கொங்குநாட்டுக் கல்வெட்டுகளில் உரிமைசார் பதிவுகள்|முனைவர் ந.மகாதேவி

கொங்குநாட்டுக் கல்வெட்டுகளில் உரிமைசார் பதிவுகள் -முனைவர் ந.மகாதேவி
முன்னுரை

      கொங்குநாடான ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், தருமபுரி, முதலான மாவட்ட கல்வெட்டுகளில்  உரிமைகள் தொடர்பான செய்திகள் இடம்பெறுகின்றன. இது கி.பி.7 முதல் கி.பி.16 ஆம் நூற்றாண்டு வரை  கிடைக்கக்கூடிய கோயில் கல்வெட்டுகளில் அரசர்கள் சிலருக்கு உரிமைகள் வழங்கியுள்ளனர்.  அவ்வுரிமைகள் வரிசைகள் என்ற மாற்றுச்சொல்லால் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளன. 

ஒவ்வொரு மனிதனுக்கும் முறையாகக் கிடைக்கப் பெற வேண்டியவை அனைத்தும் உரிமைகள் எனலாம். அவ்வகையில் மனிதன் இவ்வுரிமைகளின்றிவாழ இயலாது எனக் கருதப்படும் அடிப்படையான தேவைகளைப் பெறுவதை  உரிமைகள் எனலாம். இந்த உரிமைகள் அவர்களுக்குக் கிடைத்த, அடிப்படையான, விட்டுக் கொடுக்க
இயலாத, மறுக்க இயலாத சில உரிமைகளாகக் கருதப்படுகின்றன. இவை, இனம், சமயம், பால், வயது,  ஆகியவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருப்பதை அடிப்படை உரிமைகள் எனலாம். இவ்வுரிமைகள் கொங்குநாட்டுக்   
கல்வெட்டுகளில்  எவ்வகையில் இடம்பெற்றுள்ளது என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கல்வெட்டுகளில் உரிமைகள்
கொங்குச்சோழர், கொங்கு பாண்டியர் ஆகியோர் ஆட்சிக்காலங்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் சிலகுடிகள், சில உரிமைகள் பெற்றதைக் கூறுகின்றன. இக்கல்வெட்டுகளில் வழங்கப்பெற்ற வரிசைகள் அனைவருக்கும் ஒரே வகையாக அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சில வரிசைகள் எல்லோருக்கும் வழங்கப்பெற்றது. சிலருக்குச் சிறப்பாக வழங்கப்பெற்றது.
இவற்றை நோக்குங்கால் தரப்பெற்ற வரிசைகள்

பொதுவான வரிசைகள் (பொது உரிமைகள்)
சிறப்பான வரிசைகள் (சிறப்பு உரிமைகள்)
என இரு வகையாகப் பாகுபடுத்திப் பார்க்க முடிகின்றது. இது வரிசை பெற்றவர்களுக்குள் ஏற்றத்தாழ்வு உடையவராக்குகின்றன.

பொதுவான உரிமைகள்
               
இவ்வுரிமைகளைப் பெற்றவர்கள் பார்ப்பார் (அந்தணர்), சிரிநிமந்தகாரர் (நிமித்திகர்), தேவரடியார், கம்மாளர், இடையர் ஆகியோர் ஆவார்கள். பொது வரிசைகளாகக் குறிப்பிடப்பட்ட அவற்றை அவர்கள் அனைவரும் பெறுகின்றனர்.

சங்கு, பேரிகை ஊதிக்கொள்ளல்
            
அவினாசியிலுள்ள ஈஸ்வரன் கோயிலுக்கு உரிமையுடைய கொல்லன், தச்சன், தட்டான் ஆகியோர் நல்ல நிகழ்வுகளுக்கும் தீய நிகழ்வுகளுக்கும் பேரிகை கொட்டிக்கொள்ளவும் சங்கு ஊதிக்கொள்ளவும் அரசன் உரிமை அளித்துள்ளன. இதனை,

“இவர்கள் நன்மைத் தீமைக்கு 
பேரிகையும் புகுந்து கொட்டி சங்கும்
ஊதக் கடவதாகவும் இவர்கள் மக்கள்
மக்கள் சந்திராத்த வரைக்கும்”1
என்ற வரிகள் மூலம் அறியமுடிகின்றன.
பேரிகை என்பது தகவல் தெரிவிக்கப் பயன்படும் ஓர் இசைக்கருவியாகும். இந்த இசைக்கருவி தமிழ்நாட்டில் மன்னர்கள் காலத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அரசனுடைய கட்டளைச் செய்தி, திருமணச் செய்தி, ஊர்வலம் முதலிய தகவல்களை நகரில் இருப்பவர்களுக்கு அறிவிக்க இந்த இசைக் கருவியைப் பயன்படுத்தியிருக்கின்றனர். சங்கு என்பது காற்று இசைக்கருவி. தமிழர் மற்றும் இந்திய இசையிலும்  கோயில் வழிபாட்டின் போதும் பயன்படுகிறது.

  அவர்களுக்கு  வழங்கப்பட்ட உரிமைகள் அவர்களின் தலைமுறை தலைமுறையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்  என்பதைச்  சந்திரனும் சூரியனும் உள்ளவரை  எனக் குறிப்பிட்டுள்ளனர். இக்கல்வெட்டில் அரசன் பெயர் குறிக்கப்பெறவில்லை. ஆனால், மன்னனிடம்  உரிமை பெற்ற  பிறகே செயல்படக்கூடிய சூழலை நோக்கும்போது மக்கள் தாங்களாக எவற்றையும் செய்ய இயலாத சூழல் நிலவியுள்ளது.

கம்மாளர்களுக்கு உரிமை அளித்தல்
கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டில் அரசர், கம்மாளர்களுக்கு சில உரிமைகளை வழங்கியுள்ளார். அவை, நன்மை, தீமைகளுக்கு இரட்டைச் சங்கு ஊதிக்கொள்ளவும்  பேரிகை வைத்துக்கொள்ளவும் தங்கள் புறப்பட்டுச் செல்லும் இடங்களுக்குக் காலணி அணிந்து கொள்ளவும் வீடுகளுக்குச் சுண்ணாம்பு அடித்துக்கொள்ளவும் அரசர் உரிமை அளித்துள்ளதை,
 
“நன்மை தீமைக்கு இரட்டைச்
சங்கும் ஊதி
பேரிகை உள்ளிட்டனவும் 
கொட்டிவித்து கொள்ளவும்
தாங்கள் புறப்படவேண்டும்
இடங்களுக்குப்
பாத ரசஷ கோத்துக் 
கொள்ளவு தங்கள்
வீடுகளுக்குச் சாந்திட்டுக்“2
         
இச்சான்றுகள்  வழி உணரமுடிகின்றது. இவற்றை நோக்கும் போது சாதாரணமாக வீடுகளுக்குச் சுண்ணாம்பு அடித்துக் கொள்வதற்குக் கூட ஆரம்ப காலகட்டத்தில்  உரிமை பெற வேண்டிய சூழலும் கட்டாயமும் இருந்துள்ளதை அறிய முடிகின்றது.
               
கி.பி.1050 இல் பரகேசரி அபிமானசோழதேவனின் பன்னிரண்டாவது ஆட்சியாண்டில் திருமுருகன் பூண்டியில் குடியிருக்கும் மகாதேவர் கோயில் திருமடைவளாகத்திலிருக்கும் (கோயிலைச் சுற்றியிருக்கும் வசிப்பிடம்) தபசியர் (தவம்செய்பவர்கள்), தேவரடியார், உவச்சர் (மேளக்காரர்), நிமித்தக்காரா் (நிமித்திகர்) ஆகியோர் குதிரையில் ஏறிக் கொள்ளவும் பேரிகை, சேகண்டி கொட்டிக்கொள்ளவும் வீட்டிற்கு இரண்டு வாசல் வைத்துக்கொள்ளவும் சுவருக்குச் சுண்ணாம்பு அடித்துக் கொள்ளவும் உரிமை அளித்துள்ளார் என்பதை,

“தபஸியர் தெவடியாற்கும் உவச்சர் 
நிமந்தக்கா(ர)ற்கும் குடுத்த
வரிசைகளாவன  
மெலெற்றம் இராசாயிராசநும் கிழெற்றம்
குதிரையு பெரிகை செகண்டியும்
கொட்டக் கடவதாகவும் இவர்கள்
அகங்கள் இரண்டாநிலையும்
இரட்டைத்தலைக்கடையும்
எடுத்துச் சான்தும் 
வாரிக்கொள்ளப் பெறுவார்களாகவும்“3
          
இச்சான்றுகளின்வழி அறியமுடிகின்றன.

சிறப்பு உரிமைகள்
 
சில தேவரடியார்கள் மற்றும் அரசுக் கருவூலத்தில் பொருளை வைத்த பார்ப்பனச் சான்றோர்கள் மட்டுமே சிறப்பு உரிமைகளைப் பெறுகின்றனர்.
     வீரராசேந்திர சோழனின்  பதினைந்தாவது  ஆட்சியாண்டில்  கி.பி.1222 இல்  வடபரிசார நாட்டைச்  சேர்ந்த பார்ப்பார் சான்றோர்க்கு அரசன் கொடுத்த ஓலையாவது பார்ப்பார் சான்றோர்கள் அரசன் பண்டாரத்தில் (கருவூலம்) பொருள் வைத்ததன் காரணமாக, இவர்களுக்கு சில உரிமைகளை அளித்துள்ளார். அவை,

📜 குதிரையின் மீது ஏறிக்கொள்ளும் உரிமை
📜 சீனக்குடை பிடித்துக் கொள்ளும் உரிமை
📜 சேகண்டி அடித்துக்கொள்ளும் உரிமை
📜 வீட்டிற்குச் சுண்ணாம்பு அடித்துக் கொள்ளும் உரிமை
📜 இரட்டைத் தலைக்கடை (வாயிற்படி) வைத்துக்கொள்ளும் உரிமை
📜 பச்சை நிறப் பட்டால் ஆன மேலாடை போர்த்துக் கொள்ளும் உரிமை
📜 படைகள் சூழ மன்னவன் உலா வரும்போது இவர்களும் அப்பொழுது  பொன்னராம்  பூண்டு  உடன்  வரும் உரிமை
📜 தங்கள் மக்களுக்குப் பொன்னாலான காறை என்னும் கையணி அணிவிக்கும் உரிமையைப் பெறல்
  
📜 திருமணத்திற்கு கட்டணங்கட்டி ஏரி ஊர் சூழ யானை, பல்லக்கு போன்ற உயர்வகை ஊர்தியில் ஏறி ஊர்வலம் வரும் உரிமை
📜திருமணத்திற்கும் கட்டணம் செலுத்தி ஊர்தியைப் பயன்படுத்தும் மரபு அக்கால கட்டத்திலிருந்துள்ளதை அறியமுடிகின்றன.
📜இவ்வுரிமைகளையெல்லாம் இவர்கள் சந்ததியனர் சந்திரனும் சூரியனும் உள்ளவரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என  அரசர் உரிமையளித்துள்ளார்4.

அரசனின் கருவூலத்தில் பொருள் வைக்கக்கூடிய அளவுக்குச் செல்வந்தராக இருக்கும் சூழலில் மட்டுமே இவ்வுரிமையைப் பெறக்கூடிய நிலையைப் பெறுகின்றனர் எனும்போது அக்காலகட்டத்தில் நிலவிய அடிமைச்சூழலை உணரமுடிகின்றன.

கோயிலில் பணிபுரிய உரிமையளித்தல்
               
வீரராசேந்திரனின் ஐந்தாவது ஆட்சியாண்டான கி.பி.1212 இல் குறுப்பு நாட்டிலுள்ள உகாப்பாடி ஊரார் இராசராசபுரத்துச் சிவப்பிராமணர் ஆலங்காட்டுப் பாண்டி உடையானான சைவ சிகாமணிபரியன், விசைய மங்கலம் ஆத்ரேய கோத்திரம் ஆளவந்தி ஆகிய இருவருக்கும் அரசர் உரிமைகள் அளித்துள்ளார். அவை, இவ்வூரிலுள்ள தேவகோயிலுக்கும், பிள்ளையார் கோயிலுக்கும் உரிமையளித்து இவர்கள் பெறக்கூடிய உரிமைகளைப் பெற்றுக்கொடுத்துள்ளனர் என்பதை,

“இவிருவற்கும் கங்காணி செய்து குடுத்த 
பரிசாவது எங்களுர்த் தேவக்கோயிலும் 
பிள்ளையார் கோயிலும் மற்றும்
ஏழுவநமுனைப்பநவும் இவளுக்கு காணிசெய்து
 குடுத்தோமான்“5
என்ற வரிகள் மூலம் அறியமுடிகின்றன.

உரிமை அளித்தல்
            
வீரபாண்டியனின் பதினைந்தாவது ஆட்சியாண்டான கி.பி.1280 இல் காங்கயநாட்டிலும் பூந்துறைநாட்டிலும் கம்பளர்களுக்கு சில தடைகள் இருந்தன. அவற்றை நீக்கக் காரணமாக இருந்த அலுவலர் காளிங்கராயர் ஆவார். இதனை இக்கல்வெட்டின்கீழ் கையொப்பமிட்டுள்ளதின்வழி அறியலாம். நீக்கப்பட்ட தடைகள் பின்வருமாறு
”இரட்டைச் சங்கும்
ஊதிப் போதிகை உள்ளிட்டன கட்டுவித்துக்
கொள்ளவும் தாங்கள்
புறப்பட வேண்டுமிடங்களுக்குப் 
பாதரச கோத்துக் கொள்ளவும்
வீடுகளுக்குச்சா
சாந்திட்டுக் கொள்ளவும் சொன்னோம்”6
தேவைப்படும் காலங்களில் இரட்டைச்சங்கு ஊதிக்கொள்ளுதல், போதிகை உட்பட்ட பிற கருவிகளையும்  கொட்டுவித்துக்  கொள்ளுதல், தாங்கள் செல்லும் இடங்களுக்கெல்லாம்  காலணிகளை அணிந்து கொள்ளுதல் வீடுகளுக்குச் சாந்திட்டு வைத்துக் கொள்ளுதல் போன்ற உரிமைகளை அரசர் அளித்துள்ளதை மேற்கண்ட கல்வெட்டு வரிகள் மூலம் அறிய முடிகின்றது.  பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அடிப்படைத் தேவைகளைக்கூட அரசனிடம் உரிமை பெற்ற பிறகே செய்யக்கூடிய கட்டாயத்தில் இருந்துள்ளனர்.

முடிவுரை
📜உரிமை அளித்தலில் நிலவிய பொது உரிமை, சிறப்புரிமை என்ற பாகுபாடு அக்கால சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளை உணரமுடிகின்றது.

📜அரசனின் கருவூலத்தில் பொருள் வைத்தவர்களுக்கு மட்டுமே அரசர் சிறப்புச் சலுகைகளை வழங்கியுள்ளார். இவற்றை நோக்கும்பொழுது பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களே சிறப்பு உரிமைகளைப் பெற்றவர்களாக இருந்துள்ளனர்.
📜இவை எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியனவாக அமைந்துள்ளன.
கொங்குச்சோழர், கொங்குப் பாண்டியர் கல்வெட்டுகளில் மட்டுமே உரிமைகள் பற்றியான செய்திகள் இடம்பெற்றுள்ளன.

துணைநூற் பட்டியல்

1. கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி-1, ப.24

2. கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி-1, ப.249

3. தென்னிந்தியக் கல்வெட்டுச் சாசனம், தொகுதி-30, ப.20

4. கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி-1, ப.6

5.  ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி-3, ப.17

6. ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி-3, ப.90
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் ந.மகாதேவி
தமிழ்த்துறை
வி.இ.டி. கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரி
திண்டல், ஈரோடு.

 

Leave a Reply