Silappathikarathil Esainadanamum Medai Amaippum | Dr.V.Nalini

சிலப்பதிகாரத்தில் இசை நடனமும் மேடை அமைப்பும் -முனைவர் வெ. நளினி

Abstract           

There are reasons for classification of Tamil, music and drama. Our literature has long been composed in the form of poetry, and prose is the case in the case of speech and is often not featured in the size or literary form. In the case of “Silappadikaram”, the article, “Silappadikaram” is the epitome of the music, the music, the drama, the excellence of the music, the music, the drama, “.

சிலப்பதிகாரத்தில் இசை நடனமும் மேடை அமைப்பும்

முன்னுரை        

தமிழை இயல் ,இசை ,நாடகம் என்று மூன்றாக வகைப்படுத்தி பிரித்ததற்கு காரணங்கள் உண்டு. நமது இலக்கியங்கள் முழுவதும் நெடுங்காலமாக  கவிதை வடிவில் தான் இயற்றப்பட்டுள்ளன, உரைநடை என்பது பேச்சு வழக்கில் இருந்ததே தவிர ஏட்டு அளவிலோ அல்லது இலக்கிய வடிவிலோ பெரும்பாலும் இடம்பெறவில்லை‌. தமிழரின் வரலாற்றுத் தலைமை காப்பியமாக போற்றப்படும் சிலப்பதிகாரத்தில் இயல், இசை நாடகம் ஆகிய முத்தமிழும் விரவிக் காணப்படுகின்றது அதன் அடிப்படையில் “சிலப்பதிகாரத்தில் இயல் இசை நடனமும் மேடை அமைப்பும்” என்னும் பொருண்மையில் இக்கட்டுரையானது இயல், இசை ,நாடகம், எனும் முத்தமிழின் சிறப்பினை விளக்கும் வண்ணம் படைக்கப்பட்டுள்ளது.


இசைக்கருவிகளின் வகைகள்

ஆடல் பாடல் அழகு என்ற இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று குறைவு படாமல் இருக்க வேண்டும் அதற்கு முக்கியமான அம்சமாக விளங்குபவை இசைக்கருவிகள் ஆகும், இசையின் பயனானது சிறப்பாக அமைந்தால்தான் கூத்தானது முழுமை உடையதாக சிறக்கும், இத்தகைய சிறப்பினை கொண்ட இசைக்கருவிகள் நான்கு வகைப்படும் இவற்றை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும் இசைகள் ஏழு ஆகும்.


ஏழு இசைகள்          

“குரல் துத்தம் நான்கு கிளை மூன்றிரண்டாம்           

குறையா வழைஇனி நான்கு விதையா- விரையா          

விளரி எனின் மூன்றிரண்டு தாரமெனச் சொன்னார்`          

களிர் சேர் கண்ணுற் றவர்” 1

அறிவில் சிறந்த புலவர் பெருமக்கள் தமிழின் ஏழு இசைகளையும் தொகுத்து கூறியுள்ளனர் .குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி தாரம் ,என்பன ஆகும்.
 

ஏழு சுவரங்கள்       

சச்சம், ரிடபம், காந்தாரம் ,மத்திமம் ,பஞ்சமம்,கைவதம், நிடதம் என்பன ஏழு சுவரங்கள் ஆகும். இவற்றை முறையே சரிகமபதநி என்று பாகுபடுத்துவர், இவற்றை அடிப்படையாகக் கொண்டே பண்கள் பிறக்கும் இதனை.
 “சரிகம பதநியென் றெழுத்தால் தானம்
விரிபரந்த கண்ணினாய் வைத்துத் தெரிவரிய
ஏழழிசையுந் தேனார்று மிவற்றுள்ளெ பண்பிறக்கும்
சூல்முதலாம் சுத்தத்துளை”2
எனும் பாடல் அடிகள் எடுத்துரைக்கிறது.


தமிழ் இசையின் மாத்திரை அலகுகள்

தமிழின் ஏழிசைக்கும் இருபத்தி இரண்டு அலகுகள் உள்ளன அவைகளை


1. குரல்          _ 4 அலகுகள் கொண்டது


2. துத்தம்.        _ 4 அலகுகள் பெற்றது


3. கைக்கிளை.    _ 3 அலகுகள் கொண்டது


4 உழை.         _ 2 அலகுகள் கொண்டது


5. இளி.          _ 4 அழகுகள் பெற்றது


6. விளரி.        _ 3 அலகுகள் உடையது


7. தாரம்.         _ 2 அழகுகள் கொண்டது


இவ்வாறாக தமிழிலன் ஏழிசைக்கும் உரிய மாத்திரை அலகுகள் வகுக்கப்பட்டுள்ளது.


நான்கு வகை இசைக்கருவி
 

1.தோல் கருவி
  2. துளைக்கருவி
  3. கஞ்சக் கருவி
  4. மிடற்றுக் கருவி
என்பன வள்ளோரால் வகுக்கப்பட்ட இசைக்கருவிகள் ஆகும்.


தோல்கருவி  _ மத்தளம்       

தண்ணுனம்மை என்று அடியார்க்கு நல்லரால் போற்றப்படும் இசைக்கருவி மத்தளம் என்ற தோல்கருவி ஆகும். தோலினைப் பதப்படுத்தி   செய்யப்படுவதால் இப்பெயர் பெற்றது .
 

“இடக்க ளியாய் வலக்கண் குரலாய் 

நடப்பது தோலியார் கருவியாகும்”3

என்ற பாடல் அடிகள் எடுத்துரைக்கின்றன. மத்தளம் என்பது மத் _ ஓசை, தளம் _ இடம். ஆகவே இசை இடனாகியக் கருவிகளுக்கெல்லாம் தாளமாதலின் மத்தளம் என்றுப் பெயர் பெற்றது இக்காலத்தவர் இதனை மிருதங்கம் என்று அழைப்பர்.
மத்தளமானது அகமுழவு ,அகப்புறமுழவு, புறமுழவு, பண்மை முழவு, நான் முழவு ,காலை முழவு , எனும் ஏழு வகைப்பட்ட முழவுகளுள் அகமுழவும். மத்திமம் ஆன தண்ணுமைத் தக்கை, தகுணிச்சம் முதலிய அகப்புற முழவினையும் கொண்டது ஆகும்..


துளைக்கருவி _ யாழ்                    

“ பேரியாழ் பின்னும் மகரஞ் சகோடமுடன்                 

சீர்பொழியுஞ் செங்கோடு செப்பினர் தார்பொழிந்து                

மன்னுந்  திமார்பவன்கூடர் கோமானே                  

பின்னு முளவோ பிற”4         

இப்பாடல் அடிகளின் மூலம் துளைக் கருவியான யாழினைப் பற்றியும் அதன் . வகைகளை பற்றியும் அறிய முடிகிறது. யாழ் நான்கு வகைப்படும் அவையாவன .
பேரியாழ், மகரையாழ், சகோடயாழ், செங்கோட்டுயாழ் என்பன ஆகும்.
நான்கு வகையாழிற்கும் உரிய நரம்புகளை நூலோர் விதிமுறைப்படி பாகுபடுத்தி வைத்துள்ளனர்.


1.பேரியாழ்.            -21 நரம்புகளைக் கொண்டது


2.மகரயாழ்             -19 நரம்புகளைக் கொண்டது


3.சகோடயாழ்        -14 நரம்புகளை உடையது


4.செங்கோட்டுயாழ் – 7  நரம்புகளை உடையது


இவ்வாறாக யாழிற்கு உரிய நரம்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன.


குழல்

மூங்கில், சந்தனம், வெண்கலம், கருங்காலி, செங்காலி, ஆகிய ஐந்து பொருள்களால் செய்யப்படுவது குழல் எனும் இசைக்கருவி ஆகும். இதனை புல்லாங்குழல்,வேய்ங்குழல், வேணுவங்கியம் எனும் பல பெயர்களால் அழைப்பர்.
குழலின் நீளமானது 20 விரல் அளவு கொண்டதாக இருக்க வேண்டும். சுற்றளவானது நாலரை விரல் அளவு உடையதாய் இருத்தல் வேண்டும், குழலினைத் துளையிடும் போது நெல்லரிசியில் ஒரு பாதி மரணிறுத்துக்கடைந்து  வெண்கலத்தினால் அனைசு பண்ணி இடமுகத்தினை அடைத்தும் வலமுகத்தினை வெளிப்படையாகவும் விடுதல் வேண்டும்.
 தூப முகத்தின் இரண்டு விரல் நீக்கி முதல் வாய்விட்டு விடவேண்டும். அடுத்தபடி ஏழு அங்குலம் விட்டு வளைவாயினும் இரண்டு நீக்கி நடுவிலிருந்து ஒன்பது விரல் அளவு விட்டும் எட்டுத்துளைகள் இடவேண்டும். இவ்வாறாக அமைக்கப்படும் துளைகளின் இடைப்பரப்பு ஒரு விரல் அகலம் கொண்டிருக்க வேண்டும்.
குழலினை வாசிக்கும் போது முன்னின்ற ஏழு துளைகளில் இடக்கையின் இடைமூன்று விரலும் வழக்கையின் பெருவிரல் ஒழிந்த நான்கு விரலினையும் பற்றி வாசிக்க வேண்டும் இவற்றில் இருந்தே சரிகமபதநி என்று ஏழு சுவரங்களும் பிறக்கும்.


மிடற்றுக்கருவி _ தூக்கு

தாளங்களின் வழியால் பிறப்பதும் இசையின் இனிமையை கூட்டுவதுமான இயல்பினை கொண்டது மிடற்றுக் கருவியான தூக்கு ஆகும், இத்தகு சிறப்பினை கொண்ட தூக்கு ஏழு வகைப்படும் அவையாவன செந்துக்கு, மதளைத் தூக்கு ,துணிபுத்தூக்கு, நிவப்புத் தூக்கு ,கோயிற்றூக்கு, கழாற்றுக்கு நெடுந்தூக்பகு என்பனவாகும்.


தூக்குகளின் சீர் அளவு

“ஒரு சீர் செந்துதூக் கிருசீர் மதலை

முற்றிலும் துணிபு நாற்சீர் கோயில்       

ஐஞ்சீர் நிவப்பே அறுசீர் கழலே       

எழுசீர் நெடுந்தூக் கென்மனார் புலவர்”5

ஏழு வகையான தூக்குகளுக்கும் உரிய சீர்களின் அளவை இப்பாடலானது உணர்த்துகிறது.
இசை மீட்டுவதற்கு உரிய விரல்கள்
 இசையினை மீட்டுவதற்கு உரிய விரல்களை நூலோர் வகுத்துக் காட்டி உள்ளனர். இடக்கையில் உள்ள பெருவிரலும் சிறுவிரலும் மற்றைய மூன்று விரல்களும், வலக்கையில் உள்ள பெருவிரல் ஒழிந்த நான்கு விரல்களும் ஆக ஏழு விரல்களும் இசைமீட்டுதலுக்கு உரிய விரல்கள் ஆகும்.


ஏழிசைக்கும் உரிய எழுத்துக்கள்

“ஆ,ஈ,ஏ, ஐ ,ஓ, ஔ வெனும்

இவ்வே ழெழுத்தும் ஏழிசைக்குரிய”6

சுரங்களைக் கொண்டு இசைனை எழுப்புவதற்கு கருவியாக கொள்ளப்பட்டவை சரிகமபதநி என்னும் எழுத்துக்கள் ஆகும், எனவே ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ என்ற ஏழு எழுத்துக்களுமே ஏழு இசைக்கும் உரிய எழுத்துக்களாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. தமிழரின் வாழ்வானது இவ்வாறாக இசையோடு பொருந்திய இனிமையினை கொண்டுள்ளது.


நடன வகைகள்

சிலப்பதிகாரத்தில் கணிகையர் குலத்தில் பிறந்தவளாக காட்டப்படும் மாதவி என்பவள் ஆடிய 11 வகையான நடன வகைகள் பற்றி காணலாம்
கோவலன் மாதவியை நாடுவதற்கு முதன்மை காரணமாக அமைந்ததும் இந்த மாதவியின் நாட்டியக் கலையே ஆகும் இச் செய்தியை


“தெய்வமால் வரைத்திருமுனி யருள

எய்திய சாபத்து இந்திர சிறுவனோடு

………………………………………………. 

தாதவில் புரிக்குழல் மாதவி”7

ஆடல், பாடல் ,அழகு ஆகிய மூன்றும் நாடக மகளிருக்கு குறைவுப்படாமல் இருக்க வேண்டிய நலன்கள் ஆகும், இத்தகு நலன்களை பெற்றவள் மாதவியாவாள்.
நாட்டியம் பயில்வோர் ஏழு ஆண்டு காலம் முறைமையாக பயின்று பின் அரங்கம் ஏற வேண்டும் இதனை


“பண்ணியம் வைத்தானை முகன் பாதம் பணிந்துறும்

தண்டியஞ் சேர் விதர்பதே சால்பு” 8
என்ற அடிகள் உணர்த்துகிறது.


கொடிக்கொட்டி,பாண்டரங்கம்,அல்லியம்,துடி,மல்லாடல்,குடைகூத்து,குடக்கூத்து,பேடியாடல், மரக்காலாடல்,பாவையாடல், கடையம், நின்றாடல், படிந்தாடல், இப்படியாக மாதவி ஆடிய நடனத்தின் வகைகள் சிறப்பாக சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
கொடுவினை நீங்குதல் பொருட்டு இறைவி ஆடியது கொடிக்கொட்டியாகும் அதன் உறுப்புகள் நான்கு ஆகும், முக்கண்ணன் ஆடியது பாண்டுரங்கம் அதற்கு உறுப்புகள் ஆறு ஆகும், மாயவன் ஆடியது அல்லிய கூத்து அதற்கு உரிய உறுப்புகள் ஆறு ஆகும், நெடியவன் ஆடியது மல்லாடலாகும் அதற்குரிய உறுப்புகள் ஐந்து,வேலவன் ஆடியது துடியாடல் இதற்குரிய உறுப்புகள் ஐந்து, ஆறுமுகம் ஆடியது குடைக்கூத்து இதற்குரிய உறுப்புகள் நான்கு, திருமால் ஆடியது குடத்தாடல் இதற்குரிய உறுப்புகள் ஐந்து ,காமன் ஆடியது பேடியாடல் இதற்குரிய உறுப்புகள் ஆறு, மாயவன் ஆடியது மரக்காலாடல் இதற்குரிய உறுப்புகள் நான்கு, திருமகளால் ஆடப்பெற்றது பாவை இதற்குரிய உறுப்புகள் ஒன்று, இந்திராணி ஆடியது கடையம் இதற்குரிய உறுப்புகள் ஆறு  ஆகும். இவ்வாறாக பதினோறு வகையான ஆடலுக்கும் உரிய உறுப்புகள் பற்றி அறிய முடிகிறது.
நடனங்கள் அனைத்தும் எட்டு வகையான மெய்பாடுகளைக் கொண்டே வெளிப்படும், அவையாவன நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம் பெருமிதம், வெகுளி, உவகை,  என்பனவாகும்.


அரங்க அமைப்பு

“எண்ணிய நூலோர் அரங்கத்து”9 என தொடங்கும் பாடல் வரிகள் ஆனது ஆடுவதற்குரிய அரங்கத்தின் அமைப்பானது நூலோர் கண்ட இயல்பிலிருந்து முறைப்படி வழுவாமல் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. மேடை அமைக்க தேவையான இடத்தினை முதலில் ஓரிடத்தில் வரையறை செய்ய வேண்டும் இந்த நிலமானது கோயில், பள்ளி அந்தணர் இருக்கை,ஊருணி, கிணறு,சோலை, புட்கள் முதலியவற்றிற குறைவில்லாமல் இருக்க வேண்டும். மேலும் பொடி மண், நாற்றம்,உவர், ஈளை,களி, சாம்பல் போன்றவை இல்லாமலும் ஊரின் நடுவே தேரோடும் வீதிகளின் எதிர்முகமாகவும் அமைந்திடல் வேண்டும்.


மேடைக்கான நீளம் மற்றும் அகலம்

மேடை அமைப்பு காண நீளம் அகலம் நூலோர் கூறிய முறைப்படி வகுக்கப்பட வேண்டும். பொதிய மலையின் கண் கண்ட புண்ணியம் கொண்ட மலைப் பக்கங்களில் நெடிதாகி உயர்ந்து வளர்ந்த மூங்கிலை முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை ஒரு கணுவிற்கும் மற்றொரு கணுவிற்கும் ஒரு சாண் நீலமுடையதாக சிற்ப நூல்களில் விதித்த முறைப்படி தலையாய வளர்ச்சியினை உடையவன் கைப்பெரு விரலில் 24 விரல்கள் அளவிற்கு உள்ள ஒரு கோலை நீளம் அளக்கும் கோலாக நறுக்க வேண்டும். இந்தக் கோலானது ஏழு கோல் அகலமும் எண் கோள் நீலமும் ஒரு கோள் உயரமும் உடையதாய் இருக்க வேண்டும்.தூணின் மேல் வைத்த உத்திரப் பலகைக்கும் அரங்கினது அகலத்திற்கு உட்பட்ட பலகைக்கும் இடை நின்ற நிலம் நான்கு கோல் அளவிற்கு உயரம் கொண்ட வகையில் இரு வாயில்கள் அமைக்கப்பட வேண்டும். அரங்கினில் பார்ப்பவர்கள் அனைவரும் கைகுவித்து வணங்கும் வகையில் நால்வகை பூதங்களான வக்கிரதேவன் முதலான வருணன் ஈறாக நால்வரையும் ஓவியமாக வரைந்து அரங்கத்தின் மேல் இடத்தை அமைத்திடல் வேண்டும். மேடையில் இருக்கும் தூண்களின் நிழல் நாயகப் பத்தினியின் மேலும் அவையிலும் விழாமல் புறத்தே விழுமாறு மாண்புடைய நில விளக்கின நிறுத்தி ஒருமுகஎழினி,பொருமுகஎழினி,கரந்துவரல்எழினி  ஆகிய மூன்றினையும் முறையே அமைக்க வேண்டும்.


அரங்கினுள் புகும் முறை

“இயல்பினின்வழா அ இருக்கை முறைமையின்

தென்னெரி மரபிற் றேரிய மகனே”10

அரசர் முதலிய யாவரும் தத்தம் தகுதிகளுக்கு ஏற்ப இருக்கையில் அமர்ந்த பின்னர் குயிலுவை கருவியார்கள் தாம் முறையாய் நிற்க, நாடகக்கணிகையர் வழக்கால் முற்பட இட்டேறி பொருமுக எழினிக்கு நிலையிடமான வலப்பக்கதத் தூணிடம் செல்ல வேண்டும். நூல் மரபுக்கு இணங்க ஏறிய பின்பு இடத்தூணின் நிலையிடமாகிய ஒருமுக எழினியிடம் பற்றிய பழைய நெற்றியியர் கைகளை உடைய தேரிய மடந்தையர் புகுதலும் முறை என்று அறிய முடிகிறது.


முடிவுரை

சங்கச் சான்றோர்களால் முத்தமிழ் காப்பியம் என்று அழைக்கப்படும் சிலப்பதிகாரத்தில் இசை நடனம் மேடை அமைப்பு  ஆகியவை எவ்வாறாகப் போற்றப்பட்டன என்பதை பற்றி இக்
கட்டுரையானது எடுத்துரைக்கிறது. மேலும் வளரும் தலைமுறையினரும் வருங்கால தலைமுறையினரும் இவற்றைப் போற்றி பாதுகாப்பதற்குரிய வழிமுறைகளை தங்களால் இயன்றவரை மேற்கொள்ள வேண்டும் என்பதும் இக்கட்டுரையின் நோக்கமாக அமைந்துள்ளது.


சான்றெண் விளக்கம்

1.சாமிநாத ஐயர் வே .சிலப்பதிகாரமும் மூலமும் உரையும். பக்கம் 67.


2.சோமசுந்தரனார் போ .வே .சிலப்பதிகாரம் புகார் காண்டம். பக்கம் 116.


3.வேங்கடசாமி நாட்டார் ந. மு. சிலப்பதிகாரமும் புகார் காண்டமும் பக் 70


4.சோமசுந்தரனார் போ.வே சிலப்பதிகாரம் மூலமும் அரும்பத உரையும் பக் 94


5.மேலது பக்கம் 101


6.வேங்கடசாமி நாட்டார் ந .மு .சிலப்பதிகாரம் புகார் காண்டம் பக்கம் 102.


7.அழகு கிருஷ்ணன் சிலப்பதிகாரம் காட்டும் பண்பாடும் சமுதாய வரலாறும்.


8.இராமசுப்பிரமணியன் சிலப்பதிகாரம் மூலமும் உரையும் திருமகள் பதிப்பகம்.


9.சாமிநாத ஐயர்,வே. சிலப்பதிகாரம் மூலமும் அரும்பத உரையும் .பக்கம் 69


10.மேலது பக்கம் 73.


ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் வெ. நளினி எம் .ஏ. பி எச்.டி, நெட்.

உதவிப் பேராசிரியர்

தமிழ்த் துறை

எஸ். ஆர். எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல்நிறுவனம்.

அறிவியல் மற்றும் மானுடவியல் புலம்.

இராமாபுரம், சென்னை.89

 

Leave a Reply