சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது சொற்றொடர் எனப்படும். இதனை வாக்கியம் என்று கூறுவர். நம் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்க அடிப்படையாக இருப்பது வாக்கியமே ஆகும். வாக்கியம் அமைத்துத் தருவதற்கு முன்னர் எழுவாய், பயனிலை, செயப்படபொருள் ஆகியவற்றை அறிந்திருப்பது அவசியமானதாகும்.
எழுவாய்
ஒரு வாக்கியத்தின் முதலில் வருவது. பெயராகவும் அமையும்.
பயனிலை
ஒரு வாக்கியத்தின் வினையை (அ) செயலைக் குறிப்பது.
செயப்படு பொருள்
ஒரு வாக்கியத்தின் வினைச்சொல்லிற்கு முன் எதை ? யாரை ? என்ற கேள்விகளுள் ஒன்றைச் சேர்த்து கேள்வியாக அமைத்துக் கேட்கக் கிடைக்கும் விடையே செயப்படுபொருள் ஆகும்.
(உம்) ஆசிரியர் மாணவனை அடித்தார்
இந்த சொற்றொடரில் அடித்தார் என்பது வினைச்சொல் ஆகும். அடித்தார் என்னும் சொல்லுக்கு முன் யாரை? என்ற சொல்லைச் சேர்த்து யாரை அடித்தார்? என்று கேள்வி கேட்க மாணவனை என்ற விடை கிடைக்கிறது எனவே மாணவனை என்பதே செயப்படுபொருள் ஆகும்.
எழுவாய் – இளங்கோவடிகள்
செயப்படுபொருள் – சிலப்பதிகாரத்தை
பயனிலை – இயற்றினார்.
கீழ்க்கண்ட வாக்கியங்களை வரிசையாகப் பார்க்கலாம்
தன்வினை வாக்கியம் – பிறவினை வாக்கியம்
1. தன்வினை
கருத்தா தானே செய்யும் செயலை உணர்த்துவது தன்வினை வாக்கியம் ஆகும். (எழுவாய் தானே ஒரு செயலை செய்தல்)
(உம்) கோதை பாடம் கற்றாள்
கண்ணன் பொம்மை செய்தான்
2. பிறவினை
கருத்தா பிறரைக் கொண்டு தொழில் செய்வித்தலை உணர்த்துவது பிறவினை வாக்கியம் ஆகும். (எழுவாய் ஒரு செயலை பிறரைக் கொண்டு செய்வித்தல்)
(உம்) கோதை பாடம் கற்பித்தாள்
கண்ணன் பொம்மை செய்வித்தான்
தன்வினையைப் பிறவினையாக்கும்போது செய்ய வேண்டியவை :
1. தன்வினைப் பகுதியில் உள்ள மெல்லின மெய்யை வல்லின மெய்யாக மாற்றவேண்டும். எ.கா. திருந்தினான் – திருத்தினான்
2. தன்வினைப் பகுதியில் உள்ள வல்லின மெய் எழுத்தை இரட்டிக்க வேண்டும்.
எ.கா. பழகினாள் – பழக்கினாள்
3. தன்வினை பகுதியுடன் வி.பி.கு,கூடுது,பு,று என்னும் விகுதிகளில் ஒன்றைச் சேர்க்க வேண்டும்.
வ.எண் | தன்வினை | பிறவினை |
1 | திருந்தினான் | திருத்தினான் |
2 | உருண்டான் | உருட்டினான் |
3 | உண்டாள் | உண்பித்தாள் |
4 | ஆடினார் | ஆட்டுவித்தார் |
5 | கண்டான் | காண்பித்தான் |
6 | உழுதார் | உழுவித்தார் |
7 | செய்தான் | செய்வித்தான் |
8 | படித்தான் | படிப்பித்தான் |
9 | கற்றான் | கற்பித்தான் |
10 | எழுது | எழுதுவி |
11 | படி | படிப்பி |
12 | இறங்கு | இறக்கு |
13 | உருள் | உருட்டு |
14 | நட | நடத்து |
15 | எழு | எழும்பு |
16 | மருள் | மருட்டு |
17 | பயின்றான் | பயிற்றுவித்தான் |
18 | வந்தான் | வருவித்தான் |
19 | ஓடினான் | ஓட்டினான் |
20 | வளைத்தான் | வளைவித்தான் |
உதாரணங்கள்
1. மாதவி நடனம் பழகினாள் (தன்வினை)
மாதவி நடனம் பழக்கினாள் ( பிறவினை)
2.கண்ணன் கடிதம் எழுதினான் (தன்வினை)
கண்ணன் கடிதம் எழுதுவித்தான் ( பிறவினை)
3.இராமன் வில்லை வளைத்தார் (தன்வினை)
இராமன் வில்லை வளைவித்தார் ( பிறவினை)
4. மணிவாசகன் புத்தகங்களை எடுத்து வந்தான் (தன்வினை)
மணிவாசகன் புத்தகங்களை எடுத்து வருவித்தான் ( பிறவினை)
5.சிற்பி கோவில் கட்டினார் (தன்வினை)
சிற்பி கோவில் கட்டுவித்தார் ( பிறவினை)
6.திருக்குறள் கற்றேன் (தன்வினை)
திருக்குறள் கற்பித்தேன் ( பிறவினை)
7.நண்பருடன் விருந்து உண்டேன் (தன்வினை)
நண்பரை விருந்து உண்பித்தேன் ( பிறவினை)
செய்வினை வாக்கியம் – செயப்பாட்டு வினை வாக்கியம்
3. செய்வினை
எழுவாயே செயலைச் செய்வதாகக் கூறுவது செய்வினை வாக்கியம். எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமைதல் வேண்டும். செயப்படு பொருளோடு ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபைச் சேர்க்க வேண்டும். (ஐ – உருபு மறைந்தும், வெளிப்பட்டும் வரும் )
(உம்) இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்
4.செயப்பாட்டுவினை
செயப்படுபொருள், எழுவாய், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமைதல் வேண்டும். எழுவாயோடு ஆல் என்ற மூன்றாம் வேற்றுமை உருபைச் சேர்க்க வேண்டும். பயனிலையோடு படு, பட்டது எனும் சொற்களைச் சேர்த்து ( படு துணை வினை) அமைத்தல் செயப்பாட்ட வினை வாக்கியம் எனப்படும்.
(உம்) சிலப்பதிகாரம் இளங்கோவடிகளால் இயற்றப்பட்டது
உதாரணங்கள்
1.திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார் (செய்வினை)
திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது. (செயப்பாட்டுவினை)
2.குடியரசுத்தலைவர் விருது வழங்கினார். (செய்வினை)
விருது குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது. (செயப்பாட்டுவினை)
3.பாரதிதாசன் என்றென்றும் நிலைத்து நிற்கும் இலக்கியங்களைப் பாடினார். (செய்வினை)
என்றென்றும் நிலைத்து நிற்கும் இலக்கியங்கள் பாரதிதாசனால் பாடப்பட்டது. (செயப்பாட்டு வினை)
4. மாணவர்கள் வகுப்பைத் தூய்மை செய்தனர் (செய்வினை)
வகுப்பு, மாணவர்களால் தூய்மை செய்யப்பட்டது. (செயப்பாட்டு வினை)
5.ஆசிரியர் இலக்கணம் கற்பித்தார் (செய்வினை)
இலக்கணம். ஆசிரியரால் கற்பிக்கப்பட்டது (செயப்பாட்டு வினை)
6.தச்சன் நாற்காலியைச் செய்தான் (செய்வினை)
நாற்காலி தச்சனால் செய்யப்பட்டது (செயப்பாட்டு வினை)
7.நாடகக் கலைஞர்கள் நாட்டுப்பற்றை வளர்த்தனர். (செய்வினை)
நாட்டுப் பற்று நாடகக் கலைஞர்களால் வளர்க்கப்பட்டது (செயப்பாட்டு வினை)
8. மூவர் தேவாரம் பாடினார்கள் (செய்வினை)
தேவாரம் மூவரால் பாடப்பட்டது. செயப்பாட்டு வினை)
(செய்வினை வாக்கியத்தில் எழுவாயாக இருப்பது செயப்பாட்டு வாக்கியத்தில் செயப்படுபொருளாக மாறி அமைவதைக் காண்க).
தன்வினைக்கும் செய்வினைக்கும் உள்ள வேறுபாடு
© தன்வினை என்பது யார் வேண்டுமானாலும் செயலை செய்ய முடியும்.
© செய்வினை என்பது ஒரு காரியத்தை அவரால் மட்டுமே செய்ய முடியும் என்று கூறுவது.
நேர்க்கூற்று வாக்கியம் – அயற்கூற்று வாக்கியம்
5.நேர்க்கூற்று
ஒருவர் கூறியதை எவ்வித மாற்றமும் இல்லாமல் அப்படியே எடுத்துக் கூறுவது நேர்க்கூற்று ஆகும். மேற்கோள் குறியீடு இடம் பெறும். தன்மை, முன்னிலைப் பெயர்கள் இடம் பெறும்.
(உம்) “நான், நாளை உன் இல்லத்திற்கு வருவேன்” என்று இமயவரம்பன் கபிலனிடம் கூறினான்.
நான் நாளை உன் இல்லத்திற்கு வருவேன் என்ற செய்தியை இமயவரம்பன், கபிலனிடம் நேரில் கூறினான். எனவே, இது நேர்க்கூற்று வாக்கியம் எனப்படும்.
6.அயற்கூற்று
ஒருவர் முன்னிலையாய் நேரில் கூறியதைப் படர்க்கை இடத்திற்கு ஏற்றாற்போலச் சொற்களை மாற்றிப் பொருள் மாறாதவாறு அயலார் கூறுவது போல் சொல்லவது அயற்கூற்று எனப்படும். மேற்கோள் குறியீடு இடம்பெறாது. தன்மை, முன்னிலைப் பெயர்கள் படர்க்கைப் பெயரில் மாறி அமையும்.
(உம்) தாய்மொழியைப் போற்றுமாறு ஆசிரியர் மாணவர்களிடம் கூறினார்.
தாய்மொழியை உயிராகப் போற்றுங்கள் என்பது மாணவர்களை முன்னிலைப்படுத்திக் ஆசிரியர் கூறியது. இச்செய்தியை அயலாருக்குக் கூறுவதுபோல் பொருள் மாறாதவாறு இவ்வாக்கியம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இது அயற்கூற்று வாக்கியம் எனப்படும்.
நேர்க்கூற்றை அயற்கூற்றாக மாற்றும்போது வேறுபடும் சொற்கள் :
வ.எண் | நேர்க்கூற்று | அயற்கூற்று |
1 | இது, இவை | அது, அவை |
2 | இன்று | அன்று |
3 | இப்பொழுது | அப்பொழுது |
4 | இதனால் | அதனால் |
5 | நாளை | மறுநாள் |
6 | நேற்று | முன்னாள் |
7 | நான், நாம், நாங்கள் | தான், தாம், தாங்கள் |
8 | நீ | அவன், அவள் |
நேர்க்கூற்றை அயற்கூற்றாக மாற்றுவதற்கு
“புலவரே, பரிசைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று அரசன் கூறினான். – நேர்க்கூற்று வாக்கியம்
1. முன்னிலை விளிப்பெயரைப் படர்க்கைப் பெயராக சேர்க்க வேண்டும். (புலவரே) – புலவர்
2. அப்பெயருடன் தக்கவாறு வேற்றுமை உருபைச் சேர்க்க வேண்டும். (புலவர்+இடம்) – புலவரிடம்
3. ஏவல் வினையை எச்ச வினையாக மாற்ற வேண்டும். (பெற்றுக் கொள்ளுங்கள்)- பெற்றுக்கொள்ளுமாறு அரசன் கூறினான்.
4. பின்னர் கூறியவர் பெயரைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
புலவரிடம் பரிசைப் பெற்றுக் கொள்ளுமாறு அரசன் கூறினான் – அயற்கூற்று வாக்கியம்
அயற்கூற்றை நேர்க்கூற்றாக மாற்றுவதற்கு
கீரை வாங்கி வருமாறு தாய் மகனிடம் கூறினார். அயற்கூற்று வாக்கியம்
1.படர்க்கையில் வேற்றுமை உருபு பெற்றிருக்கும் பெயரை (மகனிடம் = மகன் + இடம்) ‘மகன்’ என விளிக்கும் சொல்லாக (அழைக்கும் பொருளில்) மாற்ற வேண்டும்.
2. வருமாறு என்னும் வினையெச்சத்தை ‘வா’ என முன்னிலை ஏவல் வினையாக மாற்ற வேண்டும். இவ்வாறு மாற்றியமைத்தால் “மகனே! கீரை வாங்கிவா” என நேர்க்கூற்றாக அமையும்.
3. இதனுடன் கூறியவர் பெயரையும் ‘என்று’ என்னும் சொல்லையும் சேர்த்தல் வேண்டும்.
“மகனே! கீரை வாங்கி வா” என்று தாயார் கூறினார் – நேர்க்கூற்று வாக்கியம்.
உதாரணங்கள்
1.”நாளை நான் மதுரை செல்வேன்” என்று நன்மாறன் கூறினான். (நேர்க்கூற்று )
மறுநாள் தான் மதுரை செல்வதாக நன்மாறன் கூறினான். (அயற்கூற்று )
2.”நான் புத்தகம் கொண்டு வருகிறேன்” என்று செல்வி தோழியிடம் கூறினாள். ( நேர்க்கூற்று )
செல்வி தோழியிடம் தான் புத்தகம் கொண்டு வருவதாகக் கூறினாள். (அயற்கூற்று )
3. இசையாசிரியர், ”மாணவர்களே நீங்கள் நாள்தோறும் பாடிப் பழக வேண்டும்” என்றார். ( நேர்க்கூற்று )
இசையாசிரியர் மாணவர்களிடம் நாள்தோறும் பாடிப் பழகும்படி கூறினார். (அயற்கூற்று )
4. அமைச்சர், ”அரசே! நீங்கள் செங்கோல் வழுவாது ஆட்சி செய்ய வேண்டும்” என்றார். ( நேர்க்கூற்று )
அமைச்சர் அரசனிடம் செங்கோல் வழுவாது ஆட்சி செய்ய வேண்டும் என்றார். அயற்கூற்று )
5.”நான் நாளை மதுரை செல்வேன்” என்று மாறன் கூறினான்.
மறுநாள் தான் மதுரை செல்வதாக மாறன் கூறினான்.
உடன்பாட்டு வாக்கியம் – எதிர்மறை வாக்கியம்
7. உடன்பாட்டு வாக்கியம்
செயல் அல்லது தொழில் நிகழ்வதைத் தெரிவிப்பது.
(உம்) வயலில் மாடுகள் மேய்ந்தன.
8. எதிர்மறை வாக்கியம்
செயல் அல்லது தொழில் நிகழாமையைத் தெரிவிப்பது.
(உம்) வயலில் நேற்று மாடுகள் மேய்ந்தில,
உதாரணங்கள்
1.தமிழ்ச்செல்வி புதுவைக்குச் சென்றாள்
தமிழ்ச்செல்வி புதுவைக்கு சென்றிலள்.
2.இனியன் உணவு உண்டான்
இனியன் உணவு உண்டிலன்.
3.கல்விச் செல்வத்தை அனைவரும் போற்றுவர்
கல்விச் செல்வத்தைப் போற்றாதவர் எவரும் இலர்
4.குடும்பத்தலைவிக்குப் பொறுப்பு உள்ளது
பொறுப்பில்லாத குடும்பத்தலைவி இலள்
5.திருவள்ளுவரைப் போற்றாதவர் இலர்
திருவள்ளுவரை போற்றுவர் அனைவரும்
6. ஆசிரியர்களுக்கு என்றும் செல்வாக்கு உண்டு.
ஆசிரியர்களுக்கு என்றும் செல்வாக்கு இல்லாமல் இல்லை
7. போட்டியில் சிலர்தான் வெற்றி பெற முடியும்
போட்டியில் எல்லோராலும் வெற்றி பெற முடியாது.
9. செய்தி வாக்கியம்
ஒரு செய்தியைத் தெளிவாகத் தெரிவிக்கும் வாக்கியம் செய்தி வாக்கியம் எனப்படும்.
(உம்) மாணவர்கள் சிறந்த முறையில் தேர்வு எழுதினர்.
குடியரசுத் தலைவர் சென்னைக்கு வருகை தந்தார்.
இளமையில் கற்க வேண்டும்
வள்ளுவர் கோட்டம் மிக அழகாக அமைந்திருக்கிறது
10.உணர்ச்சி வாக்கியம் (அ) வியப்பு வாக்கியம்
மகிழ்ச்சி, துன்பம், வியப்பு போன்ற, உள்ளத்து உணர்வுகள் வெளிப்படுமாறு அமைவது உணர்ச்சி வாக்கியம் எனப்படும்.
(உம்) ஆ! வானத்து விண்மீன்கள் என்னே அழகு!
ஐயோ! பேரறிஞர் அண்ணா மறைந்தாரே!
என்னே! வள்ளுவர் கோட்டத்தின் அழகு !
11. கட்டளை வாக்கியம் (அ) ஏவல் வாக்கியம்
விழைவு. வேண்டுகோல், வாழ்த்தல், வைதல் ஆகியவற்றுள் ஒன்றைத் தெரிவிக்கும் வாக்கியம் கட்டளை வாக்கியம் எனப்படும்.
(உம்) மாணவர்கள் சீருடையில் பள்ளிக்கு வருக.
அனைவரும் தாய்மொழியைப் போற்றுக.
இளமையில் கல்
12.வினா வாக்கியம்
வினாப் பொருள் தரும் வாக்கியங்களை வினா வாக்கியம் என்று அழைப்பர்.
(உம்) குழந்தைக்கு என்ன தெரியும்?
உண்மைக்கு அழிவில்லை அல்லவா?
13. தனிவாக்கியம்
ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடியும். அதனை தனி வாக்கியங்கள் என்று அழைப்பர்.
(உம்) திரு.வி.க பெண்களைப் போற்றினார்.
கம்பன், வள்ளுவன், இளங்கோ ஆகியோர் இயற்கையை போற்றினர்.
14.தொடர்வாக்கியம்
தனிவாக்கியங்கள் பல தொடந்து வரும். ஓர் எழுவாய், பல பயனிலைகளைப் பெற்று வருவது தொடர் வாக்கியம் எனப்படும்.
(உம்) அரசன் புலவரைக் கண்டான்; அவரை வரவேற்றான்; பரிசு வழங்கினான்.
15.கலவை வாக்கியம்
ஒரு முதன்மை வாக்கியம் ஒரு துணை வாக்கியத்துடன் சேர்ந்தும் ஒன்றுக்கு மேற்பட்ட துணை வாக்கியங்களுடன் சேர்ந்தும் வரும்.
(உம்) யார் கல்விச்செல்வம் பெறுகிறார்களோ அவர்கள் வாழ்வில் வளம்பெறுவர்.
16.விழைவு வாக்கியம்
கட்டளை, வேண்டுகோள், வாழ்த்துதல், வைதல் ஆகியவற்றுள் ஒன்றைத் தெரிவிக்கும் வாக்கியம் எனப்படும்.
(உம்) தமிழ்ப்பாடத்தை முறையாகப் படி (கட்டளை )
நல்ல கருத்துகளை நாளும் கேட்க (வேண்டுகோள்)
வையத்துள் வாழ்வாங்கு வாழ்க (வாழ்தல்)
தியவை ஒழிக (வைதல்)
பயிற்சிகள்
1. மக்களால் மழைநீர் சேமிக்கப்பட்டது – செய்வினை வாக்கியமாக மாற்றுக
2. கனிமொழி கட்டுரை எழுதினாள் – செயப்பாட்டு வினை வாக்கியமாக மாற்றுக
3. காமராசரை அறியாதவர் எவரும் இலர் – உடன்பாட்டு வாக்கியமாக மாற்றுக
4.நற்செயல்களை அனைவரும் போற்றுவர் – எதிர்மறை வாக்கியமாக மாற்றுக
5. மாதவி நடனம் கற்பித்தாள் – தன்வினை வாக்கியமாக மாற்றுக
6. மாறன் மாட்டை ஓட்டினான் – பிறவினை வாக்கியமாக மாற்றுக
7. தந்தை மகனிடம் நன்கு படிக்கும்படி கூறினார் – நேர்க்கூற்றாக மாற்றுக
8. முதலாளி, தொழிலாளியிடம், ”நேர்மையாக உழைக்க வேண்டும்” என்று கூறினார் – அயற்கூற்றாக மாற்றுக
9. நாள்தோறும் உடற் பயிற்சி செய்க – செய்தி வாக்கியமாக மாற்றுக
10. திருவள்ளுவர் சிலை அழகாக உள்ளது – வினாவாக்கியமாக மாற்றுக
11. ஒவ்வொருநாளும் செய்தித்தாளைப் படிக்க வேண்டும் – கட்டளை வாக்கியமாக மாற்றுக
12. ஓவியம் மிக அழகாக உள்ளது – உணர்ச்சி வாக்கியமாக மாற்றுக
13, காந்தியடிகள், அயராது போராடினமையால் சுதந்தpரம் பெற்றுத் தந்தார் – தனிவாக்கியமாக மாற்றுக.
14. நம்பி, பள்ளியில் முதல் மாணவனாகத் திகழ்ந்தான் – தொடர் வாக்கியமாக மாற்றுக
15. அயராது படித்ததால் கந்தன் கடுமையாக உழைத்தான் ; அதனால் பொருள் ஈட்டினான் – கலவை வாக்கியமாக மாற்றுக