யாப்பு இலக்கணம்
செய்யுளுக்குரிய உறுப்புகளைக் கொண்டு செய்யுள் அமைக்கும் இலக்கணத்தை விளக்குவதால் இது யாப்பிலக்கணம் எனப்படும்.
யாப்பின் உறுப்புகள்
ஆறு வகைப்படும். அவை,
1.எழுத்து
2.அசை
3.சீர்
4.தளை
5.அடி
6.தொடை என்பன…
1.எழுத்து:
தமிழ் எழுத்துகளை யாப்பிலக்கண முறையில் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
1.குறில் (க)
2.நெடில் (கா)
3.ஒற்று (க்) என்பனவாம்.
தொல்காப்பியர் எழுத்துகளை குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் என்று மூன்றாகப் பிரிப்பார். நன்னூல் ஆசிரியர் சார்பெழுத்துக்கள் எனப் பத்து வகைகளாகச் சுட்டுகின்றார்.
2.அசை:
குறில்,நெடில்,ஒற்று என்னும் மூவகை எழுத்துகளால் அசைக்கப்படுவது அசை எனப்படும். எழுத்துகள் ஒன்று சேர்ந்து வருவது அசை (சொல்) ஆகும். அசை இரண்டு வகைப்படும்.
1.நேர் அசை
2. நிரை அசை
நேரசை:
1.குறில் தனித்து வருதல் – க
2.குறிலும் ஒற்றும் இணைந்து வருதல் – கல்
3.நெடில் தனித்து வருதல் – பா
4.நெடிலும் ஒற்றும் இணைந்து வருதல் – பால்
நிரையசை:
1.இரண்டு குறில்கள் இணைந்து வருதல் – பல
2.இரண்டு குறில்கலோடு ஒற்றும் இணைந்து வருதல் – பலர்
3.குறிலும் நெடிலும் இணைந்து வருதல் – படா
4.குறிலும் நெடிலும் ஒற்றும் இணைந்து வருதல் -படாம்
குறிப்பு:
1.முதல் எழுத்து நெடில் வந்தால் தனித்துதான் வரும்.
2.ஒற்றுகள் அசையாகாது. ஓன்றுக்கும் மேற்பட்ட ஒற்றுகள் சேர்ந்து வரினும் அவை ஒரு ஒற்றாகவே கருதப்படும். (உம்-ங்ங்ங்ங்)
3.இரண்டு நெடில் எழுத்துக்கள் சேர்ந்து வராது. அப்படி வந்தால் பிரிக்க வேண்டும்.
4.நெடில் எழுத்தை அடுத்து குறில் சேர்ந்து ஓர் அசையாக வராது.
3.சீர்:
செய்யுளில் ஓர் அசை தனியாகவோ, பல அசைகள் சேர்ந்தோ அமைந்து வருவது சீர் எனப்படும். அசைகள் ஒன்று சேர்ந்து வரவது சீர் ஆகும். (சீர்- ஒழுங்கு). சீர் நான்கு வகைப்படும். அவை,
1.ஓரசைச்சீர்
2.ஈரசைச்சீர்
3.மூவசைச்சீர்
4.நாலசைச்சீர்
1.ஓரசைச்சீர்:
அசைச்சீர் என்ற மற்றொரு பெயரும் உண்டு. வெண்பாவின் ஈற்றில் நேரசை அல்லது நிரையசையென தனித்து நின்று சீராய் அமையும். இவை நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்ப்பாட்டைக் கொண்டு முடியும்.
நேர் – நாள்
நிரை – மலர்
நேர் + நேர் = நேர்பு – காசு
நிரை + நேர் = நிரைபு – பிறப்பு
2.ஈரசைச்சீர்:
இயற்சீர், ஆசிரிய உரிச்சீர் என வேறுபெயர்கள் உண்டு. நேர்,நிரை என்னும் அசைகள் இரண்டிரண்டாக இணைந்து வரும் சீர்கள் ஈரசைச்சீர்கள் எனப்படும். வெண்பா, ஆசிரியப்பாவில் வரும். இவை
மாச்சீர் (தேமா,புளிமா),
விளச்சீர் (கூவிளம்,கருவிளம்) என இரண்டு வகைப்படும்.
அசையின் அமைப்பு வாய்ப்பாடு
நேர் +நேர் = தேமா
நிரை+ நேர் = புளிமா
நேர் + நிரை = கூவிளம்
நிரை + நிரை = கருவிளம்
3.மூவசைச்சீர்:
ஈரசைச்சீர்கள் ஒவ்வொன்றின் இறுதியிலும் நேர் என்னும் அசையைத் சேர்த்தால் காய்ச்சீர் நான்கு இடம்பெறும். இதனை வெண்சீர்,வெண்பா உரிச்சீர் என அழைக்கப்படும்.
நேர் +நேர் + நேர் – தேமாங்காய்
நிரை +நேர் +நேர் – புளிமாங்காய்
நேர்+ நிரை +நேர் – கூவிளங்காய்
நிரை +நிரை+ நேர் – கருவிளங்காய்
மேற்கூறிய நான்கும் நேரீற்று மூவசைச்சீர் என்று அழைக்கப்படுகிறது.
ஈரசைச்சீர்கள் ஒவ்வொன்றின் இறுதியிலும் நிரை என்னும் அசையைத் சேர்த்தால் கனிச்சீர் நான்கு இடம்பெறும். இதனை வஞ்சிச்சீர், வஞ்சி உரிச்சீர் என அழைக்கப்படும்.
நேர் +நேர் + நிரை – தேமாங்கனி
நிரை+ நேர்+ நிரை – புளிமாங்கனி
நேர்+ நிரை +நிரை – கூவிளங்கனி
நிரை +நிரை +நிரை – கருவிளங்கனி
மேற்கூறிய நான்கும் நிரையீற்று மூவசைச்சீர் என்று அழைக்கப்படுகிறது. மூவசைச்சீர்களாகிய காய்ச்சீர்கள் நான்கும், கனிச்சீர்கள் நான்கும் சேர்த்து மொத்தம் எட்டு வகைப்படும்.
4.நாலசைச்சீர்:
பொதுச்சீர் என்ற வேறுபெயரும் உண்டு. மூவசைச்சீர் எட்டுடன் நேரசையைச் சேர்க்க வேண்டும். அவை தண்பூ, நறும்பூ எனக் கொண்டு முடியும். இவை எட்டும் பூச்சீர் என்றும், நேரீற்றுப் பொதுச்சீர் எனவும் வழங்கப்பெறும்.
பூச்சீர் எட்டின் அமைப்பு வாய்ப்பாடு
நேர் +நேர் +நேர் +நேர் – தேமாந்தண்பூ
நிரை +நேர் +நிரை +நேர் -புளிமாந்தண்பூ
நேர் +நிரை +நிரை+ நேர் -கூவிளந்தண்பூ
நிரை +நிரை +நிரை +நேர் -கருவிளந்தண்பூ
நேர் +நேர் +நேர் +நேர் -தேமாநறும்பூ
நிரை +நேர் +நிரை+ நேர் -புளிமாநறும்பூ
நேர் +நிரை +நிரை +நேர் -கூவிள நறும்பூ
நிரை +நிரை +நிரை +நேர் -கருவிள நறும்பூ
மூவசைச்சீர் எட்டுடன் நிரையசையைச் சேர்க்க வேண்டும். அவை தண்ணிழல், நறுநிழல் எனக் கொண்டு முடியும். இவை எட்டும் நிழற்சீர், நிரையீற்றுப் பொதுச்சீர் என வழங்கப்பெறும்.
நிழற்சீர் எட்டின் அமைப்பு வாய்ப்பாடு
நேர் +நேர் +நேர் +நிரை -தேமாந்தண்ணிழல்
நிரை +நேர் +நிரை+ நிரை -புளிமாந்தண்ணிழல்
நேர் +நிரை +நிரை +நிரை- கூவிளந்தண்ணிழல்
நிரை +நிரை +நிரை +நிரை -கருவிளந்தண்ணிழல்
நேர்+ நேர் +நேர் +நிரை -தேமாநறுநிழல்
நிரை +நேர் +நிரை+ நிரை -புளிமாநறுநிழல்
நேர் +நிரை +நிரை+ நிரை -கூவிளநறுநிழல்
நிரை +நிரை +நிரை +நிரை -கருவிளநறுநிழல்
இவ் பூச்சீர் எட்டும், நிழற்சீர் எட்டும் ஆகிய பதினாறும் நாலசைச்சீர்களாக கருதப்படும்.
4.தளை:
சீர்கள் ஒன்றோடொன்று கட்டுப்பட்டு நிற்கும் நிலை தளை எனப்படும். சீர்கள் ஒன்றி வருவது தளை ஆகும். (தளை – கட்டு). நின்ற சீரின் ஈற்றசையும், வருஞ்சீரின் முதலசையும் ஒன்றியும் ஒன்றாமலும் வருவது தளை எனப்படும். தளை கூறும்போது முதல்சீர் இறுதி அசையின் வாய்ப்பாட்டோடு அடுத்த சீரின் முதல் அசையைச் சேர்த்துக் கூற வேண்டும்.
தளை ஏழு வகைப்படும். அவை,
1.நேரொன்றாசிரியத்தளை
2.நிரையொன்றாசிரியத் தளை
3.இயற்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை
5.கலித்தளை
6.ஒன்றிய வஞ்சித்தளை
7.ஒன்றா வஞ்சித்தளை
1.நேரொன்றாசிரியத்தளை: ( மா முன் நேர் )
நிலைமொழியின் ஈற்றசை ‘மா’ என முடிந்து வரும்மொழியின் முதலசை ‘நேர்’ என வருமாயின் அது நேரொன்றாசிரியத்தளை எனப்படும்.
(உம்) பரிசில் வென்றான்
பரிசில் = நிரை நேர் = புளிமா , வென்றான் =நேர் நேர் = தேமா
2.நிரையொன்றாசிரியத்தளை: ( விள முன் நிரை )
நிலைமொழியின் ஈற்றசை ‘விளம்’ என முடிந்து வரும்மொழியின் முதலசை ‘நிரை’ என வருமாயின் அது நிரையொன்றாசிரியத்தளை எனப்படும்.
(உம்) மாம்பழம் விழுந்தது
மாம்பழம் – நேர் நிரை – கூவிளம், விழுந்தது – நிரை நிரை – கருவிளம்
3.இயற்சீர் வெண்டளை: (மா முன் நிரை, விள முன் நேர்)
நிலைமொழியின் ஈற்றசை ‘மா’ என முடிந்து வரும்மொழியின் முதலசை ‘நிரை’ என வந்தாலும், நிலைமொழியின் ஈற்றசை ‘விளம்’ என முடிந்து வரும்மொழியின் முதலசை ‘நேர்’ என வந்தாலும் அது இயற்சீர் வெண்டளை எனப்படும்.
(உம்) கன்று குதித்தது – மா முன் நிரை
பணிவுடன் சென்றான் – விள முன் நேர்
4.வெண்சீர் வெண்டளை : (மா முன் நேர்)
நிலைமொழியின் ஈற்றசை ‘காய்’ என முடிந்து வரும்மொழியின் முதலசை ‘நேர்’ என வருமாயின் அது வெண்சீர் வெண்டளை எனப்படும்.
(உம்) கல்விக்கு கம்பன் – மா முன் நேர்
5.கலித்தளை: (மா முன் நிரை)
நிலைமொழியின் ஈற்றசை ‘காய்’ என முடிந்து வரும்மொழியின் முதலசை ‘நிரை’ என வருமாயின் அது கலித்தளை எனப்படும்.
(உம்) வள்ளுவரின் திருக்குறள் – மா முன் நிரை
6.ஒன்றிய வஞ்சித்தளை : ( கனி முன் நிரை)
நிலைமொழியின் ஈற்றசை ‘கனி’ என முடிந்து வரும்மொழியின் முதலசை ‘நிரை’ என வருமாயின் அது ஒன்றிய வஞ்சித்தளை எனப்படும்.
(உம்) செந்தாமரை முகத்துடையாள்
7.ஒன்றா வஞ்சித்தளை : (கனி முன் நேர் )
நிலைமொழியின் ஈற்றசை ‘கனி’ என முடிந்து வரும்மொழியின் முதலசை ‘நேர்’ என வருமாயின் அது ஒன்றா வஞ்சித்தளை எனப்படும்.
(உம்) மாமுனிவரே அகத்தியர்
5.அடி :
சீர்கள் பல தொடர்ந்து வந்து ஓர் அடியாக அமைந்து செய்யுளுக்கு உறுப்பாவது அடி எனப்படும். ஓர் அடியில் சீர்கள் தொடர்ந்து வருவது சீர் அடிகள் ஆகும். அடிகள் ஐந்து வகைப்படும். அவை,
1.குறளடி
2.சிந்தடி
3.அளவடி
4.நெடிலடி
5.கழிநெடிலடி
1.குறலடி :
இரண்டு சீர்களால் ஆன அடி. பல சீர்களால் ஆன இரண்டு அடிகள் ஆனது குறளடிகள் எனப்படும். இவ்வடிகள் வெண்பாவில் பயின்று வரும்.
(உம்) “இனிய உளவாக இன்னாது கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று” – இரண்டு அடிகளால் ஆன குறலடி.
“காயும் கனியும்” – சீர்களால் ஆன குறலடி.
2.சிந்தடி :
மூன்று சீர்களால் ஆன அடி. பல சீர்களால் ஆன மூன்று அடிகள் ஆனது சிந்தடிகள் எனப்படும். வெண்பாவின் ஈற்றடிகள் சிந்தடிகளாக இருக்கும். இவ்வடிகள் ஆசிரியப்பா, வஞ்சிப்பாவிலும் பயின்று வரும்.
(உம்) “அகவன் மகளே! அகவன் மகளே!
மனவுக் கோப்பு அன்ன நல்நெடுங் கூந்தல்
அகவன் மகளே! பாடுக பாட்டே” – மூன்று அடிகளால் ஆன சிந்தடி.
“ஞானத்தின் மாணப் பெரிது” – சீர்களால் ஆன சிந்தடி.
3.அளவடி :
நான்கு சீர்களால் ஆன அடி. பல சீர்களால் ஆன நான்கு அடிகள் ஆனது அளவடிகள் எனப்படும். நேரடி என்றும் அழைக்கப்பெறும். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, மருட்பாவிலும் இடம்பெறும்.
(உம்)அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தன்மை – நான்கு சீர்களால் ஆன அளவடி
“தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி
பன்றியருவா வதன்வடக்கு – நன்றாய
சீதமலாடு புனனாடு செந்தமிழ்சேர்
ஏதமில் பன்னிரு நாட் டெண்” – நான்கு அடிகளால் ஆன அளவடி.
4.நெடிலடி:
ஐந்து சீர்களால் ஆன அடி. பல சீர்களால் ஆன ஐந்து அடிகள் ஆனது நெடிலடிகள் எனப்படும்.
(உம்) மங்குவென் உயிரோடென்றுன் மலரடி சென்னி வைத்தாள் – ஐந்து சீர்களால் ஆன நெடிலடி.
கல்லாக் கோவலர் கோலின் தோண்டிய
ஆன் நீhப் பந்தல் யானை வெளவும்
கல்லதர்க் கவலை செல்லின், மெல் இயல்
புயல் நெடும் கூந்தல் புலம்பும்
வயமான் தோன்றல்! வுல்லாதீமே. (ஐங்.304) – ஐந்து அடிகளால் ஆன நெடிலடி
5.கழிநெடிலடி :
ஐந்துக்கும் மேற்பட்ட சீர்களால் ஆன அடி. பல சீர்களால் ஆனதும் ஐந்துக்கும் மேற்பட்ட பல அடிகள் கொண்டது நெடிலடிகள் எனப்படும்.
(உம்) “மூலையில் கிடக்கும் வாலிபனே – தினம்
முதுகிலா வேலையைத் தேடுகிறாய்!
பாலை வனம்தான் வாழ்க்கையென – வெறும்
பல்லவி எதற்குப் பாடுகிறாய்?
வெறுங்கை என்பது மூடத்தனம் – உன்
விரல்கள் பத்தும் மூலதனம்!
கருங்கல் பாறையும் நொறுங்கி விழும் -உன்
கைகளில் பூமி சுழன்று வரும்!” – ஐந்துக்கும் மேற்பட்ட சீர்களால் ஆன அறுசீர் கழிநெடிலடி.
6. தொடை :
தொடை – தொடுக்கப்படுவது. ஒரு செய்யுளில் எழுத்துக்களை அசைகளாக்கி, அசைகளைச் சீர்களாக்கி, சீர்களையெல்லாம் அடிகளாகக் கொண்டது மட்டுமல்லாமல் ஓசையின் இன்பமும், செய்யுளில் தோன்றும் பொருட்பயனும் முழுமையாக தொடுக்கப்படுவது தொடை எனப்படும். தொடை எட்டு வகைப்படும். அவை,
1. மோனைத் தொடை
2. எதுகைத் தொடை
3. முரண் தொடை
4.இயைபுத்தொடை
5. அளபெடைத் தொடை
6.அந்தாதித் தொடை
7.இரட்டைத்தொடை
8. செந்தொடை என்பதாகும்.
1.மோனைத்தொடை :
செய்யுளின் முதலெழுத்து ஒன்றி வருவது மோனை எனப்படும். இவ்வகைகளில் முதலெழுத்துகளின்றி அதற்குரிய இனவெழுத்துகளும் ஒன்றி வரும். இதனை இணை மோனை, கிளை மோனை என்றும் கூறுவர். (மோனை – முதன்மை).
மோனைத் தொடை இரு வகைப்படும். அவை,
1.அடி மோனை
2. சீர் மோனை என்பன.
1.அடி மோனை:
அடிகள் தோறும் முதலெழுத்து ஒன்றி வருவது அடி மோனை எனப்படும்.
(உம்) “சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்”
இங்கு, முதலடியின் முதலெழுத்தும் (சொ) இரண்டாமடியின் முதலெழுத்தும் (சொ) ஒன்றி வந்துள்ளன. இவ்வாறு அடிகளில் முதலெழுத்து ஒன்றி வருவது அடி மோனை எனப்படும்.
2. சீர் மோனை :
சீர்கள் தோறும் முதலெழுத்து ஒன்றி வருவது சீர் மோனை எனப்படும்.
(உம்) “கற்க கசடற கற்றவை கற்றபின்”
இங்கு, நான்கு சீர்களிலும் முதலெழுத்தாக (க) வந்துள்ளது. இதுபோல் ஓர் அடியில் சீர்கள் தொறும் முதலெழுத்து ஒன்றி வருவது சீர் மோனை எனப்படும்.
2.எதுகைத் தொடை:
செய்யுளின் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகைத் தொடை எனப்படும். எதுகைத் தொடை இரு வகைப்படும். அவை,
1.அடி எதுகை
2. சீர் எதுகை
1.அடி எதுகை:
அடிகள் தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது அடி எதுகை எனப்படும்.
(உம்) “காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது”
இங்கு, முதலடியின் இரண்டாம் எழுத்தும் (ல) இரண்டாமடியின் இரண்டாம் எழுத்தும் (ல) ஒன்றி வந்துள்ளன. இவ்வாறு அடிகளில் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது அடி எதுகை எனப்படும்.
2.சீர் எதுகை :
சீர்கள் தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது சீர் எதுகை எனப்படும்.
(உம்) “நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல”
இங்கு, மூன்று சீர்களிலும் இரண்டாம் எழுத்தாக (ன்) வந்துள்ளது. இதுபோல் ஓர் அடியில் சீர்கள் தொறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது சீர் எதுகை எனப்படும்.
3.முரண் தொடை :
செய்யுள் அடிகளில் உள்ள முதற்சீர்களோ அல்லது ஓர் அடியில் உள்ள சீர்களோ சொல்லாலும், பொருளாலும் முரண்பட்டு (எதிர்மாறாக) நிற்பது முரண்தொடை எனப்படும். இவையும் அடி முரண், சீர் முரண் என இரண்டு வகைப்படும்.
ஒரு செய்யுளில் அடிகளில் முரண்படுவது அடிமுரண் ஆகும்.
ஓர் அடியில் உள்ள சீர்களில் முரண்படுவது சீர் முரண் எனப்படும்.
(உம்) “துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை”
இக்குறட்பாவில் துன்பம் – இன்பம் என அடிகளில் முரண்பட்டு நிற்பதைக் காண்கிறோம். இவை அடிமுரண் ஆகும்.
(உம்) “இனிய உளவாக இன்னாது கூறல்”
இவ்வடியில் இனிய – இன்னாத என சீர்கள் முரண்படுவதால் இவை சீர்முரண் எனப்படும்.
4.இயைபுத் தொடை :
ஒரு செய்யுளின் அடிகளிலும், சீர்களிலும் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ, ஒன்றி வருவது இயைபுத்தொடை எனப்படும்.
ஒரு செய்யுள் அடிகளில் இயைபு அமைவது அடிஇயைபு ஆகும்.
ஓர் அடியில் உள்ள சீர்களில் இயைபு அமைவது சீர் இயைபு எனப்படும்
(உம்) “திங்கள்முடி சூடுமலை தென்றல்விளை யாடுமலை
தங்குபுயல் சூழுமலை தமிழ்முனிவன் வாழுமலை”
இங்கு மலை என இரண்டு அடிகளிலும் இயைந்து வந்ததால் இவை அடி இயைபு எனப்படும்.
(உம்) “பழமணல் மாற்றுமின் புதுமணல் பரப்புமின்”
இவ்வடியில் உள்ள சீர்களில் மின் என இயைந்து வந்துள்ளதால் இவை சீர் இயைபு எனப்படும்.
5.அளபெடைத்தொடை :
ஒரு செய்யுளின் அடிகளிலும், சீர்களிலும் அசைகள் அளபெடுத்து வருவது அளபெடைத்தொடை எனப்படும்.
ஒரு செய்யுள் அடிகளில் அளபெடை அமைவது அடிஅளபெடை ஆகும்.
ஓர் அடியில் உள்ள சீர்களில் அளபெடை அமைவது சீர் அளபெடை எனப்படும்.
(உம்) “கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை”
இங்கு கெடுப்பதூஉங் – எடுப்பதூஉம் என இரண்டு அடிகளிலும் அளபெடுத்து வந்துள்ளதால் இவை அடி அளபெடை எனப்படும்.
(உம்) “அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்”
இவ்வடியில் உள்ள சீர்களில் அழிவதூஉம் – ஆவதூஉம் என அளபெடுத்து வந்துள்ளதால் இவை சீர் அளபெடை எனப்படும்.
6.அந்தாதித்தொடை :
செய்யுளில் ஓர் அடியின் இறுதிச்சீரின் இறுதி எழுத்தோ அல்லது அசையோ அல்லது சீரோ அடுத்த அடியின் தொடக்கமாக வருவது அந்தாதித் தொடை எனப்படும்.
(உம்) “செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை”
7.இரட்டைத்தொடை:
செய்யுளில் ஓர் அடி முழுவதும் ஒரே சொல்லை தொடர்ச்சியாக வருமாறு அமைத்துப் பாடுவது இரட்டைத் தொடை எனப்படும்.
(உம்) “வாழி வாழி வாழி வாழி
அம்ம கோவே வாழி”
8.செந்தொடை :
மோனைத் தொடை முதல் இரட்டைத் தொடை வரையிலான ஏழு தொடைகளுக்கும் சொல்லப்பட்ட இலக்கணங்கள் எதற்குள்ளும் பொருந்தாமல் தனித்து நிற்கும் தொடை செந்தொடை எனப்படும்.
(உம்) “தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு”
தொடையின் வகைகள் அமையும் முறை
மோனை – முதல் எழுத்து ஒன்றுபடல்
எதுகை – இரண்டாம் எழுத்து ஒன்றுபடல்
இயைபு – இறுதி எழுத்து ஒன்றுதல்
முரண் – முரண்பட்டு நிற்றல்
அளபெடை – அளபெடுத்து வருதல்
அந்தாதி இறுதி – முதலாக வருதல்
இரட்டைத் தொடை – ஒரே சொல்லே அடிமுதல் வருதல்
செந்தொடை – இவற்றில் பொருந்தாமல் தனித்து
தொடை விகற்பத்தின் வகைகள்
விகற்பங்கள் தொடைகளுடன் சேரும் முறை
விகற்பங்கள்
1.இணை = 1, 2 சீர்கள்
2.பொழிப்பு = 1, 3 சீர்கள்
3.ஒருஉ = 1, 4 சீர்கள்
4.கூழை = 1, 2, 3 சீர்கள்
5.மேற்கதுவாய் = 1, 3, 4 சீர்கள்
6.கீழ்க்கதுவாய் = 1, 2, 4 சீர்கள்
7.முற்று = 1, 2, 3, 4 சீர்கள்
உதாரணம் :
ஐந்து தொடைகளுடன் ஏழு விகற்பங்களும் ஒன்றாய்ச் சேரும்.
01.இணை மோனைத் தொடை
02.பொழிப்பு மோனைத் தொடை
03.ஒருஉ மோனைத் தொடை
04.கூழை மோனைத் தொடை
05.மேற்கதுவாய் மோனைத் தொடை
06.கீழ்க்கதுவாய் மோனைத் தொடை
07.முற்று மோனைத் தொடை
இது போன்று ஒவ்வொரு விகற்பமும் தொடையுடன் சேர்ந்து வரும்.
குறிப்பு :
அந்தாதித் தொடை, இரட்டைத் தொடை, செந்தொடை ஆகிய மூன்றுக்கும் தொடை விகற்பங்கள் இல்லை.
இதன் அடிப்படையில் தொடை விகற்பங்கள் மொத்தம் (7x 5=35) 35 ஆகும்.
மேற்கண்ட குறிப்புகள் இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழால் வெளியிடப்படுகின்றன.