மௌனமே சிறந்த பதிலடி|தன்னம்பிக்கை கட்டுரைகள்|முனைவர் ஈ.யுவராணி

மௌனமே சிறந்த பதிலடி
கௌதமபுத்தர், ஒரு வழியில் நடந்து சென்றார்.  அப்போது எதிரே வந்த ஒருவன் மிகுந்த கோபத்துடன் புத்தர் முகத்தில் காரி எச்சிலை துப்பினான். தன் மேல்துண்டால் துடைத்து விட்டு. “இன்னும் எதாவது சொல்ல விரும்புகிறாயா..?” என்றார் புத்தர். அருகில் நின்ற ஆனந்தாவுக்கு கோபம் வந்தது. புத்தர் ஆனந்தாவை பார்த்து சொன்னார் “ஆனந்தா.  இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார். ஆனால் அவருக்கு வார்த்தைகள் இல்லாததால் இந்த செயலை செய்து விட்டார். வார்த்தைகள் பலவீனமானவை இவர் என்ன செய்ய முடியும்..?” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். துப்பியவனுக்கு அன்று முழுவதும் குற்ற உணர்வால் நித்திரையே வரவில்லை. அடுத்த நாள் காலை புத்தரை தேடியலைந்து கண்டு அவரது காலில் விழுந்து அழுதான்.. அப்போதும் புத்தர் ஆனந்தாவை பார்த்து சென்னார்.  “இன்றும் இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார் ஆனந்தா..! ஆனால் வார்த்தைகள் பலவீனமானதால் இச்செயலை செய்துவிட்டார்..!” என்றார். அவன் எழுந்து கேட்டான். “நான் துப்பிய போது நீங்கள் ஏன் திருப்பி ஒரு வார்த்தைகூட ஏசவில்லை..?” என்று. அப்போது புத்தர் அழகான பதில் சொன்னார்.  “நீ எண்ணியது போல் நடக்க நான் என்ன உன் அடிமையா.. ?”

உனக்கு நீயே கேட்டுப்பார்
    
ஒரு கனவை நீங்கள் மட்டும் கண்டுகொண்டிருப்பது வெறும் கனவாகத்தான் இருக்கும். கனவோடு இணைந்து பயணம் செய்தால்தான் அது நிஜமாகும்’ என்கிறார் ஜப்பானைச் சேர்ந்த நடிகையும் அமைதிப் போராளியுமான யோகோ ஓனோ (Yoko Ono). இதற்கு எல்லோருக்கும் தெரிந்த சாவியைத் தொலைத்த முல்லர்வின் கதையை உதாரணமாகச் சொல்லலாம். ஒருநாள் ஊருக்கு வெளியே எதையோ தேடிக்கொண்டிருந்தாராம் முல்லா நஸ்ருதீன். ஒருவர் அவரிடம், என்ன தேடுகிறீர்கள்?’ என்று கேட்டிருக்கிறார். என் சாவியைத் தேடுகிறேன்’ என்று சொல்லியிருக்கிறார் முல்லா. எங்கே தொலைத்தீர்கள்?’ என்று அவர் கேட்டதற்கு, வீட்டுக்கருகில்’ என்று பதில் சொன்னாராம். ஆச்சர்யப்பட்டுப் போன அந்த ஊர்க்காரர், வீட்டுக்கருகே சாவியைத் தொலைத்துவிட்டு இங்கே வந்து தேடுகிறீர்களே?’ என்றாராம். இங்கேதானே வெளிச்சமாக இருக்கிறது?’ என்று ஒரு போடு போட்டாராம் முல்லா. இது போலத்தான். நம்மில் பலருக்கும் பல லட்சியங்கள் இருக்கும்; அதை அடைவதற்கான முயற்சியில்தான் பலரும் தோற்றுப் போகிறார்கள். வாழ்வில் நம் இலக்கை அடைவது எப்படி என்று யாரும் வந்து நமக்குப் பாடம் எடுக்க மாட்டார்கள்; கற்றுக் கொடுக்கவும் மாட்டார்கள். நாம்தான் நமக்கான குறிக்கோளை வகுத்துக்கொண்டு இலக்கை அடையப் போராட வேண்டும். அதற்கு அத்தியாவசியமாக ஒன்று வேண்டும். அது இருந்தால் வெற்றி எளிது. அது என்ன? தன்னம்பிக்கை. நம் பலம் நமக்கே தெரியாதது. அதனால்தான் வெற்றி கைநழுவிப் போகிறது; பலரால் இலக்கை எட்ட முடியாமல் போகிறது. அந்த யதார்த்தத்தை விளக்குகிறது இந்தக் கதை.
    
ஒரு மனிதருக்குப் பெரிய கனவு இருந்தது. அது என்ன கனவு என்பது இங்கே முக்கியமில்லை. வேண்டுமானால், சினிமாவில் ஹீரோவாக வேண்டும்’, சென்னை அண்ணாசாலையில் எல்.ஐ.சி மாதிரி ஒரு கட்டடம் கட்டி அதற்கு உரிமையாளராக வேண்டும்’, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிவிட வேண்டும்’. இப்படி ஏதோ ஒரு பெருங்கனவு என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், அந்த மனிதர் ஒரு கட்டத்தில் தன் கனவு நனவாகும் என்கிற நம்பிக்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிட்டார். தன் கனவை அடையத் தன்னிடம் போதுமான பலம் இல்லை என்று கருதினார். யாரிடமாவது உதவி கேட்க வேண்டும் என்றும் அவருக்குத் தோன்றியது. முதலில் அந்த மனிதருக்கு நினைவுக்கு வந்தது வயதான அவருடைய அம்மா. அவரிடம் கேட்டுவிடுவது என்று முடிவெடுத்தார்.
     
ஒருநாள் தன் அம்மாவோடு அவர் கிளினிக்குக்குச் செல்லவேண்டியிருந்தது. அது வீட்டுக்கு அருகிலேயே இருந்ததால், இருவரும் நடந்தே சென்றார்கள். மருத்துவரைப் பார்த்து, வழக்கமான சில பரிசோதனைகளை அம்மா செய்துகொண்ட பிறகு இருவரும் வீடு திரும்பினார்கள். வழியில் அவர், அம்மாவிடம் மௌனப் பேச்சை ஆரம்பித்தார்.  அம்மா, என் கனவு என்னனு உங்களுக்குத் தெரியும்தானே?’’ ஆமாம்ப்பா. அதுக்கென்ன இப்போ…’’  இல்லம்மா. அந்தக் கனவை நனவாக்குறதுக்கான பலம் என்கிட்ட இல்லைனு தோணுது. அதுக்கான சக்தியை எனக்குக் குடுங்களேன்…’’  அம்மா சொன்னார்… உனக்கு உதவி செய்யறதுல எனக்கு சந்தோஷம்தான். ஆனா, அந்த அளவுக்கு சக்தி என்கிட்ட இப்போ இல்லை.  இருந்த எல்லாத்தையும் உன்கிட்ட ஏற்கெனவே குடுத்துட்டேனேப்பா.’’
    
அந்த மனிதர் இதைக் கேட்டு துவண்டு போனார். ஆனால், கனவை நிறைவேற பலம் வேண்டுமே… யாரிடமிருந்தாவது, எந்த வழியிலாவது பெற்றுத்தானே ஆக வேண்டும்? ஒவ்வொருவரிடமாகக் கேட்டுப் பார்ப்பது என்று முடிவு செய்துகொண்டார். தனக்குத் தெரிந்த ஒரு ஞானியிடம் போனார். விஷயத்தைச் சொன்னார். ஐயா. எனக்கு சக்தி வேண்டும். அது எங்கே கிடைக்கும்?’’ என்று கேட்டார்.  ஞானி சொன்னார், இமயமலையில் நமக்கு வேணுங்கிற சக்தியெல்லாம் கிடைக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். நானும் இமயமலைக்குப் போயிருக்கேன். ஆனா, அங்கே பனியையும் குளிரையும் தவிர வேற எதையும் நான் பார்த்ததில்லை. எனக்கும் சக்தி எங்கே கிடைக்கும்னு சரியா சொல்லத் தெரியலையேப்பா…’’
    
அடுத்து அந்த மனிதர் ஒரு துறவியிடம் போனார். விஷயத்தைச் சொன்னார். குருவே, என் கனவு நிறைவேறுவதற்கான சக்தி எனக்கு எங்கே கிடைக்கும்?’’ என்று கேட்டார்.
   
நீ செய்யும் பிரார்த்தனையால்தான் சக்தி கிடைக்கும். அதே நேரத்தில் நீ கண்டுகொண்டிருப்பது தவறான கனவு என்றால் அதையும் நீ தெரிந்துகொள்வாய். எனவே, அமைதியாக பிரார்த்தனையில் ஈடுபடு’’ என்றார் துறவி.
    
அவர் சொன்னது ஒரு வழி என்றாலும், அதுவும் அந்த மனிதருக்குக் குழப்பத்தையே தந்தது. ஏதேதோ சிந்தனையில் வீடு நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது வழியில் அவருக்குத் தெரிந்த முதியவர் ஒருவர் எதிர்ப்பட்டார்.  என்னப்பா. ஏதோ யோசனையோட போற மாதிரி தெரியுது!’’  அவரிடமும் அந்த மனிதர் விஷயத்தைச் சொன்னார். என் கனவு நிஜமாறதுக்கு சக்தி வேணும். அது எங்கே கிடைக்கும்னு ஒவ்வொருத்தரா கேட்டுக்கிட்டிருக்கேன்.  ஆனா, யாராலயும் எனக்கு உதவி செய்ய முடியலை.’’ ஒருத்தரால கூடவா முடியலை?’’ ஆமா.’’  அந்த முதியவர் கேட்டார்! சரி, உனக்கு நீயே கேட்டுப் பார்த்துக்கிட்டியா?’’ அந்த மனிதருக்கு இதைக் கேட்டதும் ஏதோ தெளிவு கிடைத்ததுபோல இருந்தது.
ஆசிரியர்
முனைவர் ஈ.யுவராணி,

இணைப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,

பி.கே.ஆர் மகளிர் கல்லூரி,

கோபிச்செட்டிபாளையம்,

ஈரோடு – 638 476


 

ஆசிரியரின் படைப்புகளை மேலும் பார்க்க..
1.கற்பதை கசடற கற்க

2.தாத்தாவின் பழைய வீடு

3.நீதிக்கு அடிபணி

 

Leave a Reply