சங்க இலக்கியங்களில் திருமண முறை
பழந்தமிழகத்தில் மக்கள் இல்லற வாழ்க்கையையே பெரிதும் பாராட்டிப் போற்றி வந்தனர். ஒருவனும் ஒருத்தியும் இணைந்து வாழ்வாங்கு வாழ்வாராயின் அவர்களுக்கு வீடுபேறு தானாக வந்தெய்தும் என்பது தமிழரின் கொள்கையாக இருந்தது. தான் வாழும் நிலத்தின் இயல்புக்கு ஏற்றவாறு மக்களின் வாழ்க்கை முறையும் பண்பாடு அமையும் என்பது பண்டைய தமிழரின் கொள்கையாக இருந்தது. பண்டைய தமிழ் மக்கள் அளவற்ற இன்பத்துடன் இல்வாழ்வில் ஈடுபட்டனர். தொழில் புரிவதை ஆடவர்கள் தம் உயிராக மதித்தனர். மகளிர் தம் கணவரைத் தம் உயிருக்கு நேராக வைத்துக் கருதினர்.
அகத்திணை
சங்க காலச் சான்றோர் வாழ்க்கையை அகமென்றும் புறமென்றும் இரண்டாக வகுத்தனர். ஒருவனும் ஒருத்தியும் தமக்குள் காதல் கொண்டு இன்புறும் ஒழுக்கத்தினை அகம் என்றும்; அதனைத் தவிர்த மற்ற நிகழ்வுகளைப் புறம் என்றும் கொண்டனர். சங்க இலக்கியங்களில் பெரும்பாலானப் பாடல்கள் அகச்செய்யுட்களாக அமைந்துள்ளன. அவை முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை எனும் ஐந்து திணைகளின் அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளன. அவை, அன்பின் ஐந்திணை என்று போற்றப்படுகின்றன. இவ்வைந்து நிலத்தின் பாகுபாடுகளுக்குத் ‘திணைகள்’ என்று பெயர். ‘திணை’ என்னும் சொல்லுக்குக் ‘குடி’ எனும் ஒரு பொருளும் உண்டு. குடிகள் வாழும் நிலமும் ‘திணை’ எனப்பட்டது. பிறப்பு, குடிமை முதலானவற்றால் ஒத்த தன்மையுடைய காதலர்பால் நிகழும் காதல் மட்டுமே அகத்திணை எனப்பட்டது. இதனைத் தொல்காப்பியர்,
“பிறப்பே குடிமை ஆண்மை யாண்டோ
டுருவு நிறுத்த காம வாயில்
நிறையே யருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே” (தொல். மெய் நூ.269)
எனக் குறிப்பிடுகின்றார். ஒருதலைக்காமம் கைக்கிளை என்றும், வரையறைக்குட்படாத மிகுகாமம் பெருந்திணையென்றும் பெயர்பெற்றன.
முல்லை முதலான திணைகளின் பெயர் ஐவகை நிலத்தின் அடிப்படையில் அமைந்துள்ளன. முல்லை இருத்தலையும், குறிஞ்சி புணர்தலையும், மருதம் ஊடலையும், நெய்தல் இரங்குதலையும், பாலை பிரிதலையும் குறித்த குறியீடு உரிப்பொருள் ஆகும். நிலமும் காலமும் முதற்பொருளாகும். தெய்வம், உணவு, மா, மரம், பறவை, விலங்கு ஆகியன கருப்பொருள்களாகும்.
களவும் கற்பும்
காதல் வாழ்க்கை களவு, கற்பு என இரண்டாகப் பகுக்கப்படுகிறது. ஊரறியாத வகையில் வயதுவந்த ஆணும், பெண்ணும் புணர்ந்து இன்புறும் நிகழ்வு களவெனப்பட்டது. தமரறிய – ஊரறியத் திருமணம் செய்துக் கொண்டு வாழும் வாழ்வு கற்பெனப்பட்டது. இதனை,
“கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே”
(தொல். கற்பு. நூ. 140)
எனும் தொல்காப்பிய நூற்பாவின் வழி அறியமுடிகிறது.
தலைவனும் தலைவியும் தம்முள் காதல் கொண்டு தாம் இணைந்து வாழ்வதற்குப் பெற்றோர் அனுமதிக்காத பட்சத்தில் தாமாகச் சென்றுத் திருமணம் செய்து கொண்டு கற்பு வாழ்க்கையை மேற்கொள்கின்றனர் என்பதை,
“கொடுப்போர் இன்றியும் கரண முண்டே
புணர்ந்துடன் போகிற காலை யான” (தொல். கற்பு. நூ.141)
எனும் நூற்பா உணர்த்துகிறது. இந்நிகழ்வு உடன்போக்கு எனக் குறிப்பிடப்படுகிறது.
உடன்போக்கு
பெற்றோர் அறியின் காதலுக்குத் தடை ஏற்படும் என்று அஞ்சிய காதலர்கள்; உடன்போக்கில் ஈடுபடுவர். ஒரு தாய் தன் மகள் உடன்போக்கு மேற்கொண்டதை அறிந்து புலம்புவாள், இதனை,
“தற்புரத் தெடுத்த எற்றுறந் துள்ளாள்
ஊரும் சேரியும் ஓராங்கு அலரெழக்
காடும் கானமும் அவனொடு துணிந்து
நாடும் தேயமும் நனிபல இறந்த
சிறுவெண் கண்ணி” (அகம். 383)
மகள் உடன்போக்கில் ஈடுபடுவது முன்பே தெரிந்திருந்தால் அவளை இல்லிற் செறித்திருக்கலாமே என்று வருந்துவாள்.
தன் மகள் காதலனோடு உடன்போக்கு மேற்கொண்டதை அறிந்த தாய்,
“பெரும்பெயர் வழுதி கூடல் அன்ன
அருங்கடி வியனகர் சிலம்பும் கழியாள்” (அகம். 315)
இன்னொரு தாய் தன் மகள் சிலம்பு கழிநோன்பு செய்ய நேர்ந்ததை எண்ணி வருந்தினாள். பிறகு அவர்களுடைய காதலின் உறுதியையும், நேர்மையையும் பாராட்டி அவர்களை அழைத்து வந்து பெற்றோர்கள் அவர்களுக்கு மணம் முடித்துவைப்பர். ‘இந்த உலகத்தையே நான் உனக்கு ஈடாகப் பெற்றாலும் நான் உன்னைக் கைவிடேன்’ என்று தலைவன் தலைவிக்கு உறுதி கூறுவான். உன் கூந்தலைப்போல நறுமணமுள்ள மலர் ஒன்றை இந்த உலகிலேயே நான் கண்டதில்லை என்று தன் காதலியின் கூந்தலைப் பாராட்டி இன்புறுவான்.
மடலேறுதல்
தம் மகள் காதலில் ஈடுபட்டது கண்டு அவளை மணம் செய்துக் கொடுக்கப் பெற்றோர் மறுத்தபோது தலைவன் தலைவியின் உருவத்தை துணியில் ஓவியமாக வரைந்துகொண்டு பனங்கருக்கினால் குதிரை ஒன்று செய்து அதன் மேல் ஏறி அமர்ந்துகொள்வான். இதனை ஊரரிய இழுத்துச் செல்வார்கள் ‘பனங்கருக்கினால் அறுப்புண்ட அவன் உடலில் குருதி வடியும்’இ ஊராரும், பெண்ணின் பெற்றோரும் அவன் துயரைக் கண்டு இரக்கங்கொண்டு அப்பெண்ணை அவனுக்கே மணம் முடிப்பார்கள். இதனை,
மாவென மடலும் ஊர்ப பூவெனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப
மறுகில் ஆர்க்கவும் படுப
பிரிதும் ஆகுப காமம் காழ்க் கொளினே” (குறுந். 17)
எனும் குறுந்தொகைப் பாடல் வழி அறியமுடிகிறது. இதனால், அன்று காதலுக்குத் தடையிருந்ததையும், சமூகத்தில் எதிர்ப்பு இருந்ததையும் அறியமுடிகிறது. காதல் திருமணம் பெரும்பான்மையாக இருந்தாலும், அன்றைய காலகட்டத்தில் ஒத்த குலத்தார் தத்தம் தகுதி நோக்கி உரிய இடத்தில் மணம்பேசி முடிப்பதே நடைமுறை வழக்கமாக இருந்திருக்கிறது. குலவேறுபாடோ, பொருளாதார ஏற்றத்தாழ்வோ காதல் திருமணத்திற்குப் பெற்றோர் உடன்படாமல் இருந்திருக்கலாம் என்பதை அறியமுடிகிறது. மேலும், பெண்கள் மடலேறுதல் இல்லை.
திருமணத்திற்குப் பொருத்தம் பார்த்தல்
தம் பெண்ணுக்கும், பிள்ளைக்கும் திருமணம் செய்ய விரும்புவோர் பொருத்தம் பார்த்தல் என்பது சங்ககாலத்தில் இருந்து தமிழர்களிடையே மரபாக பின்பற்றப்பட்டு வந்துள்ளது. அது இன்றும் நடைமுறையில் உள்ளது. இதனை, தொல்காப்பிய சூத்திரம் (தொல். மெய். நூ. 269) முதற் பொருத்தமாகப் பிறப்பைக் குறிக்கிறது. மேலும், அவனது குலத்தையும் குறிக்கிறது. குடிக்கு ஏற்ற ஒழுகலாறும், வயதும், தோற்றமும், இரு குடும்பங்களின் பொருளாதார நிலையையும் நோக்கப்பட்டது. இவை அனைத்தும் பொருந்தியிருப்பது உலகில் அருமை. எது இல்லாவிட்டாலும் பிறப்பு ஒத்திருக்க வேண்டும் என்பது அடிப்படையாக இருந்திருக்கலாம். எல்லா பொருத்தங்களும் உடையவர் எதிர்ப்பட்டுக் காதல் கொண்டனர் என்பது இலக்கிய மரபாகும்.
பரிசமளித்தல்
“பெண்ணுக்கு மணமகன் பரிசமளிக்கும் வழக்கம் தொன்று தொட்டு தமிழர்களிடையே மரபாக வந்துள்ளது. அன்று இது முலைவிலை, சிறுவளை விலை, பரியம் என்று குறிப்பிடப்பட்டது. பாசிழை விலை என்றும் பெயர் உண்டு.” இதனை,
“இருப்பிடம் படுத்த வடுவுடை முகத்தர்
கடுங்கண் கோசர் நியம மாயினும்
உறுமெனக் கொள்குனர் அல்லர்
நறுநுதலரிவை பாசிழை விலையே” (அகம். 90)
என்னும் பாடலடிகளின் வாயிலாக அறியமுடிகிறது. மேலும் இதனை,
“சிறுவளை விலையெனப் பெருந்தேர் பண்ணிஎம்
முன்கடை நிறீஇச் சென்றிசி னோனே” (நற். 300)
என்னும் பாடலடியும்,
“முழங்கு கடல் முழவின் முசிறி யன்ன,
நலஞ்சால் விழுப்பொருள் பணிந்து கொடுப்பினும்,
புரைய ரல்லோர் வரையலர் இவளென” (புறம். 345)
என்னும் சான்றுகளால் இதனை உணரலாம்.
திருமணச் சடங்குகள்
தமிழ்ச் சமுதாயம் வளர்ச்சி கண்டிறாத காலகட்டத்தில் எத்தகைய திருமண சடங்குகளும் இருந்திருக்க முடியாது. அந்தகாலகட்டத்தில் வயது வந்த ஆணும் பெண்ணும் தாமே கூடிக் குடும்பம் நடத்தியிருக்க வேண்டும். இச்சமூகம் நல்ல வளர்ச்சியை அடைந்த பிறகு பல்வேறு குலப்பிரிவுகள் தொழிலடிப்படையில் தோன்றிய பிறகு சில வரையறைகள் வகுத்தனர். தொல்காப்பியர் இதனை,
“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப”
என்னும் சூத்திரத்தால் அறியமுடிகிறது. காதலில் ஈடுபட்டவர்கள் பின்னர் அதனை இல்லை என்று மறுதலித்த நிலை ஏற்பட்டபோது. இக்கரண நிகழ்ச்சியை ஏற்படுத்தினர் என்பதை வெளிப்படுத்துகிறது.
திருமண நிகழ்வானது தொடங்கும் முன்பு கடவுள் வழிபாடு நடைபெறும். மூத்தோர், பெரியோர், பெற்றோர் நிறைந்த சபையில் இந்நிகழ்வு நடைபெறும். பெண்ணின் பெற்றோர் பெண் கொடுக்க மணமகன் ஏற்றுக் கொள்வதே கற்பு வாழ்வின் தொடக்கமாக இருந்தது. கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டு என்று தொல்காப்பியர் குறிப்பிடுவதால் எவ்வாறேனும் திருமண நிகழ்வொன்று நடத்தல் இன்றியமையாதது என்பது தொல்காப்பியர் கால நிலையாகும்.
“உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை
பெருஞ்சோற்று அமலை நிற்ப நிரை கால்
தண் பெரும் பந்தரத் தரு மணல்; ஞெமிரி
மனை விளக்குறுத்து, மாலை தொடரி,
கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை;
கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்
கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென,
உச்சிக் குடத்தர், புத்தகல் மண்டையர்,
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர
புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடி,
‘கற்பினின் வழாஅ, நற் பல நற் உதவிப்
பெற்றோர் பெட்கும் பிணையை ஆக! என,
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி”
(அகம். பா.86, வரி. 1 – 15)
திருமண நிகழ்வானது ஒரு நல்ல நாளில் திங்களும் உரோகிணியும் கூடிய நல்ல நாளில் திருமணம் நிகழ்ந்தது. வைகறைப் பொழுதில் மணவினை நிகழ்ந்தது. அதன் பின்பு மணமகளைப் பெண்கள் அனைவரும் ‘பேரிற் கிழத்தி ஆக’ என வாழ்த்தினர். பின்னர் பெற்றோர் மணமகளை மணமகனிடம் கொடுத்தனர். மண விழாவிற்கு வந்தவர்கட்கு உளுத்தம் பருப்புடன் கலந்த அரிசிப் பொங்கல் இடையறாது வழங்கப்பெற்றது. இறைச்சியும், நெய்யும் கூட்டி ஆக்கிய வெண்சோற்றையும் படைத்தனர் என்பதை அறியமுடிகிறது.
முடிவுரை
பழங்காலந்தொட்டு இன்றுவரை வயது வந்த ஆணும், பெண்ணும் தம்முள் காதல் கொண்டு காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற பொழுது அவர்கள் உடன்போக்கு மேற்கொண்டு திருமணம் செய்து இல்லற வாழ்க்கையை மேற்கொள்கின்றனர். தன் மகள் கொண்ட காதலை அறிந்த பெற்றோர் திருமணம் செய்து கொடுக்காத நிலையில் தலைவன் மடலேறுவான். இந்நிகழ்வைக் கண்ட தலைவியின் பெற்றோர்கள் அவர்களுக்குத் திருமணம் செய்துவைத்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது.
திருமண நிகழ்வானது, சங்ககாலத்திலிருந்து இன்றுவரை சடங்குகள் மரபாகத் தொடர்ந்து தமிழர்களிடையே கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளன. திருமணப் பொருத்தம் பார்த்தல், பரிசமளித்தல் போன்ற திருமண சடங்குகள் காலந்தோறும் தொடர்ந்து தமிழ் மக்களிடையே பின்பற்றப்பட்டு வந்துள்ளன. சங்க காலத்திற்கு முற்பட்ட காலத்தில் காதல் வாழ்வு சிறப்புற்றிருந்தது. அதற்கு பிற்பட்ட காலத்திலிருந்து, பெரும்பாலும் காதல் திருமணங்களுக்கு அன்று முதல் இன்று வரை எதிர்ப்பு இருந்து கொண்டே வருகிறது என்பதும் அறியப்படுகிறது.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
ல.திலிப்குமார்,
முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை,
அரசு ஆடவர் கலைக்கல்லூரி,
கிருட்டினகிரி – 635 001.
ஆசிரியரின் பிறக்கட்டுரை
1.தொல்காப்பிய ‘அசை’க் கோட்பாடுகளும் பிற்கால யாப்பியல் கூறுகளும்