Abstract
The origins of Tamil literature are deeply rooted in various social, economic, cultural, and political contexts. Ancient Tamil literary works were crafted strictly within the framework of traditional grammar and conventions. In contrast, contemporary literary creations often break away from these established norms, aiming instead to narrow the gap between the writer and the reader. In this context, the modern epic Por Maravan (The Warrior of War), composed by the renowned poet Paavendhar (Bharathidasan), serves as the primary focus of this study. This paper examines how Por Maravan reflects a shift from classical literary traditions to a more accessible, reader-centric narrative style, while still engaging with themes relevant to the Tamil cultural and political milieu.
Key words
Pavendar in pormaravan – Literary Tradition- Reader Engagement – Socio political context- Cultural context – Phychological Emotions- Modern Tamil Epic.
பாவேந்தர் பாரதிதாசனின் படைப்புக் கலை நயமும் படைப்பாக்க உத்தியும்
(போர் மறவனை முன்னிறுத்தி)
கட்டுரைச் சுருக்கம்
தமிழ் இலக்கியத்தின் தோற்றம் என்பது பல்வேறு சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சூழல்களில் ஆழமாக வேரூன்றி உள்ளது. பண்டைய தமிழ் இலக்கிய படைப்புகள் யாவும் மரபு இலக்கணக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன. இம்மரபமைப்பிலிருந்து விலகி இதற்கு நேர்மாறாக சமகால இலக்கியப் படைப்புகள் எழுத்தாளருக்கும் வாசகருக்குமான இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாக கொண்டுள்ளன. அவ்வகையில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் இயற்றப்பட்ட போர் மறவன் இவ்வாய்வுக் கட்டுரையின் களமாக அமைந்துள்ளது.
திறவுச் சொற்கள்
இலக்கிய மரபு- வாசகர் தொடர்பு- சமூக அரசியல் சூழ்நிலை- பண்பாட்டுச் சூழல் -மன உணர்வுகள் -நவீன தமிழ்க் காவியம்.
தோற்றுவாய்
தமிழ் இலக்கிய மரபின் முக்கிய திருப்புமுனையை உருவாக்கும் நவீன தமிழ்க் காவியமாக போர் மறவன் உள்ளது.இச்சிறுகாவியம் தமிழ் கலாச்சார மற்றும் அரசியல் சூழலுடன் தொடர்புடைய கருப்பொருள்களால் படைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய இலக்கிய மரபுகளிலிருந்து மிகவும் அணுகக் கூடிய வாசகர்களை மையமாகக் கொண்ட கதைப் பாணிக்கு எவ்வாறு மாறுகிறது என்பதை இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது.
பாவேந்தரின் போர் மறவன்
கவிதை அல்லது பாடல் வடிவில் உள்ள நாடகப் பங்கில் அமைந்த 54 பாடல் வரிகள் கொண்ட சிறு காப்பியம் போர் மறவன். இது பாரதிதாசனின் கதைப் பாடல்கள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. காப்பியக் கதையைத் தொடங்குவதற்கு முன் திராவிட நாட்டுப் பண் 32 வரிகளில் பாடப்பட்டுள்ளது. பாண்டிமா நாடு குறித்தும் பாண்டிமா நாட்டு போர் மறவன் போருக்கு செல்வதையும், போர் மறவனை பிரிந்த தலைவி அவன் வருகைக்காகக் காத்திருப்பதையும் கதைக்களமாக அமைத்து கவிதையியலோடு படைத்திருக்கின்றார்.
படைப்புப் பொருண்மை
இலக்கியப் படைப்பாக்கம் என்பது உளவியல் தொடர்புடையதாகும். படைப்பின் உளவியலுக்கும் படைப்பாக்க உளவியலுக்கும் பொருத்தப்பாடு இருக்கின்றது. ஒரு படைப்பினைப் படைப்பதற்குப் படைப்பாளிக்கு ஏற்படும் உந்துசக்தி, படைப்புக் குறித்த பொருண்மை ஆழ்மன வெளியில் உருவாகி பின்பு படைப்பாக வெளிவருகின்றது. போர் மறவனின் படைப்புப் பொருண்மையாகத் திராவிட இனப்பற்று அமைகின்றது. திராவிட இனப்பற்றின் ஊடாக போர் மறவனின் கடமையையும் அவனின் வாழ்வியலையும் பாடுவதே படைப்பின் நோக்கமாகும். அதே நேரத்தில் தமிழ் இலக்கிய மரபின் மையமான அகம் சார்ந்த செய்திகளை இக்காப்பிய இன்பத்திற்காகக் கட்டமைத்திருக்கின்றார்.
திராவிட நாடு என்ற கருத்தாக்கம்
திராவிடம் என்ற சொல்லுக்கு 150 ஆண்டுகால வரலாறு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 1944-1955 ஆம் ஆண்டுகளில் “திராவிட நாடு திராவிடருக்கே” என்ற கோரிக்கை வலுத்திருந்தது. இந்தக் காலகட்டத்தில் தான் பாரதிதாசனின் கவிதை தொகுதி 2 வெளிவருகின்றது. திராவிட நாடு கோரிக்கைக்கு அடிப்படையான காரணங்களாகத் தமிழ் ,தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என்ற மொழிகள் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதும் , ஏனைய இந்திய மொழிகளில் இருந்து வேறுபட்டு இருப்பதும் ஆய்வுகள் மூலம் அறியப்பட்டது. இவை அனைத்தும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. மொழி, கலாச்சாரம் , பண்பாட்டில் தென்னிந்திய மாநிலங்களிடையே பெரிய அளவில் ஒற்றுமை இருந்தது. தொடக்க காலத்தில் தமிழகத்திலிருந்து மட்டும்தான் தனி திராவிட நாடு கோரிக்கை எழுந்தது. ‘திராவிட ‘என்னும் சொல் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியொன்றைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களைக் குறிக்கும். திராவிடர்கள் செறிந்து வாழும் பகுதி தென்னிந்தியாவில் விந்திய மலைக்கு தெற்கே உள்ள பகுதியாகும். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளும் திராவிடர்களின் தாயகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் ‘குமரிக்கண்டம்’ என்னும் பகுதி திராவிடர் தோன்றிய இடமாகக் கருதப்படுகின்றது. இதனைத் திராவிட நாட்டுப் பண் பகுதியில் பாவேந்தர் குறிப்பிடுகின்றார்.
“சூழும் தென்கடல் ஆடும் குமரி
தொடரும் வடபால் அடல்சேர் வங்கம்
ஆளும் கடல்கள் கிழக்கு மேற்காம் அறிவும் திறலும் செறிந்த நாடு
பண்டைத் தமிழும் தமிழில் மலர்ந்த பண்ணிகர் தெலுங்கு
துளு மலையாளம் கண்டை நிகர் கன்னடமெனும் மொழிகள்
கழகக் கலைகள் சிறந்த நாடு”
என்ற வரிகளில் பாவேந்தரின் திராவிட இனப்பற்று புலனாகிறது.
தமிழகப் போர் மறவர்கள்
நாட்டின் பாதுகாப்பிற்குப் போர்ப் படைபலம் இன்றியமையாததாகும். அஞ்சாமை என்பது போர்ப் படைகளின் முதற்குணம். வீரமும் மானமும் வழி வழியாக வந்த போரிடும் திறனும் படைகளுக்குரிய பண்புகள் ஆகும். தமிழகப் போர் மறவர்கள் என்பவர்கள் ஆங்கிலேயர்களைக் கடுமையாக எதிர்த்து போர் புரிந்தவர்கள். அவர்கள் தங்கள் ஆட்சி செய்த பகுதிகளை இழந்து நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்தவர்கள். போர் மறவர்கள் அதிகமாக வாழ்ந்த பாண்டிமா நாடு என்பது இன்றைய தமிழக மாவட்டங்களான மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி பகுதிகளாகும். இதனை,
“அள்ளும் சுவைசேர் பாட்டும் கூத்தும்
அறிவின் விளைவும்
ஆர்த்திடு நாடு வெள்ளப் புனலும் ஊழித் தீயும்
வேகச் சீறும் மறவர்கள் நாடு
இங்கு திராவிடர் வாழ்க மிகவே
இன்பம் சூழ்ந்தது எங்கள் நாடு”
என்று, போர் வந்தால் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர்கள் போர் மறவர்கள் என்பதை “வேகச் சீரும் மறவர்கள் நாடு” எனக் குறிப்பிடுகின்றார். போர் மறவர்கள் பகைவர் மேல் போர் புரிய விருப்பம் உடையவர்கள் என்பதைப்,
புறநானூறு – “போரெனிற் புகழும் புனைகழன் மறவர் “
திருக்குறள் -“உறின் உயிர் அஞ்சா மறவர்” என்றும் சிறப்பிக்கின்றன.
படைப்பாக்கக் கலை நயம்
இலக்கியத்தின் வடிவமும் பொருளும் சமுதாயத்தின் தேவைக்கேற்ப மாறுபட்டு அமைகின்றன. கவிதை என்பது அழகியல் உணர்ச்சி உடைய ஓசை சந்துத்துடன் அல்லது ஒத்திசை பண்பு சொற்களால் சேர்க்கப்பட்ட இலக்கிய கலை வடிவமாகும். மேலும் மொழியில் உள்ள ஒலியின் அழகியல் ஒலிக் குறியீடுகள் ஆகியவற்றுடன் இடம், இயல்பான பொருள் போன்றவற்றை வெளிப்படையாகக் காட்டுவதாக உள்ளது. உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்தவும் தூண்டவும் கவிதை உதவுகின்றது. போர் மறவனில் தலைவன் போர் செய்திக் கேட்டு உறுதியாகப் போரிட சென்று விடுவான் என்ற நினைத்த தலைவி, தலைவனைப் பிரிய மனமில்லாமல் தவிக்கின்றாள். தலைவனுடன் பிரியாது இருக்கும் காலத்தில் அவளுக்கு இன்பத்தைத் தந்த நிலா, நீர்வீழ்ச்சி, தென்றல், கிளிப்பேச்சு இவை எல்லாம் தலைவனைப் பிரிகையில் அவளுக்கு வருத்தத்தைத் தருவதாக அமைகின்றன. தலைவியின் மனநிலையை,
“என்றன் மலருடன் இறுக அணைக்கும்அக்
குன்று நேர் தோலையும், கொடுத்த இன்பத்தையும்
உளம் மறக்காதே ஒரு நொடியேனும் !
எனை அவன் பிரிந்ததை எவ்வாறு பொறுப்பேன் !
வான நிலவும், வன்புனல்,தென்றலும் ஊனையும் உயிரையும் உருக்கின.
இந்தக் கிளிப்பேச்சு எனில் கிழித்தது காதையே !
புளித்தது பாலும் ! பூ நெடி நாற்றம்.
என்று தலைவியின் மன வலியும், பிரிவின் வேதனையும் ,காதலின் தேக்கமும் நயமான உவமை உருவங்களுடன் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. தலைவியின் மன உணர்வுகள் -“மலருடல் இறுக அணைத்தல் “;”குன்று நேர் தோல்” “கிழித்தது காதை”; “புளித்தது பாலும்”, “பூ நெடி நாற்றம்” என்ற உவமை, உருவகங்கள் மூலம் உணர்வுகளின் உடலியலானது படைப்பின் கலை நயத்துடன் உச்சநிலையைத் தொடுகின்றன. படைப்பாளனின் உணர்ச்சி அனுபவமும் வாசகனின் உணர்ச்சி அனுபவமும் கிட்டத்தட்ட ஒன்றாகுமாறு செய்யவல்லதே சிறந்த கவிதையாகும்.
கவிஞரின் உணர்ச்சி சொற்களாகவும், சொற்பொருளாகவும், ஒலி நயமாகவும் வடிவம் பெறுகின்றது. உரையாடல் பாங்குடைய கவிதைகள் படிப்போரை எளிதில் சென்றடையும் ஆற்றல் உடையவை .அந்த வகையில் தலைவனைப் பிரிய மனமில்லாமல் தலைவியானவள் கண்ணீர்த் துளிகளோடு “வாழையடி வாழையென வந்த என் மாண்பு வாழிய” என வாழ்த்தி தலைவனைப் போருக்குச் செல்ல விடை தருகின்றாள். ஒலிநயம், சொல்லாட்சி எதுகை மோனைகளுடன் சந்தங்களை பெற்றுள்ள போர் மறவன் கருத்துக்கும் உணர்வுக்கும் ஏற்றவாறு வரியமைப்பைப் பெற்றுள்ளது. கவிதையின் உணர்ச்சிக் கூர்மை, வடித்துக் காய்ச்சிய சிக்கனச் சொற்கள் வண்ணக் கலவையாக மிளிர்கின்றன.
படைப்பாக்க உத்தி
சமகால கவிதைகளில் உவமை, உருவகம், படிமம், குறியீடு, அங்கதம், முரண், சிலேடை, இருண்மை ஆகிய உத்தி முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. படைப்பிற்குத் தலைப்பிடுதல் என்பது மிக முக்கியமான உத்தி முறைகள் ஒன்று. ஒரு படைப்பு வெற்றி பெற வேண்டுமாயின் அதன் தலைப்புத் தெளிவாகவும் சுவைபடவும் பொருள்படவும் அமைந்திருத்தல் வேண்டும். பாவேந்தரின் போர் மறவனின் தலைப்பும் அவ்வாறாகவே அமைந்துள்ளது.
பண்டைய இலக்கிய கவிதை மரபில் அகத்தில் புறக்கூறும் புறத்தில் அகக்கூறும் இயைந்து படைக்கும் நெறி உள்ளது. அந்த வகையிலேயே போர் மறவனையும் பாவேந்தர் படைத்திருக்கின்றார் பாண்டிமா நாட்டின் வளம். மொழி, கலை ,பண்பாடு ,தலைவனைப் பிரிந்த தலைவியின் மனநிலை, போர் மறவனின் கடமை ,போர்க்களத்தில் போர் மறவனின் மனநிலை போன்றவற்றை எடுத்து இயம்பி பழமை புதுமை என்ற இருவகை கவிதையியல் மரபுகளும் கொண்டு போர் மறவனைக் கட்டமைத்துள்ளார்.
இலக்கிய உத்திகள்
அக உணர்வுகளை மறைமுகமாக, குறிப்பாக உணர்த்த சங்கப் பாடல்களில் உள்ளுறை உவமை, இறைச்சி என்னும் இலக்கிய உத்திகளைப் புலவர்கள் கையாண்டுள்ளனர். போர் மறவனின் தலைவன் பகைவரின் வாள் மார்பில் பட்டு போர்க்களத்தில் சாய்ந்த போதும் கூட, அவன் வேதனையை ஒரு பொருட்டாகக் கருதாமல் தலைவியின் நிலையைக் கண்டு வருந்துகிறான். என்னை நினைத்து, என் வருகையை எதிர்பார்த்து உணவருந்தாமல், உறக்கமில்லாமல் கண்ணீரோடு தனிமையில் காத்திருப்பாளே! அவளிடம் என் நிலையை யார் போய் கூறுவார் என்று வேதனை கொள்கிறான். இந்த இடத்தில் பறவையை ஒரு உத்தியாகக் கவிதை அமைப்பிற்குப் பாவேந்தர் கையாண்டிருக்கின்றார்.
“பறவையே ஒன்றுகேள்! பறவையே ஒன்று கேள்!
நீ போம் பாங்கில் நேரிழை என் மனை, மாபெரும் வீட்டு மணி
ஒளி மாடியில் உலவாது மேன், உரையாது செவ்வாய்
இனிமையாது வேற்க்கண் என்மேல் கருத்தாய்
இருப்பாள் அவள்பால் இனிது கூறுக;
பெருமை உன்றன் அருமை மணாளன் அடைந்தான். அவன்
தன் அன்னை நாட்டுக் குயிரைப் படைத்தான் உடலை
படைத்தான் என்று கூறி ஏகுக மறைந்திடேல்!
பாண்டி மாநாடே !பாவையே !வேண்டினேன் உன்பால் மீளா விடையே”
என்ற வரிகளில் பறவையை ஒர் ஊடகமாக மாற்றும் உத்தியும், வலியை பெருமையாக கொள்ளும் உத்தி முறையும் உரையாடல் வடிவமைப்பில் எழுத்தின் ஒலியியல் இசை நயமும் என்று படைப்பாக்க உத்திகளாகக் கையாண்டுள்ளார்.”பறவையே ஒன்று கேள்”என்ற வரி பிரகடன உத்தியாக அமைந்துள்ளது.தலைவன் தனக்குள்ளாகவே பேசுகின்ற உரைநடை பாங்கு நாடகத் தோற்றத்தை வடிவமைத்திருக்கின்றது. போர் மறவனின் கவிதை அமைப்பானது எளிமை, தெளிவு, பேச்சுத்தன்மை, நேரடித் தன்மை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு உரைநடையின் வாக்கிய அமைப்பில் செறிவு செய்து கட்டமைக்கப்பட்டுள்ளது.
நிறைவாக
பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் போர் மறவனில் திராவிட நாடு, பாண்டிமா நாட்டு வளம், அங்கு வாழும் மக்கள் பற்றி முதலில் குறிப்பிட்டு பிறகு தலைவியின் மனநிலையை எடுத்துக் கூறி அதனை இடையிலேயே நிறுத்திவிட்டு ,போர் மறவனின் கடமையையும் குடி சிறப்பையும் உரைத்து இறுதியில் தனிமனிதனின் உயிர்த்தியாகத்தை மனித காப்பியமாக நிறைவு செய்கின்றார். இம்முறை இலக்கியத்தின் பொருண்மை, வடிவம் ,உத்தி என்ற கட்டமைப்பிற்குத் தக்க சான்றாக அமைந்திருக்கின்றது.
பார்வை நூல்கள்
1.பாரதிதாசன் கவிதைகள்- இரண்டாம் தொகுதி, பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி.
2.புறநானூறு -நியூ செஞ்சுரி பதிப்பகம், சென்னை.
3.தமிழ் கவிதையியல் -இரா. சம்பத், சாகித்திம அகாடமி வெளியீடு.
4.தமிழ் அழகியல் -தி.சு நடராஜன், காலச்சுவடு பதிப்பகம், சென்னை.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் செ.சண்முகதேவி
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
செயிண்ட் பீட்டர்ஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம்,
ஆவடி, சென்னை.