ancient Tamil creatures have been praised and protected by water. This article has taken some of them.
சங்க இலக்கியத்தில் நீர் மேலாண்மை
முன்னுரை
“நீரின்றி அமையாது உலகு” என்ற ஒற்றை வரியில் நீர் மேலாண்மையின் அவசியத்தை வலியுறுத்தும் அத்தனையும் அடங்கிவிடும். பழந்தமிழர் உயிரினும் மேலாக நீர் வளத்தைப் போற்றிப் பாதுகாத்து வந்துள்ளனர் என்பதற்கு ஏராளமான சான்றுகள் சங்க இலக்கியத்தில் உள்ளன. அவற்றில் சிலவற்றை இக்கட்டுரை எடுத்தாண்டுள்ளது.
நீர் நிலைகள்
‘நீர்நிலை’ என்ற சொல் சமுத்திரங்கள், கடல்கள், ஆறுகள், நீரோடைகள் சுனைகள், மடுக்கள் போன்ற இயற்கையான நீர் நிலைகளையும் ஏரிகள், குளங்கள், கிணறுகள், அணைகள் போன்ற செயற்கையாக உருவாக்கப்பட்ட நீர் நிலைகளையும் குறிக்கும். பொதுவாக பண்டைத் தமிழர்கள் அகழி, அருவி, ஆழிக்கிணறு, ஆறு, இலஞ்சி உறைக்கிணறு ஊறுணி, ஊற்று, ஏரி, கட்டுக்கிணறு, கடல், கண்மாய், குட்டம், கயம், கூவல், கேணி, சிறை, புணற்குளம் என்று பலவகையான நீர் நிலைகளைப் பயன்படுத்தி உள்ளனர்.
அகழி – கோட்டையின் புறத்தே அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர் அரன்
அருவி – மலை முகட்டு தேங்கிய நீர் கொட்டுவது நீர்நிலைச் சேகரிப்பும் பாதுகாப்பும்
ஆழிக்கிணறு – கடல் அருகே தோண்டப்பட்ட கிணறு
ஆறு – பெருகி ஓடும் நதி
இலஞ்சி – நீர் நிறைந்த ஆழமான பள்ளம்
உறைக்கிணறு – மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வளையம் இட்டது
ஊருணி – மக்கள் பருகுநீர் உள்ள நீர்நிலை
ஊற்று – அடியிலிருந்து ஊரும் நீர்
ஏரி – வேளாண்மைப் பாசன நீர்த்தேக்கம்
கட்டுக்கிணறு – சரளை நிலத்தில் தோண்டி கல், செங்கற்களால் அகச்சுவர் கட்டிய கிணறு
கண்மாய் – பாண்டி மண்டலத்தில் வழங்கப்படும் ஏரியின் பெயர்
குட்டம் – ஆழமான நீர்நிலை
கயம் – குளம்
கூவல்- உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை
கேணி – அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு
சிறை – தேக்கப்பட்ட பெரிய நீர்நிலை
புணர்குளம் – நீர் வரத்து மடையின்றி மழைநீரை கொண்டுள்ள குளிக்கும் நீர்நிலை
சங்க இலக்கியத்தில் நீர் நிலைகள்
சங்க இலக்கியத்தில் பல வகையான இயற்கை மற்றும் செயற்கை நீர்நிலைகள் சூட்டப்பட்டுள்ளன சான்றாக அயிரி (அகம் 177:11) ஆன்பொருநை (புறம் 36:4) காவிரி (அகம் 123:11) குமரி (புறம் 6:2) என்ற நிலைகளில் இயற்கை நீர் நிலைகளையும் குளம், கிணறு, கிடங்கு போன்ற செயற்கை நீர் நிலைகளையும் உருவாக்கிப் பயன்படுத்தியுள்ளனர்.
“நெடுங் கிணற்று வல்லுற்று உவரிதோண்டி” (பெரும் 97– 98)
“திரைப்படக் குழிந்த கல்கழ் கிடங்கு” ( மலை 90-19)
நீர்நிலைச் சேகரிப்பும் பாதுகாப்பும்
பண்டைத் தமிழர் நீர் நிலைகளை உருவாக்கும் போது தகுந்த இடம் உணர்ந்து செய்ததற்கான குறிப்புகளும் உள்ளன. நீர்ப்பாசனம், குளித்தல் போன்ற பல்வேறு தேவைகளுக்காகப் பெரிய அளவில் குளங்கள் வெட்டப்பட்டிருந்தன.
“குளம் தொட்டு வளம் பெருக்கி” பட்டி- 284
சங்ககால மக்கள் கேணி எனப்படும் சிறுகுளம் போன்ற கிணற்றை ஊருக்குப் பொதுவான இடத்தில் வெட்டி அந்நீரைப் பருகியுள்ளனர்.
“ஊர்உண் கேணி உண்துறைத் தொக்க” (குறுந்: 399-1)
“ஊர்உன் கேணி பகட்டு இலைப்பாசி” (அகம்:392-3)
“மூதூதர் வாயில் பணிக்கயம் மண்ணி “ (புறம்-9:1)
என்று புறநானூறு குறிப்பிட்டுள்ளது. மேலும் இவை மழை நீரை தேக்கிக் கொள்ளும் நீர் தேக்கிக்கிகளாகப் பயன்பட்டுள்ளன.
“பூவற் படுவில் கூவல் தோண்டிய செங்கட் சின்னீர்” (புறம் 319: 1.2 )
“கனிச்சியில் குழித்த கூவல் நண்ணி
ஆன்வழிப்படுநர் தோண்டிய பத்தல்” (நற்றிணை 240: 6-8 )
நீரூற்றுகள் இருக்கக்கூடிய இடமறிந்து நீர் நிலைகளை உருவாக்கியுள்ளனர். இயற்கையாகக் கிடைக்கும் நீரைப் பயன்படுத்தியும் எதிர்கால தலைமுறைக்கும் விட்டுச் செல்ல வேண்டும் என்பதற்காகவும் பண்டைத் தமிழர் மடை, கால்வாய், குளம், கேணி உள்ளிட்டவை மூலம் நீரினைச் சேமித்து வைத்துள்ளனர்.
“வையை உடைந்த மடையடைத்த கண்ணும்
பின்னும் மலிரும் பிசிர் போல வின்னும்” (பரி: 6)
“ஊர்க்காள் நிவந்த பொதும்பருள் நீர்க்கால்” (கலி: 35-5)
“ஆறுகுளம் நிறைகுற போல அல்குலும்” (அகம்: 11)
அணை அமைத்தல்
கற்களைக் கொண்டு தடுப்பணைக் கட்டி, ஆற்றில் பெருக்கெடுத்து வரும் வெள்ளத்தைத் தடுத்து பயன்படுத்தி உள்ளனர்.
“வருவிசை புனல் கற்சிறை போல் ஒருவன்
தாங்கிய பெருமை யாலும்” (தொல்:பொருள்.65 : 725-726)
மழையினால் கிடைக்கும் நீரினையும் அருவிகளிலிருந்து கிடைக்கும் நீரினையும் சுனையில் சேமித்துப் பின் அகன்ற வாய்க்கால் மூலம் நீர்ப்பாய்ச்சி பயன்படுத்தி உள்ளதை நற்றிணை குறிப்பிட்டுள்ளது.
அகழ்வாய் பஞ்சுனை பயிர் கால் யாப்ப (நற்.5:2)
“ஊர்க்காள் நிவந்த பொதும்பருள் நீர்க்கால்” (கலி. 35:5)
நீர்நிலைகளைப் பாதுகாத்தல்
நீர்நிலைகளின் கரைகள் அழியாமல் இருக்க கரைகளுக்கு வலுவை தருகின்ற வேழக்கரும்பு என்றும் கொளுக்கச்சி அல்லது கொறுக்கந்தட்டு என்று கூறப்படும் புல்லினை வளர்த்துள்ளனர். இதன் தண்டில் துளை இருந்தமையால் உழவர் மகளிர் அஞ்சனம் இட்டு வைப்பர். மூங்கிலைப் போல் இவை வீடு கட்டி வரிச்சற் பிடித்ததற்குப் பயன்படும். நீராடுபவர்க்கு இது புணையாய் அமைக்கப்படுவது உண்டு என்பதை ஐங்குறுநூற்றில் காணமுடிகிறது.
“பரியுடை நன்மான் பொங்குவளை அன்ன
வடகரை வேழம்” (ஐங்குறு: 13 :1-2 )
குலத்தின் கரைகளைப் பாதுகாக்க குளக்கரைகளில் மரங்களை வளர்த்துள்ளனர்.
“நாள்இடைப் படாஅ நளிநீர் நீத்தத்து
இடிகரைப் பெருமரம் போல” (குறும் : 368:6-7 )
“கடும்புனல் அடைகரை நெடுங்கயத்து” (குறுந்- 171: 2 )
நீர்ப்பெருக்கு கரையோர மண்ணை அரித்துக் கரையை உடைப்பதை தவிர்க்கத் தென்கரை அமைத்தனர். இதனால் கரையோர மரங்களின் வீழ்ச்சியும் தடுக்கப்பட்டது.
“நாளிடைப் படாஅ நளிநீர் நீத்தம்
திண்கரைப் பெருமரம் போல” (குறுந் -368:.7-8 )
நீர்த்தேக்கப் பராமரிப்பு முறை
நீர்த்தேக்கங்களைப் பாதுகாத்து ஒழுங்குபடுத்தும் பணிகளில் காவலர்கள் இருந்தனர் என்பதைச் சங்கப்பாடல்கள் தெளிவுபடுத்தியுள்ளன. நீர் வரத்து அதிகமானாலோ அல்லது கசிவு ஏற்பட்டாலோ உடனடியாக காவலர்கள் அதனை ஊர் மக்களுக்குத் தெரியப்படுத்திச் சரிப்படுத்தும் விதமாக ஊர் மக்களோடு இணைந்து மணல் பைகளைக் கொண்டு கரையின் உயரத்தை உயர்த்தி நீரைச் சேமித்து வைத்துள்ளனர்.
“திரைச்சிறை உடைத்தன்று கரைச்சிறை அறைக எனும்
உரைச்சிறை பறை எழெளஉர் ஒலித்தன்று” (பரி:6- 22-25 )
“பெருங்குளக் காவலன் போல” (அகம்: 252)
நீர் சுழற்சி பற்றிய புரிதல்
மேகம் கடல் நீரை முகர்ந்து மழையாகப் பொழிகிறது. மலையில் விழும் மழை நீர் ஆறாகப் பயணித்துக் கடலைச் சேர்கிறது. நிலப்பரப்பில் விழும் மழைநீர் நிலத்தடி நீராகிறது. நீர்நிலைகளில் விழும் மழைநீர் மீண்டும் ஆவியாகி மழையாகிறது என்று நீர் சுழற்சி பற்றிய புரிதலைப் பட்டினப்பாலை தெளிவுபடுத்திய விதம் சிறப்பிற்குரியது.
“வான்முகுந்த நீர் மழைபொழியவும்
மலைப்பொழிந்த நீர் கடற்பரப்பவும்
மாரி பெய்யும் பருவம் போல
நீரினின்று நிலத்து ஏற்றவும்
நிலத்தினின்று நீர் பரப்பவும் (பட்டி :126 130)
நீர்நிலைகள் மழை நீர் போக்கு ஆகியவற்றை உள்ளடக்கிய நீர் நிலைகளில் நீர் சுழற்சி ஏற்படுகிறது.
நீரின் பயன்பாடுகள்
குளங்கள் குடிநீருக்காக மட்டுமன்றி மகளிர் நீராடுவதற்கும் பயன்பட்டுள்ளன. தண்ணீரைப் போதுமான அளவு திறந்து விட்டு பாசனத் தொழில் செய்யும் நுட்பங்களுடன் குளங்களை அமைத்து பயன்படுத்தியுள்ளனர். மழைக் காலங்களில் வரும் வெள்ள நீரை குளங்களில் சென்று சேரும்படி கால்வாய்கள் அமைத்துள்ளதை பொருநராற்றுப்படையில் காணப்படுகிறது.
“துறைதோறும் பொறை உயிர்த்து ஒழுகி
நிரைத்தலைக் குரைப்புனல் வரைப்பு அகம்புகு தொறும்” (பொரு: 238-239)
ஆழமான நீரை உடைய குட்டத்தில் கரையிலிருந்து குதித்து குளித்துள்ளனர். கரையவர் மருள திரையகம் பிதிர
நெடுநீர்க் குட்டத்து துடுமெனப் பாய்ந்து” (புறம் 243: 8-9 )
“கூம்பு நிலை அன்னமுகைய ஆம்பற்
தூங்கு நீர்க்குட்டத்து துடுமென வீழும்” ( நற்றிணை- 280:2-3)
உழவர்கள் நெற்பயிரை உடைய தமது வயல்களில் காஞ்சி மரத்தின் சிறு சிறு துண்டுகளை நட்டுக் கருப்பங்கழிகளை குறுக்கு நெடுக்காக வைத்து அடைத்து அணையாக ஆக்கி அப்பளங்களில் நீரைத் தேக்கி வயலுக்குப் பாய்ச்சிய செய்தியை அகநானூறு குறிப்பிட்டுள்ளது.
“….கலிமகி உழவர்
காஞ்சிஅம் குநற்தறி குத்தி தீம்சுவை
மீது அழி கடுநீர் நோக்கி” (அகம்- 346: 5-10 )
நீரைத் தெரிவித்த முறை
கலங்கிய நீரைத் தெளிவிக்கத் தேற்றாங்கொட்டை விதையைப் பயன்படுத்திய செய்தியைக் கலித்தொகையில் காணமுடிகிறது.
“கலம் சிதை இல்லத்துக் காழ்கொண்டு தேற்றக்
கலங்கிய நீர் போல் தெளிந்து நலம் பெற்றாள்” (கலித்தொகை- 142: 64-65 )
தேற்றா மரத்தின் நசுக்கப்பட்ட விதை கலங்கிய நீரில் காணப்படும் அழுக்குகளைச் சுத்தப்படுத்தி அழுக்குகள் கீழே தங்கி விடுகின்ற நிலையில் மேலே நீர் சுத்தமாகவும் தெளிவாகவும் இருக்கும் என்று சிந்தித்து நீரைச் சுத்தப்படுத்திப் பயன்படுத்திய சங்கத் தமிழரின் நீர் மேலாண்மைத் திறன் அறிவியல் சிந்தனைக்கும் அப்பாற்பட்டது. பண்டைத் தமிழர் குடிநீரைச் சேமித்து வைக்க கன்னல், செப்பு போன்ற கலன்களைப் பயன்படுத்தி உள்ளனர்.
“அறசிர வெய்ய வெப்பத் தண்ணீர்
சேமச் செப்பிற் பெறீஇயரோ” (குறுந்தொகை:277 )
சேமச்செப்பு என்பதற்கு நீரை சேமித்து வைக்கும் பாத்திரம் என்று பொருள்.
முடிவுரை
மேற்காணும் சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக சங்கக் காலத்து தமிழரின் நீர் மேலாண்மைத் திறத்தை எண்ணுகையில் அறிவியலுக்கும் அப்பாற்பட்ட நுட்பத் திறனை சங்ககாலத் தமிழர்கள் பெற்றிருந்திருந்தார்கள் என்பது கண்கூடு.
பார்வை நூல்கள்:
சங்க இலக்கியம் மூலமும் உரையும் வர்த்தமானன் பதிப்பகம் சென்னை -17 முதற்பதிப்பு : ஏப்ரல் 2002 உரையாசிரியர்: முனைவர் தமிழண்ணல், பதிப்பாசிரியர்கள்: முனைவர் தமிழண்ணல், முனைவர் சுப. அண்ணாமலை
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் சீனு. தண்டபாணி,
இணைப்பேராசிரியர் & தமிழ்த்துறைத் தலைவர்,
சாரதா கங்காதரன் கல்லூரி,
வேல்ராம்பட்டு, புதுச்சேரி.