சங்க இலக்கியத்தில் நிகழ்த்துக் கலைஞர்களின் வாழ்வியல்|அ.அன்பரசன்

சங்கஇலக்கியத்தில் நிகழ்த்துக்கலைஞர்களின் வாழ்வியல்
ஆய்வுச் சுருக்கம்
லை மனதிற்கு மகிழ்ச்சியைத் தருவதோடு மட்டுமல்லாமல், மனிதனை மற்ற உயிரினத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டும் ஒரு கருவியாகும். மனிதனின் அழகியல் உணர்ச்சியின் வெளிப்பாடும் கற்பனைத் திறனும் ஒன்று சேரும் நிகழ்வே கலையாக வடிவம் கொள்கிறது. கலையானது நிகழ்த்துக் கலை, நிகழ்வில்லாக் கலை என்று இரண்டு வகைப்படும்.
பண்டையத் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றையும், பண்பாட்டையும் தன்னகத்தே கொண்ட சங்க இலக்கியத்தில் நிகழ்த்துக் கலைஞர்களின் வாழ்க்கை முறை எவ்வாறு இருந்தது என்பதை ஆய்வதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.

திறவுச்செற்கள்
கலை – நிகழ்வில்லாக்கலை – நிகழ்த்துக்கலை – நிகழ்த்துக்கலைஞர்கள் – பாணர் – பாடினி – கூத்தர் – விறலி – பொருநர் – இயவர் – கிணைவர்.

முன்னுரை
சங்க இலக்கியங்கள் அக்காலத் தமிழர்களின் வாழ்வியலையும், அவர் தம் வாழ்வியலின் உட்கூறுகளான அரசமைப்பு, கொடைத்திறன், போர்த்திறன், கல்வி, கலை என்று பலவற்றைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. அந்தவகையில் சங்ககாலத்தில் நிகழ்த்துக் கலைகளும்,கலைத் தொழிலாளர்களும் மிக உயர்வான இடத்தைப் பிடித்து அரசர் முதல் சாதாரன மக்களும் மதித்துப் போற்றும் விதத்தில் வாழ்ந்துள்ளனர். கலைஞர்கள் வறுமையால் வாடியப் போதும் ஒழுக்கம் தவறாதவர்களாகவும், மற்றவர்களுக்கு வழிக்காட்டும் நெறியாளராகவும் வாழ்ந்துள்ளனர். அவர்களுக்கு மிகுதியான கருத்துச் சுதந்திரம் இருந்துள்ளதையும் அறியமுடிகிறது. பாடித்திரியும் பறவைகளாக இசைப் பாடி வாழ்ந்த நிகழ்த்துக் கலைஞர்களான பாண்சமுகத்தினரின் வாழ்வியலை வெளிப்படுத்தும் விதமாக இந்த ஆய்வு அமைகிறது.

கலை

கலை என்பது தான் உருவாகிய சமூகத்தை அடையாளப்படுத்தும் கருவியாகும். மொழி, இனம், நாடு போன்ற எல்லைகளைத் தாண்டி உணர்வுகளால் மனங்களை இணைக்கும் தன்மையுடையது, கலை வேறு மனித வாழ்க்கை வேறல்ல. கலைகள் அனைத்தும் மனித வாழ்கையில் இருந்து பெறப்பட்டவை. மனிதர்களைத் தவிர்த்துக் கலைகள் தனியாக உருவாகவோ, வாழவோ முடியாது.

கலை என்பது மனித உள்ளத்து உணர்வுகளின் வெளிப்பாடு ஆகும். மனிதனின் அனைத்துக் கண்டுப் பிடிப்புகளுக்கும் அடிப்படையானது கலையே. கற்பனையும், இயற்கையும் ஒன்று சேர்ந்து உருவாகும் உணர்ச்சிகளின் வெளிப்பாடே கலை. மனித உள்ளத்தின் கவலைகளை மறக்கச் செய்யும் பண்புடையதே கலை ஆகும். ஒவ்வொரு மனிதனின் மனதின் அடிப்படையிலும், உணர்ச்சிகளின் அடிப்படையிலும் எதன் மீது மிகுந்த கவனத்தை உள்ளம் செலுத்துகிறதோ அதனையே உள்வாங்கி கலையாக மனித உணர்வானது வெளிப்படுத்துகிறது. கலையைப் பொதுவாக நிகழ்வில்லாக் கலை, நிகழ்த்துக் கலை என்று இரண்டு வகையாகப் பாகுப்படுத்தலாம்.

நிகழ்வில்லாக்கலைகள் (NON – PERFORMING ARTS)
               
பார்வையாளர்களை மையப்படுத்தாமல், தனிப்பட்ட இடத்தில் தமது கலைத்திறனை வெளிப்படுத்துபவர்கள் நிகழ்வில்லாக் கலைஞர்கள் ஆவர். கலையை நுகர்வோரை மையப்படுத்தாமல் கலையைப் படைப்பவர்களை மட்டும் மையமாகக் கொண்டுள்ள கலைகள் நிகழ்வில்லாக்கலைகள் ஆகும். இக்கலைகள் யாவும் படைத்து முடிக்கப்பட்டப் பின்பே பார்வையாளர்களைச் சென்றடையும். ஒரு முறை படைத்தால் போதும் இக்கலைகள் நீண்ட நாள்களுக்கு நிரந்தரமாக நிலைத்து நிற்கும் தன்மையுடையன.

சிற்பம்

ஓவியம்

தச்சுக்கலை

கட்டிடக்கலை

வார்ப்புக்கலை

மட்பாண்டக்கலை

ஆகியன சங்ககாலம் முதல் இன்றுவரையுள்ள நிகழ்வில்லாக் கலைகள் ஆகும்.

நிகழ்த்துக் கலைகள் (PERFORMING ARTS)
அரங்கத்தில் ஒரு கலைஞர் அல்லது பல கலைஞர்கள் சேர்ந்து தமது முகம், உடல், போன்ற அங்கங்களைக் கொண்டு ஒரு கலையை நிகழ்த்திக் காட்டுவது நிகழ்த்துக் கலை. நுண்மையான உறுப்புகளையும், நுண்ணியத் திறன்களையும், நுட்பமான உணர்வுகளையும் கொண்டது நிகழ்த்துக் கலை. ஒரு கலைஞன் தனது நுட்பமான கலை நுணுக்கத்தை வெளிப்படுத்தும் போது அது நிகழ்த்துக் கலையாக வடிவம் கொள்கிறது.

நிகழ்த்துக் கலைஞர்கள்
பார்வையாளர்களின் முன்பு கலைகளை நிகழ்த்திக்காட்டும் கலைஞர்கள் நிகழ்த்துக் கலைஞர்கள். இவர்கள் தாம் நிகழ்த்தும் கலைக்கு ஏற்ப தனது உடல், மொழி, உடை, ஒப்பனை போன்றவற்றை அமைத்துக்கொள்வர். இவர்களுக்குப் பக்கத்துணையாகச் செயல்படும் மேடையமைப்பாளர்கள், இசையாசிரியர்கள், இதரகலைஞர்களும் நிகழ்த்துக் கலையின் முக்கிய அங்கமாகவே விளங்குகிறார்கள். நிகழ்த்தப்படும் கலைகளனைத்தும் படைக்கப்படும் போதே பார்வையாளர்களைச் சென்றடைந்தாலும் நிரந்தரமற்றவைகளாக உள்ளன. நிகழ்த்தி முடிக்கப்பட்டதும் கலைஞர்களைப் போலவே கலைகளும் களைந்து விடுகின்றன.

இசை
கூத்து
நடனம்
நாடகம்
கழைக்கூத்து
பொம்மலாட்டம்   
ஆகிய கலைகள் நிகழ்த்துக் கலைகள் ஆகும்.

பாண்சமூகம்
சங்ககாலத்தில் பாண்சமூகத்திற்குள் பல்வேறு சமூகக் குழுக்கள் இருந்துள்ளன. பாணர்சமூகம் மிகவும் பரந்துவிரிந்த சமூகமாக இருந்துள்ளது. அவர்களுக்குள் பல தொழிற் பகுப்புகளும், படிநிலைகளும், தனித்தனி அடையாளங்களும் இருந்துள்ளது. சங்ககாலத்தில் நிகழ்த்துக் கலைஞர்கள் வெவ்வேறுப் பணிகளைச் செய்துள்ளனர். பாணர், பாடிணியர், பொருநர், விறலியர், கூத்தர், கோடியர், வயிரியர், கண்ணுளர், கிணைவர், துடியர், அகவுநர், கட்டுவிச்சியர், சென்னியர், இயவர் ஆகியவர்கள் முன்னிலையான நிகழ்த்துக் கலைஞர்கள். நிகழ்கலைச் சமூகத்தினரின் வாழ்வியல் பாங்கும், பொரளாதார நிலையும் சில பொதுவானப் பண்புகளைக் கொண்டிருப்பதால் இவர்களைப் பாண்சமூகத்தார் என்று குறிப்பிட்டுள்ளனர்.

பாணர்
பாணர்கள் இசைக்கலையில் வல்லவர்களாக இருந்துள்ளனர். இவர்கள் யாழ்  என்ற இசைக்கருவியை இசைத்துப் பாடுவதில் கைத்தேர்ந்தவர்கள். யாழ் இசைத்துப் பாடும் பாணர்களை அவர்கள் இசைக்கும் யாழை மையமாக் கொண்டு இரு வகையாகப் பிரிக்கலாம். இருபத்தொரு நரம்புகள் கொண்ட பெரிய அளவிளான யாழை இசைத்துப் பாடுபவர்கள் பெரும்பாணர் என்றும், ஏழு நரம்புகள் கொண்ட சிறிய அளவிலான யாழை இசைத்துப் பாடுபவர்கள் சிறுபாணர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இவ்விருப் பாணர்களும் நாடு முழுவதும் உள்ள வள்ளல்களைத் தேடிச் சென்று அவர்களையும், அவர்களைச் சார்ந்த நிலச்சுவாந்தார்களையும் பார்த்து பாடிப் பரிசுப் பெற்றுத் தம் வாழ்வை நடத்தி வந்துள்ளனர். இசைப் பாடுவதையே தமது முதன்மைத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்ததால் பாணர்களின் வாழ்வோடு ஒன்றியே இசையும், கூத்தும் வளர்ந்துள்ளதை இலக்கியங்கள் மூலமாக அறியமுடிகிறது.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற புறநானூற்றின் வரிகளுக்கு ஏற்ப இவர்கள் தாம் செல்லும் ஊர்களை எல்லாம் தமது ஊராகவும் அங்கு வாழும் மக்களையெல்லாம் தமது உறவினராகவுமே நினைத்து வாழ்வினை நடத்தியுள்ளனர். மேற்கண்ட பாணர்கள் மட்டுமல்லாமல் இசைப் பாணர்கள், மண்டைப் பாணர்கள் என்ற பாணர்களும் சங்ககாலத்தில் வாழ்ந்துள்ளர்.

இசைப்பாணர்கள் என்பவர்கள் வாய்ப்பாட்டு இசைப்பவர்கள். இன்றைய சங்கிதக் கலைஞர்களுக் கெல்லாம் இசைப் பாணர்களே முன்னோடிகள். மண்டைப் பாணர்கள் தோற்கருவியை இசைப்பவர்கள். மண்டை என்பது அனைத்து விதமான பறையிசைக் கருவிக்கும் பொதுவான பெயராகும். இரவலர்கள் உணவைப் பெற்று உண்பதற்காக வைத்திருந்த பாத்திரத்திற்கும் மண்டை என்ற பெயர் வழக்கத்தில் இருந்துள்ளது. மண்டைப் பாணர்கள் தமது இசைக் கருவிகளை உணவுப் பெறும் பத்திரமாகவும் பயன் படுத்தியுள்ளனர்.
 
“கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்எனச்                    
———- ——–  ——- ——- ——                  
பொழுதுஇடைப் படாஅப் புலரா மண்டை                   
மெழுகுமெல் லடையில் கொழுநிணம் பெருப்ப” (புறம் – 103)
என்ற ஔவையார் பாடல் மூலம் பாணர்கள் அரண்மனைக்குச் சென்று மன்னர்களைப் பாடி முடித்தப்பின் அவர்கள் கொடுக்கும் கள், இறைச்சி,சோறு முதலிய உணவுகளை மண்டை என்ற தனது இசைக் கருவிகளிலையே பெற்று உண்டுள்ளனர் என்பதை அறியமுடிகிறது.
                    
“பாணன் சூடிய பசும்பொன் தாமரை” (புறம் – 141)                    
“நைவளம் பழுநிய நயம்தெரி பாலை                    
“ கைவல் பாண்மகன் கடன்அறிந்து இயக்க” (சிறுபாண் – 36 – 37)

இசைப் பொழியும் பாண்கருவியை இசைப்பதையே தொழிலாகக் கொண்ட பாணர்கள் இசை விருந்தளிப்பதில் திறன் மிகுந்தவர்கள் என்பதும், இவர்கள் பாணன், பாண்மகன் என்ற பெயரால் அழைக்கப்பட்டமையும் மேற்கண்ட பாடல் வரிகளால் புலனாகிறது.
பாடினி
பாணன் என்ற ஆண்பால் கலைஞர்களோடு  அதிகம் இடம் பெறும் பெண்பால் கலைஞரின் பெயர் பாடினி. இவர்கள் பாணர்களின் மனைவி என்ற கருத்தும் உள்ளது. தம் கணவரோடு அவர்கள் செல்லும் இடமெல்லாம் தானும் சென்று தன் குரல் வளத்தால் இனிமையாகப் பாடும் பெண்பால் இசைக் கலைஞர்களாக விளங்கினர். பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை ஆகிய இருபாணாற்றுப்படைகளிலும் பாணர்களை விட பாடினியர்களைப் பற்றிய வர்ணணைச் செய்திகள் அதிகமாக உள்ளன.
                    
“அவ்வாங்கு உந்தி அஞ்சொல் பாண்மகள்” (அகம் – 126)                   
“இன்நகை விறலியொடு மென்மெல இயலிச்” (புறம் – 70) 
“பெடைமயில் உருவின் பெருந்தகு பாடினி” (பொருநர் – 47)
மேற்கண்ட பாடல் அடிகள் மூலம் பாடினி மென்மையானவள், மிகுந்த அழகு நிறைந்தவள், அழகிய சொற்களைப் பேசுபவள், கலைக்காகவே தன்னை அர்பணித்துக் கொள்பவள் என்பதை உணரமுடிகிறது. பாணர்களைப் போலவே இசையில் வல்ல மகளிர்     பாடிணியர் என்று அழைக்கப்பட்டுள்ளனர். பாடினி என்பவள் இசைப்பாடுவதிலும், இசைக் கருவிகளை வாசிப்பதிலும், புலவர்கள் இயற்றித் தரும் பாட்டைப் பாடுவதிலும் வல்லவர்களாகத் திகழ்ந்துள்ளனர் என்பதைப்  பின்வரும் பாடல் அடிகள் உணர்த்துகின்றன.
 
“மறம்பாடிய பாடினியும்மே” (புறம் – 11)                              
“பாடினி பாடும் வஞ்சிக்கு” (புறம் – 15)
இவர்கள் யாழ் இசைக்கு ஏற்றவாறு பண்ணோடு பாடுவதில் மிகுந்த திறம் வாய்ந்தவர்கள்.

கூத்தர்
பல வகையான இசைக் கருவிகளின் துணைக் கொண்டு நடனம் ஆடுபவர்கள் கூத்தர்கள். சங்ககாலத்தில் இக்கலையைத் தம் தொழிலாகக் கொன்டவர்களை மக்கள் கூத்தன், ஆடுகளமகன் என்று அழைத்துள்ளனர். இவர்கள் கூத்து நிகழ்த்திய அரங்கம் –ஆடுகளம் என்று அழைக்கப்பட்டுள்ளது. விழாக் காலங்களில் கோவில் கலையரங்கங்களிலும், மக்கள் ஒன்றுகூடும்  அளவிற்கு வசதி நிறைந்த இடங்களிலும் இவர்கள்  தமது கூத்தினை நிகழ்த்தியுள்ளனர். விழாக்கள் இல்லாத காலங்களில் இவர்கள் அரசர்கள், வள்ளல்களிடத்தில் சென்று ஆடிப் பாடிப் பரிசு பெற்று தம் வாழ்வை நடத்தியுள்ளனர். ஓய்மா நாட்டை ஆண்ட நல்லியக்கோடனிடம் சென்று தான் விரும்பியதை எல்லாம் பரிசாகப் பெற்று வந்ததைச் சிறுபாணற்றுப்படை நன்கு விளக்குகிறது.

விறலி

பாடலுக்கும் இசைக்கும் ஏற்றவாறு தம் நுண்ணிய உடலசைவின் மூலம் வெளிப்படுத்தும் நடனக் கலையில் தேர்ச்சிப் பெற்ற பெண் நிகழ்த்துக் கலைஞர்களே விறலியர்கள். இன்றைய பரதநாட்டியம் என்ற ஆடல் கலையின் முன்னோடிகள் இவர்களே. இவர்கள் பாணர்கள், கூத்தர்கள், பொருநர்கள் ஆகிய மூன்றுவகைப் பட்ட ஆண்பால் நிகழ்த்துக் கலைஞர்களுடனும் தன் ஆடல் திறனைப் புரவலர்கள் மத்தியில் வெளிப்படுத்தி பரிசுப் பெற்று வந்துள்ளனர். மக்கள் இவர்களை விறலி, நடனமகள், கூத்தி, ஆடுமகள் என்ற பெயர்களில் அழைத்துள்ளனர்.
                    
“ஐதுவீழ் இகுபெயல் அரககொண்டு அருளி                    
நெய்கனிந்து இருளிய கதுப்பின் கதுப்புஎன                   
 ——- ———- ————–  ————                   
மடமான் நேக்கின் வாள்நுதல் விறலியர்” (சிறுபாண் –  13 – 31)
என்ற சிறுபாண்ணாற்றுப்படை பாடல் விறலியர்கள் இக்காலத் திரைப்படக் கலைஞர்களைப் போல கண் கவரும் உடல் அழகுடன் இருந்தமையைப் புலப்படுத்துகிறது.

பொருநர்
பாண்சமூகத்தின் ஒரு பிரிவினரான பொருநர்களில் ஏர்களம் பாடுவோர், போர்களம் பாடுவோர், பரணிப் பாடுவோர் என மூன்று வகைப் பொருநர்களாக இருந்துள்ளனர். பொருநர்கள் மற்ற வகை நிகழ்த்துக் கலைஞர்களிடமிருந்து சற்று வேற்றுமைக் கொண்டவர்களாக உள்ளனர்.
இவர்கள் அரசர்களோடும், பெருநிலக்கிழார்களோடும் மிக நெருங்கிய உறவுடையவராக இருந்துள்ளனர். போர்க்களத்திலும், அரண்மனையிலும் அரசர்களின் அருகிலேயே இருந்துள்ளனர். மற்ற நிகழ்த்துக் கலைஞர்களைவிட பொருநர்கள் வெளியிடங்களில் மிகக் குறைவாகவே திரிந்துள்ளனர் என்பதை பின்வரும் புறநானுற்றுப் பாடல் விளக்குகிறது,
                         
 “கடற்படை அடற்கொண்டி                          
மண்டுற்ற மறநோன் தாள்                         
 தண்சோழ நாட்டுப் பொருநன்                          
——–  ———  ———- ——-                          
அவற்பாடுதும் அவன்தாள் வாழியஎன” (புறம் – 382)
நான் வளமான சேழநாட்டைச் சார்த்த பொருநன். பகைவர்களைக் கடலில்  சென்று வென்று அவர்களின் கலங்களிலிருந்து கொண்டு வந்த செல்வங்கள் எங்களிடத்தில் உள்ளன. தலையணி அணிந்த நல்ல குதிரைகளின் தலைவனாகிய நலங்கிள்ளியின் பொருநர்கள் நாங்கள் அவனை மட்டுமே பாடுவோம் பிறரைப் பாடுவதில்லை. பிறரிடமிருந்து பரிசும் பெருவதில்லை என்று ஒரு பொருநன் பாடுகிறான். தாம் வெளிப்படுத்தும் கலைக்கும் தாம் நடித்து காட்டும் கதைக்கும் பொருந்துமாறு தமக்கு வேடமணிந்து கூத்தாடுபவர்களே பொருநர்கள். விழா நடக்கும் ஊர்களுக்குச் சென்று தம் கலைத்திறனை நிகழ்த்திக் காட்டியப் பின் தம் கலைக் கருவிகளோடு தம் ஊருக்குச் செல்லும் வழக்கம் உடையவர்கள் என்பதை
  
“அறாஅ யாணர் அகன்தலைப் பேரூர்                 
சாறுகழி வழிநாள் சோறுநசை உறாது                  
வேறுபுலம் முன்னிய விரகுஅறி பொருந” (பொருந – 1-3)  
என்ற பொருநராற்றுப்படை அடிகள் மூலம் அறியமுடிகிறது. வள்ளல்களின் அரண்மனைக்கு வைகறையில் சென்று தனது கிணைப் பறையை இசைத்து அவர்களதுப் புகழைப்பாடி அவர்களைத் துயில் எழுப்புதல் இவர்களின் வழக்கமாக இருந்துள்ளது. பிற்காலத்தில் தோன்றிய பக்தி இலக்கியத் திருப்பள்ளி எழுச்சிக்கு பொருநர்களே முன்னோடிகளாக இருந்துள்ளனர்.
இயவர்
காற்றுக் கருவியான குழலை இசைக்கும் நிகழ்த்துக் கலைஞர்களே இயவர்கள். போர்களத்திற்குச் செல்லும் முன்பு முரசிற்கு வழிபாடு இக்கலைஞர்களாலே செய்யப்பட்டுள்ளது. இவர்கள் போர்களத்தில் ஆம்பல் பண்னை குழலில் இசைப்பார்கள் என்பதைப் நற்றிணையின் பாடல் அடிகள் பின்வருமாறு விளக்குகிறது.
                           
 “இம்மென் பெருங்களத்து இயவர் ஊதும்                             
ஆம்பலங் குழலின் ஏங்கிக்” (நற்றி – 113)
போர்களம் கண்டுப் பகைவர்களை வென்று மீண்டு வரும் முரசிற்கு இரத்தப்பலிக் கொடுத்து அதனை முதலாவதாக இசைக்கும் உரிமையைப் பெற்றவர்கள் இயவர்களே என்பதை விளக்குகிறது பின்வரும் பதிற்றுப்பத்தின் பாடல்

“மண்உறு முரசம் கண்பெயர்த்து இயவர்    
 கடிப்புஉடை வலத்தா் தொடித்தோள் ஓச்ச” (பதிற்று – 19)

இயவர்களின் இசையானது யானைகள் மூங்கிலை உடைத்துச் செல்லும் ஒலியைப் போல் இருந்தது என்று மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிகறது.
 
“நிழத்த யானை மேய்புலம் படர                      
கலித்த இயவர் இயல்தொட் டன்ன” ( மதுரை – 303 – 304)
இயவர்கள் பலவகைப்பட்ட இசைக்கருவிகளை இசைக்கும் திறன் பெற்றவர்கள், முரசிற்குப் பலிக்கொடுக்கும் உரிமை, முரசு அடிக்கும் உரிமை மற்றும் அரசனுக்கு மிக அருகில் இருக்கும் உரிமையைப் பெற்றவர்களாக இருந்துள்ளனர்.

துடியன்
துடி என்ற இசைக் கருவியை இசைப்பவர்கள் துடியர்கள். போரின் தொடக்கத்தைத் தெரிவிக்கத் துடி என்ற இசைக் கருவிப் போர்களத்தில் இசைக்கப்பட்டுள்ளது. துடியை இசைத்து வீரர்களுக்கு வீரஉணர்வு மேலோங்கும் படித் துடியை இசைத்துள்ளனர் துடியர்கள். போர்களத்தில் மன்னனது மார்பினைத் துளைத்த வேல் துடியனின் கையில் இருந்தது என்று புறுநாறுற்றுப் பாடல் சுட்டிக்காட்டுகிறது. துடியர்கள் அதிகமாக போர்களத்தோடும், அரசர்களோடும் கொண்டிருந்த நெருங்கியத் தொடர்பைப் பின் வரும் படல்கள் மூலம் அறியமுடிகிறது.
                  
 “ உவலைக் கண்ணித் துடியன் வந்தெனப்“ (புறம் – 269)                  
 “துடியன் கையது வேலே” (புறம் – 285)
பாணன், விறலி, துடியன் என்று நிகழ்த்துக் கலைஞர்கள் ஒரே குழுவாகச் சேர்ந்து சென்று புரவலர்களைக் கண்டு பரிசுப் பெற்றுள்ளனர்.
மாங்குடிகிழார் என்ற புலவர் துடியன், பாணன், பறையன், கடம்பன் என்ற நான்கு குடிகளைச் சுட்டிக் காட்டுகின்றார்.
                    
 “துடியன் பாணன் பறையன் கடம்பனென்று                      
இந்நான் கல்லது குடியும் இல்லை” (புறம் – 335)
இதன் மூலமாக மாங்குடிகிழார் துடியன் என்ற கலைஞனையே முதலில் குறிப்பிடுகிறார். துடியர்கள் தொண்மையான குடிகள் என்பதும், மன்னர்களின் நேரடி ஆதரவைப் பெற்றவர்கள் என்பதையும் உணரமுடிகிறது.

கிணைவர்
கிணை என்பது பலவகைப் பட்ட தோற்கருவிகளில் ஒரு வகைப் பறைக் கருவியாகும். கிணைப் பறையை இசைப்பவர்கள் கிணைவர் என்று அழைக்கப்பட்டனர்.
                    
 “கணையர் கிணையர் கைபுனை கவணர்                       
விளியர் புறக்குடி ஆர்க்கும் நாட” (நற்றி – 108)
என்ற பாடல் அடிகள் கிணைவர்கள் வேளாண்மைப் பணியை மேற்கொண்டதை விளக்குகிறது. குறிஞ்சி நிலத்தில் பயிர்களை உண்ணும் யானைகளை விரட்டக் கிணைப் பறையை இசைத்தனர் என்பதையும் புலப்படுத்துகிறது.

நிகழ்த்துக் கஞைர்களின் வாழ்க்கை
பாணனும் அவன் மனைவியான பாடினியும் ஆறுகள், காடுகள், மலைகள் எனப் பலவற்றையும் கடந்துச் சென்று வள்ளண்மை நிறைந்த வள்ளல்களைக் கண்டு  பாணன் இசைக் கருவிகளை இசைத்து அவர்களைப் புகழ்ந்து பாட விறலி அதற்கேற்றவாறு நடனமாடி அவர்களிடமிருந்து  பரிசுப் பெற்று இல்வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். இவர்களது இல்வழ்க்கை செந்நெறியில் நடைப் பெற்றக் காரணத்தால் கலைகள் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளன.
மதுரைக்குப் பக்கத்தில் வைகையாற்றின் நீர்த்துறைக்கு அருகில் பூந்தோட்டங்கள் நிறைந்த இடத்தில் பெரும்பாணர்களின் வீடுகள் அமைந்திருந்ததையும், அவா் தம் வீடுகளில் ஆடல், பாடல், சார்ந்த ஓசைகள் இடைவிடாது ஒலித்துக் கொண்டு இருந்ததையும்
             
“அவிர்அறல் வையைத் துறைதுறை தோறும்             
பல்வேறு பூத்திரள் தண்டலை சுற்றி             
அழுந்துபட்டிருந்த பெரும்பாண் இருக்கையும்“ (மதுரை – 340 – 342)
 
என்ற மதுரைக் காஞ்சிப் பாடல் வரிகள் மூலம் அறியமுடிகிறது.
நுட்பமான வேலைப்பாடுகள் நிறைந்த அணிகலன்களைப் பாடினியும், விறலியும் அணிந்திருந்ததைப் பல சங்கப்பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன. நன்னனைக் காணச் சென்றக் கூத்தர்களுடன் இருந்த விறலியர்கள் அணிந்திருந்த அணிகலன்களின் நேர்த்தியான தன்மையால் “இலங்குவளை விறலியர்” என்று அழைக்கப்பட்டனர். சங்ககால மக்களின் அணிகலன்கள் செய்யும் நேர்த்தியானக் கலைத்திறனுக்கும், பெண்கள் தம்மை அழகுப் படுத்திக் கொள்ளும் அழகியல் உணர்விற்கும்
           
 “இலங்குவளை விறலியர் நின்புறம் சுற்றக்” ( மலைப்படு – 46)

என்ற மலைப்படுகடாம் பாடல் அடிச் சன்றாக உள்ளது.
நிகழ்த்துக் கலைஞர்களின் வறுமைநிலை

சங்ககால நிகழ்த்துக் கலைஞர்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்துள்ளனர். வறுமையைப் பேக்கிக் கொள்ள தாம் நாடிச் சென்ற வள்ளல்களையும், மன்னர்களையும் மருத்துவன், அருளாளன், மழை போன்றவன் என்று போற்றியுள்ளமையால் அவர்களின் வறுமையை அறியமுடிகிறது,
கிணை வாசிக்கும் கலைஞன் ஒருவனது குடும்பம் வறுமையால் வாடுகிறது. அவனது மனைவி, பிள்ளைகள் என்று குடும்பமே பசித் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். உவர்க்கும் உப்பும் இல்லாத வறுமை. அவனது மனைவி குப்பையில் இருந்த வேளைக் கீரையைப் பறித்தாள், உப்பில்லாமல் வேகவைத்ததோடு, அதை தம் குடும்பம் உண்பதை மாற்றார் கண்டுவிட்டால் தம் இல்லற வாழ்வை இழிவாகக் கருதுவார் என்பதால்  தன் விட்டுக் கதவை அடைத்துவிட்டு தன் சுற்றத்தோடு  தானும் உண்டுள்ளாள் என்பதைப் பின் வரும்  சிறுபாணாற்றுப்படை பாடல் மூலம் அறியமுடிகிறது.
               
“வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த                
குப்பை வேளை உப்பிலி வெந்ததை                 
——– ——— ——– ——-                
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் மிசையும்” ( சிறுபா – 136-139)
இல்லத்தில் உள்ள அனைத்துச் செல்வங்களும் திர்ந்தாலும் உப்பு மட்டும் இல்லை என்ற நிலை வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளும் வழக்கம் இன்றளவும் தமிழர்களிடம் இருந்து வருகிறது, வீட்டில் உப்பும் இல்லாதா நிலை வரும் படியாகக் கலைஞர்கள் வறுமையில் வாழ்ந்துள்ளனர். ஆகவே தான் விருந்தோம்பல் சிறந்து விளங்கிய சங்கத் தமிழகத்தின் கிணைக் கலைஞனின் மனைவி பகிர்ந்து  உண்ணுதலையும் மறந்து, உண்பதற்கு உகந்த தன்மை இல்லாத குப்பை வேளைக் கீரையை உண்டாள் என்பதை அறியமுடிகிறது.

நிகழ்த்துக் கலைஞர்களை அரசர்கள் பாதுகாத்தமை
கரிகாலன் தன்னைப் புகழ்ந்துப் பாடிய பொருநர்க்கு நூல் சென்ற வழியை கண்டுப்பிடிக்க முடியாத அளவிற்கு நுட்பமான வேலைப்பாடு வாய்ந்த பாம்பு உரித்தத் தோல் போன்ற மென்மையான ஆடையை வழங்கினான் என்பதைப் பின்வரும் பாடல் அடிகள் கொண்டு அறியமுடிகிறது.
                    
“நோக்கு நூழைகல்லா நுண்மைய புக்கனிந்து                      
அரவுஉரி அன்ன அறுவைநல்கி” ( பொருநர் – 82- 83)
சங்ககால மன்னர்கள் பாணர்கள், பாடினியர்கள், விறலியர்கள், கூத்தர்கள், பொருநர்கள் ஆகிய கலைவாழ் மக்களைக் கனிந்த முகத்துடன் வரவேற்று நல்ல உடைகளையும், பல்சுவை உணவுகளையும் கொடுத்து உபசரித்தார்கள்.
  
“கொடுவாள் கதுவிய வடுஆழ் நோன்கை               
 –————– ——– ———- ——-                
மங்குல் வானத்துத் திங்கள் ஏய்க்கும்” (பெரும்பாணா – 471 – 480).
என்ற பாடல் அடிகள் தொண்டை நாட்டுத் தலைவன் இளந்திரையனின் அரண்மனையில் சமையல் கலையில் வல்லவன் சமைத்த பல்சுவை உணவுகளைப் பாணர்களின் பிள்ளைகளுக்குச் சிறிய வெள்ளிக் கலன்களிலும், பெரியவர்களுக்குப் பெரிய வெள்ளிக் கலங்களிலும் படைக்கப்பட்டதை நமக்கு உணர்த்துகிறது,
தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டியர்களும், பாரி, காரி, அதிகன் போன்ற சிற்றரசர்களும் தன்னை நாடி வந்த இசைத் தமிழ் பாணர்களையும், நாடகத் தமிழ் நிறைக்கூத்தர்களையும் புன்னகையுடன் வரவேற்று பக்கத்தில் இருந்து உணவு படைத்து, உயர்ந்த ஆடைகளையும் வழங்கியுள்ளனர். அவர்களைப் பல நாள்கள் தம் அரண்மனையிலேயே தங்கியிருக்கவும் செய்தனர். அவர்கள் வேண்டியப் போது அவர்களே மலைத்து நிற்கும்படி பரிசுகள் வழங்கி வழியனுப்பி வைத்தனர்.

ஓய்மா நாட்டை ஆண்டு வந்த நல்லியக் கோடானது அரண்மனையின் வாயிற்கதவானது புலவர்களுக்கும், பொருநர்களுக்கும், பாணர்களுக்கும், கூத்தர்களுக்கும், அந்தணர்களுக்கும் தடையின்றி திறந்தே இருந்துள்ளதை விளக்குகிறது பின்வரும் பாடல்
  
“பொருநர்க்கு ஆயினும் புலவர்க்கு ஆயினும்               
அடையா வயில்அவன் அருங்கடைகுறுகி” (சிறுபாண் – 203-206).
நன்னன் என்ற குறுநில மன்னன் பகைவர்களிடமிருந்து தான் பெற்ற செல்வங்களையும், அணிகளன்களையும் புலவர், பாணர், கூத்தர் முதலிய கஞைர்களுக்கு மழை போல வழங்கியுள்ளான் என்பதைப் புலப்படுத்துகிறது
 
“தொலையா நல்லிசை உலகமொடு நிற்பப்            
வீயாது சுரக்கும்அவன் நாள்மகிழ் இருக்கையும்” (மலைபடு – 70 – 76)

என்ற மலைப்படுகடாம் பாடல் அடிகள்.

நிறைவுரை  

சங்ககால நிகழ்த்துக் கலைஞர்கள் வறுமையான சூழுலில் வாழ்ந்திருந்தாலும் மக்கள் முதல் மன்னர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களாலும் போற்றப்பட்டுள்ளனர். அவர்களது கலைகளும் பெரிதும் மதிப்போடு இருந்துள்ளது. அனால் இன்று நிகழ்த்துக் கலைஞர்களும், நிகழ்த்துக் கலைகளும் நலிவடைந்த நிலையே காணமுடிகிறது. நவின ஊடகங்களின் வருகையிலும் இயந்திரமயமான வாழ்கையும் இதற்கான காரணங்களாக அமைகின்றன. திருவிழாக்கள் மற்றும் சில முக்கிய தினங்களில் மட்டும் தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, நடனம். போன்றவை குறைந்த அளவில் மக்கள் மன்றங்களிலும், தொலைக்காட்சிகளிலும் நடத்தப்படுகின்றன. இன்றைய சூழலில் நிகழ்த்துக் கலைகளையும், கலைஞர்களின் வாழ்க்கையையும் வளப்படுத்த மக்களும், அரசும் முயற்சி செய்தால் பண்டைய நிகழ்த்துக் கலைகளையும், தமிழர் பண்பாட்டையும் அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்க முடியும்.

துணைநூற்பட்டியல்

1.சுப்பிரமணியன் ச.வே முனைவர்  –  
சங்கஇலக்கியம் மூலமும் உரையும், (உரையாசிரியர்)
 – பத்துப்பாட்டு,  
கோவிலூர் மடாலயம், கோவிலூர் 630 307, வர்த்தமானன் பதிப்பகம்,
 21, இரமகிருஷ்ணா தெரு,  தியாகராய நகர். சென்னை –  17.

2.மகாதேவன் . கதிர் முனைவர் –  சங்கஇலக்கியம் மூலமும் உரையும் ,  (உரையாசிரியர்), நற்றிணை,
கோவிலூர் மடாலயம், கோவிலூர் 630 307, வர்த்தமானன் பதிப்பகம்,
 21, இரமகிருஷ்ணா தெரு,  தியாகராய நகர். சென்னை –  17.

3.மீனவன் . நா கவிஞர், முருகசாமி .தெ- சங்கஇலக்கியம் மூலமும் உரையும்,(உரையாசிரியர்- அகநானூறு,
கோவிலூர் மடாலயம், கோவிலூர் 630 307, வர்த்தமானன் பதிப்பகம்,
 21, இரமகிருஷ்ணா தெரு,  தியாகராய நகர். சென்னை –  17.

4.இளங்குமரன் . இரா புலவர் -சங்கஇலக்கியம் மூலமும் உரையும், (உரையாசிரியர்)-
புறுநானூறு,
கோவிலூர் மடாலயம், கோவிலூர் 630 307, வர்த்தமானன் பதிப்பகம்,
 21, இரமகிருஷ்ணா தெரு,  தியாகராய நகர். சென்னை –  17.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
  அ.அன்பரசன், 
முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்),
முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை,
கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி,
திருவண்ணாமலை – 606 603,  
திருவள்ளுவர் பல்கலைக்கழகம்,
வேலூர் – 632 115.
 
அ.அன்பரசன்,   
உதவிப்பேராசிரியர், 
முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, 
சண்முகா தொழிற்சாலை கலை அறிவியல் கல்லூரி, 
திருவண்ணாமலை – 606 603.
 
நெறியாளர்
முனைவர் மு.பாலமுருகன், 
இணைப்பேராசிரியர்,
ஆய்வுநெறியாளர், 
முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, 
      கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி,
திருவண்ணாமலை – 606 603.

 

Leave a Reply