நாட்டார் மக்களின் வழிபாட்டுக் கதைகளில் தெய்வ வரலாறுகள்|முனைவர் சு. பால்பாண்டி

நாட்டார் மக்களின் வழிபாட்டுக் கதைகளில் தெய்வ வரலாறுகள் - முனைவர் சு. பால்பாண்டி
ஆய்வுச்சுருக்கம்
               
சிறுதெய்வங்களாக விளங்கும் நாட்டார் தெய்வங்கள் அனைத்தும், காட்சியுரு தந்து தோன்றி மறைந்தனவேயாகும். இதற்கு அடுத்தநிலையில் ‘கொலை, கொள்ளை, சத்தியம் காத்தல்’ என்ற  நிலைகளிலும் மனிதர்கள் தெய்வங்களாக வழிபடப் படுகின்றனர். மனிதர்கள் தெய்வங்களாக விளங்கும்போது.

1) தெய்வத்திற்குக் கட்டுப்பட்டு இருத்தல்
2) தெய்வத்தை விட்டு தனியே இருத்தல்
என்ற நிலைகளில் காணப்படுகின்றனர். நாளடைவில் பெருந்தெய்வ வழிபாட்டிற்கு வழி வகுக்கின்றது. இதை மக்களின் புராணக் கதைகளும், வாய்மொழிக் கதைகளும் உணர்த்துகின்றன.

முன்னுரை
               
நாட்டார் மக்களின் வழிபாட்டுத் தெய்வங்கள் எல்லாம் பெருந்தெய்வ, சிறுதெய்வ நோக்கில் அமைந்தாலும், இரண்டுக்கும் ஒரே நிலையில் தோற்றமும் அமைகின்றது. தெய்வங்கள் மக்களின் கனவு, எதிர்பாராத சம்பவம் என்ற செயல்களின் மூலம் தோன்றி மறைந்து விடுகின்றன. இவற்றை,  மெய்மைப்படுத்தும் காரணமாக ஆவி ஒன்றினை நிலைநிறுத்திக் கொள்கின்றனர். அச்செயலே, ஆவியின் மேல் அச்சமுற்று தனக்குத் தீங்கு நிகழாமல் இருக்க வழிபடத் தொடங்கியது எனில், ஓர் இடத்தில் தெய்வ வழிபாடு தொடங்குவதற்கு முன், அங்கு ஆவியானது தோன்றி மனிதர்களுக்கு ஏதாவதொரு வடிவில் (குரலாகவோ, உருவமாகவோ) காட்சி அளித்து மறைந்துவிடும். அந்த இடத்தில் அங்கு வாழும் மக்கள் வழிபடத் தொடங்கினர் என்பது, விருதுநகர் நாட்டுப்புற மக்களின்  வாய்மொழிக் கதைகளினால் தெய்வ வரலாறுகளை அறிதல் ஆய்வின் கருதுகோளாக அமைகிறது.

கருத்திறச் சொற்கள்
நாட்டார்கள், நாட்டுப்புறம், தெய்வங்கள், வழிபாடுகள், கதைகள், தோற்றம், ஆவி, அச்சம் என்பன ஆய்வின் கருத்துச் சொற்களாக அமைந்துள்ளது.

ஆய்வின் பயன்கள்
நாட்டார்கள் உறவுமுறை போன்று தெய்வங்களும் தங்களுக்குள் உறவுமுறைகளை வைத்திருப்பதாக ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

நாட்டுப்புறக் கதைகளில் வழிபாட்டுத் தெய்வங்கள்
சக்தி மாரியம்மா
               
சிவயோக ஞானசித்தர் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பாகத் தென்தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகிய சதுரகிரி மகாலிங்கம் மலையில் கடுந்தவம் மேற்கொண்டு அன்னை பராசக்தியிடம் ‘நான் யோக நிஷ்டையடையும் இடத்தில் என் அன்னை பராசக்தி – சிவசொரூபியாக பீடமிட்டு அமர்ந்து அருள் பாலிக்க வேண்டும் என்று வேண்ட, அதற்கு அன்னை ஐந்து நதிகள் சங்கமிக்கும் புண்ணிய பூமியில் நான் ஐக்கியம் ‘ஆவேன்’ என்று பதில் கூறியது. அன்னை பராசக்தியின் வார்த்தைகளை ஏற்று அங்கிருந்து ஐந்து நதிகள் சங்கமம் ஆகின்ற ‘இருக்கன்குடி’ என்ற இடத்தைக் தேர்வு செய்தது. அந்த இடத்திலேயே தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார் ஞானசித்தர்.

                இந்த நிலையில், நாடெங்கும் ஊழிப்பிரளயம் ஏற்பட்டு காட்டாற்று வெள்ளத்தால் நாட்டின் பல கிராமங்கள் அழிந்தன. அந்தப் பெருவெள்ளத்தால் இழுத்து வரப்பட்ட அன்னை பராசக்தியின் உருவச்சிலை ‘சித்தர் ஐக்கியமாகிய இடத்தை அடைந்ததும் வெள்ளத்திலிருந்து விடுபட்டு சுழலெடுத்து  பூமிக்குள் புதைந்துக் கொண்டது”1 எனப்  புராணச் செய்தி கூறுகின்றது.

இன்னொரு புராணக்கதை பின்வருமாறு
               
அர்ச்சுனா நதியின் கரையில் இருக்கும் இருக்கன்குடி கிராமப் பெண்கள் சாணம் சேகரித்துவிட்டு சாணக்கூடையை மட்டும் தரையிலிருந்து எடுக்க முடியவில்லை. சாணத்தையெல்லாம் அகற்றிய பிறகும் எடுக்க முடியவில்லை. எனவே, பெண்கள் அதிர்ச்சிக்கு உள்ளாயினர். அவ்வழியே வந்த ‘சக்காபுக்க’ என்ற அரிசன சாதியைச் சார்ந்த முதியவர் பெண்களிடம் காரியத்தை வினவ பெண்கள் விசயத்தை முதியவரிடம் கூறுகின்றனர். அவர், அவ்வூரின் இல்லத்துபிள்ளைமாரிடம் விசயத்தை எடுத்துக்கூறுகின்றார். அதைத் தொடர்ந்து வந்து மண்வெட்டியால் அந்த இடத்தைத் தோண்டுகின்றனர். அவ்பொழுது திடீரென ‘ ரத்தக் கசிவு’ ஏற்பட்டதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சி உற்றார்கள்.
இதைக் கண்ட எல்லோரும் பயந்து நிலைதவறிய போது, இல்லத்துபிள்ளை என்பவர் ‘இதை நான் கவனித்துக் கொள்கிறேன்; நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் என்கின்றார்.  ஒருநாள் இல்லத்து பிள்ளையிடம் ரத்தக் கசிவு ஏற்பட்ட இடத்தில் தனக்கு ரத்தப்பலி தந்தால் உங்கள் குலத்தையும் தன்னை நாடிவரும் மக்களையும் வளமாக்கி வாழவைப்பேன் என்று இல்லத்து பிள்ளையிடம் அசரீரி ஒலி கேட்டது. இதைக் கேட்ட இல்லத்து பிள்ளை கருவுற்ற தன் மனைவியையே பலிகொடுத்து விடுகின்றார். பின் தன் மனைவியின் நினைவில் சக்தியை வளரச் செய்து சிறு பீடம் அமைத்து வழிபட்டார்”2 எனச் சுட்டுகின்றார்.
பல ஆண்டுகள் ஆனபோது பீடத்தின்மேல் சக்தியாக மாரியம்மனின் உருவச்சிலை அமைத்து தன் மனைவியின் ஆசைகளை நிறைவேற்றும் பொருட்டு ஆபரணங்களை அணிவித்து  பூசைகள் செய்கின்றார். இத்தெய்வம் இன்றும் கருவுற்ற பெண்ணின் கோலத்துடன் காட்சியளிக்கின்றது. இத்தெய்வம் பெண்களுக்குப் பிள்ளை வரம் கொடுப்பதாக மக்கள் நம்புகின்றனர். இத்தெய்வம் குறித்த இன்னொரு கதை பின்வருமாறு காணப்படுகின்றது.
               
ஒரு நாள் அக்கோயில் பூசாரி அம்மனுக்குப் பூசை செய்வதற்காகப் பூசைப்பொருட்களைக் கொண்டு செல்கையில், ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டது. அவர் அப்போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பூசைப் பொருட்களை நினைத்து மூன்று நாட்களாக உணவருந்தாமல் கவலையுடன் இருக்கின்றபோது, அம்மன் ஆவியாக பூசாரியின் மனக்கண்ணில் தோன்றி கவலைப்படாமல் இரு; எல்லாப் பொருள்களும் பாதுகாப்பாக உள்ளன”17 என்று கூறியதாக அவ்வூர் மக்கள் இன்றும் நம்புகின்றனர். இக்கோயிலை இருக்கன்குடி மாரியம்மன்  அல்லது சக்தி மாரி அல்லது  பராசக்தி என்றெல்லாம் மக்கள் அழைக்கின்றனர்.

சங்கிலிக் கருப்பசாமி
பல வருடங்களுக்கு முன்பு அழகாபுரி என்ற ஊர்க்குக் கிழக்குத் திசையில் ஒரு கிராமம் இருந்ததாகக் கருதப்படுகிறது. அந்தக் கிராமத்தின் காவல்தெய்வம் சங்கிலிக் கருப்பன் ஆகும்.  அத்தெய்வத்திற்கு ‘ஆடு, மாடு, பன்றி’களைப் பலியிட வேண்டுமென்று, அத்தெய்வம் பூசாரியிடம் (வந்து) கேட்டது. இச்செய்திகளை அறிந்த கிராமத்திலுள்ள மக்கள் அதற்கு முடியாது என்று மறுத்துவிடுகின்றனர். சில ஆண்டுகள் கழித்து பஞ்சம் ஏற்படுகின்றது. எனவே, அவ்வூரிலுள்ள மக்கள் பஞ்சம் பிழைக்க வேறொரு இடத்திற்குச் செல்கின்றனர்.  ஆனால் அந்தக் கிராமத்தில் எங்கும் செல்லாமல் சில பள்ளர் இன மக்கள் வாழ்கின்றனர். அவ்வினத்தின் ஒரு குடும்பத்தில் தன்னை வழிபட வேண்டி சங்கிலி  கருப்பசாமி வேண்டுகின்றது. மேலும் குழந்தையில்லாத அக்குடும்பத்திற்குக் குழந்தை வரமும், அக்குடும்பம் வளம்பெற தேவையான பிறவரங்களையும் அத்தெய்வம் அளிக்கின்றது.
குழந்தைகள் பெரியவர்கள் ஆனபோது, தெய்வத்திற்கு வழிபாடு நடத்திய தந்தை இறந்துவிடுகின்றார். எனவே, அத்தெய்வத்தை வழிபடாது விட்டுவிட்டு அவர்கள் வேறுறொரு இடத்திற்குச் சென்று விடுகின்றனர். தொடர்ந்து சங்கிலி கருப்பன், ஆசாரி இனத்தைச் சார்ந்த ஒருவரின் கனவில் தோன்றி தன்னை வழிபடுமாறு வேண்டி மறைகின்றது. வழிபட்ட ஆசாரியும் இறந்துவிடுகின்றார். இதன் பின்னர் ஆசாரியின் வாரிசிடம் முன் (கனவு அல்லது நேரில்) தோன்றி தன்னை வழிபடுமாறு கேட்கின்றது.  அதற்கு ஆசாரி மகன் நீ எனக்கு என்ன தருவாய்?என்று கேட்க அதற்கு நீ கேட்டதைத்தருவேன்”3 என்று கூறிவிட்டு மறைகின்றது. பின்னர் தெய்வத்தின் அருள்பெற்று வழிபாடு நடத்தி வருகின்றனர் என்று வெள்ளையம்மாள் குறிப்பிடுகின்றார்.
நொண்டி முத்தையா
முத்தையா என்பவர் மதுரை மாவட்டத்திலுள்ள சுருளி என்ற ஊரில் குடியிருந்திருக்கின்றார். இவர் தேவர் சாதியைச் சோந்தவர். இவர் அவ்வூரைச் சார்ந்த ஆசாரி இனப்பெண்ணுடன் காதல் கொள்கிறார். அந்தப் பெண்ணிற்கு  ஐந்து சகோதரர்கள் இருந்தனர். இருகுடும்பத்தாரும்  இவ்விருவரின் காதலை விரும்பவில்லை. எனவே, பெண்ணின் குடும்பத்தார் இவர்களது காதலைப் பிரிக்க எண்ணினர். முத்தையா தன் காதலியை அழைத்துக் கொண்டு கூமாப்பட்டிக்கு வந்து சேர்கின்றார். ஆனால் ஊர் மக்கள் இருவரையும் அந்த ஊருக்குள் வாழ அனுமதிக்கவில்லை. எனவே, முத்தையா அவ்வூருக்கு அடுத்துள்ள கண்மாயில் வந்து ஒரு குடிசை அமைத்து; அங்கு வாழ்கின்றார். இக்குடிசையைச் சுற்றி ஒருவர் மட்டுமே வந்துபோகும் அளவிற்கு இடைவெளிவிட்டு, சங்கம்முள், இலந்தைமுள் ஆகியவற்றைச் சுற்றிலுமாக வைத்து அடைத்துவிடுகின்றார். முத்தையாவின் மனைவியின் உடன் பிறந்தவர் ஐவரும் தங்கள் தங்கை இவ்வாறு இழிவான செயலைச் செய்து விட்டாளே என வருத்தப்பட்டு, அவளை எவ்வாறெனும் கொலை  செய்தாக வேண்டும் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு கிராமமாகச் சென்று தேடுகின்றனர்.
இறுதியாகக் கூமாப்பட்டியில் இருவரும் தங்கியிருப்பதாகச் செய்தி கிடைக்கவே, ஐவரும் கூமாப்பட்டி வந்தடைகின்றனர். முத்தையாவின் வீட்டிற்குள் ஐவரும் செல்ல இயலாத நிலையில் ஒவ்வொருவராகச் செல்லவேண்டும் என்ற முடிவின்படி, முதலில் மூத்த அண்ணன் அரிவாளுடன் வீட்டிற்குள்ளே செல்கின்றான். குடிசைக்குள் முத்தையாவும் தன் தங்கையும் அயர்ந்து  தூங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அரிவாளால் தங்கையை வெட்டிக் கொலை செய்து விடுகின்றான்.
கண்விழித்த முத்தையாவிற்குத் தன் மனைவி வெட்டப்பட்டதைப் பார்த்ததும், தன் அரிவாளால் அவனை வெட்டிச் சாய்த்து விடுகின்றான். பின் ஒவ்வொருவராகக் குடிசைக்குள் வர நான்கு நபர்களையும், முத்தையா வெட்டி வீழ்த்துகின்றான். ஐந்தாவதாக வந்தவன்  திடீரென முத்தையாவின் காலை வெட்டிவிடுகின்றான். கால்வெட்டுப்பட்ட நிலையிலும முத்தையா ஐந்தாவது நபரையும் வெட்டிக் கொலை செய்து விடுகின்றான். இறுதியில் அங்கிருந்து  தப்பிச் செல்வது தான் நல்லது என எண்ணி குடிசையை விட்டு வெளியே வர  முயற்சிக்கிறான்.
அவனால் நடக்க முடியாத நிலையில் தடுமாறி சங்கம்முள்ளிற்குள் விழுந்து விடுகின்றான். அம்முள்ளிற்குள்ளிருந்து அவனால் வெளியே வர இயலவில்லை. இந்நிலையில் சிவகாசியிலிருந்து நாடார் இன மக்கள் மாட்டு வண்டியில் கூமாப்பட்டிக்கு வியாபாரத்திற்காக வருகின்றனர்.
வியாபாரம் முடிந்து திரும்புகையில், மாடுகள் கண்மாய் அருகே வந்ததும் நடக்க மறுத்து விடுகின்றன. அனைவரும் வண்டியை விட்டு இறங்கியபொழுது குடிசைக்குள்ளிருந்து முனங்கல் சத்தம் கேட்க அங்குச் சென்று பார்க்கின்றனர்.
இந்நிலைக்கான காரணத்தை; கேட்டபொழுது, முத்தையா தனது முழு வரலாற்றையும் அவர்களிடம் விளக்கியிருக்கிறான். மேலும், தன் காலில் செருப்பு இல்லாததால் தன்னால் தப்பிச் செல்ல இயலவில்லை என்றும் நான் இனி வாழ முடியாது, நான் இறந்துவிட்டால் என்னைத் தெய்வமாக வணங்குகள்; உங்களை காப்பாற்றுகிறேன் எனக் கூறிவிட்டு முத்தையா இறந்துவிடுகின்றான். அங்கு வந்த நாடார்கள் அவ்விடத்திலேயே முத்தையாவைப் புதைத்துவிட்டு, அந்த இடத்திலிருந்து பிடிமண் எடுத்து வேறொரு இடத்திற்கு கொண்டு சென்று வைத்து வழிபட ஆரம்பிக்கின்றனர். நாளடைவில் சிவகாசி நாடார்கள் ஒன்றிணைந்து முத்தையாவை தெய்வமாக வழிபட்டனர்”4 என்பர்.
இன்றும், சிவகாசி நாடார்களின் குலதெய்வமாக முத்தையா விளங்குகின்றார். முத்தையா நாடார் மக்களின் மனதில் அல்லது கனவில் தோன்றி துன்பங்களை நீக்கி விடுவேன் என கூறி மறைந்துவிடுவதாகவும் இன்றும் மக்கள் நம்புகின்றனர்.
ஆலடிக் கருப்பசாமி
               
கேரளப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த மறவர் இன மக்கள் சுமார்  நான்கு தலைமுறைக்கு முன்னர் பஞ்சத்தின் காரணமாக கிழக்கு நோக்கி சென்றனர். சென்றவர்கள் ‘பாப்பனம்’ என்ற கிராமத்தின் வனப்பகுதியை அடைந்தனர். அவர்கள் அங்குள்ள பனைமரத்தின் அடியில் குடிசை அமைத்து வாழத்தொடங்கினர். அவ்வாறு வாழ்ந்து கொண்டிருந்தபோது ஒருநாள், அவ்வனத்தில் அச்சத்தைத் தரக்கூடிய தோற்றத்தில் கையில் அரிவாளுடன் ஒளிவடிவில் ஓர்ஆவி தோன்றி மறைந்தது. பின்னர் அந்த ஆவி அம்மக்களின் கனவில் தோன்றி தன்னை வணங்குமாறு வேண்டியது.  எனவே அவ்வூர்மக்கள் முன்னர் கேரளத்தில் அவர்கள் வாழ்ந்த இடத்திற்குச் சென்று கருப்பசாமி கோயிலிருந்து மண் எடுத்து வந்து பீடம்  அமைத்து வழிபடத்தொடங்கினர். அதைத் தொடர்ந்து அத்தெய்வத்தை அவர்களுடைய வாரிசுகளும் வணங்கத் தொடங்கினர். நாளவிடைவில் அத்தெய்வம் அவர்களின் குலதெய்வம் ஆனது”5 என்று சல்லிமுத்து குறிப்பிடுகின்றார்.

மானூர் கருப்பசாமி
               
சுப்புலாபுரத்திற்குத் தெற்குப் பகுதி பெரிய காடாக இருந்தது. சுமார் பத்து தலைமுறைக்கு முன்னர் ஒருவர் விறகு வெட்டும் பொருட்டு அக்காட்டிற்குச் சென்றார். அங்கே, ‘குரண்டி முள்’ செடியின் அடியில் திடீரென இரத்தம் பீறிட்டு வெளியே வர, அதைக் கண்ட அவர் பயத்தினால் நடுங்கினார். அந்நேரம் ஓர் அருவுருவமான ஆவி நிலையில் ‘கிருஷ்ணன்’ அங்கே தோன்றினார். அவர் தோன்றவே குரண்டி முள் செடியின் வேரானது பாறையாக மாறி வளர்ந்தது.  அதற்குள்ளே கிருஷ்ணன்  மறைந்துவிட்டார். அந்தப் பாறையானது தொடர்ந்து  வளர்ந்து கொண்டே இருந்தது.  அந்தப் பாறை வளர வளர மக்கள் பயபக்தியுடன் அப்பாறையை வழிபடத் தொடங்கினர். இது நாளடைவில் கிருஷ்ணன் கோயிலாக மாறியது.
               
மேலும், அவ்வனத்திற்கு அருகே தெற்காக மானூர் என்ற ஊர் இருந்ததாகக் கருதப்படுகிறது. அவ்வூர்க்குக் கிழக்கில் வாழ்ந்தவர்கள் மறவர்கள். கிழக்கில் வரக்கூடிய மக்களைக் கீகாட்டுக்காரர்கள் என்பர். இவர்கள் பல இனத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். அவர்கள், முத்தையா என்ற ஆவியை பச்சைக் குடத்தில் இட்டு மானூர் வனப்பகுதியில் கொண்டுவர, ஆவியானது திடீரென  குடத்தை வெடிக்கச் செய்து; அவ்வனத்தினுள் சென்று அலைந்து திரிந்தது. இது கிருஷ்ணன் இருக்கும் கோயில் எல்லையில் நுழைந்த போது, கிருஷ்ணன் அதனைத் துன்பம் செய்யவிடாமல் மக்களைக் காக்க வேண்டுமென்ற எண்ணத்தில் அதனைத் தனக்கு நேரே உள்ள எல்லையில் இருந்துக்கொள் என்று கட்டளை இடுகின்றார். மீண்டும், உன்னை வழிபட நினைப்பவர்களுக்கு நீ அவர்கள் குலத்தைக் காத்துவர வேண்டும் என்றும் கட்டளை இட்டார். எனவே, மக்கள் முத்தையாவிற்கு மானூர் வனத்தில் பீடம் அமைத்து வழிபடத் தொடங்குகின்றனர்”6 என்று சுப்பையா சுட்டுகின்றார். பின்னர் அத்தெய்வத்தை வழிபட்ட  மக்களுக்கு கல தெய்வமாகவும்  காவல் தெய்வமாகவும்  முத்தையா காணப்படுகின்றார். நாளடைவில் கருப்பன் முன்னோடியாக அமைகின்றார்.

குருசாமி
சுமார் ஏழு தலைமுறைக்கு முன்னர் கோட்டையூர் என்ற கிராமத்தின் அருகே குளக்கரை ஒன்று இருந்தது. அக்குளத்தின் மேல்பகுதியில்’குரு’ என்றழைக்கப்படும் தவயோகி ஒருவர் வாழ்ந்து வந்தார். குருவின் சீடராகக் காசிக்கார செட்டியார் இனத்தைச் சார்ந்த சடைச்சாமி என்பவர் இருந்தார். இவர் குருவின் சொற்படி தன் வாழ்க்கையை  அமைத்துக் கொண்டார். ‘கருவுறா சித்தரின் மறுபிறவியே குரு’  என்று அனைவரும் நம்புகின்றனர். குருவை முதன்மை ஸ்தானத்தில் வைத்துச் செட்டியாரும் மற்றவர்களும் வழிபட்டனர்.
குருவின் மறைவிற்குப்பின் சடைச்சாமி குருவின் பூசைகளைச் செய்து முடித்த பின்னர் ஆசி வழங்கும்போது ‘ குருசாமியே காப்பார்’  என்று கூறுவது வழக்கம். முதுமையடைந்த சடைச்சாமி தன் சகோதரர்களிடம் குருவின் சன்னிதானத்தில் உள்ள ஒளி வடிவினை வணங்குமாறு வேண்டினார். குருவே தம் குலத்தைக் காப்பார் என்றும், சடைச்சாமி கூறுகின்றார். இதைத் தொடர்ந்து மக்களும் தம்  குலத்தைக் காப்பார் என நம்புகின்றனர். இதன் நிலையின் போது செட்டியார் மக்கள் குருசாமி என்ற பெயரில் விளக்கு கம்பத்தை அமைத்து பூசை செய்து தங்களது குலதெய்வமாகவும் வழிபட்டு வருகின்றனர்.
அவ்வாறு வழிபட்டு வரும் இடத்தில், “குருவே இரவில் வந்து தவம் செய்து விட்டு மறைந்து விடுகின்றார்”7 என்று சண்முகநாதன் செட்டியார் குறிப்பிடுகின்றார்.

கூடலிங்க அய்யனார்
பண்டைக்காலத்தில் அர்ச்சுனா நதியும் சரஸ்வதி நதியும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது வழக்கம். இவ் இரு நதிகளும் சதுரகிரி மலையிலிருந்து உற்பத்தியாகின்றன. அர்ச்சுனா நதி, சரஸ்வதி நதி ஆகிய இரண்டு  நதிகளும் காளையார்குறிச்சியின்  தென்மேற்காக ஒன்று சேர்கின்றன.
 
               காளையார்குறிச்சி மக்கள் வெளியூர்களுக்குச் செல்ல வேண்டுமானால் இரு நதிகளைக் கடந்தே செல்ல வேண்டும். இருநதி கூடும் இடத்தில்ஆலமரம் இருந்தது. பயணம் செய்யும் மக்கள் ஆலமரத்தின் நிழலில் தங்கிச் செல்வது வழக்கம். இம்மரத்தின் வேர்கள் பாதையில்  படர்ந்து காணப்பட்டன. இவ்வூர் மக்கள் இந்த வழியேதான் சிவகாசிக்கு பால்கொண்டு செல்வர். அவ்வாறு  செல்லும்போது, மக்கள் இந்த ஆலவிழுதினைத்  தாண்டியே செல்லவேண்டும். அவ்வாறு அவர்கள் தாண்டும் போது விழுந்தாலும் பால் கீழே சிந்துவது இல்லை என்பது நம்பிக்கை. ஆனால் அந்த ஆல விழுதினை ஒருவர் வெட்டியெடுக்க ‘ரத்த கசிவு’ ஏற்பட்டுள்ளது. எனவே, அச்சமுற்ற மக்கள் அவ்விடத்தை வழிபடத் தொடங்கினர் என்கின்றனர். அந்த இடத்தில் லிங்கம் சுயம்பாக வளர்ந்தது என மக்கள் நம்புகின்றனர். நதியின் கரையில் அய்யனார் இருக்கின்றார். இவர் காவல் தெய்வமாக காட்சியளிக்கின்றார். ஆதலால் அந்த இடத்தில் கூடலிங்க அய்யனார் அல்லது கூடமுடைய அய்யனார் என்றும் அழைக்கப்படுகின்றது.
               
முத்தையா என்பவர் பல ஆண்டுகளுக்கு முன்னர், சேத்தூர் அரண்மனையில் செல்லப்பிள்ளையாக விளங்கினார். இவர் சேத்தூர் ராணி மீது மோகம் கொள்ளவே  ராஜா தன்னுடைய படையினர்  மூலமாக முத்தையாவைப் பிடித்து, சதுரகிரி மலைக்குக் கொண்டு சென்றதுடன் அங்கேயே அவரைச்சுட்டுக் கொல்லவும் செய்கின்றார்.
அதைத் தொடர்ந்து முத்தையா, ஆவியாக வந்து இராணியை இரவு நேரங்களில்  மலைக்கு அழைத்து செல்வது வழக்கம். பொழுது விடியும் வேளையில் திரும்ப அரண்மனையில் கொண்டு விடுவதும் வழக்கம். இதனால் கவலையடைந்த ராஜா, யார் இந்த ஆவியைப் பிடித்துப் போவார்களோ அவர்களுக்கு முந்நூறு  பொன் பரிசாகத் தரப்படும் என்று அறிவிக்கின்றார்.
வியாபாரத்திற்காகச் சேத்தூருக்குச் சென்றிருந்த முத்துக் கருப்பன் செட்டியார், ராஜாவின் அறிவிப்பைக் கேள்விப்பட்டு, மன்னரிடம் சென்று முத்தையாவின் ஆவியை தான் கூட்டிச் செல்கின்றேன் என்றார். பின்னர், செட்டியார் சேத்தூரின் மேற்கு எல்லைக்குச் சென்று முத்தையா என்ற ஆவியை அழைத்து ‘முத்தையா என்னுடைய கோயிலில் நடக்கும் கடைசிப் பூசையை உனக்குத் தருகிறேன். நீ என்னுடன் வந்துவிடு’ என்று வேண்ட அதற்கு அந்த ஆவி கட்டுப்பட்டு செட்டியாரின் பின்னால் சென்றது அந்த ஆவியைக் கொண்டு வந்து கூடமுடையார் கோயிலின் வாசலில் முத்துக்கருப்பன்  நிறுத்தினார்.
தொடர்ந்து மன்னர் அறிவித்த முந்நூறு பொன்னை வாங்க சேத்தூர் அரண்மனைக்குச்  சென்றார். தான் அறிவித்த படியே செட்டியார்ககு முந்நூறு பொன்னைக் கொடுத்தளிக்கின்றார். ராஜா,  செட்டியார் தம்மூர்க்குச் செல்லும் வழியிலேயே  அதைத் தட்டிப் பறிக்க ஆட்களையும்  அனுப்பி வைத்தார். மந்திர வித்தைகளை முறையாகக் கற்றிருந்த செட்டியார், தன்னை வழிமறித்த ராஜாவின் ஆட்களிடம் ‘உங்களில் ஐந்து பேர் இங்கு இருக்கும் செடிகொடிகளைப் பறித்து போட்டப்படி இருங்கள், ஒருவன் மட்டும் ராஜாவிடம் சென்று இந்தச் சேதியைக் கூறுங்கள் என்று சொல்லி அவர்களை  தன் வயப்படுத்தினார். ராஜாவின்  ஆட்களும் செட்டியார்  கூறியபடியே செய்தனர்.
தகவலறிந்த ராஜா குதிரையில் விரைந்து வந்து செட்டியாரின் காலில் விழுந்த தன்னை மன்னித்து அருளுமாறு வேண்டினார். அதைத் தொடர்ந்து இந்நாள் வரையிலும், சிவராத்திரி தினத்தன்று கூடமுடையார் கோயிலில், சேத்தூர் அரண்மனை பெயரில்தான் முதல் பூசை நடைபெறுகின்றது. அது மட்டுமல்லாமல் செட்டியார் கொடுத்த வாக்குப்படியே இன்றும் சேத்தூர் முத்தையாவுக்குத் தான் கடைசி பூசை நடக்கினற்து”8 எனக் குறிப்பிடுகின்றார். இக்கோயில், சேத்தூர் அரண்மனை குடும்பத்தார்க்கு மட்டுமின்றி நாட்டார் மக்களுக்கும் குலதெய்வமாக விளங்குகின்றது.

சுடலை மாடன்
ஞானப் பழத்தைத் தன் தமையனான ஐங்கரனுக்கு அம்மையப்பர் அளித்ததால், கோபம் கொண்ட முருகப்பெருமான், அம்மையப்பனைப் பிரிந்து குன்றின் மீதேறி நின்றார். ஐங்கரனான விநாயகர் தன் தாயைப் போலவே, தனக்கும் பெண் வேண்டும் என்று ஊர் ஊராய்ச் சென்று குளத்தங்கரையில் காத்துக்கிடந்தார். இதனால் உமையவளுக்குப் புத்திரசோகம் ஏற்பட்டது.  உடனே  அவள் தன் பதியான சிவனாரிடம் தனக்கு இன்னொரு பிள்ளை வேண்டும் என்று வேண்டினாள் அவளது வேண்டுதலுக்குச் செவி சாய்த்த ஈசனார்; உமையே!  கயிலையில் உள்ள முப்பத்திரண்டாம் மரகத்தூணில் ஒரு  தூண்டா மணிவிளக்கு உள்ளது.  அம்மணி விளக்கில் தீபம் ஏற்றி, நீ தவமியற்றினால் உன் வேண்டுதல் பலிக்கும் என்றருளினார்.
அதன்படி, சிவனை மனத்தில் துதித்து,  தூண்டா மணிவிளக்கை ஏற்றி உமையவள் கடுந்தவமியற்றினாள். ஒரு கட்டத்தில் விளக்கின் பிரகாசம் குறைந்தது. அப்போது சிவன் வந்து விளக்கின் திரியைத்  தூண்டினார்.
அவ்விளக்கிலிருந்து மூன்று சுடர்கள் அன்னை உமையவளின்  மடியில் விழுந்தன. கண் விழித்த  பார்வதி ஒழுங்கற்ற முண்டமாக உருவமற்ற குழந்தை ஒன்று கிடப்பதைக் கண்டு வருந்தினாள். அதற்குரிய நல்ல உருவத்தை தந்தருளுமாறு வேண்டினாள். அவரும் அவ்வாறே செய்து, அதற்கு உயிரையும் அளித்தருளினார். விளக்கின் சுடரிலிருந்து உருவானதால் அக்குழந்தைக்குச் ‘சுடலை’ என்ற பெயரிட்டு பின்னர் அன்னை அக்குழந்தையை வளர்த்து வந்தாள்.
மூன்று வயதான சுடலைக்கு அடக்க இயலாத பசியுண்டாகி அலைந்தான். தாய்ப்பாலால் பசி அடங்காத சுடலை, சாமத்தில் பூலோகத்திற்கு வந்து தில்லைவனத்துச் சுடுகாட்டில் எரியும் பிணங்களைக் கண்டு பசியாறினான். பின் தாயான  உமையவள் அறியாதபடி அவன் தொட்டிலில் படுத்துக் கொள்வான். ஒரு நாள் குழந்தையை அன்னை எடுத்துக் கொஞ்சினாள். அப்போது, குழந்தையின் மீது பிணவாடை வீசவே, தன் ஞான திருஷ்டியால் நடந்தவற்றை உணர்ந்தாள். இதனால் திடுக்கிட்ட அன்னை, சிவபெருமானிடம் நடந்ததைக் கூறி வருந்தினாள்.
அப்போது சிவபெருமான் உமையவளே! நரமாமிசம் உண்ணத் தொடங்கிய சுடலை இனி கயிலையில் இருக்கத் தகுதியற்றவனாவான். அதனால் உடனே அவனைப் பூவுலக்கு அனுப்பிவை என்று கட்டளையிட்டார்.
சிவனாரின் கட்டளைக்கு இணங்கி உமையவள் உயரமான பீடமொன்றில் கலசம் அமைத்து, அதில் சுடலையை அமரவைத்து, உண்பதற்கு  ஒரு கோட்டை அரிசிச் சாதமும், முருங்கைக்காய் சேர்த்து வைத்த குழம்பும் வைத்தாள். கூடவே வழித்துணைக்கு வனப்பேச்சியையும், (சொல்லியனுப்பி) சேர்த்து கண்ணீர் மல்க பூவுலகுக்கு அவனை அனுப்பி வைத்தாள்.
பூவுலகுக்கு வந்த சுடலைக்குத் தாமிரபரணி, கோதாண்ட நதி உள்ளிட்ட ஆறுகள் சங்கமாகும் சீவலப்பேரி கிராமம் பிடித்துப்போக அவர் அங்கு குடி அமர்கின்றார். ஆனால், அவருக்குப் பசி அதிகமாகவே; அவ்வழியே ஆடு மேய்த்து வந்த ‘மாசானம்’ என்ற சிறுவனிடம் அவனது ஆடுகளில் ஒன்றைக்காட்டி பாலைக்கறந்து தருமாறு வேண்டுகின்றார். அதைக் கேட்டு சிரித்த மாசானம், ஐயா! அது குட்டி போடாத மலட்டுஆடு. அதில் எப்படி நான் பாலைக் கறக்க முடியும்? என்ற வினாவினை எழுப்புகின்றான்.
               
சிறுவனின் பதிலைக்கேட்டுச் சிரித்த சுடலை, சிறுவனே நீ அந்த ஆட்டின் மடியில் உன் கைகளை வைத்துப்பாலைக் கறந்துபார் என்றார். அதன்படியே சிறுவன் பனை ஓலை ஒன்றை மடித்துப் பிடித்தவாறு அந்த ஆட்டின் மடியில் கை வைத்ததும், ஆட்டின் மடியிலிருந்து பால் சுரந்து வழிந்தோடியது. அதனைக் கண்ட சிறுவன் பிரமித்து போனான். அவன் கையிலிருந்த பாலை வாங்கிக் குடித்த சுடலை, ஏப்பம் விட்டதுடன். மாசானத்தின் நாக்கை நீட்டக் கூறி அதில் தன் கையால் சக்கரம் ஒன்றையும் வரைந்தார்.
மேலும், அவர் மாசானத்திடம், ‘மாசானமே நீ தினமும் இந்த இடத்தில் எனக்காக இருவேளை பூசை செய்ய வேண்டும்; நீ எங்கிருந்து அழைத்தாலும் உன் கஷ்டங்களைத் தீர்க்க நான் விரைந்து வருவேன் என்று கூறியருளி மறைந்தார். சுடலையின் சக்தியை உணர்ந்த மாசானம், அதன்பின் சிவகிரிக்குச் சென்றார். அங்குத் தவம் பெற்று வந்த ஞானிகளிடம் சாஸ்திரங்களைக் கற்றதுடன் பல ஆண்டுகளுக்குப் பின், தாடியும் மீசையுமாக சந்நியாசி கோலம் கொண்டு சீவலப்பேரிக்குத் திரும்பிவந்தார்.
இதற்குள், சிறுவன் மாசானத்திற்குச் சுடலை காட்சியளித்த இடத்தில் சுயம்பாக லிங்கம் ஒன்று முளைத்தது. அதனைக் கண்ட மக்கள் பயபக்தியுடன் அதனை வழிபட்டு வரலாயினர். என்பது புராணச் செய்தி. இது சம்மந்தமான நாட்டார் மக்களின் வாய்மொழிக்கதை பின்வருமாறு,
சுமார் 200 வருடங்களுக்கு முன்பு குடும்பர் இனத்தைச் சார்ந்தவர்கள் பஞ்சம் காரணமாக பிழைப்புத்தேடி மேற்கு நோக்கி செல்ல எண்ணினர். எனவே,  தங்களது காவல் தெய்வமாக விளங்கிய சுடலைமாடனிடம் தங்கள் எண்ணத்தைக் கூறி வேண்டுகின்றனர். அதற்குச் சுடலைமாடன் நீங்கள் முன்பு செல்லுங்கள், நான் பின்தொடர்ந்து  வருகிறேன் என்றது.  அவ்வாறே,  அவர்கள் அழகிய பனஞ்சோலையைச் சென்றடைந்து அங்குத்தங்கி ஓய்வெடுத்தனர். பின்னர் மறுநாள் அவர்கள் கீழப்பொட்டல்பட்டி என்ற ஊரை வந்தடைந்தனர்.
பயணத்தின் போது தங்களைக் காத்த தெய்வத்தை வணங்க எண்ணியபோது, பனை மரங்கள் நிறைந்திருந்த இடுகாட்டையே தேர்வு செய்தனர். மேலும், அவர்கள், சுடலை மாடனை வழிபட எண்ணியபோது சுடலை மாடன், நான் எனக்கு பிடித்த பனை மரத்தில்தான் இருப்பேன் என்று ஒருவித அசரீய ஒலியால் அவர்களுக்குத் தெரிவிக்க அவர்கள் பனை மரத்தின் அடியில் சுத்தம் செய்து வழிபடத்தொடங்கினர் எனக் குறிப்பிடுகின்றார்”9 பால்ராஜ் என்பவர். “காவல் தெய்வமாக வழிபடப்படும்  சுடலைமாடன் கோயில்கள் சுடுகாட்டிற்கு அருகிலே அமைந்திருக்கும்”10 என்ற முத்தையாவின் கருத்து இதனுடன் ஒப்பு நோக்கத்தக்கது.

இராமலிங்க சௌடாம்பிகா
தேவல முனிவரின் வம்ச வழியான தேவதாசமைய்யன் வேண்டுதலுக்கு இணங்கி, இறைவன் ஊருக்கு வெளியே ஓர் இடத்தைப் புனிதப்படுத்தினால் அங்குச் சௌடாம்பிகை தோன்றுவாள் என்று என்றும், பின்னர் அம்மனைக் கோயிலுக்கு  அழைத்துச் செல்லுமாறும் உரைக்கின்றார்.
               
அதற்கு இணங்கி தேவதாசமைய்யன் ‘ஆமோத நகரம்’ என்னுமிடத்தில் ஒரு கோயிலைக் கட்டி முடிக்கின்றார். அங்கு அம்மன் சௌடாம்பிகையும் அருட்காட்சியளிக்கின்றார். தொடர்ந்து சௌடாம்பிகை, தேவாங்க குல மக்கள் அனைவரையும் முன்னே செல்லுமாறும், தான் அவர்களைப் பின் தொடர்ந்து வருவதாகவும்  கூறுகின்றான். ஆனால், முன்னே செல்பவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் திரும்பிப் பார்க்கலாகாது என்றும், அப்படித் திரும்பிப் பார்த்துவிட்டால் தான் அவ்விடத்திலேயே நிலைகொண்டு விடுவதாகவும் அம்மன் தெரிவிக்கின்றது.
               
அதனை ஏற்றுக் கொண்ட மக்கள் முன்னே செல்ல, அன்னை சௌடாம்பிகை பின் தொடர்கின்றாள். அம்மனின் பாதச்சிலம்பின் ஒலியை கேட்டவண்ணமே மக்கள் பின் நடக்கின்றனர். அவர்கள், அம்மன் தங்களைப் பின் தொடர்ந்து வருவதாக எண்ணி முன்னே சென்று கொண்டிருக்கின்றனர். அவ்வாறு செல்லும் போது ஓர்  ஆற்றங்கரையை சென்றடைகின்றனர்.
               
அங்கு ஆற்றுமணலில் அம்மனின் பாதங்கள் பதிந்ததால், சிலம்பொலியின் ஓசை கேட்காமல் ஆகின்றது. எனவே, அம்மன் தங்களைத் தொடர்ந்து வரவில்லையோ என்று ஐயுற்ற மக்கள் திரும்பிப் பார்க்க, அம்மன் அங்கேயே, ஓர் ஆவாரஞ்செடிக்கு அருகில் நிலைகொண்டு விடுகின்றாள். இதைக் கண்ட தேவாங்க குல மக்கள் வேண்டியும், மன்றாடியும்,  அம்மன் அங்கிருந்து எழவில்லை. அம்மன் நிலைகொண்ட இடம் ‘நந்தவரம்’ என்னும் ஊராகும்.
               
வழிபாட்டின்போது மக்கள் ஆவாரஞ்செடிக்கு அருகில் திருமஞ்சன குடத்தில் ‘பாகு’ உடைவாளை வைத்துக், காப்புக் கட்டி, அம்மனை அழைத்து வழிபட்டனர். ஆனால் பாகு உள்ள திருமஞ்சனக் குடத்தை ஒரே நாளில் ஆமோத நகரக் கோயிலுக்குக் கொண்டு செல்லவேண்டும் என்பது அம்மனின் கட்டளை. மேலும், அம்மன் பின்வருமாறு உரைக்கவும் செய்கின்றாள்.
               
நான் உங்களது முன்னோனும் குலமுதல்வனுமாகிய தேவலனுக்கு அளித்த கத்தி இது. இதனை பகைவர் மீது பயன்படுத்தினால் அவர்களை அழிக்கும். ஆனால், தனக்குத்தானே பயன்படுத்தினால் எவ்வித துன்பமும் விளைவிக்காது. திருமஞ்சனக் குடத்தை எடுத்து கோயிலுக்குச் செல்கையிலும், உங்கள் கைகளில் உள்ள கத்திகளை உங்கள் மீது பயன்படுத்தினாலும் அதனால் உங்களுக்கு எந்தவித கெடுதலும் வராது. காரணம்  நான்தான் உங்களோடு இருந்து உங்கள் எல்லோரையும் பாதுகாத்து வருகிறேன் என்று அம்மன் அருளியதாக மக்கள் நம்புகின்றனர்.
               
இதன் அடிப்படையில் தேவாங்க குலமக்கள் நல்லநாளில் குறிப்பிட்ட இடத்திலிருந்து முறைப்படித் திருமஞ்சனக் குடத்தில் பாகு வைத்து ஆவாரஞ்செடிக்கருகில் காப்புக்கட்டி, கலசம் அலங்கரித்து, அம்மனைக் கோயிலுக்கு அழைத்து வருகின்றனர். கூடவே, அம்மன் புகழ்மாலை, மற்றும் தாண்டகப் பாடல்களையும் பாடுகின்றனர். இவ்வாறு பாடி வணங்கும்போது இவர்கள் தங்களிடமுள்ள  கத்திகளால் மார்பிலும் தோளிலும் அலகு போட்டுக் கொள்கின்றனர். இவர்களது உடலிருந்து ரத்தம் வழிந்தாலும் சிறிதும் வேதனை ஏற்படுவதில்லை என இவர்கள் நம்புகின்றனர். இதற்குக்காரணம், அத்துன்பத்தையெல்லாம் அம்மனே தாங்கிக் கொள்கின்றாள் என மக்கள் நம்புவதே காரணம்”11 என்று வீரராஜன் சுட்டுகின்றார். இவ்வழிபாடு  ஆவி வழிபாட்டிற்கு  இட்டுச் செல்கின்றது.
பொங்கும்மாரியம்மன்
               
சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு நாடார் இனத்தைச் சார்ந்த சூரியன், சின்னு என்பவர்கள், பொதி மாட்டு வண்டியில் கருப்பட்டியைப் பொதியாக  ஏற்றிக் கிராமம் கிராமமாகச் சென்று விற்பனை செய்து வந்தனர். அவ்வாறு விற்றுவர ஒரு நாள், சில நாட்களுக்குத் தேவையான கட்டுச்சாதத்தையும் கருப்பட்டியையும்  வண்டியில் ஏற்றி வியாபாரதிற்குச்  சென்றனர்.
               
அவ்வாறு செல்லும்போது அவர்கள் இரவுக் காலங்களில் கிராமங்களில் தங்கி  வியாபாரத்தை நடத்தினர். ஒரு நாள் வழக்கம் போல்; சூரியனும், சின்னனும் வியாபாரம் செய்ய இலுப்பை ஊரிலிருந்து புறப்பட்டு வியாபாரம் செய்து கொண்டே விருதுநகரை கடந்து விட்டனர். கொண்டு வந்த கருப்பட்டியும் சரியாக அன்று விற்பனை ஆகவில்லை. அதனால் கவலையடைந்த அவர்கள் தாங்கள் எங்கே செல்கின்றோம் என்ற ஞாபகமில்லாமல் பயணம் செய்து கொண்டே இருந்தனர். இரவான போது மழை வந்து விட்டது. மாடுகளுக்கு கண்கள் தெரியவில்லை. இந்த நிலையில் சின்னு நாடார்க்குப் பசி ஏற்பட்டது அவர் சூரிய நாடாரிடம் பசிக்கிறது. சாப்பிடுவோமா! என்று கேட்கிறார். சூரிய நாடார்க்குத் தர்ம சங்கடமான நிலை, என்ன செய்வதென்று அறியாமல் தவிக்கும் வேளையில் சற்று தொலைவில் கண்ணுக்கெட்டிய  தூரத்தில், ஒரு சிறிய  வெளிச்சம் தென்படுகிறது. முதலில் மின்மினிப் பூச்சியாக இருக்கலாம் என நினைத்த சூரிய நாடார்க்குச் சந்தேகம் தெளிகின்றது. சிறிது தொலைவில் ஒரு வீட்டைக் காண்கின்றார்.  இரவில் அங்குத் தங்கி உணவருந்தி, பின் காலையில் செல்லாம் என முடிவு செய்கின்றார். உடனே இருவரும் அங்குச் செல்வோம்  என முடிவு செய்கின்றனர். நல்ல அதிர்ஷ்டம் என்று எண்ணிக் கொண்டு மாட்டையும் அழைத்துக் கொண்டு  அந்த வெளிச்சம் தெரிந்த வீட்டை அடைகின்றனர்.
               
அந்த வீட்டில் நடுத்தர வயதுடைய ஓர் அம்மையார் கையில் விளக்கேந்திக் நிற்பதனைக் காண்கின்றனர். உடனே!  சூரிய நாடார் ‘அம்மா தாயே, நாங்கள் வெளியூரிலிருந்து வருகிறோம். இருட்டானதால் சரியான பாதையைத் தவறவிட்டோம், மழை வேறு பெய்து கொண்டிருக்கிறது. எனவே, என்ன செய்வதென்று அறியாமல் தவிக்கின்றோம். இன்று இரவு மட்டும் உங்கள் வீட்டின் தாழ்வாரத்தில் தங்கி உணவு அருந்திச் செல்ல வசதி செய்து தர  வேண்டும் என வேண்டி நிற்கின்றனர். அதற்கு அம்மையாரும் ஒத்துக் கொள்கின்றார்.
               
மேலும்,  அவர்கள்  ஓட்டி வந்த மாடுகளை அந்த வீட்டிலே வேலைக்காரர்களான முனியனிடமும், முருகனிடமும் ஒரு கல்தூணில் மாடுகளை கட்டிப்போடுமாறு பணிக்கின்றார். பின், உணவருந்துகின்றனர். தொடர்ந்து வீட்டுத் தாழ்வாரத்தில் தூங்குகின்றனர். தூக்கத்திலிருந்து எழுந்தபோது கண்ட காட்சி அவர்களை ஆச்சரியத்திற்குள் ஆக்கியது.
               
அவர்கள் படுத்திருந்த இடம் ஒரு கோயிலாக காட்சி அளித்தது. அதன் தாழ்வாரத்தில்தான் அவர்கள் இரவு உண்டு உறங்கியது. அவர்களுக்குத்  தண்ணீர் தந்த தாய்தான் அங்கு அம்மனாக கையில் தீபம் ஏந்தி நின்றது. இந்தக் காட்சியைக் கண்ட சூரிய நாடார்க்கு உள்ளம் நடுங்கியது. அவர்தன் தம்பி சின்னு நாடாரை எழுப்பினார். அவரும் தடுமாற்றம் அடைந்தார். பின் இருவரும் ஒருநிலைப்பட்டு தங்கள் மாடுகள் இரண்டினையும் கல்தூணிலே கட்டப்பட்டிருப்பதைக் கண்டு நிம்மதியடைந்தனர். அந்த மாடுகள் கட்டப்பட்டிருந்த கல்தூண்கள் இரண்டும் முருகன், முனியாண்டி என்று வணங்கும் தெய்வங்கள் என்று கண்டனர்.
               
நிலைமையை ஒருவாறு உணர்ந்த அவர்கள் அந்தத் தெய்வத்தை வணங்கி தரையில் மண் எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டு, பழையபடி மாட்டையும் ஓட்டிக்கொண்டு பக்கத்திலிருந்த சிறிய கிராமமாகிய எல்லிங்க நாயக்கன்பட்டியை வந்தடைந்தனர். முதல் நாள் நடந்த விபரங்களை அங்கு உள்ளோரிடம் கூறினார்கள். விபரத்தைக் கேட்ட அந்த ஊர் மக்கள் அந்தத் தாய் அன்னை காமாட்சிதான் என்று உறுதியாகக் கூறினார்கள்.
               
விபரம் அறிந்த இருவரும் மனதார போற்றி வணங்கினர். இரவில்  திசை தெரியாமல் தவித்த எங்களுக்குத் திசைகாட்டி தங்க இருப்பிடமும் தந்து, உணவும் தண்ணீரும் தந்து காப்பாற்றிய அந்தத் தாயிடம் எங்களையும் எங்கள் வம்சத்தினரையும் நிலம் உள்ளவரை, நீர் உள்ளவரை உன் நினைவு நீங்காதிருக்க அருள் செய்ய வேண்டும் என வேண்டினர்”12 என்று சாமி குறிப்பிடுகின்றார். இந்தக் கோயில் காமாட்சி அம்மன் கோயில் என்றும் பொங்கும் மாரியம்மன் கோயில் பெயரிட்டு அழைக்கப்படுகின்றது.

கப்பல் உடைத்த முனியாண்டி
               
சுமார் நூற்றைம்பது வருடங்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து கடல் வணிகத்தின் பொருட்டு அகமுடையார் இனத்தைச் சார்ந்த ஒருவர் இலங்கைச் சென்று அங்கு வாழ்ந்து வந்தார். அவர் வாழ்ந்த இடத்திலுள்ள கிராம மக்கள் முனியாண்டி என்ற தெய்வத்தைக் கோயில்கட்டி மக்கள் வழிபட்டு வந்தனர். நாளடைவில் அக்கோயிலில் வழிபாடு முடங்கியது. எனவே, மக்கள் அத்தெய்வத்தை மறக்கலாயினர். ஆனால் அகமுடையான் மட்டும் அத்தெய்வத்தை வழிபட்டு வந்தான்.
               
நாளடைவில் அக்கிராமம் அழிவுக்குட்பட்டபோது, அங்குள்ள மக்கள் வெளியேறி வேறு ஊர்களுக்குச் சென்றனர். அகமுடையானும் தனது சொந்த நாடான இந்தியாவுக்குத் திரும்பும் போது, முனியாண்டித் தெய்வம் அவர் முன் உருவமற்றநிலையில் தோன்றி தன்னையும அழைத்துப் போகும்படி வேண்டியது. அதற்கு அவன் சம்மதித்து முனியாண்டித் தெய்வத்தின் சிலையைப் பெட்டியில் வைத்து கப்பலில் பயணம் ஆனான்.
               
கடலில் பயணம் செய்யும் போது கூட, பிரிட்டிஷ் மாலுமியரும் இருந்தனர். அவர்கள் அகமுடையானிடம் இருந்த பெட்டியைக் கண்டு அதனைக் கொடுக்கும்படி அவனிடம் வேண்டினர். அவன் தரமறுக்கவே அவர்கள் அதனைப் பறிமுதல் செய்தனர்.
அகமுடையான் என்ன செய்வதென்று அறியாமல் தவிக்கும்போது முனியன் தெய்வம் கப்பலின் அடிப்பகுதியில் துளையிட, கடல்நீர்கப்பலின் உள்ளே நிரம்பி, கப்பல் மூழ்கத் தொடங்கியது. மாலுமிகள் அறியாத வண்ணம் முனியன் தெய்வம் கப்பலை இரண்டாக உடைத்து அகமுடையானுடன் கடலின் கரையை வந்தடைந்தது. அகமுடையான், தனது சொந்த ஊரான திருச்சுழி அருகே வந்து முனியனுக்குக் கோயில்கட்டி வழிபடத்தொடங்கினான்.அவன் முனியனை வழிபட்டு வர அவனுடைய குடும்பம் பல்கிப் பெருகியது. நாளடைவில் ஓர் குழுவினராக முனியனைத் தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்”13 என்கிறார் ஜீவானந்தம்.

தொகுப்புரை
               
தெய்வத்தின் கதைகள் எல்லாம் வெவ்வேறு  காலச் சூழலினால் தெய்வநிலைக்கு ஏற்றப்பட்டதைக் காணலாம்.  இத்தெய்வங்கள்  இடத்திற்கு இடம், காலத்திற்குக் காலம் ஏற்ப தெய்வநிலை எய்திய காரணத்தை அறியமுடிகின்றது.
               
இத்தெய்வங்கள், முதலில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய பின்னர் சாந்தநிலைக்கு மாறியவை. இந்நிலையே தெய்வ வழிபாட்டிற்கு வழிகோலியது எனலாம். இத்தெய்வ வழிபாடு முதலில் மனதில் சிந்தனை ஏற்படுத்திய உருவமற்ற வழிபாடாகவே காணப்பட்டன. நாளடைவில் அவற்றை ஆவியின் தோற்றம் என்று மக்கள் நம்பினர்.
               
இத்தொன்மைக் கதைகள் வாயிலாக சமயத்தை நிறுவனம் செய்யும் மனிதர்களின் செயற்பாடுகளை அறிந்து கொள்ள முடிகின்றது. மேலும், செயற்பாடானது வழிபாட்டு நோக்கில் எவ்வாறு பிரிந்து செல்கிறது என்பதனையும் அறிந்து கொள்ள முடிகின்றது.
               
ஒவ்வொரு தெய்வத்தோற்றமும் எவ்வாறு மக்களிடையே நிலவி வருகிறது என்பதையும் அறியமுடிகிறது. நாட்டார் தெய்வங்களின்  இத்தோற்றம், உலக சமயங்களின் தோற்றத்திற்கு காரணமாக அமைந்தது.  கடவுள்களை  உருவங்களையும்  இச்சமயங்களே நிர்ணயம் செய்வதாக அமைந்துள்ளன.
 
               சமயங்களை எல்லாம் கிராம தெய்வங்கள்தான் தோற்றுவிக்கின்றன எனலாம்.  ஒவ்வொரு தெய்வ தோற்றத்திற்கும் காரணம் தெய்வங்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்வதாகவும் காணமுடிகின்றது. ஆசைகள் மனிதர்களுக்கு மனிதர் மாறுபடுவதுபோன்று, தெய்வங்களுக்கும் ஆசைகள் மாறுபடுவதை இந்த வாய்மொழிக் கதைகள் மூலம் அறியமுடிகின்றது.
தெய்வங்களின் ஆசைகளைப் பின்வருமாறு பகுக்கலாம்.

1)             நன்மை மட்டும்  செய்தல்

2)            நன்மையும் தீமையும் செய்தல்

3)            காலம் கருதி செய்தல்
      மேற்கூறிய மூன்று நிலைகளும் தெய்வங்கள் மனிதர்களுக்கு நன்மையே அல்லது தீமையோ செய்வதன் அடிப்படையில் உருவானதாகக் காணமுடிகின்றது.
 இவற்றின் மூலம் வழிபாட்டுநிலைகளும் அமைந்துவிடுகின்றன. அம்மூன்று நிலைக்கூறுகளும் நாட்டார் மக்களின் தெய்வங்களிடமும் மட்டுமன்றி உலக சமய தெய்வங்களிடமும் காணப்படுகின்றன.

சான்றெண் விளக்கம்
1.  அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ஆடிப்பெருவிழா அழைப்பிதழ் 13.8.2010.

2.குருவம்மாள், இருக்கன்குடி.

3.மேலது.
4.வெள்ளையம்மாள், அழகாபுரி.

5.கண்ணன், திருச்செந்தூர்.

6.சல்லிமுத்து, புதுக்கோட்டை,

7.சுப்பையா, புதுக்கோட்டை.

8.சண்முகநாதன், கோட்டையூர்.

9.தர்மர், கிருஷ்ணமநாயக்கன்பட்டி.

10.பால்ராஜ், கீழப்பொட்டல்பட்டி.

11.ஓ.முத்தையா, பண்பாட்டு பதிவுகள், ப. 134.

12.வீரராஜன், சங்கரலிங்காபுரம்.

13.எஸ்.பி.சாமி, விருதுநகர்.

14.கே. ஜீவானந்தம், உடையனாம்பட்டி

பார்வை
1.சு. பால்பாண்டி, விருதுநகர் மாவட்டக் குலதெய்வ வழிபாடு, முனைவர் பட்ட ஆய்வேடு-2012, கேரளப் பல்கலைக்கழகம்.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் சு. பால்பாண்டி
உதவிப் பேராசிரியர்
அறிவியல் மற்றும் மானுடவியல் புலம்
எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்,
வடபழனி வளாகம், 
சென்னை – 600026.

 

 

Leave a Reply