பாரதிதாசனும் பாரதியாரும் – ஒரு பார்வை

பாரதியாரும் பாரதிதாசனும் -ஒரு பார்வை

முன்னுரை

சாதி ஒழித்திடல் ஒன்று – நல்ல

தமிழ் வளர்த்தல் மற்றொன்று

பாதியை நாடு மறந்தால் – மற்றப்

பாதி துலங்குவ தில்லை

சாதி களைந்திட்ட ஏரி – நல்ல

தண்டமிழ் வாளினைத் தூக்கும்!

என்றுரைப் பார் என்னி டத்தில் – அந்த

இன்ப உரைகளென் காதில்

இன்றும் மறைந்திட வில்லை – நான்

இன்றும் இருப்ப தனாலே


            எனப் பாரதிதாசன் பாரதியாரின் பெரிய உள்ளத்தைப் புலப்படுத்தினார். கனித்தமிழ் மொழியைக் களை நீக்கி வடித்த கவிஞன் பாரதி; களை நீக்கிய கழனியில் கனிக்காடு கண்டவர் பாரதிதாசன். விடுதலைத் தீ கொழுந்து விட்டெரிந்த காலத்தில் பிறந்தவர்கள் இருவரும். ஆயினும் நாட்டு விடுதலையை மையப் பொருளாகக் கொண்டு சோதி மிக்க நவ கவிதை’ படைத்தவர் முன்னவர். ‘எளிய நடையில் புதிய நூல்கள்’ இயற்றியவர் பின்னவர். தமிழ்க் கவிதை உலகம் புதிய பாதையில் செல்ல வழிகோலியவர் பாரதி என்றால் தனக்குப் பின்னால் ஒரு பாட்டுப் பட்டாளம் தொடர அகன்ற வழித்தடம் அமைத்தவர் பாரதிதாசன் எனலாம்.

            பாரதியார் வழியைப் பின்பற்றியவர் பாவேந்தர். ஆயினும் பாரதியாரின் கருத்துக்களுக்கு அரண்பட்டும், முரண்பட்டும் பாடியுள்ள நிலையையும் காண்கிறோம். பாரதியாரைக் ‘கவிஞர்’ எனக் கொள்ளாத புலவர் கூட்டத்தில் அவர் ‘உலக மகாகவி ‘உயர் கவி’ என அவர் பாடல் வரிகளாலேயே நிறுவியவர் பாரதிதாசன். இவ்விருவரிடையே இருந்த தொடர்பில் பாரதிதாசனின் இலக்கிய ஆளுமையை இக்கட்டுரை விளக்குகிறது.


முதல் சந்திப்பு


            பாரதியார் பாரதிதாசன் முதல் சந்திப்பு இப்படித் தொடர்கிறது. 1908 செப்டம்பர் வாக்கில் பாரதியார் புதுவை செல்கிறார். அவரால் ‘வல்லூறு நாயக்கர்’ எனக் குறிப்பிடப்படும் வேணு நாயக்கர் திருமணப் பந்தலில் பாட்டுக் கச்சேரி பாடகரில் சனக சுப்புரத்தினமும் ஒருவர். கணீர்க் குரலில், ‘வீர சுதந்திரம் வேண்டி நின்றார். பின்னர் வேறொன்று கொள்வாரோ? என்னும் பாரதியார் பாடலைப் பாடினார் சுப்புரத்தினம் வேணு நாயக்கர், ‘இன்னும் பாடு சுப்பு’ என்றார். \தொன்று நிகழ்ந்த தனைத்தும்- எனத் தொடங்கும் பாடலையும் பாடினார். கூட்டத்தில் இருந்தவர்களில் கனக சுப்புரத்தினத்தால் ‘ரவி வர்மாப் படப் பரமசிவம்’ குறிப்பிடப்படுபவரும் ஒருவர். வேணு நாயக்கர் சுப்புரத்தினத்திடம், “அவங்க ஆர் தெரியுமில்ல’ என்று கேட்கிறார். தெரியாது என்பதற்குள் ரவிவர்மப் படப் பரமசிவம், ‘நீங்க தமிழ் வாசிச்சிருக்கீங்களோ? என வினவினார். `சுப்புரத்தினம், ‘கொஞ்சம்’ என்றார் ரவிவர்மாப் படம் `உணர்ந்து பாடுகிறீர்கள்’ என்றார். வேணு நாயக்கர், ‘அவங்க தானே’ ‘அந்தப் பாட்டெல்லாம் போட்டது. சுப்பிரமணிய பாரதி என்று சொல்றாங்கல்ல! என்று கனக சுப்புரத்தினத்துக்குப் பாரதியாரை அறிமுகப்படுத்துகிறார். பாரதியார் வேணுவிடம், ‘ஏன் இவரை நம் வீட்டுக்கு நீ அழைத்து வரலே? என வினவுகிறார்’ இந்தத் தொடர்பு ‘நாளும் வளர்’ நட்பாக மலர்ந்து பாரதியாரின் இறுதிக் காலம் வரை தொடர்ந்தது.


பாரதியார் தொடர்புக்கு முன்


            பாரதியாரைச் சந்திக்கும் முன்பே திருப்புளிசாமி ஐயாவிடமும். பங்காருப் பத்தரிடமும், புலவர் புஅ பெரியசாமிப் பிள்ளையிடமும் தமிழ் கற்று வண்ணப் பாடல்கள் பாடும் அளவிற்குத் தமிழ் இலக்கிய, இலக்கணப் புலமையுடன் திகழ்ந்தார், சுப்புரத்தினம் ஏராளமான பக்திப் பாடல்களை இயற்றினார் அப்படிப் பாடியவை தாம். மயிலம் ஸ்ரீ ஷண்முகன் வண்ணப்பாட்டு, ஸ்ரீ சிவ சண்முகன் கடவுள் பஞ்சரத்தினம், ஸ்ரீ மயிலம் சுப்பிரமணியர் துதியமுது என்பவை அப்போதிருந்த சுப்புரத்தினத்தின் நிலையை அவரே கூறுகிறார்.


‘விபூதி நாமங்களைப் போட்டுக் கொண்டு பஜனை மடங்களில் பாடியும். ஆடியும் கேவலமாகக் காலம்போக்கிக் கொண்டிருந்த என்னை இன்றுள்ள நிலைக்குக் கொண்டு வந்தவர் பாரதியார் தான்? இதனால், பட்டை நாமப் பாகவதராக விளங்கிய சுப்புரத்தினத்தை எளிய நடையில் கவிபாடும் மக்கள் கவிஞராக மட்டுமல்லாமல் மதிப்புடைய மனிதராகவும் ஆக்கிய பெருமை பாரதியாரையே சாரும்.

            அக்காலத்தில் சுப்புரத்தினம் பாடிய பக்திப் பாடல்களும், மக்களுக்குக் கடவுளைச் சுட்டிக் காட்டும் விதத்திலும் கடவுள் அருளைப் பெற மக்களைத் தூண்டி ஆயத்தப்படுத்தும் விதத்திலும் அமைந்திருந்தன.


பாரதியார் தொடர்புக்குப்பின்

            பாரதியார் இல்லத்தில் ஒருநாள், வ.வே.சு. அய்யரும் மற்றும் பல நண்பர்களும் குழுமியிருந்தனர். அப்பொழுது ‘சுப்புரத்தினம் ஒரு கவி. அவனுக்குக் கவி பாட வரும்’ என்று பாரதிதாசனை அறிமுகப்படுத்தினார் பாரதியார். வ.வே.சு அய்யரும், சிலரும் ஏளனத்தோடு `சுப்பு ஒரு கவியா? என்று ஐயுற்றுச் சோதிக்கும் முறையில், ‘அப்படியானால் ஒரு பாட்டுப் பாடட்டுமே’ என்று கேட்டுக் கொண்டனர். பாரதியாரும் ‘சுப்பு! நீ பாடு எனக் கம்பீரமான குரலில் கட்டளையிட்டார். அப்போது பாடிய பாடலே,


எங்கெங்கு காணினும் சக்தியடா – தம்பி

ஏழு கடல் அவள் வண்ணமடா – அங்குத்

 தங்கும் வெளியினிற் கோடியண்டம் – அந்தத்

தாயின் கைப்பந்தென ஓடுதடா.


எனத் தொடங்குவது எல்லோரும் வியந்தனர். பாரதியார் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது’ என்னும் குறிப்போடு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பினார்’ அதில் வெளிவந்தது. பாரதியார் தனது ‘தராசு’ கதைக் கட்டுரையிலும் இப்பாடலுக்கு ஒரு பின்னணியைக் காட்டி வெளியிட்டுள்ளார்.


            பாரதியார் புதுவையில் தங்கி இருந்த காலம் பத்தாண்டுகள். ஆசிரியர் பணி முடித்து வீடு திரும்பும்போது பல நாள்களில் மாலையிலும் பணியில்லா நாள்களில் காலையிலும் பாரதியார் இல்லம் செல்வது சுப்புரத்தினம் வழக்கம். பாரதியார் கவிதைகளைச் சுவைப்பதிலும், அவரோடு கலந்துரையாடுவதிலும் மகிழ்வுடன் கலந்து கொள்வார். பாரதியார் மீது அளவு கடந்த மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தார். தனக்குப் புதிய வழிகாட்டிய குருவாகவே மதித்தார். பாரதியார் தொடர்பால் தான் பெற்ற பயனை,

முப்பது ஆண்டு முடியும் வரைக்கும் நான்

எழுதிய அனைத்தும் என்ன சொல்லும்

கடவுள் இதோ என்று மக்கட்குக் காட்டிச்

சுடச்சுட அவனருள் துய்ப்பீர் என்னும்

ஆயினும் கடவுள் உருவம் அனைத்தையும்

தடவிக் கொண்டுதான் இருந்ததென் நெஞ்சம்

பாடலிற் பழமுறை பழநடை என்பதோர்

காடு முழுவதும் கண்டபின் கடைசியாய்ச்

சுப்பிரமணிய பாரதி தோன்றியென்

பாட்டுக்குப் புதுமுறை புதுநடை காட்டினார்.

எனக் காட்டியுள்ளார்.

பாரதிதாசன் ஆனது

சுப்பிரமணியனாயிருந்தவர் பாரதி பட்டம் பெற்றுச் சுப்பிரமணியப் பாரதி என்றான பின்னர் அன்றைய அரசியல் சூழலில் சக்திதாசன், காளிதாசன், ஷெல்லிதாசன் என்னும் புனைபெயர்களில் கவிதை கட்டுரை எழுதி வந்தார். ஆயினும் பாரதியார் என்பது நிலைத்தது. சுப்புரத்தினமும் கே.எஸ். பாரதிதாசன் என்ற புனை பெயரில் தேசசேவகன், தேசபக்தன், ஆனந்த போதினி, புதுவைமுரசு, கலைமகள், சுதேசமித்திரன், சுதந்திரன், திருச்சியிலிருந்து வந்த `நகரதூதன்’ முதலிய ஏடுகளுக்குக் கவிதை கட்டுரைகளை எழுதி வந்தார். கிண்டற்காரன். கிறுக்கன் என்ற பெயர்களிலும் எழுதியுள்ளார். பாரதியார் தாசத் தன்மையோடு பெயர் வைத்துக்கொண்டது போலவே சுப்புரத்தினமும் பாரதிதாசன் எனப் புனைப்பெயர் கொண்டார். இதனை, ‘நான் பாரதிதாசன் என்ற புனைபெயர் வைத்துக் கொண்டுள்ளேன். அதற்குள்ள காரணம் அப்போது அவர் என்னுள்ளத்தில் முதலிடம் பெற்றிருந்ததுதான்.

சாதிக்கொள்கையை நன்றாக உண்மையாக எதிர்த்தவர் பாரதியார் தாம்.. சென்ற காலத்தில் அவருக்கு முன் இவ்வாறு சாதிக் கொள்கையை எதிர்த்தவரை நான் கண்டதில்லை. பாரதி, எதிர்த்துப் பணிபுரியத் தொடங்கிய பன்னாட்களுக்குப் பின்னரே பெரியார் இயக்கம் தோன்றியது எனத் தம் புனைபெயர்க்கான காரணத்தைப் புலப்படுத்தினார். ஆயினும் அடிமை மனப்பான்மையைக் குறிக்கும் ‘தாசன்’ என்னும் சொல்லையும் பார்ப்பனச் சாதியினராகிய ‘பாரதியின். பெயரையும் இணைத்துப் பாரதிதாசன்’ எனக் கொண்டிருந்தது பலரது எதிர்ப்பையும் கிளப்பிற்று. பாரதிதாசன் பாரதிக்குத் தாசனா? என மறுப்பெழுதும் அளவுக்கு வளர்ந்தது. ‘எவருக்கும் தாசனாக இருக்க விரும்பாத நீங்கள் பாரதிக்கு மட்டும் ஏன் ஆனீர்கள்’ எனப் பொதுவுடைமை இயக்கத்தவர் வினவியதற்கு ‘அடிமைப் புத்தியை விரும்பாத நானே ஒருவருக்குத் தாசன் என்று சொல்லிக் கொள்வேன் என்றால் அவர் எவ்வளவு உயர்ந்தவராக இருப்பார் என்பதை எண்ணிப் பார்த்து அறிந்து கொள்க என விடையிறுத்தார். 

அய்யருக்கு அடிமையா? என்று வினவியவருக்கு ‘ஆமாண்டா நான்  பாரதிக்கு அடிமை தாண்டா’ நான் என்றென்றும் உளமாரப் போற்றி வழிபடுகின்ற தெய்வம் இந்த அய்யர். அன்பும் பண்பும் தமிழுணர்வும் ஒருங்கு சேர்ந்த பொன்னுருவம் அவர். பாரதியாருக்கு நான் தாசனாக இருப்பதில் உங்களுக்கு என்ன ஆட்சபேனை? இந்த வினாவிளை யார் விடுத்தாலும் எனக்குக் கோபம் வரும்’ என்று மறுப்புரைத்துப் பிறர் வாயடைத்துள்ளார். அதன் பின் இவ்வெதிர்ப்பு எழாது அடங்கியே போயிற்று.


பாரதியார் பற்றிப் பாரதிதாசன்

பாரதியார் கவிதைகளைச் சுவைத்துச் சுவைத்து மகிழ்ந்த பாவேந்தர், பாரதி பாட்டின் சொற்களில் படித்த பாவேந்தர் கவிதைகள் தோன்றிய சூழல், அவர் கொள்கை, பாடுபொருள், படைப்பின் மேன்மை, தனக்கு வழிகாட்டிய பான்மை, பாரதியார் பிற பெரியார்களோடு கொண்டிருந்த தொடர்பு, உலக மகாகவி, புதுயுகக் கவி ஆகிய பொருண்மை நிலைகளில் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடிக் குவித்த குயில் ஆவார்.

‘உய்வகை காட்டும் உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன்’ பாரதியைப் பற்றித் ‘திங்களைக் கண்ணிலான் சிறப்புறுத்தல் போல் சிற்சில கூறத் தொடங்கிய பாவேந்தர்.

தமிழின் உயிர்நிகர் தமிழ்நிலை தாழ்ந்ததால்

இமைதிற வாமல் இருந்த நிலையில்

தமிழகம் தமிழுக்குத் தகும் உயர் வளிக்கும்

தலைவனை எண்ணித் தவங்கிடக் கையில்

இலகு பாரதிப் புலவன் தோன்றினான்

பைந் தமிழ்த் தேர்ப் பாகன் அவனொரு

செந்தமிழ்த் தேனீ சிந்துக்குத் தந்தை

குவிக்கும் கவிதைக் குயில் இந்நாட்டினைக்

கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு

நீடுதுயில் நீக்கப் பாடி வந்தநிலா

காடு கமழும் கற்பூரச் சொற்கோ

கற்பனை ஊற்றாம் கதையின் தையல்

திறம்பாட வந்த மறவன் புதிய

அறம்பாட வந்த அறிஞன் நாட்டிற்

படரும் சாதிப் படைம ருந்து,

மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்

அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன். என்னென்று சொல்வேன்

 என்னென்று சொல்வேன்

தமிழால் பாரதி தகுதி பெற்றதும்

தமிழ்பா ரதியால் தகுதி பெற்றதும்

என்று பாரதியின் மேன்மையை எடுத்துரைத்தார். பாரதியாரின் முழு அளுமையும் இப்பகுதியில் பாடப்பட்டுள்ளதைக் காணலாம்.  ‘பாரதியார் சொல்லிய சொல்லையே’ வைத்துப் பாடல்களில் பாடி அவரது கவிதைத் திறத்தைச் சுட்டிக் காட்டிப் ‘பாரதியார் உலககவி என நிலை நாட்டினார். சில சான்றுகள்.


பழைய நடை பழங்கவிதை பழந்த மிழ்நூல்

பார்த்தெழுதிப் பாரதியார் உயர்ந்தா ரில்லை

ஞான ரதம் போலொரு நூல் எழுதுதற்கு

நானிலத்தில் ஆளில்லை. கண்ணன் பாட்டுப்

போல்நவிலக் கற்பனைக்குப் போவ தெங்கே?

மனிதர் யாரும் ஒருநிகர்

சமானமாக வாழ்வமே என்றறைந்தார் அன்றோ

பன்னீராயிரம் பாடிய கம்பனும்

இப்பொது மக்கள்பால் இன்தமிழ் உணர்வை

எழுப்பிய துண்டோ? இல்லவே இல்லை!

முனைமுகத்து நில்லேல் முதியவள் சொல்லிது

முனையிலே முகத்துநில் பாரதி முழக்கிது

பொன்னிகர் தமிழுக்குப் புதுமெரு கேற்றித்

தமிழரைத் தமிழில் பற்று மிகும்படி


            செய்த பாரதியாரின் பிறந்த நாள், நினைவு நாள் இரண்டு நாள் விழாவையும் எப்படிக் கொண்டாட வேண்டும் தெரியுமா? பாவேந்தர் கூறுவதைக் கேளுங்கள்.


இறந்தநாள் பிறந்தநாள் என்பன மட்டுமா?

பாரதி நாட்டுப் பிரிவினை எதிர்ப்புநாள்

பாரதி இந்தி எதிர்ப்புநாள் பாரதி

ஆங்கில எதிர்ப்புநாள் பாரதி அறிவுநாள்

பாரதி தமிழிலக் கியநாள் பாரதி

பச்சைத் திருநாள் பலவும் பாரதி

விழாவே ஆகும் விடாது நடத்தலாம்.


            தமிழை இகழ்ந்தவனைத் தாய்தடுத்தாலும் விடேன்’ என்றார் பாவேந்தர். ஆனால் பாரதியார் என்ன கூறினாராம்? பாவேந்தர் பாடுகிறார்.


தமிழை இகழ்ந்தவன் தமிழன் அல்லன்

மனிதனும் அல்லன் என்று வண்டமிழ்

இலக்கியம் இனிக்க இனிக்கக் குவித்தவர்

பாரதி அல்லால் பாரினில் வேறெவர்?

            பாரதியார் தமிழ்மொழிக்குச் செய்தவை என்ற வகையில் கருப்பொருள், தமிழ்ச்சிறப்பு, தமிழிசை என்பன. கவிதை நடை ரிக்ஷாக்காரநான்கினைக் கணக்கிட்டுள்ளார் பாவேந்தர். அவை : நடை. னுக்கும் புரிகின்ற வகையில் எளிமையாய் எழுத வேண்டும். பன்னிரண்டாம் நூற்றாண்டில் வீழ்ந்த தமிழகம், பாவேந்தர் பாரதி யாரின் பாட்டுக்கு வரும்வரை எழுந்திருக்கவே இல்லை. கடவுளைப் பற்றிப் பாடும் நெறிமாறி இயற்கையைப் பற்றியும் சமூகத்தைப் பற்றியும் பாடுவதாய் அமைந்தது.

சப்பானியக் கவிதை ஈடுபாடு

            பாரதியார் 1916இல் ‘ஜப்பானிய கவிதை என்னும் தலைப்பில் சுதேசமித்திரன் இதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அது, சப்பானியப் புலவர் உயோநோகுச்சி கல்கத்தா இதழ் ஒன்றில் எழுதிய கட்டுரைக் கருத்துக்களை முதன்மைப்படுத்தியது. அதில் :

            ‘சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் ஜப்பானியக் கவிதையின் விசேஷத் தன்மையென்று நோகுச்சிப் புவலர் சொல்வதுடன் ஆங்கிலேயரின் கவிதை இதற்கு நேர்மாறாக நிற்கிறது’ என்றும் சொல்லுகிறார். நமக்குள்ளே திருக்குறள் இருக்கிறது. கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள், கிழக்குத் திசையின் கவிதையிலேயே இவ்விதமான ரஸம் அதிகந்தான். தமிழ்நாட்டில் முற்காலத்திலே இது மிகவும் மதிப்பெய்தி நின்றது.

 
            இதனால் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் போக்கு முற்காலத்தில். தமிழ்நாட்டில் மதிப்பெய்தியிருந்தது என அறிய வாய்க்கிறது. பாரதியார் அயர்லாந்துக் கவிஞர் வெர்ஹேரனின் ஒரு ஹொக்குப் (ஹைகூ) பாட்டின் ஆங்கில வடிவத்தை அறுசீர் விருத்த யாப்பில்,

மயங்கினேன் முயங்கிலள் பரீசு

வாய்ந்தது எழில் மறந்திலேன் காவின். . .


            என மொழி பெயர்த்து அமைந்திருந்தார். இப்பாடலைப் பாரதிதாசன் கேட்டதும் புறநானூற்றை எடுத்து வந்து பாரதியாரின் எதிரில் வைத்து ‘இந்நூலிற் காணப்படும் பாடல்கள் அனைத்தும் ஹொக்குப் பாடல்களே’ என்றார். இதனால் பாரதியார்க்கு ‘ஹொக்குப்’ பாட்டின் மீது ஈடுபாடு இருந்தது என்பதை அறிகிறோம்.


பாரதிதாசன் பற்றிப் பாரதியார்


            பாரதியைப் பற்றிப் பாவேந்தர் பாடிய பாடல்கள் பேச்சிலும் கட்டுரையிலும் எழுதியவை ஏராளம். அந்நாளில் புகழ்பெற்ற பாகவதர் பலாப்புத்தூர் சீனிவாச ஐயங்கார் பாரதியாரை அணுகி இராமன் கதையைப் பொதுமேடையில் பாடுவதற்கேற்ப இசைப்பாடலாகச் செய்து தருமாறு கேட்டார். பாரதி அருகிலிருந்த பாவேந்தரைச் சுட்டி, இவர் இந்த காரியத்தை நன்கு செய்வார் என்றார். பாகவதர் ஐயுற, அவர் சிறந்த கவிஞர், சந்தேகப்படாதீர்கள்’ என்று தெளிவூட்டினார். பாவேந்தரும், பாகவதர் கேட்டவாறே இசைப்பாக்கள் ஆக்கித் தந்தார்.

பாரதியாரின் பழந்தமிழ் அறிவு

            பாரதியார் காலத்தில், தொல்காப்பியமோ சங்க இலக்கியமோ நாடெங்கும் பரவவில்லை. அப்போது தான் வெளிவரத் தொடங்கின. பிறர் எழுத்தையும், பேச்சையும் கண்டும், கேட்டும் தமிழின் பெருமையை வியந்து போற்றியுள்ளார் பாரதியார்.


            1920இல் மதுரைத் தமிழ்ச்சங்க ஏடான ‘செந்தமிழில்’ ‘சிலப்பதிகாரம் பற்றிய கட்டுரையைப் பாரதியார் படித்து விட்டுச் சிலப்பதிகாரச் சுவையில் மனம் பறிகொடுத்தார். அதனால், நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு என்றும், ‘சேரன் தம்பி சிலம்பு இசைத்ததும்’ என்றும் பொதுப்படக் கூறினார்.

புதுவையில் திரு.வி.க ஆற்றிய சொற்பொழிவில் சிலப்பதிகாரச் சுவையையும், திரு.வி.க.வின் நடையழகையும் புகழ்ந்து போற்றினார் பாரதியார்.

பொதுவினர்க்குச் சிலப்பதிகாரச் சுவையை

நடையழகைப் புகலும் போதில்

இதுவையா பேச்சென்பேன்: பாரதியார்

கை கொட்டி எழுவார். வீழ்வார்.

            என்றார் பாவேந்தர். பாரதியார் திரு.வி.க. பேச்சினைக் கேட்டுக் கைத்தட்டி மகிழ்ந்தது போல் வேறெவர் பேச்சுக்கும் கைதட்டியதில்லை என்றார் பாவேந்தர்.

            புதுவையில் (1935இல்) நிகழ்ந்த பாரதி விழாவிற்கு நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமை ஏற்றார். பாவேந்தர் தம்முரையில் ‘பாரதிக்கு இலக்கணம் தெரியாதென்று சிலர் சொல்லுகின்றனர். அவர்களுடைய கருத்து தவறானது; பாரதிக்கு இலக்கணப் புலமை உண்டு என்றார். முடிவுரையில் நாவலர் சோமசுந்தர பாரதியார் எனக்கு என்னென்ன தெரியுமோ அத்தனையும் பாரதிக்கும் தெரியும். இதன் மேலும் பாரதிக்குத் தனித்தன்மை அவரிடம் சிறந்த கவிதை வளமிருக்கும். சும்பப் பயல்கள்தான் பாரதிக்கு அது தெரியாது இது தெரியாது இலக்கணம் தெரியாது என்று வெறுமனே சொல்லிக் கொண்டிருப்பார்கள் என்றார்.

            நாவலர்பாரதியார் தமிழ் நன்கு கைவரப் பெற்றவர் என்பது எல்லாருக்கும் தெரியும். அவர் அறிந்தவை பாரதியாரும் அறிந்தவைதான் என்பது தெளிவாகிறது. பிற்கால இலக்கியங்களில் தமிழகத்தைப் பார்த்தது கிடையாது. நான் தமிழர் நாகரிகம், தமிழரின் இலக்கியங்கள் முதலியவற்றை ஆராய வாய்ப்பிருந்ததில்லை. ‘பண்டைத் தமிழகத்தைப் பார்க்க வேண்டுமானால் நான் சங்க நூல்களில்தான் காணவேண்டும். ஆனால் போன ஆண்டு (1920) வரைக்கும் எனக்குப் பழந்தமிழ் நூல்களில் தொல்காப்பியம், அகம், புறம் பற்றிய நூல்கள் பற்றி ஒன்றும் தெரியாது. உண்மை அறிந்து கொண்ட பிறகே தமிழகத்தை எங்கள் தந்தையர் நாடு என்று சொன்னேன்” என்று பாரதியார் தனக்கு இருந்த சங்க இலக்கிய அறிவை வெளிப்படுத்தியுள்ளார்.


பாடற் கருத்துகளில்

            பாடு பொருளிலும், பாடு முறையிலும் பா நடையிலும் பாரதியார் வழியைப் பின்பற்றிய பாவேந்தர், பாரதியார் கருத்துக்களை மேலும் விளக்கம் செய்து பல பாடல்கள் பாடியுள்ளார். பல கருத்துக்களில் வேறுபட்டும், முரண்பட்டும் பாடியுள்ளவற்றையும் காண்கிறோம். இவ்வேறுபாடுகளும், தமிழை முன்னெடுத்த பாரதியைப் போலத் தமிழரை முன்னெடுத்த பெரியாரின் தன்மான இயக்கத் தினாலும் சிந்தனை மாற்றத்தாலும் மனப்பான்மை வளர்ச்சியாலும் ஏற்பட்டனவாகும்.

            குறிக்கோள், மக்களைப் பாடுதல், பாட்டுலகப் புதுமை, பெண் விடுதலை, கைம்மைக் கொடுமை, குழந்தை மணம், சாதியொழிப்பு, இசைத்தமிழ் வளர்ச்சி, பார்ப்பனிய எதிர்ப்பு, புராண நம்பிக்கையொழிப்பு, வாழ்ந்து காட்டுந்திறன் ஆகிய கூறுகளில் பாவேந்தர் பாரதியாரைப் பின்பற்றிச் செல்கிறார்.

நாடு, வடமொழி நூல்கள், தெய்வச் சார்பு, பொதுவுடைமை போற்றல், தமிழின் தோற்றம், குறிக்கோள் வெளிப்பாடு ஆகிய கூறுகளில் பாரதிதாசன், பாரதியாருடன் வேறுபட்டு விளங்குகிறார்.


நாடு


            இந்தியா ஒரு நாடு, பாரதநாடு இதுவே நம் நாடு என்ற கொள்கை இருவரும் பாரத நாட்டைப் பாடிய போதிலும் பாரதியார்
உடையவர்.


பாரத நாடு பார்க்கெலாம் திலகம்

நீரதன் புதல்வர் இந்நினை வகற்றாதீர்

என்றார். பாரதிதாசன்

தமிழ் நாடுதான் மேலான நாடு

தமிழர்க் கெல்லாம் மற்றவை காடு

என்றார்.

நான் திராவிடன் என்று நவில்கையில்

தேன்தான் நாவெலாம் வான்தான் என் புகழ்

            எனப் பாவேந்தர் பாடினார். ஆனால் பாரதியாருக்கோ திராவிடம், திராவிடர் என்ற சொற்களைக் கேட்டாலே பிடிக்காது. ‘பொய்யும் புலையுமாகத் திராவிடர் என்றும் ஆரியர் என்றும் உள்ள பழைய
சொற்களுக்குப் புதிய அபாண்டமான அர்த்தங்கள் கற்பித்துக் கொண்டு வீண்சண்டைகள் வளர்ப்பதனால் ஹிந்து சமூகத்துக்கே கெடுதி விளையக் கூடும். எந்த வகுப்புக்கும் அனுகூலம் ஏற்படாது’ என்றார்.


உலகநோக்கு


            பாரதியார் தம் காலத்தில் உலகில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகளையும் அவற்றால் நாம் கொள்ள வேண்டிய படிப்பினைகளையும் பாட்டாலும் உரையாலும் உரைத்துள்ளார். சோவியத்து இரசியாவில் ஜார் மன்னன் வீழ்ந்த பின் எழுந்த யுகப் புரட்சியை ‘ஆகாவென்று எழுந்தது பார் யுகப் புரட்சி எனப் பாராட்டினார். பெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்துப் பாடினார். பிஜித் தீவிலே கரும்புத் தோட்டத்தில் தமிழ்ப் பெண்கள் படுந்துயரத்தை நெஞ்சுருக வடித்தார். எனவே, உலக மக்களிடையே இருந்த சிக்கல்களை ஆராய்ந்தறியும் உலக நோக்கு கொண்டவராகப் பாரதியார் விளங்கினார் எனலாம். பாவேந்தர் உலகநோக்கில் பாரதியாரையும் விஞ்சி நின்றார். இருவரையும் ஒப்பிட்டு ஆய்வு செய்தவர்களில் சிலர் பாரதிதாசன் பரந்த நோக்கம் இல்லாதவர் என முடிவு செய்தனர். அக்கருத்தினை மாற்றிப் பாரதிதாசன் உலகநோக்கு மிக்கவர் என்பதைச் சான்றுகளோடு ‘பாவேந்தரின் உலகநோக்கு’ என்னும் நூல் நிறுவியுள்ளது.


சீன எதிர்ப்பு

சீனனால் வருந் தொல்லை தில்லிக் காரத்

தீயருக்கு மட்டுமன்று நமக்குந்தானே

என்றும்.

இலங்கைத் தமிழர் உரிமை

சிங்களர்க் குள்ள இலங்கையின் உரிமை

செந்தமி ழர்க்கும் உண்டு

என்றும்

சீனாகுமாய்த் தீவு மேற் குண்டு வீசியதை

குமாய்த்தீவு மேற்சீனர் குண்டுமேல் குண்டு

 டமார் டமார் என்று போட்டார்கள்

என்றும்,

அமெரிக்கா சப்பான் மீது குண்டு வீசியதன் விளைவை

இன்னும் ஓர் நூறாண்டுக்கு

இரண்டூரின் சுற்றுப்பக்கம்

ஒன்றுமே முளையா தாமே

வாழ்தலும் ஒண்ணாதாமே


            என்றும் பாடி உலக நிலைமைக்குக் கவலை கொள்கிறார்.!

சாதியொழிப்பு


            சாதிகளை நிலை நாட்டிப் போற்றும் பார்ப்பனர் இனத்தில் பிறந்தபோதும், பார்ப்பனத்தன்மை எள்ளளவும் இல்லா தவர் பாரதியார். பெரியார் சாதியொழிப்பு இயக்கத்திற்கு வித்திடும் முன்னரே, ‘சாதி வேரைப் பொசுக்குங்கள்’ என்றவர். அதனால் அவர் வாழ்வில் பட்ட இன்னல்கள் எண்ணில் அடங்கா.


சாதிகள் இல்லையடி பாப்பா – குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

சாதிக் கொடுமைகள் வேண்டாம் – அன்பு

தன்னில் செழித்திடும் வையம்


            எனச் சாதிக் கொடுமைகளை ஒழிக்க வழிகாட்டினார். தன் வாழ்விலும் கடைப்பிடித்தார். பூணூலை அறுத்தெறிந்தார். சாதி வேறுபாடுகளைச் சாய்க்க ‘ஆறில் ஒரு பங்கு’ நூலை எழுதி உழவுத் தொழிலை மேற்கொள்ளும் பள்ளர், பறையர் முதலானவர்க்குச் சமர்ப்பணம் செய்துள்ளார்.? பாரதியார் கடைப்பிடித்த சாதியொழிப்பை,

மேலவர் கீழவர் இல்லை – இதை

மேலுக்குச் சொல்லிட வில்லை

நாலு தெருக்களின் கூட்டில் மக்கள்

நாலாயிரத்தவர் காணத்

தோலினில் தாழ்ந்தவரென்று – சொல்லும்

 தோழர் சமைத்ததை உண்பார்


எனப் பாவேந்தர் பாடிப் பெருமை கொள்வார்.  `தன் மகள் தாழ்ந்த சாதிப் பையனை விரும்பி மணம் செய்து கொள்வதைக் கண்டு ஆனந்தப்பட வேண்டும்’ எனத் தம்மிடம் தெரிவித்ததாகப் பாவேந்தர் கூறியுள்ளார்.

பெண் விடுதலை, பெண்ணடிமை ஒழிப்பு

பெண் ஒரு கண்மற் றாண் ஒரு கண் என

உணரப் பாடிய உயர்கவி பாரதி


எனப் பாரதி பெண்ணையும் ஆணையும் சமமாகப் பாவித்ததைப் பாவேந்தர் பாடியுள்ளார்.

மாதர் தம்மை இழிவு செய்யும்

மடமையைக் கொளுத்துவோம்

எட்டும் அறிவினில் ஆணுக் கிங்கேபெண்

இளைப்பில்லை காணென்று கும்மியடி


எனப் பாரதியார் பெண்ணடிமை ஒழியவும், பெண் விடுதலை பெறவும் பாடியதற்கும் மேலாகப்,


பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டாம்என் கின்றீரோ?

மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை

பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு

மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே

ஊமை என்று பெண்ணை உரைக்குமட்டும் உள்ளடங்கும்

ஆமை நிலமைதான் ஆடவர்க்கும் உண்டு.


            எனப் பாடிப் பெண்ணடிமை ஒழிப்புக்கு முத்திரை பதித்தவர் பாவேந்தர்.

தமிழின் தோற்றம்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவது எங்கும் காணோம்

எனத் தமிழ்மொழி உயர்வைப் பாடிய பாரதி தமிழின் தோற்றத்தைத்  தமிழ்த்தாயே கூறுவதாக அமைத்துக் கூறியது எண்ணத்தக்கது.


ஆதிசிவன் பெற்றுவிட்டான் என்னை

ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்

வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை

மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்

மூன்று குலத் தமிழ்மன்னர் என்னை

மூண்ட நல்லன்போடு நித்தம் வளர்த்தார்

ஆன்ற மொழிகளி னுள்ளே –உயர்

ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்.


            தமிழைச் சிவன் உருவாக்கினான்; அகத்தியன் இலக்கணம் செய்தான் வடமொழிக்கு நிகராக வாழ்ந்தேன் என்று தமிழின் தோற்றத்தைக் கூறியிருப்பதையும், வடமொழிக்கு உயர்வு தந்திருப்பதையும் அறியலாம்.

ஆனால் பாவேந்தரோ

சும்மாதான் சொன்னார் உன்னை

ஒருவன்பால் துளிர்த்தாய் என்றே

..தமிழர் தங்கள்

தலைமுறை தலைமு றைவந்து

அடுக்கின்ற தமிழே பின்னர்

அகத்தியர் காப்பியர்கள்

கெடுப்பினும் கெடாமல் நெஞ்சக் கிளைதொத்தும் கிளியே வாழி


            என அழகின் சிரிப்பில் கிளி வண்ணனையில் தமிழை ஒருவர் தோற்றுவிக்கவில்லை; தமிழர் காலந்தோறும் அடுக்கியதால் தோன்றி வளர்ந்தது. அகத்தியர் தமிழைக் கெடுத்தார் என உண்மையைக் கூறியுள்ளார்.


தமிழின் உயர்வு


            ‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே’ என்றும், ‘வானம் அறிந்ததனைத்தும் அறிந்து வளர்தமிழ்’ என்றும் ‘தெள்ளுற்ற தமிழமுது’ என்றும் தமிழின் இனிமை, உயர்வு ஆகியவற்றைப் பாடிய பாரதியார் காலத்திற்கேற்பத் தமிழ் பெற வேண்டிய வளர்ச்சிகளையும் பட்டியலிடுகிறார்.


பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்

இறவாத புகழுடைய புதுநூல்கள்

தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்

            என்றார். பாவேந்தரும் தமிழுக்குச் செய்ய வேண்டிய பணிகளை வணிகர், தமிழ்ப் புலவோர், மாணாக்கர் முதலியோர்க்குக் கூறுவனவாய்த் ‘தமிழியக்கமே’ படைத்தார். ‘தமிழை என்னுயிர் என்பேன்’ ‘தமிழும் நானும் மெய்யாய் உடலுயிர் கண்டீர் ‘தமிழ் என் அறிவினில் உறைதல் ‘வெள்ளம்போல் தமிழர் கூட்டம்’ எனத் தமிழர் பற்றியும், ‘தமிழ்நாடு கண்டீர், ‘உயிரை, உணர்வை வளர்ப்பது தமிழே’ எனத் தமிழ் பற்றியும், தான் மேலான நாடு தமிழர்க்கெல்லாம் மற்றவை காடு’ எனத் தமிழ்நாடு பற்றியும் பாடியவர் பாவேந்தர்.

தனித்தமிழ் நூல்

பாரதியார் காசிக்குச் சென்றிருந்தபோது (1898, 1902) ஈசுவரலால் என்பவர் அறிமுகம் கிட்டியது. ‘பாரதி தமிழ்க் கவிஞர்’ என்றறிந்த  ஈசுவரலால் வியந்தார். சமஸ்கிருதம் மட்டும்தான் தனிமொழி, தமிழ் என்று ஒரு மொழியும் உண்டோ? ‘சமஸ்கிருதம் பெற்ற பிள்ளைதானே தமிழ்’ எனவே தமிழைச் சமஸ்கிருதம்’ என்ற கருத்துத் தெரிவித்தது பாரதியாருக்குப் பிடிக்கவில்லை. அப்போது நடந்த உரையாடலின் ஒரு பகுதி


ஈசு                  :  தமிழில் நூல்கள் உள்ளனவா?

பாரதி            : உள்ளன,

ஈசு                  :  தமிழிலா?

பாரதி            : ஆம், தமிழில் தான்,

ஈசு                  : இன்னும் ஒரு கேள்வி தனித்தமிழிலா?

பாரதி            :  ஆம். தனித்தமிழில்தான்

`இன்றைய தமிழ் நூல்களில் சில தமிழ்ச் சொற்களே காணப்படுவதால் ஒரு தனித்தமிழ்ப் பாட்டினை இயற்றித் தருமாறு பாரதிக்குக் கோரிக்கை விடுத்தார். அதனையேற்றுத் தம் தமிழாற்றல் விளங்க,


காற்றென்று சொல்வதோ ராற்றல் மற்றுக்

கனலென்று சொல்வதோ ராற்றல்

மாற்ற மிலாததோர் விண்ணும் இம்

மண்ணும் புனலுமோ ராற்றல்


            எனத் தொடங்கும் பாடலைப் பாடி தனித்தமிழில் பாட்டியற்ற முடியும் என்பதைப் பாரதியார் நிறுவினார். பாவேந்தரின் தொடக்க கால நூல்களில் வடமொழிச் சொற்கள் விரவியிருப்பினும், ‘அழகின் சிரிப்பு’, ‘தமிழியக்கம்’ முதலிய நூல்கள் தனித்தமிழில் இயற்றப்பட்டுள்ளமை அறிந்து இன்புறத்தக்கது.


இசைத்தமிழ் மறுமலர்ச்சி

            தமிழ்நாட்டில் தெலுங்கு, இந்துஸ்தானி முதலிய மொழிகளில் பாடியதால் தமிழரின் செவியைத் துளைத்தது என்றும், றுமையாகக் கேட்ட தமிழரின் செவி தோற்காது அன்று ‘இரும்புக் காதே என்றும் சாடிய பாரதி, தமிழிசை இயக்கத்தின் பணியை இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் தொடங்கினார். ‘எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தங்களையும் பொதுஜனங்கள் விரும்பும் மெட்டுகளையும்’ வலியுறுத்திய பாரதியார்.

மானுடப் பெண்கள் வளருமொரு காதலினால்

ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும்

ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும், நெல்லிடிக்கும்

கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்

பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்


            நெஞ்சைப் பறிகொடுத்த பாரதியார்.மக்களிடம் இருந்த கும்மிப்பாட்டு, அம்மானைப் பாட்டு முதலிய பாடல்களின் இசையைத் தம் பாடல்களில் பாடி முழங்கினார். ‘தியாகர் வேண்டாம் பாரதியாரே வேண்டும்’, எனக் குறிப்பிட்ட பாவேந்தர் ‘தமிழிசை இயக்கத்தின் தந்தை’ என்றே பாரதியாரைக் குறிப்பிட்டார். இசையில் பாடுவதற்குரிய இசைக்குறிப்புகளைத் தம் பாடல்களில் குறிப்பிட்டதோடு தாமும் பாரதியார் போலவே பாடுவதில் வல்லவர் ஆனார். இதற்கு ‘இசையமுது’ நூலே சான்றாகும். ஏற்றப்பாட்டு, தாலாட்டு, தொழிலாளர்கள் பாட்டு முதலியவற்றைப் பாடி இசைத் தமிழை
வளர்த்தார்.


தோயுந்தேன் நிகர் தமிழாற்

பாடாமே தெலுங்கிசையைச்

சொல்லிப் பிச்சை

ஈயுங்கள் என்பீரோ.

செந்தமிழ் இசைப்பாடல்

இல்லையெனச் செப்புகின்றீர் மானமின்றிப்

பைந்தமிழில் இசையின்றேல்

பாழ்ங்கிணற்றில் வீழ்ந்துயிரை மாய்த்த லன்றி

எந்தமிழில் இசையில்லை

எந்தாய்க்கே உடையில்லை என்ப துண்டோ?


எனத் தமிழில் பாடுவதைப் பாவேந்தர் வற்புறுத்துகிறார். ‘கெடல் எங்கே தமிழின் நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க’ என ஆணையிட்டார் பாவேந்தர்.


முடிவுரை


            இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர்களாகிய பாரதியாரும் பாவேந்தரும் ஒரே காலத்தில் வாழ்ந்தனர், உணர்வால் ஒன்றினர். பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைத் தம்வழிப்படுத்தி பாவேந்தருக்கோ ஒரு பாட்டுப் பட்டாளமே தொடர்ந்தது. மக்களைப் உய்யும் வழிகாட்டினர். பாரதியாருக்கு ஒரு பாவேந்தர் கிட்டினார். பாடி மக்களிடம் செல்லாக் கவிதைகள், செல்லாக் கவிதைகளே எனத் தெளிந்தனர்.

            பாவேந்தர் பல துறைகளில் தம் இலக்கிய ஆளுமையைப் பதித்தவர் ; தமிழுக்குச் செய்ய வேண்டிய செயல்பாடுகளைத் ‘தமிழியக்கத்தில்’ காட்டியவர்; ‘நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்’ எனக் குடும்ப விளக்கில் ஒளியேற்றியவர்; பாரதியாரின் பாடல் அடிகளை வைத்தே பாடல் இயற்றிப் பாரதியாரின் பெருமையை உலகறியச் செய்து அவர் ‘ஓர் உலககவி’ ஒப்பற்ற கவி என நாட்டியவர். தமிழ் உள்ளவரை இருவரும் தமிழர் நெஞ்சில் நிற்பர். தமிழ் இலக்கியத்தின் எல்லா வடிவங்களையும் சமுதாய மாற்றத்திற்கான வெடி மருந்து களாய்ப் பயன்படுத்திய தனித்தன்மையும் பாரதிதாசனுக்கே உரியது.

தமிழனுக்கே வீழ்ச்சியில்லை; தமிழன் சீர்த்தி

தாழ்வதில்லை! தமிழ்நாடு தமிழ் மக்கள்

தமிழன் என்னும் பேருணர்ச்சி இந்நாள் போலே

தமிழ்நாட்டில் எந்நாளும் இருந்ததில்லை!

தமிழர்க்குத் தொண்டு செய்யும் தமிழனுக்குத்

தடைசெய்யும் நெடுங்குன்றும் தூளாய்ப் போகும்

தமிழுக்குத் தொண்டுசெய்வோன் சாவதில்லை

தமிழ்த் தொண்டன் பாரதிதாசன் செத்த துண்டோ?


சான்றெண் விளக்கம்


1.இரா.இளவரசு – இந்திய விடுதலை இயக்கத்தில் பாரதிதாசன், ப. 13-14,

2. ச.சு.இளங்கோ – பாரதிதாசன் பார்வையில் பாரதி ப.55,

3. ச.சு. இளங்கோ – பாரதிதாசன் பார்வையில் பாரதி ப.30

4.ச.சு. இளங்கோ –  பாரதிதாசன் பார்வையில் பாரதி ப.48,-31,

5. இரா.இளவரசு – நிறைந்த அன்புடன் . அணிந்துரைகள் ப.119-120,

6. ச.சு. இளங்கோ – பாரதிதாசன் பார்வையில் பாரதி ப.103,

7. ச.சு. இளங்கோ – பாரதிதாசன் பார்வையில் பாரதி ப.57,

8. இரா. இளவரசு – பாவேந்தரின் உலகநோக்கு ப. 4, 50, 82, 62,

9. ச.சு. இளங்கோ – பாரதிதாசன் பார்வையில் பாரதி ப.149,

10.ச.சு. இளங்கோ-பாரதிதாசன் பார்வையில் பாரதி ப.105

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர்.பி.தமிழகன்

Leave a Reply