தமிழ் மொழியில் எழுதும்போது எழுத்துப்பிழைகள் இல்லாமல் எழுதுவதே மிக நன்று. பிழைகளோடு எழுதினால் நாம் சொல்ல வந்த கருத்துக்கு மாறாகவும் வேறொரு செய்தியாகவும் மாறக்கூடும். அதனால் சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதுதல் வேண்டும்.
இவற்றில் முதலாவதாகச் சந்திப்பிழைகளைப் பார்க்கலாம். தேவையான இடத்தில் மட்டுமே ஒற்றுகளைப் பயன்படுத்த வேண்டும். அதற்கு ஒருசில விதிமுறைகளும் உண்டு. மற்ற இடங்களில் ஒற்று போட வேண்டும் என்ற அவசியமில்லை.
1.அது, இது, அவை, இவை என்னும் சுட்டுச்சொற்களின் பின்னும் எது ? யாது ? எவை ? என்னும் வினாச்சொற்களின் பின்னும் வல்லினம் மிகாது.
அது + போயிற்று = அது போயிற்று
இது + பறந்தது = இது பறந்தது
அவை + பறந்தன = அவை பறந்தன
எது + கண்டது = எது கண்டது ?
யாது + சொல் = யாது சொல் ?
எவை + போயின = எவை போயின?
2. அத்தனை, இத்தனை, எத்தனை எனும் சொற்களின் பின் வல்லினம் மிகாது.
அத்தனை + பழங்களா = அத்தனை பழங்களா
இத்தனை + பூக்களா = இத்தனை பூக்களா
எத்தனை + பெண்கள் = எத்தனை பெண்கள்
3.வினாவை உணர்த்தும் ஆ,ஓ,ஏ,யா என்னும் வினா எழுத்துகளில் வல்லினம் மிகாது.
அவளா + தைத்தாள் = அவளா தைத்தாள்
இவளோ +போனாள் = இவளோ போனாள்
அவனே + செல்வான் = அவனே செல்வான்
4.சில, பல என்னும் சொற்களுக்குப் பின் வல்லினம் மிகாது.
சில + குடிசைகள் = சில குடிசைகள்
பல + சொற்கள் = பல சொற்கள்
5.விளிப்பெயர், வியங்கோள் வினைமுற்று ஆகியவற்றின் பின் வல்லினம் மிகாது.
கண்ணா + கேள் = கண்ணா கேள்
வேலா + சொல் = வேலா சொல்
வாழ்க + தமிழ் = வாழ்க தமிழ்
6.எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது.
நாய் + போனது = நாய் போனது
அழகன் + படித்தான்= அழகன் படித்தான்
7.வினைத்தொகையில் வல்லினம் மிகாது.
ஊறு + காய் = ஊறு காய்
ஆடு + கொடி = ஆடு கொடி
விரி + கதிர் = விரி கதிர்
8.இரண்டாம் வேற்றுமைத்தொகை மறைந்து வந்தால் வல்லினம் மிகாது.
தமிழ் + கற்றார் = தமிழ் கற்றார்
நீர் + குடித்தான் = நீர் குடித்தான்
துணி + துவைத்தான் = துணி துவைத்தான்
9.மூன்றாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகாது.
அழகனோடு + சென்றான் = அழகனோடு சென்றான்
பூவோடு + சேர்ந்து = பூவோடு சேர்ந்து
10.ஐந்தாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகாது.
வீட்டிலிருந்து + பார்த்தான் = வீட்டிலிருந்து பார்த்தான்
11.ஆறாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகாது.
எனது + புத்தகம் = எனது புத்தகம்
12.உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது.
தாய் + தந்தை = தாய் தந்தை
இரவு + பகல் = இரவு பகல்
காய் + கனி = காய் கனி
13.ஈறுகெட்ட பெயரெச்சங்களின் பின் வல்லினம் மிகாது
நல்ல + குழந்தை = நல்ல குழந்தை
படித்த + பெண் = படித்த பெண்
செய்யாத + செயல் = செய்யாத செயல்
14. அடுக்குத் தொடரில் வல்லினம் மிகாது.
தீ + தீ = தீ தீ
பாம்பு + பாம்பு = பாம்பு பாம்பு
15.சில ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது.
வள்ளுவர் + கருத்து = வள்ளுவர் கருத்து
ஒளவை + சொல் = ஒளவை சொல்
16. அவை, இவை என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகாது.
அவை + போயின = அவை போயின
இவை + செய்தன = இவை செய்தன
17. வினைமுற்றுத் தொடரில் வல்லினம் மிகாது.
வந்தது + கப்பல் = வந்தது கப்பல்
வந்தன +குதிரைகள் = வந்தன குதிரைகள்
18. படியென்னும் சொல் வினையோடு சேர்ந்து வருமிடத்தில் வல்லினம் மிகாது.
வரும்படி + கூறினான் = வரும்படி கூறினான்
போகும்படி + சொன்னான் = போகும்படி சொன்னான்
19 உயர்திணைப் பொதுப்பெயர்களின் பின் வல்லினம் மிகாது.
தொழிலாளர் + தலைவர் = தொழிலாளர் தலைவர்
மாணாக்கர் + கூடினர் = மாணாக்கர் கூடினர்
தாய் + பாடினாள் = தாய் பாடினாள்
20. அஃறிணை பன்மை வினைமுற்றின் பின் வல்லினம் மிகாது.
முழங்கின + சங்குகள் = முழங்கின சங்குகள்
பாடின + குயில்கள் = பாடின குயில்கள்
21. எட்டு, பத்து தவிர மற்ற எண்களின் பின் வல்லினம் மிகாது.
ஒன்று + கொடு = ஒன்று கொடு
இரண்டு + பேர் = இரண்டு பேர்
மூன்று + கிளி = மூன்று கிளி
22. இரட்டைக் கிளவியில் வல்லினம் மிகாது.
கல + கல =கலகல
பள + பள= பளபள
23. இரண்டு வடசொற்கள் சேரும்போது வல்லினம் மிகாது.
சங்கீத + சபா = சங்கீதா சபா
மகாஜன + சபா = மகாஜன சபா
24. சில வினையெச்சத் தொடரில் வல்லினம் மிகாது.
வந்து + போனான் = வந்து போனான்
செய்து + கொடுத்தான் = செய்து கொடுத்தான்
25. எழுவாய்த் தொடரில் வரும் வல்லினம்
கண்ணகி + பார்த்தாள் = கண்ணகி பார்த்தாள்
பூவிழி + தந்தாள் = பூவிழி தந்தாள்
தங்கை + கேட்டாள் =தங்கை கேட்டாள்
26.வல்லின றகர, டகரத்தின் ஒற்று மிகாது.
(எ.கா) கற்க – சரி கற்க்க – தவறு
பயிற்சி – சரி பயிற்ச்சி – தவறு